எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 22, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - திரிவக்கரையின் கணவன்!

ஆஹா, குவலயாபீடம் மனிதன் இல்லை. ஒரு யானை. அதுவும் மிகவும் சக்தி வாய்ந்த பெரிய முரட்டு யானை என்றே சொல்லலாம். அதுவும் அதன் பாகனோ , ம்ம்ம்ம்ம்ம், வேறே யாரு? திரிவக்கரையைத் திருமணம் செய்து கொண்டு, அவள் உடலின் மூன்று கோணல்களைப் பார்த்ததும், அவள் முதுகின் கூனைக் கண்டதும், அவளை விட்டு விலகிச் சென்றானே அந்த அங்காரகனே தான். அங்காரகன், அவள் கணவன், அவன் பொறுப்பில் அன்றோ குவலயாபீடம் என்னும் இந்த முரட்டு யானை உள்ளது? ஆஹா, கம்சன் அங்காரகனை அழைத்துவரச் சொன்னதாய்க் கேள்விப் பட்டோமே? அப்போ இதிலே ஏதோ விஷயம் இருக்கிறது. குவலயாபீடம் எவ்வகையில் எவ்வாறு கண்ணனைக் கொல்லப் போகிறது? புரியவில்லையே. ஆனாலும் இதை இப்படியே விடமுடியாது. ருக்மிணி குவலயாபீடம் ஒரு மனிதன் எனத் தவறாய்ப் புரிந்து கொண்டாலும், விஷயம் என்னமோ தீவிரமான ஒன்றே. யோசித்துக் கொண்டே நடந்தாள் திரிவக்கரை. இதற்கு வழி என்ன???

யோசித்த அவளுக்கு ஒரு வழி புலப்பட்டது. ஆனால், ஆனால், அது சரியா? கொஞ்சம் தயங்கினாள் திரிவக்கரை. அவள் கணவன் அவளை முற்றிலும் மறந்து, அவளைப் புறக்கணித்து அவள் அருகே கூட வராமல் அவளை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் அவள் கண்ணெதிரே இதே ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதோடயா இன்னும் ஒரு மனைவி கூட இப்போது மூன்றாவதாய் வந்திருக்கிறாளாமே. அவனிடமா செல்லுவது இப்போது? அவள் சுயகெளரவம் தடுத்தது திரிவக்கரையை. ஆனால், ஆனால் இதன் பலாபலன்கள் எதுவோ அது திரிவக்கரையைச் சேர்ந்ததில்லையே. அவளை இத்தனை அழகாய் மாற்றிய அவளுடைய “கடவுள்” ஆன கண்ணனுக்காகவன்றோ அவள் தன்னை விரட்டிய கணவன் காலடியில் போய்க் கெஞ்சவேண்டும்? தன்னையும் ஒரு மனுஷியாக மதித்து அன்பு செலுத்தும் அந்தக் கண்ணனுக்காக எதுதான் செய்யக் கூடாது? அவனுக்காக எதுவேண்டுமானாலும் செய்யலாமே. ஆம், அங்காரகனிடம் போய்க் கேட்கவேண்டியது தான் ஒரே வழி. திரிவக்கரை முடிவுக்கு வந்துவிட்டாள்.

அங்காரகன், கம்சனின் யானைப்படையின் தளபதியும், யானைகளைப் பழக்குவதில் கை தேர்ந்தவனும் ஆவான். அவனிடம் பழகிய யானைகள் அனைத்தும் அவன் சொன்னால் சொன்னபடி கேட்கும். மிகத் திறமையான வீரனும் கூட. கம்சனின் யானைகளைப் பழக்குவதில் அவனுக்கு மன மகிழ்ச்சியே. ஆனால் அன்றோ? அன்று இரவு நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. அங்காரகன் இன்னும் தூங்கச் செல்லவில்லை. படுத்தாலும் தூக்கமே வராது போல் இருந்தது. அங்காரகனுக்கு இடப்பட்டிருந்த வேலை அப்படி. அவன் தன்னையே வெறுத்துக் கொண்டான். அவன் மனைவிகளில் ஒருத்தி அவன் பாதத்தைப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்க, இன்னொருத்தி அவனுக்கு விசிறிக் கொண்டிருந்தாள். கூடவே ஏதோ தொணதொணவெனப் பேச்சு வேறே. அவனுக்கு இருந்த மனநிலையில் எதையும் கேட்கும் நிலையிலே அவன் இல்லை. அவர்கள் பேச்சை நிறுத்த மாட்டார்களா என இருந்தது அவனுக்கு. அவர்களை அடிக்கலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் மனைவியரைத் துன்புறுத்தியவன் என்ற பெயர் வாங்க விரும்பவில்லை அவன். அப்போது வாசல் கதவு தட்டப் பட்டது.

இரு மனைவியரில் மூத்தவள் அங்காரகன் முகத்தைப் பார்த்தே கதவைத் திறக்கலாம் எனப் புரிந்து கொண்டுபோய்த் திறந்தாள். அங்காரகனுக்கு உள்ளூர பயம் தான். ஒருவேளை கம்சன் மீண்டும் ஆளனுப்பிக் கூப்பிட்டிருப்பானோ? போதும்,போதும், அவனுடைய படைத் தளபதியாய் இருந்தது. மீண்டும் தன்னையே வெறுத்துக் கொண்டான் அங்காரகன். கதவைத் திறந்தாள் அவன் மனைவி. உள்ளே நுழைந்தது யார்? ஆஹா, இது என்ன அதிசயம்? ஓர் அழகான பெண்மணி அல்லவோ நுழைகிறாள்? யாரிவள்? இத்தனை அழகாய்?? ஒரு காலத்தில் அழகு என அவன் விரும்பித் திருமணம் புரிந்த அவனுடைய இரு மனைவியரும் குழந்தைகளைப் பெற்றுப் போட்டு நாளாவட்டத்தில் பெருத்துப் போய்விட்டார்கள்.ஆனால் இந்தப் பெண்மணியோ கொடிபோன்ற இடையும், நளினமான உடல்வாகும் கொண்டு ஆஹா, அவள் நடையே ஓர் நடனம் போல் இருக்கிறதே. வந்தது யாரெனப் புரிந்து கொண்ட அவனிரு மனைவியரும் பயத்தில் க்ரீச்செனக் கத்தினார்கள்.

“யார் நீ?” எனக் கேட்டான் அங்காரகன். அவள் யாரென அவனுக்கும் புரிந்தே விட்டது. என்றாலும் தன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. அவளா இவள்?? இமை கொட்டாமல் வெறித்தான் அங்காரகன்.

“ஆர்யபுத்ரா, என்னைத் தெரியவில்லையா உங்களுக்கு?” என்று கேட்டாள் திரிவக்கரை. கேலியோடு சிரித்தாள், அவள் சிரிப்பின் இனிமையும்,சிரிக்கும்போது வந்த மணிகளைக் குலுக்கினாற்போன்ற ஓசையும் அறையையே நிறைத்தது. . “என்னை மறந்தே விட்டீர்களா?” என்றாள் திரிவக்கரை. அதற்குள் அவன் மனைவியரில் ஒருத்தி,’அக்கா, அக்கா உன்னுடைய கூன் சரியாகிவிட்டதே?” என ஆச்சரியம் அடைந்தாள்.அவள் கண்களில் தெரிந்த பொறாமையை அவளால் மறைக்கமுடியவில்லை. திரிவக்கரை இப்போது உயரமும், பருமனும் அளவோடு பொருந்தி, உடல் நளினமும், கை, கால்களில் ஒய்யாரமும் மிகுந்து ஏற்கெனவே அழகு மீதூர்ந்திருந்த முக மண்டலம் இப்போது சந்தோஷத்தால் இன்னும் ஒளி கூடிப்பிரகாசிக்கக்காட்சி அளித்தாள். அங்கங்கள் தேவையான இடங்களில் தேவையான அளவுக்கு மேல் காணப்படவில்லை.

“என் கடவுள் நான் ஆசைப்பட்டபடியே என்னை மாற்றிக் கொடுத்திருக்கிறார்.” என்று சொன்ன திரிவக்கரை மேலும் தன் கணவனைப் பார்த்து, “நான் உங்களிடம் பேசவே வந்தேன், ஆர்யபுத்ரா, நாம் ஒருவரை ஒருவர் முகம் கொடுத்துப் பேசியேப் பல வருடங்கள் ஆனாலும் விஷயத்தின் முக்கியத்துவம் கருதிப் பேசவந்தேன்.” என்றாள். “உனக்கு என்ன ஆயிற்று திரிவக்கரை, இதோ இங்கே அமர்ந்து எல்லாவற்றையும் விபரமாய்ச் சொல்." இருபது வருடங்களுக்கும் மேலாகத் தான் திரும்பிக் கூடப் பார்க்காத ஒரு பெண் இத்தனை அதிரூபசுந்தரியாய் மாறியதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திரிவக்கரை அங்கே அமர்ந்தாள். “மக்கள் பேசிக் கொண்டனர், நந்தனின் மகனைப் பற்றியும், அவன் நடத்திய அற்புதங்கள் பற்றியும். ஆனாலும் எனக்கு இவ்வளவு நன்றாய்த் தெரியாது. நீ விபரமாய்ச் சொல் திரிவக்கரை.” என்றான் அங்காரகன். அவன் பிரிய மனைவியரில் மூத்தவள், “நந்தன் மகன் எப்படி இருப்பான்?” என வினவினாள், தன் கணவன் அத்தனை நாள் ஒதுக்கி வைத்திருந்த மூத்த மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசிப்பதையும் அவளால் தாங்க முடியவில்லை. இளையவளோ, திரிவக்கரைக்கு நீர் கொண்டுவரும் சாக்கில் உள்ளே சென்றுவிட்டாள். திரிவக்கரை தன் கணவனைப் பார்த்து, “நந்தனின் மகன்?? அவன் நந்தனின் மகனே அல்ல ஆர்யபுத்ரா, நான் உங்களிடம் ஒரு ரகசியம் சொல்லவும், மற்றொன்றைப் பற்றிக் கேட்கவுமே வந்தேன். ஆனால் உங்களிடம் மட்டும் தனியாய்.” அர்த்தபுஷ்டியுடன் அவனின் மற்ற இரு மனைவியரைப் பார்த்தாள் திரிவக்கரை. அவள் கருத்தைப்புரிந்து கொண்ட அங்காரகன் தன்னிரு மனைவியரையும் அவர்கள் அறைக்குப் போகச் சொல்லிக் கட்டளையிட்டான்.

இருவருக்கும் உள்ளூரக் கோபம் வந்தது. ஆனாலும் கணவனின் கட்டளையைத் தட்டமுடியாமல் உள்ளே சென்றனர். இருவரும் திரிவக்கரையைப் பார்வையாலேயே பொசுக்கிவிடுவது போல் பார்த்துக் கொண்டே சென்றனர். "சொல், என் தேவதையே! அந்த நந்தனின் மகனைப் பற்றி நானும் கேள்விப் பட்டேன். ஆஹா, நீ இப்போது எப்படி இருக்கிறாய் தெரியுமா?" என்றான் அங்காரகன்.

"அவன் நந்தனின் மகனே அல்ல ஆர்யபுத்ரா, அவன் நம் இளவரசி தேவகியின் எட்டாவது பிள்ளை. அவன் நம்மை உன்னுடைய அந்த மோசமான எஜ்மானிடமிருந்து காக்கவே பிறந்தவன். இப்போது மதுராவுக்கும் அதன் பொருட்டே வந்துள்ளான்." என்றாள் திரிவக்கரை மிகவும் மெல்லிய ரகசியம் பேசும் குரலில் பேசினாள் அவள். அங்காரகனும் திகைத்தவனாய்ச் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான். சுவர்களுக்கும் காதுகள் உண்டோ? விஷயம் வெளியே சென்றுவிடுமோ? அவன் பார்வையைக் கண்ட திரிவக்கரை, "ஆர்யபுத்ரா, ஏன் பயம்? போதும், போதும் இத்தனை நாட்கள் அந்தக் கொடூரனிடம் வேலை செய்தது போதும். இப்போது நமக்கென ஒருவன் வந்து நம்மை விடுவிக்கப் போகிறான். அதோ! தூரத்தில் விடிவெள்ளி தெரிகிறது. இன்னும் என்ன பயம்? உங்களுக்கும் அலுப்பாயில்லை, கம்சனிடம் வேலை செய்வதில்?" என்று கேட்டாள். "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்! சும்மா இரு பெண்ணே! மெதுவாய்ப் பேசு. யாரானும் கேட்டுவிடப் போகின்றார்கள்." பயந்தவண்ணம் பதிலளித்தான் அங்காரகன்.

"ஹா,ஹா, எவ்வளவு அவமானம் அடைந்திருக்கிறீர்கள் நீங்கள்? ஆர்யபுத்ரா, எனக்குத் தெரியாதென எண்ணாதீர்கள். நாரதரின் தீர்க்கதரிசனம் உண்மையாகப் போகிறது. நமக்கு விடியப்போகிறது. அவன் வந்துவிட்டான்." என்றாள் திரிவக்கரை.

"நீ சொல்வது உண்மையா?" என்றான் அங்காரகன்.

"இதோ நான் இருக்கிறேனே சாட்சி! அவன் ஒரு கடவுள். இல்லை எனில் இந்தக் கூனியின் கூனை நிமிர்த்த முடியுமா? அதோடு மட்டுமல்ல, புனிதமான தநுர்யாகத்துக்கு வைக்கப் பட்டு பூஜிக்கப் பட்டிருந்த வில்லையும் அநாயாசமாய் எடுத்து உடைத்துவிட்டான். நாளை பாருங்கள், இன்னும் என்ன நடக்கப் போகிறதென." என்றாள் திரிவக்கரை. "ஆஹா, பெண்ணே, என்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலியை நீ பார்த்திருக்க மாட்டாய்" என்றான் அங்காரகன்.

"என்ன நடந்தது? என்னிடம் சொல்லுங்கள். தேவகியின் மைந்தன் எனக்கு மிக நல்ல நண்பன். உம்மை எப்படிப்பட்ட இக்கட்டிலிருந்தும் எனக்காக விடுவித்துவிடுவான். அவன் என்னிடம் மிகவும் அன்பும் கருணையும் கொண்டுள்ளான்." என்றாள் திரிவக்கரை. "ம்ஹும், ஒருகாலும் நடக்காது. எவராலும் என்னைக் காக்க முடியாது. அவ்வளவுதான், நான் முடிந்து போனேன். நாளைக்கு நான் உயிரோடு இருந்தால் அதிசயமே." என்றான் அங்காரகன்.

"ம்ம்ம்ம்??? என்ன விஷயம்? நானும் உங்களுக்கு ஒரு மனைவியே, சொல்லப் போனால் நான் தான் முதல் மனைவி. உங்களுக்கு மனைவியின் உரிமையோடு நான் என்ன சேவை செய்யவேண்டும்? சொல்லுங்கள் செய்கிறேன். ஒரு வேளை, ஒருவேளை அது அந்த தேவகியின் மகனையும், குவலயாபீடத்தையும் சம்பந்தப் படுத்திய விஷயம் ஏதாவதாய் இருக்குமா?" திரிவக்கரை கேட்டாள்.

"ஆஹா, நீ எப்படி அறிந்தாய் பெண்ணே?" ஆச்சரியத்தில் கண்கள் விரியக் கேட்டான் அங்காரகன். "எவராலும் தேவகியின் பிள்ளையைக் கொல்லமுடியாது!' என்று பதிலளித்தாள் திரிவக்கரை. "ஆனால் எனக்கு இடப்பட்ட கட்டளை அதுதான் பெண்ணே!" அங்காரகன் குரல் தன்னிரக்கத்திலோ அல்லது வருத்தத்திலோ தழுதழுத்தது.

"ஒரு மூர்க்கனின் கட்டளை அது! அதற்குக் கீழ்ப்படியவேண்டாம்!"திட்டவட்டமாய்ச் சொன்னாள் திரிவக்கரை.
"எப்படி? எப்படி?" பரபரத்தான் அங்காரகன். "தேவகியின் பிள்ளையை நினைந்து பிரார்த்தித்துக்கொண்டு நான் சொல்வதைக் கேளுங்கள்." என்றாள் திரிவக்கரை. திருமணக் ஆகி இருபது வருடங்களுக்கு மேலாகியும் மனைவியைத் திரும்பிக்கூடப் பார்க்காத அங்காரகன் அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் தலைமேல் தாங்கும் எண்ணத்துடனும், அவளிடம் ஏற்பட்ட அளவுகடந்த நன்றியுடனும் அவள் சொல்வதைக் கூர்ந்து கேட்டான். சிறிது நேரம் பேசிய திரிவக்கரை பின்னர் தன் மாளிகைக்குச் சென்று திரும்பி வந்தபோது அவள் கையில் சில மூலிகைகள் இருந்தன. அவளும், அங்காரகனும் அன்றிரவு முழுதும் சேர்ந்து கழித்தனர். எப்படி? யானைக் கொட்டாரத்தில் இருந்த முரட்டு யானையான குவலயாபீடத்துக்கு அன்று இரவில் தேவையான உணவை இருவரும் அவர்கள் இருவர் கையாலேயே அளித்து அன்றிரவு முழுதும் குவலயாபீடத்தைக் கவனிப்பதிலேயே பொழுதைக் கழித்தனர். மறுநாள் விடிந்தது.

4 comments:

  1. ம்ம்...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)

    ReplyDelete
  2. ஆகா மறுபடியும் சஸ்பென்ஸா, தாங்க முடியாது. குவாலய பீடத்தை கொல்வார்கள் எனினும் இவர்கள் இருவரும் என்ன செய்கின்றார்கள் என்பது புதிது. நான் கூனிக்கு சரி செய்தார் எனப் படித்து உள்ளேன், ஆனால் இவ்வளவு விபரங்கள் புதியது, நன்றி.

    ReplyDelete
  3. இருங்க, இருங்க, நாளைக்குள் போட்டுடறேன். :D

    ReplyDelete
  4. சேர்த்து வச்சு படிக்கிறதில ஒரு சௌகர்யம் இருக்கத்தான் இருக்கு :) காத்திருக்க வேணாமே!:) இல்லம்மா?

    ReplyDelete