திரிவக்கரைக்கு நேர்ந்ததைப் பார்த்த மக்கள் கூட்டம் ஸ்தம்பித்து நின்றது. ஒரு பக்கம் ஆச்சரியம், மறுபக்கம் திகில். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு, பரபரப்பு. இளைஞர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து கும்மாளமிட்டார்கள். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் ஏதோ சலசலப்பு. யாரோ, யாரையோ அதிகாரமாய் விளிக்கும் தொனி! “நகருங்கள், நகருங்கள்,” என்று யாரோ யாரையோ சாட்டையால் அடிக்கும் சப்தம். “அம்மா” மெலிதாக ஒரு ஓலமும் கேட்டது. அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கினார்கள். குதிரைகளில் சில வீரர்கள், முன்னணியில் கம்பீரமான இளவரசன் போல் தோற்றமளிக்கும் நடுவயது இளைஞன் ஒருவன். அவன் கையில் தான் சாட்டை. வெகு நீளமாய்க் காட்சி அளிக்கிறது. சாட்டையை அவன் வீசினால் அதன் வீச்சுக்குக் குறைந்த பட்சம் பத்துப்பேராவது அகப்படுவார்கள் போல. ஓங்கிச் சாட்டையை வீசினான். அங்கே நின்றிருந்த மக்களில் சிலர் அச்சத்துடன் திரும்பி ஓட எத்தனிக்க, அடுத்து என்னவோ என்ற எதிர்பார்ப்போடு சிலர் பார்க்க.
ஒரு பெரிய பயில்வான் போல் நின்றிருந்த பலராமன் சுபாவத்தில் மென்மையானவனே. அப்படி ஒண்ணும் கோபக்காரன் என்று சொல்ல முடியாது. நிதானமாகவே எல்லாமும் செய்வான். யோசித்துத் தான் பேசுவான். படபடவென வார்த்தைகளைக் கொட்ட மாட்டான். ஆனால் அதே பலராமனுக்குக் கோபம் வந்துவிட்டால் நடக்கிற கதையே வேறே. அவன் கோபத்தின் முன்னால் யாராலும் நிற்கக் கூட முடியாது. இப்போது அவ்வாறே பலராமனுக்குக் கோபம் வந்திருக்கிறது. ஆனால் நம் புது விருந்தாளி எவ்விதம் அதை அறிவார்? அவர் பாட்டுக்குச் சாட்டையை வீசித் தம் அதிகாரத்தை நிலைநாட்ட முயல்கிறார். இதோ! அவரின் ஓங்கிய சாட்டை பலராமனால் பிடிக்கப் பட்டுவிட்டதே? அதோடா? இதோ, பலராமன் அந்தச் சாட்டையைத் தன் பலம் கொண்ட மட்டும் தன் பக்கமும் இழுக்கிறானே? குதிரை தடுமாறியது. குதிரை வீரன் கீழே விழுந்தான். தடுமாறிய குதிரையால் நிற்க முடியாமல் மற்றக் குதிரைகளின் மேல் மோதிக் கொள்ள எல்லாக் குதிரைகளும் தடுமாறின. ஒரே குழப்பம். கனைப்புச் சப்தம். எல்லாக்குதிரைகளும் முன்னால் போவதா, பின்னால் போவதா எனத் தடுமாற, அதன் எஜமானர்கள் அவற்றைச் சமாதானம் செய்து போக வைப்பதற்குள், பின்னே வந்து கொண்டிருந்த ஒரு மாடுகள் பூட்டப் பட்டிருந்த ரதத்தில் போய் சில குதிரைகள் மோதின. அந்த மாடுகள் தன் பாட்டுக்கு வந்து கொண்டிருந்தன. திடீரென குதிரைகள் மோதியதும் ரதம் பின்னால் சென்றது.
பின்னால் சென்றதோடு நில்லாமல், ஒரு பக்கமாகத் திரும்பிய ரதம் அச்சாணி முறிந்ததைப் போல் தெருவின் ஓரத்திற்குச் சென்று அங்கே உள்ள பள்ளத்தில் முன்பாதியும், தெருவில் பின் பாதியுமாகக் கவிழ்ந்தும் நின்றது. அதில் இருந்த இரு பெண்கள் பயத்தில் கூச்சலிட்டனர். ஒருத்தி இருபத்தைந்து வயது மதிக்கத் தக்கவளாக இருந்தாள். இன்னொருத்தி பதினாறு வயது கூட நிரம்பாத இளம் சிறுமி. மிக மிக அழகாக இருந்தாள். அவளும் கூச்சலிட்டாள். அவள் சகோதரன் போல் தோற்றமளித்தான் கீழே விழுந்த இளைஞன். ரதத்தில் இருந்த பெண்கள் கூச்சலைக் கேட்டதும் எழுந்த அவன், கோபத்தோடு ரதத்தோடு கூடவே வந்து கொண்டிருந்த பாதுகாவலர்களைப் பார்த்து கூச்சலிட ஆரம்பித்தான். அந்த இளவரசனுக்குக் காயங்களும் கொஞ்சம் மோசமாகவே பட்டிருந்தது போலும். அவனால் வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டே பேசவேண்டி இருந்தது போலும். பல்லைக் கடித்துக் கொண்டு பேசினான். பலராமனை அடிக்கக் கையை ஓங்கினான். ஆனால் கண்ணன் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பான்?
அவன் கழுத்தைத் தன்னிரு கரங்களால் பிடித்தான். அந்த இளவரசன், கண்ணனைப் பார்த்துச் சீறினான். “அடேய், என்னை யாரென நினைத்தாய்? நான் ருக்மி! விதர்ப்ப நாட்டு பட்டத்து இளவரசன். உன்னுடைய எஜமானன் ஆன கம்சனின் முக்கிய விருந்தாளி. என்னை மரியாதையோடு நடத்தவில்லை எனில்…”
“நீ யார் என இப்போது நீ சொன்னதும் தெரிந்து கொண்டேன். ஆனால் நீ மரியாதையாகத் திரும்பிப் போ,. அநாவசியமாக மக்களைத் துன்புறுத்திக் கொண்டு செல்லாதே. அதோ பார், உன்னுடன் வந்த பெண்கள் இருவரும் தவிக்கின்றனர். அவர்களை அழைத்துக் கொண்டு உன் வழியைப் பார்த்துக் கொண்டு செல்.” கண்ணன் மிகவும் மெதுவாக அதே சமயம் உறுதியோடு சொன்னான்.
“என்ன சொன்னாய்? துஷ்டனே!” ருக்மி கோபத்துடன் தன் வாளை எடுத்துக் கொண்டு கிருஷ்ணன் மேல் பாய்ந்தான். ஆனால் அவன் செயல்படுவதற்கு முன்னரே, அவன் செய்யப் போவதை ஊகித்தாற்போல கிருஷ்ணன் அவன் வாளை எடுக்க விடாமல் தடுத்ததோடு, அவனைக் கீழேயும் தள்ளினான். பின்னர் அவனைத் தூக்கி எடுத்து ஒரு நெல் மூட்டையை வீசுவது போல ரதத்தினுள் வீசினான். ருக்மி தன்னை ரதத்தினுள் கிருஷ்ணன் வீசுவதைத் தடுக்கச் செய்த முயற்சிகள் எதுவும் பலனடையவில்லை. ரதத்தில் வீற்றிருந்த பெண்கள் கிருஷ்ணனின் இந்தச் செயலைப் பார்த்துவிட்டுக் கூச்சலிட்டனர். இருவரில் இளையவளாய் இருந்த பெண் கிருஷ்ணனைப் பார்த்து, “ என் சகோதரனை ஒன்றும் செய்யாதே! அவனை விட்டுவிடு, பொல்லாதவனாய் இருக்கின்றாய் நீ!” என்றாள்.
கிருஷ்ணன் தன் வழக்கமான பாணியில் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். “ஓ இவன் உன் சகோதரனா? நீயும் ஓர் இளவரசியா? சரி, அப்போது உன் சகோதரனுக்கு ஒரு இளவரசன் எவ்வாறு மக்களிடம் நடந்துகொள்ளவேண்டும் என்று கற்றுக் கொடு.” என்றான் புன்னகை மாறாமல். “ஆஹா, நீ என்னவோ செய்துவிட்டாயே என் சகோதரனை!” என்றாள் ருக்மிணி. கிருஷ்ணனின் புன்னகை விரிந்தது. அதோடு கண்களிலும் குறும்பு கூத்தாடியது. அது மாறாமலேயே அவன் அவளிடம், “ கவலைப்படாதே இளவரசி! உன் சகோதரன் தற்பெருமையைத் தவிர வேறு எதையும் இழக்கவில்லை. இனிமேல் அவன் ஒழுங்காய் நடந்து கொள்வான், மக்களிடம் மட்டுமில்லை, உன்னிடமும், அவன் மனைவியிடமும் கூட.” சிரித்தான் கிருஷ்ணன். கிருஷ்ணன் பேசியதையும், அவன் நடந்து கொண்ட அருமையான நடத்தையையும் பார்த்த ருக்மிணிக்குத் தன் கண்ணீரையும் மீறிச் சிரிப்பு வந்தது. அவளால் அதை அடக்கமுடியவில்லை. கிருஷ்ணனோ அவளைச் சிறிதும் கவனிக்காமல் கால்கள் மடிந்து கீழே உட்கார்ந்துவிட்ட காளைகளின் அருகே சென்று அவற்றைத் தட்டிக் கொடுத்து எழுப்பி அமர வைக்க முயன்றான். அவனுக்கு மிகவும் பிடித்த, நன்கு தெரிந்த ஒரு விஷயம் இது. காளைகளோ அறுத்துக் கொண்டு கூட்டத்தில் இடம் கிடைத்தால் ஓடிவிடலாம் என நினைத்தன போலும். கிருஷ்ணன் அவற்றைத் தட்டிக் கொடுத்து அவற்றிடம் மெதுவாகவும், ஆறுதலாகவும், அன்பாகவும் பேசினான். ஒரு இனிய நண்பனைப் போல் அவற்றிடம் பேசினான். அவற்றின் திமில்களைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தான். சற்று நேரத்தில் காளைகள் அமைதி அடைந்தன.
காளைகளை மெல்ல எழுப்பி, ரதத்தை நேரே நிற்க வைத்து அவை ரதத்தைச் செலுத்தத் தயாராக்கினான். கடைசியாக அவை தன்னிடமிருந்து பிரிந்து மேலே செல்லுமுன் ஒரு முறை அவற்றைத் தட்டிக் கொடுத்தான். காளைகளோ எனில் கிருஷ்ணன் மேல் உரசிக் கொண்டு, நெடுநாள் நண்பன் போல் அவனைத் தங்கள் நாவால் நக்கிக் கொடுத்துக் கொண்டு நின்றன. கிருஷ்ணன் காளைகளைக் கட்டிய கயிறுகளை வண்டி ஓட்டியிடம் கொடுத்துவிட்டு, “ இவற்றை நன்கு அன்பாய்க் கவனித்துக் கொள். அருமையான காளைகள்.” சிரித்துக் கொண்டே கண்களில் மீண்டும் குறும்பு கூத்தாட ருக்மிணியைப் பார்த்துக் கை அசைத்தான். கிருஷ்ணன் திரும்பினான். வண்டி கிளம்பியது . ருக்மிணி கிருஷ்ணன் மேல் வைத்த கண்ணை எடுக்கவில்லை.
ஆகா கதையில ஹீரோ, ஹீரோயின் வந்துட்டாங்க, நம்ம ஆளு இராதையை மறந்து அடுத்த லவ்ஸ் ஸ்டார்ட் பண்ணிட்டார். இனி சூடும் சுவையும் கூடும் என நினைக்கின்றேன். நன்றி.
ReplyDelete"வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டே பேசவேண்டி இருந்தது போலும். பல்லைக் கடித்துக் கொண்டு பேசினான்."
ReplyDelete"நம்ப சினிமால சுட்டப்புறம் இல்லைன கத்தி குத்து எல்லாம் ஆனப்புறமும் விடாம 20 நிமிஷம் பேசிட்டு செத்து போவாங்களே ஹீரோ, ஹீரோயின் ஓட அம்மா அப்பா இல்லைனா ஒரு பரோபகாரி பழனி மாதிரி ஒரு character அது போலவா? (நல்ல வேள இதுல ருக்மி செத்துபோலை!) ஓ முருகா அது ஏன் இப்போ ந்யாபகம் வரது?:))
அம்மா! நல்ல்ல்லா கதை சொல்றீங்க! :)
ReplyDelete