வந்தவனைப் பார்த்துக் கம்சன், “திரிவக்கரை அரண்மனைக்குத் திரும்பிவிட்டாளா?” என விசாரித்தான். திரும்பிவிட்டதாகவும், அந்தப்புரத்தில் கம்சனின் மனைவியர், அவர்களோடு இருக்கும் மற்ற நாட்டு இளவரசிகள் போன்றோரிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான் அந்தப் பணியாள். “சரி, நீ சென்று இளவரசன் வ்ருதிர்கனனை இங்கே அனுப்பு!” என்றான். ஏற்கெனவே கம்சனைச் சந்திக்கவேண்டும் என்ற ஆவலோடு இருந்த வ்ருதிர்கனனோ சிறிதும் தாமதிக்காமல் கம்சனை வந்து சந்தித்தான். “வ்ருதிர்கனா, ப்ரத்யோதா விழாவின் மாற்றங்களை உன்னிடம் தெரிவித்தானா? மக்கள் பொதுவாக என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் இதனால் மகிழ்வோடு இருக்கின்றனரா?” என விசாரித்தான்.
“சொல்லிக்கிறாப்போல் ஒண்ணும் இல்லை இளவரசே! மக்கள் விழாவின் குதூகலத்தைவிடவும் அதிகம் பரபரப்புடனும், ஆவலுடனும் இருப்பது நந்தனின் இரு மகன்களையும் கண்டுதான். இருவரும் மக்கள் மனதில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டனர்.” சோகமாய் ஒலித்தது வ்ருதிர்கனன் குரல்.
“ம்ம்ம்ம், சரி, அதை நான் கவனிக்கிறேன். இனிமேல் என்னால் பொறுக்கமுடியாது. உன் ஆட்களைத் தயாராக வைத்திரு. எந்தவிதமான தயக்கமும் வேண்டாம். நிறைய யாதவத் தலைவர்கள் வருவார்கள் தநுர்யாகம் முடியும் போது. சரியான சமயம் வரும்போது நான் உனக்கு சமிக்ஞை கொடுப்பேன். காரியத்தைக் கச்சிதமாய் முடித்துவிடு. அங்காரகன் எங்கே? அவனுக்குச் சொல்லி அனுப்பு.” என்றான்.
“தங்கள் உத்தரவுப்படியே, பிரபுவே, “ என்ற வண்ணம் சென்றான் வ்ருதிர்கனன். அங்கே அந்தப்புரத்தில் திரிவக்கரை ஆனந்தத்தில் குதித்து ஆடிப் பாடிக் கொண்டிருந்தாள் என்றால் மிகையில்லை. தனக்குத் தெரிந்த நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொண்டும், அனைவரையும் உரிமையுடனே கேலி செய்துகொண்டும், நடுநடுவே, அந்தக் கருநிற அழகன் ஆன கண்ணன் செய்த அற்புதங்களை மிக்க மன மகிழ்ச்சியோடு விவரித்துக் கொண்டும் இருந்தாள். கண்ணனைப் பற்றி அவள் பேசப் பேச உள்ளூர வந்திருந்த அனைவர் மனதிலும் அவனைப் பார்க்கும் ஆவல் மேலிட்டது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகை உணர்ச்சிகள் என்றாலும் கம்சனின் இரு மனைவியருக்கும் மனதில் இனம் தெரியாத பயமே ஏற்பட்டது. மற்றவர்களில் அனைவருக்கும் திரிவக்கரை கண்ணனைப் பற்றிச் சொல்லுவதைக் கேட்க ஆசைதான். ஆனாலும் கம்சனின் இஷ்டத்துக்கு மாறாகக் கண்ணனைப் பற்றிப் பேச முடியாதாகையால் கொஞ்சம் தங்களை வெளியே காட்டிக் கொள்ளாமலே கேட்டுக் கொண்டனர். ஆனாலும் அவர்களில் இருவருக்கு மட்டும் கண்ணனைப் பற்றிய பேச்சுக்களில் சற்றே மாறுபட்ட உணர்வுகள் தோன்றின.
அவர்கள் வேறு யாருமில்லை. ஒருத்தி ருக்மியின் மனைவியும் விதர்ப்ப நாட்டு அரசன் பீஷ்மகனின் மறுமகளும் ஆவாள். அத்தனை பேர் முன்னிலையில் தன் கணவனுக்கு நேர்ந்த அவமானத்தை அவளால் மறக்க முடியவில்லை. ஒரு மாட்டிடையன் அவள் கணவனை, விதர்ப்ப நாட்டு பட்டத்து இளவரசனைத் தூக்கி எறிந்துவிட்டான். தூக்கி எறிந்தான் என்றால் உண்மையாகவே அன்றோ அது நடந்துவிட்டது? அனைவரும் சும்மா பார்த்துக் கொண்டிருந்தனர். யாரும் எதுவும் சொல்லவும் இல்லை. அந்த இடைச்சிறுவனுக்கு எந்தவிதத் தண்டனையும் கிடைக்கவும் இல்லை. இதுவே நம் விதர்ப்பாவாக இருந்தால் பட்டத்து இளவரசனைத் தொட்ட கையை மட்டுமில்லாமல், அந்தக் கைகள் இருக்கும் உடலும் இரு துண்டாக அன்றோ வெட்டப் பட்டிருக்கும். இங்கு கேட்பாரற்றுப் போய்விட்டதே! இன்னொருத்தியின் நிலைமையே வேறே. அவள் தான் ருக்மிணி. ருக்மியின் தங்கையும் பீஷ்மகனின் அன்புக்குரிய மகளும் ஆன பதினாறு வயதுச் சிறுமியான ருக்மிணி தான்., அவள் முக காந்தியிலும், தேக காந்தியிலும் இளமை பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது. கண்களைக் கூச வைக்கும் பேரழகோடு இந்த வயதிலேயே இருக்கிறாளே, இன்னும் சில வருடங்கள் சென்று இவள் ஓர் அழகான இளம்பெண்ணாக ஆனால் எத்தனை பேரின் தூக்கத்தைக் கெடுப்பாளோ?
சிற்பிகள் செதுக்கும் சிலைபோல பிரம்மா இவளையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கி அனுப்பி இருக்கிறானோ என எண்ணும்படியான அவள் அழகு அனைவரையும் கிறங்கடித்தது. ஆனால் அவளோ?? ஏற்கெனவே அண்ணனின் முரட்டுத் தனமும், அவன் செய்கைகளும் பிடிக்காமல் இருந்த ருக்மிணிக்கு அண்ணனைக் கண்ணன் தூக்கி எறிந்ததை ஓர் அவமானமாகவே நினைக்கவில்லை. இது வேண்டும் ருக்மிக்கு என்றே எண்ணினாள். இதுக்கு அப்புறமாவது ருக்மிக்கு நல்ல புத்தி வரவேண்டுமே என்றும் நினைத்துக் கொண்டாள். ஆனால் கூடவே இது என்ன?? சேச்சே, அந்தக் கண்ணன் அவன் நினைவல்லவா திரும்பத் திரும்ப வருது? அவனும், அவன் கருநிறமும்! ஆஹா, எத்தனை அழகான கருநிறம்? கறுப்புனு சொல்ல முடியாதே! நீலம்?? ம்ஹும், கருநீலமோ? ஒளி வீசுகிறதே! எத்தனை மென்மையான மேனி! ஆனால் எவ்வளவு வலு உடலில்? இந்த மென்மையான கரங்களா ருக்மியை அலட்சியமாய்த் தூக்கி ரதத்தில் வீசின? ஆச்சரியமாய் இருக்கே! சிரிப்பில் தான் எத்தனை நிச்சயம்? வரிசையான பற்கள்! தலையில் தலைப்பாகை, மஞ்சள் நிற ஆடை! தலைப்பாகையில் அது என்ன மயிலிறகைச் சூடிக் கொண்டிருக்கிறான்? ஆனாலும் அது அவனுக்குப் பொருத்தமாய்த் தான் இருக்கிறது. அந்தக் காதளவு நீண்ட கண்கள்? அவற்றில் தான் எவ்வளவு ஒளி?? அந்தக் கண்களின் மொழி??? அது ஏதோ ரகசியத்தை ஒவ்வொருவரிடமும் தனித்தனியாய்ச் சொல்லுகிறதே! அந்தக் கண்கள் என்னைத் துரத்துகின்றனவே! அவன் பார்வையின் வீச்சில் என்னை முழுகடிக்கிறதே! சட்டெனத் தன்னைச் சமாளித்துக் கொண்டாள் ருக்மிணி! ஒரு முடிவுக்கும் வந்தாள்.
திரிவக்கரை அனைத்துப் பெண்மணிகளிடமும் கண்ணனின் மதுரா விஜயம் பற்றிய செய்திகளைத் தனக்குத் தெரிந்த வரையில் சொல்லிவிட்டு, மனம் நிறைய மகிழ்வோடு திரும்பித் தன் இருப்பிடத்துக்குச் சென்று கொண்டிருந்தாள். இது என்ன? யாரோ ஓடி வரும் சப்தம்?? அவளை நோக்கிவருவதாய்த் தெரிகிறது! கூர்ந்து கேட்டாள் திரிவக்கரை. யாரோ ஓடி வருகிறார்கள் அவளைப் பிடிக்கவோ? சட்டென அந்த நீண்ட தாழ்வாரத்தின் கோடியில் இருந்த ஒரு தூணின் மறைவுக்குச் சென்றாள் திரிவக்கரை. அட, வந்தவள் ஒரு பெண்?? யாரிவள்? விதர்ப்பதேசத்து இளவரசி என்றார்களே? ஓடி வந்த பெண் தூண் மறைவில் இருந்த திரிவக்கரையைப் பார்த்துவிட்டாள். ஓடிப் போய் அவள் கையைப் பிடித்துக் கொண்டாள் ருக்மிணி. மூச்சு வாங்க, “திரிவக்கரை, அந்தப் பையன், அந்த கருநீல நிற அழகன், அந்த இடைப்பையன் என்கிறார்களே அனைவரும் அவனுக்கு, அவனுக்கு ஆபத்து! “ பயத்தில் முகம் வெளிறிவிட்டது ருக்மிணிக்கு. “அவனை எப்படியாவது காப்பாற்றவேண்டும். அவனைக் கொல்லத் திட்டம் போட்டிருக்கின்றனர்.” என்றாள். கலகலவெனச் சிரித்தாள் திரிவக்கரை.
“அவனை எவராலும் கொல்லமுடியாது இளவரசி, என் அருமை இளவரசி, அவன் கடவுள். அவனை யாராலும் அசைக்க முடியாது. ஆஹா, இப்போது புரிந்துகொண்டேன். இளவரசி, நீ அவனிடம் மிகவும் பைத்தியமாக இருக்கிறாய் போல் தெரிகிறதே? உன் கண்களே உன்னைக் காட்டிக் கொடுக்கின்றன. “மீண்டும் சிரித்தாள் திரிவக்கரை. தலையில் அடித்துக் கொண்டாள் ருக்மிணி. “பேசாதே, பெண்ணே, கேள், இதை, இங்கே குவலயாபீடன் என்ற பெயரில் யாரோ ஒரு துஷ்டன் இருக்கிறான் போலிருக்கிறதே, தெரியுமா உனக்கு? அவன் தான் நாளை அந்தப் பையனைக் கொல்லப் போகிறான். உன்னுடைய அருமை இளவரசி, அதான் கம்சனின் ஒரு மனைவி இதைப் பற்றிச் சொல்லிச் சிரித்து, ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறாள்.” ருக்மிணியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திரிவக்கரையின் அடிவயிறு கலங்கியது. முதுகுத் தண்டு சில்லிட்டது.
“அவர்கள் பேசியதை முழுதும் சொல் இளவரசி ருக்மிணி!” என்று ருக்மிணியிடம் விவரத்தைக் கேட்டாள். “நான் போகணும். என் அண்ணா பார்த்தானானால் சும்மா விடமாட்டான் என்னை. அவனுக்கு உன்னிடம் நான் இதைச் சொன்னது தெரிந்தாலும் அவ்வளவுதான்.” ஓட்டமாய் ஓடிவிட்டாள் ருக்மிணி. திரிவக்கரை யோசித்துக் கொண்டு அங்கேயே நின்றாள். யார் இந்தக் குவலயா பீடன்??? நாளை பார்ப்போமா?
படம் உதவி நன்றி: கண்ணன் சாங்க்ஸ்
படிச்சிக்கிட்டே இருக்கேன்...கலக்குங்க தலைவி ;))
ReplyDeleteநல்ல ஆரம்பம், கஜேந்திர மேட்சம் அங்கு மட்டும்தான குவாலய பீடத்துக்கும்தான். நல்ல நடை. காத்துருக்கின்றேம். அடுத்த பதிவு?.
ReplyDeleteநன்றி கோபி, ரொம்ப நாள் கழிச்சு வரீங்க போல??
ReplyDeleteவாங்க பித்தனின் வாக்கு, நன்றி
ReplyDelete