கம்சனோ?? அவனும் குதித்துக் கொண்டிருந்தான். ஆனால் வேறு காரணங்களுக்காக. வேறு வகையில். காலை எழுந்தது முதலே அவன் கேட்டவை எவையும் நல்ல செய்திகள் அல்ல. அந்த இரு இடைச்சிறுவர்களும் வந்துவிட்டார்கள் என்பதோடு அல்லாமல், தன் அரண்மனைத் துணிகளுக்குச் சாயம் போடும் தொழிலாளியின் விற்பனை நிலையம் பட்ட பாடும், அதன் பின்னர் திரிவக்கரைக்கு நேர்ந்ததும் கம்சனுக்குத் தெரிந்தே இருந்தது. திரிவக்கரையின் பல வருஷக் கூனை நிமிர்த்திவிட்டானாமே? அதோடு முடிந்ததா? ருக்மி, விதர்ப்ப தேசத்து பட்டத்து இளவரசன், அரசன் பீஷ்மகனின் பிரதிநிதியாக தநுர்யாகத்தில் கலந்து கொள்ளக் குடும்ப சமேதராக வந்தவன், கம்சனான தன்னுடைய முக்கிய விருந்தாளி, அவனைப் போய் அவமானப் படுத்தி இருக்கிறானே? என்ன அநியாயம் இது? ஒரு சாக்கு மூட்டையைப் போல் தூக்கி எறிந்துவிட்டானாமே ருக்மியை?? சரி, அதான் போச்சு என்றால் இப்போ அது எல்லாத்தையுமே தூக்கி அடிக்கும்படியான கெட்ட செய்தி , நாசத்தை விளைவித்துவிடுமோ என அஞ்ச வைக்கும் செய்தி வந்துள்ளதே! இதை எப்படிச் சமாளிப்பது? ப்ரத்யோதாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான் கம்சன்.
ஆம், ப்ரத்யோதாதான் செய்தியைக் கொண்டு வந்தது. உள்ளுர மகிழ்ந்து கொண்டிருந்தாலும் ப்ரத்யோதா தன் பல வருஷத் திறமையால் தன் உணர்வுகளை மறைக்க நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான். அவன் முகம் எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் கல் போன்றிருந்தது. வில்லை, நந்தனின் குமாரன் உடைத்துவிட்டான் எனக் கேள்விப் பட்ட கம்சன் அதிர்ச்சி அடைந்தான் என்றால் ப்ரத்யோதாவோ அதைக் கண்டு மகிழ்ந்தான். ஒரு இடைச்சிறுவன் எவராலும் தூக்கக் கூட முடியாத வில்லை எடுத்துத் தூக்கியதோடு அல்லாமல் அதை உடைக்கவும் செய்தானா? எப்படி நடந்தது இது? உண்மையாகவே கம்சனின் மரணம் அந்தச் சிறுவன் கைகளால் நிகழப் போகிறதா? அதன் அறிகுறியா இது? கம்சன் குழப்பம் அடைந்தான். ப்ரத்யோதாவைப் பார்த்து இது எப்படி நடந்தது? எனக் கூறும்படி கேட்டான். அவ்வளவு வலுவும், உறுதியும் படைத்த வில்லை எப்படி உடைத்தான் என விளக்கும்படி சொன்னான்.
“அனைத்து வில்லாளிகளும் வில் சரியாகவே அமைந்துள்ளது என்றும், அவ்வளவு சுலபத்தில் எவராலும் இதை எடுத்துக் கையாள முடியாது என்றும் சொன்னார்கள். ஆனாலு அதை இந்தச் சிறுவன் எடுத்து உடைத்ததையும் அனைவரும் கண்டார்கள். அதுவும் இயல்பாகவே நிகழ்ந்தது இளவரசே! நீங்கள் நேரில் கண்டிருந்தால் ஒத்துக் கொள்வீர்கள். வேறு வழியே இல்லை!” ப்ரத்யோதா சொன்னான்.
“ஏன் அவர்களைக் கையாள விட்டாய்? தடுப்பதற்கு என்ன?” கம்சன் கோபத்தோடு கர்ஜித்தான்.
பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு, “நான் என்ன செய்யட்டும் இளவரசே! தநுர்யாகத்தின் கடைசிநாளில் வில்வித்தையில் கலந்து கொள்ளப் போகின்றவர்கள் வில்லை எடுத்துப் பரீட்சித்துப் பார்ப்பது விதிமுறைகளில் ஒன்றாயிற்றே. அதை எவ்வாறு நான் தடுக்க முடியும்?” இரு கைகளையும் கூப்பியவண்ணமே ப்ரத்யோதா சொன்னான்.
“ஆஹா, தநுர்யாகத்திற்கு வில்லிற்கும், வில் வித்தைக்கு வில்லிற்கும் எங்கே போவது இப்போது? வில்லே இல்லாமல் ஒரு தநுர்யாகமா செய்வது?” கம்சன் குழம்பினான்.
“இது ரொம்ப துரதிருஷ்டத்திற்குரியது இளவரசே! ஆனால் என்ன செய்வது என்றுதான் புரியவில்லை. நான் உடனேயே அங்கே இருந்த வேத பிராமணர்களைக் கலந்து ஆலோசித்துவிட்டேன். உடனடியாக இன்னொரு வில்லைத் தயார் செய்து அதையும் புனிதப் படுத்தி வழிபாட்டில் வைக்கவேண்டும். என்கின்றனர். “ ப்ரத்யோதா மறுமொழி கூறினான்.
“உடனே அதைச் செய் ப்ரத்யோதா!. நாளை இல்லை என்றாலும் நாளன்றைக்கு விழா முடிவதற்குள்ளாக இந்த தநுர்யாகம் முடியவேண்டும். வேதகோஷங்களோடும், வேத பாராயணங்களோடும் சிறப்பாக நடக்கவேண்டும். நாளைக்கு வேண்டாம். நாளை மல்யுத்தப் போட்டி இருக்கிறது அல்லவா?” திடீரெனக் கம்சன் ஏதோ நினைவு வந்தவனாய் ப்ரத்யோதாவைப் பார்த்து, “நந்தனின் குமாரர்கள் பார்க்க எப்படி இருக்கின்றனர்?” என்று கேட்டான்.
“பெரியவன் பார்க்க ஒரு பெரிய இளைஞனைப் போல மிக்க பலத்தோடும், வலுவோடும் காணப் படுகிறான். வெகு அலட்சியமாக ருக்மியின் சக்தி வாய்ந்த குதிரையைச் சற்றும் பிரயாசையின்றி தள்ளிவிட்டானெனில் பாருங்களேன் அவன் சக்தியை!” ப்ரத்யோதாவுக்கு அவனையும் மீறி உவகை எட்டிப் பார்த்தது. “அந்தக் கண்ணனோ எனில் பார்க்க மிகவும் மென்மையானவனாயும், நளினமாகவும் காணப்பட்டானே என்று எண்ணினால், அவன் உடல் வலுவை என்னவென்று சொல்லுவேன்? அவ்வளவு வலுவாக அந்த மென்மையான உடல் இருக்கிறது என்பது ஆச்சரியம்தான்!” என்றான் ப்ரத்யோதா.
“இப்போ அவர்கள் இருவரும் எங்கே இருக்கின்றனர்?” என்று கேட்டான் கம்சன்.
“நந்தனோடு தான், நகருக்கு வெளியே கூடாரங்கள் அமைத்துத் தங்கி உள்ளனர்.” என்றான் ப்ரத்யோதா.
கம்சன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. தன் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டும், தடவிக் கொண்டும் தரையில் நிலைகுத்தின விழிகளோடு சற்று நேரம் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். பின்னர் ப்ரத்யோதாவை நிமிர்ந்து பார்த்தான். அவனையே கூர்ந்து பார்த்தவண்ணம், “ப்ரத்யோதா, நான் உன்னை நம்பலாமா?” என்று கேட்டான். ப்ரத்யோதா, “பிரபுவே, இந்த இருபது வருடங்களில் உங்கள் நன்மையையும், உங்கள் சுகத்தையும் தவிர மற்றவை எதையுமே நான் நினைத்துப் பார்க்கவில்லை என்பதை நீங்களே அறிவீர்கள். கடுகத்தனை சந்தேகமாவது உங்களுக்கு வந்திருக்கிறதெனில், இக்கணமே என்னைப் பதவியிலிருந்து விடுவித்து விடுங்கள். மதுராவை விட்டே நான் போய்விடுகிறேன்.” என்றான்.
கம்சன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. ப்ரத்யோதா துரோகம் செய்கிறானா என்பது புரியவில்லை. ஆனாலும் இப்போது இந்தச் சமயம் அவனை விடுவிப்பது சரியாய் இருக்காது என்று நினைத்த கம்சன், அவனைப் பார்த்து, “ப்ரத்யோதா, நீ எனக்குச் செய்த உதவிகளை நான் மறப்பேனா? நீ என் பக்கம் நின்று எத்தனை உதவிகள் செய்துள்ளாய்? சரி, நீ இப்போது சென்றுவா.” என்று முடித்துக் கொண்டான்.
சற்று ஆச்சரியம் அடைந்த ப்ரத்யோதா கிளம்பும் முன்னரே அவனை நோக்கி, “என்னுடைய உத்தரவை ஒரு போதும் மறக்காதே. அந்த இரு இளைஞர்களையும் என் எதிரே அழைத்து வராதே. அவர்களாக வர நினைத்தாலும் வரவிடாதே.” என்றான்.
“ஆஹா, இளவரசே, ப்ரபு, நாளை மல்யுத்தப் போட்டி. நாலா திசைகளிலிருந்தும் மல்லர்களும், வீராதிவீரர்களும் போட்டியைக் காண வருவார்கள். நந்தனும், அவன் ஆட்களும் அதில் இருப்பார்களே? அவர்களை இந்தக் கூட்டத்தின் நடுவே எவ்வாறு தடுப்பேன்?” என்றான் ப்ரத்யோதா.
திடீரெனக் கம்சனின் தொனி மாறியது. நட்புக் குரலில் தொனிக்க, “ஆம், ஆம், ப்ரத்யோதா, முடியாதுதான். நீ இப்போது உடனே வெளியே சென்று மக்களுக்கு நாளை மறுநாள் தநுர்யாகம் முடிவடைவதாகவும், நாளை மல்யுத்தப் போட்டி நடைபெறும் என்றும் அறிவித்துவிடு.” என்றான். ப்ரத்யோதா வேறு வழியில்லாமல் அறையை விட்டு வெளியேறினான். அவன் சென்ற அடுத்த கணம் கம்சன் கைகளைத் தட்ட ஒரு அந்தரங்கப் பணியாள் வந்து நின்றான்.
//அவன் சென்ற அடுத்த கணம் கம்சன் கைகளைத் தட்ட ஒரு அந்தரங்கப் பணியாள் வந்து நின்றான்.//
ReplyDeleteஸஸ்பென்ஸ்!
நல்ல பதிவு. இருங்கள் நான் சன்ஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை நான் அடுத்த பதிவையும் படித்து விடுகின்றேன். நன்றி.
ReplyDeleteஇருவருக்கும் நன்றி.
ReplyDelete