ருக்மி தொடர்ந்து செல்லத் தேர் நகர்ந்தது. கூட்டம் பிரமித்து நின்றது. அடுத்தடுத்து நேர்ந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாய் இருந்தது கூட்டத்தினருக்கு. ஒரு கூனி, கூன் நிமிர்ந்து அழகானதொரு பெண்ணாக மாறிவிட்டாள். ஒரு குதிரையைக் கீழே தள்ளியதோடு அல்லாமல், அதன் மேலிருந்த மனிதனும் முறியடிக்கப் பட்டான். அதுவும் அந்த மனிதன் கம்சனின் ராஜாங்க விருந்தாளி, முக்கிய விருந்தாளி. குதிரை ஒரு பொம்மையைப் போல் விழுந்ததென்றால் அந்த மனிதனோ ஒரு சாக்கு மூட்டையைப் போல் தூக்கி வீசி எறியப் பட்டான். எல்லாவற்றாலும் பயந்திருந்த எருதுகளோ என்றால் கண்ணனால் அன்பாகவும், பாசத்தோடும் சமாதானம் செய்யப் பட்டன. திரிவக்கரை சந்தோஷத்தின் எல்லையில் ஆடிக்கொண்டிருந்தாள். அவள் வாழ்நாள் கனவு பூர்த்தி அடைந்துவிட்டது. அழகின் எல்லை இதுதான் என்னும்படியான அழகியாக மாறிவிட்டாள் அவள். அவளால் ஆனந்தத்தைத் தாங்க முடியவில்லை, அதே சமயம் நன்றி உணர்வும் உள்ளத்தில் பொங்கியது. தன்னருகே நின்றிருந்த மனிதனிடம், “இவன் யார் தெரியுமா? இவன் தான் தேவகிக்கும், வசுதேவனுக்கும் பிறந்த எட்டாவது பிள்ளை ஆவான். இதோ நிற்கிறானே? பயில்வான் போல், இவன் அவனுக்கு மூத்தவன். ஆஹா, கடைசியில் நம்மை எல்லாம் காக்க வந்தேவிட்டான் கண்ணன். நாரதர் சொன்னது சரியாய்ப் போய்விட்டது.” என்று குதித்தாள் திரிவக்கரை.
கூட்டத்தினரின் அன்பான விசாரிப்புகளையும், அவர்களின் மரியாதைகளையும் ஏற்ற வண்ணம் கிருஷ்ணனும், பலராமனும் தங்கள் வழியில் சென்று கொண்டிருந்தனர். திரிவக்கரையின் தலைமையில் கூட்டத்தில் ஒரு பகுதியினர் அவர்களைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். தநுர் யாகத்தில் கலந்து கொள்ள வேண்டி அக்கம்பக்கத்தின் கிராமங்களிலிருந்து வந்திருந்த மக்களால் நிரம்பி இருந்தது மதுராவின் தெருக்கள். செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் கண்ணனைக் கண்டு ஆர்ப்பரித்தது. யாருக்கும் கம்சனின் உண்மையான நோக்கம் வெளிப்படையாகத் தெரிந்திருக்கவில்லை. ஆகவே சந்தோஷமாகவே திருவிழாவின் உற்சாகத்தில் கலந்து கொண்டு ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர். திரிவக்கரையோ கண்ணனோடு நடந்து செல்வதே தன் கெளரவம் என நினைத்த வண்ணம் கண்ணனுக்கு மதுராவின் முக்கிய இடங்களை எல்லாம் காட்டிக் கொண்டு கூடவே நடந்தாள். செய்தியோ அதிவேகமாய்ப் பரவிக் கொண்டிருந்தது. அரண்மனைக்கும் செய்தி போய்விட்டது. அரண்மனையின் சாயத் தொழிலாளியைக் கண்ணன் வீழ்த்தியதும், ருக்மியைக் கண்ணன் வீழ்த்தியதும் அரண்மனையின் வீரர்களிடையில் விவாதிக்கப் பட்டது. மெல்ல மெல்ல ப்ரத்யோதாவையும் செய்தி சென்றடைந்தது.
உடனேயே தன்னுடன் ஒரு சிறு படையைத் திரட்டிக் கொண்டு சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு விரைந்தான் ப்ரத்யோதா. அங்கே சென்று தன் விசாரணையைத் துவக்கி, விசாரித்து அறிந்து கொண்டதும், கண்ணனையும், பலராமனையும் கண்டான். நகருக்கு வெளியே தாங்கள் தங்கி இருந்த இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கண்ணனையும் பலராமனையும் கண்டதும் ப்ரத்யோதா குதிரையை விட்டுக் கீழே இறங்கி அவர்களை நோக்கிச் சென்றான். “நீங்கள் தான் நந்தனின் மக்களா? உங்களைத் தான் நான் காலையிலிருந்து தேடிக் கொண்டிருந்தேன். மன்னிக்கவும், சீக்கிரமாய் உங்களை நான் தேடி வந்திருக்கவேண்டும். “ பேசும்போதே ப்ரத்யோதாவின் கண்கள் இளைஞர்கள் இருவரையும் அளவெடுத்தன. அவனால் இருவரையும் அவர்கள் வீரத்தையும் நினைத்து மனதிற்குள் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. கண்ணனின் சிரித்த முகத்தின் காந்தியால் கவரப்பட்டான் ப்ரத்யோதா.
“யார் நீங்கள்?” என்று கேட்டான் பலராமன்.
“ஓ, நான் ப்ரத்யோதா, இங்கே கம்சனின் படைத் தளபதியாக இருக்கிறேன். யாதவகுல அந்தகப் பிரிவின் தலைவர்களில் ஒருவன். இளவரசன் கம்சனின் ப்ரத்யேகத் தளபதியும் நானே.”
“உங்க மதுராவின் மக்கள் ரொம்ப மோசமானவர்களாய் இருக்கின்றனரே? ஒருத்தன் என்னடாவென்றால் கண்ணனைத் தாக்கப் பார்த்தான், இன்னொருவன் என்னைச் சாட்டையால் அடிக்க நினைத்தான். இப்படியும் ஜனங்களா?” பலராமன் தன் கையில் இருந்த தழும்பைக் காட்டினான். ருக்மி சாட்டையை வீசும்போது பலராமன் மேல் பட்டிருந்ததில் தழும்பு சிவந்து கன்றிப் போயிருந்தது. “நல்ல, அருமையான விருந்துபசாரம்” பலராமனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்போது கிருஷ்ணன் ப்ரத்யோதாவைப் பார்த்துக் கைகளைக் கூப்பினான். “தங்களைச் சந்திக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். தங்கள் வீரத்தைப் பற்றிய செய்திகள் நிறையவே எங்களை வந்தடைந்திருக்கின்றன.” என்றான் கண்ணன். அதற்குள் திரிவக்கரை குறுக்கிட்டாள்.”ப்ரத்யோதா அவர்களே, சாயத் தொழிலாளி இவர்கள் இருவரிடமும் மிகவும் மோசமாய் நடந்து கொண்டான். ருக்மியோ பலராமனைச் சாட்டையால் அடித்துவிட்டான்.” என்றாள். அப்போது தான் கண்ணனின் அருகில் இருந்த அழகான, வடிவான பெண்ணைக் கண்டான் ப்ரத்யோதா. “யார் நீ, பெண்ணே? உன் குரல் எங்கேயோ கேட்டிருக்கிறேன்?” ப்ரத்யோதாவின் கண்கள் அந்தப் பெண்ணின் வனப்பைக் கண்டு ஆச்சரியத்தில் விரிந்தது.
ஆஹா, மாமா, ப்ரத்யோதா மாமா, என்னைத் தெரியவில்லையா தங்களுக்கு?? நான் இன்று காலையில் தான் உங்களுக்கு வாசனைத் திரவியங்கள் அளித்தேன். அதற்குள்ளா என்னை மறந்துவிட்டீர்கள்?” தன்னுடைய வழக்கமான பாணியில் பேசிய திரிவக்கரையைப் பார்த்த ப்ரத்யோதாவிற்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. “ஆஹா, திரிவக்கரை, நீயா? உண்மையாகவே நீதானா? என்ன ஆயிற்று உனக்கு? உன்னுடைய கூன் எங்கே போயிற்று? வளைந்த கை, கால்கள்? ஆஹா, எல்லாம் நேராகிவிட்டனவே? எத்தனை அழகான பெண்ணாக மாறிவிட்டாய்? உன் அழகு என் கண்களைக் கூச வைக்கிறதே?” ப்ரத்யோதாவிற்குத் திகைப்பும், ஆச்சரியமுமாய் இருந்தது. தன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. இன்று காலையில் தான் இவளைப் பார்த்தோம். முதுகு கூனி, கால், கைகள் வளைந்து மூன்று இடங்களில் வக்கிரமாய் வளைந்திருப்பதால் தானே இவளுக்கே திரிவக்கரை எனப் பெயர்? காலையில் வாசனாதித் திரவியங்கள் கொடுக்கும்போது கூட எப்போதும் போல் தானே மூன்று கோணல்களோடு இருந்தாள். அவளா இவள்? ஆச்சரியமாய் இருக்கிறதே? இது எங்கனம் நிகழ்ந்தது?
"திரிவக்கரா, என்ன இது? நீயா இது? எப்படி நடந்தது இது?" ஆச்சரியம் பொங்க மீண்டும் கேட்ட ப்ரத்யோதாவிடம் கண்ணனைக் காட்டி, "என் தேவன் நிகழ்த்திய அற்புதம் இது!" என்றாள் திரிவக்கரை. கண்ணனை புதிய மதிப்போடும், ஆச்சரியம் கலந்த பக்தி உணர்வோடு பார்த்த ப்ரத்யோதா நாரதரின் தீர்க்கதரிசனம் விரைவில் நடக்கப் போகிறது என்பதையும் புரிந்து கொண்டான். இந்த வசுதேவனின் எட்டாவது பிள்ளையால் யாதவகுலத்துக்கு நடக்கப் போகும் மேன்மைகள் குறித்தும் நினைத்து உள்ளூர சந்தோஷப் பட்ட ப்ரத்யோதாவின் மனதில் ஒரு ஓரத்தில் முதல்நாள் இரவு, கம்சனின் அரண்மனையின் தாழ்வாரத்தின் இருண்ட மூலையில் நடந்த அசம்பாவிதத்தை நினைத்து மனதில் கசப்பு உணர்வும், வெறுப்பும், தன் கையாலாகாத் தன்மையினால் தோன்றிய சுயப் பச்சாத்தாபமும் மேலோங்கியது. ம்ம்ம்ம்ம் இந்தக் கண்ணனை கம்சனின் எதிரே வரவிடாது மல்லர்களின் மூலமும், மற்ற வீரர்கள் மூலமும் எவ்விதமானும் அழிக்கவேண்டும் என்பது கம்சனின் திட்டம். அதற்கு என்னையும் உடந்தையாக இருக்கச் சொல்கின்றானே.
சட்டெனக் கண்ணனின் பக்கம் திரும்பிய ப்ரத்யோதா, "நந்தகுமாரா, இந்த நகரின் சில முக்கியமான பகுதிகளை உனக்குக் காட்டுகிறேன். என்னுடன் வருகிறீர்களா?"
"ஓ, அவசியம் வாருங்கள் செல்லலாம், அனைத்துப் பகுதிகளையுமே நான் பார்வையிட விரும்புகிறேன்."
"முதலில் நாங்கள் தநுர்யாகத்திற்கென வைக்கப் பட்டுள்ள அந்த மகாபெரிய வில்லையும் அதன் அம்புகளையும் பார்க்கவிரும்புகிறோம்." என்றான் பலராமன் குறுக்கிட்டு.
"எனில் வாருங்கள் இருவரும் நாம் அந்த வில்லை வைக்கப் பட்டிருக்கும் மண்டபத்திற்குச் செல்லுவோம். அங்கே அதற்குத் தினமும் வழிபாடுகளும் நடத்தப்படுகிறது. கடுமையான காவலும் போட்டுள்ளது. ஆனால் நான் கூட வருவதால் உங்களுக்குப் பார்க்க பிரச்னை எதுவும் இருக்காது. " ப்ரத்யோதா முன்னே நடக்க, இரு இளைஞர்களும் திரிவக்கரையும் கூடவே ஏதேதோ பேசிக் கொண்டே தொடர நடந்தனர். நடுவில் ப்ரத்யோதா திரும்பி இவர்கள் இருவரையும் பார்த்து, "உங்கள் இருவருக்கும் வில் வித்தையில் பழக்கம் உண்டா? இதற்கு முன்னர் வில்லையும் அம்புகளையும் பார்த்திருக்கிறீர்களா?" எனக் கேட்டான்.
"ம்ம்ம்ம்ம்ம் நாங்கள் எங்கள் வில்லைச் சொந்தமாக நாங்களே தயாரித்துக் கொள்வோம்.யமுனைக்கரையில் மூங்கில்களைச் செதுக்கி, அல்லது காட்டுமரங்களைக் கூர் தீட்டி வில்லும், அம்பும் செய்து மிருகங்களை வேட்டையாடி இருக்கிறோம். ஆனால் உங்கள் வில்லையும் அம்பையும் போன்றதொரு வில்லையும் அம்பையும் இதுவரை கண்டதில்லை. ஆகவே பார்க்கவேண்டும்." பலராமன் பதில் சொன்னான். தநுர்யாக மண்டபமும் வந்தது.
ஆகா நல்ல பதிவு, தனூர் வில்லையும், கம்சனின் ஆணவத்தையும் உடைக்கும் தங்களின் அடுத்த பதிவிற்க்காக ஆவலுடன் காத்துள்ளேம். நன்றி.
ReplyDeleteஅருமை தலைவி ;)
ReplyDelete