பரசுராமரின் கதை!
பரசுராமரின் ஆலோசனைப்படியே கண்ணனும், பலராமனும் அவருடனேயே கோமந்தக மலைப்பகுதிக்குச் சென்றனர். அவர்கள் ஓர் அடர்ந்த காட்டைக் கடந்ததும் எதிரே தோன்றியது ஒர் உயர்ந்த அழகான எளிதில் ஏறமுடியாத ஒரு மலைத் தொடர். மலையின் பெரிய பெரிய மரங்களும் அதில் வசிக்கும் பட்சிகளின் வர்ணஜாலமானக் கூச்சல்களும் மனதை நிறைத்தன. நேராகவும், செங்குத்தாகவும் நின்ற அந்த மலையில் ஏறுவது கடினமான ஒன்று. எனினும் பரசுராமர் முன்னே செல்ல கண்ணனும், பலராமனும் பின் தொடர்ந்தனர். பலராமனுக்கு ஆவலை அடக்க முடியாமல், பரசுராமரிடம், “எங்கள் தெய்வமே, அத்தனை மன்னர்களையும் வென்று இந்த பூமியையே உங்கள் காலடிக்குக் கீழ் கொண்டு வந்தும் ஏன் நீங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டீர்கள்?” என்று கேட்டான். மேலும் தொடர்ந்து, “ஆஹா, உங்கள் போர் ஆசையை நீங்கள் தணித்துக்கொள்ளாமல் தொடர்ந்திருந்தீர்களானால்?? இந்த பூமியில் இவ்வளவு தைரியமாக எந்த அரசனும் நடமாட முடியுமா?? அனைவரும் சாம்ராஜ்யப் பேராசை பிடித்து அலைவார்களா? ஆஹா, இந்த ஜராசந்தன்!! அவனுக்குத் தான் இத்தனை துணிவு வந்திருக்குமா?”
“உண்மைதான் பலராமா! அனைவருக்கும் இது ஏதோ புதிராகவே இருந்து வருகிறது. உண்மைதான், நான் க்ஷத்திரியர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை வென்றேன் தான். ஆனால் எதற்காக?? கார்த்தவீர்யார்ஜுனனை நான் கொன்றதுக்கு ஒரு காரணம் உண்டல்லவா? என் தந்தையைக் கொன்றதோடு அல்ல. அவன் அழிக்க முடியாத சூரிய, சந்திரர்களின் வான் பயணத்துக்கு ஒரு சவாலாக இருந்தான். அனைத்து தேவர்களையும் தூசு போல் கருதினான். அவனுடைய ஆயிரம் கைகளினாலும் மிகவும் பலம் பொருந்தியவனாக இருந்ததோடு அல்லாமல், நம் சநாதன தர்மத்தின் கோட்பாடுகளைப் பரிகசித்தான். அவற்றைச் சற்றும் மதிக்கவில்லை. இவை எதுவும் புனிதமானதாக அவன் கருதவில்லை. அவனைத் தவிர மற்ற யாரையும் உயர்வாக அவன் எண்ணவில்லை. அனைத்தும் அவனுக்கு அடங்கியவையாக எண்ணினான். “
“மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய வசிஷ்டரின் ஆசிரமத்தை அழித்தான். அதை முற்றிலும் எரித்தான். என் தந்தையும், தவங்கள் செய்து சிறந்த நிலையை அடைந்தவருமான ஜமதக்னி முனிவரைக் கொன்றான். எங்கள் ஆசிரமத்தையும் அழித்தான். நம்மை உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி அஞ்சி ஓடச் செய்தான். அவன் அழிக்கப் படவேண்டியவன். அதுவே முறை. அதனாலேயே அழிக்கப் பட்டான்.” தீர்மானமாய்ச் சொன்னார் பரசுராமர். “ஆஹா, அப்படியா? இது எங்கனம் நடந்தது? அப்போது நம் அரசர்களும், அவர்களின் வீரர்களும் என்னதான் செய்துகொண்டிருந்தனர்??” கண்ணன் ஆவலுடன் கேட்டான்.
“நம் அரசர்கள் ஒருவருக்கொருவர் தங்களில் எவர் பெரியவர் எனச் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். அதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லையே? இந்தக் கார்த்த வீர்யார்ஜுனன் வீரன் மட்டுமல்ல. அவன் நேர்மையற்ற முறையில் அரசாளவும் செய்தான். சூதிலும், வஞ்சனையிலும் சிறந்து விளங்கினான். வன்முறையிலும், தான் தான் பெரியவன் என்று எண்ணுவதிலும் சிறந்து விளங்கினான். தவங்கள் புரிவதிலும், யாகங்கள் செய்தும், வாழ்க்கையை மேம்படுத்த வேண்டியவர்களை இகழத்தக்க ஒரு புழுவாக மாற்ற எண்ணினான். அனைவரும் அவன் புகழைப் பாடுவதற்கே பிறந்திருக்கிறார்கள் என எண்ணும்படி நடந்து கொண்டான்.””
“ம்ம்ம்? அனைத்தையும் ஒரு வாறு சமாளித்துக் கடந்து வந்திருக்கிறீர்கள் அன்றோ?”
“ஆம், இந்த உலகம் அமைதியாக இருக்கவே விரும்புகிறது. இதன் ரீதியில் செல்லவே நினைக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் ஜப, தபங்களைச் செய்து கொண்டு, சத்தியத்தை நோக்கி இயற்கையின் வழியில் செல்லவே விரும்புகிறார்கள். ஆகவே இத்தகைய அசுரர்கள் அழிக்கப் படவேண்டியவர்களே. இப்படித் தான் ஹைஹையர்கள் தொந்திரவு கொடுக்கவே நான் அவர்களையும் அழிக்க வேண்டியதாயிற்று. இந்தப் பரந்த பூவுலகில் அமைதியாகவு, நிம்மதியாகவும் வாழ விரும்புகிறவர்களுக்காக அத்தகையதொரு அமைதியையும், நிம்மதியையுமே நான் கொடுக்க விரும்பினேன். எனக்கு அரச பதவியோ, சக்கரவர்த்தி என்ற பெயரோ தேவையில்லை. அரசபோகத்தில் ஆழ்ந்திருக்கவும் நான் விரும்பவில்லை. அரசாட்சி புரியவும் எண்ணவில்லை. என் கடமை இந்த பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதே. அதற்காகவே நான் பிறந்ததாக உணர்ந்தேன். ஆகவே அதைச் செய்து தர்மத்தை நிலை நாட்டினேன்.”
“ஆஹா, குருவே, எத்தகையதொரு உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறீர்கள்? அனைத்து ராஜ்யங்களும் உங்கள் கையில். இருந்தும் அவற்றைத் திருப்பிக் கொடுப்பதென்றால் எவ்வளவு நெஞ்சுறுதி வேண்டும்? ஆனால் நீங்கள் வெகு சுலபமாக அதைச் செய்து காட்டிவிட்டீர்கள். அற்புதமான விஷயம் இது.” என்றான் கண்ணன்.
“ஒரு அதிசயமும் இல்லை. நான் ஆயுதங்களைத் தரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தரித்தேன். யுத்தம் செய்தேன். க்ஷத்திரிய தேஜஸ் மங்கிப் போய் இருந்தது. அது மங்கலாம் எப்போதேனும் ஒரு சில முறைகள். அது சில சமயங்களில் தேவையும் கூட. எனினும் மற்றொரு நல் அரசனால் அது திரும்ப ஜொலிக்க ஆரம்பிக்கும். ஆனால் பிரம்ம தேஜஸ் மட்டும் எப்போதுமே ஒளிர்ந்து கொண்டே இருக்கவேண்டும். சற்றேனும் மங்கக் கூடாது. இந்த ஞான தீபம் எப்போதுமே ஒளிரவேண்டும். அப்போது தான் இந்த பூமி சரியான பாதையில் செல்லும். இவ்வுலகில் தர்மமும் நிலைநாட்டப் படும். “ என்றார் பரசுராமர். அதற்குள்ளாக அவர்கள் மலையின் ஒரு பாகத்தின் உச்சிக்கு வந்து சேர்ந்திருந்தனர். அங்கே ஒரு சமவெளி காணப்பட்டது. சற்றுத் தூரத்தில் மக்கள் குடியிருப்புகளும் தெரிந்தன. பரசுராமரின் உருவத்தைத் தூரத்திலேயே கண்ட சில குடி மக்கள் கோஷங்கள் எழுப்ப உடனேயே அந்தக் கிராமத்து மக்கள் அனைவரும் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.
No comments:
Post a Comment