கண்ணன் பதுங்கினான், ஜராசந்தன் வெளிப்பட்டான்!
மேலே நாம் தொடரும் முன்னர் இந்த கோமந்தக மலையில் கண்ணன் அடைக்கலம் தேடியதைப் பற்றியும், கோமந்தகத்தைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு:
ஸ்ரீமத் பாகவதமோ அல்லது விஷ்ணு புராணமோ கண்ணன் மதுராவில் இருந்து தப்பி வந்ததை மட்டுமே குறிப்பிடுகிறதே தவிர, கண்ணன் முதல் அடைக்கலத்திற்கு கோமந்தக மலைப்பகுதியை நாடிச் சென்றது பற்றிச் சொல்லவில்லை. ஆனால் ஹரிவம்சத்தையே திரு முன்ஷி பெரும்பாலும் ஆதாரமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆகவே ஹரிவம்சத்தில் குறிப்பிட்டிருப்பதாய்க் கூறுகின்றார். ஹரிவம்சத்தில் குறிப்பிடப் படும் கோமந்தகப் பகுதி தற்போதைய கோவா மாநிலமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார். அல்லது மேற்குக் கடற்கரை ஓரம் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரான சஹ்யாத்திரி மலையின் ஒரு சிகரமான மகேந்திரமலைப்பகுதியின் ஏதானும் ஓர் இடமாகவும் இருந்திருக்கலாம். மேற்கே வந்திருக்கிறான் கண்ணன் அடைக்கலம் தேடி. மேலும் இந்த கோமந்தகப் பகுதியில் கண்ணன் வசித்தபோதே கருடனின் நட்பும் அவனுக்குக் கிடைக்கிறது. புராணங்களின்படியும், பாகவதத்தின் படியும் கருடனை ஒரு பறக்கும் பறவையாகச் சித்தரித்திருந்தாலும், ஹரி வம்சத்தின் அத்தியாயங்களில் கருடனை ஒரு கழுகைப் போன்ற பறக்கும் சக்தி கொண்ட மனிதனாகவே காட்டப் பட்டுள்ளது.
மேலும் இருவரும் தங்களுக்கான சிறப்பு ஆயுதங்களையும் இங்கேயே பெறுகின்றனர். மேலும் பலராமனுடைய மது குடிக்கும் வழக்கத்தைப் பல புராணங்கள் சித்திரித்திருந்தாலும் ஹரி வம்சத்தின் கோமந்தக மலைப்பகுதி வாசத்தைப் பற்றிய அத்தியாயங்களிலேயே அவன் எவ்வாறு மதுவின் அடிமையாக மாறினான் என்பதைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கோமந்தக மலைப்பகுதியிலிருந்த மனதை மயக்கும் கடம்ப மரங்களின் பூக்களின் நறுமணத்தால் கவரப்பட்ட பலராமன் அவற்றிலிருந்து எடுக்கப் பட்ட மதுவின் இனிமையாலும் கவரப்பட்டான் என்கிறது ஹரிவம்சம். மதுவை “காதம்பரி” என்றும் கூறுகிறது ஹரிவம்சம். இனி இங்கே அடைக்கலம் புகுந்த இளைஞர்கள் இருவரையும் கோமந்தக மலையும், அதன் குடிமக்களும் காப்பாற்றினார்களா இல்லையா என்பதைப் பார்க்கலாமா?
************************************************************************************
பரசுராமர் வந்திருக்கும் செய்தியைக் கேட்ட கருட இனத்து மக்கள் அனைவரும் அவர் வரவைக் குறித்து தங்கள் மரியாதையைத் தெரிவிக்கும் நிமித்தம் அனைவரும் கருடனைப் போன்ற நீண்ட மூக்குக் கொண்ட முகமூடிகளை அணிந்து வந்து பரசுராமரை வணங்கினார்கள். அவர்களின் தலைவனும் தன்னுடைய மகன்களுடன் வந்தான். பழங்களும், தேங்காய்ப்பாலும் உணவாக அளிக்கப் பட்டது. பரசுராமர் அதன் பின்னர் கண்ணனையும், பலராமனையும் பற்றி கருடர்கள் தலைவனுக்கு எடுத்துக் கூறிவிட்டு விடைபெற்றார். அப்போது கண்ணனிடம் அவர் கூறினார்:
“வாசுதேவ கிருஷ்ணா, நீ யார் என்பதையும், உன் கடமைகள் என்னவென்பதையும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். இதை மட்டும் மறக்காதே! நீ இவ்வுலகிற்கு ஆற்றவேண்டிய முக்கியக் கடமை ஒன்றிருக்கிறது. அதற்காகவே நீ பிறந்திருக்கிறாய். தர்மம், நியாயம். அதை நீ நிலைநாட்டவேண்டும். மறந்தும் அதர்மத்தின் பின்னால் சென்றுவிடாதே. உன் யாதவ குல மக்கள் உன்னைக் கடவுள் எனக் கொண்டாடுவதில் தவறே காணமுடியாது. அவர்கள் உன்னிடம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொல்வது சரியே. ஆனால் நீ உன்னிடமே நம்பிக்கை வைக்க மறக்காதே. உன்னிடம் நீ நம்பிக்கை வைத்து, நீயே உண்மையின் சொரூபமாக மாறினால் ஒழிய நீ கடவுளாக ஆக முடியாது என்பதையும் நினைவில் வை. இனி நான் உன்னைப் பார்ப்பேனா என்பது சந்தேகமே. ஆனால் என் ஆசிகள் எப்போதும் உனக்கு உண்டு. ஒருவேளை உனக்கு என் உதவி தேவைப்பட்டால் இந்த கருடர்களில் ஒருவனை அனுப்பு. நான் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. “
இரு கைகளையும் தூக்கி இருவரையும் ஆசீர்வதித்த பரசுராமர் தன்னுடைய இணை பிரியா ஆயுதமான கோடரியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் உருவம் மறையும் வரையில் கண்ணனும், பலராமனும் பார்த்துக்கொண்டு நின்றனர்.
**************************************************************************************
அதற்குள் மதுராவில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போமா?? சக்கரவர்த்தி ஜராசந்தனின் படைகள் யமுனைக்கரையில் தண்டு இறங்கினர். தேர்ப்படையிலேயே குறைந்தது ஐநூறு தேர்களும் அவற்றை ஓட்டிப் போர் புரிய அதிரதிகளும், மஹாரதிகளுமாக இரண்டாயிரம் பேர்களும் இருந்ததாய்ப் பேசிக்கொண்டனர். இதைத் தவிர யானைப்படைகளும், குதிரைப்படைகளும் காலாட்படைகளுமாக நிறைந்து காணப்பட்டு யமுனைக்கரையே அல்லோலகல்லோலப் பட்டது. யானைகளுக்குத் தண்ணீர் காட்டுவோரும், குதிரைகளைக் குளிப்பாட்டுவோரும், தாங்களும் அமிழ்ந்து குளிப்பவர்களுமாக ஒரே களேபரமாய் இருந்தது. இன்னொரு பக்கம் ஆயுதங்கள் குவிந்து கிடந்தன. வாள்களும், வேல்களும், கோடரிகளும், சூலங்களும், குத்தீட்டிகளும் அந்த மத்தியான வெயில் பட்டு பளீர் பளீர் என மின்னலைப் போல் ஒளி வீசியதானது, கோடைக்காலங்களில் திடீர், திடீர் என ஏற்படும் மேல்வானத்து மின்னல்களை நினைவூட்டியது.
அங்கே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் தன் கூடாரத்தை நியமிக்கச் சொல்லி இருந்த ஜராசந்தன் கூடாரத்துக்கு வெளியே ஆலமரத்தடியிலேயே தன் மதிய உணவுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன் உயரம் பிரமிக்க வைத்தது எனினும், அவன் உடலும் அதற்கேற்றவாறு அமைந்திருந்ததால் உயரத்தைக் குறைத்தே காட்டியது. ஒரு காலத்தில் தேர்ந்த மல்யுத்த வீரனாய் இருந்தவன் என்பதைக் காட்டும் வண்ணம் இறுகிய தசைநார்கள் காணப்பட்டாலும், வயதின் காரணமாய் ஏற்பட்டிருந்த சிறு தொந்தியானது அதெல்லாம் பழங்கால நிகழ்வு எனச் சொல்லாமல் சொல்லியது. அவன் முகமோ இறுகிக்கிடந்தது. அவனுக்குத் தேவைப்படும்போது உணர்ச்சிகளை வெளிக்காட்டியும், தேவையில்லாச் சமயம் உணர்வுகளைத் துளிக்கூடக் காட்டாமலும் அவனோடு பூரண ஒத்துழைப்புச் செய்தது. தற்சமயம் அவன் குரோதத்தின் உச்சத்தில் இருந்தான். அவன் முகமும், தீ போல் ஜொலித்த இருகண்களும் அதை நன்றாகவே சுட்டிக் காட்டின.
ஹா! ஹா! பாஞ்சால நாட்டு அரசன் துருபதன் தன் நாட்டின் வழியே ஜராசந்தனும், அவன் படைகளும் செல்ல அநுமதி தர மறுத்துவிட்டான். ஒரு பெரிய சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியின் மகிமைக்கு நேர்ந்த இழுக்கு! அவமதிப்பு. இதுவே வேறொரு சமயமாக இருந்தால் பாஞ்சாலத்தினுள் புகுந்து அந்த துருபதனின் தலைநகரான காம்பில்யத்தையே எரித்துச் சுட்டுப் பொசுக்கி இருக்கலாம். ஆனால், ஆனால்! ஹா! ஹா! என்ன ஒரு தர்மசங்கடமான நிலை! இருக்கட்டும், ஆனாலும் சமாளிக்கலாம். நான் யார்? ஜராசந்தன்!
*
kutti post :((((
ReplyDeleteநிறைய தெரியாத தகவல்கள்!!பரசுராமர் ரெண்டு யுகத்துக்கும் மேல இருந்திருக்கார்!இல்லையா?
ReplyDelete