பிருஹத்பாலனின் ஆசை!
பிருஹத்பாலனின் மனம் ஜராசந்தனுக்காக எதுவேண்டுமானாலும் செய்யும் அளவுக்குக் கசிந்து உருக ஆரம்பித்திருந்த்து. ஜராசந்தனின் கேள்விக்குப் பதிலாய் அவன் தன் பாட்டனுடன் இருந்து வந்ததாய்த் தெரிவித்தான். தன் தாயும் கூட இருந்து பாட்டனைக் கவனித்துக் கொண்டதாயும் தெரிவித்தான். பிருஹத் பாலனின் இளக்கமான மன நிலையை நன்கு கவனித்துக்கொண்ட ஜராசந்தன் அவனிடம்,”நீ உன் பாட்டனுக்கு மிகவும் பிரியமான பேரன் என்று கேள்விப் பட்டேனே? மகதத் தலைநகரம் கிரிவிரஜத்துக்கு ஒரு முறை நீ விஜயம் செய். மதுராவுக்கும், எங்கள் மகதத்துக்கும் உள்ள உறவுகள் பலமடையும்.” என்று மிக மிக மென்மையான குரலில் கூறினான். பிருஹத்பாலனுக்கு இந்த முகஸ்துதி மிகவும் பிடித்திருந்தது. கண்ணன் வரும் முன்வரையிலும் அனைவரும் அவனையே பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். கண்ணன் வந்தான், ஓரிரவில் அனைத்தும் மாறிவிட்டதே! கடைசியில் நம்மைப் புரிந்து கொண்டவன் ஒருவனாவது இருக்கிறானே? ம்ம்ம்ம்ம் இதுதான் சமயம், நம் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள. எங்கிருந்தோ வந்த கண்ணனை மதுராவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுகொண்டு ஆட்சி புரிந்து வா எனக் கேட்ட யாதவத் தலைவர்கள் என்னை ஒரு வார்த்தை கேட்கவில்லையே!
உண்மையில் நானல்லவோ இந்த ஆட்சிக்கு உரிமை பெற்றவன். தாத்தா அவர்கள் என்னையல்லவோ அழைத்திருக்கவேண்டும்? போகட்டும், இப்போது அந்தப் பொல்லாத வாசுதேவ கிருஷ்ணன் ஊரை விட்டு, நகரை விட்டு, நாட்டை விட்டே ஓடிவிட்டான். அதுவும் நன்மைக்கே. நம் எண்ணத்தை இப்போது இதோ, இந்த ஜராசந்தன் மூலம் நிறைவேற்றிக் கொள்வோம். இதுதான் சரியான சமயம் நம் எண்ணத்தைச் சொல்வதற்கு, இந்த ஜராசந்தனோ நம்மிடம்மிக மிக நட்போடு பழகுகிறான். யார் கண்டது? நம் தலைமையில் மதுரா நகரும், அதன் மக்களும் பெரும் புகழையும், செல்வத்தையும் செல்வாக்கையும் அடையப் போகிறார்களோ என்னமோ? நம் மூலம் இவை எல்லாம் நிறைவேறவேண்டுமோ என்னமோ? மாமன் கம்சனைப் போல, இல்லை, இல்லை, அவனையும் விடச் சிறந்ததொரு அரசனாக ஆட்சி புரியலாம். ஆஹா, பிருஹத்பாலனின் கனவுகள் விரிந்தன. ஜராசந்தனைப் பார்த்துப் பணிவோடும், வணக்கத்தோடும் பேச ஆரம்பித்தான்.
“பேரரசே! மதுராவும், அதன் யாதவத் தலைவர்களும், மக்களும் அனைவரும் உங்களுக்குப் பூரண விசுவாசத்தைக் காட்டுகிறோம். அதில் தங்களுக்கு எவ்வித சந்தேகமும் வேண்டாம்.” பின்னர் மெதுவாக, மிக மிக மெதுவாக அவன் கூறிய சில வார்த்தைகள், அக்ரூரரைப் பொய்யர் என்று சொல்லும்படியாக அமைந்தன. தனக்குள் சிரித்துக்கொண்ட ஜராசந்தன், “ ஆம், ஆம், குழந்தாய், அந்தக் கோழைகள் இருவரும் தான் ஓடிவிட்டனரே!” ஜராசந்தன் பிருஹத்பாலனின் கண்களில் தெரிந்த பேராசையைக் கண்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டான். பிருஹத்பாலனோ, ஜராசந்தன் தன்னை நம்பிவிட்டதாய் நினைத்துக்கொண்டான். ஆஹா, இப்போது மட்டும் ஜராசந்தனின் தாக்குதலை நாம் நிறுத்திவிடவேண்டும். நட்பாகப் போய் நாம் ஜராசந்தனின் தாக்குதலை நிறுத்தினால் இரட்டை ஆதாயம். ஜராசந்தனின் நட்பும்கிடைக்கும். யாதவத் தலைவர்களும் வாசுதேவக் கிருஷ்ணனால் கூட முடியாத ஒன்றை பிருஹத்பாலன் சாதித்து வந்துவிட்டான் எனப் பெருமையாகப் பேசுவார்கள். அருமையான சந்தர்ப்பம். அனைவர் மத்தியிலும் தான் ஒரு முக்கியமான வீரனாக மதிக்கப் பட்டுப் புகழப் படுவோம் என நினைத்தான் பிருஹத்பாலன்.
ஜராசந்தனைப் பார்த்து, “அந்த இடைச்சிறுவர்கள் இருவரும் தான் கோழைகளாய் ஓடிவிட்டனரே? தாங்கள் தயவு கூர்ந்து, கருணை காட்டி, மதுராவின் மேல் தாக்குதல் நடத்தாமல் இருந்தால்………………..” தயங்கிக்கொண்டே இழுத்தான் பிருஹத்பாலன். ஜராசந்தனோ,” ஆம், ஆம், நான் முதலில் மதுராவை நாசம் செய்துவிடலாம் என்றே எண்ணினேன். ஆனால் உன் போன்றதொரு வீரனை, இளைஞனைப் பார்த்ததும் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். ஆஹா, இந்த மதுரா நகருக்கு நீ மட்டும் அரசனாக இருந்தால்??? ஆஹா, எவ்வளவு பொருத்தமாய் இருக்கும்? ஆம், ஆம், நீதான் மதுராவுக்கு ஏற்ற தலைவன்.” கிராமங்களில் விவசாயிகள் வானத்தின் மேகங்களின் நகர்வைக் கொண்டே மழை வருமா, வராதா என அநுமானிப்பதைப் போல் தெள்ளத் தெளிவாக பிருஹத்பாலன் மனதைப் படித்தான் ஜராசந்தன். பிருஹத்பாலன் சட்டெனத் தன் ஆசனத்திலிருந்து எழுந்து ஜராசந்தனை வணங்கினான்.
“பெருமதிப்பு வாய்ந்த சக்கரவர்த்தியே! ஆஹா, நீங்கள் மட்டும் மதுரா நகரை விட்டு வைத்தால், உங்களிடம் மதுராவை விட்டுவிடுமாறு பிச்சை கேட்கிறேன். ஆம், என் மாமன் ஆன அக்ரூரர் சொன்னதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். எங்கள் அனைவரின் வேண்டுகோளையும் அனைவர் சார்பாகவும் அவர் இங்கே அறிவித்திருப்பாரே? நீங்கள் மட்டும் இதற்குச் சம்மதித்தால் அளவற்ற நன்றி கொண்டு இருப்பேன். என்றென்றும் உங்களுக்கு நன்றி பூண்டவனாக இருப்பேன். நான் இன்னும் அரச பதவியில் அமரவில்லைதான். ஆனால் என் பெரியப்பா வசுதேவர் ஷூரர்களின் தலைவராக இருக்கிறார். அவரின் இரு குமாரர்களும் ஓடிவிட்டனர். என் பாட்டனுக்கு என்னை விட்டால் வேறு பேரன் எவரும் இல்லை. மேலும் என்னிடம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என் பாட்டன்.” அவசரம், அவசரமாக பிருஹத்பாலன் பேசியது தனக்குத் தானோ என்னும்படி தோன்றினாலும் எவ்வாறேனும் மகதச் சக்கரவர்த்தியைத் திருப்தி செய்ய எண்ணுவதும் வெளிப்படையாகத் தெரிந்தது.
கெட்டிக்காரனான ஜராசந்தன் பிருஹத்பாலனை நன்கு புரிந்து கொண்டான். அவன் மனம் யாதவர்களின் நலனுக்கும், தன் சுய லாபத்துக்கும் இடையில் ஊசலாடுகிறது என்பதைக் கண்டான். அவன் சுயலாபத்தைத் தூண்டிவிடும் வகையில் மேற்கொண்டு பேசினான் ஜராசந்தன். “பிருஹத்பாலா, நீ மட்டும் மதுராவின் பட்டத்து இளவரசனாக இருந்தால்???? ஆஹா, நாம் நினைப்பது எல்லாமேவா நடக்கிறது? பார்க்கலாம், ஆனால், யாருக்குத் தெரியும்? ம்ம்ம்ம்? நீ பட்டத்து இளவரசனாக ஆகிவிடலாம்.” யோசிப்பவன் போல் பேசினான் ஜராசந்தன். பிருஹத்பாலனோ தன் நோக்கத்தைக் கூறி அதற்கேற்றாற்போல் பேரம் பேசிக்கொள்ளும் சமயம் வந்துவிட்டது என்றே நினைத்தான். தன்னுடைய ராஜதந்திரத்தை நினைத்து தானே மெச்சிக்கொண்டான் அவன். ஒரு கை தேர்ந்த அரசியல் சாணக்கியனால் கூட முடியாத ஒன்றை நாம் நடத்திக் காட்டப் போகிறோம் என்று எண்ணினான் அவன். “அரசர்க்கரசே, மதுராவை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். பிறகு பாருங்களேன், தாங்கள் நினைத்தது கை கூடும்.” ஜராசந்தனோ பிருஹத்பாலனின் முட்டாள் தனத்தை நினைத்து உள்ளூரச் சிரித்துக்கொண்டிருந்தான். ஆனால் வெளியே தான் மிகவும் நட்போடு இருப்பதாய்க் காட்டிக்கொண்டான். யோசிப்பவன் போல, “ம்ம்ம்ம்ம்??? அது நல்ல யோசனைதான், ஆனால் அந்தக் கிருஷ்ணன் வந்துவிட்டானென்றால்???” என்று கேட்டான்.
“கிருஷ்ணனா? அவன் ஒரு போதும் வர மாட்டான் அரசே! அவனால் வர முடியாது” திட்டவட்டமாய்த் தெரிவித்தான் பிருஹத்பாலன். “ஏன் வரமாட்டான்? அவனால் எவ்வளவு தூரம் சென்றிருக்க முடியும்?? இங்கே தான் ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று பீஷ்மரின் உதவியைக் கேட்டிருப்பான்.” என்றான் ஜராசந்தன். அவசரம், அவசரமாக மறுத்தான் பிருஹத்பாலன். “இல்லை, இல்லை, கிருஷ்ணனால் வரவே முடியாது. அவன் தெற்கே வெகு தூரம் சென்றுவிட்டான்.”
“ம்ம்ம்ம்?? அங்கே???”
“எங்கேயோ தூரத்தில்!”
“நர்மதை நதிக்கரையின் காடுகளில் ஒன்றில் புகுந்துவிட்டானோ?”
“இல்லை, இல்லை, ம்ம்ம்ம்ம்?? கோமந்தகம் தாண்டி…..” இழுத்தான் பிருஹத்பாலன். நம்மை நம்பி,ஒரு பொருட்டாய் மதித்து இவ்வளவு தூரம் பேசும் ஒரு மஹா சக்கரவர்த்தியிடம் எப்படி பொய் சொல்வது? உண்மையும், சொல்லாமல், பொய்யும் சொல்லாமல் ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டான். ஆனால் ஜராசந்தன் அதை லக்ஷியம் செய்து கேட்காதவன் போலவே காட்டிக்கொண்டான். “ஓஹோ, அங்கே கரவீரபுரம் சென்றிருக்கிறானோ?” என்று ரொம்பவும் அலட்சியமாய்க் கேட்பது போல் கேட்டான். அவன் கேட்ட தொனியில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதது போல் காட்டிக்கொண்டான். பிருஹத்பாலன் என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் குழம்பினான்.
appuram
ReplyDeleteநல்லா போறது. மேல ?
ReplyDeleteaaka ithukku peruthan pottu vanguvatha. jarachandhan nalla details collect pannarar.
ReplyDeleteவாங்க எல்கே, இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் வந்திருக்கிறதையே கவனிக்கலை நான்! :)))))
ReplyDeleteநன்றி ஜெய்ஸ்ரீ,
ReplyDeleteபித்தனின் வாக்கு, வாங்க, வாங்க ரொம்ப மாசங்களுக்குப் பின் வரீங்க போல?? எல்லாம் செட்டில் ஆயிடுச்சா? நல்லபடியாய் இருக்க வாழ்த்துகள், ஆசிகள்.