எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 30, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஜராசந்தனின் சாமர்த்தியமும், தாமகோஷனின் கலக்கமும்!


ஜராசந்தனின் கூற்றை ஒப்புக்கொள்ளும் நோக்கு பிருஹத்பாலனின் முகத்தில் தோன்றியது. அதைக் கண்ட ஜராசந்தன் அவனிடம், “பிருஹத்பாலா, இதோ பார், நீ கேட்டபடி நான் ஒத்துக்கொண்டது உன் சொந்த நன்மைக்காகவே. ஒரு நாள் இல்லையெனில் ஒரு நாள் நீ தான் யுவராஜாவாக ஆகி உன் பாட்டனுக்குப் பின்னர் அரசாளப் போகிறாய் என்பதாலேயே. அதை நினைவில் கொள்.” என்றான். பிருஹத்பாலன் பணிவோடு மெளனம் காத்தான். தனக்குள்ளே பேசிக்கொள்வது போல் ஜராசந்தன் மீண்டும் தொடர்ந்தான். “யார் கண்டது? உன் பெரியப்பன் வசுதேவனும், இந்த அக்ரூரனும் சும்மா இருக்க மாட்டார்கள். உன் வழியில் குறுக்கிட்டாலும் குறுக்கிடுவார்கள். நீ எதற்கும் கவனமாய் இருந்து கொள். அவ்வப்போது எனக்குத் தகவல் கொடுத்து வந்தாயானால் உனக்கு உதவி தேவைப்படும்போது நான் உதவுவேன்.” என்றான். ஜராசந்தன் இவை அனைத்தையும் ஒரு பேரரசன் பேசுவது போன்ற ஆணையிடும் தொனியில் பேசாமல் ஒரு தந்தை மகனுக்கு அறிவுரை கூறும் பாணியிலேயே மிகவும் மென்மையாகவும், குழைவாகவும், குரலில் பாசத்தைக் கூட்டியும் கூறிவந்தான். ஆகவே பிருஹத்பாலனால் அவனுடைய உண்மையான கருத்தை அறிந்து கொள்ள இயலவில்லை.

மறுநாள் தன் மந்திராலோசனை சபையைக் கூட்டிய ஜராசந்தன் அதில் பங்குபெறுமாறு அக்ரூரர், பிருஹத்பாலன், கடன் ஆகியோரையும் அழைத்திருந்தான். தன் படைத் தளபதிகளிடம் அவன் கண்ணனும், பலராமனும் நாட்டை விட்டே ஓடிவிட்ட நிலையில் மதுராவின் தாக்குதல் நடத்துவது அபத்தமாய் இருக்கும் என்று தனக்குப் புரிந்துவிட்டதாயும், அதனால் தாக்குதல் வேண்டாம் என்றும் கூறினான். அவனுடைய படைத் தளபதிகளும், அமைச்சர்களும் ஆச்சரியமும், திகைப்பும் அடைந்தார்கள். மன்னனின் இந்தப் பெருந்தன்மையான மனமாற்றம் அவர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது. எனினும் சேதி நாட்டு அரசன் ஆன தாமகோஷன் இதில் ஏதோ உள் விஷயம் இருக்கவேண்டும். அவ்வளவு எளிதில் ஜராசந்தன் விட்டுவிடமாட்டான். ஆகவே இன்னும் வேறே ஏதோ திட்டம் போட்டிருக்கவேண்டும் என்று பரிபூர்ணமாய் நம்பினான். ஜராசந்தன் அவ்வளவு எளிதில் தன் எதிரிகளை மன்னிக்கும் குணம் கொண்டவன் அல்ல என்பதையும் தாமகோஷன் நன்கு அறிந்திருந்தான். ஆகவே அவனுக்கு இந்த முடிவில் எந்த ஆச்சரியமும் இல்லை. வேறு ஏதோ பெரியதாக நடக்கப் போவதை எதிர்பார்த்தான் அவன்.

ஜராசந்தனோ அறிவிப்போடு நிறுத்தாமல் அக்ரூரையும், பிருஹத்பாலனையும் பார்த்து, “மதுராவின் யாதவர்களோடு நான் நட்பாகவே இருக்க விரும்புகிறேன். அவர்கள் அனைவரையும் நன்கு மதிக்கிறேன். குறிப்பாக உக்ரசேனரையும் அவருடைய பதவியையும் மதித்து வணங்குகிறேன். அக்ரூரா, உன்னைப் போன்றதொரு அருமையான ஆலோசனைகள் சொல்லும் அமைச்சரையும், பிருஹத்பாலனைப் போன்றதொரு வீரனைப் பேரனாய்ப் பெற்றதிலேயும் உக்ரசேனர் பாக்கியசாலி. உங்கள் இருவராலும் மதுரா நகரம் வருங்காலத்தில் ஒளிவீசிப் பிரகாசிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள் நட்புக் கிடைக்கப் பெற்றதில் நானும் அதிர்ஷ்டம் செய்தவன் ஆவேன்.” என்றான். பின்னர் சற்று நிறுத்தி விட்டு ஆலோசனை செய்பவன் போல் காணப்பட்டன். தாமகோஷனுக்கு இனிதான் முக்கிய விஷயமே பேசப் போகிறான் என்று தோன்றியது. அவன் வரையிலும் அதை எதிர்பார்த்தான். ஜராசந்தன் மேலே பேசத் தொடங்கினான். “அக்ரூரா, மிகப் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவுக்குக் கப்பமாவது எதிர்பார்க்கிறேன் நான். மிகப் பெரும் சுமையை ஏற்றவில்லை உங்களுக்கு. நல்ல தரமான நூறு ரதங்களும், இருபத்தைந்து யானைகளும், அதற்குரிய வீரர்களோடு வேண்டும். பலவான்களான இரு மனிதர்களின் எடைக்கு எடை பொன்னும் வேண்டும். இவை எனக்குப் பூர்ணிமைக்குள்ளாக, ஏன் அதற்கு முன்னராக,ம்ம்ம்ம்ம் பூர்ணிமைக்கு இன்றிலிருந்து பத்து நாட்கள் இருக்கின்றனவா? ஓ, அப்போ தேவையான நேரம் இருக்கிறது உங்களுக்கு. அதற்குள்ளாக என்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.” சற்றே யோசித்த வண்ணம், “அக்ரூரா, கண்ணனும் பலராமனும் எப்போது வந்தாலும் என்னிடம் ஒப்படைக்கப் படவேண்டியவர்களே. அவர்கள் உயிர் என் கையில். அதை மறவாதே!” என்றான்.

“பேரரசே, நீங்கள் கேட்டிருக்கும் கப்பத்தைக் கொடுக்க முயல்கிறோம். அதுவும் நீங்கள் கேட்டிருப்பதாலேயே கொடுக்கவேண்டும்.” என்றார் அக்ரூரர். “நான் கேட்டால் தான் கொடுப்பீர்களோ? சாமர்த்தியமாய்ப் பேசாதே அக்ரூரா, இப்போது நீ செல்லலாம். எங்கே சால்வன்? சால்வா, நீ இவர்களோடு மதுராவுக்குச் சென்று உக்ரசேனரிடம் இவர்கள் நான் சொன்னதை அப்படியே சொல்கிறார்களா என்பதையும் கவனித்துவிட்டு, அதற்கு உக்ரசேனர் சொல்லும் பதிலையும் பெற்றுக்கொண்டு வா. “ தன் கை அசைப்பால் அந்த மூவரையும் போகச் சொன்னான் ஜராசந்தன். அவர்கள் சென்றதுமே தாமகோஷனைப் பார்த்து, “சேதிநாட்டு மன்னா! நாம் இப்போது அந்த இடைச்சிறுவர்களைத் தேடிச் செல்லவேண்டும். எப்பாடு பட்டாவது அவர்களைப் பிடித்து அவர்கள் தலையை வாங்க வேண்டும். அவர்களைத் தலை வேறு, உடல் வேறாக ஆக்கும் என்னுடைய சபதம் முற்றுப் பெறவில்லை. அதை நான் திரும்ப வாங்கவும் இல்லை. அது அப்படியே இருக்கிறது. எங்கே சென்றுவிடுவார்கள் அவர்கள்? நாம் இப்போது அவர்களை வேட்டையாடச் செல்வோம்.” என்று ஆவேசமாய்க் கூறினான்.

அங்கே இருந்த விதர்ப்ப இளவரசன் ஆன ருக்மி உடனே தயாரானான். “ஆம், அரசே, அந்த இடைச்சிறுவனை உடல் வேறு, தலைவேறாக்கிவிட்டுத் தான் மறு வேலை. உடனே கிளம்புவோம் நாம்.” என்று உடனுக்குடனே தயாரானான். ஆனால் தாமகோஷனோ? வேறு வழியில்லாமல் ஜராசந்தனோடு கூட்டுச் சேர்ந்த அவனுக்கு ஜராசந்தனின் வேண்டுகோளைத் தான் மறுத்த அடுத்த கணமே தனக்கு முடிவு நேரிடும் என்பதைப் புரிந்து கொண்டிருந்தான். எனினும் இந்த விபரீத விளையாட்டைத் தொடரும் எண்ணமும் இல்லை. தள்ளிப் போடும் எண்ணத்தோடு, சற்றே யோசனையோடு அவன் கண்ணனும், பலராமனும் ஒளிந்திருக்கும் இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது என்று கேட்டான். கப்பமாய் வரும் நூறு ரதங்களிலிருந்து பொறுக்கி எடுத்த இருபத்தைந்து ரதங்களோடும் ஐம்பது வீரர்களோடும் செல்லலாம் என ஜராசந்தன் திட்டம் தீட்டினான். மேலும் தாமகோஷனுக்கு வர முடியவில்லை எனில் அவன் மகனும் சேதிநாட்டு இளவரசனும் ஆன சிசுபாலனை அனுப்புமாறும் கூறினான். கப்பம் வந்த்தும் இங்கிருந்து செல்லலாமே என தாமகோஷன் கூறியதற்குத் தான் ஏற்கெனவே கரவீரபுரத்திற்குத் தன் நம்பிக்கைக்கு உகந்த தன் வீரத் தளபதிகளில் ஒருவனை அனுப்பி இருப்பதாயும், அவன் ஸ்ரீகாலவ வாசுதேவனோடு பேசிக் கண்ணனும், பலராமனும் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டு பிடிப்பான் என்றும் கூறினான். தாமகோஷன் தன் மைத்துனனும், கண்ணனின் சித்தப்பனும் ஆன தேவபாகனின் குமாரன் ஆன பிருஹத்பாலன் முட்டாள் தனமாக ஜராசந்தனிடம் உளறி இருக்கிறான் என்பதைத் தெள்ளத் தெளிவாய்ப் புரிந்து கொண்டான். மேலும் ஜராசந்தன் தன்னை இந்தத் திட்டத்திலிருந்து ஒதுக்கப் பார்ப்பதையும் அறிந்து கொண்டான். என்னதான் சேதிநாடு சுதந்திர நாடாக, மகதத்தின் ஆளுமைக்கு உட்படவில்லை எனினும், அவன் படைகள் ஜராசந்தனுக்கு ஊழியம் செய்யத் தான் உடன்படவில்லை எனில் தன் கதி அதோகதிதான் என்பதும் புரிந்தது. சேதிநாடும் மகதம் போல் ஆகவேண்டும் என தாமகோஷன் உள்ளூர விரும்பினாலும் கண்ணனோ, பலராமனோ தலை எடுத்துத் தலைமை தாங்குவதில் அவனுக்கு எந்த ஆக்ஷேபணையும் கிடையாது. சொல்லப் போனால் அம்மாதிரியான ஒரு தலைமை தனக்கு உதவியாகவே இருக்கும் என்றும் நம்பினான்.

ஜராசந்தனைக் கொடூரமான பழிவாங்கும் செயலில் இருந்து தன்னால் ஓரளவாவது தடுக்க முடியும் என்று எண்ணியதாலேயே இந்தப் படை எடுப்பில் அவன் தன் படைகளையும் இணைத்துக்கொண்டான். எவ்விதமேனும் ஜராசந்தனின் மனப்போக்கையும், படைகளின் தாக்குதலையும் தடுத்து மதுராவையும், அதன் தலைவர்களையும், அங்கே இருக்கும் தன் உறவினர்களையும், தன் மனைவியின் உறவினர்களையும் காக்கவே எண்ணினான். ஆனால்?? அவன் எண்ணம் வீணாகிவிட்டது. முடியாது, முடியாது. மதுரா அழிந்து போகும்படியாக தாமகோஷனால் நினைக்கவே முடியாது. அவன் மைத்துனன் ஆன வசுதேவனின் இரு குமாரர்களும் அழிந்து போகவேண்டும் என்றும் தாமகோஷனால் நினைக்கக் கூட முடியாது. நடு நிலையைக் காக்கவும், நடுநிலையாக நடக்கவும் வேண்டியே அவன் மகத நாட்டு அரசனை மாற்றும் எண்ணத்தோடு இந்தப் படையில் சேர்ந்து கொண்டான். எவ்விதத்திலும் மகதத்திற்குச் சேதி நாடு கட்டுப்படவில்லை. ஆனால்?? சிசுபாலன்? இதை ஏற்பானா? அவன் மகத நாட்டுச் சக்கரவர்த்தியின் பெயருக்கும், புகழுக்கும், வீரத்துக்கும் அவன் திறமைக்கும், திட்டமிடும் போக்கிற்கும் மயங்கிக் கிடக்கிறானே? என்ன செய்யலாம்???

No comments:

Post a Comment