குழப்பத்தில் ஜராசந்தன்!
அக்ரூரர் கொண்டு வந்திருக்கும் விஷயம் எதுவானாலும் அது தன் படைவீரர்களுக்குப் பரவி அதைப் பற்றிய அவர்களின் விமரிசனத்தை ஜராசந்தன் சற்றும் விரும்பவில்லை. ஆகவே தனிமையிலேயே அது பற்றிப் பேச விரும்பினான். அதோடு தன் வீரர்களுக்குத் தன் குழம்பிய மனநிலைமையும் தெரிந்துவிடாமல் இருக்கவேண்டும், என்றும் தன் உறுதியான முடிவுகள் மட்டுமேஅவர்களைச் சென்றடைய வேண்டும் என்றும் ஜராசந்தன் விரும்பினான். சேதிநாட்டரசன் தாமகோஷன் செல்லும்போது அவனுடன் பிருஹத்பாலனையும் அழைத்துச் செல்லும்படி ஜராசந்தன் கூறினான். அனைவரும் சென்றபிறகு, அக்ரூரரைப் பார்த்து, ‘விருஷ்ணி வம்சத்தவர்களின் வணக்கத்துக்கு உரியவரே, நீர் ஓர் துறவி என்பதை நான் நன்கறிவேன். ஆனால் என்னிடம் பொய் மட்டும் கூறினீர்கள் என்பது தெரியவந்தால்,மதுரா நகரைத் தீக்கிரையாக்கிவிடுவேன். நினைவிருக்கட்டும்!” என்று கடுமையான குரலில் கூறினான்.
“பேரரசே, நினைத்ததை நினைத்த வண்ணம் செய்யும் ஆற்றல் படைத்தவர் நீர் என்பது எனக்கு நன்கு தெரியும். மேலும் என் வாயிலிருந்து ஒரு போதும் பொய்யான வார்த்தைகள் வராது.” என்றார் அக்ரூரர். “எனில், அக்ரூரரே, அந்தக் கோழை இளைஞர்கள் உண்மையில் ஊரை விட்டு ஓடிவிட்டனரா? ஏன் ஓடினார்கள்?” ஜராசந்தன் குரலிலேயே ஏளனம் தொனித்த்து. “ஐயா, அவர்கள் கோழைத்தனமாகவெல்லாம் ஓடவில்லை. தங்கள் இருவரின் பொருட்டு மதுராநகரில் யுத்தம் ஏற்படுவதையும், அதன் அப்பாவியும், ஏதுமறியா மக்களும் கொல்லப் படுவதையும் அதன் அழகும், எழிலும் அழிவதையும் அவர்கள் விரும்பவில்லை. மேலும் யாதவகுலமே அவர்கள் இருவரின் பாதுகாப்புக்குஎனப் போரிட வருமென்பதால் குலத்துக்கும் மிகவும் ஆபத்து ஏற்படும். அதையும் அவர்கள் விரும்பவில்லை. உண்மையில் அவர்கள் வீரர்களே ஆவார்கள். கோழைத்தனத்தை எதிர்த்துப் போராடும் வீரர்கள்.” என்றார் அக்ரூரர்.
“ஹாஹாஹாஹா, எனில் யாதவர்கள் எவரும் அவர்கள் இருவரின் பாதுகாப்புக்கு என முன்வரவில்லை?? அவர்கள் பக்கம் எவரும் நிற்கவில்லை?” ஜராசந்தனின் குரலில் அவனையுமறியாக் குதூகலம். ஆனால் அக்ரூரரோ, “இல்லை அரசே, அவர்கள் இருவருக்காகவும் உயிரைக் கொடுக்கக் கூட பலர் தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் இருவரும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்துவிட்டனர்.” என்றார் அக்ரூரர். “என்னால் இதை நம்ப முடியவில்லை. அவர்கள் இருவரையும் நாட்டை விட்டு அனுப்பியதற்காக உங்கள் அனைவரையும் தண்டிக்கப் போகிறேன்.”
“பேரரசே, இதுவும் நாங்கள் எதிர்பார்த்தது தான். ஒரு மகத்தான அரசன் வேறு என்ன செய்யமுடியும்? அதுவும் அவன் எதிரிகள் இருவர் தப்பிவிட்டனர் என்றால் எவ்வகையில் தன் கோபத்தை வெளிக்காட்ட முடியும்?” அக்ரூரரின் குரல் சாந்தமாகவே தொனித்தது. எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை. “என்ன? கோபமா? எனக்கா? ம்ம்ம்ம்?? அக்ரூரனே! நீ உன்னை ஒரு பெரிய மஹான் எனச் சொல்லிக்கொள்கிறாயே? நான் எவ்விதம் என் மறுமகனை ஒரு சிறுவன் கொன்றதைப் பற்றிக் கவலை இல்லாமல் இருக்கமுடியும் என்பதைப் புரிந்து கொண்டாயா? அவர்களுக்கு நான் பாவமன்னிப்பா கொடுக்க வேண்டும்? அதுவும் கம்சன் உங்கள் பட்டத்து இளவரசனும் கூட.”” ஜராசந்தன் சீறினான். அக்ரூரரோ மேலும் அதே சாந்தம் தொனிக்கும் குரலில், “என்னை மன்னியுங்கள் பேரரசே, நான் என்னை ஒரு போதும் ஒரு துறவி என்றோ மஹான் என்றோ சொல்லிக்கொள்ளவும் இல்லை, அப்படி அழைத்துக்கொண்ட்தும் இல்லை. எனக்குத் தெரிந்த அளவில் தர்ம நியாயங்களை நான் கடைப்பிடிக்கிறேன். அது என் கடமை என்றும் உணர்ந்திருக்கிறேன். மேலும் அரசே, வசுதேவனின் குமாரர்கள் செய்த தவறுக்காக மதுரா நகரை அழிப்பதோ, மதுராவின் மக்களைத் துன்புறுத்துவதோ தர்மம் அல்ல என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.” அக்ரூரரின் குரலில் ஜராசந்தனின் தவறான செயலைச் சுட்டிக்காட்டுவது போல் அமைந்த தொனி அவனை இன்னும் எரிச்சலூட்டியது.
அக்ரூர்ரை வெட்டிவிடுவான் போல் பார்த்தான். ஆனால் அவரோ மலையே நிலை பெயர்ந்து விழுந்தாலும் கலங்காதவர் போல் அதே நிதானத்தோடும், தீர்க்கமான பார்வையில் கருணை தென்படவும், புன்னகை மாறாத முகத்தோடும் காட்சி அளித்தார். “அரசே, நான் இங்கே வசுதேவன் மகன் வாசுதேவகிருஷ்ணனின் செயல்களை நியாயப் படுத்த விரும்பவில்லை. அதற்காகவும் நான் வரவில்லை. ஆனால் கம்சன் எத்தனை எத்தனை யாதவர்களைக் கொன்றிருக்கிறான்? எத்தனை எத்தனை பச்சிளம் குழந்தைகள்? எத்தனை பெண்கள் அவனால் பலவந்தப் படுத்தப் பட்டிருக்கின்றனர்? அதன் மூலம் வாழ்க்கையையே இழந்து தவித்திருக்கின்றனர்? எவ்வளவு மனிதர்களைத் தன் அடாத செயல்களால் பைத்தியக்காரர்கள் போல் திரிய விட்டிருக்கின்றான்? “ சற்றே நிறுத்திய அக்ரூரர், “ ஏன்? வசுதேவனின் குழந்தைகளே அவனால் கொல்லப் பட்டனவே? எத்தனை சின்னஞ்சிறு குழந்தைகள் பிறந்த உடனே கொல்லப் பட்டன? “ அக்ரூரர் மேலும் தொடர்ந்தார்.
“ஐயா, இவ்வளவையும் கம்சன் செய்யும் போது தாங்கள் அவனுக்குப் பாவமன்னிப்புக் கொடுத்து அவனை மன்னித்தன்றோ பார்த்துக்கொண்டிருந்தீர்கள்?”
மிகுந்த பிரயத்தனத்தோடு ஜராசந்தன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான். அக்ரூரரைப் போன்ற பலராலும் போற்றப் படும், தவ வாழ்க்கை வாழும் ஒருவரைத் தண்டிப்பது மிகப் பெரிய பேராபத்தில் போய் முடியும் என்பதை அவன் உணர்ந்திருந்தான். ஆகவே அவனால் அப்போது எதுவும் செய்ய இயலாமல் போயிற்று. ஆகவே அக்ரூரரைப் பார்த்து, “ மிகக் கெட்டிக்காரத்தனமாய்ப் பேசிவிட்டாய் என எண்ணாதே. மதுராவை அழிக்கவேண்டும் என்ற என் எண்ணத்தை நான் இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை. மாற்றிக்கொள்ள விரும்பவும் இல்லை.”
“ஏற்கெனவே நாங்கள் எதிர்பார்த்த்தே தான் அரசே.மாட்சிமை பொருந்திய மன்னா! ஏற்கெனவே பல யாதவர்கள் மதுராவை விட்டுச் சென்றுவிட்டார்கள். இப்போது நாங்கள் வெறும் கையோடு மதுராவுக்குச் சென்றதும் மீதம் உள்ளவர்களும் ஊரை விட்டுச் சென்றுவிடுவார்கள். மதுரா நகர் உங்களுடையது. அதை என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். நாங்கள் சென்று விடுகிறோம்.” அக்ரூரர் தீர்மானமாய்ச் சொன்னார்.
“ம்ம்ம்ம்ம்?? எங்கே போய்விடமுடியும் உங்களால்? நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களை விடாமல் துரத்துவேன். ஹாஹாஹாஹாஹாஹா!’ கெக்கலி கொட்டிச் சிரித்தான் ஜராசந்தன்.
“உண்மை அரசே, அது உங்களால் முடியும். ஆனால் மதிப்புக்குரிய ஹஸ்தினாபுரத்து பீஷ்ம பிதாமஹரும், பாஞ்சால நாட்டு துருபதனும் எங்களுக்கு அடைக்கலம் தர ஒப்புக்கொண்டிருக்கின்றனர். தேவை எனில் அவர்கள் படையும் எங்கள் உதவிக்கு வரத் தயாராகக் காத்திருக்கிறது.”
தூக்கிவாரிப் போட்டாற்போல் ஜராசந்தன் யோசிக்க ஆரம்பித்தான். ஏற்கெனவே துருபதன் தன் நாட்டின் வழியாகச் செல்ல ஜராசந்தனுக்குத் தடை விதித்து விட்டான். இப்போதென்னவென்றால் இது வேறேயா? அக்ரூரர் ஜராசந்தனின் தயக்கத்தைப் புரிந்து கொண்டார். அதே சாந்தமான குரலில், “ மேன்மை பொருந்திய சக்கரவர்த்தி, நான் சொல்ல வந்ததும் அதுவே தான். நீங்கள் தேடும் இளைஞர்களோ ஓடிவிட்டனர். நாட்டின் மற்றத் தலைவர்களும் நாட்டை விட்டுச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நாட்டின் மக்களும் அவர்களைத் தொடர்ந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்போது நீங்கள் போய் மதுராவைத் தாக்கினாலும், அங்கே எதிர்க்க யாரும் இருக்கமாட்டார்கள். எப்படியும் மதுராநகர் காலியாகத் தான் இருக்கப் போகிறது. காலியான நகரத்தில் எவருடன் யுத்தம் புரிவீர்கள் அரசே? இது உங்களைப் போன்றதொரு வீராதி வீரருக்கு இழுக்கன்றோ? மகத்த்தின் புகழ் பெற்ற சக்கரவர்த்தி ஜராசந்தன் காலியான மதுரா நகரைத் தீக்கிரையாக்கினான் என்றல்லவோ அனைவரும் பேசுவார்கள்? உலகத்தார் இதைக் கேட்டு உங்களைக் கண்டு எள்ளி நகையாடமாட்டார்களா? யோசியுங்கள் அரசே!” அக்ரூரர் சற்றும் மாறாத குரலில் பேசினார்.
//ஹஸ்தினாபுரத்து பீஷ்ம பிதாமஹரும், பாஞ்சால நாட்டு துருபதனும் எங்களுக்கு அடைக்கலம் தர ஒப்புக்கொண்டிருக்கின்றனர். தேவை எனில் அவர்கள் படையும் எங்கள் உதவிக்கு வரத் தயாராகக் காத்திருக்கிறது.”/
ReplyDeletetime paarthu adikiraryaa