ஜராசந்தனின் தந்திரம்!
அக்ரூரரின் இந்தத் துணிச்சலான பேச்சால் ஜராசந்தனுக்குக் கோபம் அதிகமானது. தன்னெதிரே தன்னை ஒருவன் இப்படி கேட்பதா என்ற எண்ணத்தில், அக்ரூரரைப் பார்த்து, “அக்ரூரா, என்ன துணிச்சல் உனக்கு, என்னைப் போன்றதொரு மஹா சக்கரவர்த்தியிடம் இவ்வாறு பேச உனக்கு எவ்விதம் தைரியம் வந்தது? இதைச் சொல்லத் தான் இங்கே வந்தாயா? உன் நாக்கை நான் அறுத்துவிடுவேன் என்பது நினைவிருக்கட்டும்!” என்றான் ஜராசந்தன். ஜராசந்தன் எவ்வளவுக்கெவ்வளவு நிதானத்தை இழந்தானோ, அவ்வளவுக்கு அக்ரூரர் நிதானத்தை இழக்கவில்லை. “ஐயா, நான் ஏற்கெனவே சொன்னேனே, உங்களால் எந்த எல்லைக்கும் சென்று எவரையும் தண்டிக்கமுடியும் என்று. இப்போதும் நான் அதையே சொல்கிறேன். நீங்கள் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதாலேயே என்னை உங்களிடம் நேரில் சென்று தனியே பேச அனுப்பினார்கள். நானும் வந்துள்ளேன். உங்களைப் போன்ற சக்தி பெற்ற அரசர்களால் தான் மன்னிக்கவும் முடியும், தண்டிக்கவும் முடியும். பலவீனமானவர்களை மன்னிப்பது என்பது உங்களைப் போன்ற வல்லமை படைத்தவர்களுக்குச் சற்றுச் சிரமமான ஒன்றுதான். ஆனால் அதை நிறைவேற்றுவதிலேயே உங்கள் பெருமையும் உள்ளது. இதனால் உங்கள் புகழ் மங்காது அரசே, மாறாக இன்னும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.” என்று நிதானமாகவே கூறினார் அக்ரூரர்.
“இனிமை, இனிமை, இனிமை! அக்ரூரா, உன் குரலில் இனிமையைத் தோய்த்து, எனக்குச் சற்றும் விருப்பம் இல்லாத விஷயங்களைக் கூறுகிறாய். உன் குரலினிமையில் நான் மயங்கி இவற்றில் ஆழ்ந்த கவனம் செலுத்தமாட்டேன் என எண்ணுகிறாயா? சரி, சரி, அந்த இரு இடைப்பயல்களும் எங்கே சென்று இருக்கிறார்கள் என்பதைச் சரியாகச் சொல்லிவிடு. உன்னை நான் விட்டு விடுகிறேன். மூடி மறைக்காதே! அதன் பின்னர் நீ கூறியபடி செய்யலாமா வேண்டாமா என்று நான் யோசித்துக்கொள்கிறேன்.” என்றான் ஜராசந்தன்.
“ஐயா, அவர்கள் இருவரும் உங்கள் கண்களில் படாமல் தப்பி அல்லவோ ஓடி இருக்கின்றனர்? அப்படி இருக்கையில் எனக்கு எவ்வாறு தெரியும் அவர்கள் ஒளிந்திருக்கும் இடம்? உங்களால் சென்று அடைய முடியததோர் இடத்திற்குச் சென்றிருப்பார்கள் என நம்பலாம்.” என்றார் அக்ரூரர்.
அக்ரூரரையே வைத்தகண் வாங்காமல் பார்த்த ஜராசந்தன், “ நீ மிகவும் சாமர்த்தியசாலி அக்ரூரா, சரி, நீ இப்போது இங்கிருந்து செல். நாளைக்காலை என்ன சொல்வது என்பதைப் பற்றி ஒரு முடிவெடுக்கிறேன். நீ சென்று பிருஹத்பாலன், அவன் தானே வசுதேவனின் தம்பி தேவபாகனின் மகன்? கண்ணனின் சித்தப்பா குமாரன்?? அவனை வரச் சொல் இங்கே. நான் அவனிடம் பேசவேண்டும்.”
“உத்தரவு, சக்கரவர்த்தி!” அக்ரூரர் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார். அக்ரூரர் எதிரில் கோபத்தைக் காட்டிய ஜராசந்தனுக்கு மனதிற்குள் அக்ரூரர் சொன்னது எல்லாம் சரியே என்ற எண்ணமே தோன்றியது. அவன் அப்போது மதுராவைத் தாக்குவது என்பது சரியல்ல தான். காலியான மதுராவைத் தாக்குவது குழந்தைதனமாக இருக்கும். அவனுடைய அரசகுலத்து நண்பர்கள் மத்தியிலும், மற்ற ஆரிய வர்த்தத்து அரசர்கள் மத்தியிலும் கேலிக்குரியவனாக மாறிவிடுவான். கம்சனின் மரணத்துக்குப் பழிவாங்குவது என்பது எவராலும் மறக்கமுடியாத ஒன்றாக, என்றென்றும் நினைவு கூரும் ஒன்றாக இருக்கவேண்டுமே ஒழிய கேலிக்குரியதாக இருத்தல் கூடாது. மேலும் இந்த யாதவர்கள் குரு வம்சத்தினரின் உதவியையும், பாஞ்சால மன்னன் துருபதனின் உதவியையும் நாடுவார்கள் போல் தெரிகிறது. ஆகவே அவசரம் கூடாது. சட்டென ஒரு யோசனை அவன் மனதில் உதிக்க, பிருஹத்பாலன் வருவதற்குள் தன்னுடைய அந்தரங்க ஆலோசகனும், கம்சன் உயிருடன் இருந்த வரையில் மதுராவில் இருந்து கம்சனுக்கும், அவனிரு மனைவியருக்கும் ஆலோசனைகளும், உதவிகளும் தேவைப்படும்போது வழங்கிக்கொண்டிருந்தவனும் ஆன தன் அந்தரங்க மெய்க்காப்பாளனை அங்கே வரவழைத்து பிருஹத்பாலன் பற்றிக் கேட்டறிந்தான். மேலும் மதுராவில் நடந்த அனைத்து விஷயங்களையும் அவன் வாய் மூலமும் கேட்டு அறிந்தான்.
தேவபாகன் வசுதேவரின் இளைய சகோதரன் மட்டுமின்றி உக்ரசேனனின் மகளும், கம்சனின் சொந்த சகோதரியுமான கம்சாவை மணந்து கொண்டிருக்கிறான். இந்தக் கம்சா என்பவள் உக்ரசேனனின் பிரியத்துக்கு உகந்த மகள். பிருஹத்பாலன் மூத்த மகன். இவன் தம்பியான உத்தவன் என்பவனே, கோகுலத்தில் கண்ணனுக்கும், பலராமனுக்கும் துணையாக அங்கே வளர்ந்தவன். இப்போதும் கண்ணனின் பிரியத்துக்கும், பாசத்துக்கும், அன்புக்கும், நம்பிக்கைக்கும் உகந்ததொரு நண்பன், சகோதரன். தன் மெய்க்காப்பாளனை அனுப்பிவிட்டு பிருஹத்பாலன் காத்திருப்பது தெரிந்து அவனை அழைத்தான் ஜராசந்தன். பிருஹத்பாலன் வந்தவன் சற்றுத்தூரத்திலேயே நின்றுவிட்டான். அவனுடைய உள்ளார்ந்த பயம் அவன் கண்களிலேயே தெரிந்தது. உண்மையிலேயே நடுக்கத்துடன் இருந்த பிருஹத்பாலன், ஜராசந்தனின் பெயரைக் கேட்கும்போதெல்லாம் நடுங்குபவனே. தன் சொந்த மாமன் ஆன கம்சன் கிருஷ்ணனால் கொல்லப் பட்டபோது மதுராவுக்குக் கேடு விளைந்துவிட்டது என்றும், மதுரா நகரம் அழியப் போகிறது என்றும் முழுமனதோடு நம்பினான். நகரை விட்டு ஓடவும் தயாராகத் தான் இருந்தான். ஆனால் சிறையில் வாடிக்கொண்டிருந்த கம்சனின் தகப்பனும், பிருஹத்பாலனின் தாய்வழிப்பாட்டனும் ஆன உக்ரசேனனின் அன்புக்குகந்த மகள் அவன் தாய் கம்சா. ஆகவே ஓடிச் செல்வது என்ற தன் எண்ணத்தை அவனால் நிறைவேற்ற முடியவில்லை. பெரியவர்கள் அப்போது தான் சிறையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வருகை உற்சாகமாய்க் கொண்டாடப்படும் சமயம் அவன் மதுராவை விட்டு ஓடினால், அவனைக் குலப்பகைவன் என எண்ணிவிட்டால்? இந்த எண்ணமே அவனைத் தடுத்து நிறுத்தி இருந்தது.
இப்போது இங்கு வரும்போதும் நடுங்கிய வண்ணமே வந்தான் பிருஹத்பாலன். கண்ணனும், பலராமனும் ஓடிவிட்டார்கள் என்ற செய்தி ஜராசந்தனின் கோபத்தைத் தூண்டிவிடும், என்ன செய்வானோ, என்ன சொல்வானோ? என்ன தண்டனை கிடைக்குமோ? தூக்குமேடைக்குச் செல்லும் கைதியைப் போன்றதொரு நிலைமையில் அங்கே வந்தான் பிருஹத்பாலன். ஆனால்??? இது என்ன ஆச்சரியம்? சக்கரவர்த்தி ஜராசந்தன் அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்கிறானே? இது கனவா? அல்லது நனவா? மேலும் பிருஹத்பாலன் ஆச்சரியப்படும் வகையில், தன் புன்னகை மாறாமலேயே ஜராசந்தன் அவனை அருகே வரும்படி அழைத்தான். பிருஹத்பாலனும் அருகே சென்று சக்கரவர்த்திக்குத் தன் அறிமுகத்தையும் வணக்கத்தையும் தெரிவித்தான். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ஜராசந்தன் அவனை எழுப்பி அணைத்தவண்ணம் தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு அவன் முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினான். ஆஹா, இத்தனை நல்ல மனிதனா ஜராசந்தன்? உண்மையில் இவன் நல்லவனே! இந்த மதுராபுரி மக்களுக்கும் சரி, மற்ற யாதவத் தலைவர்களுக்கும் சரி இவனுடைய நல்ல மனம் புரியவே இல்லை. சீச்ச்சீ, முட்டாள் ஜனங்கள், அதை விட முட்டாள் யாதவத் தலைவர்கள் அனைவரும். பிருஹத்பாலனின் எண்ணம் குதிரையை விட வேகமாய் ஓடியது.
“பிருஹத், என் ஆசிகள் உனக்கு. “ இனிமையைப் பொழிந்த அன்பான குரலில் கூறிய ஜராசந்தன், “எப்படி அப்பா இருக்கிறாய்? உன் பாட்டனாரும் என் மறுமகனின் தந்தையுமான அரசர் உக்ரசேனர் எப்படி இருக்கிறார்? உன் தாய், அந்தப் புண்ணியவதி எப்படி இருக்கிறாள்? ஆஹா, எப்பேர்ப்பட்ட உத்தமி அவள்? இத்தனை வருடங்களாகச் சிறையில் இருந்த தன் தந்தைக்குப் பணிவிடை செய்து வந்தாள் உன் தாய் எனக் கேள்விப் பட்டேன். நீயும் அப்போது சிறையிலேயே இருந்தாயா? எங்கே இருந்தாய் நீ? உன் தாயுடனா, அல்லது உன் தகப்பனுடனா?” அன்பும், பாசமும், நேசமும் வழிந்தன ஜராசந்தன் குரலில். பிருஹத்பாலன் மயக்கம் அடைந்து விழாத குறைதான். ஆஹா, இவ்வளவு நல்லவரா இந்த மகதச் சக்கரவர்த்தி? அனைவருமே இவரைத் தவறாய்ப் புரிந்து கொண்டனரே?
No comments:
Post a Comment