ஜராசந்தன் யோசிக்கிறான்!
“ம்ம்ம்ம்ம்ம், துருபதன் தன்னுடைய அகம்பாவத்துக்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும். அவனைத் தனியாக கவனிக்கலாம். இப்போது அந்த வசுதேவனின் இரு மகன்களையும் அழிக்கவேண்டிய காரியத்தை மட்டுமே இப்போது கவனிக்க வேண்டும். அதை நினைத்ததுமே அவன் முகத்தில் ஒரு கொடூரமான சிரிப்பு வந்தது. அந்த இரு மாட்டிடையச் சிறுவர்களும், சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியான ஜராசந்தனின் ஈடு இணையற்ற மறுமகன் கம்சனை அன்றோ கொன்றுவிட்டனர். இதற்குப் பழி வாங்கியே தீரவேண்டும். அதுவும்கம்சனுக்கு எந்த இடத்தில் சாவு நேரிட்டதோ அங்கேயே இரு இடைச்சிறுவர்களும் கை, கால்கள் வெட்டப்பட்டுத் துண்டு துண்டாய்க் கொல்லப்படவேண்டும். அதில் சந்தேகமே இல்லை.’ சற்றுத்தூரத்தில் மதிய உணவு தயாரிக்கப் பட்டுப் பரிமாறப்பட்டிருந்த்து. பெரிய பெரிய வாழை இலைகளும், தாமரை இலைகளும் உணவு பரிமாறுவதற்காக்க் கொண்டுவரப்பட்டிருந்தன. பெரிய வாழை இலையில் ஜராசந்தனுக்கான உணவு தயாராக இருந்தது. அவனுடன் உணவு உட்கொள்ளும் அதிகாரிகளும், படைத்தளபதிகளும், அமைச்சர் பெருமக்களும் அவன் வரவுக்காய்க் காத்திருந்தனர். அதோடு அவனுடன் நட்புப் பூண்டு அவன் உதவிக்கு வந்திருந்த மற்ற அரசர்களும் உணவு உட்கொள்ள அவனுக்காக்க் காத்திருந்தனர். ஆனால் இது என்ன?? சேதி நாட்டு அரசன் தாமகோஷனைக் காணவில்லையே? சாதாரணமாக அவன் ஜராசந்தன் வருவதற்கு அரை நாழிகை முன்னாலேயே வந்துவிடுவானே?ம்ம்ம்ம்??? ஏதோ எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாய்த் தோன்றியது ஜராசந்தனுக்கு.
யோசனையுடன் எழுந்த ஜராசந்தன், தன்னிரு மெய்க்காப்பாளர்கள் பின் தொடர உணவு உண்ணும் இடத்துக்குச் சென்றான். அங்கே சுற்றிலும் வட்டமாய்ப் போடப் பட்டிருந்த இருக்கைகளில் மத்தியில் உள்ள இருக்கே சற்றே உயரமாய் ஜராசந்தன் அமருவதற்கெனக் காத்திருந்த்து. ஜராசந்தன் தன்னிருக்கையில் சென்று அமர்ந்தான். அனைவரும் அவனுக்கு முகமன் கூறி வரவேற்று, அவனை வணங்கினார்கள். ஒரு தலையசைப்பில் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட ஜராசந்தன் சால்வனைப் பார்த்து, “தாமகோஷன் இன்னும் வரவில்லையா?” என்று வினவினான். “அல்லது இந்த விருந்தைச் சாப்பிட்டதில் உடல்நிலை சரியில்லையா?”” தன் ஹாஸ்யத்தை ரசித்துத் தானே சிரித்துக்கொண்டான் ஜராசந்தன். சால்வன் அது எதையும் கவனிக்காதவனைப் போல, “சக்கரவர்த்தி, தாமகோஷர் சற்று நேரம் கழித்து வருவதாய்ச் செய்தி அனுப்பி உள்ளார்.” என்று சொன்னான். சால்வன் ஜராசந்தனின் நம்பிக்கைக்கு உகந்ததொரு வீரன், என்பதோடு அல்லாமல் ஜராசந்தன் நினைப்பதைச் செய்து முடிப்பவனும் கூட. அதற்குள், மகதத் தளபதிகளில் ஒருவர், தன்னிருக்கையில் இருந்து எழுந்து இரு கைகளையும் கூப்பிய வண்ணம், “மதுராவில் இருந்து சமாதானத்திற்கான தூதுவர்கள் வந்திருக்கின்றனர்.” என்று தெரிவித்தான்.
“என்ன? சமாதானமா? மதுராவில் இருந்தா? “ஜராசந்தன் ஆச்சரியமும், கோபமும் அடைந்தான். “என்ன பைத்தியக்காரத் தனம் இது? எனக்கு அவ்விரு இளைஞர்களின் துண்டாக்கப்பட்ட தலைகளே வேண்டும். சமாதானமாம், சமாதானம்! எவர் கேட்டனர்?” யாரும் வாயையே திறக்கவில்லை. மெளனமாய் இருந்தனர். தன்னுடைய கோபமும், அவநம்பிக்கையும் அகலாமலேயே ஜராசந்தன் உணவு உண்ண ஆரம்பித்தான். தாமகோஷனின் தாமதமான வருகையை அவன் ரசிக்கவில்லை. என்னதான் வெளிப்படையாக தாமகோஷன் தன் பக்கம் இருந்தாலும், அவனுடைய முழு ஆதரவும் உள்ளூர யாதவர்களுக்கு மட்டுமே, குறிப்பாக கிருஷ்ண வாசுதேவனுக்கே என்று ஒரு சந்தேகம் ஜராசந்தன் மனதில் உண்டு. அதோடு இல்லாமல் தாமகோஷனின் மனைவி வசுதேவனின் தங்கையும் ஆவாள். அவளுடைய அதிகாரமும், செல்வாக்கும் ஜராசந்தன் அறிவான். உள்ளூர இந்த தாமகோஷன் வேறே என்ன ரகசியத்திட்டங்கள் தீட்டுகிறானோ?
அதற்குள் தன் தாமதத்துக்கான காரணத்தைக் கூறிக்கொண்டே தாமகோஷன் அங்கே வருகை புரிந்துவிட்டான். ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தான் ஜராசந்தன். மெதுவாகவும், அதே சமயம் நிதானமும், உறுதியும் கலந்த குரலில் பேசினான் தாமகோஷன். சமாதானத்துக்கான தூதுவர்கள் தாமகோஷனிடன் வந்தனரா என ஜராசந்தன் வினவ, அவர்கள் ஜராசந்தனுக்கே செய்தி கொண்டு வந்திருப்பதாய் தாமகோஷன் தெரிவித்தான். “ஆஹா, அதுவும் அப்படியா? அப்போ அந்த இரு இடைச்சிறுவர்களின் தலைகளையும் வெட்டிக் கொண்டு வந்துவிட்டனரா?” ஜராசந்தனின் குரலில் எல்லையற்ற குதூஹலம் தாண்டவமாடியது.
“இல்லை அரசே, இரு இளைஞர்களும், இரவோடிரவாக மதுராவை விட்டே ஓடிவிட்டனராம்.” தாமகோஷன் சொன்னான். அவன் குரலில் இருந்து அவன் உணர்வு என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஜராசந்தன் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டான்.
“ஓடிவிட்டனரா? என்ன நிஜமாகவா?” என்று உரத்த குரலில் கேட்டான் ஜராசந்தன்.
“அக்ரூரர், பிருஹத்பாலனோடும், கடனோடும் வந்துள்ளார் அரசே, பிருஹத்பாலன் அரசனின் பேரன் ஆவார். மேலும் அக்ரூரரைப் போன்ற ஒரு தபஸ்வி பொய் பேசமாட்டார் என நீங்கள் நம்பலாம்.” முதலில் ஜராசந்தன் வியப்பினால் மெளனத்தில் ஆழ்ந்தான் எனினும், அவன் ஏமாந்துவிட்டான் என நினைப்பார்களோ என்ற எண்ணம் ஏற்படவே, தாமகோஷனைப் பார்த்து, “உணவு முடியட்டும். நான் நேரிலே பார்த்துப் பேசித் தெரிந்து கொள்கிறேன்.” என்று முடித்துக்கொண்டான். சாப்பிடும்போதே சால்வனிடம் படைகளின் முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகள் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டான். பின்னர் தன் கூடாரத்திற்குத் திரும்பிய ஜராசந்தன் சால்வனையும், தாமகோஷனையும் மட்டும் தன்னுடனே வரச் சொல்லி உத்தரவிட்டான். கூடாரத்தில் ஒரு அழகிய ஆசனத்தில் சாய்ந்த வண்ணம் படுத்த ஜராசந்தன் மதுராவின் தூதுவர்களை அழைத்து வரச் செய்தான்.
ம்ம்ம், நாம் என்ன நினைத்தோம்? நம் மறுமகனின் மரணத்திற்குப் பழிவாங்க வேண்டி அவ்விரு இளஞர்களின் தலைகளைக் கேட்டால், இருவரும் நாட்டை விட்டே ஓடிவிட்டனராமே? தன் எண்ண ஓட்டம் தடைபடுவது போல் அப்போது அங்கே வந்து நின்ற அக்ரூரரையும், அவரோடு வந்த பிருஹத்பாலனையும் பார்த்தான் ஜராசந்தன். பிருஹத்பாலன் வசுதேவரின் சகோதரன் ஆன தேவபாகனின் மகன். அவர்களோடு வந்திருந்த கடனும், ஜராசந்தனை நமஸ்கரித்தான். சற்று நேரம் அவர்களையே பார்த்திருந்த ஜராசந்தன் சடாரென எழுந்து அமர்ந்தான். “ என்ன இது, முட்டாள்தனமான செய்தி ஒன்றைக் கொண்டு வந்துள்ளீர்கள்? இதை எவ்வாறு நம்புவது?” அலக்ஷியமான தொனியில் அவநம்பிக்கை தொனிக்க்க் கேட்டான் ஜராசந்தன்.
அதற்கு அக்ரூரர் தன்னுடைய உறுதியும், நம்பிக்கையும் தொனிக்கும் குரலில், கிருஷ்ணனும், பலராமனும் மதுராவை விட்டுச் சென்று மூன்று தினங்கள் ஆகிறதென்று கூறினார். எனினும் ஜராசந்தனுக்கு நம்பிக்கை வரவில்லை. எங்கேயோ அவர்களை ஒளித்திருக்கிறார்கள் என்றே எண்ணினான். தன் எண்ணத்தை வாய்விட்டு வெளியிலும் கூறினான். அக்ரூரரைப் பயப்படுத்தும் தொனியில் கடுமையும், கோபமும் தொனிக்க, "எங்கே ஒளித்துள்ளீர்கள்? அதைச் சொல்லவில்லை எனில் உங்கள் உயிர் உங்களுடையதல்ல!" என்று கத்தினான். ஆனால் அக்ரூரர் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. வழக்கம்போல் தன்னிரு கைகளையும் கூப்பியவண்ணம், "இல்லை, அரசே, அவர்கள் மதுராவில் இல்லை!" என்றே கூறிக்கொண்டிருந்தார். ஆனால் ஜராசந்தனுக்கு அக்ரூரரின் இந்த நிதானமான போக்கு உள்ளூர ஆச்சரியத்தைக் கொடுததது. அதே சமயம் அருகே நின்றிருந்த பிருஹத்பாலனுக்குப் பயம் ஏற்பட்டது என்பதையும் புரிந்துகொண்டான். அருகே இருந்த தாமகோஷனையும், சால்வனையும் சற்று அப்பால் போய் இருக்கும்படி கூறினான் ஜராசந்தன். விருஷ்ணி குலத்தின் மாபெரும் அறிஞரும், தபஸ்வியும், ஞாநியும் ஆன அக்ரூரரிடம் தான் தனியாகப் பேச விரும்புவதாகவும் கூறினான்.
*
No comments:
Post a Comment