எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 28, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு. 8

ரமேஷ் அங்கே இங்கே நகரவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தான். காரை அங்கிருந்து கிளப்பவும் முயன்றான். இப்போது அவன் பிடரியிலும் ஒரு துப்பாக்கி. எங்கிருந்தோ இன்னொரு துப்பாக்கி வித்யாவின் கழுத்திலும் பதிந்தது. "திரும்பாதே, ரமேஷ்! ஏதானும் பேசினாய் என்றால் முதலில் உன் மனைவியின் பின்னங்கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து முன்னால் வெளியே வரும். நீ அதைப் பார்த்து ரசித்துவிட்டே போவாய்! எப்படி ஆனாலும் உன்னை முதலில் அனுப்ப மாட்டேன். நீ குடும்பத்தில் பற்றுள்ளவன் ஆச்சே?? உன் மனைவிக்கப்புறம் உன் குழந்தை. முதலில் கால்??? ம்ஹும், வேண்டாமா? சரி அப்போ கை விரல்??" என்று கேட்டான். "பாவி, பாவி" ரமேஷ் தன்னை மறந்து அவன் மேல் பாய்ந்தான். வித்யா அலறினாள். "அவன் சொன்னமாதிரி செய்துடுங்க!" என்றாள். "என்ன சொல்றே நீ? யாருன்னே தெரியாது. கொல்லச் சொல்றான். கொன்னுட்டு அப்புறம் பாடியை என்ன செய்யறது? அப்புறம் போலீஸுக்கும் இவனே சொல்லிடுவான். இல்லைனாலும் அவங்க சொந்தக் காரங்க தேட மாட்டாங்களா? எப்படி இருந்தாலும் கண்டு பிடிச்சுடுவாங்க வித்யா. அப்புறம் நான் வெளியே நடமாட முடியாது. ஆயுள் தண்டனையோ, தூக்குக் கயிறோ!" ரமேஷ் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

எதுக்கும் அசரவில்லை வில்லன். "போகிறாயா இல்லையா?" என்று கேட்டான் மீண்டும். வித்யா கெஞ்சினாள். உள்ளே போய் அங்கே இருக்கிறவங்க கையிலே, காலிலே விழுந்து இவனைப் பத்திச் சொல்லித் தப்பிக்கலாமோ என்ற நப்பாசை பிறந்தது ரமேஷுக்கு. என்றாலும் வேண்டா வெறுப்பாக எழுந்தான். "ம்ம்ம்ம், இது தான் நல்ல பையனுக்கு அடையாளம்!" என்ற வண்ணமே அவன் கையில் வில்லன் துப்பாக்கியைக் கொடுக்க, அதனாலேயே அவனைச் சுட்டுவிடலாமோ என்று ஒரு கணம் நினைத்தான் ரமேஷ். அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டவன் போல, வில்லன் சிரித்தான். "நீ என்னைச் சுடுவதற்கு முன்னர் உன் மனைவி போய்விடுவாள். கொஞ்சம் என் பக்கம் நீ அசைந்தாலும் சரி, இன்னும் துப்பாக்கி அவள் கழுத்தில் தான் வைத்திருக்கிறேன்." என்றான். பல்லைக் கடித்துக்கொண்டு அந்த வீட்டை நோக்கி நகர்ந்தான் ரமேஷ். வித்யாவைத் தனியே விட மனமே இல்லை. திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சென்றான். வீடு திறந்தே இருந்தது. பெரிய ஹால். சோபாக்கள். "ப" வரிசையில் போடப் பட்டிருந்தன. அங்கேயே தொலைக்காட்சிப் பெட்டியும் வைக்கப் பட்டிருந்தது.

சற்றுத் தள்ளி இடப்பக்கமாய் மாடிக்குச் செல்லும் படிகள் ஹாலில் இருந்தே கிளம்பின. வலப்பக்கமாய் ஒரு அறையின் கதவு மூடியபடி தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். ஹாலின் நடுவே இருந்து உள்ளே செல்ல வழி இருந்தது. அந்தப் பக்கம் தான் சாப்பாடு சாப்பிடும் அறை, சமையலறை இருக்கவேண்டும். அப்போது மாடியில் யாரோ பாடிக்கொண்டே கீழே இறங்கும் சத்தம் கேட்டது. பெண் குரல்! கடவுளே, ஒரு பெண்ணையா கொல்லவேண்டும்?? அவள் என்னைப் பார்த்ததும் சத்தம் போடப் போகிறாளே? முதலில் ஒளிஞ்சுக்கணும். ஒளிஞ்சுண்ட இடத்தில் இருந்து குறி பார்த்துச் சுட முடியுதானும் பார்க்கணும். சுற்றிச் சுற்றிப் பார்த்த ரமேஷ் அங்கே இருந்த காஷ்மீரத் தடுப்புப் போட்டிருந்ததற்குப் பின்னர் சென்று மறைந்தான். ஹாலையே காஷ்மீரத் தடுப்புப் போட்டு அலுவல் அறையாக மாற்றி உள்ளனர். மெல்ல எட்டிப் பார்த்தான். படிகளில் ஒரு பெண் இறங்கி வந்து கொண்டிருந்தாள். அவள் போட்டிருந்த செண்டின் மணம் மூக்கைத் துளைத்தது. பழகிய செண்ட் மணம். இந்த செண்டை யார் போடுவார்கள்? ஆவலில் இன்னும் கொஞ்சம் எட்டிப் பார்த்தான். ஆஹா!! ரமேஷின் மனம் துள்ளியது. இது வேறு யாருமே இல்லை. சுபா தான்!

ரமேஷுக்கு சந்தோஷத்தில் என்ன செய்யறதுனு புரியலை! வெளியே வந்தான். திடீரென எங்கிருந்தோ முளைத்த அவனைப் பார்த்த சுபாவும் ஒரு கணம் திகைத்தாலும் பின்னர் மகிழ்ச்சியோடு, "ஹாய், டியர்! இந்த இடம் எப்படி உனக்குத் தெரிந்தது?? இப்போத் தான் உனக்கு ஃபோன் பண்ண இருந்தேன். இதுதான் சமயம்,சீக்கிரம் வானு சொல்ல நினைச்சேன்." என்றாள். ரமேஷ் எதுவுமே பேசாமல் அங்கிருந்த ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டான். அவளும் அவனை உரசிய வண்ணம் வந்து அமர்ந்தாள். ரமேஷின் முகத்தைப் பார்த்த அவள் ஏதோ பிரச்னை எனப் புரிந்து கொண்டு, "என்ன விஷயம்?? ஆளே பத்து நாட்கள் சாப்பிடாத மாதிரி இருக்கிறாயே? எங்கிருந்து வருகிறாய்?? வித்யா போய்விட்டாளா? அவள் காரை எடுத்துண்டு போயிருக்கணுமே? நீ எதிலே வந்தே?" சரமாரியாகக் கேட்டாள் சுபா.

"சுபா, உனக்கு என்ன நடந்ததுன்னே தெரியாது இல்லையா? எங்கள் பெண்ணை........." ஆரம்பித்த அவன் குரல் சட்டென நின்றது. இத்தனை நேரம் இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன்? சட்டென்று எழுந்தான். அந்த ஹாலில் இருந்த ஷோகேஸில் வைக்கப் பட்டு இருந்த படத்தைக் கவனித்தான். அதே பையன். வழியில் அவர்களைச் சந்தித்துப் பேசிய அதே பையன் அந்த போட்டோவில் இருந்தான். "யாரு இந்தப் பையன்??" கேட்டுக் கொண்டே அந்தப் படத்தைக் கையில் எடுத்தான். "ஏன், என் பையன் தான், சொன்னேனே உன்னிடம், எனக்கு ஒரு பையன் இருக்கான் என்று!" என்ற சுபா அவன் முகம் மாறியதைக் கண்டு திடுக்கிட்டாள். அந்த போட்டோவின் இருபக்கங்களிலும் படங்களை வைக்கலாம் அது மாதிரியான அமைப்பு அது. அதன் மறுபக்கம் சுபாவும், அவன் பெண்ணைக் கடத்தி வைத்திருக்கும் வில்லனும் சிரித்த வண்ணம் காட்சி அளித்தனர். ஒரு கணம் வேறு யோசனை வந்தாலும், சுபாவிடமே கேட்டுவிடலாம் என நினைத்துக் கொண்டு, அந்த போட்டோவைக் காட்டினான் ரமேஷ்.

"ஓஓ, பயந்துட்டியா ரமேஷ்??? அது தான் என் கணவன். இப்போ வர மாட்டார். திங்கள் மாலை தான் வருவார். பிசினஸ் டூர். திங்களன்று முக்கியமான மீட்டிங் இருக்காம். அது முடிந்து விமானத்தைப் பிடிச்சு வீட்டுக்கு வர இரவு பனிரண்டு ஆகிடும். பையனும் ஏதோ நண்பர்களோடு சேர்ந்து படிக்கணும்னு போயிருக்கான். திங்கள் கிழமை அப்படியே ஸ்கூலுக்குப் போயிடுவான். சாயந்திரம் தான் வருவான். அதுவரை நீயும், நானும் தான்!" என்று சொல்லிக் கொண்டே அவனை அணைக்க வந்தாள். அவள் கைகளைத் தட்டி விட்டான் ரமேஷ்.

"அப்போ, அப்போ, உன் கணவனுக்கு நம் விஷயம் தெரிந்திருக்கிறது!" என்றான்.

"என்ன சொல்றே ரமேஷ்?" சுபாவுக்குப் பதட்டம் வந்தது.

"இங்கே வந்து உன்னைக் கொல்லும்படி என்னை அனுப்பியதே இதோ இந்த ஃபோட்டோவில் இருக்கும் உன் கணவர் என்று சொல்கிறாயே, இந்த ஆள் தான்."

சுபா தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார, "ஏன் அதிர்ச்சியாக இருக்கிறதா?? ரமேஷ், இன்னுமா நான் சொன்னதைச் செய்யவில்லை?? சுடு அவளை! முதல்லே அவளைச் சுடு. இல்லாட்டி உன்னை நான் சுட்டுடுவேன்." என்ற குரல் கேட்க இருவரும் திரும்பிப் பார்த்தால் அங்கே அந்த வில்லன் நின்று கொண்டிருந்தான். ஆனாலும் அவன் முகத்தில் அதே ஏளனமான சிரிப்பு. அது மட்டும் மாறவே இல்லை.

"வேண்டாம்!" அலறினாள் சுபா.

"ரமேஷ், இப்போ இவளை நீ சுடவில்லை என்றால் உன்னைச் சுட்டுவிட்டு, உன் பெண்ணை அநாதை ஆசிரமத்தில் கொண்டு விடும்படி அந்தப் பெண்ணிடம் சொல்லிடுவேன். அப்புறம் காரில் இருக்கும் உன் மனைவியை நான் என்ன செய்வேன் என்று உனக்குச் சொல்லவேண்டியதில்லை. சுடு இவளை! சுட்டால் நீ பிழைப்பாய்!"

ரமேஷ் துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்தான். கைகள் நடுங்கின. "இப்படி எல்லாம் இருந்தால் சுட முடியாது. பக்கத்திலே போ! அவள் கழுத்திலே துப்பாக்கியை வை. சுடு!" என்று சொல்லிக் கொடுத்தான் வில்லன்.

ரமேஷ் அவள் அருகே போய்க் கைகள் நடுங்கத் துப்பாக்கியை அவள் கழுத்தில் வைக்க முயல, அவள் மாடிக்கு ஓடித் தப்ப முயல அதற்குள் அங்கே துப்பாக்கியை ஏந்திய வண்ணம் வில்லன் நின்று கொண்டான். வாசல் பக்கம் ஓடித் தப்பலாம் என்று பார்த்தவளுக்கு, "நீங்க இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தப்போ எல்லா ஜன்னலையும் மூடிட்டு, வாசல் கதவையும் உள்பக்கம் பூட்டிட்டுச் சாவியை இதோ இங்கே வைச்சிருக்கேன். சமையலறைப்பக்கமும் போக முடியாது. எல்லாக் கதவையும் சார்த்திட்டேன். இந்த ஒரு அறை தான் உனக்கு இப்போ தப்பிக்க ஒரே வழி! முடிஞ்சால் தப்பிச்சுக்கோ. நீ விழுந்து விழுந்து காதலிக்கிறதா நினைச்ச இந்த ரமேஷ் தான் இப்போத் தான் தப்பிக்கணும், தன் குடும்பம் பிழைக்கணும்னதும் உன்னைக் கொல்ல முயன்றான். இவனை நம்பி நீ காதலிச்சதோட அல்லாம, நான் இல்லாத சமயம் வீட்டுக்கும் வர வைத்திருக்கிறாய்."

"உங்க ரெண்டு பேரோட காதல் ரெஸ்டாரண்டில் காபி, டிபன் சாப்பிடுவதும் டிஸ்கோவில் ஆடுவதுமோடு இருந்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். இன்னிக்கு நீங்க இரண்டு பேரும் எனக்குத் துரோகம் செய்ய நினைச்சு ஏற்பாடுகள் செய்து கொண்டதும் சரியா? அதற்குத் தண்டனை தர வேண்டாமா? சுடு ரமேஷ்! சுடு!"

ஓஓஓவென்று அலறிக்கொண்டே சுபா வில்லன் காலடியில் விழுந்தாள். ரமேஷ் செய்வதறியாது திகைத்தவன், இதுதான் சமயம் என்று வில்லன் கையில் இருந்த சாவியைப் பிடுங்கிக் கொண்டு வாசல் கதவைத் திறந்து ஓடினான். பின்னால் சிரிப்புச் சத்தம் கேட்டது. ரமேஷ் திரும்பிப் பார்த்தான். "நீ தப்பத் தான் சாவியைக் கையிலே வைத்திருந்தேன்!" என்ற வில்லனின் குரல் ரமேஷைத் துரத்த, வேகமாய் ஓடிக் காரில் அமர்ந்து காரைக் கிளப்பினான்.

வித்யா ரமேஷின் முகத்தைப் பார்த்துவிட்டுத் திகைத்தாள், "என்ன நடந்தது?" என்று கேட்டாள்.

ரமேஷால் பேச முடியவில்லை.


டிஸ்கி:-
அடுத்த பகுதியிலே முடிச்சுடுவேன். :D

12 comments:

 1. அடடே ! கதை இப்படி போவுதா!
  வித்யாவை அந்த கண்ணனும் கணேசனும் தான்
  காப்பாத்தனும் !
  கதையை நல்ல படியா முடித்தால் கீதாம்மா வுக்கு
  ஒரு பட்டம் கொடுத்து கெளரவிக்கலாம்ன்னு
  உத்தேசம் !பார்ப்போம் !

  ReplyDelete
 2. //அடுத்த பகுதியிலே முடிச்சுடுவேன்.//

  அதுக்குள்ளாற எல்லாத்தையும் விருவிருன்னு படிச்சு முடிச்சிடறேன்.

  ReplyDelete
 3. அடாடா! பெரிய மர்மக்கதை மன்னியா இருக்காங்களே!

  ReplyDelete
 4. படிச்சு முடிச்சாச்சு!
  ஸாரி, படம் பாத்து முடிச்சாச்சு!
  சும்மா சொல்லக்கூடாது, இங்கே சுபாவைக் கொண்டு வந்து நிறுத்தியதும்
  சுபா வில்லனின் மனைவி என்று சொன்னதும் செம திருப்பம் தான்!
  க்ளைமாக்ஸ் நன்றாகவே அமைந்து விட்டது. திரைக்கதை ஆசிரியருக்கு பாராட்டுகள்!

  ReplyDelete
 5. அடுத்த பகுதியில் முடிசிடுவீங்களா...யாரை..?

  பிரமாதமாய்க் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 6. வாங்க ப்ரியா, முடிவு எழுதியாச்சு, இப்போச் சொல்லுங்க பட்டமும், பாராட்டும் தேவையே இல்லைனு புரிஞ்சிருக்குமே! நன்றிம்மா உங்க அன்புக்கு. :))))))))))

  ReplyDelete
 7. ஜீவி சார், வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி. ஆனாலும் கதை என்னோடதே இல்லைங்க. ஆனால் கடைசியாக் கொடுத்தீங்க பாருங்க ஒரு ஷொட்டு திரைக்கதை ஆசிரியர்னு அங்கே தான் நீங்க நிக்கறீங்க. என்ன இருந்தாலும் பல வருஷ எழுத்தாளர் அனுபவம் உள்ளவர் இல்லையா நீங்க?? :)))))))))

  ReplyDelete
 8. வாங்க திவா, உங்க வரவே ஆச்சரியமளிக்கிறது. பாராட்டு எனக்குக் கொடுக்கவேண்டாமே! நன்றி.

  ReplyDelete
 9. வாங்க ஸ்ரீராம், ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை படிச்சதுக்கும், விடாமல் பாராட்டியதற்கும் ரொம்பவே நன்றி. கதை என்னோடது இல்லைனு தெரிஞ்சும் பாராட்டியது உங்கள் பெருந்தன்மை.

  ReplyDelete
 10. கதையை ஒருசேரப் படித்துக்
  கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். நேற்று இரவு
  பதிவைப் பார்த்த பொழுது அடுத்த பகுதியில் முடிந்துவிடும் என்று நீங்கள் போட்டிருந்ததைப் பார்த்ததும், உங்களுக்குச் சொல்லி விட்டு வேகமாக ஒவ்வொரு அத்தியாயமாகப் படிக்கத் தொடங்கினேன். எனக்கென்னவென்றால் அதற்குள் முடிவைப் போட்டு விடுவீர்களோ என்று.அதற்குள் நமக்குத் தோன்றுவதைச் சொல்வோமே என்று அவசரம்.
  ஆனால் படித்துக் கொண்டே வரும் பொழுது இந்த வித்யா மட்டும் தன் கணவன் சொல்லும் எதற்கும் ஒத்துழைக்காமல் ஒரு 'நான் கோவாப்ரேஷன்' மூடில் இருப்பது வினோதமாகப்பட்டது. அதுவே அவள் நடத்தும் ஒரு நாடகம் போல் லேசான ஒரு சம்சயம் ஏற்பட்டதே தவிர அதற்கான காரணம் தெரியவில்லை. தெரியாததற்குக் காரணம் அது தெரிஞ்சிடக்கூடாதுன்னு நீங்களும் படாதபாடு பட்டீர்கள்.
  அதற்காக படிக்கிறவங்களைக் குழப்ப நிறைய டைவர்ஷன்களை வைத்திருந்தீர்கள். ஒண்ணுமில்லை, அந்த ஹோட்டல் அறை எண்'327'-ல் கூட ஏதாவது க்ளூ இருக்குமா என்று யோசிக்கிற அளவில் தொட்டதெல்லாம் சந்தேகமாக இருந்தது. நான் சினிமாக்கள் பார்த்தே பல வருஷங்கள் ஆகிவிட்டதால், இது ஒரு சினிமாவாக வந்த கதை என்கிற
  விஷயம் தெரியாமலேயே போய்விட்டது. இருந்தும் திரைக்கதை ஆசிரியருக்குப் பாராட்டுகள் என்று எப்படிச் சொல்லத் தோன்றியது என்றால், அடுத்த உங்கள் கதை முடிவுப்பகுதியில் அதைச் சொல்கிறேன்.

  ReplyDelete
 11. இந்த வித்யா மட்டும் தன் கணவன் சொல்லும் எதற்கும் ஒத்துழைக்காமல் ஒரு 'நான் கோவாப்ரேஷன்' மூடில் இருப்பது வினோதமாகப்பட்டது//

  சரிதான், ஆனால் எனக்குத் தோன்றியது, குழந்தையைக் காப்பாற்றவேண்டியே அப்படிச் செய்யறாளோனு. கொஞ்சம் மூலத்திலே இருந்து தமிழ்நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் எழுதி இருக்கேன்.

  அதற்காக படிக்கிறவங்களைக் குழப்ப நிறைய டைவர்ஷன்களை வைத்திருந்தீர்கள்.//

  இந்தப் படம் அநேகமாய் எல்லாரும் பார்த்திருப்பாங்கனு தோன்றியது. அதனால் கொஞ்சம் உஷாராகவே இருந்தேன். அதே காரணத்தினாலேயே ரசிகன் ஸ்ரீதரின் பின்னூட்டத்தையும் மாடரேஷனில் வைத்தேன். அவரும் தமிழாக்கம் இன்னும் நல்லா இருக்குன்னே சொன்னார். நன்றி சார், அனுபவம் வாய்ந்த உங்களிடமிருந்து பாராட்டுப் பெறக் கொடுத்து வைச்சிருக்கேன்.

  ReplyDelete
 12. ஹ ஹா
  முடிவும் சுபமாக இருந்தது
  உங்களுக்கு, உங்களின் அழகான
  விறுவிறுப்பு, சற்றும் குறையாத தமிழ்
  நடைக்கு பட்டமும் கொடுத்து
  தங்களை கௌரவ படுத்தி உள்ளோம்
  கீதாம்மா
  தங்கள் எழுத்து பணி தொடர
  எங்களுது வணக்கமும் வாழ்த்துகளும்!!

  ReplyDelete