எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 04, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

கண்ணன் தப்பினானா???

தாமகோஷனின் திட்டத்தில் ஏதாவது உள்நோக்கம் இருக்கலாமோ என ஜராசந்தனுக்குக் கொஞ்சம் யோசனை. ஆனால் மற்ற அரசர்களுக்கு இந்த யோசனை உவப்பாகவே இருந்தது. இந்தப் பிரச்னையில் இருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விடுபடவே நினைத்தனர் அனைவரும். ஆகவே இதை அனைவருமே ஒரு குரலில் ஆமோதித்தனர். ஆதரவையும் தெரிவித்தனர். ஜராசந்தனுக்கு இதை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று.
மலைமேல் கருடர் குடியிருப்பு. அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணனும், பலராமனும் தங்கள் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்தனர். திடீரென, “க்றீச்ச்ச்ச்” என்ற ஒரு குரல் கேட்கக் கண்ணன் தூக்கிவாரிப் போட்டு விழித்தெழுகிறான். “என்ன ஆயிற்று?” கண்ணன் வினவ, ஒரு இளம் கருடன் ஓடோடியும் வந்தான். “தெய்வமே! மோசம் போனோம்! தீ வைத்துவிட்டனர். கீழே எதிரிகள் காய்ந்த புற்களில் தீ வைத்திருக்கின்றனர். அது மேலேயும் பரவிக்கொண்டு வருகிறது. இன்னும் சிறிது நாழிகைக்குள்ளாக நாம் அனைவரும் உயிரோடு எரிக்கப் படுவோம்! “ பயந்து போயிருந்தான் அந்த இளைஞன். கண்ணன், பலராமனையும், அழைக்க வந்திருந்த அந்தக் கருட இளைஞனையும் கூட்டிக் கொண்டு அந்த மலைப் பள்ளத்தாக்கில் இருந்த சிகரங்களின் மீது ஏறி அவற்றின் ஓரத்தில் நின்றுகொண்டு கீழே பார்த்தனர். அவர்களோடு கருடர்களின் தலைவனும் சற்று நேரத்தில் வந்து சேர்ந்து கொண்டான். காற்று மிகவும் வேகமாகவும், வலுவாகவும் வீசிக் கொண்டிருந்தது. அதன் மர்மர சப்தம் கடல் அலைகளில் இருந்து எழும் பேரோசை போல் கேட்டுக் கொண்டிருந்தது. அதிலிருந்து மிகவும் வலுவான காற்று வீசுவதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அதற்குள் திடீரெனக் கிளம்பிய ஜகஜ்ஜோதியான வெளிச்சத்திலும், கடும் வெப்பத்திலும் தூங்கிக் கொண்டிருந்த கருட இன மக்கள் அனைவரும் விழித்தெழுந்தனர். அனைவரும் அழுதுகொண்டும், புலம்பிக் கொண்டும் தங்கள் குடும்பங்களையும் உடைமைகளையும் பாதுகாக்க முனைந்தனர். கருடர்களின் அரசன் கிருஷ்ணனின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தான். அவனுக்குக் கிருஷ்ணன் அற்புதம் ஏதானும் செய்வான் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படியே கண்ணனிடம் வேண்டிக் கொள்ளவும் செய்தான். எங்களை இந்த இக்கட்டில் இருந்து விடுவிப்பாய் என வேண்டினான். உன்னைச் சரண் அடைந்துவிட்டோம், இனி நீயே கதி எங்களுக்கு என்று கண்ணனைத் தொழுதான்.

கண்ணன் அனைவரையும் பார்த்து, “என்னுடன் வாருங்கள், அனைவருமே வாருங்கள், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. உங்கள் கைகளில் கிடைக்கும் ஆயுதங்கள் எதுவானாலும் எடுத்துக்கொண்டு என்னோடு வாருங்கள். கருட மன்னா, தாங்களும் வாருங்கள். அண்ணா, பலராமரே, நம்முடைய கவசங்களைப் பூட்டிக் கொண்டு ஆயுதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நெருப்பை அணைக்கும் விதத்தைச் சொல்கிறேன். “ கண்ணன் குரலில் நிதானமும், உறுதியும் தொனித்தது. தலைமைப் பொறுப்பை ஏற்று அனைவருக்கும் கட்டளை இட்டுக் கொண்டிருந்தாலும், அது வெளியே தெரியாதவாறு கண்ணன் குரலில் மென்மையும், வசீகரமும் இருந்தது. “விநதேயா, நேற்று நாம் கடலுக்குச் சென்றோமல்லவா? அந்தப் பாதை வழியாக அனைவரையும் அழைத்துச் செல்!” கண்ணன் கட்டளை இட்டான். மலையின் மற்றொரு பக்கம் வளைந்து வளைந்து ஒழுங்கற்றுச் சென்ற ஒரு பாதையில் விநதேயன் அனைவரையும் அழைத்துச் சென்றான். அவர்களுக்குக் கீழே சமுத்திரத்தில் அலைகள் தன் முழு பலத்தோடும் “ஓ”வென்று கூச்சலிட்டுக் கொண்டு கரையில் மோதிக் கொண்டிருந்தது. கீழே கூக்குரலிட்டுக் கொண்டிருந்த அலைகளை லட்சியம் செய்யாமல் மேலே நடந்தனர். சற்று நேரத்தில் மலையின் இரு முகடுகள் ஒரு கணவாய் போல் இரண்டாகப் பிரிந்திருந்த ஓர் இடத்துக்கு வந்து சேர்ந்தனர். உண்மையில் அது வெகு காலத்துக்கு முன்னால் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட அணைபோல் தெரிந்தது. நன்கு செதுக்கப் படாத பல கற்கள் ஆங்காங்கே தெரிய அவற்றைப் பெயர்த்து எடுப்பதன் மூலம் அங்கே ஒரு பெரிய பிளவை உண்டாக்க முயற்சித்தனர். அனைவரும் கண்ணன் சொல்லாமலேயே அவன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டிருந்தனர்.

கடும் முயற்சிக்குப் பின்னர். சிறிது நேரத்தில் அங்கே ஒரு பெரிய பிளவு உண்டாக, கடலரசன் யார் இது இங்கே பிளவை ஏற்படுத்தியது என்று பார்க்க விரும்பினவனைப் போல் அங்கே சீற்றத்தோடு நுழைந்தான். அனைவரும் மறுபக்கத்துக்கு ஓடோடிப் போய் அங்கேயும் இப்படியே ஒரு பிளவை உண்டாக்க நீர் அங்கேயும் நுழைந்து அந்த மலையின் அடிவாரத்துக்குச் சற்று மேலே ஒரு பெரிய அகழியைப் போல் சுற்றிச் சூழ்ந்து கொண்டது. மேலும், மேலும் தடையில்லாமல் கடல் நீர் உள்புக நீரின் வேகமும் அதிகமானது. அங்கே கட்டப் பட்டிருந்த அந்த அணையானது அந்த நீரின் வேகத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் விழ ஆரம்பிக்க அதைப் பார்த்த வண்ணமே கருடன் விநதேயனோடு கண்ணனும், பலராமனும் மலையின் மேலே ஏறினார்கள்.


ஜராசந்தன் குதூகலத்தின் உச்சியில் இருந்தான். கண்ணனால் இம்முறை தப்பவே முடியாது என்பது சர்வ நிச்சயமாய்த் தெரிந்து போய்விட்டது. நெருப்பு பல அடிகள் மேலே மேலே கொழுந்து விட்டெரிய, நெருப்பின் வெம்மையிலும், இருக்கும் இடங்கள் அழிக்கப் பட்டதாலும், முயல்கள், மான்கள், கரடிகள், சிங்கங்கள், புலிகள் போன்ற காட்டு மிருகங்கள் தங்கள் பதுங்குமிடத்திலிருந்து வெளியே ஓடோடி வந்தன. ஒரு சில மிருகங்கள் தவறுதலாய் நெருப்பில் விழ ஜராசந்தனுக்கும் அவனின் வீரர்களுக்கும் ஒரு மாபெரும் விருந்து கிடைத்த்தில் பரிபூரண திருப்தி உண்டாயிற்று. இந்த நெருப்பினால் ஒரு பக்கம் எதிரியும் ஒழிந்தான் அதோடு, நமக்கு உண்ண உணவும் பக்குவமான நிலையில் கிடைக்கிறது. அன்று இரவு ஒரு மாபெரும் ராஜா அளிக்கும் விருந்தாக அமைய, அனைவரும் உண்டு களித்து மனக் களிப்போடு உறங்கினர். நாளைப் பொழுது விடிந்தால் எதிரி மாண்டான் என்ற நற்செய்தியோடு திரும்பலாம். அனைவருக்கும் உறக்கம் சீக்கிரமே வந்தது. நடு இரவில், அது என்ன சப்தம்?? மழை பெய்கிறதா? அல்லது ஏதேனும் அருவி நீரா? அலை ஓசை போல் அல்லவா உள்ளது? இது என்ன ஆச்சரியம். இந்த மலையின் அப்புறமாய் ஏறிப் போய்க் கடந்தாலே மேலை சமுத்திரக்கரைக்கு இறங்க முடியும்! இது என்ன கனவா? இல்லை நனவா? தண்ணீர் வேகமாய் வந்து கொண்டிருந்தது.

5 comments:

  1. arumaii maami, thinamum podungalen pleaseee

    ReplyDelete
  2. //நடு இரவில், அது என்ன சப்தம்?? மழை பெய்கிறதா? அல்லது ஏதேனும் அருவி நீரா? அலை ஓசை போல் அல்லவா உள்ளது? இது என்ன ஆச்சரியம். இந்த மலையின் அப்புறமாய் ஏறிப் போய்க் கடந்தாலே மேலை சமுத்திரக்கரைக்கு இறங்க முடியும்! இது என்ன கனவா? இல்லை நனவா?//

    அனந்தராம தீஷிதரோ..பாலகிருஷ்ண சாஸ்திரிகளோ.. யாருதுன்னு தெரியலே.. கதாகாலட்ஷேபத்தில்
    உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிற மாதிரி அப்படி ஒரு உணர்வு.. அற்புதமான உணர்வு பொங்கும் உரை.. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. தினமும் போடறது கொஞ்சம் கஷ்டம் எல்கே. முடியலை! :))))))))) கதையை நல்லாப் புரிஞ்சுக்காம எழுத முடியாது இல்லையா? அதான் நேரம் எடுத்துக்கறேன்.

    ReplyDelete
  4. ஜீவி சார், ஜாம்பவான்களோடு என்னை ஒப்பிட்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. ரொம்ப நன்றி வருகைக்கும், பாராட்டுக்கும்.

    ReplyDelete
  5. ரொம்ப நாள் கழிச்சு வந்து பாத்தா, எழுத்து நடை இன்னும் மெருகு கூடியிருக்கு. டீச்சர்ன்னா சும்மாவா?...

    ReplyDelete