எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 29, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு! முடிவு!

வித்யா கேட்ட எதற்கும் பதில் சொல்லவே இல்லை ரமேஷ். மெளனமாய்க் காரை ஓட்டினான்.

"எங்கே போகிறோம் ரமேஷ்?" வித்யா கேட்டாள்.

"நம் வீட்டிற்கு! போய்க் குழந்தையை எப்படித் திரும்ப அழைப்பது என்று பார்க்கலாம்!" என்றான் ரமேஷ்.
"ரமேஷ், உள்ளே என்ன நடந்தது??? அதைச் சொல்லுங்கள் முதலில்!"

"ஒன்றுமில்லை, உன்னிடம் சொல்லவேண்டாம் என நினைத்தேன். தெரிந்தால் ரொம்ப வருந்துவாய்!'

"ரமேஷ்!"" வித்யா முகத்தில் கலக்கம் குமிழியிட்டது.

"வித்யா, உன் தோழி சுபா இருக்கிறாளே, அவள் நல்லவள் இல்லை. எனக்கு..... எனக்கு...... சொல்லவே கஷ்டமா இருக்கு. அவளுக்கு யாரோ ஆண் நண்பர் இருக்கிறான் போல! இன்றைக்கு இரவு அவனை வீட்டுக்கு வரச் சொல்லி இருந்திருக்கிறாள். நம்மை மிரட்டினானே வில்லன் அவன் யார்னு நினைக்கிறே?? சுபாவின் கணவன் அரவிந்தன். அவனுக்கு எப்படியோ விஷயம் தெரிந்து போய் அவளை மிரட்டுவதற்காக இந்த நாடகம் நடத்தி இருக்கிறான்."

"ஓ, அப்படியா?? அப்போ நம்மை எதுக்குப் பாடாய்ப் படுத்தணும்?? நாம என்ன செய்தோம்? எந்த வகையிலே நமக்கும் அவங்களுக்கும் சம்பந்தம்??" வித்யா விடவில்லை. கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டாள்.

"ஓஓஓ, அந்த ஆள் நானோ என நினைத்திருக்கிறான். நான் இல்லைனு தெரிஞ்சதும் விட்டுட்டான். அடுத்து அவன் யாருனு தேடுவான் போல!" என்றான் ரமேஷ்.

வித்யா பதில் பேசவில்லை. அதற்குள் வீடு வந்துவிட்டது. ரமேஷுக்கு அவசரம். "வித்யா, முதல்லே குழந்தையைத் தேடும் வழியைப் பார்க்கணுமே, அந்தப் பழைய வேலைக்காரியின் விலாசம் தெரியுமா உனக்கு? அவள் மூலம் தான் இன்னிக்கு வந்தாளே அவளைக் கண்டு பிடிக்கணும். போலீஸில் சொல்லிடுவோமா?" ரமேஷ் பரபரத்தான். வித்யா காரைவிட்டு இறங்கவே இல்லை. அசையாமல் உட்கார்ந்திருந்தாள். ரமேஷ் யோசனையோடு அவளைப் பார்த்துக்கொண்டே கீழே இறங்கினான். வீட்டுப் படிகளில் காலை வைத்து அழைப்பு மணியை அழுத்தினாலும் யார் வரப் போகிறார்கள் என எண்ணியவாறே, தன் பையில் இருந்த மாற்றுச் சாவியைத் தேடினான். கதவு திறந்தது.

"வித்யா, என்ன அங்கேயே உட்கார்ந்திருக்கே?? சீக்கிரம் உள்ளே வா! வீட்டுக்குள்ளே யாருனு தெரியலையே? கதவு திறக்குதே!" ரமேஷ் சத்தம் போட, "வீட்டில் அந்த வேலைக்காரப் பெண் தான் ரமேஷ் இருப்பாள். வேறே யாரும் இல்லை!" வித்யா உட்கார்ந்த இடத்தில் இருந்தே சொன்னாள். தூக்கி வாரிப் போட்டது ரமேஷுக்கு. வித்யாவைப் பார்த்தவன் வீட்டுக்குள்ளே பார்த்தான். குழந்தையைப் பார்த்துக்க வந்த புதுப் பெண் தான் நின்றிருந்தாள். ரமேஷுக்கு ஆத்திரம் பொங்கியது. "ஏய், எங்க குழந்தையை என்ன செய்தே? எங்கே குழந்தை?" ரமேஷ் கையை ஓங்கிக் கொண்டு பாய, வித்யா காரிலிருந்து மெல்லக் கீழே இறங்கி உள்ளே வந்தாள். ரமேஷின் ஓங்கிய கையைப் பிடித்துக் கொண்டாள்.

"பாவம் ரமேஷ், இவள் அப்பாவி, இவளுக்கு ஒன்றும் தெரியாது. இவளை விட்டு விடுங்க, வீட்டுக்குப் போகட்டும்!" என்றாள்.

"வித்யா, வித்யா, என் விதுக்குட்டி, என்ன சொல்றே நீ? நம்ம குழந்தையை இவள்........"

"மேலே போய்ப் பாருங்க ரமேஷ், குழந்தை எங்கேயும் போகலை. இருந்த இடத்தை விட்டுக் குழந்தை நகரவும் இல்லை. இந்தப் பெண்ணும் இங்கேயே தான் இருந்தாள். குழந்தை தூங்குவாள் அவளோட அறையில். நீங்க போய்ப் பார்த்துக்குங்க. அதுக்குள்ளே நான் இவளை செட்டில் பண்ணி அனுப்பிடறேன்."

குழப்பம் நீங்காதவனாய் ரமேஷ் மேலே சென்றான். குழந்தையின் அறையில் மெல்லிய ரீங்காரத்தோடு ஏசி இதமான குளிரில் ஓடிக் கொண்டிருக்கத் தன் பிரியமான பொம்மையை அணைத்த வண்ணம் உறங்கிக்கொண்டிருந்தாள் குழந்தை. முகத்தில் சிரிப்பு. ஏதோ கனவு போலும், ரமேஷின் நெஞ்சை உலுக்கியது அந்தக் காட்சி. ஆஹா, இவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமே? மனதைத் தான் இழந்தவைகளின் நினைவுகள் உலுக்க, அதை உதறிக்கொண்டு குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் தொடுகையில் கண் விழித்த குழந்தை, "அப்பா" என்று சிரித்துவிட்டு மீண்டும் தூங்கிப் போனது.

மெல்ல யோசனையுடன் தங்கள் அறைக்கு வந்த ரமேஷ் அங்கே வித்யா இல்லை என்று கண்டதும் ஆச்சரியத்துடன் கீழே இறங்கினான். ஹாலிலேயே சோபாவில் அமர்ந்திருந்த வித்யாவின் கண்களில் கண்ணீர். ரமேஷ் அவளை அணைத்துத் தேற்ற முயன்றான். "போனால் போகிறது வித்யா, பணம், காசு, நகை நட்டுத்தானே? அதான் நான் இருக்கிறேனே? உன் வேலை என்னமோ அப்படியே இருக்கிறது! என் வேலைதானே? நான் சீக்கிரமாய் ஒரு வேலை தேடிக் கொள்கிறேன். எல்லாத்தையும் சம்பாதிச்சுக்கலாம்." என்றான்.

"ரமேஷ், ஆனால், ஆனால் நான் இழக்க இருந்தது உங்களை அல்லவோ?? அந்த இழப்பு வேண்டாம் என்பதால் தானே இந்தப் பாடு பட்டேன்? பட்டோம்??"

ரமேஷுக்கு இப்போது உண்மையிலேயே தூக்கிவாரிப் போட்டது! "வித்யா!" அவனுக்குப் பேச நா எழவில்லை. வித்யாதான் பேசினாள். மடை திறந்தாற்போல் பேசினாள். சுபாவுடன் அந்தரங்கமாய்ப் பழக ஆரம்பித்த புதிதில் ஒருநாள் தூக்கத்தில் அவன் சுபாவின் பெயரைச் சொல்லி இருக்கிறான். அப்போது வித்யா கொஞ்சம் சந்தேகப் பட்டுக் கேட்டபோது சுமியின் பெயரைத் தப்பாக அவள் காதில் வாங்கிக் கொண்டதாய்ச் சொல்லி அவளைக் கேலி செய்திருக்கிறான். இன்று அதை நினைவு படுத்திய வித்யா, அதன் பின்னரும் பலநாட்கள் அவன் தூக்கத்தில் சுபாவின் பெயரும், அவளைச் சந்தித்த இடங்களைப் பற்றியும், சுபாவின் அழகைப் பற்றியும் அவன் வர்ணித்ததையும் கூறினாள். ரமேஷுக்கு அவமானமும், வெட்கமும் பிடுங்கித் தின்றன. இப்படியா பலகீனமாய் இருந்திருக்கிறோம் என்று நினைத்துக் கூசிக் குறுகிப் போனான். கடைசியில் அவர்கள் சந்திப்பு தனியாக நடைபெறப் போவதை அவனுக்கு சுபாவிடமிருந்து வந்த எஸ் எம் எஸ் ஒன்றின் மூலம் தற்செயலாகத் தெரிந்து கொண்டதைச் சொன்னாள் வித்யா. அவளைச் சந்திக்க அவள் வீட்டுக்குச் சென்றதையும், அங்கே அவள் இல்லை என்றும், அப்போது தான் அவள் கணவனைச் சந்தித்ததையும், அவள் கணவனுக்கும் இந்த விஷயம் தெரிந்திருந்தது என்றும் சொன்னாள். அவர் அவர்கள் இருவரையும் ரெஸ்டாரண்டுகளிலும், சினிமா தியேட்டர்களிலும் நெருக்கமாய்ப் பார்த்திருந்தார் என்றும் அதைச் சொல்லி வருந்தியதாகவும் கூறினாள். அவருக்கும் அவர் மனைவியின் மேல் அளவற்ற காதல் என்பதையும் சொல்லி, மனைவிக்கும் புரிய வைக்கவேண்டும், அதே சமயம் உன் கணவனும் திருந்த வேண்டும் என்று சொல்லவே நாங்கள் இருவருமாய் இந்தத் திட்டத்தைப் போட்டோம் என்று சொல்லிக் குலுங்கிக்குலுங்கி அழுதாள்.

ரமேஷ் திக்பிரமை பிடித்து நின்றான். "வித்யா, வித்யா, இப்போ இந்த விஷயம் தெரிந்து போனதுக்கப்புறமும் நீ என்னிடம் அதே பிரியத்தோடு இருப்பாயா? தப்பு வித்யா, தப்பு. இவ்வளவு அருமையான மனைவியைப் புரிஞ்சுக்காமல் ஒரு கண நேர சுகத்தை எண்ணித் தப்புப் பண்ணிப் படுகுழியில் விழ இருந்தேனே. அப்படி மட்டும் நடந்திருந்தால் நம்மிருவர் வாழ்க்கை மட்டுமில்லாமல் சுபாவின் குடும்பமும் சீரழிந்து போயிருக்குமே! வித்யா, நீ எவ்வளவு புத்திசாலி, எத்தனை நல்லவள், எப்படிச் சாதுரியமாக என்னை ஒரு கேள்வி கூடக் கேட்காமல் இதிலிருந்து மீட்டுவிட்டாய்? ஆனால், ஆனால் நான் இதற்குத் தகுதியானவனா? என்னோடு இனியும் நீ சேர்ந்து வாழ்வாயா??"

ரமேஷ் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். வித்யா பதிலே பேசவில்லை. "உண்மைதான் ரமேஷ். ஒரு கட்டத்தில் எனக்கு உங்களை விட்டுப் போகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது தான். அப்புறமாய் நிதானமாய் உட்கார்ந்து யோசித்தேன். நானும் மனித வள மேம்பாட்டில் மக்கள் நலத்துறையில் இருந்து கொண்டு என் குடும்பத்தை நானே அழித்துக் கொள்வதால் என்ன லாபம்? நான் செய்யும் வேலைகளுக்கு என்ன அர்த்தத்தை அவை கொடுக்கும் என்று யோசித்தேன். அப்புறம் தான் அரவிந்தன் அவர்கள் இந்த வழியைக் காட்டினார். முள் மீது விழுந்த சேலையைக் கிழியாமல் எடுக்க வேண்டும் என்றே முயன்றோம். ஆனாலும் சில இடங்களில் கொஞ்சம் கிழிந்து தான் போனது. அஜாக்கிரதையால் அல்ல. வேறு வழியில்லாமல் முள் ஆழமாகப்பதிந்திருந்ததே! அதனால்! ஆனாலும் கூடியவரையிலும் எடுத்துவிட்டோம்." என்றாள். மேலும்,"இன்னும் சில நாட்களுக்கு இதன் தாக்கம் இருக்குமே!" என்றும் சொன்னாள்.

"அப்படியானால், அப்படியானால், வித்யா, நீ என்னுடன் இருப்பாயல்லவா?? போகிறது, பணம் காசு போனால் போகிறது. நீ மட்டும் இருந்தால் போதும்!"

"ரமேஷ், என்னை இவ்வளவு நேசிக்கும் நீங்களா அப்படி ஒரு காரியத்துக்கு உடன்பட்டீர்கள்?" வித்யா கேட்க, "தெரியலை வித்யா, எனக்கே புரியலை, ஒருவேளை நாம் ஆண்மகன் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் எனக்குள் ஊறிப் போயிருந்ததோ? அல்லது சுபாவின் ஏதோ ஒரு செயலால் கவரப் பட்டேனோ? என்னனு புரியலை. ஆனால் இப்போ யோசிச்சுப் பார்த்தால் எவ்வளவு அபத்தம் என்று தெரிகிறது."

வித்யாவின் கைகளைப் பற்றினான் ரமேஷ். "வித்யா, இதைக் கேட்கக் கூட எனக்குத் தகுதியில்லை. ஆனாலும் நீ என்னை மன்னிப்பாயா?" அவள் கைகளைப் பற்றித் தன் கண்களில் வைத்துக்கொண்டான். அவன் கண்ணீரால் அவள் உள்ளங்கைகள் நனைந்தன. அப்படியே அந்தக் கைகளைத் தன்னைச் சுற்றிப் பிணைத்துக்கொண்ட வித்யா, "நான் மட்டும் இல்லை ரமேஷ், இழந்த பணமும் கிடைக்கும், நகைகளும் லாக்கரிலேயே பத்திரமாய் இருக்கு. குழந்தை எப்படி இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லையோ, அது போலப் பணமும் எல்லாமும் எடுக்கப் படவில்லை. மேலே மட்டும் பணக் கட்டு ஒன்றை வைத்துவிட்டு உள்ளே பேப்பர்தான் என்றும் நகைகளுக்குப் பதிலாக அது வெறும் பை என்றும், சும்மா நகை வைக்கும் பெட்டிகள், பைகளை அதிலே வைத்திருந்ததாகவும் சொன்னாள்.

"ஓஓ,அதுவும் அப்படியா?? ஆனால் என்னோட வேலை?? அது போனது போனதுதானே!" ரமேஷின் முகம் கூம்பியது. வித்யா, "இல்லை ரமேஷ், அப்படி எல்லாம் உங்களைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் வேலையைச் செய்வேனா நான்? அந்த ஹோட்டலில் என்னிடம் கவரை வாங்கிக் கொள்ள வந்தவர் திரு அரவிந்தனின் பிசினசில் சம்பந்தப் பட்டவர். அரவிந்தன் என்னிடம் கொடுத்த கவரிலும் அவருடைய சொந்த பிசினஸ் சம்பந்தப் பட்ட தேவையான விபரங்களே இருந்தன."

ரமேஷுக்கு விம்மி விம்மி அழவேண்டும்போல் இருந்தது. வேறு ஒன்றும் செய்யத் தோன்றாமல் வித்யாவை இறுக அணைத்துக்கொண்டான். " செத்துப்போனால் தவிர மற்றபடி இனி உன்னை நான் பிரியமாட்டேன். எனக்குப் புரிந்துவிட்டது. என் பொக்கிஷம் நீ! ஆனால் ஏன் இப்படிச் செய்தாய் வித்யா? என்னை ஏன் இப்படிப் பரிதவிக்க விட்டாய்?? நேரிலேயே கேட்டிருக்கலாமே?"

"ரமேஷ், உங்களைப் பொறுத்தவரை என்னை ஒரு உயிருள்ள பொம்மையாகவே நடத்தி வந்தீர்கள். இன்னும் சொல்லப் போனால் சிறு பையன்கள் பட்டாம்பூச்சியைப் பிடித்து சோப்புப் பெட்டிக்குள் வைத்து அதை மற்றச் சிறுவர்களிடம் காட்டி, வண்ணாத்திப் பூச்சி டான்ஸ் ஆடுது பார், என்று சொல்லி அது துடிக்கிறதை வேறு மாதிரியாக அர்த்தம் பண்ணிக் காட்டிப் பெருமை அடித்துக்கொள்வார்கள். கிட்டத் தட்ட அதுபோல, நீங்கள் என்னை விடமாட்டீர்கள், ஆனாலும் உங்கள் கெளரவத்துக்கு ஒரு கிரீடம் போலவே என்னை நினைக்கிறீர்கள், எனக்கும் சொந்தமாக உணர்வுகள், கோப, தாபங்கள் உண்டு என நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லையே? அதான் உங்கள் உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம் என் உணர்வுகளையும் காட்டினேன். உங்கள் ஆசையும், பாசமும் இன்னொரு பெண்ணிடம் போவதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்க முடியுமா என்னால்?? சோப்புப் பெட்டியில் இருந்து பறக்கத் துடிக்கும் பட்டாம்பூச்சிபோலவே நானும் உங்களை, உங்கள் அன்பை மீட்டு எடுக்கத் துடித்தேன். "

ரமேஷுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வித்யாவின் அழுத முகத்தில் ஆழமாக முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டான். அன்பு உள்ளங்கள் இணைந்ததும் அங்கே பேச்சுக்கு இடமில்லை. நாமளும் போவோம். அவங்களைக் கொஞ்ச நேரம் தனியா விட்டுட்டு!
*************************

எல்லாரும் என்னை மன்னிக்கணும். இது நான் சொந்தமாய் எழுதின கதையே இல்லை. சவான் சீகல்ஸ் நடிச்ச ஒரு படத்தைச் சில நாட்கள்/மாதங்கள் முன் பார்த்தேன். அப்போ இருந்து இந்தக் கதையும் அதன் கருத்தும் மனதைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. இதை நான் நான்காவது அத்தியாயம் எழுதும்போதே ரசிகன் ஸ்ரீதர் கண்டு பிடிச்சுட்டுக் கேட்டார். அதனால் அவரோட பின்னூட்டத்தை நிறுத்தி வைச்சேன். நேற்றைய பதிவில் ஜீவி சாரும் மறைமுகமாத் தெரிஞ்சோ தெரியாமலோ சினிமாக்கதைனு சொல்லிட்டார். நான் செய்தது இந்தக் கதையை இந்திய, அதுவும் தமிழ்நாட்டுக்கு ஏற்றவாறு ஒரு சில மாற்றங்களைச் செய்தது மட்டுமே. மற்றபடி புகழோ, கதையின் சுவாரசியம் குறையாமல் இருந்ததோ அதன் மூலகர்த்தாவையே சாரும். புகழ்ந்து பாராட்டினவர்கள் அனைவரும் கதையின் மூலத்தை எழுதினவரைப் பாராட்டவும். நன்றி.

12 comments:

 1. பாராட்டுக்கள். உங்கள் நடையில் கதை நன்றாகவே இருந்தது. மூலத்தைப் பற்றி தெரியாது. அதனால் என்ன? சுவாரஸ்யமாக இருந்தது.

  ReplyDelete
 2. கதையின் தலைப்பு சூப்பருன்னு சொல்ல தோணுது ;)

  ReplyDelete
 3. நன்றி, ஸ்ரீராம், சில இடங்களில் மாத்தி இருக்கேன். சுவாரஸ்யமாக இருந்தது குறித்து மகிழ்ச்சி. ரொம்ப நன்றி மீண்டும்.

  ReplyDelete
 4. வாங்க கோபி, பாராட்டுக்கு ரொம்பவே நன்றி.

  ReplyDelete
 5. நான் வேறே மாதிரி நினைத்தேன்.
  கதையை ஒரு சினிமாவாகுவீர்கள் என்று நினைத்தேன்.
  மொத்த கதையும் ஒரு சினிமாவாக.
  அந்த சினிமாவின் கதாநாயகி வித்யா, கதாநாயகன் ரமேஷ். சுபாவின் கணவனை கடைசிவரை 'வில்லன்,வில்லன்' என்று குறிப்பிடுவதால், சினிமா எஃபெக்ட் நன்றாகவே கிடைத்து இது ஒரு சினிமா என்றே எண்ண வைக்கிறது.

  இந்த சினிமாவை--'பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு' என்கிற சினிமாவை- வேறு இரு தம்பதிகள் தியேட்டரில் பார்க்கிறார்கள். அவர்கள் பெயர் வினோத், ப்ரியா என்று வைத்துக் கொள்வோம்.

  இப்பொழுது சினிமா முடிந்து விட்டது.
  வெள்ளித்திரையில் 'சுபம்' போட்டு வெள்ளைத் திரையாகிறது.

  படம் பார்த்து முடித்த ரசனையுடன் தியேட்டரை விட்டு வெளியே வருகிறார்கள் வினோத்தும்,ப்ரியாவும்

  "படம் சூப்பர்லே?" என்கிறாள்,ப்ரியா.

  வினோத் சிரித்தான்."இப்படிப் போய் முடியும்னு அந்த ரமேஷ் சத்தியமா எதிர்பார்த்திருக்க மாட்டான். ஆனால் அவனும் கதையின் போக்குக்காக இப்படி எல்லாத்துக்கும் வில்லனோட அப்பாவியா ஒத்துழைச்சிருக்க வேண்டாம்".

  "அதான் குழந்தை, அதை உசிரோடக் காப்பாத்தணூம்ன்னு ஒரு பதைபதைப்பை காரணமா வைச்சிருக்காங்களே. உங்க கண்ணுக்குன்னு அலாதியா இப்படி ஒண்ணு ரெண்டு படும்".

  "இன்னொண்ணும் பட்டது," என்றான் வினோத்.

  "என்னவோ?" என்றாள் ப்ரியா.

  "கடைசி வரை சுபாவின் கணவனுக்கு ஒரு பேரைச் சொல்லாம, 'வில்லன், வில்லன்'னு அவனைச் சொல்லி அவன் தான் வில்லங்கற ஒரு எஃபெக்டை பிரமையா நம்ம மனசிலே ஏற்படுத்தறாங்க, பாரு!"

  "எஸ்.. அதான் அவனை வில்லனாகவே நெனைக்கத் தோணித்து" என்று சிரித்தாள் ப்ரியா.

  "இன்னொண்ணையும் சொல்லணும்.
  இது டப்பிங் படம்னு தெரியவே இல்லை. அசலான தமிழ்ப்படம் மாதிரி, வேறு மொழிலே கிடைச்ச திரைக்கதைக்கு தமிழ்லே வசனம் எழுதினவரைச் சொல்லணும். பிரமாதமா எழுதியிருந்தாங்க.."

  "ஆமாங்க.." என்று ப்ரியா சொல்கையில் 'பொட்'டென்று ஒரு மழைத்துளி அவள் புறங்கையில் விழுந்தது.

  ReplyDelete
 6. கடைசி வரை சுபாவின் கணவனுக்கு ஒரு பேரைச் சொல்லாம, 'வில்லன், வில்லன்'னு அவனைச் சொல்லி அவன் தான் வில்லங்கற ஒரு எஃபெக்டை பிரமையா நம்ம மனசிலே ஏற்படுத்தறாங்க, பாரு!"//

  வேணும்னு தான் அவனுக்கு எந்தப் பெயரும் சூட்டலை.


  "இன்னொண்ணையும் சொல்லணும்.
  இது டப்பிங் படம்னு தெரியவே இல்லை. அசலான தமிழ்ப்படம் மாதிரி, வேறு மொழிலே கிடைச்ச திரைக்கதைக்கு தமிழ்லே வசனம் எழுதினவரைச் சொல்லணும். பிரமாதமா எழுதியிருந்தாங்க..//

  இதைவிடப்பெரிய பாராட்டு வேறே எதுவும் வேண்டாம் சார், நன்றி.

  ReplyDelete
 7. கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்! ????????????????????????????

  ReplyDelete
 8. @வீரபத்ரன், கண்ணன் இல்லாமலா, எங்கேயும் போகலை, ரண்சோட்ராய் இடத்தை மாத்திட்டேன், இங்கே போய்ப் பாருங்க. இதிலே விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்திருப்பேன். நன்றி கனிவான விசாரிப்புக்கு.

  கண்ணனுக்காக

  ReplyDelete
 9. ஹரே கிருஷ்ணா
  நல்ல சமுக சிந்தனை உள்ள பகிர்வு ;
  பிறன் மனை நோக்கா பேராண்மை என்ற கருத்தும் நினைவுக்கு வந்தது
  எப்படியோ கதை சுபமாக முடிந்தது
  எனக்கு கொஞ்சம் கூட வித்யா மேலே சந்தேகமே வரவில்லை
  வில்லன் நல்லவனா கெட்டவனா என்று அவனை சுற்றி தான் எனது
  எனது சந்தேகம் இருந்தது. :(

  கத்தியின்றி ரத்தமின்றி ஒரு மர்ம கதையை சுவை குன்றாமல் சொல்லியதற்கு
  பாராட்டுக்கள் கீதாம்மா.
  எப்படி இருப்பின்னும் உங்களுக்கு
  மர்ம கதை மன்னி ;ஆன்மிக கதை அரசி
  என்ற பட்டங்களை சூட்டுவதில் பெருமை கொள்கிறோம் கீதாம்மா !!

  ReplyDelete
 10. வாவ்... என்ன ஒரு சஸ்பென்ஸ்... கதை தான் சஸ்பென்ஸ்னு பாத்தா கதை வந்த விதம் அதை விட பெரிய சஸ்பென்ஸ்ஆ இருக்கே. சூப்பர் மாமி. நல்ல கருத்து சொன்ன கதை. வாழ்கையில் பணம் வேண்டும் தான் ஆனால் வாழ்க்கை பணத்தை கொண்டு மட்டும் இல்லைன்னு அழகா கருத்து சொல்லி இருக்கீங்க... சினிமா கதைனாலும் அந்த கருவை எடுத்துட்டு நம்ம ஊருக்கு தகுந்த மாதிரி அழகா சொல்லி இருக்கீங்க... சீக்கரம் ஒரு சொந்த கதை எதிர் பாக்குறோம்... நன்றிங்க

  ReplyDelete
 11. நன்றி ப்ரியா, பாராட்டுக்களுக்கும், பட்டம் கொடுத்ததுக்கும் நன்றி. கோகுலாஷ்டமி வாழ்த்துகளுக்கும் நன்றி. வீட்டிலே வேலை ஜாஸ்தினாலே இணையப் பக்கம் சரியாவே வர முடியலை, அதான் தாமதமான பதில். மன்னிக்கவும்.

  ReplyDelete
 12. வாங்க ஏடிஎம், சரியாக் கதையின் நாடியைப் பிடிச்சுட்டீங்க.

  //வாழ்கையில் பணம் வேண்டும் தான் ஆனால் வாழ்க்கை பணத்தை கொண்டு மட்டும் இல்லை//

  இதை அநுபவபூர்வமாவே உணர்ந்திருக்கேன், ஆனால் அதை இப்படிச் சொன்னால் இன்னும் நல்லா இருக்கும் இல்லையா?? பலரையும் சென்றடையுமே. நன்றிங்க வரவுக்கும், வாழ்த்துக்கும்.

  ReplyDelete