எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 20, 2010

வந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு!


சந்திர ஒளியிலே மட்டுமே மூலிகைகள் வளரும். நிலவொளி இல்லாமல் மூலிகைகள் வளரவில்லை. வைத்தியர்கள் வைத்தியம் செய்யமுடியவில்லை. உலகிலே எங்கே பார்த்தாலும் நோய், நொடி பரவி, அதைத் தீர்க்க வழி தெரியாமல் தவித்தனர். சூரிய ஒளி எவ்வாறு முக்கியமோ அதே போல் சந்திரனும் முக்கியம் என்பதை அறிந்த அனைவரும் வழக்கம் போல் பிரம்மாவிடம் முதலில் சென்று அவரிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். பிரம்மாவோ மஹா கணபதியின் வாக்குக்கு மறு வாக்கு நான் சொல்ல முடியுமா? நீங்கள் அனைவரும் சாபம் நீங்க அவரையே வழிபடுங்கள். அவர் ஆவிர்ப்பவித்த திதியான சதுர்த்தி திதியில் விரதம் இருந்து விசேஷ வழிபாடுகள் செய்து அவருக்குப் பிடித்த நைவேத்தியங்கள் செய்து, அவர் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். மனம் உருகப் பிரார்த்தித்து உலக க்ஷேமத்துக்காக வேண்டி சந்திரனின் தோற்றமும், ஒளியும் தேவை என்று கேளுங்கள்.” என்று சொல்லிவிடுகின்றார். தேவர்கள் அனைவரும் சமுத்திரத்துக்குள்ளே ஒளிந்து கொண்டிருந்த சந்திரனைத் தேடிக் கண்டுபிடித்து, “நீயும் சேர்ந்து விநாயகரிடம் மன்னிப்புக் கேட்டு வழிபாடுகள் நடத்தினாலொழிய இந்தக் காரியம் பூர்த்தி அடையாது. “ என்று கூப்பிட, ஏற்கெனவே தான் செய்த தப்பை எண்ணி வருந்திய சந்திரனும் உடனே வந்தான்.

சந்திரனும், தேவர்களும் வழிபட்டு முடிக்கும் வேளையில் பிள்ளையார் பிரசன்ன வதனத்துடன் பிரசன்னமாகி, தான் கொடுத்த சாபத்தைத் திரும்ப வாங்க முடியாது என்றும், அதில் கொஞ்சம் மாறுதல் செய்வதாயும் கூறிவிட்டு, சுக்கில பட்ச சதுர்த்தி திதிகளில் உதிக்கும் நாலாம் பிறைச் சந்திரனைப் பார்க்கின்றவர்களுக்கே அபவாதம் ஏற்படும். ஆகவே அன்றைய நாள் மட்டும் யாரும் சந்திரனைப் பார்க்க வேண்டாம். மீறினால் அபவாதம், வீண்பழிக்கு ஆளாவார்கள். இதன் மூலம் யாருக்கும் தன் அழகிலோ, அறிவிலோ கர்வம் ஏற்படாமல் யாரையும் யாரும் புண்படுத்தும் செயல்களையும் செய்யாமல் இருப்பார்கள். ஆகவே நான் சொன்னதில் சிறு மாற்றத்தோடு சந்திரனுக்கு, சாபத்திலிருந்து விடுதலை அளிக்கின்றேன்.” என்று சொல்கின்றார். தவறு செய்தால் தண்டனை அனுபவிக்கவேண்டும் அல்லவா? இது மனிதரானாலும் தேவரானாலும் அனைவருக்கும் பொதுவே என்பதையும் காட்டுகின்றது அல்லவா? அதோடு இல்லாமல் மேலும் சந்திரனுக்கு உதவி செய்யும் வண்ணமாய்ப்பிள்ளையார், பெளர்ணமி கழிந்த கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து பிள்ளையாரைப் பூஜித்து வழிபாடுகள் செய்து அன்று தாமதமாய் வரும் சந்திரனைப் பார்த்துவிட்டு அவனையும் வழிபடுகின்றவர்களுக்கு அனைத்துச் சங்கடங்களையும் நான் போக்குவேன்.” என்று சொல்லி சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்படவும் வழி செய்தார் பிள்ளையார். தேய்பிறையிலே அவனைப் பார்த்தலே நன்மை என்று சொல்லிவிட்டு வளர்பிறையிலே பார்க்கக் கூடாது என்று சொன்னதோடு அல்லாமல், அமாவாசைக்கு அப்புறம் சந்திரன் நன்கு தெரியும் முதல் திதியில் அவனைப் பார்ப்பவர்களுக்கு தோஷங்கள் நிவர்த்தியாகும் என்றும், பெண்களுக்கு விசேஷமாய் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் எனவும் சொல்கின்றார். பிறைச் சந்திரனைச் சிரசிலே தரித்துக் கொண்டிருப்பதில் ஈசன் ஆன சிவபெருமான் தவிர, அம்பாள் ஆன பார்வதி தேவியும், பிள்ளையாருமே ஆகும்.

பின்னர் அந்தப் பிறைச் சந்திரனைத் தன் சிரசிலே சூடிக் கொண்டு “பாலசந்திரன்” ஆகக் காட்சி அளித்தார் பிள்ளையார். இங்கே பால சந்திரன் பற்றிய ஒரு சிறு விளக்கம். பால என்ற இந்தச் சொல்லுக்கு, குழந்தை என்ற அர்த்தம் வராது. BHALA CHANDRAN என்ற உச்சரிப்புடன் கூடிய இந்தச் சொல்லில் பால என்பது, நெற்றியை அல்லது முன்னந்தலையைக் குறிக்கும். முன் நெற்றியில் பிறைச் சந்திரனைத் தரித்தவர் என்ற பொருளிலேயே இது குறிப்பிடப் படுகின்றது. அல்லது PHALA CHANDRAN என்று எடுத்துக் கொண்டால், கேசத்தின் நடுவில் வகிடு எடுத்து இரு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்ட ஒரு பகுதி. சிவபெருமான் தனது சடாமுடியில் இடது பக்கமாய்ச் சாய்த்து வைத்துக் கொண்டிருப்பார் இல்லையா அதைக் குறிப்பது, PHALA என்ற சொல் என்றாலும் பால சந்திரன் Bhala Chandran என்றாலே பிள்ளையார் ஒருத்தர் மட்டுமே.(பாலசந்திரன் என்று சந்திரனின் பால்ய லீலை விசேஷம் என எண்ணிப் பெயர் வைத்துக்கொள்வதாயும், அது தவறு என்றும் பரமாசாரியாள் அவர்கள் சொல்லி இருக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணனும், ஸ்கந்தனுக்கும் மட்டுமே பால்ய லீலா விசேஷங்கள் உண்டு. அதுவும் ஸ்கந்தனுக்கு ஆறே நாட்கள் தாம் பால்ய லீலைகள். இவர்கள் இருவருக்கும் தான் பாலகிருஷ்ணன், பாலஸுப்ரமணியன் என்ற பெயரும் வரும். அதுவே ராமாயணத்தில் ராமருக்குக் கூட பால்யலீலை என எதையும் வால்மீகி சொன்னதில்லை. ராமர் பிறந்ததும் நேரே அவங்க குருகுலம் முடிச்சுக் கல்யாணம் பண்ணறது பத்தித் தான் பேச்சு வரும். பாலசந்திரன் என்ற பெயர் தேய்ந்து வரும் பிறையைக்குறிப்பதால் அந்தப் பெயர் வைப்பது உசிதமில்லை என்று பரமாசாரியாள் சொல்லி இருக்கின்றார்.)

மேற்கண்ட கதையை நாரதர் கிருஷ்ணரிடம் சொல்லிவிட்டு, “கிருஷ்ணா, நீ பிரசேனனோடு காட்டுக்குச் சென்றபோது பாத்ரபத மாதத்து நாலாம்பிறைச் சந்திரனைப் பார்த்துவிட்டாய்.அதன் காரணமாகவே இப்போது இத்தகைய வீண் அபவாதங்களை நீ சுமக்க வேண்டி இருந்தது. என்னதான் அவதாரம் ஆனாலும், மனித உருவில் வந்திருப்பதால் மனிதருக்குள்ள சுகம், துக்கம் இரண்டையும் நீயும் அனுபவித்தே கழிக்கவேண்டும். ஆகையால் இப்போது விநாயகருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து, சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபட்டாயானால் உன்னுடைய தொல்லைகள் குறையும். “ என்று ஆசீர்வதித்துவிட்டுச் செல்கின்றார் நாரதர். கிருஷ்ணரும் அவ்வாறே விநாயகருக்கு சங்கட ஹர சதுர்த்தியில் ஆரம்பித்து விரதம் இருந்து வழிபாடுகள் செய்துவருகின்றார். விநாயகரும் கிருஷ்ணரின் பக்திவழிபாட்டில் மனம் மகிழ்ந்து, கிருஷ்ணர் அபவாதத்தில் இருந்து விலகுவாரென்றும், சுக்கிலபட்ச சதுர்த்தியில் சந்திரனைப் பார்ப்பதால் வரும் அபவாதமும், பழியும், ஒரு மாதம் சென்ற பின்னர் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் விலகும் என்று இருந்ததை உங்களுக்காக மாற்றி, வேறு மாதிரியாகக் கொடுக்கின்றேன். எவரொருவர் இந்த ச்யமந்தகமணியின் கதையைப் படித்து வருகின்றார்களோ, அல்லது கேட்கின்றார்களோ அவர்களுக்கு பாத்ரபத மாதத்து சுக்லபட்ச சதுர்த்திச் சந்திரனைப் பார்த்தால் கூடப் பாவம் வராது. ஆகவே இந்த ச்யமந்தக மணியின் கதையும், அதில் நீங்கள் சம்பந்தப் பட்டிருப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறும். அதே போல உங்கள் பிறந்த திதியான கோகுலாஷ்டமியிலும், வழிபாடுகள் நடத்தியபின்னர் சந்திரனுக்கு அர்க்யம் கொடுக்கவேண்டும், என்றும் இந்த சதுர்த்தி தின வழிபாடுகளில் கிருஷ்ணரும், சந்திரனும் இடம்பெறுவார்கள் என்றும் கூறுகின்றார் பிள்ளையார் கிருஷ்ணரிடம்.

அது மாதிரியே கிருஷ்ணரும் விரதம் இருந்து வழிபாடுகள் செய்ததில் அக்ரூரர் காசியில் இருக்கும் விபரம் தெரிந்து விடுகிறது, காசிநகரின் செழிப்பான தன்மையிலிருந்து. உடனேயே ஆள் அனுப்பி அக்ரூரரை வரவழைக்கின்றார். நடந்தது தெரிந்த அக்ரூரரும், கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டு ச்யமந்தகத்தைக் கிருஷ்ணரிடம் ஒப்படைக்க, கிருஷ்ணரோ அது இருக்கவேண்டிய இடம் அக்ரூரரிடம் தான் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிடுகின்றார் அதை. த்வாரகையும் ச்யமந்தகத்தின் மறு வரவினால் செழிப்படைகின்றது.

6 comments:

 1. "வந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு!"
  மிகவும் நீண்ட தொடர்பதிவு அருமை.

  அறியாத பல கதைகள் அறிந்துகொண்டேன்.மிக்க நன்றி.

  ReplyDelete
 2. வழக்கம் போல அருமையான படங்கள்!
  //சுக்கிலபட்ச சதுர்த்தியில் சந்திரனைப் பார்ப்பதால் வரும் அபவாதமும், பழியும், ஒரு மாதம் சென்ற பின்னர் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் விலகும் //
  45 நாள் கணக்காயிடுத்தோ?

  ReplyDelete
 3. வாங்க மாதேவி, தொடர்ந்து படித்ததற்கு நன்றிம்மா.

  ReplyDelete
 4. திவா?? 45 நாட்கள்??? எப்படி அமாவாசைலே இருந்து பெளர்ணமிக்கு முப்பது நாள் தானே? அப்புறமா சதுர்த்தி நாலாவது நாள். 34 நாட்கள் தானே வரும்???? சுக்ல பக்ஷ சதுர்த்திலே இருந்து கிருஷ்ண பக்ஷ சதுர்த்திக்கு ஒரு மாசம் தானே?? இல்லாட்டி நான் கணக்குப் போடத் தெரியாமல் போடறேனோ??? :((((((

  ReplyDelete
 5. "சுக்கிலபட்ச சதுர்த்தியில் சந்திரனைப் பார்ப்பதால் வரும் அபவாதமும், பழியும், ஒரு மாதம் சென்ற பின்னர் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் விலகும்"
  சுக்ல பக்ஷத்து சதுர்த்திலேந்து ஒருமாசம் சென்ற பின் வரது அடுத்த சுக்கல பக்ஷ சதுர்த்தி!!! - அடுத்துவர க்ரிஷ்ணபக்ஷ சதுர்த்தி 15 நாள்ல - அப்போ 45 நாள் :)) reading between the lines :)))))) சரிதானே Mr திவா?:)))) சும்மா !!:))குறும்பிங்க்!!!

  ReplyDelete
 6. சரிதான், இப்படிக் கூட யோசிச்சிருக்கணுமோ??? அமாவாசை to பெளர்ணமி, பதினைந்து நாட்கள் தானே? அப்போ அடுத்த கிருஷ்ணபக்ஷ சதுர்த்திக்கு 20 நாட்கள் தான் வரும், அதனால் சுக்கில பக்ஷம் to சுக்கில பக்ஷம் தான் எடுத்துண்டிருக்கணும்! :))))))))))))))))))))

  ReplyDelete