துங்காநதிக்கரை, இடம் சிருங்கேரி. சங்கரர் தன் சீடர்களுடன் அங்கே தங்கி , இதுதான் சாரதையைப் பிரதிஷ்டை செய்யச் சரியான இடம் எனத் தேர்வு செய்து தங்கி இருந்த நேரம் அது! சரசவாணி, தான் கொடுத்த வாக்குக்கு ஏற்ப இந்த இடமே சிறந்த இடம், எனத் தேர்ந்தெடுத்துத் தங்கி இருந்த இடம் அது. கலைக்கோயில், கல்விக்கு அதிபதியான கலைவாணி விரும்பித் தங்கிய இடம். அங்கே சாராதாஷ்டகம் பாடிய சங்கரர், தன் சீடர்களுக்குத் தினமும் பாஷ்யமும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். முக்கிய சீடர்கள் பத்மபாதர், சுரேச்வரர், ஹஸ்தாமலகர் ஆகியோர். இவர்களில்பத்மபாதரோ நரசிம்மரின் அருள் பெற்றவர், சுரேச்வரரோ, மண்டனமிஸ்ரராக இருந்து வாதம் புரிந்து, பின்னர் சீடர் ஆனவர். அந்தக் கலைவாணிக்கே கணவனாய் இருந்தவர். ஹஸ்தாமலகரோ, கேட்கவே வேண்டாம். பிறந்தப்போவே பிரம்ம ஞானி. உள்ளங்கை நெல்லிக்கனிபோல் ஞானம் விளங்குகின்றது என ஆச்சாரியர் புரிந்துகொண்டு, தன் சீடனாக்கிக் கொண்டவர். இந்தச் சீடர்கள் அங்கே பாஷ்யம் பாடம் சொல்லிக் கொடுக்கக் காத்திருந்தனர் ஒருநாள்.அனைவருக்கும் அவரவர் வித்தையில் சற்றே கர்வம் இருந்தது. இது ஆச்சாரியரும் புரிந்து கொண்டே இருந்தார். எனினும் தக்க நேரம் வரவேண்டுமல்லவா? காத்திருந்தார். அன்று, நேரமும் வந்தது. அங்கே எடுபிடி வேலைகள் செய்து தரவேண்டி ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் கிரி என்பதாகும். அவனோ ஞானசூன்யம் என்று சொல்லும்படிக்கு, ஏதும் தெரியாதவனாய் இருந்தான். எதையும் ஒரு முறைக்கு இரு முறை சொல்லவேண்டும். "கிரி, பூப்பறித்து வா!" "இதோ குருவே" என்று ஓடுவான். "கிரி, துணிகளை என்ன செய்தாய்?" "துவைத்து உலர்த்தி எடுத்து வந்துவிட்டேன் குருவே!" என்று சொல்வான். இத்தகைய தொண்டுகள் செய்து வந்த அவன் தன் வேலையிலே மட்டுமே கவனமாக இருப்பான்.
இங்கேயே வாதமும், பிரதிவாதமும் நடக்கும். ஒவ்வொருவரும் தாங்கள் கற்றதிலிருந்து தெரிந்து கொண்டவற்றை வைத்து ஒருவருக்கொருவர் வாதம் புரிந்துகொள்வார்கள். கிரியோ?? அருகே கூட வரமாட்டான். நின்று கூடக் கேட்டதில்லை. அவனுக்குப் படிப்பு என்றால் வேப்பங்காய் சாப்பிடுவது போலவோ? என எண்ணிக் கொண்டனர் சீடர்கள். அந்த நாள் இனிய நாள்! யாருக்கு?? கிரிக்கு மட்டுமே! மற்றவர்களுக்கு? இதோ ஆச்சாரியாரின் திருவிளையாடல் காண்போமா??
பாடம் சொல்ல ஆச்சாரியர் உட்கார்ந்தாயிற்று. சீடர்களும் வந்து அமர்ந்தனர். ஆனால் குருவோ பாடத்தை ஆரம்பிக்கவில்லை. நேரமோ போய்க் கொண்டிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் சீடர்கள். ஒவ்வொருவராக மாறி மாறி குரு தன் சீடர்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் தன் மோனநிலைக்குப் போகத் தொடங்க, ஆஹா, மெளனமா?? மெளனமாய் குரு இருந்து உபதேசம் செய்வதும் உண்டுதான், ஆனால் இன்று பாஷ்யம் மிச்சமும் படிக்கவேண்டுமே? என்ன செய்வது? (இப்போன்னா பசங்க ராக்கெட் விட்டிருப்பாங்க, சாக்பீஸ் பறக்கும், ஆசிரியர் மேலே, ஆனால் இவங்க அந்தக் கால சீடர்களாச்சே? :P :P) சற்றே துணிச்சலுடன் பத்மபாதர், "குருவே, இன்று பாடம் இல்லையோ?" என மிக மிகத் தயக்கத்துடன் கேட்க, கண் திறந்தார் குரு. "கிரி எங்கே? அவனும் வரட்டும்!" மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார் சங்கரர். "என்ன கிரியா? " சீடர்கள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். கிரியா? சிருங்ககிரியா? பத்மபாதர் யோசித்துக் கொண்டிருக்கும்போது "என்ன அது? இனிமையான பாடல் ஒன்று கேட்கிறதே? உங்களுக்கெல்லாம் கேட்கிறதோ?" என்றார் பத்மபாதர், தம் நண்பர்களைப் பார்த்து.
அட, நம்ம ஆசிரியருக்கு கிரி என்னமோ சொக்குப் பொடி போட்டுட்டான் போலிருக்கே?? என்ன இது? கிரியின் குரலில் சங்கீதம்? அதுவும் ஏதோ குரு ஸ்துதி போல் அல்லவா இருக்கு? ஆமாம், குரு ஸ்துதியேதான். கிரிதான் பாடிக் கொண்டிருந்தான். இல்லை, இல்லை, சங்கீதம் அவனிடம் கைகட்டி வாய் பொத்தி, அவன் ஆளுகைக்கு உட்பட்டு ஊழியம் செய்து கொண்டிருந்தது. மொழியோ அவன் நாவிலிருந்து புறப்பட தாம் செய்த பாக்கியம் என்றது. ஆம், கிரி தான் குருவை வணங்கிப் பாடிக் கொண்டிருந்தான். அந்த சந்தோஷம் தாங்காமல் மொழி பிரவாகமாய்ப் பொங்கிற்று.
"விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிகோப நிஷத் கதி தார்த்தநிதே
ஹிருதயே கலயே விமலம் சரணம்
பவசங்கர தேசிக மே சரணம்"
என்று தன் ஆசாரியருக்கு தோத்திரம் சொல்லி, உண்மையில் அவர் யார் எனத் தனக்குத் தெரிந்துவிட்டதாயும், சாட்சாத் அந்த ஈசனே இவர் தான், எனவும் பேரொளியான ப்ரப்ரும்மமே ஆசாரியராய் அவதரித்திருக்கின்றது எனவும் சொல்லி வணங்கிப் பாடிக் கொண்டிருந்தான் கிரி. அதைக் கேட்ட மற்றச் சீடர்கள் வெட்கித் தலை குனிய, கிரி தன்னிலை மறந்து பாடிக் கொண்டே குருவின் காலடியில் விழுந்து வணங்கினான். சங்கரர் கண் விழித்தார். பத்மபாதரைப் பார்த்தார்.
"என்ன சிருங்க கிரியா? வெறும் கிரியா?" என வினவினார் சங்கரர் பத்மபாதரிடம். பத்மபாதர் தலை வெட்கத்தால் குனிந்தது. ஆசாரியரின் பிரியமான சீடனாக கிரி மாறினான். தோடகவிருத்தத்தில் அமைந்த அஷ்டகம் அந்த குரு ஸ்துதி என்பதால் அந்த அஷ்டகமும் "தோடகாஷ்டகம்" என்ற பெயரும் பெற்று, அன்று முதல் கிரியும் தோடகர் எனவே அழைக்கப் பட்டார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தோடகர் பற்றி ஆசார்ய ஹ்ருதயத்தில் எழுதினதிலே இருந்து தோடகாஷ்டகம் பற்றியும் எழுதணும்னு நினைச்சுட்டே இருந்தேன். அதுக்கு இப்போத் தான் நேரம் கிடைச்சது.
ஆசார்யர் சங்கரர் கிட்டே பல சீடர்கள் இருந்தனர். அதிலே கிரி என்பவரும் ஒருத்தர். இந்த கிரிக்குக் கொஞ்சம் மெதுவாகப் புரிந்து கொள்ளும் திறன். மற்றச் சீடர்களைப் போல் சுடர் விட்டுப் பிரகாசிக்கவில்லை. ஆனாலும் சங்கரருக்கு அவரிடம் தனியான ப்ரீதி உண்டு. ஒரு நாள் குருவின் துணிகளைத் தோய்த்துக் காய வைத்திருந்த கிரி, மழை வரவே அதை எடுக்கச் சென்றிருந்தார். சீடர்கள் அனைவரும் பாடம் கேட்க அமர்ந்திருந்தனர். ஆனால் சங்கரரோ வாயே திறக்கவில்லை.
மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட சீடர்கள் குருவிடம் பாடம் எடுக்கத் தாமதம் ஆவதைப் பற்றி நினைவு கூர, ஆசாரியரோ கிரியும் வரட்டும் என்கிறார். சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இந்த அசட்டுக்கு என்ன தெரியும்?? ஆசாரியருக்கு அவர்கள் எண்ணம் புரிந்தது. பதில் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது காற்றினிலே வரும் கீதம் போல ஒரு பாடல் கேட்டது. அது கிட்டத் தட்ட குருவுக்கு வந்தனம் செய்யும் பாடலாகவும் இருந்தது. அனைவரும் காது கொடுத்துக் கேட்டனர். கிரி தான் பாடிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும், ஆன அந்தப்பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி(தேசிகன் என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள் சரியா வரும்னு நினைக்கிறேன்.
கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்!
கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். என்னை ஞாநவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.
பவதா ஜனதா ஸுகிதா பவிதா
நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிகமே சரணம்!!
தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!
பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெளதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
தாங்களே அந்த சாட்சாத் பரமேச்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!
ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சனலாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
ஆஹா, தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும் நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் பராதீனனாக, ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!
ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:
அமிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவசங்கர தேசிக மே சரணம்!!
குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!
குருபுங்க புங்கவ கேதந தே
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!!
ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேச்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணம் என அடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!
விகிதா ந மயா விசதைககலா
ந ச கிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!
இந்த கிரி தான் ஜ்யோதிஷ் மடத்தின் பீடாதிபதியாக ஆனார். இங்கே இருந்து பாடம் கேட்டு உபதேசங்கள் வாங்கி துறவறம் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்தவரே திருக்கோயிலூர் தபோவனத்து ஞானானந்த கிரி அவர்களும், அவர் வழி வந்த ஹரிதாஸ்கிரியும் ஆவார்கள்.ஜ்யோதிஷ் மடம் பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ளது. பத்ரிநாதரை நவம்பருக்குப் பின்னர் மீண்டும் கோடை வரும்வரை ஜ்யோதிஷ் மடத்தில் உள்ள கோயிலிலேயே வைத்து வழிபாடுகள் செய்வார்கள். ஜ்யோதிஷ் மடத்தின் ஆசாரியர்களின் பட்டப் பெயரில் கிரி என்ற அடைமொழி இருக்கும். மேலே கண்ட மொழிபெயர்ப்பு நானாக சம்ஸ்கிருத அகராதியின் துணையுடன் செய்தது. தவறுகள் இருந்தால் அதற்கு நானே பொறுப்பு!
பவ ஷங்கர தேசிக மே சரணம் - நேத்து மனதார வேண்டிண்டேன் இன்னிக்கு எழுதிட்டேள் ரொம்ப நன்றி.
ReplyDeleteபவ சங்கர தேசிக மே சரணம்!
ReplyDeleteஞானானந்தகிரி ஸுவாமிகளின் ஆசார்ய பரம்பரை பற்றியும் அறிந்துகொண்டேன். நன்றி அம்மா.
அருமை!ஹரிதாஸ் ஸ்வாமிகள் பஜன்ஸைக் கேட்க வேண்டுமே? சூப்பர்.
ReplyDeleteமிக மிக உன்னத பதிவு இது!
வாங்க ஜெயஸ்ரீ, மனமார வேண்டிக்கிறதுக்குப் பலன் இல்லாமல் போகுமா?? கடவுள் காப்பார், கவலை வேண்டாம், நீங்க அனுப்பினவற்றைப் பார்த்தேன், மனம் வேதனையா இருக்கு! :((((((
ReplyDeleteவாங்க குமரன், வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா. ஞானானந்தர் பற்றித் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்! :)
ReplyDeleteவாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களே, ஹரிதாஸ் பஜனை நிறையக் கேட்டிருக்கிறேன். மதுரையில் மேலாவணி மூலவீதியில் 7-ம் நம்பர் வீடு எங்களோடது. முதல் வீடு இப்போ சங்கீத உலகில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ்.மணி அவர்களின் வீடு, அப்பா பெயர் கோபாலையர். ஜி.எஸ்.மணியின் சகோதரி சந்திரா என் அண்ணாவின் பள்ளித் தோழி, கடைசி சகோதரர் கிருஷ்ணா என் பள்ளித் தோழர். அவங்க வீட்டில் தான் ஹரிதாஸ்கிரி தங்குவார். தினமும் பூஜையும், பாட்டும், பஜனையும் அமர்க்களப் படும். ஆடி வீதி தாங்காது கூட்டம், சொற்பொழிவுகள் செய்வார். ரொம்பக் கொடுத்து வச்சிருந்திருக்கேன் இவை எல்லாம் கிடைக்க. இப்போ நினைவுகள் மட்டுமே மிச்சம்! :(
ReplyDeleteஅன்புடையீர்,
ReplyDeleteமிக்க நன்றி. ஞானானந்தரைப் பற்றி வேறு தகவல்கள் கிடைக்குமா?
N.R.Ranganathan. 9380288980
Editor, Gnana Oli, Thapovanam PO