
பிஸ்கட், பிஸ்கட்
என்ன பிஸ்கட்,
ஜம் பிஸ்கட்
என்ன ஜம்
ராஆஆஜம்
என்ன ரா
கோ ரா
என்ன கோ
டீ கோ
என்ன டீ???
எத்தனை பேருக்கு இது தெரியும்? சின்ன வயசு விளையாட்டு. கடைசியிலே சில பெரியவங்க பசங்க கிட்டே விளையாட்டுக்கு, "பெண்டாட்டி" னு முடிப்பாங்க. ஆனால் உண்மையில் அப்போது போட்டியில் இருந்த லிப்டன் டீயோ, ப்ரூக்பாண்ட் டீயோ தான் விடையாக வரும். தேநீர் குடிப்பது அப்போதெல்லாம் தென்னிந்தியாவில் அதிலும் மதுரையில் பரவலாக்கப் படவில்லை. அதிலும் என்னை மாதிரி குழந்தைங்களுக்கு, (ஹிஹிஹி, சந்தோஷமா இருக்கு) காப்பியே கண்ணிலே காட்ட மாட்டாங்க. பெரியவங்க குடிச்சதும் அந்தக் கடைசிச் சொட்டுக் கிடைக்கும் சில சமயம். நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு அதுக்காகக் காத்திருப்போம். டீ எங்கேருந்து கொடுப்பாங்க? ஆனாலும் அரசல், புரசலா அதைப் பத்திப் பேச்சு இருந்தது. ம்ம்ம்ம்?? நான் ஒண்ணாவது படிக்கும்போது அப்போதிலிருந்து தான் நல்ல நினைவுகள் இருக்கு எனக்கு. அப்படி ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறச்சே, முதல் முதல் தேநீர் சுவைத்த நினைவு பசுமை. தம்பி கைக்குழந்தை. அண்ணாவும் நானும் தான் பள்ளிக்குப் போவோம். அப்போ ஒரு நாள் அன்னிக்கு விடுமுறையா என்னனு நினைவில் இல்லை. தெருவில் தேயிலைப் பாக்கெட்டுகள் விற்றுக்கொண்டு வருவாங்க. கூடவே ஒரு பெண்ணும் வருவாங்க. ஒரு சைகிள் ரிக்ஷா அல்லது கைவண்டியில் பொருட்கள் இருக்கும். வண்டி இழுக்கிறவர் தவிர ஒருத்தர் பொருட்களுக்குப் பாதுகாப்பாய்க் கூடவே வருவார்.
இந்தப் பெண்மணி வீடு வீடாய்ப் போய்த் தேயிலை பற்றிப் பிரசாரம் செய்து, அவங்க சம்மதித்தால் வீட்டுக்குள் போய் சமையலறையிலேயோ அல்லது, அவங்க காட்டும் அடுப்பிலேயோ, தேநீர் தயாரித்துக் கொடுத்துக் குடிக்கச் சொல்லுவாங்க. எப்படி இருக்குனும் கேட்பாங்க. தேயிலைப் பாக்கெட் வாங்கினால் இலவசம் எல்லாம் கொடுத்த நினைப்பு இல்லை. ஒரு பாக்கெட் வாங்கினாலே ஆறு மாசத்துக்கு வரும்னு நினைக்கிறேன். அப்போதெல்லாம் ப்ரூக் பாண்ட் இரட்டைக்குருவி போட்ட தேயிலைத் தூள் தான் ரொம்பவே பிரபலம். எங்க வீட்டுக்கும் அப்படி ஒரு பெண்மணி வந்து அப்பாவும், அம்மாவும் அநுமதித்ததும் உள்ளே வந்து அடுப்பு மூட்டி, (விறகு அடுப்பு அப்போது) தேநீர் தயாரித்துக் கொடுத்தாங்க. போட்டி போட்டுகொண்டு பாயாசம் குடிக்கிறாப் போல் குடிச்சோம். தம்பிக்குக் கிடைக்கலை. ரொம்பச் சின்னக் குழந்தை! :)
இந்தத் தேயிலை இந்தியாவுக்கு எப்போ வந்ததுனு ஒரு ஆராய்ச்சி பண்ணினால் ராமாயண காலத்திலேயே அநுமன் இமயமலைப் பகுதியிலே தூக்கிட்டு வந்த சஞ்சீவனியே இதுதான்னு சொல்றாங்க. ஆனால் விஞ்ஞான நிரூபணங்கள் இரண்டும் வேறுனு சொல்லுதாம். என்னோட ஆராய்ச்சிக் (:P) குறிப்புகள் கீழே!

ராமாயணத்திலேயே தேநீர் குடிப்பது பற்றிச் சொல்லி இருக்கிறதாய் விக்கி பீடியா கூறுகிறது. புராதன இந்தியாவின் அருணாசலப் பிரதேச மக்களும், பர்மிய மக்களும் பனிரண்டாம் நூற்றாண்டிலிருந்தே தேநீர் அருந்தியதாய்ச் சொல்கின்றனர். ராமாயணத்தில் சஞ்சீவனி என்று கூறி இருப்பது தேயிலைச் செடியைத் தான் என்றும் ஒரு கூற்று இருக்கிறது. ஆனால் சஞ்சீவனி வேறு, தேயிலைச் செடி வேறு என விஞ்ஞான உண்மைகள் கூறுகின்றன. ஆங்கிலேயரால் தேயிலை வளர்ப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பரவலாக்கப் பட்டிருக்கிறது. ஆங்கிலேயர் அறிமுகம் செய்த இந்தியத் தேயிலை இன்று உலகத்தரத்தில் முதன்மையான இடத்திலும் உள்ளது என்பதையும் பெருமையுடன் சொல்லலாம். ரயில்வே துறைக்குப் பின்னர் இந்தியத் தேயிலைத் தொழிலில் தான் அதிக அளவு தொழிலாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இந்தியத் தேயிலையில் அஸ்ஸாம், டார்ஜிலிங் ஆகிய இடங்களில் உற்பத்தி செய்யப் படும் தேயிலை மிகவும் பிரபலம் என்பதோடு அதன் சுவையும் பிரமாதம். இந்தியாவின் உற்பத்தியில் 75 சதவீதம் இந்திய மக்களாலேயே ஸ்வீகரிக்கப் படுகிறது.

கடைசியா ஒரு வார்த்தை:தேநீர் குடிக்காமல் இருந்தால் மத்தியானம் தலைவலி வரும்னு விடாமல் குடிச்சுட்டு இருந்த நான் தேநீரை நிறுத்திச் சில வருஷங்கள் ஆகின்றன. எங்கேயானும் போனால் அங்கே கொடுத்தால் மறுப்புச் சொல்லாமல் குடிச்சுப்பேன். டீ போட்டுத் தரவானு கேட்டால் சரினுடுவேன். ஆனால் இப்போல்லாம் மத்தியானங்களில் சில சமயம்/ ஏன் பலசமயங்களும் ஒண்ணுமே குடிக்கிறதில்லை. அலைச்சல் இருந்தால் அப்போது வெறும் பால் சர்க்கரை தவிர்த்து. காலைக் காஃபியையும் நிறுத்தணும்.
டிஸ்கி: தலைப்பு இப்படி இருக்கணும்னு தான் கொடுத்தேன். :D