எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 13, 2011

உள்ளம் என்னும் கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா!

அன்பு என்னும் பண்பு மட்டும் என்றும் ஒரே தன்மையாகவே இருந்து வருவதாகும். எப்போதும் மனதுக்கு இன்பம் அளிக்கும். மற்றக் கஷ்டங்களை எல்லாம் துச்சமாய் நினைக்கவைக்கும். சகித்துக்கொள்ளும் வல்லமையைத் தரும். அன்பு மனிதவாழ்க்கையின் ஒரு பொக்கிஷமாகும். அந்த பொக்கிஷத்தை அடைந்தவர்களுக்கு மற்றக் கஷ்டங்கள் துச்சமாயும், தூசியாகவும் தெரியும். ஆகவே இந்த அன்பு என்னும் வற்றாத ஜீவநதியைப் பொங்கிப் பெருகி ஓட வைக்கும் ஓர் நாளே நாளைய தினம் பெப்ரவரி பதினான்காம் தேதி. இது காதலர்க்கு மட்டும் உரியதினமன்று. காதல் என்றாலே அன்பு என்றே அர்த்தம் கொள்ளவேண்டும். காதல் யாரிடம் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். என்ன?? ஆச்சரியமாய் இருக்கிறதா? உண்மை அதுதான். காதல் என்ற வார்த்தையின் அர்த்தம் இன்றைய தினங்களில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படும் தனிப்பட்ட அன்பை, சிநேகிதத்தைக் குறித்தாலும், இதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னர் திருஞானசம்பந்தர், ஈசனிடம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி இருப்பதை அறிவோமல்லவா?

""காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. ""

ஆண்டாளும் ரங்கநாதர் மேல் காதல்தான் கொண்டாள். அவள் பெண் என்பதால் அவளுடைய காதலில் சற்று வேறுபாடுகள் கூறப்பட்டாலும் இவ்வுலக வாழ்க்கையை அவள் விரும்பவில்லை என்பது தெளிவு. இறைவனிடம் கொண்ட மாறா பக்தியைத் தான் காதல் என்றும் கூறி வந்திருக்கின்றனர். அதே சமயம் கணவன், மனைவி மேல் கொண்ட அன்பு, உடன்பிறந்தோர் சக உடன்பிறந்தோரிடம் கொள்ளும் அன்பு, மாணவன் ஆசிரியருக்குக் காட்டும் மரியாதை கலந்த அன்பு, நண்பர்களின் அன்பு, சிநேகிதிகளின் அன்பு, வீட்டுப் பெரிய்வர்களிடம் காட்டும் அன்பு, சக மனிதர்களிடம் காட்டும் மனித நேயம் கலந்த அன்பு, என அன்பை வெளிப்படுத்தும் ஓர் தினமே நாளைய தினம்.

வெளிநாட்டில் இருந்து எல்லாக் கலாசாரங்களையும் அப்படியே பின்பற்றும் நாம் அவர்களின் இந்த உயரிய பண்பைப் பின்பற்றாமல் வெறும் காதலர்களுக்கு மட்டுமே என ஊடகங்களால் கற்பிக்கப் பட்டு, வணிகர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டு நாளைய தினம் ரோஜாப்பூக்களின் விலை எக்கச்சக்கமாய் இருக்கும், பரிசுப் பொருட்கள், மழையெனப் பொழியும், எங்கே சென்றாலும் இளம் காதலர்கள் ஜோடியாகச் செல்வார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களில் நிரம்பிவழியும் வண்ணம் போதையுடன் கூடிய டிஸ்கோ பாடல்களும், ஆடல்களுமாக அமர்க்களப்படும். ஒரு வாரமாக எஸ்.எம்.எஸ்ஸில் நாளைய தினம் சலுகைகள் எதுவும் கிடையாது என்ற அறிவிப்பு வந்த வண்ணமாக இருக்கிறது. அப்படி என்றால் எத்தனை எஸ்.எம்.எஸ்.கள் போகும் என நினைக்கவே அச்சமாய் இருக்கிறது.

இது நம்முடைய கலாசாரமே அல்ல. என்றாலும் பின்பற்றத் தொடங்கியவர்களை நிறுத்தச் சொல்வதும் என்னுடைய வேலை அன்று. நாளை உங்கள் காதலியிடமோ, காதலரிடமோ காட்டப் போகும் அன்பை அதை வெளிப்படுத்தும் முன்னர் முதலில் உங்கள் குடும்ப அங்கத்தினரிடம் காட்டுங்கள். உங்கள் தந்தையை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என அவருக்கு வெளிப்படுத்துங்கள். தாய்க்கு நாளைய தினம் உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். சகோதரனோ, சகோதரியோ இருந்தால் அல்லது அக்கம்பக்கத்தினருக்கு நாளைய தினம் சிறு உதவி ஏதாவது செய்வது என முடிவு செய்து கொள்ளுங்கள். அவர்களிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்துவது இப்படித்தான். பேருந்திலோ, ஆட்டோவிலோ பயணிக்க நேர்ந்தால் அதன் நடத்துநரிடமோ, ஓட்டுநரிடமோ நன்றி கூறி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

வெகு தூரப் பயணத்தின் முடிவில் நாங்கள் ஓட்டுநரிடமோ, நடத்துநரிடமோ நன்றி கூறி விடைபெறுவதை வழக்கமாய் வைத்திருக்கிறோம். ஏனெனில் நம்முடைய சாலைகளின் தரத்தைப் பொறுத்துக்கொண்டு அவர்கள் ஓட்டிக்கொண்டும் பேருந்தை நடத்திக்கொண்டும் நாம் செல்லவேண்டிய இடத்துக்குக் கூட்டிச் செல்லுவதில் அவர்கள் உயிரையும் சேர்த்துப் பணயம் வைக்கின்றனர். இங்கே மாநரகப் பேருந்தில் மட்டும் என்ன வாழ்ந்தது? அது இன்னும் கொடுமை! அவர்களும் மனிதர்கள் தாமே? ஆகவே நம் கண்ணில் பட்ட தெரிந்த நபர்களுக்கு எல்லாம் நன்றியைத் தெரிவிக்கலாம். நம் அன்பை இப்படி வெளிப்படுத்தலாம். அவர்கள் மனம் மகிழ்வது உங்கள் மனம் மட்டுமல்ல வயிறும் நிறைந்திருக்கும், முயன்று பாருங்கள். பெரிய விருந்தே சாப்பிட்டாற் போன்ற உணர்வு வரும். வங்கிக்குப் போனால் வங்கி ஊழியர், காய்கறி வாங்கும் கீரைக்காரி, பால் ஊற்றும் பால்காரர் என நாம் நேசிக்கவும் அன்பு காட்டவும் இந்த உலகமே நமக்காகக் காத்திருக்கிறது. மறவாதீர்கள்.

சொல்ல மறந்துட்டேனே, வெளிநாடுகளில் இது அன்பைக் காட்டும் ஒரு தினமே. எங்கே சென்றாலும் தெரிந்தவரோ, தெரியாதவரோ நாளைய தினம் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்திக்கொள்ளுவார்கள். குழந்தைகள் அவர்கள் ஆசிரியர், சக மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் என அனைவருக்கும் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்துக் கொடுப்பார்கள். வாழ்த்து அட்டையைக்கைகளால் தயாரித்துக் கொடுப்பது அங்கே மிகவும் பெருமையான ஒன்றாகும். எங்கள் அப்பு கூட இதற்கென ஒரு பேப்பர் தயார் செய்து அதிலே அதற்குத் தெரிந்தவரையிலும் வண்ணம் அடித்து அவங்க வகுப்பு ஆசிரியருக்குக் கொடுக்கப்போகிறது. அப்புவின் வயது மூன்று. ஆக இது காதலருக்கு மட்டுமான தினம் அல்ல என்பது புரிந்ததா? என்னையும் கூப்பிட்டு நாளைக்கு அப்பு வாழ்த்துச் சொல்லும்! என்னிடம் உள்ள அன்பை அது வாழ்த்துச் சொல்லுவதன் மூலம் வெளிப்படுத்தும். ஆகவே நாளைய தினம் அனைவரும் ஒருவருக்கொருவர் தம் தம் சகோதர அன்பை வெளிப்படுத்திக்கொள்வோம்.

29 comments:

  1. ரொம்பத் தெளிவா சொல்லி இருக்கீங்க. எத்தனை பேருக்கு புரியப் போதோ தெரியலை :(

    ReplyDelete
  2. வாங்க எல்கே, ஒவ்வொரு வருஷம் சொல்ல நினைச்சுப்பேன், சொல்ல முடியலை, இந்த வருஷம் சொல்லியாச்சு, ஊதற சங்கை ஊதிடுவோம்! :)))))

    ReplyDelete
  3. நம் கடமையை செய்வோம்

    ReplyDelete
  4. அதேதான். அன்பு மட்டும் எல்லா நாட்களிலும் எல்லோரிடமும் பெருகி இருந்தால் வாழ்வில் நிம்மதிக்குக் குறைவேது. நல்லதொரு பதிவு கீதா.

    ReplyDelete
  5. அன்புக்கு நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

    அனைவர் உள்ளங்களிலும் அன்பு நிறையட்டும்.

    ReplyDelete
  6. மிக நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

    அன்பே சிவம்.

    அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

    அன்பும் சிவமும் இரண்டு என்பார் அறிவிலார்.

    நன்றி கீதாஜீ.

    ReplyDelete
  7. valentines day என்பது அன்பானவர்களுக்கு ஒதுக்க வேண்டிய நாள் தான். தற்போதைய மீடியாக்கள் இதை காதல், காதலர்கள் என்று youth oriented ஆகா ஆகி விட்டார்கள். நீங்க சொன்ன மாதிரி கூட இருக்கற எல்லார் கிட்டயும் நாளை ஒரு நாளாவது அன்பா நடந்துப்போம்.

    ReplyDelete
  8. நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள் அம்மா. நன்றி.

    ReplyDelete
  9. வாங்க வல்லி, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க! வாழ்த்தினதுக்கு நன்றி.

    ReplyDelete
  10. வாங்க ராம்ஜி யாஹூ, ரொம்ப நாளாக் காணோமே? நன்றிப்பா.

    ReplyDelete
  11. வாங்க மாதேவி, நன்றிம்மா.

    ReplyDelete
  12. அஷ்வின் ஜி, அன்பே சிவம், சிவமே அன்பு. நன்றிங்க.

    ReplyDelete
  13. வாங்க ஸ்ரீநிவாசகோபாலன், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரொம்பப்பெரிய பேரு! ஸ்ரீநினு சொல்லிக்கறேனே? சரியா? நீங்க சொல்லி இருப்பதுபோல் அனைவரும் சக மனிதர்களிடம் அன்பைக் காட்டப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  14. வாங்க கவிநயா, உங்க பரபரப்பான அன்றாட நிகழ்வுகளுக்கிடையே அவ்வப்போது இங்கேயும் எட்டிப் பார்ப்பதுக்கு மகிழ்ச்சி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான வாழ்த்துகள்,ஆசிகள்.

    ReplyDelete
  15. Happy valentines day! Maami. ;P
    anbai therivikka koorineergalae, so saying like this. :D
    You have said very beautifully about "LOVE".
    Now a days young couple think about their love only on this day! After this day they are very busy to think about it, and usually they fight a lot. When are they going to understand? as you have said correctly "ஊதற சங்கை ஊதிடுவோம்!".:))

    ReplyDelete
  16. வாங்க எஸ்கேஎம், கலிபோர்னியாவிலே இருந்த உங்களுக்குத் தெரியாதா என்ன? வாலண்டின்ஸ் தினம் பற்றி! அதனாலே உங்க வாழ்த்தை ஏத்துக்கறோம்! :D

    ReplyDelete
  17. காதல் ஒரு வகை பக்தினு எங்கயோ படிச்சது நினைவு வந்தது உங்க பதிவ பாத்து... ரெம்ப அழகா சொல்லி இருக்கீங்க மாமி...

    இங்க வந்த புதுசுல சின்ன சின்ன பிள்ளைகள் கூட இந்த நாளை பத்தி பேசுறத பாத்து நான் டென்ஷன் ஆகா என் தோழி சொன்ன விஷயம் "இது காதலர் தினம் மட்டுமில்ல, அன்பை பரிமாறும் தினம் யாரும் யாரோடும் வயது மொழி எதிர்பார்ப்பு இன்றி" என கூறினார்... ரெம்ப நல்ல விஷயம்...

    ReplyDelete
  18. மாமி
    தாராளமா நீங்க என்ன ஸ்ரீ னே கூப்பிடலாம். இங்க எல்லாரும் என்னை அப்படித்தானே கூப்பிடுவா.

    ReplyDelete
  19. தற்போது பார்த்தேன் .,இன்று உங்களுடைய ப்ளாக் சரியாகி விட்டது கீதாம்மா
    எல்லாம் ஈசனின் திருவிளையாடல் தான் !
    உங்களுக்கும் எங்களுடைய நன்றிகள் மற்றும் அன்பு தின வாழ்த்துக்கள் கீதாம்மா
    ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்ன மாதிரி கருத்துகளை சொன்னதற்கு கூடுதல் நன்றிகள்

    ReplyDelete
  20. @ஏடிஎம், காதல் என்பது வெறும் உடல் கவர்ச்சியாக, இனக்கவர்ச்சியாகச் சித்திரிக்கப் பட்டுவிட்டது துரதிர்ஷ்டமான ஒன்று, நாற்றம் என்ற அழகான தமிழ்ச்சொல்லை இன்றைய நாட்களில் துர்நாற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். அது போலத் தான் இதுவும்! :(

    நன்றி ஸ்ரீநி! :))))))

    வாங்க ப்ரியா, உங்க போஸ்டைப் படிச்சுட்டு கண்ணீரே வந்தது. ஆனாலும் இவ்வளவு அன்பைக் காட்டறீங்களே, இதுக்கு எனக்குக் கைம்மாறு கூட செய்யத் தெரியலை. தெரியவும் தெரியாது. நன்றினு ஒரு வார்த்தை சொல்லி உடனே மறந்தும் போக இஷ்டம் இல்லை. என்றென்றும் எனக்காகக் காத்திருக்கும் அன்பான மனிதர்கள் இருப்பது எவ்வளவு பலம் என்பதை நன்கு உணர்ந்தும் உள்ளேன்.

    நேத்திக்கு மட்டும் இல்லை, சில நாட்களாகவே எனக்கும் பதிவுகள் திறப்பதிலும், மெயில் திறப்பதிலும் பிரச்னைதான். சீக்கிரம் சரியாகும்னு நம்பறேன்.

    ReplyDelete
  21. நன்றி கீதாம்மா .,இதை படித்த போது எனது கண்களும் பனித்தன ...............
    உங்க பாசத்துக்கு நன்றி .
    கைம்மாறு என்று பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் நீங்க சொல்லும் போது
    சங்கடமாகவும் சற்று வருத்தமாகவும் இருக்குங்க கீதாம்மா
    தங்களை போன்ற சான்றோர்களின் அறிமுகம் கிடைக்கவும் தங்களில்
    பதிவுகளை படிக்கும் நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் .,
    தங்களை பற்றிய பதிவை எனது கணவரிடம் காண்பித்த போது
    அவர் கூட பாராட்டி சொன்னார்
    அவரின் வாழ்த்துக்களையும் உங்கள் இருவருக்கும் தெரிவிக்க சொன்னார்
    கீதாம்மா
    உன்ர கிண்டல் கேலி எல்லாம் அவங்க கிட்டே வச்சுக்காதே என்று அறிவுரையும்
    தான் சொன்னார் ஹி ஹீ

    ReplyDelete
  22. வேலன்டைன்ஸ் டே காதலர் தினமா மாறின கதை எனக்கும் குழப்பம் தான். அன்பை அடிப்படையா வச்சு எழுதி சரியா இதுக்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கீங்க. (பொதுஜன பத்திரிகைகளில் வரவேண்டிய கட்டுரையோ?)

    சின்ன வயசுல கிறுஸ்தவ கான்வென்டுல படிச்சப்ப இது செயின்ட் வேலன்டைன்ஸ் டேயாகத் தான் இருந்தது. அன்னிக்கு மட்டும் மதர் சுப்ரீம் கிட்டேயிருந்து எங்களுக்கு கேக் கிடைக்கும் (சகிக்காம முட்டை நாத்தம் அடிக்கும் - இருந்தாலும் 'சுத்திகரிக்கப்பட்ட அன்பினால் ஆன சுவிசேச நிவேதனம்' என்று எல்லாரையும் ஒருத்தருக்கொருத்தர் கொடுக்கச் சொல்வாங்க.)

    திடீர்னு இருபத்தஞ்சு வருஷம் கழிச்சு இந்தியால காதலர் தினம் இத்தனை பிரபலமா இருக்குறத பாக்குறப்ப ஆச்சரியமா இருக்கு.

    டிஸ்கோ நம்ம கலாசாரமில்லைனா டேஸ்மாக் நம்ம கலாசாரமானு கேக்கறாங்க மக்கள் (அடிக்க வரதுக்கு முன்னாலே அம்பேல் :)

    ReplyDelete
  23. @ப்ரியா, மீள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றிம்மா. சில நாட்களாய் இணையம் சரிவர வராததால் பின்னூட்டத்திற்கு பதில் கொடுத்தாலும், பின்னூட்டம் கொடுத்தாலும் காக்காய் தூக்கிண்டு போயிடுது! :P பதிவும் போடமுடியலை! :( பார்க்கலாம், வாடிக்கையாளர் சேவை மையத்துக்குச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயாச்சு! :(

    ReplyDelete
  24. வாங்க அப்பாதுரை, ஒரு நல்ல எண்ணத்தோடு துவக்கப்பட்டது இந்தியாவில் தான் இப்படி மாறிப் போச்சு! மேல்நாடுகளில் இன்றளவும் இதன் முக்கியத்துவம் இவ்வளவே. வீடு சுத்தம் செய்ய வரும் பணிப்பெண்களில் இருந்து லானில் புற்களை வெட்ட வரும் தொழிலாளர் வரை அனைவரும் இந்த வாலண்டைன்ஸ் தின வாழ்த்துகளை நம்மோடு பரிமாறிக்கொள்வார்கள்.

    வேறு யாரேனும் சொல்லாமல் இருக்கையில் நாமாவது சொல்லவேண்டாமா? பூனைக்கு யார் தான் மணி கட்டுவது? மெல்ல மெல்லக் கேட்கும் இந்த ஒலி நாளாவட்டத்தில் பெருத்த ஓசையாக மாறும் என்று எதிர்பார்க்கிறேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  25. நெட் கார்டு வாங்கிகோங்க என்று எத்தனை தடவை தான் சொல்லறது என்பதை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  26. என்ன ஆச்சு கீதாம்மா

    ReplyDelete
  27. இன்னுமா இணையம் சரியாக வில்லை கீதாம்மா ?

    ReplyDelete
  28. ப்ரியா, மெயிலறேன் அப்புறமா. :D

    ReplyDelete