எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 28, 2011

நலம் தரும் நவராத்திரி வழிபாடு! செளந்தர்ய லஹரி 4

இன்றைய அலங்காரம் ராஜராஜேஸ்வரி.

நிவேதனம் காலை: சர்க்கரைப் பொங்கல்,

மாலை: பயறுச்சுண்டல்.

செய்முறை: எந்தச் சுண்டலுக்கானாலும் முதலில் நன்கு ஊற வைத்துவிடுங்கள். இல்லை எனில் குழைய வேகாது. ஒவ்வொருத்தர் பச்சைப்பயறைச் சும்மா வெறும் வாணலியில் வறுத்துவிட்டுக் குக்கரில் வேக வைத்தால் போதுமானது என்கின்றனர். பயறு வகைகள் சில சமயம் கல் போல இருக்கும். அரித்தால் அடியில் தங்கும். ஆகவே பயறு வேக வைக்கையில் அம்முறையில் பயறு அவ்வளவு நன்கு வேகாது. மேலும் வெல்லம் போட்டுச் செய்கையில் வெல்லத்தைச் சேர்த்ததும் விறைத்துக்கொண்டு காணப்படும். காரம் போட்டுச் செய்தாலும் கொஞ்சம் நறுக் நறுக்கென்று தான் இருக்கும். சுண்டல் குழைய வேண்டும் என்றால் முதல்நாளே பயறாகவே இருந்தாலும் ஊற வைக்கவும்.

ஊற வைத்த பயறை நேரடியாகவே வேக வைக்கலாம். குக்கரில் வைத்தால் மாவு போல் ஆகிவிடக் கூடிய வாய்ப்பு உண்டு. வேக வைத்த பயறில் வெல்லம் போட்டுச் செய்வதானால் ஒரு சிட்டிகை மட்டும் உப்புச் சேர்த்தால் போதும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்துக்கொண்டு, வேக வைத்த பயறு, கால் கிலோ எனில் 50 கிராம் வெல்லம் பொடி செய்து சேர்க்கவும். வெல்லத்தோடு பயறு நன்கு கலந்து வெல்ல வாசனை போனதும் தேங்காய்த் துருவல் சேர்த்து ஏலப்பொடி சேர்க்கவும்.

காரச் சுண்டல்: பயறு வேக வைக்கையிலேயே தேவையான உப்பைச் சேர்க்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை தாளித்துப் பயறைச் சேர்க்கவும். தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடியைச் சேர்க்கவும். அல்லது மி.வத்தல், தனியாவை எண்ணெய் கொஞ்சமாக ஊற்றிக்கொண்டு வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். அந்தப் பொடியைப் போடலாம். நன்கு கலந்ததும், தேங்காய் துருவல் சேர்க்கவும்.
****************************************************************************************
பல நாட்களாய் எழுதணும்னு நினைத்த ஒரு விஷயம் தான் செளந்தர்ய லஹரி. ஆனால் நான் அதை ஆழ்ந்து படிச்சதில்லை. ஆகவே தயக்கம் இருந்தது. இப்போ ஒரு குழும விவாதத்தில் திவாகர் திராவிட சிசு பற்றிக் கேட்க, நான் செளந்தர்ய லஹரியை எடுத்துக்காட்ட, திவாகர் அதை விபரமாக எழுதச் சொன்னார். அந்த ஒரு பதிவு தான், அத்தோடு முடிந்தது என நினைத்திருந்த சமயம் அதைப் படித்த பின்னர் ஜெயஸ்ரீ இந்த நவராத்திரிக்கா என்று கேட்க, அட, இது தோன்றவே இல்லையே என நினைத்தேன். முடிந்த வரை பார்க்கலாம் என்று எழுத ஆரம்பித்திருக்கிறேன். தீராத மன வேதனையும், அதனால் ஏற்படும் உடல் கோளாறுகளிலும் கவனம் செல்லாமல், மனம் திசை திருப்பப்பட்டு ஆறுதல் ஏற்படும் என்பதும் இன்னொரு காரணம். ஆக என் சொந்த லாபத்திற்காக நான் செய்யும் இந்த வேலையைப் புகழ்ந்து பின்னூட்டம் போடுவது சரியாய் இருக்காது. அம்பாளையே போற்றி வழிபடுவோம். அம்பாளே கதி என அவள் பாதத்தை இறுகப் பிடித்துக்கொண்டு ஆரம்பிக்கிறேன். அனைவருக்கும் நன்றி.
*************************************************************************************

நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. பெண்ணைத் தெய்வமாய்ப் போற்றும் நாடு நம் நாடு. பெண்ணுரிமை பேசுவோர் இதை அடிமைத் தனம் எனக் கூறினாலும் இன்றளவும் அது மாறவில்லை என்றே சொல்லலாம். சக்தி உபாசகன் ஆன பாரதியும் சக்தி வழிபாட்டிலும், காளியை வணங்குவதிலும் காட்டிய ஈடுபாடு நாம் அறிவோம். காளியே அனைத்திலும் நிலைத்து நின்று இருக்கிறாள் என்பதை அவன்

யாதுமாகி நின்றாய் காளி,
எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-காளி
தெய்வ லீலையன்றோ"

என்ற பாடலின் மூலம் காட்டுகிறான். மேலும் பாடலின் கடைசியில் காளியைச் சரணடைந்து அன்பு செலுத்தினால் அவளும் அனைத்தையும் தருகிறாள் என்றும் உறுதிபடச் சொல்கின்றான்.

அன்பு தந்துவிட்டாய்-காளி-காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்பம் நீக்கிவிட்டாய்- காளி
துயரமழித்து விட்டாய்!

என்று காளியைச் சரணடைந்தால் அனைத்துத் துன்பங்களும் நீங்கும் எனக் கூறுகிறான். இது உண்மை என்பதையும் அறிவோமல்லவா! அன்னையின் பாதங்களைச் சரணடைந்தால் அவளே கதி என இறுகப் பற்றிக்கொண்டு விட்டால் அந்தக் குழந்தையை அவள் எட்டியா உதைப்பாள். இந்த எண்ணங்களோடு தெய்வத்தின் குரல் புத்தகத்தில் செளந்தர்ய லஹரி விளக்கங்களைப் படிக்க ஆரம்பித்தேன்..

எல்லாவற்றுக்கும் மேலே ஆச்சரியவசமாக நான் பிரித்த பக்கத்திலும் அம்பாளின் காலடிகளைப் பிடித்துக்கொண்டு கதறுவதையே பரமாசாரியாரும் கூறி உள்ளார். இந்த மனம் பல விதங்களிலும் வெட்கம் அடைந்து, பலராலும் துக்கம் அடைந்து, அதனால் அவமானம் அடைந்து அழுகிறது. துடிக்கிறது. ஆனால் நாம் அப்போதாவது அம்பாளைச் சரணடைய வேண்டாமா! மாட்டோம். உலகாயுத விஷயங்களில் மூழ்கி, அதிலேயே கவனமாக நமக்கு ஏன் இப்படி ஒரு கதி ஏற்பட்டது என்றெல்லாம் யோசிப்போம். அதன் பின்னராவது புத்தி வருமா என்றால் வராது. இவ்வுலகத்தை நாமா உண்டாக்கினோம்? எல்லாமே நம்மால் தான் என்பது போல் ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு மேலும் மேலும் மனம் புழுங்குவோம். கோபம், ஆத்திரம், அசூயை, எரிச்சல் எல்லாம் ஏற்படும். கொஞ்சம் யோசித்தால், சூரிய, சந்திரரை, மலையை, மரம், செடிகொடிகளை, புழுக்களை, பூச்சிகளை, விலங்குகளை, பறவைகளை எது நம்மால் ஏற்பட்டது! எதுவும் இல்லை. நாமே அவள் சிருஷ்டி. நம் மனத்தை நம்மால் அடக்க முடியாமல் தவிக்கையில் இது நம்மால் இயலக்கூடிய ஒன்றல்ல, இதுவும் அம்பிகையின் மாயை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை அடக்க வல்லது தேவியின் திருநாமமே என்பதைப் புரிந்து கொண்டால் அவளே கதி எனச் சரணடைந்தால் அப்படி நாம் சரணடைவதும் அவள் அனுகிரஹத்தாலேயே என்பதைப் புரிந்து கொண்டால் மனம் என்பது ஒன்று இருப்பதே தெரியாமல் உடல் இருப்பதும் தெரியாமல் பக்திப் பரவசத்தில் மூழ்கி விடுவோம். ஆனால் எங்கே! அப்போதும் நாம் நம்மைக் குறித்தே தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் அம்பாள் அனைத்தையும் மன்னிப்பாள். தாய் எங்காவது தன் குழந்தையிடம் கோபமாய் நடந்து கொள்வாளா?? அப்படிக் கோபமாய் இருந்தால் அது நம் நன்மைக்கே தான் இருக்குமே அன்றி, சும்மாவானும் அம்மா கோபிக்க மாட்டாள் இல்லையா?? அதே போல் தான் அம்பாள் நமக்குத் தரும் கஷ்ட, நஷ்டங்கள் அனைத்துமே நம் நன்மைக்காகவே. நம்மைப் புடம் போட்டு நம் மனதைத் திடம் ஆக்கித் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தானும் ஆனந்தித்து, நம்மையும் ஆனந்தமாக இருக்கப் பண்ணுவதற்காகவே அனைத்தும் நடக்கின்றன. அன்னையைத் தொடர்ந்து வழிபடுவோர் நாளடைவில் தாம் அவளது குழந்தை என்ற மனோபாவம் தோன்ற ஆரம்பித்து ஒரு குழந்தையைப் போலவே நிர்மலமான மனத்தைப்பெறுவார்கள். குழந்தையாகவே மாறி, தேவி ஒருத்தியே அனைவருக்கும் தாய் என்ற எண்ணம் மேலிட்டு இருக்கும். பார்க்கும் அனைத்துப் பெண்களையும் அன்னை வடிவிலேயே பார்க்க ஆரம்பிப்பார்கள்.

நம் நாட்டில் தெய்வ வழிபாடு, அதிலும் பெண் தெய்வ வழிபாடு தொன்று தொட்டு, எப்போது எனத் தெரியாத காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பழையோள் எனவும், ஐயை எனவும் போற்றித் துதித்து வந்திருக்கின்றனர். நம் தமிழ் மூதாட்டியான ஒளவையோ “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்கிறாள். மாணிக்கவாசகரோ தம் சிவ புராணத்தில், “தாயிற்சிறந்த தயாவான தத்துவனே!” எனவும், பிடித்த பத்துக்களில் “அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே” எனவும் ஈசனுக்கும் மாத்ருபாவத்தை ஏற்றிப் பாடி இருக்கிறார் என்பதையும் காண்கிறோம்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ

என்கிறார் திருத்தாண்டகத்தில் அப்பரடிகள்.

அவ்வளவு ஏன்! திருச்சியில் மலைக்கோட்டைக் கோயிலில் “தாயுமானவர்” என்ற பெயரிலேயே அருளாட்சி புரிந்து வருகிறார். செட்டிப் பெண்ணின் பிரசவத்திற்காக அவள் தாயைப் போல் வந்து அவளுக்குப் பிரசவம் பார்த்த நிகழ்ச்சி அந்தக் கோயிலின் தலவரலாறாகவே சொல்லப் படுகிறது. இதிலிருந்து தாயின் முக்கியத்துவம் புரிகிறது அல்லவா.

ஆனால் நம் சரீரத்தை, உடலை நமக்குக் கொடுத்த தாய் என்றேனும் ஓர் நாள் மறையலாம்; ஆனால் சர்வலோகத்துக்கும் மாதாவான ஜகத் ஜநநீயான அம்பாளோ நம்மை என்றும் தொடர்ந்து வருகிறாள். அதுவும் ஈசனையும் தன்னுள் அடக்கிய வண்ணம் சிவசக்தியாகத் தொடர்ந்து வந்து என்றென்றும் சாச்வதமாகத் தன் கருணையைக்காட்டிய வண்ணமே இருக்கிறாள். அத்தகையதொரு மாத்ருகாபாவத்தை நாம் அன்னையிடமே காணமுடியும். இந்த அன்னைக்கு எடுக்கும் விழாவே நவராத்திரி ஆகும். பொதுவாக விழாக்களும் பண்டிகைகளும் ஓரிரு நாட்கள் தான் இருக்கும். ஆனால் இந்த நவராத்திரிக்கு மட்டும் ஒன்பது நாட்கள்! ஒன்பது நாட்களும் அன்னைக்கு விழா எடுப்பார்கள். முக்கியமாய்ப் பெண்களுக்கெனவே ஏற்பட்ட மாபெரும் பண்டிகை நவராத்திரிப் பண்டிகை ஆகும். ஏன்?

சிருஷ்டிக்குப் பெண்ணே முக்கியம். அனைத்துக்கும் ஆதாரம் அவளே. பெண்ணில்லையேல் சிருஷ்டி இல்லை. அழிந்து போகும் இவ்வுயிருக்கு எப்படி ஒரு தாய் இருக்கிறாளோ அவ்வாறே இகம், பரம் இரண்டிலும் ரக்ஷிக்கிற ஒரு தாயையே அம்பாள் வடிவில் நாம் வழிபடுகிறோம். இந்த மண்ணில் தோன்றிய புல்லில் இருந்து, புழு, பூச்சி, வண்டுகள், பறவைகள், அசையும் அசையாப் பொருட்கள், விலங்குகள், மலைகள், காடுகள் என அனைத்துக்கும் உருக்கொடுத்து சிருஷ்டியை ஏற்படுத்திய தாயை நாம் வணங்கி அவளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதே நவராத்திரியின் தாத்பரியம். மஹாபிரளயம் முடிந்து சிருஷ்டி ஆரம்பிக்கையில் முதலில் பரம்பொருள் உண்டாக்குவது இச்சா சக்தி என்னும் சக்தி. அதன் பின்னரே கிரியை உண்டாகிறது. முடிவில் ஞானம் கிட்டுகிறது. இவையே முறையாக முதல் மூன்று நாட்கள் துர்கை, நடுவில் மூன்று நாட்கள் லக்ஷ்மி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என வழிபடப் படுகிறது. இம்மூன்று சக்திகளும் சேர்ந்த திரிபுரசுந்தரியையே விஜயதசமி அன்று வெற்றித் தேவதையாக வழிபடுகிறோம்.

துர்கையானவள் வீரத்தின் விளைநிலமாக, சிவனுக்குப் ப்ரியமானவளாக, நெருப்பைப் பார்க்கையில் அழகாக இருக்கும், தொட்டால் சுடும் என்பது போல் சீற்றம் நிறைந்தவளாக, கேடுகளை அடியோடு அழிக்கும் மாபெரும் சக்தியாக விளங்குகிறாள். இந்த துர்கைகள் ஒன்பது பேர். அவர்கள் முறையே வன துர்கை, சூலினி துர்கை, ஜாத்வே துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, ஆசுரி துர்கை, லவண துர்கை


லக்ஷ்மி: செல்வத்தின் பிறப்பிடம், விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்பவள், தாமரை மலர் போன்ற அழகுடையவள், அமுதமயமான இவள் வறுமையைப் போக்குவாள். கிரியா சக்தியான இவள் அஷ்ட லக்ஷ்மிகளாகவும் விளங்குகிறாள். அவர்கள் முறையே ஆதி லக்ஷ்மி, தன லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி

சரஸ்வதி: ஆரவாரமில்லாமல் ஜொலிக்கும் வைரம் போன்ற இவள், கல்வியின் தெய்வம், ஞானச் சுடர், பிரம்மனுக்குப் பிரியமானவள். அஷ்ட சரஸ்வதியர் வாகீஸ்வரி, சித்தேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி.

அதே போல் மூன்று தேவியரின் முப்பெரும் சக்திகளாக முதலில் துர்கைக்கு மாஹேஸ்வரி, கெளமாரி, வாராஹி ஆகியோரும் லக்ஷ்மிக்கு இந்திராணி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி ஆகியோரும், சரஸ்வதிக்கு மஹாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகியோரும் சக்திகள். இவர்கள் அனைவரும் சேர்ந்தே மஹிஷனை அழித்தார்கள் எனப்படும்.


துணைப் புத்தகங்கள்: தெய்வத்தின் குரல் ஆறாம் பாகம், செளந்தர்ய லஹரி விளக்கங்கள்
ஸ்ரீதேவி மஹாத்மியம், ராமகிருஷ்ணா பதிப்பகம், விளக்க உரை அண்ணா.

4 comments:

  1. பிரம்ம கீட ஜனனீ - லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு இந்த பெயர் வரும்.
    பிரம்மாண்டமான பொருளா இருந்தாலும் சரி, ரொம்பவும் சின்ன பொருளா இருந்தாலும் சரி - அதை அவளே உருவாக்கினாள்.
    கொலு பார்த்தேன், சுண்டலுக்கு waiting :)

    ReplyDelete
  2. நன்றி ஸ்ரீநி, இந்த சிருஷ்டி தத்துவமே கொலு வைப்பதன் தாத்பரியமும் கூட. சுண்டல் சாப்பிட்டாச்சு போல!

    ReplyDelete
  3. அம்மாவின் பாதங்களை பற்றிக் கொள்ளணும். இறுக்க்க்க்க்கி... அதற்கும் அவளேதான் அருளணும்.

    Don't worry Geethammaa. Be very very Happy! :)

    ReplyDelete
  4. Regarding the term AbrahmaKeetaJanani in Lalitha sahasranamam, I would like to share an incident which happened during Mahaperiyava's lifetime..

    There was a learned person who wanted to show his knowledge to Mahaperiyava while he was preaching about unity among people. While periyava was quoting the exact term Abrahmakeetajanani which meant all the living beings generated from Ambal and there should be no difference, this person asked Periya then why do we have the Varnasrama dharma to periyava?

    Periyava replied immediately saying please refer to the next term in Lalitha sahasranamam which comes after Abrahmakeetajanani. The term is Varnasramavidhayini which means Ambal is the creator of Varnasrama dharmam.

    The person who asked the quetion thinking he has got the bettr of periyava was stunned in to silenece.

    ReplyDelete