எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 30, 2011

நலம் தரும் நவராத்திரி வழிபாடு! செளந்தர்ய லஹரி 6

இன்று ஐந்த்ரிணி எனப்படும் இந்திராணி. அம்பிகையின் சேனைகளில் இவளும் ஒருத்தி. யானை வாகனத்தில் வஜ்ராயுதத்தோடு காணப்படும் இவளை வணங்கினால் பெரிய பதவிகள், வேலை வாய்ப்பு போன்றவை கிடைக்கும். இவளுக்குரிய நிவேதனம் எலுமிச்சைச் சாதம்.

மாலை நிவேதனம் :அரிசிப்புட்டு. செய்முறை போன வருஷமே சொல்லியாச்சு. என்றாலும் மீண்டும் ஒரு முறை: நான் செய்வது வேக வைக்காத புட்டு. ஆகவே அரிசியைக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை நன்கு சிவப்பாக வறுக்கவும். வறுத்த அரிசியை ஆற வைத்துப் பின்னர் மிக்சியில் போட்டு மாவாக்கவும். ஒரு கிண்ணம் மாவுக்கு ஒரு கிண்ணம் நீரை எடுத்துக்கொண்டு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க வைக்கவும்.அதிலேயே ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். கொதிக்கும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக வறுத்து அரைத்த மாவில் விட்டுக் கிளறிக்கொண்டே வரவும். கையால் பிடித்தால் பிடிக்கமுடியணும், உதிர்த்தால் உதிரவேண்டும். அந்தப் பதம் வரும் வரைக்கும் நீர் விட்டுக் கிளற வேண்டும். பின்னர் இதையும் குறைந்தது மூன்று மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.

பின்னர் நூறு கிராம் வெல்லத் தூளைக் கொஞ்சமாய் நீர் சேர்த்துப்பாகு வைக்க வேண்டும். வெல்லப் பாகை நீரில் போட்டால் உருட்ட வரவேண்டும், அந்த உருண்டை ஒரு தாம்பாளத்தில் போட்டால், டங் என சப்தம் வரவேண்டும். பாகை இந்தப் பதத்தில் காய்ச்சிக் கொண்டு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். போதும் எனத் தோன்றும் வரையிலும் பாகை விட்டுக் கலக்கவும். பின்னர் வாணலியில் நெய் விட்டுத் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு வறுத்துச் சேர்க்கவும். ஏலக்காய் பொடித்துப் போடவும். இது ஒரு வாரம், பத்துநாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.
*************************************************************************************

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என அனைத்துத் தொழில்களையும் புரிபவள் ஆதிபராசக்தியே என்றே கூறுவார்கள். சக்தியிலிருந்தே பிரபஞ்சம் உருவாகிறது. அவ்வளவு ஏன்! பரப்ரம்மம் ஆன சிவனும் அவள் செயலாலேயே தனது அசலத்தில் இருந்து அசைந்து கொடுத்து பிரபஞ்சத் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறான். பரிபூரணமாக இருக்கும் ப்ரம்மத்தையே ஆட்டிப்படைக்கும் சக்தி அவளே. அத்தனை சக்தி வாய்ந்த பராசக்திக்கு நன்றி கூறும் வகையில் எடுக்கப்படும் விழாவாகிய இந்த நவராத்திரியில் அனைத்துப் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கான பண்டிகைகளிலேயே மிகவும் விமரிசையாகப் பத்து நாட்கள் கொண்டாடப் படுவது இந்த சாரதா நவராத்திரியே. நவராத்திரி என்றால் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய இரவுகளை ஒரு பக்கம் சுட்டினாலும், மற்றொரு பக்கம் ஒன்பது இரவுகள் என்றும் பொருளைக் கொடுக்கும். எப்போதுமே உயிருள்ள ஜீவன்கள் அனைத்துக்குமே இரவில் அமைதி கிட்டுகிறது. நம் அன்றாட வேலைகளைப் பகலில் செய்தாலும் இரவிலேயே தூங்கி ஓய்வெடுத்து அமைதியைப் பெறுகிறோம். இதற்கு இன்றைய அவசர நாட்களில் பொருளில்லை என்றாலும் பொதுவானதொரு நியதி இரவிலே உடல் ஓய்வெடுக்கும் வேளையில் மனமும், மூளையும் சேர்ந்து ஓய்வெடுக்கும் என்பதே.

பிறந்த குழந்தையானது எவ்வாறு தாயின் கர்ப்பத்தில் ஒன்பது மாதங்கள் தங்கிப் பின்னர் வெளிவருகிறதோ அதைப் போல் இந்த ஒன்பது நாட்களும் அம்பாளிடம் பக்தி செலுத்தி அந்தக் கர்ப்பவாசத்தில் மூழ்கி இருக்கிறோம். நம் மனதிலுள்ள துர் எண்ணங்கள் மறைந்து நல்லெண்ணங்கள் தலை தூக்கும். புதியதோர் ஜீவசக்தி உடலில் பாய்ந்தாற்போல் இருக்கும். ஆகவே இந்த நவராத்திரியை நாம் கொண்டாடுவது என்பது நம் எண்ணங்களையும், உடலையும் சேர்த்துப் புதுப்பித்துக்கொள்ளவே ஆகும். இது நவராத்திரியில் அம்பிகையைத் தியானிப்பதற்கு ஒரு காரணம் ஆகும். முந்தின ஸ்லோகத்தில் பூர்வபுண்ணியம் இருந்தாலே அம்பிகை வழிபாட்டில் நம்மால் ஈடுபடமுடியும் என சங்கரர் மட்டுமின்றி பட்டரும் கூறுவதைப் பார்த்தோம். அடுத்த ஸ்லோகம் அவளுடைய பாததூளி மஹிமையாலேயே அனைத்துத் தொழில்களும் நடைபெறுவது குறித்து ஆதிசங்கரர் சொல்கிறார்.

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி:ஸஞ்சின்வன் விரசயதி லோகா-னவிகலம்
வஹத்யேனம் செளரி:கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர:ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளன-விதிம்


த₁னீயாம்ஸம் பா₁ம்ʼஸும்ʼ த₁வ ச₁ரண -ப₁ன்கே₃ருஹ-ப₄வம்ʼ
விரிஞ்சி₁: ஸஞ்சி₁ன்வன் விரச₁யதி₁ லோகா₁ -நவிக₁லம்ʼ
வஹத்₁யேனம்ʼ ஶௌரி: க₁த₂மபி₁ ஸஹஸ்ரேண ஶிரஸாம்ʼ
ஹர: ஸங்க்₁ஷுத்₃யைனம்ʼ ப₃ஜ₁தி₁ ப₄ஸிதோ₁த்₃து₄லன - விதி₄ம்


பாத தாமரையி னுள் உண்டு கட்பரம
வணுவினில் பலவியற்றினால்
வேத நான்முகன் விதிக்க வேறுபடு
விரிதலைப் புவனம் அடைய மான்
மூதரா அடி எடுத்த அனந்த முது
கண-பணா அடவி பரிப்ப மேல்
நாதனார் பொடி படுத்து நீறணியின்
நாம் உரைத்தென் அவள் பான்மையே

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்


அசையாத பிரம்மமாக இருந்த சிவனை ஞானஸ்வரூபமாகத் தெரிந்து கொள்ள வைத்தவள் அம்பிகை. அவனை வெளியே இருந்து எல்லாம் அவள் அசைக்கவில்லை. அவனுள்ளே சக்தியாக ஐக்கியமடைந்திருப்பவள் இங்கே எண்ணமே இல்லாமல் இருந்த ஞான ஸ்வரூபத்திற்கு “நான்” என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அசைத்தாள். இது இவ்வுலகின் முதல் அசைவு எனலாம். ஆட்டமான ஆட்டம்! இதுவே ஸ்ருஷ்டி மூலமாகவும் ஆனது. உள்ளுக்குள்ளே குமுறிக்கொண்டிருந்த ஒரு அசைவு தானே அதிர்வு தானே முதல் முதல் வெளிப்பட்டது! இது தான் big bang எனப்படும் பெருவெடிப்பு என்று அறிவியல் கூறுவதாய்ப் பரமாசாரியார்(காஞ்சி) கருதுகிறார். பரப்ரஹ்மத்தின் அதிர்வே சப்த ரூபமான வேதமந்திரங்களாகி அதிலிருந்தே ஸ்தூல வஸ்துக்கள் அனைத்தும் உண்டானதாய்ச் சொல்கிறார். இதைத் தான் ஸ்பந்தனம் எனப்படும் அசைவு. இத்தகைய அசைவை உண்டாக்கின அம்பிகை இதன் மூலம் ஐந்தொழில்களையும் நடத்துகிறாள். பிரம்மா, விஷ்ணு , ருத்ரன் ஆகியோரின் உதவியோடு. அவர்கள் மூவரும் முறையே படைத்து, காத்து அழித்தல் தொழிலைச் செய்து வருகின்றனர்.

பிரம்மா அன்னையின் திருவடித்தாமரைகளிலுள்ள மிக மிக நுட்பமான துகள்களே அந்த அதிர்வின் மூலம் வந்ததோ என்னும்படி அவற்றைச் சேகரித்தே இவ்வுலகை சிருஷ்டிக்கின்றாராம். ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேஷன் உருவில் விஷ்ணுவும் இவ்வுலகை மட்டும் தன் தலையில் தாங்காமல் அம்பிகையின் அந்தப் பாததூளியையும் சேர்த்தே தாங்குகிறான். ருத்ரனோ அவற்றை விபூதியாகத் தன் உடலில் பூசிக்கொள்கிறார். இவ்விதம் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவருமே அம்பிகையைத் தியானிக்கின்றனர் என்கிறார் ஆசாரியர். இதையே அபிராமி பட்டர்,

ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.

கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே என விளிக்கிறார். தெய்வீக மணம் கமழும் கடம்பமலரைத் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் அணங்காகிய அம்பிகையை ஏத்தும் பல அடியவர்களோடு இந்த ஈரேழு உலகினையும் படைத்து, காத்து, அழித்து என முத்தொழில்களையும் செய்து வரும் மும்மூர்த்திகள் கூட தெய்வ மணம் பொருந்திய உன் திருவடிகளை வணங்கி, உன்னையும் வணங்கித் துதிக்கின்றனர். அத்தகைய பெருமை வாய்ந்த உன் திருவடிகளைப் போற்றிப் புகழும் அளவுக்கு என்னால் என்ன பாடல் புனைய முடியும்! இருந்தும் என் பாடலையும் நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாயே! அம்மா, அபிராமி, எளியோனாகிய என் நாவில் இருந்து வெளிவரும் அர்த்தமற்ற சொற்களால் பாடப்படும் பாமாலையையும் நகைப்புக்குரியதாய்க் கருதாமல் ஏற்றுக்கொள்கிறாய் அல்லவா!

8 comments:

  1. மிக அழகாக எழுதி வருகிறீர்கள். உங்கள் பக்தியின் ஆழம் வியப்பாக இருக்கிறது. வெல்லப்பாகு அரிசிப்புட்டும் கூட.

    பத்து நாள் வரைக்கும் கெடாதா? ரெண்டு நாளுக்குள்ளே காலியாயிடும் போலத் தோணுதே?

    சௌந்தர்யலஹரியைத் தமிழில் வீரைக்கவிராயர் அற்புதமாக பெயர்த்திருக்கிறார்.. படித்ததில்லை என்றால் நெட்டில் கிடைக்கிறது.

    ஒன்பது நாள் விழாவை ஒன்பது மாதத்துக்கு ஒப்பிடுவது புதுமை. இருந்தாலும் மிச்ச நாள்ள கும்பிடாத சாமியை இப்ப சேத்து வச்சு கும்பிடணுமானு கேக்கத் தோணுது. அரிசிப்புட்டு அட்டகாசமா இருக்குங்க படிக்குறதுக்கு.

    ReplyDelete
  2. அப்பாதுரை, பல நாட்கள் கழித்து வந்ததற்கும், பாராட்டும் நன்றி.

    வீரைக்கவிராயரின் தமிழ் செளந்தர்ய லஹரி நெட்டில் தேடினேன் கிடைக்கவில்லை; இயன்றால் சுட்டி அனுப்புங்கள். நன்றி.

    ஆமாம், அரிசி மாவை வறுத்து ஆவியில் வேக வைத்துச் செய்யப்படுவது குறைந்தது மூன்று நாட்கள் தான் தாங்கும். இது பத்து நாட்கள் கெடாது.

    அம்மனைத் தாயாக உருவகப் படுத்துகையில் ஒன்பது மாதம் தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருப்பது போல் இந்த ஒன்பது நாளும் அன்னையின் நினைவில் அவள் கர்ப்பத்தில் இருப்பதாய்க்குறிப்பிட்டேன். இதுவும் யாரோ சொல்லிக் கேட்டதே! நன்றிங்க.

    ReplyDelete
  3. மிச்ச நாட்களில் கும்பிடலைனு சொல்ல முடியாதுங்க. இப்போ விசேஷமாய்க்க்கும்பிட்டால் மிச்ச நாட்களில் என்னம்மா செளக்கியமானு கேட்டுட்டுப் போயிட்டே இருக்கிறோம்.

    ReplyDelete
  4. இந்த நவராத்திரியை நாம் கொண்டாடுவது என்பது நம் எண்ணங்களையும், உடலையும் சேர்த்துப் புதுப்பித்துக்கொள்ளவே ஆகும்

    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. கீதாம்மா....ஆக நவராத்ரி வெள்ளி புட்டு சமைத்தாச்சுன்னு சொல்றீங்க....:-).

    ReplyDelete
  6. 'க்ருத பாதாப்ஜ தூளிகா' - ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில வரும் நாமா.
    அம்பாள் பாதத்தின் தூசியே எல்லா செயல்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது. அவற்றுக்கு சக்தி கொடுக்கிறது.

    ReplyDelete
  7. வாங்க மெளலி, நவராத்திரி வெள்ளிப் புட்டு இல்லை; அரிசிப் புட்டு. வெள்ளியிலே புட்டுச் சமைக்கத் தெரியாதே!

    ReplyDelete
  8. வாங்க ஸ்ரீநி, போன வருஷம் சஹஸ்ரநாமத்தை எடுத்துண்டதாலே இந்த வருஷம் அதைச் சொல்லலை; என்றாலும் உங்கள் விளக்கம் சரியானதே. நன்றிப்பா.

    ReplyDelete