எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 12, 2011

மெளன ராகம் இசைத்த போராளிகள்-2

மறைக்கப்பட்ட இந்திய விடுதலைப் போர்:



நாமெல்லாம் படிச்சது என்னமோ சிப்பாய்க்கலகம் எனப்படும் 1857ஆம் ஆண்டு நடந்த புரட்சி தான். அதைத் தான் நாம் முதல் இந்திய விடுதலைப் போர் என்று கூறுகின்றோம். வரலாற்றுப் பக்கங்களிலேயும் அப்படியே பதிவாகி உள்ளது. ஆனால் இதற்கு முந்தைய கட்டுரையில் நாம் முதன்முதலாக விடுதலைக்குக் குரல் கொடுத்த தமிழனைப் பற்றிப் பார்த்தோமல்லவா? அப்படியே முதன்முதலாகச் சிப்பாய்க் கலகம் ஏற்பட்டதும் தமிழ்நாட்டிலே தான். எங்கே தெரியுமா?/ வேலூர்க்கோட்டையிலே. முதலிலே கோட்டையின் வரலாற்றைத் தெரிந்து கொள்வோம். கோட்டை முதலில் கட்டியது விஜயநகர சாம்ராஜ்யத்து அரசர்களால். ஆச்சரியமாய் உள்ளதா? ஆம், விஜயநகரத்தில் இருந்து தென்னகம் முழுமையையும் ஒரு குடைக்கீழ் கொண்டு வந்து ஆட்சி புரிந்த விஜயநகர சாம்ராஜ்யத்து அரசர்களில் ஒருவரான சதாசிவ ராயர் என்பவர் தன் படைத்தளபதிகளான சின்ன பொம்மி நாயக்கனையும், திம்ம ரெட்டி நாயக்கனையும் இந்த ஊர் எல்லா இடத்திற்கும் செல்ல வசதியாக அமைந்திருப்பதால் இங்கே நமக்கு ஓர் கோட்டை அவசியம் எனக் கருதிக் கட்டச் சொன்னார். அரசர் ஆணையின் பேரில் இங்கே கோட்டை கட்டப்பட்டு விஜயநகர சாம்ராஜ்யத்தின் வசமே கோட்டை இருந்து வந்தது. இதுவும் ஒரு குட்டித் தலைநகராக இருந்தது. சந்திரகிரியிலும் தங்களுக்கென ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு அதையும் தங்கள் தலைநகராக மாற்றிய விஜயநகர மன்னர்கள் தங்கள் ராய வமிசத்தினர் ஒருவருக்கொருவர் ஏற்பட்ட தாயாதிச் சண்டையின் போது இங்கே மாறி மாறித் தங்கி இருக்கின்றனர்.



இங்கே இருந்த வண்ணம் தஞ்சையை ஆண்ட நாயக்கர்களையும், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களையும் செஞ்சிக்கோட்டையையும் தங்கள் வசமே வைத்துக் கட்டிக் காத்தனர். ராய வமிசத்தினருக்கு பீஜப்பூர் சுல்தான்கள் பரம வைரிகளாக இருந்தனர். அவர்களுடன் நடந்த சண்டையில் மூன்றாம் ஸ்ரீரங்கராயனின் காலத்தில் இது சில காலம் பீஜப்பூர் சுல்தான்களின் வசத்தில் இருந்தது. ஆனால் வேலூர்க்கோட்டையைக் கைவிட முடியாத ராய வமிசத்தினர் தஞ்சை நாயக்கரின் உதவியோடு கோட்டையை மீட்டனர். ஆனால் மீண்டும் நடந்த சதியில் ஸ்ரீரங்கராயர் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்டு அதில் எப்படியோ மீண்டு தப்பி வந்த ராமதேவராயரிடம் அரசாட்சி செல்லக் கோட்டை அவரிடம் இருந்தது. பின்னர் தஞ்சை மராட்டி அரசர்கள் வசம் வந்து அதன் பின்னர் மீண்டும் முசல்மான்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு ஆர்க்காடு நவாப் ஒருவரால் அவரின் மருமகனுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. இதற்குள்ளாக இங்கே நன்றாய் வேர் விட்டுப் படர ஆரம்பித்திருந்த கும்பினியார் கர்நாடகத்தின் ஹைதர் அலியோடும், அவன் மகன் திப்பு சுல்தானோடும் நடந்த கர்நாடகா யுத்தங்களில் இந்தக் கோட்டையை ஒரு முக்கிய கேந்திரமாகக் கொண்டு செயல்பட்டனர். ஹைதர் அலி தன் காலத்திலேயே இந்தக் கோட்டையை மீட்டாலும், ஆங்கிலேயச் சிப்பாய்கள் முற்றுகையிட்டு மீண்டும் இதைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

ஹைதர் அலிக்குப் பின்னர் அவன் மகன் திப்பு சுல்தானும் ஆங்கிலேயருடனான போரைத் தொடர்ந்து நடத்தினான். ஆனால் ஆங்கிலேயர் திப்புவை மேமாதம் நாலாம் தேதி, 1799 ஆம் ஆண்டு சீரங்கப்பட்டணத்தில் நடந்த போரில் கொன்றனர். அதன் பின்னர் அவர் குடும்பத்தைச் சிறைப்பிடித்து வேலூர்க்கோட்டைக்குக் கொண்டு வந்து அங்கே சிறை வைத்தனர். கோட்டையில் 5 பெரிய அரண்மனைகள் இருந்ததாகவும், திப்புவின் குடும்பத்தினர் முந்நூறு நபர்களையும் அங்கே தங்க வைத்ததாகவும் தெரியவருகிறது. இந்தக் குடும்பங்கள் வசிக்கவும், பின்னர் அவர்களைக் காவல் காக்கவும் இங்கே ஏற்படுத்தப்பட்ட படையே இங்கே தங்க வைக்கப்பட்டது. ஆனாலும் பின்னர் அவர்கள் தங்கள் படையில் ஒரு பகுதியை முக்கியமாய் இந்தியச் சிப்பாய்களை இங்கேயே தங்க வைத்திருந்தனர். ஆகவே இந்தப் படைவீரர்களில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் கலந்தே இருந்தனர். முதன் முதலாக மெட்ராஸ் ரெஜிமெண்ட் என்ற பெயரில் முழுவதும் தமிழ்நாட்டு வீரர்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட காலாட்படை என்னும் இன்பண்ட்ரி ரெஜிமெண்ட் இங்கே தான் துவங்கப்பட்டது. இன்றும் இந்திய ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்டிற்குக் குறிப்பிடத் தக்க முக்கியத்துவம் உண்டு. அப்போது நம் சிப்பாய்கள் நாட்டு வழக்கப்படி தலைப்பாகையுடனும், முறுக்கிவிடப்பட்ட மீசைகளோடும் காட்சி அளித்தனர். ஆனால் அவர்களின் தலைமைத் தளபதியான ஆங்கிலேயனுக்கு இந்தக் கோலம் அருவருப்பைத் தந்தது. ஆகவே சிப்பாய்கள் அனைவரும் தங்கள் மீசையையும், தாடி இருந்தால் அதையும் மழித்துவிட்டுத் தலைப்பாகைக்குப் பதிலாக அவர்களால் அளிக்கப்படும் தொப்பிகளை அணிய வேண்டும் என்று கட்டளை இட்டான். ராணுவத்திலேயே தளபதி கட்டளை எனில் மீற முடியாது. அதுவும் இது ஆங்கிலேயத் தளபதி. அவன் சொன்னால் சொன்னதுதான்.



அதோடு படை வீரர்களில் அனைத்து மதத்தினரும், அனைத்து தெய்வங்களை வழிபடுபவர்களும் இருந்து வந்தனர். இந்துக்களுக்குத் தங்கள் மதச்சின்னங்களை நெற்றியில் தரிக்கும் வழக்கம் இருந்தது. அதுவும் தடை செய்யப்பட்டது. இஸ்லாமியருக்கோ தாடி வளர்க்கக் கூடாது என்பதினால் அவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் புதிதாய்க் கொடுக்கப்பட்ட தலைப்பாகை மிருகங்களின் தோலினால் செய்யப்பட்டவை என்பதாலும் இந்துக்கள் எதிர்த்தனர். அதுவும் பன்றியினால் செய்யப்பட்டது என்றும், மாட்டுத்தோலினால் செய்யப்பட்டது என்றும் தெரிய வந்தது. பன்றி இஸ்லாமுக்கு எதிரானது. மாடுகளோ இந்துக்கள் வழிபடும் காமதேனு தெய்வம். ஆகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்ப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கத்தை இன்று வந்த ஆங்கிலேயர் மாற்ற முனையவே சிப்பாய்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதோடு அனைவரையும் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாயும் நம்பினார்கள். துப்பாக்கிகளில் வைக்கப்படும் தோட்டாக்களிலும் மிருகக்கொழுப்புக் கலந்திருப்பதாயும் நம்பினார்கள். ஆகவே தங்கள் எதிர்ப்பைக் காட்ட அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். மேலும் இந்தியச் சிப்பாய்களின் எண்ணிக்கையும் ஆங்கிலேயச் சிப்பாய்களை விட அதிகமாக இருந்தது.



ஆகவே 1806-ஆம் ஆண்டு ஆகஸ்டு அல்லது செப்டெம்பர் மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து தென்னகத்தில் உள்ள அனைத்து ராணுவ முகாம்களிலும் ஒரே நேரத்தில் புரட்சி வெடித்தால் ஆங்கிலேயர் பயந்து போய் நாட்டை விட்டு ஓடிவிடுவார்கள். இருப்பதோ பதின்மூன்றாயிரம் ஆங்கிலேயச் சிப்பாய்கள். அவர்களை எளிதில் கொன்றுவிடலாம். செத்தவர்கள் போக மிச்சம் உள்ளவர்கள் ஓட்டம் பிடிப்பார்கள் என்று கருதினார்கள். வேலூரிலோ புரட்சிக்கனல் முற்றிக் கனிந்து எந்நேரமும் பிடிக்கும் நிலையில் இருந்தது. ஆனால் தளபதி கர்னல் பேங்கோர்ட் என்பவரோ சென்னைக் கோட்டையின் கவர்னரிடம் வேலூர்க்கோட்டை முழு அமைதி காப்பதாகக் கடிதம் எழுதினான். புரட்சியோ மறுநாள் வெடிக்கத் தயாராகக் குமுறிக்கொண்டிருந்தது. புரட்சியாளர்கள் அவ்வளவு ரகசியமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். புரட்சி வெடித்தது. ஆங்கிலேயேப் படைத்தளபதிகள் தனி மாளிகைகளில் இருக்க இந்தியச் சிப்பாய்கள் தனியான வீடுகளில் இருந்தனர். புரட்சி நாளுக்கு முந்தைய ஜூலை ஒன்பதாம் தேதி முந்நூறு இந்தியச் சிப்பாய்கள் கோட்டைக்குள் புகுந்தனர். அனைவரும் புரட்சியாளர்கள்.



ஜூலை பத்தாம் நாள் 1806ஆம் ஆண்டு அதிகாலை இரண்டு மணியளவில் புரட்சி வெடித்தது. புரட்சித்தலைவர்கள் தங்கள் மேலதிகாரிகளான ஆங்கிலேயர்கள் தூங்குகையில் ஆயுதக் கிடங்கில் புகுந்து தளவாடங்களை எடுத்துக்கொண்டு வந்து தங்கள் சக புரட்சிக்காரர்களுடன் அணிவகுத்தனர். ஆங்கில்யே அதிகாரிகளைத் தாக்க ஆரம்பித்தனர். ஆயுதங்கள் மற்றப் புரட்சியாளர்களால் இடைவிடாது வழங்கப்பட்டது. ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வைக்கப்படிருந்த துப்பாக்கிகளைப் புரட்சியாளர்கள் கையாண்டனர். பீரங்கிகளையும் பயன்படுத்தினர். ஒன்றும் புரியாமல் எழுந்து வந்த அதிகாரிகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர். கோட்டைத் தலைவனும் கர்னலுமான பேங்கோர்டும் சுட்டுக் கொல்லப்பட்டான். இறந்த அவன் உடலை ஆத்திரத்துடன் புரட்சியாளர்கள் எச்சில் உமிழ்ந்தும், துப்பாக்கியால் மீண்டும் மீண்டும் அடித்தும் சேதம் செய்தனர். ஒளிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் அனைவரும் வெளியே இழுத்துவரப்பட்டனர். அனைவரும் கொல்லப்பட இதற்குள் திப்புவின் பணியாட்களும் புரட்சிக்காரர்களோடு சேர்ந்து கொள்ள, மற்ற பிரஞ்சு, டச்சு ஐரோப்பிய வீரர்களும் உதவி செய்ய ஆங்கிலேய அதிகாரிகளின் மாளிகைகள் கைப்பற்றப்பட்டன. கோட்டையின் பிரதான வாயில் புரட்சிக்காரர்களால் காவல் காக்கப் பட்டது. திப்பு சுல்தானின் மகனான மொய்தீன் தான் வைக்கப்பட்டிருந்த வீட்டுச் சிறையிலிருந்து வெளிவந்து திப்புவின் கொடியான புலிச்சின்னக் கொடியைப் புரட்சிக்காரர்களிடம் அளித்தார். அந்தக் கொடி கோட்டையின் தென்பகுதியில் கொடிக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அனைவருக்கும் முழுமையான விருந்துபசாரங்களுடன், ஆங்கிலேயன் தோற்றான் என்ற கோஷங்களோடு புரட்சிக்காரர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்.



ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போனது. அதன் காரணம் அங்கிருந்த தங்கசாலை தான். ஒரு சில புரட்சிக்காரர்கள் அங்கிருந்த தங்க நாணயங்கள் பாதுகாக்கப்பட்ட அறையை உடைத்து நாணயங்களைக் கொள்ளை அடிக்க, மற்றச் சிப்பாய்களும் சேர்ந்து கொள்ள யாருக்கும், யாரையும் கட்டுப்படுத்த முடியாமல் பணத்தாசை பிடித்து ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்தனர். கூச்சல் குழப்பம். நாலாபக்கமும் அணிவகுத்து நின்ற புரட்சி வீரர்கள் பயத்தில் தாறுமாறாக ஓட ஆரம்பிக்க, திப்புவின் மகன்களும் கலவரத்தில் மீண்டும் வீட்டுச் சிறையான அரண்மனைக்குள் புகுந்து தாளிட்டுக்கொண்டு தங்களைப் பாதுகாத்துக்கொண்டனர். சற்றும் பொறுமையின்றிப் பணத்தாசை பிடித்துப் புரட்சியாளர்கள் நடந்துகொள்ளவே தலைமை தாங்கச் சரியான நபரின்றிப் போனது. இதற்குள்ளாக ஆற்காட்டிலிருந்து கர்னல் கில்லஸ்பி என்பவருக்கு இந்தச் செய்தி தெரியவரவே காலை ஒன்பது மணிக்கு மேல் அவர் தனது குதிரைப்படையுடன் வேலூர்க்கோட்டையை அடைந்தார். கோட்டைக்கதவுகள் மூடப்பட்டுப் பிரதான வாயில் அடைக்கப் பட்டிருந்தது. ஆனாலும் கில்லஸ்பி காவலுக்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தான். உள்ளே நிலவிய கூச்சல், குழப்பம் அவனுக்கு அநுகூலமானதாக இருக்கவே எளிதில் தனது படைகளை ஏவிப் புரட்சிக்காரர்களைக் கொன்றான்.



கோட்டை மதில் சுவரில் ஏறித் தப்பிக்க முயன்ற புரட்சியாளர்களில் பலர் அகழியில் விழுந்தும், நெரிசலில் சிக்கியும் மடிந்தனர். கோட்டைக்குள் இறந்த வீரர்களின் எண்ணிக்கை சுமார் மூவாயிரத்துக்கும் மேல் இருக்கும் எனத் தெரிய வருகிறது. ஆவணங்களும் அவ்வாறே சொல்வதாய் அறிகிறோம். ஒரு சிலரைக் கைதியாகப் பிடித்து வரிசையில் நிறுத்தியும் சுட்டனர் என்பதும் பதிவாகி இருக்கும் செய்தியாகும். அனைவரையும் ஒரு சில மணி நேரத்தில் அடக்கிய கில்லஸ்பி மீண்டும் கோட்டையை ஆங்கிலேயர் வசமாக்கினான். கோட்டைக்கு வெளியே தப்பி ஓடிய சிப்பாய்களையும் அவர்கள் கவர்ந்து சென்ற பொருட்களோடு பிடிக்க ஆட்களை அனுப்பிச் சுமார் அறுநூறு சிப்பாய்களையும் பிடித்துச் சிறையில் அடைத்தான். மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்த கோட்டைக்கு கில்லஸ்பி தலைமையும் ஏற்றான். என்றாலும் ஆங்கிலேயருக்கு அப்போது கொஞ்சம் பீதி ஏற்பட்டது என்னவோ உண்மை. லண்டனின் பிரிட்டிஷ் பாராளுமன்றம் வரைக்கும் செய்தி போய் பாராளுமன்றம் இந்த வேலூர் சிப்பாய்க்கலகத்தைக் குறித்து மூன்று மாதங்கள் வரை ஆய்வு செய்து இந்நிகழ்ச்சியை மறக்காமல் இனி வருங்காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை செய்தது. ஆனால் தென்னாட்டில் அமைதி அவ்வளவு விரைவில் ஏற்படவில்லை. ஆங்கிலேய அரசு மிகவும் சிரமத்துடனேயே தென்னாட்டு மக்களை அடக்கி ஒடுக்கினர். இதன் பின்னர் ஏறத்தாழ முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னாலேயே இதே மாதிரியான சிப்பாய்க்கலகம் 1857 ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதையே முதல் சுதந்திரப் போர் என வரலாறு பதிவும் செய்துள்ளது ஆனாலும் இந்த வேலூர்ப் புரட்சியையே முதல் சிப்பாய்க் கலகம் எனக் கூற வேண்டும்.

http://tinyurl.com/3m6pkh6
[Open in new window]
(அதீதம் மின் இதழில் செப்டம்பர் இரண்டாம் தேதி வந்தது.)

4 comments:

  1. wowwww!!! I was just reading all your posts. Am I first to read here!??

    ReplyDelete
  2. neengal solvathu palavum oru karuththu nilavukirathu....vaalththukkal

    ReplyDelete
  3. வெல்லூர் சிப்பாய்க் கலகம் முதலில் வெடித்தவொன்றாலும் வடக்கில் வெடித்த சிப்பாய்க்கலகம் அளவில் பெரியது. வெல்லூர் கலகம் வெற்றியில் முடிந்து கோட்டை கலகக்காரகள் அல்லது புரட்சியாளர்கள் கைக்குப்போயிருந்தாலும் வெள்ளைக்காரர்களை அப்போது விரட்டி விடுவதென்பது வெறுங்கனவே. எனவே சிப்பாய்கள் பணத்தாசையால் தோற்றார்கள் என்பது ஒரு பேச்சுக்குத்தான் சொல்லலாம். ஏனெனில் வெற்றியென்பது அன்று இந்திய‌ருக்கில்லை. எங்கு நோக்கிலும் ஆயிரக்கணக்கான அரசர்கள்; ராஜ்ஜியங்கள். வெல்லூரில் கூட அக்கலகத்தைப்பயன்படுத்தி வெல்ல நினைத்தவர்கள் திப்புவின் ஆட்களே. மற்றவர்களுக்கெல்லாம் ஆப்புத்தான். மூசுலீமை விட வெள்ளைக்காரன் தேவலை.

    சரி, வெல்லூர்க்கோட்டை கைப்பற்றப்பட்டு விட்டது என்று வைத்துக்கொள்வோம். எவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிப்பார்கள் ? திப்புவின் மகனை அரசனாகப்பிரகடனம் பண்ண அவன் வெல்லூரை ஆள்வான். அவ்வளவுதானே. ஆர்காட்டில் இருந்த ஆங்கிலேயர்கள் வருவார்கள். அவர்களிடம் இருந்தது விஞ்ஞானம். அது இலகுவாக வென்று விடும். வென்றது.

    1857 சிப்பாயக்கலகமும், வெல்லூர்க்கலகமும் தோல்வியே. இவர்களைப் பயந்து கொண்டு வெள்ளைக்காரன் ஓடவில்லை. அவன் சென்றது அவன் தன்னிச்சையான முடிவே: உலகம் மாறிவிட்டது; நாமும் மாறவேண்டும் என நினைத்தும் உலகத்தில் ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக்காப்பது வெட்டி வேலை; அதனால் நமக்கு நட்டமே ஒழிய இலாபமில்லை எனத்தான் போனான்.

    அவன் போனபின்புதானே தெரிந்தது இந்தியர்கள் எவ்வளவு அசிங்கமானவர்கள் என்று. போகப்போக இன்னும் நன்றாகத்தெரியும். உண்மையா பொய்யா ? He was good at planning and executing to perfection. We are good at planning and plundering.

    ReplyDelete
  4. என்ன விரிவான அலசல்கள் நிறையா
    விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி

    ReplyDelete