எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 27, 2012

ஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா--2

இரண்டு செவிகளுக்கும் வயிரக் கடுக்கன்
                        இசையும்படி தானணிந்து
    கைதனிலே பாசிபந்து கரியாமால் வண்ணன்
                                 கணையாழி தானணிந்து
     இடுப்பிலே ஒட்டியாணம் என் அய்யனுக்கு
                                  இருபுறமும் பொன்சதங்கை
    காப்புக் கொலுசுமிட்டார் கரியமாலுக்கு
காலில் பாடகமிட்டார்

இவை தசாவதார வர்ணிப்பு என்னும் பாடல் தொகுப்பில் காணப்படுபவை.  பலராலும் பாடப்படும்.

கள்ளழகர் வேடமிட்டோரும் கருப்புசாமி வேடமிட்டோரும் ஆடும் ஆட்டம் மெய் சிலிர்க்க வைக்கும்.  முன்பெல்லாம் அழகருக்குத் தண்ணீர் பீய்ச்சுவது நிறையவே நடக்கும்.  தற்சமயம் அதைக் கட்டுப்படுத்தி இருப்பதாக அறிகிறோம்.  ஆனாலும் சில குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் பீய்ச்சுவது உண்டு. முதல் நாள்  மலையில் இருந்து இறங்கி வரும் அழகர் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக ஒவ்வொரு மண்டகப்படியாகத் தங்கிக் கொண்டு மறுநாள் அதிகாலையில் மூணு மாவடி என்னும் இடத்தில்  தன்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறார்.  மூணு மாவடியில் பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் சேவையையே எதிர்சேவை என்று சொல்லப் படுகிறது. அதன் பின்னர் அழகர் தல்லாகுளம் நோக்கிக் கிளம்புகிறார்.  அங்கும் ஒவ்வொரு மண்டகப் படியாகத் தங்கும் அழகர் அன்று மாலை அம்பலகார மண்டகப் படியில் தங்கிவிட்டுப் பின்னர் தல்லாகுளம் பெருமாள் கோயிலை அடைகிறார்.

தல்லாகுளம் வருதல்

145 குன்றிலுற்ற வெள்ளங் கொழுந்தோடி வையைதனிற்
சென்றெதிர்த்து நிற்பதெனச் சீபதியோர்-அன்றெதிர்த்துக்
கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில்
ஏடலர் தாரான் எழுந்தருளி-ஆடலுடன்
கல்லா குளங்கள் கரையப் பணிவார்முன்

தல்லா குளம்வந்து சார்ந்தருளி-மெல்ல  

அங்கு அழகருக்குத் திருமஞ்சனம் நடக்கும்.  அதன் பின்னரே தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கத் தயாராய்க் கிளம்புகிறார். இப்போது தான் அழகருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் சூடிக் கொடுத்த மாலை சூட்டப்படும்.  அழகருக்கு அணிவிக்கப் படும் உடை தேர்ந்தெடுக்கப் படுவது அன்றைய தினம் வரை எவருக்குமே தெரியாது என்கின்றனர்.  இது குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.  பட்டாசாரியார் கண்களை மூடிக் கொண்டு எடுப்பார் என ஒரு கருத்து உண்டு. பொதுவாகச் சிவப்பு, மஞ்சள் தவிரப் பச்சை நிறப் பட்டு என்றால் அந்த வருடம் சிறப்பாக இருக்கும் என்றும் வெள்ளை நிறம் எனில் பரவாயில்லை எனவும் சொல்லப் படும்.  சிவப்போ, மஞ்சளோ இருந்தால் அது நாட்டுக்கு ஆகாது என்கிறார்கள்.   அதே போல அழகர் ஆற்றில் இறங்கவும் நேரம் குறிக்கப் பட்டுச் சரியாக அந்த நேரத்திலேயே அழகர் ஆற்றில் இறங்குவார். 

    வையைக்கரைத் திருக்கண்களில் வைகுதல்

150
நரலோக மீது நடந்துவரு கின்ற
பரலோக மென்று சிலர் பார்க்கச்-சுரலோகத்
திந்திரவி மானமிது என்றும் இதுசோமச்
சந்திரவி மானமே தானென்றும்-முந்தியவட்
டாங்க விமானம் அவையிரண்டும் என்னவே
தாங்கு விமானந் தனிற்புகுமுன்-தீங்கிலார்
உன்னி விமானம் உரத்தெடுக்கும் போதனந்தன்
சென்னிமணி யொன்று தெறித்தெழுந்த - தென்னவே
உம்பரில் வெய்யோ னுதயஞ் செயக்குதிரை
நம்பிரா னேறி நடந்தருளி-அம்பரத்திற்
கோடி கதிரோனும் கோடி பனிமதியும்
ஓடி நிரையா உதித்தவென-நீடிய

160

பொற்கொடியும் வெள்ளிக் குடையும் பொலிந்திலங்க
விற்கொடிகள் விண்ணோர் வெயர் துடைப்பச்-சொற்கத்
தியலுங் கரியுமதி லெற்று முரசும்
புயலும் உருமேறும் போலக் கயலினத்தை
அள்ளுந் திரைவையை யாறுட் பரந்துநர
வெள்ளங் கரைகடந்து மீதூர-வள்ளல்
திருத்தகு மேகம்போற் செல்லுதலால் நீர்தூம்
துருத்தி மழைபோற் சொரியக்-கருத்துடனே
வாட்டமற வந்து வரங்கேட்கும் அன்பருக்குக்
கேட்டவரம் ஊறுங் கிணறுபோல்-நாட்டமுடன்
காணிக்கை வாங்க அன்பர் கைகோடி யள்ளியிடும்
ஆணிப்பொற் கொப்பரைமுன் னாகவரக்-காணிற்
புரந்தரற்கு நேரிதென்று போற்றிசைப்ப வோரா
யிரந்திருக்கண் வையைநதி யெய்தி-உரந்தரித்த
    

                          
அழகர் ஆற்றில் இறங்கும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்து அருளும் காட்சியே கண் கொள்ளா காட்சியாகும்.  மதுரையிலே மீனாக்ஷிக்குத் திருமணம் எனக் கேள்விப் பட்டு ஆயிரம் பொன் சப்பரம் தயார் செய்து கொண்டு தானும் சகல அலங்காரங்களோடும், ஆபரண அணிகளோடும், பரிவாரங்களோடும் கல்யாணத்தைக் காணப் புறப்படும் அழகர் ஆற்றின் அக்கரையில் இருக்கும் மதுரைக்குச் செல்வதற்காக ஆற்றில் இறங்குவதாயும், அங்கே வீரராகவப் பெருமாளால் மீனாக்ஷியின் திருமணம் நடைபெற்ற செய்தி கேட்டுக் கோபம் கொண்டு ஆற்றில் இறங்கியவர் எதிர்க்கரைக்குப் போகாமல் ஆற்றின் அந்தக் கரையோடேயே வண்டியூருக்குச் செல்வதாயும் ஐதீகம்.  இது செவிவழிக்கதை.  ஆதாரங்கள் ஏதும் இல்லை.  ஆனால் அழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளியிருக்கும் காட்சி அற்புதமான காட்சி.  ஆற்றில் எழுந்தருளியருளும் அழகரை மதுரை ஸ்ரீ வீர ராகவப் பெருமாள் அவரை எதிர் கொண்டு அழைக்கிறார். இந்த வைபவம் அழகர் ஆற்றில் இறங்குதல் என்று சொல்லப்படும் .இதனைக்காண இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவதும் கண் கொள்ளாக் காட்சியாகும். மதுரையில் இவ்விழாவே மிகப்பெரிய திருவிழா. வெயில், மழை என்று பாராமல் ஜனங்கள் பகலும் இரவும் ஒரு சிறிய இடத்தையும் விடாமல் நிறைத்துக் கொண்டு ஆற்றிலும் அதன் கரைகளிலும் மண்டபங்களிலும் கூடியிருப்பார்கள். பின்பு வைகையாற்றின் வழியாகவே நேராக வண்டியூர் போகிறார்.  மதுரையும் அதன் சுற்றுப் புறங்களிலும் திருவிழாக்கோலம் காணப்படுவதோடு ஒரு சொம்பில் நாட்டுச் சர்க்கரையை நிறைத்து, அல்லது தாம்பாளத்தில் நாட்டுச் சர்க்கரையை நிறைத்து அதன் மேலே சூடம் ஏற்றி அழகரை வழிபடுவார்கள்.

பிறந்து மூன்று மாதமே ஆன சின்னஞ்சிறு குழந்தையானாலும் அழகர் ஆற்றில் இறங்குகையில் அந்தக் குழந்தைக்கு மொட்டை போடுவார்கள்.  அவங்க குலதெய்வம் யாராக இருந்தாலும் அழகர் ஆற்றில் இறங்கும் சமயம் வீட்டில் பிறந்திருக்கும் புதிய குழந்தைக்கு மொட்டை போட்டே ஆகவேண்டும் என்பதை ஒரு ஐதீகமாய்க் கடைப்பிடிக்கின்றனர்.  வண்டியூருக்குச் செல்லும் அழகர் அங்கே துலுக்க நாச்சியார் இடத்தில் தங்குவதாய்ச் சொல்கின்றனர்.  இந்தத் துலுக்க நாச்சியாரையும் பெருமாளையும் பிரபலமான மூன்று கோயில்களில் இணைத்துப் பேசப் படுகிறது.  ஒன்று ஸ்ரீரங்கம் கோயில். அந்நியப் படையெடுப்பின் போது ரங்கநாதரைக் கோயிலில் இருந்து ஊர் ஊராக எடுத்துச் செல்கையில் அவர் டில்லி சுல்தான் மகளின் பாதுகாப்பில் சில காலம் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. ரங்கநாதரின் அழகில் சுல்தான் மகள் மயங்கிப் போய் ரங்கனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லியதாகவும், அவளைஅரங்கனார் திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்கின்றனர். ஸ்ரீரங்கம் கோயிலில் துலுக்க நாச்சியார் சந்நிதி இன்றைக்கும் உள்ளது. லுங்கி கட்டிக் கொண்டு ரொட்டி நிவேதனத்தைப் பெருமாள் ஏற்றுக் கொள்வதாய்ச் சொல்கின்றனர்.

இன்னொரு விதத்தில் மேல்கோட்டைச் செல்லப்பிள்ளையிடம் சுல்தான் மகள் மயங்கி அங்கேயே ஐக்கியமாகி விட்டதாய்ச் சொல்கின்றனர்.  இங்கே அழகர் மலைக்கருகே வண்டியூரில் தயிர் விற்றுக் கொண்டிருந்த இஸ்லாமியப் பெண்ணுக்கு அழகர் மேல் காதல் எனவும் அழகர் அவளை மணந்து கொண்டதாகவும், ஆற்றில் இறங்காமல் கோவித்துக் கொண்டு போய் துலுக்கநாச்சியாரிடம் தங்குவதாயும் சொல்கின்றனர்.  ஆனால் அங்கே துலுக்க நாச்சியாரே இல்லை எனவும் சொல்கின்றனர்.

மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பி தேனூர் போய் மண்டூக மஹரிஷிக்கு மோக்ஷமளிக்கிறார் அழகர்.   நீரில் மூழ்கித் தவம் இருந்த மண்டூக மஹரிஷி துர்வாசர் வந்ததைக் கவனிக்காமல் இருந்த காரணத்தால் அவரால் தவளைப் பிறப்படையும்படி சபிக்கப் படுகிறார்.  பின்னர் பெருமாள் வந்து சித்ராபெளர்ணமிக்குப்பின்னர் சாப விமோசனம் கொடுப்பார் எனவும் துர்வாசர் கூறுகிறர்.  அதுதான் தேனூரில் வருடா வருடம் நடக்கும். பிறகு அன்றிரவு ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருளி தசாவதார சேவை சாதிக்கிறார். மறுநாள் காலை அழகர் மோகனாவதார சேவையருளி ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க சேவையுடன் புறப்பட்டு மைசூர் மண்டபத்தில் கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்பப்பல்லக்கு சேவை நடக்கும். மறுநாள் காலையில் ஸ்ரீ அழகர் அப்பன் திருப்பதிக்குச் சென்று திருமலையை அடைவார். மறுநாள் அவருக்கு அங்கு சாத்து முறை நடக்கும்       இந்த அழகர் திருவிழா மொத்தம் ஒன்பது நாட்கள் நடக்கும் அழகர் மதுரைக்குப் புறப்படும் முன்பே திருமலையில் அவருக்குத் திருவிழாக்கள் தொடங்கி விடும் அந்தத் திருவிழாவின் 4 - ஆம் நாள் மதுரைக்குப் புறப்படும் அழகர் ஒன்பதாம் நாள் மீண்டும் தம் மலைக்குத் திரும்பி விடுவார்.


ஆடி மாதம் வரை அழகர் மலைக்குள் போகாமல் வெளியே இருப்பார்.  அது குறித்துப் பின்னர் எழுதுகிறேன்.

பாடல்கள் உதவி: தமிழ் விர்ச்சுவல் பல்கலைக் கழகம். தசாவதார வர்ணிப்புப் பாடல் கூகிள் தேடலில் கிடைத்தது.  யார் எழுதியது எனத் தெரியவில்லை.  பல செய்திகளும் நினைவில் இருந்தே எழுதியவை என்பதால் தற்சமயம் கொஞ்சம் மாற்றங்கள் இருக்கலாம்.





6 comments:

  1. -நீங்கள் சொல்லும் பாடல்கள் நினைவிலிருந்து சொல்கிறீர்களா? அல்லது புத்தகம் வைத்திருக்கிறீர்களா?
    -தண்ணீர் பீச்சுவது சில விஷமங்களாகிப் போனதால் கட்டுப் படுத்தியிருப்பார்கள்.
    -மூன்று மாவடிக்கும் தல்லாக்குளத்துக்கும் நடுவில் கோ.புதூரையும் தாண்டி அசோக் ஹோட்டலுக்கு முன்னர் அழகருக்காகக் காத்திருப்போம் நாங்கள்!
    -இந்த துலுக்க நாச்சியார் விஷயம் பற்றி வருடம் தவறாமல் மதுரையில் சில சுவரொட்டிகள் காணக் கிடைக்கும்!
    -என் முதல் கேள்விக்கான பதில் கடைசி வரிகளில் இருக்கிறது. பார்த்து விட்டேன்! :))

    ReplyDelete
  2. அழகரைப்பற்றிய பல உண்மைகள் வெளிவருகிறது. இஸ்லாமியப்பெண்ணும் விரும்பியிருக்கிறாள். பெயரே அழகரல்லவா?

    ReplyDelete
  3. இந்த தடவை எழுத்துக்கள் மிகவும் பொடிசாக இருக்கு தசாவதாரப்பாடல்கள் சிரமப்பட்டு படிக்க வேண்டி இருந்தது.

    ReplyDelete
  4. வாங்க ஶ்ரீராம், அழகர் வராரு பாடலே மறந்து போச்சு. அதைத் தேடப்போய்த்தான் மேற்கண்ட பாடல்கள் கிடைத்தன. :)))))

    துலுக்க நாச்சியார் என்ன, அழகர் மதுரைக்கு உள்ளே நுழையாததுக்குக் கூடத் தான் பல பகுத்தறிவுக் காரணங்கள் கூறுகின்றனர். அதையும் கேட்டிருக்கேன். இணையத்திலும் படிச்சேன். :))))))

    ReplyDelete
  5. வாங்க விச்சு, இதைக் குறிப்பிடுவதன் முக்கியக் காரணம் இறை வழிபாடு குறிப்பிட்ட மதத்தவர்களுக்கு மட்டும் அல்ல. அனைத்தையும் கடந்த ஒன்று என்று காட்டவே. :)))

    ReplyDelete
  6. வாங்க லக்ஷ்மி, என்னனு தெரியலை, நானும் எப்படியெல்லாமோ மாற்றி வைச்சும் மாறவில்லை. அடுத்த பதிவின் போது எப்படியானும் சரியாப் போடறேன். :(((

    ReplyDelete