ஈசன் இங்கே அம்பாளுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்திருக்கிறார். ஆகவே இங்கே மாணவர்கள் அதிக அளவில் தங்கள் கல்விக்காக வேண்டுதல் செய்கின்றனர். ஜம்புகேஸ்வரரைத் தரிசிக்க நவதுளைகள் உள்ள ஜன்னல் ஒன்று உள்ளது. அதன் வழியாகவே தரிசிக்க வேண்டும். கல்லால் ஆன இந்த ஜன்னல் வழியாகப் பார்க்கலாம். உள்ளே தற்சமயம் அனுமதிக்கின்றனர். இந்தத் துளை வழியே தரிசிப்பதன் தாத்பரியம் நம் உடலின் ஒன்பது வாசல்களையும் இது குறிப்பதாகவும் இவற்றை அடக்கினாலே நம்மால் நம்முள்ளே இருக்கும் சச்சிதானந்த ஸ்வரூபத்தைத் தரிசிக்க இயலும் என்பதே ஆகும். இந்தச் சந்நிதியில் வருடத்தில் எல்லா நாட்களும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். கடுங்கோடையான வைகாசி மாதத்திலும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். ஐப்பசிப் பெளர்ணமியில் எல்லாச் சிவன் கோயில்களிலும் நடைபெறும் அன்னாபிஷேஹம் இங்கே மட்டும் வைகாசிப் பெளர்ணமியில் நடைபெறுகிறது. ஏனெனில் ஐப்பசி மழைக்காலத்தில் இங்கே தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாகக் கருவறையில் இருக்கும்.
இங்கே உள்ள ஒரு மதில் சுவற்றை ஈசனே சித்தராக வந்து கட்டியதாக ஐதீகம். இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் இம்மதிலை (ஐந்தாம் பிராகாரம்) கட்டிக்கொண்டிருக்கையில் நாட்டில் திடீரெனப் போர் ஏற்படப் போரை விட முடியாத நிர்ப்பந்தம் மன்னனுக்கு ஏற்பட்டது. மன்னனுக்கோப் போரை விடவும் ஈசன் திருமதிலைக் கட்டுவதிலேயே மனம் லயித்து இருந்தது. ஈசனை நாடினான் மன்னன். ஈசன் விபூதிச் சித்தராக வந்து பிராகாரம் கட்டும் வேலையை முடித்தார். சிவன் கட்டிய இந்த மதில் திருநீற்றான் திருமதில் எனவும் விபூதிப் பிராகாரம் எனவும் அழைக்கப் படுகிறது. விபூதிச்சித்தராக வந்த ஈசனுக்கு பிரம்மதீர்த்தக்கரையில் சந்நிதியும் உள்ளது.
இங்கே அன்னை முதலில் மிகவும் உக்கிரத்தோடு இருந்து வந்தாளாம். இங்கு வந்த ஆதிசங்கரர் அம்பாளைச் சாந்தப் படுத்த இரு தாடங்கங்களை (காதணி) உருவாக்கி அவற்றை ஸ்ரீசக்ரம் போல் செய்யச் சொல்லி அம்பாளுக்குக் காதுகளில் பூட்டிச் சாந்தப் படுத்தினார். மேலும் அம்பாள் சந்நிதிக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டையும் செய்தார். இதற்குப் பின்னர் அம்பாள் சாந்தமடைந்தாள் எனக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத்தில் திருக்கலியாணம் நடைபெறுவதில்லை. ஏனெனில் அம்பாள் தவம் மட்டும் இருந்து வந்ததோடு அல்லாமல் திருமணம் செய்து கொள்ளாததால் இங்கு திருக்கல்யாணம், பள்ளியறை வழிபாடு போன்றவை இல்லை. எனினும் பள்ளியறை உண்டு. இந்தப் பள்ளியறைக்கு மீனாக்ஷிதான் தன் கணவரான சொக்கநாதருடன் செல்கிறாள். இந்தக் கோயிலின் மற்ற எந்தச் சந்நிதியில் உள்ள மூர்த்திகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை.
இந்தக் கோயிலில் தான் வைணவரான கவி காளமேகத்துக்கு அம்பாள் கருணையால் கவி பாடும் வல்லமை கிட்டியது. வைணவர் கோயிலின் மடைப்பள்ளியில் வேலை செய்து வந்த வரதனுக்கு சிவன் கோயிலில் நாட்டியமாடிய தேவதாசியின் மேல் காதல். அவளுக்காகத் தன் வேலையை எல்லாம் விட்டு விட்டு அவளைக் காண தினம் தினம் திருவானைக்கா கோயிலுக்கு வந்து கொண்டிருந்தார் வரதன். ஓர் நாள் தன் வேலையை முடித்துக்கொண்டு மோகானாங்கி என்னும் அந்த நாட்டியக்காரி வரத் தாமதம் ஆகிவிட்டது. வரதர் அங்கேயே ஓர் மண்டபத்தில் படுத்துத் தூங்கிப் போனார். அதே மண்டபத்தின் இன்னொரு கோடியில் ஓர் அந்தணன் சரஸ்வதியை நோக்கித் தவம் இருந்து வந்தான். அன்றிரவு சரஸ்வதி அவன் தவத்துக்கு மனம் இரங்கி அவனைக் கண்டு அவன் முன் தோன்றி தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவன் வாயில் உமிழப் போனாள். சினம் கொண்ட அந்த அந்தணன் அதை வாங்க மறுக்க அந்தத் தாம்பூலத்தை வரதன் வாய் திறந்த வண்ணம் தூங்கிக் கொண்டிருக்கையில் அவன் வாயில் உமிழ்ந்துவிட்டுச் சென்றுவிட்டாள். ஒரு சிலர் வரதன் முன் தோன்றி தேவி கேட்டதாகவும் வரதம் சம்மதத்தின் பேரிலே உமிழ்ந்ததாகவும் கூறுவர். எப்படி இருந்தாலும் தேவியின் அனுகிரஹத்தால் அன்றிலிருந்து கவி மழைபொழியத் தொடங்கிய வரதன் தான் பின்னால் கவி காளமேகம் என அழைக்கப் பட்டான்.
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்.
சிலேடைப் பாடல்களில் புகழ் பெற்ற காளமேகத்தின் திறமைக்கு ஒரு சான்று. இந்தக் கோயிலின் சரஸ்வதியின் கைகளில் வீணை இல்லை. காரணம் தெரியவில்லை. சனீஸ்வரர் தன் மனைவியான ஜேஷ்டா தேவியுடன் காட்சி அளிக்கிறார். ஜம்புதீர்த்தம் விசேஷமானது. கணவன், மனைவி ஒற்றுமைக்கும், மாணாக்கர்கள் படிப்புக்கும், தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் விவசாயம் நடக்கவும் இவரைப் பிரார்த்திக்கின்றனர். அம்பாளின் சக்தி அளவிட முடியாதது என்கின்றனர். பஞ்ச பூதத்தலங்களில் நீருக்குரிய இந்தத் தலத்தின் ஈசன் சுயம்புலிங்கமாக அருள் பாலிக்கிறார். ஜம்பு என்னும் முனிவர் இங்கே தவம் இருக்கையில் ஈசன் கொடுத்த நாவல் பழத்தைக் கொட்டையோடு விழுங்க, நிஜம்மாவே அவர் வயிற்றில் மரம் முளைத்துத் தலை வழியாக வெளிவர, அவருக்கு அதன் மூலம் முக்தி கிடைத்ததாக வரலாறு சொல்கிறது. அம்பிகை அமைத்த நீராலான லிங்கம் ஜம்பு எனப்படும் நாவல் மரத்தின் கீழ் அமைந்தது என்பதாலும், ஜம்பு முனிவர் வழிபட்டதாலும், ஈசனுக்கு ஜம்புகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயில் காலை 5-30 மணியிலிருந்து பகல் ஒரு மணி வரையிலும், பின்னர் மதியம் 3-00 மணியிலிருந்து இரவு 8-30 மணி வரையிலும் தொடர்ச்சியாகத் திறந்திருக்கும்.
ஜலகண்டேஸ்வரர். நான் வந்த பொது அங்கிருந்த ஐயர் உள்ளே சென்று அருகில் பார்க்க அனுமதி அளித்தார்!
ReplyDeleteபோது பொதுவாகி விட்டது. மின் கிரகண நேரம். அவசரம்!
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், ஜலகண்டேஸ்வரர் வேலூரில். இங்கே ஜம்புகேஸ்வரர். உங்க பின்னூட்டத்தைப் பார்த்ததும் தான் ஜம்புகேஸ்வரரின் பெயர்க்காரணம் எழுதலைனு புரிந்தது. இப்போச் சேர்த்துட்டேன். நன்றி உங்களுக்குத் தான். :))))))
ReplyDeleteபடிச்சுட்டேன். இத்தனை நாளும் ஜலகண்டேஸ்வரர் என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்! மனதில் திருத்திப் பதித்துக் கொண்டேன்! :))
ReplyDeleteகாளமேகம் கதைக்கு நன்றி.
ReplyDeleteகதை சுவாரசியமா இருந்துது. திருச்சி அப்பாவோட சொந்த ஊர். இருந்தாலும் ரெண்டு மூணு தடவதான் போயிருக்கோம். இந்த கோவில் பாத்து இருபத்திரண்டு வருஷம் மேல ஆயிருக்கும். நிச்சயமா திரும்ப போகணும். இந்த மாதிரி பழம் பெருமை வாய்ந்த கோவில்களுக்கு போறதுக்கு முன்னாடி, கூடிய மட்டும் அதோட ஸ்தல வரலாறு படிச்சுட்டு போகணும்னு நினைப்பேன். இப்போ ப்ளாக்-ல உங்களை மாதிரி சிலபேர் எழுதறத படிக்கறதால நிறைய தெரிஞ்சுக்க முடியறது. ரொம்ப நன்றி.
ReplyDeleteவேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் ரொம்ப அழகு. 1991- ல ஒரே ஒரு முறை போயிருக்கேன். போற வழியில வள்ளி மலை முருகன் கோவில். அதுவும் அழகா இருந்துது.