எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 18, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் 4


திருவானைக்காவில் இருந்து அடுத்து நாங்கள் சென்றது உத்தமர் கோயில் என்னும் பிக்ஷாண்டார் கோயில்.  இது திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்டபோது கரம்பனூர் என்ற புராதனப் பெயர் பெற்ற இந்த ஊர்ப் பெருமாளை அவர் "கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண்கடல் ஏழும் மலையேழிவ் வுலகுண்டும் ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே," என்று பாடியுள்ளார்.  அன்றிலிருந்து உத்தமர் கோயில் என அழைக்கப் பட்டிருக்கிறது.  இங்கே ஆயிஅரம் இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் கதம்பவனமாக இருந்ததாய்த் தெரிய வருகிறது.  இங்கு ஸ்தல விருக்ஷம் வாழைமரம்.  தீர்த்தம் கதம்ப தீர்த்தம்.  பெருமாளே முக்கியமான சந்நிதியில் அருள் பாலித்தாலும் மும்மூர்த்திகளும் சேர்ந்து காட்சி அளிக்கும் ஓர் முக்கியக் கோயில் இது.  சிவன், பிரம்மா ஆகியோருக்கும் தனித்தனியாகச் சந்நிதிகள் இருக்கின்றன.  பெருமாளுக்கு வைகானச முறையில் வழிபாடுகள் நடைபெறுவதாய்த் தெரிய வருகிறது.  சித்திரை மாசத்தில் பெருமாளுக்கும், வைகாசியில் ஈசனுக்கும் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

சிவனைப்போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மா அகம்பாவத்தில் உமையன்னை தனக்கும் பணிவிடை செய்ய வேண்டும் என நினைக்க, அவர் ஆணவத்தை அடக்க ஈசன் ஒரு தலையைக் கிள்ளி விடுகிறார்.  பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பீடிக்கிறது.  அதோடு பிரம்மாவின் கபாலமும் அவர் கையை விட்டு அகலவில்லை.  கையில் ஒட்டிக் கொள்கிறது.  அந்த பிரம்ம கபாலம் நிறைந்தால் தான் அவர் கையை விட்டு அது நீங்கும் எனவும் அதுவரையிலும் ஈசன் பிக்ஷை எடுக்க வேண்டும் எனவும் ஏற்பட அவ்வாறே பிட்சாடனராகப் பிச்சை எடுக்கிறார் ஈசன்.  ஒவ்வொரு ஊராகச் சுற்றியும் அவருக்குப் படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையுமே அந்தக் கபாலம் எடுத்துக்கொண்டு வந்தது.  எவ்வளவு உணவு இட்டாலும் கபாலம் நிறையவில்லை.  பல தலங்களுக்கும் சென்ற ஈசன் கடைசியில் இந்தத் தலத்திற்கு வந்து, பிச்சை எடுத்தபோது, அங்கே கோயில் கொண்டிருந்த பெருமாள் மகாலக்ஷ்மியை பிரம்ம கபாலத்தில் பிக்ஷை போடச் சொல்ல அப்படியே அவளும் பிக்ஷை இடுகிறாள்.  கபாலம் நிறைந்து ஈசனின் பிரச்னை தீர்கிறது. அந்தக் கோலத்தில் ஈசன் இங்கே பிக்ஷாடனராகக் காட்சி அளிக்கிறார்.  இது ஈசன் இங்கே கோயில் கொண்ட கதை.

பிரம்மாவுக்குக் கோயில் இல்லை என்பதால் அவருக்கு மனக்குறை இருந்து வர, அதைத் தெரிந்து கொண்ட மஹாவிஷ்ணு பூலோகத்தில் அவரைப் பிறக்கச் செய்து இந்தத் தலத்தில் தன்னை வணங்கித் தவம் செய்யும்படி செய்து வந்தார்.  அவரது பக்தியைச் சோதிப்பதற்காகக் கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார்.  கதம்ப மரமாய்க் காட்சி அளித்த விஷ்ணுவை அறிந்து கொண்ட பிரம்மா மரத்திற்கு வழிபாடுகள் செய்து வணங்கி வந்தார்.  அவர் பக்தியில் மனம் மகிழ்ந்த மஹாவிஷ்ணு அங்கேயே பள்ளி கொண்டார். பிரம்மாவையும் அந்தத் தலத்திலேயே இருக்கச் செய்தார்.  தனியாக வழிபாடுகள் இருக்கும் எனவும் அருளிச் செய்தார்.  பிரம்மாவிற்குப் பிற்காலத்தில் தான் சந்நிதிகட்டப்பட்டதாய்த் தெரிய வருகிறது என்றாலும் எப்போது எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.  பிரம்மாவிற்கு இடப்புறமாய் ஞான சரஸ்வதி கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, அக்ஷரமாலையுடன் காட்சி தருகிறாள்.  குருப் பெயர்ச்சியின் போது பிரம்மாவிற்குச் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுவதாய்த் தெரிய வருகிறது.

மஹாவிஷ்ணு இங்கே கிழக்கே பார்த்தவண்ணம் பள்ளி கொண்டிருக்கிறார்.  உற்சவர் கையிலே சக்கரத்தைத் தூக்கிக் கொண்டு, "யாரங்கே, பிரயோகம் செய்யட்டுமா?" எனக் கேட்டுக் கொண்டு அருள் பாலிக்கிறார்.  விமானத்தின் பெயர் உத்யோக விமானம் என்பதாம்.  புதுசாகக் கேள்விப் பட்டேன்.  தாயார் பெயர் பூர்ணவல்லி என்பதாகும்,  இவளைத் தவிரவும் மஹாலக்ஷ்மி தனிச் சந்நிதியில் குடி கொண்டிருக்கிறாள்.  பூர்ணவல்லித் தாயார் எப்போதும், எல்லாவற்றையும் பரிபூரணமாக வைத்திருக்கும் சக்தியைத் தருபவள் என்கிறார்கள்.  இவள் இருக்குமிடத்தில் உணவுக்குப் பஞ்சம் இருக்காதாம்.  பெருமாள் சந்நிதியின் நேர் பின்னே மேற்கே பார்த்தவண்ணம் லிங்க வடிவில் ஈசன்.  கோஷ்டத்தில் தான் பிக்ஷாடனராகக் காண்கிறாரே எனப் பார்த்தால் உற்சவரும் பிக்ஷாடனர் தான்.  இவருக்கு அருகேயே சற்றுத் தள்ளி பிரம்மா ஞானசரஸ்வதியுடன் காணப்படுகிறார்.  சிவகுருவான தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு குருவான வரதராஜர், குருவான குரு பிரம்மா, சக்தி குருவாக, சவுந்தர்ய பார்வதி அம்மன், ஞானகுருவாக சுப்ரமணியர், தேவகுருவான பிரகஸ்பதி, அசுரகுருவான சுக்ராசாரியார் ஆகிய ஏழு குருக்களும் இங்கே குருவிற்கு உரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர்.  குரு பெயர்ச்சியில் ஏழு பேருக்கும் தனித்தனியே விசேஷமான அபிஷேஹ ஆராதனைகள் உண்டு எனக் கேள்விப் பட்டோம்.  அன்னிக்குப் போறது கஷ்டமும் கூட.  கூட்டம் நெரியும். :( அங்கே போய் சுவாமி தரிசனம் பண்ணிட்டு வெளியே வந்தப்போ பசி எடுக்க, அன்னபூரணியின் இடத்திலேயே சாப்பிடலாம்னு முடிவு செய்து கொண்டு போயிருந்த காலை ஆகாரத்தை அங்கேயே  மண்டபத்தில் சாப்பிட்டுவிட்டு அடுத்து சமயபுரத்துக்குக் கிளம்பினோம்.

சமயபுரம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்.  அதோடு அங்குள்ள அம்மனும் சோழனின் தங்கை எனச் சொல்வாரும் உண்டு. எல்லாவற்றையும் மெல்ல, மெல்லப் பார்ப்போம். மாரியம்மன் பிறந்த இடம், உஜ்ஜயினியின் மகாகாளி வந்து சேர்ந்த கதை எல்லாவற்றையும் பார்க்கலாம்.   ஆனால் இம்முறை அங்கெல்லாம் செல்லவில்லை.  சமயபுரம் மட்டுமே.

6 comments:

 1. படிச்சாச்சு! அடுத்தது சமயபுரம் மாரியம்மன் தரிசனமா?

  ReplyDelete
 2. உங்க கூடவே எங்களையு ஊர் சுற்ற வச்சுட்டீங்க நன்றி

  ReplyDelete
 3. போன வருடம் உத்தமர் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்

  ReplyDelete
 4. குணசீலம் எப்போ? சமயபுரம் போகும்போது இன்னும் நிறைய எழுதணும்.உங்களால் எனக்கும் புண்ணியம் கிடைக்கிறது.

  ReplyDelete
 5. தர்சித்தோம்.

  ReplyDelete
 6. Please Add kallukkuzhi anjaneyar to your list as well.

  I managed to browse Mrs Lakshmi's kuRai onrumillai too. Thanks to her araiththu karaiththa kuzhambu recipe . Eththanai varushamaassu thinneli valliyur kuzhambu saappittu,

  ReplyDelete