எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 08, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் 2


திருக்கைலையின் இரு சிவகணங்களான புஷ்பதந்தனுக்கும் மாலியவானுக்கும் தாங்களே அதிகமான சிவபக்தியில் இருப்பதாக எண்ணம்.  ஒருவர் மற்றவரின் பக்தியை மறுத்தார்.  இருவருக்கும் இதுவே பிரச்னையானது.  தினம் தினம் சண்டை.  ஒருநாள் சண்டை முற்றிப் போய் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர்.  இந்த சாபத்தின் விளைவாக மால்யவான் சிலந்தியாகவும், புஷ்பதந்தன் யானையாகவும் பிறந்தனர்.  இருவருக்கும் தங்கள் சாபமும், அதன் காரணமான இப்பிறப்பிலும் அவர்கள் சிவகணங்கள் என்பது நினைவில் இருந்தது.  ஆகவே பூமியிலும் இருவரின் சண்டையும் தொடர்ந்தது.  சிவ வழிபாட்டுக்குத் திருவானைக்கா வந்த இருவரும் இங்கேயும் சண்டை போட்டுக்கொண்டனர்.  இங்கேயும் சிவனை வழிபடுகையில் போட்டி ஏற்பட சிலந்தியான மால்யவான் புஷ்பதந்தனாகிய யானையின் துதிக்கையில் புகுந்து தொந்திரவு கொடுத்தது.  யானையாகிய புஷ்பதந்தன் முக்தியை அடையவே சிலந்தியான மால்யவான் தன் உடனிருக்கும் சிவனடியாரைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறப்பெடுத்துப் பின்னரே கைலை வந்தடையும்படி ஈசன் ஆணையிட்டார்.  சிலந்தியாகிய மால்யவான் தான் தன் பிறப்பை ஒரு நல்ல குடும்பத்தில் ஏற்கும்படியாகவும், இதிலேயும் தன் முற்பிறப்பு நினைவில் இருக்குமாறும் அருளும்படி ஈசனை வேண்ட அவ்விதமே ஈசன் அருளிச் செய்தார்.

மால்யவான் சோழ நாட்டின் அரசனான சுபவேதனுக்கும், கமலாவதி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தான்.  இவன் பிறக்கையில் கமலாவதிக்கு வலி எடுத்துப் பிரசவத்தை எதிர்நோக்கி இருந்தாள்.  அந்தச் சமயம் அரண்மனை ஜோதிடர் இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் இந்தக் குழந்தை சக்கரவர்த்தியாக இருப்பதோடு சிறந்த சிவனடியாராகவும் இருப்பான் என்று சொல்ல, அது ராணியின் காதை எட்டியது.  உடனே அவள் தன்னைத் தலைகீழாகக் கட்டச் சொன்னாள்.   வலியைப் பொறுத்துக்கொண்டு ஒரு நாழிகை நேரத்தையும் எப்படியோ கடத்தினாள்.  அதன் பின்னர் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.  வெகு நேரம் வயிற்றில் தங்கிய காரணத்தால் குழந்தையின் கண்கள் இரண்டும் செக்கச் செவேர் எனச் சிவந்து இருக்கவே, ராணி, குழந்தையைப் பார்த்து, "என் செங்கணா" என அழைத்து விட்டு உடனே இறந்தாள். ராணி அழைத்தபடியே குழந்தை கோச்செங்கணான் என அழைக்கப் பட்டது.  இந்தக் கோசெங்கணான் தான் தான் ஏற்கெனவே வழிபட்டு வந்த ஆனைக்கா ஈசனுக்குக் கோயில் எழுப்பினான்.  கோயில் எழுப்புகையில் தன் முற்பிறவி நினைவில் இருந்தமையால் யானைகள் செல்ல முடியாதபடிக்கு மாடக் கோயில்களாக அமைத்தான்.  மாடக் கோயில்கள் என்பது யானைகள் ஏறமுடியாவண்ணம் பூமி மட்டத்துக்கும் மேல் உயரமாகப் படிக்கட்டுகள் அமைத்துக் கட்டப் பெற்றவை ஆகும். இவ்வாறு கிட்டத்தட்ட காவிரிக்கரையோரம் 78 மாடக் கோயில்களைச் செங்கணான் கட்டியதாகத் தெரிய வருகிறது.  இவற்றில் பெரும்பாலான கோயில்களின் விமானம் யானை படுத்துத் தூங்குவது போலக் காணப்படும்.  அதற்கு கஜப்ருஷ்ட விமானம் அல்லது தூங்கானை மாடக் கோயில் என்று பெயர்.



`மேதகைய பயன்விழைவோர் ஞானதலத்
துறைகுவது மேவாதாயின்
ஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே
லுரைப்பக்கேட்க
காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங்
கடந்துமேலாம்
போதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை
பொலங்கொம்பன்னாய்.``
-திருவானைக்காப் புராணம் - தலவிசேடப் படலம்.

இந்தக் கோயிலின் தலவரலாறு கீழ்க்கண்டபடி சொல்லப் படுகிறது.  பிரம்மாவுக்கு ஒரு சமயம் தான் படைத்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளும் ஆசை உண்டாக அவருக்கு ஸ்த்ரீ தோஷம் ஏற்பட்டது.  தோஷ நிவர்த்தி பெற ஈசனை நாட ஈசனும் அவருக்கு அருள வேண்டிக் கைலையிலிருந்து கிளம்புகிறார்.  அப்போது அம்பிகையும் உடன் செல்ல வேண்டும் என விரும்ப, பிரம்மாவிடமிருந்து அவளைக் காக்க வேண்டி ஈசன் மறுத்தார்.  அம்பிகையோ தான் ஈசனாகவும், ஈசன் அம்பிகையாகவும் செல்லலாம் எனக் கூறி அவ்விதமே இருவரும் செல்கின்றனர்.  இங்கே இதைப் படித்துவிட்டு என்னடானு யோசிக்க வேண்டாம்.  கணவன், மனைவி இருவரின் மன ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் குறிக்கும் வண்ணமே சிவனும், சக்தியும் வெவ்வேறு அல்ல என்பதை எடுத்துச் சொல்லும் வண்ணமே இவ்வாறு குறிக்கப் படுகிறது.  பின்னர் பிரம்மாவுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது. அம்பிகையும் ஈசனைப் போற்றி வணங்க, அது முதல் தினம் உச்சிக் காலத்தில் அம்பாளுக்கு வழிபாடுகள் நடத்தும் அர்ச்சகர், அம்பாளின் புடவையையும், கிரீடத்தையும், மாலையையும் அணிந்து கொண்டு கையில் தீர்த்தப் பாத்திரத்துடன் மேளதாளத்தோடு ஈசன் சந்நிதி சென்று வழிபாடுகள் நடத்துவார்.  சுவாமிக்கு அங்கே அபிஷேஹம் செய்வார்.  கோபூஜையும் நடத்துவார்.  பின்னர் அம்பாள் சந்நிதி செல்வார்.  இந்த வழிபாட்டை அம்பாளே நடத்துவதாக ஐதீகம்.  அவரையே அம்பாளாக நினைத்துக் கொண்டு அனைவரும் கால்களில் விழுந்து வணங்குவார்கள்.

ஆடி மாதம் அம்பாள் தவம் இருந்த மாதம் என்பதால் ஒவ்வொரு ஆடி வெள்ளியும் இங்கு கோலாகலமாக இருக்கும்.  காலை இரண்டு மணியிலிருந்து இரவு பனிரண்டு வரையிலும் கோயில் திறந்திருக்கும்.  அம்பாள் காலை லக்ஷ்மியாகவும், மதியம் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி கொடுப்பாள்.  நம் நாட்டில் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில் அகிலத்தைக் காக்கும் அகிலாண்டேஸ்வரியாக அம்பாள் விளங்குவதால் அகிலாண்டேஸ்வரி என அழைக்கப்படுகிறாள்.  ஜம்புகேஸ்வரர் குறித்து நாளை பார்ப்போம்.

12 comments:

  1. இந்த வழிபாட்டை அம்பாளே நடத்துவதாக ஐதீகம். அவரையே அம்பாளாக நினைத்துக் கொண்டு அனைவரும் கால்களில் விழுந்து வணங்குவார்கள்.

    மிக அருமையான சிலிர்க்கவைத்த வழிபாட்டில் கலந்துகொண்டோம்...

    அந்த குட்டி யானை ..ஜம்போ.. என்று பிளிறியது அதிசயப்படவைத்தது..

    ReplyDelete
  2. நீங்க சுற்றிப்பார்த்ததை நாங்களும் ரசிக்க தந்ததற்கு நன்றி

    ReplyDelete
  3. புராணங்களில் ஒவ்வொன்றுக்கும் ஏற்கெனவே நடந்த இன்னொன்று காரணமாக ஆகி, அதன் காரணமாக இது என்று சங்கிலித் தொடராய் ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் கதைகள் ஏராளம். அவற்றை ஒரு இடத்தில் தொகுக்க முடியுமா? ஜம்புகேஸ்வரர் கதை படிக்க ஆவல்.

    ReplyDelete
  4. தலைகீழாகத் தொங்கி இத்தனை சிரமமா. கதை சிலிர்க்க வைக்கிறது என்பது உண்மை. ஒரு நாழிகைனா எத்தனை நிமிடம்/மணி?

    ReplyDelete
  5. ஆடில ஆனைக்காவலா ! லக்கிதான். தாடகம் போட்டுண்டு அகி எப்படி இருக்கா. மன்னருக்கு ஸ்ரீ ஜெயந்தி செப்டம்பர் 8 ல நு போட்டிருக்கு. ஆனந்து, வெங்கி கு இன்னிக்கு நாளைக்கு. எங்களுக்கு எல்லா நாளுமே!! உங்களுக்கு?? நோ சீடை தேன்குழல் திரட்டிப்பால்?

    குட்டி குட்டி பாதம் போடுங்கப்பா!!

    ReplyDelete
  6. //ஒரு நாழிகைனா எத்தனை நிமிடம்/மணி?//

    இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேரம்.அறுபது நாழிகை ஒரு நாள்!

    சமீபத்தில் படித்ததிலிருந்து...!

    ReplyDelete
  7. வாங்க ராஜராஜேஸ்வரி, உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். இந்த வழிபாடு பார்க்கக் கொடுத்து வைச்சிருக்கீங்க. நாங்களும் ஒருமுறையானும் போக நினைக்கிறோம். பார்ப்போம். :))))

    ReplyDelete
  8. வாங்க லக்ஷ்மி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. வாங்க ஸ்ரீராம், ஜம்பு திங்களன்று வருவார். :))))

    ReplyDelete
  10. வாங்க அப்பாதுரை, ஸ்ரீராம், உங்க கேள்விக்குப் பதில் சொல்லிட்டார். :D

    ReplyDelete
  11. வாங்க ஜெயஸ்ரீ, ஆமாம், ரங்கன் அடுத்த மாசம் தான் கொண்டாடப் போறார். மத்தவங்க கொண்டாடியாச்சு.

    அகிலாவுக்கு என்ன? ஜம்முனு இருக்கா! :))))

    ReplyDelete
  12. திருச்சி வந்தால் எங்கு செல்வேனோ இல்லையோ திருவானைக்கா ஈஸ்வரனை கண்டிப்பா பார்ப்பேன். அவர் பிரெண்ட் மாதிரி ..

    ReplyDelete