எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 04, 2014

டெல்லி சலோ! அம்ருத்சரஸ் பொற்கோயில் பார்க்க வாங்க!

ஜலியாவாலாபாகில் இருந்து பொற்கோயிலையும் பார்த்துட்டு வருமாறு ஏற்கெனவே எங்க டிரைவர் சொல்லிட்டார்.  ஆகவே நாங்க அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பொற்கோயிலுக்குக் கிளம்பினோம். பொற்கோயிலில் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும் என்றும், தரிசனத்துக்கு ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு, மூன்று மணி நேரம் ஆகலாம் எனவும் சொல்லி இருந்தார்கள்.  கூடியவரை விரைவாகச் செல்ல முடிவெடுத்து அங்கிருந்த ஒரு பாட்டரி காரில் பொற்கோயில் வாயிலில் கொண்டு விடச் சொல்லி ஏறிக் கொண்டோம். ஒருத்தருக்கு 50 ரூ. வாங்கிக் கொண்டு கொண்டு விட்டார். அங்கிருந்து குருத்வாராவின் முக்கிய வாயிலைக் கொஞ்சம் கேட்டுக் கொண்டு தான் போக வேண்டி இருந்தது.  ஒரே கூட்ட நெரிசல் வேறே. காலணிகள் வைக்கும் இடத்தில் காலணிகளை வைத்துவிட்டு உள்ளே சென்றோம்.  உள்ளே நுழையும்போதே தலையை மூடிக் கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப் பட்டோம்.  பெண்கள் அவர்கள் துப்பட்டா, மேல் முந்தானையால் தலையை மூடிக் கொள்ள ஆண்களுக்கு அங்கே ஒரு காவிக்கலர் வஸ்திரங்கள் கொண்ட பெட்டி வைக்கப்பட்டிருந்தது.  ஆனால் நம்மவர் சிவப்புக்கலர்த் துண்டு கொண்டு போனதால் அதைத் தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டார்.


இங்கே வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிற வாளியில் தான் ஆண்களுக்கான தலைத் துணி வைக்கப்பட்டிருக்கிறது.  இது ஒரு முக்கிய நுழைவாயில்

காலணிகள் பாதுகாக்கும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் தன்னார்வத் தொண்டர்கள். அங்கே பெருக்கித் துடைத்து, சமைத்து, சுத்தம் செய்பவர்கள் அனைவருமே தன்னார்வத் தொண்டர்கள். குருத்வாராவின் வெளி பிராகாரம் எனப்படும் சுற்றுப்பாதையில் நடந்து சென்று உள்ளே செல்லவேண்டிய வழியை அடைந்தோம். கூட்டமாவது கூட்டம்! சொல்லி மாளாது. ஒரு பக்கத்துக்கு நாலைந்து பேர் என இரு பக்கம் இரு பிரிவுகளாக வரிசையில் நின்றனர்.  நாங்க ஒரு பக்கம் போய் நின்று கொண்டோம்.

 
இங்கே தான் தரிசனத்துக்கு வரிசையில் நிற்க வேண்டும்.

நல்லவேளையாகக் குளிர்காலமாக இருந்ததால் தலைக்கு மேல் சூரியனார் சுட்டெரிக்கவில்லை. வெயில் காலமென்றால் ரொம்ப சிரமப் பட்டிருப்போம்.  கூட்டம் நகருவதாகத் தெரியவில்லை.  எல்லா முக்கியக் கோயில்களையும் போல இங்கேயும் என் வழி தனி வழி எனச் சில முக்கியஸ்தர்கள் பரிவாரங்களோடு போய்க் கொண்டிருந்தனர்.  நமக்கு அப்படி யாரையும் தெரியாதே! :( பத்தே முக்கால், பதினோரு மணிக்குப் போய் நின்றோம்.  உள்ளே செல்லும் கர்பகிரஹ நுழைவாயிலுக்கருகே வரும்போது பனிரண்டரை ஆகி விட்டது.  அதன் பின்னர் அரை மணி நேரத்தில் நாங்க கேட்டுக் கொண்டதன் பேரில் எங்களை உள்ளே அனுமதித்தனர்.  உள்ளே சென்று தரிசித்தோம்.  அருமையான வேலைப்பாடுகள் கூரையில் காணப்பட்டன.  ஒரு பக்கம் ஓரமாக அமர்ந்து இனிமையான பக்திப் பாடல்களை அகண்ட நாம சங்கீர்த்தனம் போல ஒரு குழுப் பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தனர். நடுவே ஒரு திண்டில் குரு க்ரந்த சாஹிப் வைக்கப்பட்டு அதைஒரு பட்டுத் துணியால் போர்த்தி இருந்தனர்.  நான்கு பேர் பெரிய விசிறிகளால் விசிறிக் கொண்டிருக்க நடுவே ஒருவர் அமர்ந்து பக்தர்கள் பிரார்த்தனைகாகக் கொண்டு வரும் "சதர்" எனப்படும் துணிகளை அந்த க்ரந்த சாஹிபின் மேல் போட்டுப் போட்டு எடுத்துக் கொண்டிருந்தார்.  வஸ்திரங்கள் மழை போல் பொழிந்தன. இதற்குள்ளாக நாங்க நின்ற இடத்தை விட்டு நகருமாறு ஒருவர் சொல்ல அரை மனதோடு நாங்க வெளியே வந்தோம்.  வந்ததும் பின்னால் இருந்த அம்ருத்சரஸ்.



முக்கிய சந்நிதியின் பின்னால் தெரியும் அம்ருத்சரஸ் குளம்.  இது கைபேசியில் எடுக்கப்பட்டது. உள்ளே எடுக்க அநுமதி இல்லை.

 ஹர்மந்திர் சாஹிப் என அழைக்கப்படும் பொற்கோயில் சீக்கியர்களின் மிகப் பழமையான கோயில் ஆகும்.  இதை ஒரு கலாசார மையம் என்றும் சொல்லலாம்.  இதை தர்பார் சாஹிப் எனவும் அழைக்கின்றனர்.  சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம்தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் அம்ருத்சர் நகரில் ஜலியாவாலா பாகில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாக இருக்கிறது. சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தத்தை முடித்து இந்த குருத்வாராவில் அது வைக்கப்பட்டுள்ளது.  இந்த குருத்வாரா சிக்கியர்களுக்கு மட்டுமில்லாமல் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் வந்து வழிபடத் தக்கதாக ஏற்படுத்தப் பட்டுள்ளது.

பொற்கோயில் தூரத்தில் தெரிகிறது.  இது வெளியே  உள்ள சுற்றுப்பாதை. பொதுவாகவே வட இந்தியக் கோயில்களில் உள்ளே செல்லவும், வெளியே வரவும் நிறையவே நடக்க வேண்டி இருக்கும்.


இது 1574 ஆம் ஆண்டில் முதலில் கட்டப்பட்டுள்ளது. ஒரு காட்டின் நடுவே ஏரியால் சூழப்பட்டிருந்த இந்தக் கோயில் அருகில் உள்ள கோயிந்தவால் என்னும் இடத்திற்கு வந்த மொகலாயப் பேரரசர் அக்பர் இந்தக் கோயிலுக்கு வருகை தந்தபோது குரு அமர்தாஸின் வாழ்க்கை வழிகளால் மனம் ஈர்க்கப்ப்ட்டுப் பல கிராமங்களின் வருவாயை ஜாகீர் எனப்படும் தானமாகக் கொடுத்தார். அந்த ஏரியை விரிவு செய்து அதற்கு அம்ருதசரஸ் என்னும் பெயரை இட்டு குரு ராம்தாஸ் அதைச் சுற்றிச் சிறிய குடியிருப்புக் கட்டினார். அதன் பின்னர் ஊரும் அந்தக் குளத்தின் பெயரிலேயே அமிர்தசரஸ் என்றே அழைக்கப்பட்டது.  இந்த ஏரியின் நடுவில் ஶ்ரீஹர்மந்திர் சாஹிப் என அழைக்கப்படும் கோயில் கட்டப்பட்டது.

தியாகிகளைக் குறித்த வரலாற்றைக் கூறும் அறிவிப்புப் பலகை


இப்போது பார்க்கும் குருத்வாரா ஜஸ்ஸாசிங் அலுவாலியா என்பவரால் சீக்கியப் படைகளின் உதவியுடன் 1764 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மஹாராஜா ரஞ்சித்சிங் வெளித் தாக்குதலில் இருந்து பாதுகாக்க குருத்வாராவின் மேல் மாடிகளைத் தங்கத்தால் மூடினார். அதன் பின்னரே இது பொற்கோயில் என அழைக்கப்படலாயிற்று.  இதற்கு நான்கு வாயில்கள் உண்டு.  என்றாலும் அனைவரும் முக்கியவாயில் வழியாகவே உள்ளே செல்ல வேண்டும். தினமும் பத்தாயிரத்துக்குக் குறையாத சுற்றுலாப் பயணிகள் இந்தப் பொற்கோயிலை தரிசித்துச் செல்கின்றனர்.  சுற்றியுள்ள நிலப்பகுதியை விடக் குறைந்த உயரத்தில் அமைந்திருக்கும் இந்த குருத்வாரா உள்ளே செல்லக் கீழே படிகள் உண்டு. பைசாகி எனப்படும் ஏப்ரல் 13 ஆம் தேதி கொண்டாட்டங்கள் இங்கே மிக விமரிசையாக நடைபெறும்.  1984 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 3 ஆம் தேதி அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியினால் ஆபரேஷன் ப்ளு ஸ்டார் என்னும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்க ஜெனரல் குல்தீப் சிங் தலைமையிலான இந்திய ராணுவம் குருத்வாராக்குள் நுழைந்தது.  இந்தப் போராட்டங்களில் பல சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர்.  இதன் பின்னர் நான்கே மாதங்களில் இந்திரா காந்தி சீக்கிய மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.



இன்னொரு கோணத்தில் அம்ருதசரஸ் குளம்.  இதுவும் கைபேசியில் எடுக்கப்பட்டது.

இப்படிப் பல்வேறு நிகழ்ச்சிகளால் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொற்கோயில் இன்றளவும் பலரையும் ஈர்த்து வருகிறது.  உள்ளே படம் எடுக்க அனுமதி கிடையாது.  செல்லும் வழியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அம்ருதசரஸ் எனப்படும் அந்த பிரம்மாண்ட ஏரியை எடுக்கலாம். பொற்கோயிலின் மாதிரிகள் பல இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன.  வாகா எல்லையில் எல்லைப்பாதுகாப்புப் படையின் ரெஜிமென்டிலும், அம்ருதசரஸ் ரயில்வே ஸ்டேஷனிலும் வைக்கப்பட்டுள்ளது. இது சீக்கியர்களுக்கு மட்டுமில்லாமல் மொத்த பஞ்சாபுக்கும் ஒரு முக்கிய அடையாளம் ஆகும்.




வெளியே நடைபாதையில் ஒரு பக்கம் உள்ள குளக்கரையில்  பக்தர்கள் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடம்.

15 comments:

  1. //தேதி அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியினால் ஆபரேஷன் ப்ளு ஸ்டார் என்னும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளைப் பிடிக்க ஜெனரல் குல்தீப் சிங் தலைமையிலான இந்திய ராணுவம் குருத்வாராக்குள் நுழைந்தது//

    இதே சம்பவம் தொடர்பாகத்தானே அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங்குக்கு குருத்வாரா காலணிகளை சுத்தம் செய்யச் சொல்லி பரிகாரம் செய்யச் சொன்னது?

    பொற்கோவிலை 'ரங் தே பசந்தி' உட்பட சில படங்களில் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான் என் அறிவு!

    ReplyDelete
  2. பொற்கோவில் பற்றி விரிவான செய்திகளுடன் படங்களும் சேர்த்து சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete

  3. வலையுலகுக்கு வந்தபுதிதில் பஞ்சாபில் நான் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் சுட்டி கீழே. படித்துப் பாருங்களேன்
    gmbat1649.blogspot.in/2011/03/blog-post.html

    ReplyDelete
  4. உங்களுடன் நானும் பொற்கோவிலுக்கு வந்த அனுபவம் உண்டாக்கி விட்டீர்கள் கீஎதா மேடம்.

    ReplyDelete
  5. பொற்கோவில் பர்றி அருமைமையான ஆக்கம்..பாராட்டுக்கள்..

    http://jaghamani.blogspot.com/2011/10/blog-post_22.html
    தகதகக்கும் தங்கக்கோவில்
    காண வாருங்கள்..!

    ReplyDelete
  6. பல தகவல்களுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  7. பொற்கோவில் பற்றிய தகவல்கள் நன்று.

    ReplyDelete
  8. வாங்க ஶ்ரீராம், ரங் தே பசந்தி மட்டும் இல்லை, ரப் நே பனா தி ஜோடி படத்திலும் பொற்கோயிலைப் பார்க்கலாம். ஷாருக் கான், அநுஷ்கா(பஞ்சாப் அநுஷ்கா) தமிழ்ப்படத்து அநுஷ்கா இல்லை. :))))

    ஆமாம், ஜெயில்சிங்கிற்கு தண்டனைப் பரிகாரம் கொடுத்தது இங்கே தான். :))))

    ReplyDelete
  9. நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  10. ஜிஎம்பி சார், வந்து பார்த்துப் படித்துப்பின்னூட்டமும் போட்டுட்டேன். :)

    ReplyDelete
  11. வாங்க ராஜலக்ஷ்மி, நீங்க டெல்லியிலே இருந்தப்போ போயிருந்திருப்பீங்களே? போகலையா?

    ReplyDelete
  12. நன்றி ராஜராஜேஸ்வரி, உங்கள் பதிவையும் படித்தேன்.

    ReplyDelete
  13. வாங்க டிடி, நன்றி.

    ReplyDelete
  14. நன்றி வெங்கட்.

    ReplyDelete
  15. விட்ட இடத்திலிருந்து மறுபடி படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
    பொற்கோவில் நிச்சயம் பார்க்க வேண்டும். அங்கும் சாப்பாடு போடுவார்களாமே, சாப்பிட்டீர்களா?

    ReplyDelete