எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 01, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 12

நாலைந்து நாட்கள் ஓடிவிட்டன.  மெளனத்திலேயே ஒவ்வொரு நாளும் கழிந்தது.  சாந்தியோ, ரவியோ ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை.  அக்கம்பக்கமோ அடுத்தடுத்துக் குழந்தைகள் இறப்பதைப் பார்த்து அந்த வீடு பேய் வீடு என அழைப்பதாக வேலைக்காரி வந்து சொன்னாள். அவரவர்கள் குழந்தையை இந்தப் பக்கம் போக வேண்டாம் எனத் தடுத்திருப்பதாகவும் சொன்னாள்.   ரவிக்கோ அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதாய்த் தோன்றியது.  இந்தப் பேய்க் குழந்தை இங்கே இருப்பதால் தானே எல்லாரும் சொல்கிறார்கள் என நினைத்தான்.  ஆயிற்று.  இதற்கு ஒரு வயதும் ஆகப் போகிறது.  நடக்கவும் ஆரம்பித்து விட்டது.  இன்னும் என்னவெல்லாம் பண்ணுமோ!

ஆனால் சாந்தியின் மனநிலையோ!  துளியும் மாறவில்லை.   அக்கம்பக்கம் சொல்கிறார்கள் என்றால் தன் கணவனுமா சொல்வது! இந்தக் குழந்தையைப் போய்த் தன் கணவன் வெறுக்கிறானே என எண்ணி எண்ணி மனம் நொந்தாள் சாந்தி.  அங்கே ரவியோ தனிமையில் அமர்ந்து  "ஏன் இப்படி!" "ஏன் இப்படி!" எனத் தனக்குள்ளே குமுறிக் கொண்டிருந்தான்.  சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன், பிறகு விருட்டென எழுந்து தன் ஸ்டுடியோவுக்குள் போய்க் கதவைச் சாத்திக் கொண்டான்.  ரவிக்கு வீட்டிலேயே ஒரு ஸ்டுடியோ உண்டு. அங்கே போனால் மணிக்கணக்கில் படங்களை வரைந்து கொண்டு தன்னை மறந்துவிடுவான் ரவி.   இது வரை சந்தோஷமான நாட்களிலேயே அங்கே போய் அமர்ந்து படங்கள் வரைந்திருக்கிறான்.  இன்றோ முற்றிலும் மாறுபட்ட நிலை.  மனதை மிகவும் வேதனை செய்தது.

குழந்தைகள் என்றால் அவனுக்கு மிகவும் பிரியம்.  ஆகவே சிறு குழந்தைகளுக்கு என ஏதாவது செய்ய வேண்டும் என்றே இந்த அனிமேஷன் துறையைத் தேர்ந்தெடுத்தான்.  அவன் விருப்பத்திற்கேற்ப மனைவி வாய்த்ததும் சந்தோஷத்தின் உச்சிக்கே போய் விட்டான். இதெல்லாம் தான் செய்த புண்ணியம் என மகிழ்ந்தான்.  இப்போதோ!  என்ன பாவம் செய்துவிட்டு இப்படி எல்லாம் நடக்கிறது!  அந்தக் குழந்தைக்குத் தான் நான் என்ன செய்தேன்!  அது தான் இங்கே இருக்க வேண்டுமென்றால் இருக்கட்டுமே! அதற்காக என் அருமைக் குழந்தைகளை ஏன் கொல்ல வேண்டும்!  இந்த சாந்திக்கு இன்னமும் இது புரியவே இல்லையே!  என்னையே கொலையாளி ஆக்கப் பார்க்கிறாளே! ரவியின் கைகள் எதையோ வரைந்து கொண்டிருக்க மனமோ அலை பாய்ந்து கொண்டிருந்தது.


"படக்" எனக் கதவு திறக்கும் சப்தம்.  சப்தம் கேட்டுத் தூக்கி வாரிப்போட்டது ரவிக்கு.  திரும்பிப் பார்த்தான்.  சாந்தி வந்து கொண்டிருந்தாள்.  நல்லவேளையாக அந்தப் பிசாசு அவள் கைகளில் இல்லை.  அது தான் ரவிக்கு ஆறுதலையும் அளித்தது.  சாந்தியின் கைகளில் உணவுத் தட்டும், குடிக்க நீரும்.  ரவியைப் பார்த்தாள் சாந்தி.  எப்படி உற்சாகமாக இருப்பான்!  தன்னைப் பார்க்கும்போதே அவன் கண்களில் தெரியும் அந்த உல்லாச ஒளி இப்போது இல்லை என்பதையும் கவனித்துக் கொண்டாள்.  அவன் உடலோ இளைத்துத் துரும்பாகக் கிடந்தது. அடுத்தடுத்துக் குழந்தைகள் பிறந்து விளையாடிக் கொண்டிருக்கையில் கூட ரவியை நன்கு கவனிக்க முடிந்தது சாந்தியால். ஆனால் இந்த ஒருவருடமாக சுத்தமாய் ரவியைக் கவனிக்கவே முடியவில்லை.  இன்று தான் பல மாதங்களுக்குப் பின்னர் அவனை நன்கு கவனிக்கிறாள்.  வெட்டாத தலைமுடியோடும், பல நாட்களாய் வளர்ந்திருக்கும் தாடியோடும், கன்னமெல்லாம் கண்ணீர்க்கறை படிந்திருக்க, உடலே கருத்து, இளைத்து உருமாறிப் போய்விட்டான் ரவி.

இயல்பான பாசம் பொங்க அவனருகே வந்து அமர்ந்தாள் சாந்தி.  அவன் கைகளைப் பிடித்தாள்.  ரவி அவள் பக்கம் திரும்பவே இல்லை.  "கோபம் போலிருக்கு!" எனப் புன்முறுவல் ஒன்றைக் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டாள் சாந்தி.  இப்போது தேவையானது ரவியின் உடல் நிலையே. அதுவும் அந்தப் பொன்னுக்கு வீங்கி வந்ததில் இருந்தே உடல்நிலை சரியில்லை என்பதோடு தன்னாலும் அவனைச் சரியாகக் கவனிக்க முடிந்ததில்லை என்பதை சாந்தி புரிந்து வைத்திருந்தாள்.  ஆகவே இப்போது இந்த நிமிஷம் ரவி தான் என் உலகம் என்பது போல் நடந்து கொண்டாள்.

அவனை அணைத்துக் கொண்டு தன்னருகே மடியில் சாய்த்த வண்ணம் ஒரு குழந்தைக்கு உணவு ஊட்டுவதைப் போன்ற பரிவுடன் உணவை அவனுக்கு ஊட்டினாள்.  முதலில் முரண்டு பிடித்த ரவியும் பின்னர் சாந்தியின் அன்பால் வசப்பட்டான்.  அவன் சாப்பிட்டதும் அவளும் அதிலேயே பங்கெடுத்துக் கொண்டு சாப்பிட்டாள்.  அப்படியே தரையில் இருவரும் படுத்தனர்.  தன்னை மீறிக் கண்களில் பொங்கிய கண்ணீரை மறைக்க முயன்றான் ரவி.  ஆனால் சாந்தியோ அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவனை இறுக அணைத்துக் கொண்டு அவன் கண்களில் தன் இதழ்களால் மென்மையாக ஒற்றினாள்.  அணை உடைத்துக் கொண்டது.  இருவரும் தங்களையும் அறியாமல் இணைந்தனர்.  அங்கே கோபம், தாபம், வருத்தம், துக்கம் அனைத்தும் மறைந்து அன்பின் சங்கமம் ஏற்பட்டது.

15 comments:

  1. அன்பு வென்றது, ஆனால் பின் விளைவு!

    இனி மறுபடியும் குழந்தை மரணம் உண்டு போலவே!

    குழந்தை இறப்புக்கு காரணம் எப்போது வரும்?
    நெடுந்தொடரோ?

    அருமையாக எழுதுகிறீர்கள்.

    ReplyDelete
  2. தமிழ்ப் பட பாதிப்பு! இப்போது பிறக்கப் போகும் குழந்தை ஏற்கெனவே இருக்கும் குழந்தையின் செயல்களை எதிர்த்து அடக்கப்போகிறது!

    ஊகம்தானே! ஒவ்வொரு பதிவுக்கும் ஒவ்வொன்று யூகித்து வைக்கிறேன்!!!

    :))))))))))))

    ReplyDelete
  3. கோமதி அரசு, நல்வரவு. பின் விளைவுகளைப் பார்க்கத் தானே போகிறோம். இதில் என் சொந்தக் கற்பனை ஏதுமில்லை. மூலக்கதையில் உள்ளதையே நினைவில் கொண்டு எழுதுகிறேன்.சில நிகழ்வுகள், விஷயங்கள் முன், பின்னாக இருக்கலாம்.

    ReplyDelete
  4. ஶ்ரீராம், தமிழ்ப்பட பாதிப்பெல்லாம் இல்லை. மூலத்திலும் இது நடக்கிறது. நீங்க சொல்றாப்போல் நடக்குதா எனப் போகப் போகப் பார்ப்போமே! :))))

    ReplyDelete

  5. பின் அப்புறம்...?

    ReplyDelete
  6. முடிஞ்சிருச்சோனு பார்த்தேன்.. இனிமே தான் ரிவெஞ்ச் சேப்டரா?

    ReplyDelete
  7. கெஸ் பண்ணாமல் படிச்சு முடிக்க நினைச்சாலும்... ஹ்ம்!

    விளைவாக இன்னொரு கழுகுக்குஞ்சு வருமோ!!

    ReplyDelete
  8. வாங்க வெங்கட், தொடருங்க. :)

    ReplyDelete
  9. அப்புறமா வரும் ஜிஎம்பி சார். :)

    ReplyDelete
  10. தொடருங்க, தொடருங்க சுரேஷ்! :)

    ReplyDelete
  11. அப்பாதுரை, பழி வாங்கறதா? அப்படீங்கறீங்க? தெரியலையே!

    ReplyDelete
  12. இமா, பல நாட்கள் கழிச்சு வந்தமைக்கு நன்றி. பொறுத்திருந்து பாருங்க. :)

    ReplyDelete
  13. ஹாஹா டிடி, போரடிக்குதா? :))))

    ReplyDelete