எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 09, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா -- 13

இங்கே

கடைசியா இங்கே விட்டிருந்தேன்.


நாட்கள் சென்றன. ரவி தன் மூன்று குழந்தைகளையே திரும்பத் திரும்ப வரைந்து வந்தான்.  அவன் மனத் தவிப்பு சாந்திக்கும் புரிந்தது.  என்றாலும் இந்த மரணங்களுக்கான காரணம் அவளுக்குப் புரியத் தான் இல்லை.  ரவிக்கோ நன்றாகப் புரிந்தது.  அந்தக் குழந்தை, பிசாசுக் குழந்தை தான் மட்டுமே தன்னந்தனியாக சாந்தியின் அன்பை அனுபவிக்க விரும்புகிறது. அதற்காகத் தான் திட்டம் போட்டு இந்தச் சதியை நடத்துகிறது.  ஆனால் ஒரு விஷயம் கவனித்தான் ரவி.  இறந்தது மூன்றுமே ஆண் குழந்தைகள் தான். அந்தப் பேய்க் குழந்தைக்கு ஒரு வேளை ஆண்கள் என்றால் பிடிக்காதோ?  அப்போ நம் ஒரே பெண் குழந்தையையாவது விட்டு வைக்குமா?  நல்லவேளையாகக் கடைசிச் சாவு முடிந்து மூன்று மாதத்துக்கும் மேல் ஆகி விட்டது.  அந்தப் பிசாசுக்கும் ஒரு வயசு முடிந்து விட்டது.  நடக்கவும் ஆரம்பித்து விட்டது.  ஆனால் சாந்தி இல்லாத சமயங்களிலே அவனைப் பார்க்கும் பார்வை அப்படியே தான் இருக்கிறது.  மாற்றமே இல்லை.  சாந்தி இருந்தால் கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்புத் தான்.

அவன் பெண் சுஜா இந்தக் குழந்தையோடு விளையாடுவாள்.  ஆனால் ரவிக்கு திக் திக்கென்றிருக்கும்.  ஊஞ்சல் ஆடுவதில் பிரியம் சுஜாவுக்கு.  ரவி வீட்டிற்குள்ளேயே ஊஞ்சல் கட்டிக் கொடுத்திருந்தான்.  இப்போது வாசலில் உள்ள பெரிய வராந்தாவில் கட்டிக் கொடுக்கும்படி நச்சரிக்கிறாள்.  அப்படியே கட்டிக் கொடுத்தான் ரவி.  அங்கே இடமும் தாராளமாக இருந்தது.  குழந்தை கலகலவெனச் சிரித்துக் கொண்டு ரசித்து விளையாடினாள்.  முதுகுக்குப் பின்னே குறுகுறுவென இருந்தது ரவிக்கு.  சட்டென்று திரும்பிப்பார்த்தான். நிலைப்படியருகே அந்தக் குழந்தை நின்று கொண்டு சுஜாவையே பார்த்துக் கொண்டிருந்தது.  அதன் கண்களில் தெரிந்த கோபமும், வெறுப்பும் ஆளையே பொசுக்கிவிடும் போல இருந்தது.  ரவிக்கு முதுகுத் தண்டில் சில்லிட்டது.  கைகள் நடுங்க ஊஞ்சல் சங்கிலி எல்லாம் நன்றாகப் பொருந்தி உள்ளதா என்று மீண்டும் மீண்டும் பார்த்தான்.

சுஜா வெண்ணிற கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தேவதையைப் போல் காட்சி அளித்தாள்.  அதில் பறந்து, பறந்து அவள் ஊஞ்சலாடுகையில் தலை மயிரும் சேர்ந்து பறக்க, உடையும் பறக்க அவள் கைகளை விரித்துச் சிரித்தவண்ணம் ஊஞ்சல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு ஆடியது ரவிக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.  கூந்தல் அலைபாய்ந்தது.  அவனிடம் சில சமயம் ஒரு தாயைப் போல் நடந்து கொள்வாள் சுஜா. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க அந்தக் குழந்தை மெல்ல மெல்ல ஊஞ்சல் அருகே வந்து நின்றிருந்தது.   ஊஞ்சலில் ஏற முயன்றது.  ரவிக்கு அஸ்தியில் ஜுரம் கண்டது. கொஞ்சம் கடுமையாகவே அதைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.  அதுவோ உலகத்து வெறுப்பை எல்லாம் அதன் கண் வழியே காட்டிய வண்ணம் அவனைப் பார்த்தது.  அது என்ன நினைக்கிறது என்பது ரவிக்குப் புரிந்து விட்டது.  ரவி புரிந்து கொண்டான் என்பதை அதுவும் தெரிந்து கொண்டு விட்டது.  அதன் இதழ்களில் ஏளனச் சிரிப்பு.

"என் எதிரி, முக்கிய எதிரி நீதாண்டா!  ஆனால் உன்னைக் கொல்லப் போவதில்லை.  கொன்றால் நீ செத்து ஒழிந்துவிடுவாய்.  அணுஅணுவாக நீ சித்திரவதைப்பட வேண்டும்.  இரு, இரு அதற்கும் ஒரு வழி பண்ணுகிறேன்."

இப்படித்தான் அது நினைத்திருக்கும் என ரவி புரிந்து கொள்ள அதுவும் அதைப் புரிந்து கொண்டாற்போல் தலையை ஆட்டிக் கொண்டது.  அப்போது சாந்தி அங்கே இரு குழந்தைகளையும் தேடிக் கொண்டு வர அந்தக் குழந்தையிடம் சட்டென ஒரு மாற்றம். குழந்தைத் தன்மை.  அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கள்ளமில்லாச் சிரிப்பைச் சிந்தியது.  சாந்தியைப் பார்த்த ரவிக்குச் சட்டென ஒரு எண்ணம் நினைவில் வந்தது.  அவர்கள் இருவரும் அன்றிரவுக்குப் பின்னர் கடந்த மூன்று, நான்கு மாதமாகப் பல முறை இணைந்துவிட்டனர்.  சாந்தி எவ்விதமான ஆக்ஷேபமும் தெரிவிக்கவில்லை.  முழு மனதோடு ஒத்துழைத்தாள்.  ஆனால் சாந்தி கருவுற்றதாகத் தெரியவே இல்லையே!  சாந்தியிடமே கேட்போம்.

"சாந்தி, விசேஷம் ஒன்றும் இல்லையா?" என்று குறும்புடன் சிரித்த வண்ணம் கேட்டான்.  "விசேஷமா?" என்று யோசித்த சாந்தி சட்டென அவன் கேட்பதுபுரிந்தவளாய், "ஒண்ணும் இல்லையே!" என்றாள்.  ரவிக்கு முகம் கறுத்தது.  "ஏதேனும் தடுப்புகள் செய்து கொள்கிறாயா?" என்று வெளிப்படையாக சாந்தியிடம் கேட்க, அவளுக்குக் கோபம் வந்தது.  அவனை முறைத்துப் பார்த்துவிட்டு  உள்ளே சென்றுவிட்டாள்.  ரவியின் மனதில் கலக்கம் சூழ்ந்தது.  இது எப்படி?  இன்னும் ஓரிரு மாதம் பொறுத்திருக்கலாமா? என யோசித்தான்.  ஆனால் அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.  சாந்தி குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் செல்வதை கவனித்தான்.  அவனிடம் போய் வருவதாகக் கூடச் சொல்லவில்லை.  கோபம் தணியவில்லை. சாந்தி செல்லும் வரை காத்திருந்துவிட்டு வீட்டை உள்பக்கமாய்த் தாளிட்டவன், சாந்தியின் அறையில் குடைந்தான்.  ஏதேனும்
மாத்திரைகள் அல்லது வேறு கட்டுப்பாட்டு சாதனங்கள் உள்ளனவா என ஆராய்ந்தான்.  எதுவும் இல்லை.  ரவிக்குத் தான் உடனே மருத்துவரைச் சென்று பார்க்க வேண்டும் என மனதில் பட்டது.

அவனுக்குப் பொன்னுக்கு வீங்கி வந்தபோது மருத்துவர் சொன்ன வார்த்தைகள்:  ரவிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.  சாந்தியிடம் இதைச் சொன்னால் நம்புவாளா?  மருத்துவர் சொன்னால் நம்பித்தானே ஆகவேண்டும்.  பார்க்கலாம்.  மருத்துவரிடம் முதலில் போய்ப் பார்ப்போம். அன்றிரவை உறக்கமின்றிக் கழித்தான் ரவி.  அவன் தவிப்பைப் பார்த்து வியந்தாள் சாந்தி.  மறுநாள் காலை எழுந்ததுமே மருத்துவரிடம் தான் வந்து பார்க்க வேண்டிய நேரத்தைக் குறித்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினான் ரவி.  குறித்த நேரமும் வந்தது.  ரவியும் மருத்துவரிடம் சென்றான்.  அவனுக்கு
ஏற்பட்ட சந்தேகத்தைக் கூறினான்.  மருத்துவர் ஒரு நொடி அவனைப் பார்த்த வண்ணம் இருந்தார்.  பின்னர் சிரித்த வண்ணம் இரண்டுபேருக்கும் ஏதேனும் சண்டையா என்றெல்லாம் விசாரித்தார்.  அதெல்லாம் இல்லை;  மூணு ஆண் குழந்தைகளைப் பறி கொடுத்தாச்சு.  ஒண்ணே ஒண்ணாவது பெத்துக்க ஆசை என்றான் ரவி.  சரி, பார்த்துடுவோம்.  என்று ரவிக்கு எல்லாப் பரிசோதனைகளையும் செய்யச் சொல்லி எழுதிக் கொடுத்தார்.  ரவியும் எல்லாப் பரிசோதனைகளுக்கும் உட்பட்டான்.  மறுநாள் வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டார் மருத்துவர்.

தவிக்கும் மனதோடு வீட்டுக்கு வந்தான் ரவி.

6 comments:

  1. ம்ம்ம்ம்ம்.... குடும்பத்துக்குள் குழப்பம் தொடர்கிறது போல... அப்புறம் என்ன ஆவுதுன்னு பார்ப்போம்!

    ReplyDelete
  2. தொடர்கிறேன்

    ReplyDelete
  3. அடுத்ததை அறியும் ஆவலோடு...

    ReplyDelete
  4. ம்.

    கதை சுவாரசியமாக இருந்தால் உம் கொட்டணும். :-)

    ReplyDelete
  5. சஸ்பென்ஸ் தொடருகிறதே!

    ReplyDelete