எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 04, 2014

கல்யாணமாம், கல்யாணம், மீனாக்ஷிக்குக் கல்யாணம், மலர்ந்த நினைவுகள்!

அக்ஷய த்ரிதியைப் பதிவில் ஶ்ரீராம் சொன்னது:

மதுரையில் தண்ணீர்ப் பந்தல் பார்த்ததில்லை. தயிர்சாத தானமும் நான் இருந்த காலத்தில் இல்லை! (80 களில்). சித்திரைத் திருவிழா கோலாகலம்தான் அசந்து போய்ப் பார்த்திருக்கிறேன்!


என்னோட பதில்:

இந்த தானங்கள் எல்லாம் ஶ்ரீராமநவமிக்கே ஆரம்பிக்கும். அன்னிலேருந்து ஆரம்பிச்சு வீட்டுக்கு வீடு விசிறி, குடை, செருப்பு என தானம் கொடுப்பார்கள்.  மல்லிகைப் பூக்காலம் வேறே ஆரம்பிச்சுடுமா, ஒவ்வொரு வீடுகளிலும் லக்ஷம் மல்லிகை தானம் கொடுப்பாங்க. லக்ஷம் மஞ்சள் தானம் கொடுப்பாங்க.  சும்மா தெருவில் போகும் இளம்பெண்களையும், சுமங்கலிகளையும் வீட்டுக்கு அழைத்துக் கொடுப்பதையும் பார்த்திருக்கேன்.  தெரிந்தவர், தெரியாதவர்னு வித்தியாசமே இல்லாமல் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுப்பாங்க.

முன்னால் எல்லாம் மேல கோபுர வாசல்லே ஆரம்பிச்சு டவுன் ஹால் ரோடு முழுசும் பந்தல் போட்டிருப்பாங்க.  அதே போல் மேலமாசி வீதி சின்னக்கடைப் பக்கமும் தெரு முழுசும் பந்தல் இருக்கும்.  முனிசிபல் லாரி தினம் தினம் சாயந்திரம் தெருக்களில் தண்ணீர் தெளிச்சுட்டுப் போகும். பந்தல்களில் கடைக்காரர்கள் ஒரு பெஞ்சில் பானைகள் வைத்து நீர் மோர், பானகம், சுண்டல்னு கொடுப்பாங்க.  நாலு மாசி வீதிகளிலும் கூட இப்படி விநியோகம் நடக்கும்.  மேலாவணி மூலவீதியில் இருந்து மேல கோபுர வாசலிலே சென்ட்ரல் தியேட்டர் செல்லும் வழியில் திரும்பும் இடத்தில் வலப்பக்கம் முன்னாடி இசையகம்னு ஒரு கடை இருந்தது.  அதுக்கு எதிரே ஃபன்ட் ஆஃபீஸ் இருந்தது.  ஃபன்ட் ஆஃபீஸ் வாசலிலே பானைகள் வைச்சு நீர் மோர், பானகம் நிரப்பி இருப்பாங்க. தானப்ப முதலி அக்ரஹாரத்தில் ஆடு, மாடு, குதிரைகள், நாய்கள் போன்றவற்றுக்காக ஒரு தண்ணீர்த் தொட்டி ரங்காச்சாரி துணிக்கடைக்குக் கொஞ்சம் முன்னால் கருகப்பிலைக்காரச் சந்து முனையில் இருந்தது.  இப்படி எல்லாம் வாயில்லா ஜீவன்களுக்காகக் கூடத் தண்ணீர் நிரப்பி வைத்துப் பார்த்த காலம் ஒன்று உண்டு.    

சென்னையிலே அந்தக் கால கட்டங்களிலேயே வெற்றிலை, பாக்குக் கடைகளிலேயோ, டீக்கடைகளிலேயோ தண்ணீர் குடிக்கத் தரமாட்டாங்க.  முதல் முதல் 64 ஆம் வருடம் சென்னை வந்தப்போ மெரினா பீச் பார்த்துட்டு வரும் வழியில் ஒரு கடையில் குடிக்கத் தண்ணீர் கேட்டதுக்குக் கன்னாபின்னாவெனச் சென்னை மொழியில் திட்டினாங்க. அப்புறமாக் காசு கொடுத்து எலுமிச்சை ஜூஸ் வாங்கிக் குடிச்சோம். அப்போவே எனக்குச் சென்னை பிடிக்காமல் போய் விட்டது! :)))))))) ஆனால் மதுரையிலே அப்படி இருந்ததில்லை.  இப்போத் தெரியலை. :(




மீனாக்ஷி கல்யாணத்தன்னிக்கு ஆடி வீதியில் சிலர் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் தொன்னையில் கொடுப்பாங்க. எதிர்சேவையில் ஒவ்வொரு மண்டகப்படியிலும் ஓலைப் பெட்டிகளில் சாப்பாடை நிறைத்துக் கொடுப்பாங்க.  அல்லது அங்கேயே சாப்பிட்டுட்டு வரலாம்.  இப்போல்லாம் எப்படினு தெரியலை. மீனாக்ஷி கல்யாணமும், அன்னிக்கு ராத்திரி மீனாக்ஷி வீதி வலம் வரும் பூப்பல்லக்கும்,  மறுநாள் தேரும் சில சமயங்களில் அன்று மாலையே தல்லாகுளத்தில் எதிர்சேவையும் அசராமல் ஒவ்வொரு வருடமும் பார்த்திருக்கோம்.

மீனாக்ஷி கல்யாணத்தனிக்குக் காலம்பர நாங்க இருந்த மேலாவணி மூல வீதி வழியாத் தான் மீனாக்ஷிக்குச் சீர் வரிசை போகும்.  முதலில் ஆறு மணி, ஏழு மணி சுமாருக்கு ஒவ்வொரு நாற்சந்தியிலும் வேட்டுக் குழாயில் மருந்தை அடைத்து வேட்டுப் போடுவார்கள்.  வேட்டுச் சத்தம் கேட்டதுமே சீர் வரிசை ஊர்வலம் வருதுனு புரிஞ்சுக்கலாம். சீர் வரிசை வரும்போது யாருக்கெல்லாம் முடியுதோ அவங்க எல்லாம் மீனாக்ஷிக்கு முடிந்த பொருட்களைச் சீராகக் கொடுப்பாங்க.  ஒவ்வொரு வீட்டிலும் கற்பூர ஆரத்தி, தேங்காய் உடைத்தல், மஞ்சள் நீர் ஆரத்தி என எடுப்பாங்க.  இந்த ஆரத்தி முடிஞ்சு சீர்  ஊர்வலம் வடக்காவணி மூல வீதி திரும்பியதுமே எல்லாருமே கல்யாணம் பார்க்கக் கிளம்புவாங்க. 


 கல்யாண மண்டபத்தில் தான் முன்னாடி எல்லாம் திருக்கல்யாணம் நடைபெற்றது. இவ்வளவு கூட்டமும் இருந்ததில்லை.  என்றாலும் கூட்டம் இருக்கும்.  அன்று நாள் முழுதும், மாலை மூன்று மணி வரையிலும் கல்யாணம் செய்து கொண்ட அலுப்புக் கூடத் தீராமல் மீனாக்ஷி பக்தர்களுக்கு அருள் பாலிப்பாள். அதன் பின்னரே மாலை ஊர்வலத்துக்கு அலங்காரம் செய்துக்கக் கிளம்புவாள்.  எல்லாரும் தங்கள் வீட்டுக் கல்யாணம் மாதிரி புதுசு கட்டிக் கொண்டு பாயசம், வடையோடு விருந்துச் சாப்பாடு எல்லாருக்குமே போடுவாங்க. மேலாவணி மூலவீதியில் எதிரும் புதிருமான இரு வரிசைகளிலும் வீட்டுச் சொந்தக்காரங்களும், அவங்க வைத்த குடித்தனக்காரர்களுமாகக் குடும்பங்களாக இருந்த காலம் அது.

அது வரையிலும் போயிட்டுப் போயிட்டு வந்து பார்த்திருக்கோம். சின்னக்கடையில் வியாபாரிகள் சங்கம் பந்தல் அமைத்து நாலு பக்கமிருந்தும் பூக்கொட்ட பொம்மைகள் வைத்திருப்பார்கள்.  சீக்கிரமாச் சாப்பிட்டுட்டு ஏழு மணிக்கே அங்கே போய்த் தெரிஞ்சவங்க கடை வாசல்லே இடம் பிடிப்போம். பூக்கொட்டுதல் பார்த்ததும் மீனாக்ஷியோடயே வடக்கு மாசி வீதி வந்து நேரு பிள்ளையார் கோயில் வாசலில் ஒரு தரம் பார்த்துட்டுப் பின்னர் வீட்டுக்கு அரைமனசாப் போவோம். தேரன்னிக்கும் அதே போல் மேல மாசி வீதியில் பழங்கள் கொட்டும் கடைகள் அருகே இருந்து பார்க்க ஆரம்பிச்சாத் தேரோடயே வந்து வடக்கு மாசி வீதி வரை வந்ததும் வீடு திரும்புவோம்.  எதிர்சேவை பார்த்தது எல்லாம் தனிக்கதை! :))))

மீனாக்ஷி கல்யாணம் குறித்துப் பலரும் எழுதிட்டு இருக்காங்க.  என் அண்ணா, தம்பி குடும்பம் இதுக்காகச் சென்னையிலிருந்து மதுரை போறாங்க.  உடனே நமக்கு மலரும் நினைவுகள் மோத ஆரம்பிச்சுடுச்சு. அதன் விளைவு தான் இது.  என் அனுபவங்களை எல்லாருக்கும் அனுபவிக்கப் பகிர்ந்து கொடுத்திருக்கிறேன்.

17 comments:

  1. நாங்கள் சுவாமியைப் பார்த்த நாட்களை விட, கூட்டத்தைப் பார்த்த நாட்கள்தான் அதிகம். ரேஸ் கோர்ஸ் காலனியில் வீடு. அழகர் தங்கையைப் பார்க்க வருவதும், திரும்பிச் செல்வதும் கோலாகலம்! உண்மையில் அது சித்திரைத் திருவிழா அல்ல, உண்ணும் விழா!

    மதுரையின் சிறப்பு இன்னும் பல விஷயங்களில். தூங்கா நகரம். எந்நேரமும் உணவு கிடைக்கும் ஊர். மதுரையைச் சுற்றிய கழுதை கூட ஊரை விட்டுத் திரும்பிஹ் செல்லாது என்பார்கள். ஆனாலும் நான் வந்து விட்டேன்! :)))))

    ReplyDelete
  2. ரசிக்க வைக்கும் நினைவுகள் அம்மா...

    சென்னை - அப்போதே வெண்ணை என்று சொல்லி விட்டார்களே...!

    ReplyDelete
  3. ஒரு கடையில் குடிக்கத் தண்ணீர் கேட்டதுக்குக் கன்னாபின்னாவெனச் சென்னை மொழியில் திட்டினாங்க. அப்புறமாக் காசு கொடுத்து எலுமிச்சை ஜூஸ் வாங்கிக் குடிச்சோம். அப்போவே எனக்குச் சென்னை பிடிக்காமல் போய் விட்டது! :)))))))) ஆனால் மதுரையிலே அப்படி இருந்ததில்லை. இப்போத் தெரியலை. :(//

    அன்று போல் தான் இன்றும். த்ண்ணீர் கஷ்டக்காலத்திலும் வீட்டுக்கு வீடு மண்பானையில் தண்ணீர் வைத்து இருக்கிறார்கள்.
    மாடுகளுக்கு இன்றும் கழனி தண்ணீருக்கு பாத்திரம் வைத்து பழாபோவது பசு வயிற்றில் என்று வீட்டுக் காய்கறி குப்பைகள் சாதம் வடித்த கஞ்சி என்று எல்லாம் கலந்த நீர் வைக்கிறார்கள்.
    மீனாட்சி திருமணம் முடிந்தவுடன் கல்யாணச்சாப்பாடு போட , காய்கறிகள் வெட்டிக் கொடுக்க மற்ற வேலைகள் செய்ய என்று நிறைய பேர் உதவி செய்ய போவார்கள். எல்லோருக்கும் சாப்பாடு உண்டு என்பார்கள்.
    உறவினர்கள் இருந்தும் திருவிழாவிற்கு போக முடியாமல் இருப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. அடுத்த முறையாவது சித்திரை திருவிழா முழுமையாக பார்க்க இறைவன் அருள வேண்டும்.
    உங்கள் பதிவின் மூலம் திருவிழா கண்டேன் நன்றி.

    ReplyDelete
  4. நானும் மதுரையை விட்டு வந்தாச்சு.போனாலும் தங்குவது இல்லை. மணிக்கணக்குத் தான்! :)

    ReplyDelete
  5. ஆமாம் டிடி, பல கசப்பான அனுபவங்கள் சென்னையிலே! :( அதே போல் கும்பகோணமும் பிடிக்காது! :)))

    ReplyDelete
  6. கோமதி அரசு, மதுரை ஒரு பெரிய கிராமம் என்று தான் சொல்வாங்க. இப்போ ஒரு வாரத்துக்கு ஒரு முறை தான் தண்ணீர் கிடைப்பதாகவும் கேள்விப் பட்டேன். ஆனாலும் மனித மனதில் ஈரம் இருப்பது குறித்து மகிழ்ச்சி. கடைசியாத் திருவிழாப் பார்த்தது என் பொண்ணு ஐந்து மாசமா இருக்கிறப்போ தான். அப்போவும் தேர் பார்க்கக் கூடாதுனு தேரன்னிக்கு வெளியேயே விடலை. :) அழகர் ஆத்திலே இறங்கற அன்னிக்கும் கூட்டம் இருக்கும்னு என்னை வீட்டிலே விட்டுட்டுப் போனாங்க. எதிர்சேவை தெரிஞ்சவங்க மண்டகப்படினாலே போனோம். ஆனால் அன்னிக்கு ஒரே அமர்க்களம்.

    பல்லக்குத் தூக்கும் ஆட்களை அரசாங்கம் மாற்றி இருந்ததுனு நினைக்கிறேன். பரம்பரையாப் பல்லக்குத் தூக்கறவங்க அழகரை விடாமல், தாங்களே தூக்க, புதுசா நியமிச்சவங்க போட்டி போட, அழகர் பட்ட பாடு இன்னமும் நினைவில் இருக்கு. நாங்க இருந்த மண்டகப்படிக்கு வந்த அழகரைக் கிளம்ப விடாமல் இருவரும் போட்டி போட பல்லக்கு சரிய, அருகே இருந்த என் மேல் விழுந்திருக்கணும். அழகர் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தார். :))))எல்லாருமாய்ச் சேர்ந்து என்னை உள்ளே கூட்டிச் சென்று விட்டனர். அதான் நான் மதுரையில் கலந்து கொண்ட கடைசி சித்திரைத் திருநாள்.

    ReplyDelete
  7. இனிய நினைவு பகிர்வுகளுக்கு நன்றி! அன்றே தாகம் தீர்க்காதமையால்தான் இன்று இவர்கள் தாகத்திற்கு தவிக்கிறார்கள் போல! ஹாஹா!

    ReplyDelete
  8. இனிய நினைவுகள்.நானும் கூட்டத்தைப் பார்த்தே சந்தோஷப் பட்டு இருக்கிறேன். தென் மாவட்டங்களில் தண்ணீர் கொடுக்கவில்லையானால் தான் அதிசயம்.//////மதுரையின் சிறப்பு இன்னும் பல விஷயங்களில். தூங்கா நகரம். எந்நேரமும் உணவு கிடைக்கும் ஊர். மதுரையைச் சுற்றிய கழுதை கூட ஊரை விட்டுத் திரும்பிஹ் செல்லாது என்பார்கள். ஆனாலும் நான் வந்து விட்டேன்! :)))))/////வந்தாச்சு. என்ன செய்யலாம்>*""

    ReplyDelete
  9. வாங்க சுரேஷ், அது என்னமோ சென்னையிலே மனித நேயம் கொஞ்சம் கம்மினு தான் தோணும். :)

    ReplyDelete
  10. வாங்க வல்லி. கூட்டம்னாலே இப்போ அலர்ஜியா இருக்கு. மருத்துவர் வேறே தடா போட்டிருக்கார். :(

    ReplyDelete
  11. என் கணவருக்கும் மதுரை என்றால் அப்படி ஒரு மலரும் நினைவுகள். இப்போதும் சொல்லுவார் மறுபடி மதுரைக்குப் போய் ஒருமுறையாவது அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்கவேண்டும் என்று. எனக்கும் கூட்டம் என்றால் அலர்ஜி. தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்வதுடன் சரி.
    நான் சித்திரம் உத்சவம் சேவித்தது ஸ்ரீரங்கத்தில் தான்.

    ReplyDelete
  12. மலரும் நினைவுகள். கூட்டம் என்றால் கொஞ்சம் கடினம் தான்.....

    ReplyDelete
  13. சட்டைப்பாவாடை போட்ட நாட்கள் என்றுமே இனிக்கும் / எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும் வயதாகி விட்டால் இனி தெரிந்து என்ன ஆக இருக்கிறது என்னும் அலுப்பு.

    ReplyDelete
  14. வாங்க ரஞ்சனி, உங்க கணவரோட மலரும் நினைவுகளைக் கேட்டுப் பகிருங்களேன். :)ஶ்ரீரங்கம் சித்திரை உற்சவம் பார்க்க முடிவதில்லை. வெயில் ஒரு காரணம், கூட்டம் இன்னொரு காரணம்.

    வெயிலில் நின்றால் ஃபோட்டோ அலர்ஜிக்கும், ஆஸ்த்மாவுக்கும் பதில் சொல்லணும். கூட்டமும் அதேகாரணம். :)

    ReplyDelete
  15. வாங்க வெங்கட், இந்த வருஷம் தேர் சமயம் உங்களைத் தான் நினைச்சேன். போன வருஷம் ஃபோட்டோ எடுத்திருந்தீங்க. :)

    ReplyDelete
  16. வாங்க ஜிஎம்பி சார், இப்போவும் ஆசை இருக்கு தாசில் பண்ண. அலுப்போ,சலிப்போ இல்லை. அங்கே போனால் தங்குமிடம், கழிவறை வசதி, சாப்பாடு போன்ற முக்கியப் பிரச்னைகள்! அதான் போவதில்லை. :))))

    ReplyDelete
  17. எனக்குத் தெரியாமல் எத்தனையோ இருக்கே! :)

    ReplyDelete