நான் மதுரை, நம்ம ரங்க்ஸ் கும்பகோணம்னு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். முழுக்க முழுக்க மாறுபட்ட குணாதிசயங்கள். பழக்க, வழக்கங்கள், பேச்சுக்கள், வழக்கு மொழிகள், வட்டார வழக்குச் சொற்கள்னு எல்லாமும் எனக்குக் கல்யாணமாகிப் போனப்போ ரொம்பப் புதுசாவே இருந்தது. அதுவும் எங்க வீடுகளிலே மிஞ்சிப் போனால் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி சம்பந்தங்கள் தான். அநேகமா எல்லாப் பழக்கங்களும் ஒன்றாகவே இருக்கும். பேச்சின் தொனியையும், ஒரு சில வட்டார வழக்குச் சொற்களையும் தவிர! கோலம் போடுவதிலிருந்து வேறுபாடுகள் உண்டு. மதுரைப்பக்கம் இரட்டைக் கோலம், தஞ்சைப் பக்கம் ஒற்றைக் கோலம் பெரிதாகப் போடுவது. இப்போல்லாம் இந்த வழக்கப்படியே நானும் போட ஆரம்பிச்சிருக்கேன். அதே போல் அமாவாசை என்றாலும் மதுரைப்பக்கம் கோலம் உண்டு. அதிலும் தர்ப்பணம் முடித்துக் கட்டாயமாய்க் கோலம் உடனே போட்டாகணும். ஆனால் தஞ்சைப்பக்கம் அமாவாசை அன்று கோலம் கிடையாது. தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் விதிவிலக்கு.
ஆகவே கல்யாணம் ஆகிப் போனப்போ ஒருத்தருக்கொருத்தர் அனுசரிப்பது என்பது இரண்டு பக்கமும் கொஞ்சம் சிரமம் தான். பெரிய பித்தளைத் தாம்பாளங்களைத் தான் நாங்க தாம்பாளம் எனச் சொல்வோம். சாப்பிடும் தட்டுக்களை தட்டு என்றே சொல்வோம். ஆகவே கல்யாணம் முடிந்து, கிரஹப்பிரவேசம் ஆன மறுநாள் எல்லோரும் ஊருக்குப் போனதும் என் மாமியார் இலை பத்தலைனால் மத்தவங்களுக்குத் தாம்பாளத்தைப் போடுனு சொன்னதும் எனக்கு அதிர்ச்சி! ஹிஹிஹி, கலாசார அதிர்ச்சினு வைச்சுக்குங்களேன்! அதே போல் தோசைக்குத் தொட்டுக்கத் தக்காளிச் சட்னி தான் எங்க வீட்டிலே பண்ணுவாங்கனு தெரிஞ்ச எங்க மாமியார் வீட்டிலே அதே அளவுக்குக் கலாசாரத் தாக்குதல்! என்னத்தைச் சொல்றது. தேங்காய்ச் சட்னி தான் நல்லா இருக்கும்னு அவங்களும், தக்காளிச் சட்னிக்கு என்னோட ஓட்டுனு நானும் சொல்லக் கடைசியில் இரண்டையும் அரைச்சுட்டு யாருக்கு எது பிடிக்குதோ அதுனு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
அதே சமயம் சாப்பாட்டில் தக்காளி சாதம், வெஜிடபுள் புலவ் என்று நான் செய்தால் மாமியாருக்கு அதிர்ச்சியாக இருக்கும். மத்தவங்களை அதை எல்லாம் சாப்பிடாதே என்றே சொல்வாங்க. ஆனால் எப்படி இருக்குனு பார்க்க ஆவல் கொண்டவங்க அதையும் மீறிச் சாப்பிடுவாங்க. இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக அவங்க சமையலை நானும் என்னோட சமையலை அவங்களும் அங்கீகரிக்க ஆரம்பிச்சோம். இப்போ என்னோட வழக்கம் என்னனா சாதாரண நாட்களிலே எங்க வீட்டுப் பழக்கப்படியோ, அல்லது புக்ககத்து வழக்கப்படியோ சமையலைச் செய்தாலும் விசேஷ நாட்களிலும், விரத நாட்கள், முக்கியமான வழிபாடுகளில் புக்ககத்து வழக்கமே பின்பற்றி வருகிறேன். சிராத்தம் போன்ற நாட்களிலும் புக்ககத்து வழக்கமே. அதே சமயம் எங்க மாமியாரும் இப்போ மாறிக் கொண்டு அல்லது மாற்றிக் கொண்டு எப்போவானும் வெங்காயம் போடாமல் தக்காளி சாதம், வெஜிடபுள் புலவ், மசாலா சேர்க்காத சாம்பார் சாதம்னு செய்ய ஆரம்பிச்சதோடு இல்லாமல் சாப்பிடவும் செய்யறாங்க. வெங்காயம், பூண்டு இல்லாமல் தான்.
அதே போல் நான் கந்த சஷ்டி கவசம் சொன்னாலே ஆச்சரியமாகப் பார்க்கும் எங்க மாமியார் பின்னாட்களில் அதையும் ஒரு வழிபாட்டுக்குரிய தோத்திரமாக ஏற்றுக் கொண்டு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. இப்படிப் பெரியவங்க என்னோட கருத்துகளை ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் நானும் முக்கியமான காலங்களில் குறிப்பாகப் பண்டிகைகள், விசேஷங்கள், கல்யாணங்கள், குலதெய்வப் பிரார்த்தனைகள், சிராத்தம் போன்ற தினங்களில் பெரியவங்க ஆலோசனைகளைக் கேட்பது உண்டு. என்றாலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக அபிப்பிராய பேதங்கள் வரும் தான். வராமல் இருக்க நாம் ஒன்றும் கடவுளர் இல்லை! சாதாரண மனிதர்கள் தானே!
குடும்ப வாழ்க்கையிலேயே இப்படி எல்லாம் இருக்கிறது. அனுசரிப்பு என்பது இன்னமும் தேவை! இன்னமும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கை வண்டி ஒழுங்கான பாதையில் செல்லும்; செல்ல முடியும். அப்படி இருக்கையில் ஒரு நாடு என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு! அதை வழி நடத்திச் செல்லும் பிரதமர் புதிய கருத்துகளைக் கொண்டிருப்பதும், புதிய பாதையில் நடை போடுவதும் புதிதே அல்ல. ஆனால் அதை அவர் சார்ந்த கட்சியின் மூத்தோர்கள் கண்டிக்கிறார்கள் என்றால் அவர்கள் வந்த பாதை அப்படி! திடீரெனப் புதியதொரு பாதைக்குச் செல்வதையோ, புதியதொரு கருத்தையோ அவங்க ஏற்க மறுக்கிறாங்க. என்றும் சென்று கொண்டிருக்கும் தடத்திலேயே செல்ல வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். வீட்டிற்குப் புதிதாக வந்திருக்கும் மருமகள் யார் என்ன கேலி செய்தாலும் வீண் பேச்சுக்களைச் சொன்னாலும் பதில் சொல்லாமல் இருப்பதைப் போலப் பிரதமர் எதற்கும் பதில் சொல்லாமல் அவர் வழியில் செல்வதை எதிர்க்கின்றனர்.
பொதுவாக வீட்டுப் பெரியவங்களைச் சிறியவர்கள் தாங்கள் ஒரு ஸ்திரமான நிலைக்கு வந்துவிட்டால் யோசனை கேட்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். பின்னர் செயலாற்றுகையில் அவர்கள் யோசித்துத் தற்காலச் சூழ்நிலைக்கேற்பத் தான் முடிவெடுப்பார்கள். அதற்காக அவர்கள் செல்லும் பாதை தவறெனச் சொல்ல முடியுமா? அதிலும் அக்கம்பக்கம் அண்டை நாடுகளில் இருந்தெல்லாம் நட்புக்கரங்கள் நீட்டிய வண்ணம் நமக்குச் சாதகமான சூழ்நிலைகள் உருவாகின்றன என்பதே செல்லும் பாதை சரியானது என்பதால் தானே! இன்று நம் நாடு ஊழல்கள் குறைந்துள்ள நாடு என்னும் தர வரிசையில் சீனாவை முந்திக் கொண்டிருக்கிறது. இது ஊடகங்களால் பேசப்படவில்லை என்பதால் உண்மை இல்லை என ஆகிவிடாது! இதே போல் வளர்ச்சிகள் மெல்ல மெல்ல உருவாகுகின்றன. ரயில்வே துறையிலும் சுரேஷ் பிரபு வியத்தகு மாற்றங்களைச் செய்து வருகிறார். வண்டி கிளம்ப அரை மணி முன் கூடக் காலி இருக்கும் இடங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளும் வசதி புதிதாக உருவாக்கப்படுகிறது. ஆனால் ரயில் முன்பதிவை ரத்து செய்தால் கிடைக்கும் தொகையில் தான் முரண்பாடு. சாமானியர்களுக்கு அதில் பெருத்த அடி விழும்
இப்படிச் சில குறைகள் இருந்தாலும் பொதுவாக நிறைகளே அதிகம் காணப்படுகின்றன. ஒரு பெரிய பட்டியலே இருக்கு! இந்தச் சமயம் கட்சியின் மூத்தோர்கள் தங்கள் கட்சியின் இளையவர்களான பிரதமரிலிருந்து மற்ற மந்திரிகளைச் சாடுவது கட்சியின் மேலும் நாட்டின் மேலும் உள்ள அக்கறையினால் தான். நம் வீட்டில் தாத்தா இருந்தால் நாம் இரவிலோ அல்லது அடிக்கடியோ வெளியே செல்லும்போது கட்டாயம் கேள்வி கேட்பார். அந்தக் கேள்வி நமக்குப் பிடிக்காது தான். ஆனால் அதற்காக வாயை மூடிக் கொண்டு தாத்தா இருக்க மாட்டார். நாமும் சும்மா இருக்க மாட்டோம். உரிமையிலும், கோபத்திலும் வெடுக்கெனப் பேசுவோம். இது எங்கும் நடப்பது தான். ஆனால் ஊடகங்கள் இதைப் பெரிதாகத் தூக்கிக் கொண்டு அலைகின்றன. இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே நல்லது. இது ஒரு குடும்பச் சண்டை! குடும்பம் பெரிய குடும்பம். நாமும் அதில் அங்கத்தினர்கள் என்பதால் கொஞ்சம் கவலை! மற்றபடி பயப்படும்படி எதுவும் இல்லை என்பதே உண்மை!