எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 21, 2015

மழையின் புலம்பல்!

மழை.. நான் கடலுக்கே போகிறேன்!
----------------------------------------------------------------
நெஞ்சுருகி குமுறியதால் தானே வந்தேன்
பஞ்சம் என்று கதறியதால் தானே வந்தேன்
கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன்,
உனக்காக கீழ் இறங்கினேன்.
கொஞ்சமும் நினைவு இல்லையா?
வஞ்சனை செய்கிறாயே
என்னை அழைத்து விட்டு ..
வறண்ட என் நிலக் காதலி
நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்
சுரண்டி அவள் மேனியெல்லாம்
சிமெண்டாலே போர்த்தி வைத்தாய்
நனைத்து அணைப்பதாலே
உடல் குளிர சுகம் கொள்வாள்
அனைத்தும் நிராகரித்து
கடல் சேரவே வழி செய்தாய்
குளம் குட்டை ஏரியென
அங்கங்கே தங்கியிருந்தேன்
வளம் கொளித்த அத்தனைக்கும்
பங்கம் செய்யவே வாழ்ந்திருந்தாய்
உனக்கு வழி வேண்டி
சாலைகள் நீட்டினாய்,
தொழிற்சாலைகள் கட்டினாய்,
காண்கிரீட் கட்டடமாய்
நிலமெல்லாம் நிரப்பினாய்.
நான் செல்லும் வழியடைத்து
திட்டமிட்டு துரத்தினாய்.
பூமித்தாய் மூச்சி விட திணறுகிறாள்!
மண் பார்க்க முடியாமல்
அவள் முகமெல்லாம்
மறைத்து விட்டாய்.
எனக்கென்று இருந்த சின்னஞ் சிறு
உறவுகள் தானே குளமும் குட்டையும்.
கண்மூடித்தனமாக
மண் போட்டு மூடி விட்டாய்.
என்னையே நம்பியிருந்த
கடைசி உறவுகளையும்
கொள்ளளவு ஏற்றியே உடைப்பெடுத்து
கொல்ல வைத்தாய்.
பள்ளம், குழி, சிறு தாழ்வு இருந்தாலே
வெள்ளமாய் தங்கி வாழ்வு தருவேனே?
உள்ளம் என்று இருந்திருந்தால்
கள்வன் போல் வசப்படுத்தி
கல் மண் கொட்டி குப்பை நிரப்பி
நீ மட்டும் தங்கும் தப்பை நினைப்பாயா?
என்னை வந்த வேகத்திலே
விரட்டி விட்டு
மண்ணை துளையிட்டு
நானூறு அடியில் என்ன தேடுகிறாய்?
நாற்பது அடியில்
கிணற்றின் மடியில்
நாளும் சுரந்தேனே !
ஊற்று, கால் என்றெல்லாம் நீ
முகர்ந்து குடிக்க மகிழ்ந்தேனே!
நினைவில்லையா?
எனக்கான இடத்தை நீ
உனக்காக வளைத்த மடத்தை
செய்யாமல் இருந்திருந்தால்
உன் கால் சுற்றி
கட்டிய வீட்டை சுற்றி
தேங்கி கிடக்கும் மடமையை
நானா செய்திருப்பேன்?
அவமானம் வேறு
வெகுமானமாக தருகிறாய்.
நீர் வடியும் இடமெல்லாம்
நீயாக அடைத்து விட்டு
பேரிடர் என்கிறாய்,
வெள்ளப்பெருக்கு என்கிறாய்,
மக்கள் அவதி என்கிறாய்,
இயல்பு வாழ்க்கை பாதிப்பென்கிறாய்.
அலுவலகம் செல்வதற்கு,
தொழில் நிற்காமல் நடப்பதற்கு,
மழை நிற்க வேண்டுகிறாய்.
பிழையாக குழி
நீ உனக்கே தோண்டுகிறாய்
உன் வாழ்வாதாரம் வேண்டியே
உன்னைத் தேடி நான் வந்தேன்.
உனக்கே வேண்டாம் என்ற போது
நான் கடலுக்கே போகிறேன்.
இனியாவது நீ திருந்துவாயா
உனக்காக நான் வந்தால் ?

திரு ஜெயராஜ் மணி அவர்களின் கவிதை, தினகரனில் வெளி வந்தது என்கிறார்.


எல்லா நாடுகளிலும் மழைப்பாடல் என்ற ஒன்றுண்டு. மழை பெய்வது நம்மை வாழ வைக்கவே! அழிப்பதற்கு அல்ல! நாம் தவறுகளை மேலும் மேலும் செய்து கொண்டே போவதால் மழையால் துன்பப் பட நேரிடுகிறது. அந்த மழைக்கு வாயிருந்தால் மேற்கண்டவாறே புலம்பி இருக்கும். யார் எழுதினதுனு தெரியலை. அருமைத் தம்பி அஷ்வின் ஜி அவர்களால் முகநூலில் பகிரப்பட்டிருந்தது. இங்கேயும் பகிர்கிறேன்.  இது நான் எழுதியது என யாரும் தவறாக நினைக்க வேண்டாம். எழுதியவருக்குப் பாராட்டுகள். பெயர் கிடைத்தால் கட்டாயமாய்ப் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

23 comments:

  1. நீங்கள்தான் எழுதி இருக்கிறீர்கள் என்றே நினைத்தேன். அற்புதம். அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஹையோ, நானா? கவிதையா? அவ்வளவெல்லாம் மண்டையிலே மசாலா இல்லை! :(

      Delete
  2. இன்றைய நிலையினைச் சரியாக படம் பிடித்து காட்டியது இக்கவிதை. செய்வதெல்லாம் செய்துவிட்டு இயற்கையைப் பழிக்கிறோம்.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், உண்மை தான்! :(

      Delete
  3. அடடே கவிதையும் எழுத ஆரம்பித்து விட்டீர்களோ என்று நினைத்தேன்! சிறப்பான கவிதையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்! எழுத்தாளர் கவிஞருக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ். கவிஞர் யார்னு தெரியலை! வாட்ஸப்பில் வந்ததாம். யாராக இருந்தாலும் கவிஞருக்குப் பாராட்டும், நன்றியும்.

      Delete
  4. 'வெளியிலிருந்து உள்வாங்கிக் கொண்டதை, அந்த வெளி வளிக்கேத் திருப்பலாம்' என்பதற்கு சூல் கொண்ட மேகங்கள் மழையாய்ப் பொழிவதை உதாரணமாகச் சொல்வார், மெளனி அவர்கள். மெளனியை உங்களுக்கும் தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார்! மௌனியை நேரிலெல்லாம் பார்த்ததில்லை. எழுத்துத் தான் அறிமுகம்! :)

      Delete
  5. மழை பற்றி எழுதி இருந்ததைப் படித்ததும் என் மகன் சொன்ன ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது ஊரில் மழை இல்லாமல் மழை வேண்டி இரு கழுதைகளுக்கு மணம் முடித்தார்களாம் இப்போது அந்தக் கழுதைகளைத் தேடுகிறார்களாம் அவற்றுக்கு விவாக ரத்து செய்ய.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இது கொஞ்ச நாட்களாக முகநூலில் சுற்றிக் கொண்டும் இருக்கிறது! :)

      Delete
  6. இது நான் எழுதிய கவிதை. என்னுடைய முக நூலை பார்க்கவும்..
    ஜெயராஜ் மணி
    Jayaraj Mani

    ReplyDelete
    Replies
    1. அப்படியா????

      Delete
    2. ஆமாம். நீங்கள் இதை பகிர்ந்தற்கு மிக்க நன்றி. பதிப்பில் என்னுடைய பெயரை சரியாக குறித்தால் நன்றாக இருக்கும்.


      Please check my original posting in Facebook to verify the time and check the Dinakaran Newspaper which published my name

      https://m.facebook.com/story.php?story_fbid=981860058539479&id=100001464830868

      https://m.facebook.com/dinakarannews/photos/a.420417614663044.88918.107459262625549/1035073229864143/?type=3

      Delete
    3. You can also Google search my name ஜெயராஜ் மணி and kavithai. Thanks.

      Delete
  7. இது நான் எழுதிய கவிதை. என்னுடைய முக நூலை பார்க்கவும்
    ஜெயராஜ் மணி
    Jayaraj Mani

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம்ம்ம்!

      Delete
    2. ஆமாம். நீங்கள் இதை பகிர்ந்தற்கு மிக்க நன்றி. பதிப்பில் என்னுடைய பெயரை சரியாக குறித்தால் நன்றாக இருக்கும்.


      Please check my original posting in Facebook to verify the time and check the Dinakaran Newspaper which published my name

      https://m.facebook.com/story.php?story_fbid=981860058539479&id=100001464830868

      https://m.facebook.com/dinakarannews/photos/a.420417614663044.88918.107459262625549/1035073229864143/?type=3

      Delete
    3. திரு ஜெயராஜ் மணி, உங்கள் அருமையான கவிதைக்குப் பாராட்டுகள். தாமதமாகப் பதில் சொல்வதற்கு மன்னிக்கவும். :(

      Delete
  8. சத்தியமாக நீங்கள் எழுதியதாகத்தான் நினைத்தோம்.

    அருமை அருமை அருமை!!!! எத்தனை அருமைகள்...முடிவற்ற அருமைகள்.......

    உண்மையான வார்த்தைகள். செம அட்டாக்! ஹும் மனுஷன் திருந்தணுமே.....இதை எழுதியவர் யாரோ அவருக்கு எண்ணிக்கையில்லா பாராட்டுகள்! அதைப் பகிர்ந்த உங்களுக்கும் எண்ணிக்கையில்லா பாராட்டுகள் சகோதரி!

    ReplyDelete
  9. ஜெயராஜ் மணி அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. பெரு மகிழ்ச்சி....

      Delete
  10. ஜெயராஜ் மணி அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    பகிர்ந்த உங்களுக்கு நன்றி கீதா.
    கவிதையில் உள்ள அனைத்தும் உண்மை. உணர்ந்து நடந்தால் நல்லது.

    ReplyDelete