எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 15, 2018

நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம் 7

ஸுமேரு – மத்ய- ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர -நாயிகா!
சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச –ப்ரஹ்மாஸன –ஸ்திதா!!
என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியபடிக்கு லலிதா காமேஸ்வரரின் திருக்கல்யாணத்துக்குப் பின்னர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீகாமேஸ்வரரோடு வீற்றிருந்த தேவியிடம் தேவாதி தேவர்கள் பண்டாசுர வதம் பற்றி நினைவூட்டுகின்றனர். அம்பிகையும் இதற்கெனவே தான் தேவ கார்யத்துக்காக அவதாரம் எடுத்திருப்பதால் இனி தாமதிக்கக் கூடாதென்று தன் சேனைகளைத் திரட்டிக்கொண்டு பண்டாஸுரனோடு யுத்தம் செய்யத் தயாராகின்றாள்.


இதை லலிதா சஹஸ்ரநாமம் “தேவர்ஷி-கண-ஸங்காத ஸ்தூயமானாத்ம-வைபவா
பண்டாஸுர-வதோத்யுக்த சக்திஸேனா-ஸமன்விதா!! என்று கூறுகிறது.

ரதகஜ துரக பதாதிகளுடன் கடல் 
அலைபோல வருகின்றாள் சேனையுடன்
சதுரங்கமான சக்தி சேனைகளுடனே
சங்கரி வருகிறாள் –சோபனம் சோபனம்

சக்ரராஜ-ரதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதா
கேயசக்ர-ரதாரூட- மந்திரிணீ-பரிஸேவிதா
கிரிசக்ர-ரதாரூட-தண்டநாதா-புரஸ்க்ருதா
ஜ்வாலாமாலினிகாக்ஷிப்த-வஹ்னி ப்ராகார-மத்யகா
பண்டஸைன்ய-வதோத்யுக்த-பாலா விக்ரம-நந்திதா
மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா

ஸ்ரீசக்ர ராஜ ரதத்திற்கொன்பது தட்டு
சிங்கார உருளைகள் நான்கு வேதம்
பூஜ்யமான தர்மார்த்த காம மோக்ஷம்
புனிதமான நான்கு குதிரைகளாம்
ஆனந்தக் கொடிமரம் அதற்கு மேலழகாய்
ஐந்து யோசனை யகலம் முத்துக்குடை
முந்நூறு தேர்ப்படை முழுதுஞ் சக்திகள் வாராள்
முழுத்தேரும் தேவிக்குச் –சோபனம் சோபனம்


அம்மன் தொரட்டியில் இருந்துமொரு தேவி
ஸம்பத்கரி என்று உண்டானாள்
நன்மையாகவே பின்னும் அச்வாரூடை யுதித்தாள்
நாகபாசத்திலே உண்டாகி
யானைகள் ஸம்பத்கரிக்குச் சேனையாம்
அச்வாரூடைக்குக் குதிரைகளாம்
தாயார் மந்திரிணியுடைய ஸ்ரீசக்ரத்தில்
தட்டுக்களேழுண்டு-சோபனம் சோபனம்

மந்த்ரிணி தேரிலும் ஸ்ரீசக்ரம்போலவே
மஹாசக்திதேவிகள் நிறைந்திருக்காள்
விந்தையாய்ப் பதினாறு நாமத்தால் தேவர்கள்
மந்த்ரிணியை ஸ்தோத்திரங்கள் செய்தார்
சியாமளையுடைய திருக்கையிலிருந்து
தானும் பாணத்தோடொரு கோதண்டத்தை
நமஸ்கரித்தம்மனிடம் வாங்கியே மந்த்ரிணி
நாயகி வருகிறாள் –சோபனம் சோபனம்

“பைரவி, பஞ்சமி பாசாங்குசைபஞ்ச பாணிவஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வைரவி மண்டலி மாலினி சூலி வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே!” 
என்கின்றார் அபிராமிபட்டர்.


பைரவியும்=பைரவரின் சக்தியான இவள் பார்த்தாலே அச்சம் தருபவளாயும், பஞ்சமியும், சதாசிவத்தின் சக்தியைப் பஞ்சமி என்பார்கள் இங்கே! இது ஐந்தாவது சக்தியான அனுகிரஹ சக்தியாகும். லலிதா சஹஸ்ரநாமம் இவளை, “பஞ்சமி, பஞ்சபூதேசீ பஞ்ச-ஸக்யோபசாரிணீ!” என்கிறது. வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி=சண்டிகா தேவி, கோபத்தோடு வந்து அசுரனை வதம் செய்தவள். “அபர்ணா, சண்டிகா, சண்டமுண்டாசுர நிஷூதனி” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும். அடுத்து காளி, கருநிறமுள்ள காளியை “மஹேச்வரி, மஹாகாளி” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும். கலா வைரவி மண்டலி =சூரிய, சந்திர மண்டலங்களில் வீற்றிருப்பதைக் குறிக்கும். மாலினி=அக்ஷரமாலையைச் சூடியவள், சூலினி=சூலத்தை ஆயுதமாகக் கொண்டவள், , வாராஹி, விஷ்ணு சக்தி வகையைச் சேர்ந்தவளான இவளை அம்பிகையின் அம்ச சக்திகளுள் தண்டினி என்னும் பெயரோடு அழைக்கப் படுவாள்.

இவ்வாறு அம்பிகை பல சக்திகளாய் விரிந்து நிறைந்து இருப்பதையே பட்டர்,
“ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்திவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்றால் இலையில் துயின்றெம்பெம்மானும் என் ஐயனுமே.”
என்கின்றார்.

“வாராஹி தேரிலும் சக்திகள் இருக்கின்றார்
வாராஹிப்போன்ற ப்ராக்கிரமமாய்க்
கோரமஹிஷம் மிருகம் சிம்ஹம் யாளிமேல்
கூட வருகிறார் சக்திகளும்
தண்டெடுத்து வரும் வாராஹியைப் போற்றி
அப்ஸரஸ்த்ரீகளும் தேவர்களும்
கண்டு பன்னிரண்டு நாமத்தால் வாராஹியைக்
கைகூப்பி ஸ்துதிக்கின்றார்-சோபனம் சோபனம்

ஆலவட்டம் வெண்கத்திக்குடைகள் கொடிகள்-கொண்டு
அஸுராள் மேல் கோபிஷ்டைகளாகக்
கோலாஹலமாக யுத்த பேரி வாத்யம் முழங்க
கொடி பறக்க அணியணியாய் வாராள்
தேவ வாத்தியம் முழங்க கந்தர்வர் கானம் பண்ண
தேவதாஸிகள் நாட்டியமாடிவர
தூயமுனிவர் மலர்சொரிய லலிதேச்வரி
சுகத்துடன் வருகிறாள்-சோபனம் சோபனம்

தேவி யுத்தத்திற்கு வருகின்றதைக் கேட்டு
திடுக்கிட்டுப் பண்டாஸுரன் சபையில்
கோபத்துடனே சிம்ஹாசனத்திலிருந்து
கூடிய அஸுராளோடு யோசித்தான்
இடிபோல் அட்டகாசஞ் செய்தான், கோட்டை வாசல்கள்
எல்லாவற்றிலும் காவல் வைக்கச் சொன்னான்
குடிலாக்ஷன் மந்திரியை யுத்தத்திற்கனுப்பினான்
கோபிஷ்டை லலிதையுடன் – சோபனம் சோபனம்

அடுத்து விநாயகர் உற்பத்தியும், விக்ன யந்திரம் அழிதலும் பார்க்கலாம்.

ஹர –நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவ நெளஷதி:

ஈசன் காலாக்கினி ருத்ரனாகத் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தபோது அம்பிகையானவள் தன் குளிர்ந்த நோக்கால் சஞ்சீவனி மருந்து போலச் செயல்பட்டு மன்மதனைப் பிழைக்க வைத்தாள். அத்தகைய சஞ்சீவனி போலவே ருத்ரன் உலகங்களை எரிக்கும்போது எரிந்த உலகிற்குக் குளிர்ச்சியைத் தன் பார்வையால் கொடுத்து மன்மதனைப் பிழைக்க வைத்தது போல் அனைவரையும், உலகங்கள் அனைத்தையும் பிழைக்க வைக்கிறாள். ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தோடு அம்பிகையின் ஸ்வரூபமும் கலந்திருக்கின்றதாவது பூவிலே எப்படி மணம் சேர்ந்திருக்கிறதோ அவ்வாறு இருக்கிறதாம். பூவிலிருந்து சுகந்தத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ, அக்னியில் இருந்து பிரகாசத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ அப்படியே ஈஸ்வரனையும் அம்பிகையையும் பிரிக்க இயலாது. இந்த அபூர்வ தம்பதிகளின் ஆநந்தமயமான பிரகாசமே அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் ஜீவாதாரமாய் விளங்குகிறது. இதையே லலிதா சஹஸ்ரநாமத்தில் வ்யோமகேசீ, விமானஸ்தா” என்று கூறுகின்றனர். இதை ஆகாச தத்துவம் எனவும் கூறுவர். அர்த்தநாரீச்வரரைக் குறிப்பதாயும் கூறுவார்கள்.

இதை பட்டர்

“அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமான தபசயமாகமுன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே!

தேவியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அதிசயமான வியப்பைத் தரும் திருவுருவை உடைய தேவி, அழகிய தாமரை மலர்களால் துதிக்கப்படும் அந்தத் தேவியே அந்தத் தாமரைக்கொடி போன்ற மெல்லிய உடலை உடைய அழகியவள், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய ஈசனைத் தன் வயம் இழுத்து அவரது இடப்பாகத்தைக் கவர்ந்து கொண்டதை எங்கனம் சொல்லுவேன்? என்கிறார். மேலும், அந்த வாமபாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்து ஒன்றி இருக்கும் கோலமும், நம் உள்ளத்துள்ளே உள்ள ஆணவத்தைப் போக்கி நம்மைத் தடுத்தாட்கொள்ளுகிறதாம். அதுவும் எப்போது?? “வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே!” என்கிறார்.

“வவ்விய பாகத்திறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே!”

காலன் வந்து நம் உயிரைக்கொள்ளும்பொருட்டு வரும்போது அம்பிகையின் தரிசனம் வேண்டிப் பிரார்த்திக்கொள்ளவேண்டும் என்கிறார் பட்டர். இனி லலிதையின் சேனை எவ்வாறு யுத்தம் செய்தது என்று பார்ப்போம்.

“பண்டஸைந்ய-வதோத்யுக்த-சக்தி-விக்ரம-ஹர்ஷிதா!
நித்யா-பராக்ரமாடோப-நிரீக்ஷண-ஸமுத்ஸூகா!!
பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா!
மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா!
விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா!
காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேஸ்வரா!
மஹாகணேச-நிர்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா!
பண்டாஸூரேந்த்ர-நிர்முக்த-சஸ்த்ர-ப்ரத்யஸ்த்ர-வர்ஷிணீ!!


மேற்கண்ட ஸ்லோகங்களில் நடைபெறும் சம்பவங்களையே இன்று பார்க்கப் போகிறோம். பண்டாசுரனை வதம் செய்யவென்று அம்பிகை அனுப்பிய சேனைகளோடு முதலில் மந்திரி போர் செய்ய வந்தான். நாற்பது அக்ஷெளஹிணி சேனைகளைக் கொண்டு யுத்தம் செய்தவனை சம்பத்கரி வதைக்கிறாள். அதன் பின்னர் அனுப்பிய குண்டனை அச்வாரூடை சம்ஹரிக்க, தன் சேனாபதிகள் ஐவரை அனுப்பி வைக்கிறான். கூடவே விஷமான மாயைகளையும், சர்ப்பேணிப் பிசாசுகளையும் அனுப்பிப் பயமுறுத்துகிறான். அந்தச் சர்ப்பேணியானவள் அசுரனின் கட்டளையாலே பல பாம்புகளைப் பெற்று அவற்றை எல்லாச் சக்திகளின் மேலும் ஏவிவிடுகிறாள்.

“விதவித சர்ப்பங்கள் விஷத்தைக் கக்கிக்கொண்டு
விழுந்ததுகள் சக்திசேனையின் மேல்
இதைக்கண்டு நகுலியம்மன் கருடன் தோளில்
இருந்ததிவேகமாய் ஓடி வந்து
பாம்புக்கு ம்ருத்யுவாம் கீரிப்பிள்ளைகளைப் 
பல்லுகளிலிருந்து விழவடிஅத்தாள்
அம்மெட்டுப் பாம்பையும் துண்டாக்கியது
அம்மன் கீரிப்பிள்ளைகள்-சோபனம் சோபனம்

இதைக் கண்ட பண்டாசுரன் தன் ஏழு பிலாஸ்கார் மந்திரி ராணுவத்தை அனுப்பி சூரியனையும் மிகவும் வருத்தித் தன் வரத்தாலே அம்மன் சேனையை ஸ்தம்பிக்க வைத்தான். அப்போது தண்டினி முன்னால் ஓடோடி வந்து மந்திரிகளின் கண்களைக் குருடாக்கி அனைவரின் தலைகளையும் கொய்து மாலையாகப் போட்டுக்கொள்கிறாள். பண்டாசுரன் தன் சகோதரர்களோடு கலந்து ஆலோசித்துவிட்டுக் குடிலாக்ஷனை மேலும் சேனைகளோடு அனுப்பி லலிதையை உயிரோடு பிடித்துக்கொண்டு வரச் சொல்கிறான். தேரைச் சுற்றி வளைத்துக்கொண்ட குடிலாக்ஷனின் கொடுமையால் சக்திகள் தேவியிடம் முறையிடுகின்றனர். அப்போது,

பின்னே கள்ளர் வந்து செய்யுங் கலகத்தைப்
புரட்டுச் செய்கையைத் தேவியறியாமல்
முன்னே தண்டநாதைச் செய்கின்ற சண்டையின்
வேடிக்கை பார்த்தம்மனிருந்து விட்டாள்
துரோகி விஷங்கள் ஒரு பாணத்தால் தேரின்
துலங்குங் கொடிதன்னை அறுத்துவிட்டான்
வேகமாய்ப் புருவங்களை அம்மன் கோபத்தால்
வில்லுப்போல வளைத்தாள்- சோபனம், சோபனம்.

அன்னையின் கோபத்தைக் கண்ட பதினைந்து காமேச்வர சக்திகள் அசுரனைக் கொல்ல அம்மனால் அனுப்பப் பட்டனர். ஜ்வாலா மாலினி முதல் பதினைந்து அசுரர்களையும் கொன்றழிக்க, குடிலாக்ஷனை வாராஹி துரத்துகிறாள். பின்னர் ஜ்வாலா மாலினியின் உதவியோடு அக்னிக் கோட்டையை நிர்மாணம் செய்து சக்திகள் அனைவரோடும் அம்பிகை உள்ளே இருக்கின்றாள்.

“குடிலாக்ஷனையும் துரத்தினாள் வாராஹி
கூடிவந்த அஸுராளைக் கொன்றாள்
விடியற்காலங் கண்டு விஷங்கன் செய்ததுகளை
விசையாய் மந்த்ரிணி தண்டநாதையுமாய்
அம்பாவிடத்தில் சொல்லி ஜ்வாலாமாலினியாலே
அக்னிக்கோட்டையைப் போடச் சொன்னாள்
தென்புறம் வீதியொரு யோஜனை வாசலில்
ஸ்தம்பினியும் காவல்-சோபனம் சோபனம்.

முப்பது யோஜனை உயரமுள்ள கோட்டை
முழுவதும் நூறு யோஜனை சுற்றளவு
இப்படி ஸ்ரீசக்கரத் தேருஞ் சேனையுங் கொண்டு
இருக்கின்றார் சக்திகள் தீக்கோட்டைக்குள்
தம்பியும் மந்திரியும் தப்பி வந்ததையும்
சலியாத தீக்கோட்டை மஹிமை கேட்டு
அன்பாய் முப்பது பிள்ளைகளைப் பண்டன் 
சண்டைக்கு அனுப்பினான் தேவி மேல்-சோபனம், சோபனம்

இப்போது பாலா திரிபுரசுந்தரியை அனுப்புகிறாள் தேவி. தண்டினியும், மந்த்ரிணியும் துணைக்கு வர, சின்னஞ்சிறு பெண்ணான பாலா கண்டித ரதத்தில் ஏறிக்கொண்டு போருக்குப் போகிறாள். பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா!” என மேலே கூறியுள்ள படிக்கு பண்டாசுரனின் புத்திரர்களையும், கூட வந்த அசுரர்களையும் பாலா திரிபுர சுந்தரி அழிக்கிறாள். அதைக் கேள்விப் பட்ட பண்டாசுரன் கொடிய அசுரன் ஆன விசுக்கிரனை அனுப்பி விக்ன யந்திரம் செய்யச் சொல்கின்றான்.

“பாலாதேவி கையால் பிள்ளைகள் மாண்டதைப்
பண்டன் கேட்டுப் புலம்பி அழுதான் மெத்த
கொலைபாதகன் விக்னயந்திரஞ் செய்யச் சொல்லிக்
கொடூரன் விசுக்கிரனை அனுப்பி வைத்தான்
துஷ்ட விசுக்கிரன் அக்னிக்கோட்டையில் வந்து 
சுற்றி உள்ளே போகமாட்டாதே
கெட்டவன் பாறையில் எட்டுத் தேவதேயந்திரம்
சீறி ஏவினான் கேளும்-சோபனம் சோபனம்

யந்திரத்தால் சக்திகள் புத்தி மயங்கியே 
எல்லோரும் ஸ்தம்பித்து இருந்தார்கள்
தண்டினி, மந்த்ரிணி, அம்பாளிடத்திற்குச் சொல்ல
மாதாவும் காமேசர் முகத்தைப் பார்த்தாள்
சக்தி கணபதி சுத்த லக்ஷணத்துடன்
திடுமென்று குதித்து வ்ந்து யந்திரத்தைக் 
குத்தித் தன் கொம்பாலே தூளாய்ப் பறக்கவிட்ட
குஞ்ஜார முகர்க்குச் –சோபனம், சோபனம்

விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா!
காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேஸ்வரா!
மஹாகணேச-நிர்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா!

அம்பாள் தன் பார்வையைக் காமேச்வரர் பக்கம் திருப்ப, அம்பாளின் மறுபாதியான ஈசனும் அம்பிகையின் எண்ணம் தெரிந்து விக்னேஸ்வரரை அவதரிக்க வைக்கிறார். விக்னேஸ்வரர் வந்து தன் கொம்பாலே விக்ன யந்திரத்தைப் பொடிப் பொடியாக்கி நிர்மூலமாக்கி அம்பாள் மனதைக் குளிர வைக்கிறார்.

நாளை பண்டாசுரனின் சகோதரர்கள் வதமும், பண்டாசுரன் யுத்தம் செய்தலும்

ஒரு யோஜனை என்பது கிட்டத் தட்ட பனிரண்டு, அல்லது பதின்மூன்று மைல்களைக் குறிக்கும்.

கூடிய வரைக்கும் ரொம்பவே எளிமையான வார்த்தைகளாய்ப் போட்டே விளக்கம் சொல்கிறேன். தத்வார்த்தமான விளக்கத்துக்கு எல்லாம் போகலை! ஆகவே புரியலைனா சொல்லிடுங்க. :)))))))

நவராத்திரி கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக வழிபடுவோம். இன்றைய தினம் தேவியின் திருநாமம் காலராத்ரி! பொதுவாக சனிக்கிழமைகளில் இவளை வழிபடுவார்கள். என்றாலும் சிலர் ஏழாம்நாளுக்கான தேவியாக வணங்குகின்றனர்.  காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள்.

        à®šà®¿à®¤à¯à®¤à®¾à®¤à¯à®°à®¿ க்கான பட முடிவு

ஶ்ரீவித்யா உபாசகர்கள் இவளை ஶ்ரீவித்யா பீஜாக்ஷரியாக ஆராதிக்கின்றனர். சண்ட, முண்டர்களை நேருக்கு நேர் மோதி அழித்த தினம் என்பதால் அன்னையின் சக்தி அதிகமாக ஆகும் தினமாகச் சொல்லுவார்கள். இன்றைய தினம் அன்னையை தங்கப் பீடத்தில் வீணா, புஸ்தக தாரிணியான சாம்பவியாக அலங்கரிக்கலாம். எட்டு வயதுப் பெண் குழந்தையை சாம்பவி என்னும் பெயரால் வழிபட வேண்டும். வெண்ணிற மலர்கள் மிகவும் உகந்தவை. மல்லி, நித்தியமல்லி, நந்தியாவட்டை போன்றவை உகந்தவை.
செண்பகம், ரோஜா, பன்னீர் இலை, புஷ்பம் போன்றவற்றால் திட்டாணிக் கோலமோ, வட்ட வடிவமான கோலமோ போடலாம்.

இன்றைய நிவேதனம் எலுமிச்சைச் சாதம். மாலை சிவப்புக்காராமணியில் வெல்லம் போட்ட சுண்டல் அல்லது பயறு வெல்லச் சுண்டல் செய்யலாம். வியாழக்கிழமை  வந்தால் அன்றைய தினம் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டலும் செய்யலாம்.

12 comments:

  1. இன்னிக்கும் வந்திட்டேன். எனக்கு அந்த கத்திரிப்பூ கலர் சேலை

    ReplyDelete
    Replies
    1. இஃகி,இஃகி, நீங்க யாரு தெரியலையே! கத்திரிப்பூக்கலர் சேலை தானே! வாங்கிக்கட்டிக்குங்க! பார்க்கிறோம்! :)

      Delete
  2. ஆகா...

    இனிய நடையில் பதிவை வாசிக்க வாசிக்க மனம் மகிழ்ச்சியடைகின்றது..

    வாழ்க நலம்...

    ReplyDelete
  3. கீசாக்கா மீ பிரசண்ட்:).

    அம்பாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரடி, வந்ததுக்கு சந்தோஷம்!

      Delete
  4. சோபனம் ஏழு படித்தேன்...
    தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  5. ப்ரசண்ட் டீச்சர்! உள்ளேன் அக்கா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம்.

      Delete
  6. படித்துக் கொண்டே வருகிறேன். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷம் அம்மா. நன்றி.

      Delete