எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 27, 2018

ஸ்ரீலலிதையின் சோபனம்! கந்தன் பிறப்பு!

பக்திமார்க்கத்தில் இருந்து கொஞ்சம் உயர்ந்தது யோக மார்க்கம் இல்லையா?? அந்த யோக மார்க்கத்தில் தான் இந்த ஸ்ரீவித்யா வழிபாடுகள் வருகின்றன. நம்முடைய பிராணனின் மூலம் எதுவெனக் கண்டு பிடித்து அந்த மூலத்தோடு நாம் ஒன்று சேர்கிற வழியே நம்முடைய பிறப்பின் தாத்பரியம். எனினும் இது நமக்குப் புரியப் பல ஜன்மங்கள் ஆகின்றன. நம் பூர்வ ஜன்மக் கர்ம வினையைப் பொறுத்து இந்த ஜன்மத்தில் ஆன்மீகத்தில் நாம் முன்னேறுவது நடக்கும். நாம் நம்முடைய உறங்கும் பிராணசக்தியை மூலாதாரத்தில் இருப்பதைத் தட்டி எழுப்பவேண்டும். அதை மேலே மேலே கொண்டு வந்து சஹஸ்ராரத்தை அடையவேண்டும். சச்சிதாநந்தத்தில் மூழ்கவேண்டும். அதற்கான யோக சாதனைகளில் இந்த வித்யா வழிபாட்டு முறையும் ஒன்றாக இருந்து வருகிறது. சஹஸ்ராரத்தை அடைந்துவிட்டால் யோகத்தின் நிறைவு. யோகத்தின் நிறைவில் எந்தவிதமான அசைவுகளும் இல்லாமல் நம்மை மறந்த நிலையில் இருப்போம். நம்மிடம் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை போன்றவை நீங்க வேண்டும். ஆநந்தம் பிறக்கவேண்டும்.



பரப்பிரும்ம தத்துவத்தை ராதாகிருஷ்ணனாய்ப் பார்த்தால் அதுவும் ஆநந்தம், ஆநந்தம், ஆநந்தமே தான். ஆநந்தம் வந்தால் சிரிப்போம். ராதையின் செளந்தரியமும், கிருஷ்ணனின் ப்ரேமையும் ஆநந்தம். அதற்கு உயிரும், உணர்வும் வேண்டுமல்லவா?? அந்த உயிரும், உணர்வும், அறிவுமாக இருப்பவளே அம்பிகை. லலிதா சஹஸ்ரநாமம் அம்பிகையை, “ சித்கலாநந்த-கலிகா ப்ரேமரூபா ப்ரியங்கரீ” என்று கூறும். கல்பகோடி காலமாய், இடைவிடாமல் தன் தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறாள் அம்பிகை. அவளை வழிபடுபவர்களுக்கு இனிப் பிறவி இல்லை. இதை பட்டர் எப்படிச் சொல்கிறார் என்றால்,

உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்தழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே!”

என்கிறார். நம் கர்மத்தால் பிறவி எடுக்கிறோம். அந்தப் பிறவியில் நாம் நம் முற்பிறவிக் கர்மமும், பாவமும் போகும்படியாக அம்பிகையை வணங்கினால், அவள் தாமரைத் திருவடிகளில் சரண் அடைந்தால், அவள் கருணை வெள்ளம் பொங்கி வந்து நம் ஆணவமாகிய அழுக்கை நீக்கும். மாயையிலிருந்து விடுபடுவோம். அவளே முக்திரூபிணீ. என்றாலும் அம்பிகை தன் பர்த்தாவிற்கே முதல் பெருமையை அளிக்கிறாள். காமேசரை வேண்டியே அஸ்திரம் பெறுகிறாள். இங்கே அவள் சக்தியாக இருந்தாலும் தன்னை வெளிப்படுத்தாமல் ஈசனிடம் ஒன்றிப் போகிறாள். உள்ளே இருந்து இயக்குவது அவளாகவே இருந்தாலும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறாள். இதுவே சிவசக்தி ஐக்கியம்.

நிலவிலிருந்து ஒளியையும், பூவிலிருந்து சுகந்தத்தையும், தீபத்திலிருந்து பிரகாசத்தையும் எப்படிப் பிரிக்கவே முடியாதோ, அப்படி இவர்களையும் பிரிக்கவே முடியாது. சொல்லும், பொருளும் இவர்களே. இதையே அபிராமி பட்டர்,

சொல்லும்பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும்அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே!”

என்கிறார். சொல்லில் இருந்து பொருளை எவ்வாறு தனியாய்ப் பிரிக்கவே முடியாதோ அவ்வாறே அம்மையப்பனையும் பிரிக்கவே முடியாது. “பாஷா-ரூபா ப்ருஹத்ஸேநா பாவாபாவ-விவர்ஜிதா” என்று லலிதா சஹஸ்ரநாமம் இதைக் கூறுகிறது. காமேசரிடம் அஸ்திரம் பெற்ற அம்பிகை பண்டாஸுரனை வதைக்கிறாள்.

“கண்டகன் பண்டாஸுரனை வதைக்கவென்றே
காமேசர் அஸ்திரங்கொடுத்தார்
வாங்கிக்கொண்டு அம்மன் காமேசர் அஸ்திரத்தை
மண்டலாகாரமாய் வில் வளைத்துக்
கோடி சூரியன் போன்ற காமேசர் பாணத்தைக்
கோதண்டத்தில் வைத்து மந்திரித்து
வேடிக்கையாகவே காது பரியந்தம்
விசையாய் இழுத்துவிட்டாள்-சோபனம், சோபனம்.

தேவி பிரயோகித்த அஸ்திரந்தானப்போ
தேவேந்திரன் வஜ்ஜிராயுதம் தடிபோல
தாவிப் பண்டாஸுரன் மார்பிலே பாய்ந்தது
தரணியிலே விழுந்து உயிரைவிட்டான்
அஸ்திரமுடையாளின் அக்கினி ஜ்வாலையாலே
அவனுடபுரங்களும் வெண்ணீராச்சு
அஸ்தமனத்தில் பண்டாஸுரனை வதைத்து
அம்மன் ஜயங்கொண்டாள்-சோபனம் சோபனம்

புஷ்பம் பன்னீர்களைச் சொரியவே தேவர்கள்
புகழ்ந்துஸகிகள் வெண்சாமரம் வீச
அப்பொழுது தேவி சக்திசேனையுடன்
ஆலயத்தை அம்மன் வந்தடைந்தாள்
ஆயுதங்களால் அடிபட்ட சக்திகள்
காயத்தை அம்ருதக் கண்ணால் போக்கினாள்
நோய்கள் போனதுபோல ஸுகம் பெற்றார் பூமியும்
புனிதமாய் செழித்தது –சோபனம் சோபனம்

ஆயிற்று. தேவியின் அவதாரக் காரியம் நிறைவேறியாச்சு . அடுத்துத் தேவர்கள் கேட்டது மன்மதனை எழுப்பவேண்டுமென்று. ஆம், அவன் சாம்பலின் மூலமே பண்டாஸுரன் வந்தானல்லவா? எரிந்த மன்மதனை நினைத்து நினைத்து அழுது வேதனைப்படும் ரதியின் மனச் சமாதானத்துக்கு மட்டுமா?? இல்லை, இல்லை, மன்மதன் இல்லை எனில் உலகில் சிருஷ்டி காரியம் எப்படி நடக்கும்?? என்றால் ஏன் ஈசன் எரித்தார்?? யோகத்தில் இருந்த ஈசன் மீண்டும் சிருஷ்டி புதிதாய்த் தொடங்க வேண்டியே அழித்தார். இப்போது அம்பிகை அருளால் மீண்டும் அனைத்தும் ஆரம்பிக்கவேண்டும் அல்லவா? மன்மதனை எழுப்பித் தரச்சொல்லிக் கேட்டார்கள் மும்மூர்த்திகள் முதல் முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரும். மேலும் சூரனையும் அழிக்கவேண்டுமே.

“ஹர –நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவநெளஷதி” என்று கூறுகிறது லலிதா சஹஸ்ரநாமம். ஹரனாகிய ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து எழுந்த அக்னியால் எரிக்கப் பட்ட காமனைப் பிழைக்க வைத்த சஞ்ஜீவனி மருந்தைப் போன்றவள் அம்பிகை எனப் பொருளில் வரும் இந்த வரிகளில் அம்பிகையானவள் காமனுக்கு மட்டுமன்றி நமக்கும் ஒளஷதமாய்ச் செயல்படுவதை அறிந்து கொள்கிறோம். பராசக்தியானவள் ஈசனின் உடலில் பாதி சரீரம் எடுத்துக்கொண்டிருந்தாலும் உலகனைத்திற்கும் மருந்தாய் விளங்குகிறாள். விஷத்தை உண்டும் அவள் அருளால் ஈசன் பிழைத்து நீலகண்டனாக ஆகிய விந்தையையும் அறிவோம் அல்லவா?? “நஞ்சு அமுதாக்கிய அம்பிகை” என்கிறார் பட்டர் இந்தத் திருவிளையாடலை.


“பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மநோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!”

இங்கே முப்புரை என்பதற்குப் பல பொருட்களை அறிந்து கொள்கிறோம். புரை என்றால் மூத்தவள் என்ற பொருளுக்கிணங்க, மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், மூன்று நாடிகளான பிங்கலை, இடைகலை, சுழுமுனை மூன்றிலும் இருப்பவள், மனம், புத்தி, சித்தம் ஆகியவற்றில் உறைபவள். “மஹாபுத்திர்-மஹாஸித்திர்-மஹாயோகீஸ்வரேஸ்வரீ” என்று கூறும் லலிதா சஹஸ்ரநாமம். ஆகவே அதனாலும் இவள் முப்புரை அல்லது திரிபுரை. மேலும் மூன்று தேவர்கள், மூன்று மறைகள், மூன்று அக்னி, மூன்று சக்தி, மூன்று ஸ்வரங்கள், மூன்று உலகங்கள், மூன்று நகரங்கள் என அனைத்திலும் மூன்று பிரிவுகளைக் கொண்டவளாய் இருப்பதையும் முன்னரே பார்த்தோம். அதேபோல் சந்திரகண்டம், சூர்யகண்டம், அக்னிகண்டம் என்னும் மூன்று பிரிவையுடைய சக்கரத்துக்கும் தலைவியாக இருக்கிறாள். நம் மனத்தை ஞாந நிலைக்கு எழுப்பும் மநோன்மணியாக இருக்கிறாள்.

அத்தகைய சக்தி வாய்ந்த அம்பிகை இப்போது உலகு உய்யும் பொருட்டு காமனைப் பிழைக்க வைக்கிறாள். எதற்கு?? யோகத்தில் ஆழ்ந்திருக்கிறான் ஈசன். காமனை எரித்துவிட்டு காமதகனராய்ச் சர்வ சக்தியும் ஒடுங்கிய வண்ணம் காட்சி அளிக்கிறான். அவன் கண்களை விழித்து அம்பிகையை நோக்கினால் அன்றோ, குமாரன் பிறப்பான்?? குமாரன் பிறந்தால் அன்றோ மிச்சம் இருக்கும் அசுரக் குலமும் அழியும்?? குமாரன் என்றால் கந்தன் ஒருவனே. அவனை மட்டுமே குறிக்கும். வேறு யாரையும் குறிக்காது. அத்தகைய கந்தனைப் பிறப்பிக்கும் பொருட்டு அம்பிகை மன்மதனை எழுப்புகிறாள். வியப்பைத் தரும் திருவுருவை உடைய அம்பிகை மன்மதனை எழுப்பி அதன் மூலம் சிவனது புத்தியை வெற்றி கொண்டதை இவ்வாறு கூறுகிறார்.

“அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமான தபசயமாக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே!”

தாமரை மலர்களால் துதிக்கப் பெறும் திவ்ய செளந்தரியமான அழகை உடைய அம்பிகை மன்மதன் மற்றவர்களைத் தன் மலர்க்கணைகளுக்கு ஆளாக்கி அதன் மூலம் பெற்ற வெற்றியை எல்லாம் தோல்வி அடையும்படி தன் நெற்றிக்கண்ணால் அவனை எரித்த ஈசனின் மனமும் மாறும்படியாக அவன் மனமும் குழையும்படியாக மீண்டும் மன்மதனை உயிர்ப்பித்ததோடு அல்லாமல், ஈசனின் மனத்தையும், புத்தியையும் ஆட்கொண்டு, உடலிலும் இடம் பெறுகிறாள். மன்மதனை எழுப்பச் சொல்லி ஸ்ரீலலிதையிடம் தேவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

“இந்த ரதியுடைய கணவன் மன்மதனை
எழுப்பித் தந்து எங்கள் மனங்குளிர
எவ்விதமாவது தயவு செய்து ஈசரும்
ஈச்வரியைக் கூடி சுப்ரமண்யர்
பிறந்து தாருகன் முதல் அஸுரர்களை வதைத்ததால்
பிறகு சங்கடமில்லை எங்களுக்கு
கூடியே தேவர்கள் எல்லோருங்கைகளைக்
கும்பிட்டு நின்றார்கள் –சோபனம், சோபனம்.”

கண்டவுடனே ரதிதேவியை அம்மன்
காமேசர் முகத்தை ஆதரவாய்ப் பார்த்தாள்
உண்டாய்விட்டான் மதன் வஜ்ஜிரதேஹத்துடன்
உடனே தாயாரை நமஸ்கரித்தான்
அனுகிரஹித்தாள் தேவி மன்மதனுக்கு
ஆருமினியவனை ஜயிக்காமல்
வானவரும் இனி ஜயிக்கமாட்டாரென்று
வரமுங்கொடுத்துச் சொல்லுவாள்- சோபனம் சோபனம்

குழந்தாய் உனக்குப் பயமில்லை இனிமேல் 
கூட்டிவை பார்வதியுடன் ஈசரை
தழுதழுத்துன்னுட பாணத்தால் சங்கரர்
தானே விவாஹஞ்செய்வார் பார்வதியை
ஒருவர் கண்ணுக்கும் இனி அகப்பட மாட்டாய்
உன்னைத் தூஷித்தபேர் அண்ணா கள்ளர்
சற்றும் பயமில்லை நாமிருக்கின்றோமென்று
சங்கரி யனுப்பினாள் –சோபனம் சோபனம்.

மன்மதனுக்கு வரம் கொடுத்து அவனை அனுப்பி வைக்கிறாள் அம்பிகை. ஈசனும், ஈச்வரியும் கூடி ஸ்கந்தன் அவதாரம் ஏற்படுகிறது.  


ஷண்முக நாயகன் தோன்றிடுவான் – சிவ
சத்குரு நாதன் தோன்றிடுவான்
கண்களால் கண்டு போற்றிடுவோம் –கொடும்
காலத்தைக் காலால் வென்றிடுவோம்

"நாதபிந்து கலாதீ நமோ நம!" என்று கூறுவார் அருணகிரிநாதர். நாதமும் பிந்துவும் சேர்ந்ததால் தோன்றிய கலையே ஷண்முகன். சிவசக்தி ஐக்கியத்தின் ஸ்வரூபமே ஷண்முகன். ஷண்முகனின் மந்திரமாகிய "சரவணபவ" என்னும் ஆறெழுத்தும் நம் உடலின் ஆறு சக்கரங்களையும் குறிக்கும். உயிர்களுக்குப்பற்றுக்கோடாக விளங்குபவன் கந்தன். அனைத்துக்கடவுளரின் ஆற்றலும், சக்தியும் திரண்டு வந்ததால் கந்தன் என்ற பெயர் பெற்றான் என்றாலும் நம் ஆன்மாவைக் கட்டிவைக்கும் சக்தியான கந்துவும் அவனிடமே இருப்பதாலும் கந்தன் என்று கூறலாம்.

13 comments:

  1. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நல்ல உழைப்பும் ஆர்வமும் தெரிகிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இதைச் சரி பார்ப்பதற்காக மீண்டும் குறிப்புகள், சௌந்தரிய லகரி, தேவி மகாத்மியம், லலிதாம்பாள் சோபனம், லலிதா சகஸ்ரநாமம் எனப் படித்து வரும் பாக்கியம் கிடைத்துள்ளது.

      Delete
  2. மிக அருமையாக சொன்னீர்கள்.
    உலகம் உய்ய அவதரித்தார் ஆறுமுகப் பெருமானார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, பேராசிரியர் டி.என்.கணபதி அவர்கள் "சரவணபவ"வுக்குக் கொடுத்த விளக்கங்களையும் ஓரளவுக்குச் சேர்க்க முயன்றேன். பின்னர் அது சரியா இருக்காதுனு விட்டுட்டேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. மனம் உருகுகின்றது...

    அம்மையின் அருளே அருள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, நன்றி.

      Delete
  4. இப்பேர்ப்பட்ட பக்தி நிலையை அடைய எவ்வளவு தவம் செய்திருக்கவேண்டும்? ராதே கிருஷ்ணாவில் இவ்வளவு பொருள் இருக்கிறதா? முருகனின் அவதாரம் சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. ராதேகிருஷ்ணாவை விவரிக்கப் போனால் போய்க் கொண்டே இருக்கும் ஸ்ரீராம்! ஓ.எஸ். அருண் அவர்கள் ஒருமுறை இதை விவரிக்கையில் கண்ணீரைப் பெருக்கி விட்டார்! இப்போ சமீபத்து நிகழ்வுகளோடு அதை நினைச்சுப் பார்த்துக் கொண்டேன். :)

      Delete
  5. மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயையை அகற்ற அம்மை அருளுவாள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா!

      Delete
  6. கீதாக்கா இனிய காலை வணக்கம். வந்தாச்சு. தேவி பதிவுகள் வாசிக்கிறேன். அப்பால வரேன் கடமைகள் ஆற்றிஉவிட்டு

    கீதா

    ReplyDelete
  7. அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  8. தேவி பற்றி எல்லா பதிவுகளும் வாசித்தேன் அக்கா. முருகன் அவதாரம் அதுவும் ஸ்கந்தன் கந்தன் அர்த்தம் தெரிந்து கொண்டேன்.

    உங்கள் உடல் நலத்திற்குப் பிரார்த்தனைகள்.

    கீதா

    ReplyDelete