எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 30, 2019

கஞ்சி வரதப்பா! எங்கே போனாயோ?

 à®•à®¾à®žà¯à®šà®¿ வரதராஜ பெருமாள் க்கான பட முடிவு


பெருந்தேவித் தாயாரின் சந்நிதி தனியாய் அமைந்துள்ளது. விமானத்தின் பெயர் கல்யாணகோடி விமானம். இந்தக் கோயிலில் முதலில் தாயாரைப் பார்த்துவிட்டே பின்னர் பெருமாளைச் சேவிக்கவேண்டுமாம். ஆனால் நாங்க முதல்லே பெருமாளைத் தான் பார்த்தோம். அப்புறமாய்த் தாயாரைப் பார்த்தோம். எழுதறது மட்டும் முதல்லே தாயார் பத்தி. கிழக்கு நோக்கி தாமரை மலர்களைக் கையில் ஏந்தியவண்ணம் அபயஹஸ்தம் காட்டும் தாயாருக்கு அரித்ரா தேவி, மகாதேவி என்ற திருநாமங்களும் உண்டு என்றார் பட்டாசாரியார். அருகில் உற்சவர். இந்தத் தாயாரின் அவதாரம் பற்றிய பட்டாசாரியார் சொன்ன புராணக் கதையானது.

காஞ்சி வரதராஜ பெருமாள் க்கான பட முடிவு

பிருகு மகரிஷி பிள்ளை வரம் வேண்டி புத்ரகாமேஷ்டி யாகம் செய்ய யாகத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் அவதரித்தார் என்கின்றனர். அவர் பொற்றாமரை மலர்களால் ஸ்ரீவரதராஜரைப் பூஜித்து வழிபட்டு வர, அவருக்கு அருள் புரிய எண்ணிய பெருமான், சிவன், பிரம்மா, பிருகுமஹரிஷி, காசியபர், கண்வர், காத்யாயன ரிஷி, ஹரித ரிஷி போன்றோர் முன்னிலையில் அம்பாளின் கரம் பிடித்து மணம் புரிந்து கொண்டார். அப்போது உள்ளே சென்ற அம்பாள் இன்று வரை படிதாண்டுவதில்லை. பல பெருமாள் கோயில்களிலும் தாயார் படி தாண்டுவது இல்லை.  படிதாண்டாப் பத்தினி எனப் படும் அம்பாள் பிரம்மோற்சவத்தின் போது எழுந்தருளும் பெருமாளுடன் கூட திருவீதி உலாவுக்குச் செல்வதில்லை. ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்ரீவேதாந்த தேசிகருக்காகப் பொன்மழை பொழியச் செய்தாள் பெருந்தேவித் தாயார். வேதாந்த தேசிகரின் மீது பொறாமை கொண்ட சிலர் அவரை எவ்விதமாவது அவமானப் படுத்த எண்ணினார்கள். காஞ்சிக்கு வந்த வறிய பிரம்மசாரி ஒருவனை வேதாந்த தேசிகரிடம் சென்று பொருள் வேண்டும் எனக் கேட்கும்படி ஏவினார்கள். அவனும் அவ்விதமே அவரிடம் சென்று பொருள் கேட்க, தேசிகரோ அம்பாளை வேண்டினார். ஸ்ரீதுதி பாடினார். அவரின் ஸ்ரீதுதிகளால் மனமகிழ்ந்த அம்பாள் அங்கே பொன்மழை பெய்வித்து தேசிகரின் பெருமையை நிலைநாட்டினாள்.

பெருந்தேவித் தாயார் க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார்

அது மட்டுமா? ஸ்வாமிக்குனு தயார் செய்யப் பட்ட வெள்ளித் தகடுகள் வேய்ந்த கதவுகளையும் தனக்கென வாங்கிக் கொண்டுவிட்டாள். பின்னர் வேறு வெள்ளித் தகடுகள் வேய்ந்த புதுக்கதவுகள் செய்து பெருமாளுக்குக் கதவுகள் பொருத்தப் பட்டது என்கின்றனர். தாயார் சந்நிதியில் இருந்து உள்பிரஹாரத்துக்கு வந்தால் அங்கே நரசிம்மர், ஆண்டாள், விஷ்வக்சேனர் போன்றோர் காணப்படுகிறார்கள். இங்கே விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற பெயரிலேயே காணப்படுகிறார். இங்கிருந்து இப்போ நாம் ஏறப் போவது அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு.

இருபத்து நான்கு படிகள் என்கின்றனர். காயத்ரி மந்திரத்தின் இருபத்து நான்கு தத்துவங்களையும் குறிக்கும் வண்ணம் எழுப்பப் பட்டது என்று சிலர் கூற்று. விமானம் புண்ணியகோடி விமானம். மூலவர் தேவராஜர். இவருக்கு தேவப் பெருமாள், அத்தியூரான், அத்திவரதன், தேவாதிராஜன். கஜேந்திர வரதன், தேவராஜப் பெருமாள், மாணிக்கவரதன் போன்ற வேறு பெயர்களும் இருக்கின்றன. திருப்பதியின் வெங்கடாசலபதியைக் கிருஷ்ணரின் அம்சம் என்றும் வகுளா தேவிதான் யசோதை என்றும் சொல்வார்கள். ஸ்ரீரங்கநாதரோ ஸ்ரீராமரின் அம்சம் ஆவார். இங்கே கஞ்சி வரதரோ எனில் ராமர், கிருஷ்ணர் இருவரின் அம்சங்களையும் கொண்டு ராமகிருஷ்ண அம்சத்தோடு விளங்குகிறார். ஒவ்வொரு வருஷமும் சித்ரா பெளர்ணமி அன்று பிரம்மா இவரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். சித்ரா பெளர்ணமிக்குப் பின்னர் வரும் பதினான்கு நாட்களும் மாலைக்கதிரவனின் கிரணங்கள் மூலவரின் பாதங்களைத் தொட்டுச் செல்லும்.சொன்னவண்ணம் செய்த பெருமாள்னு ஒருத்தரும் இந்த ஊரில் உண்டே!


எப்படினு கேட்கறீங்களா? இதே ஊரில் உள்ள யதோத்காரிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாரின் இஷ்ட தெய்வம். அவரைச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்பார்கள்.  திருமழிசை ஆழ்வார் இந்த நகரில் தன் சீடனான கணிகண்ணன் என்பவருடன் வசித்து வந்தார். பல்லவ மன்னர்கள் காஞ்சியை ஆட்சி புரிந்த காலம் அது. கணிகண்ணனின் தமிழ்ப் பாடல்களின் அழகைப் பார்த்து ரசித்த மன்னர், இந்தப் பாடல்கள் தன்னைப் பற்றிப் போற்றிப் பாடினால் இன்னும் நன்றாய் இருக்கும் என எண்ண ஆரம்பித்தார். கணிகண்ணனைத் தன் அவைக்கு வரவழைத்துத் தன்னைப் போற்றிப் பாடச் சொன்னார். ‘மாதவனைப் பாடும் வாயால், மனிதர்களைப்பாட மாட்டேன்.” என்று திட்டவட்டமாக மறுத்தார் கணிகண்ணன். மன்னன் அவரைப் பல்லவ நாட்டை விட்டே வெளியே போகச் சொல்லி நாடு கடத்தினான். கணிகண்ணனும் காஞ்சியை விட்டும் பல்லவநாட்டை விட்டும் வெளியேறினார். தன் அருமைச் சீடன் நகரை விட்டுச் செல்வது அறிந்த திருமழிசை ஆழ்வார் துக்கம் பொங்கப் பெருமாளைப் பார்த்து,

“கணிகண்ணன் போகின்றான், காமரு பூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்கவேண்டா! துணிவுடைய
செந்நாப் புலவன் யானும் போகின்றேன் நீயுமுன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்!”

என்று சொல்லிவிட்டார். திருமழிசை ஆழ்வாரும் காஞ்சியை விட்டுக் கிளம்ப பெருமாளும் ஆழ்வார் கேட்டுக்கொண்டபடிக்கு தன் பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஆழ்வாரைத் தொடர்ந்து போய்விட்டார். காஞ்சியை இருள் சூழ்ந்து கொண்டது. மறுநாள் மூலவர் சந்நிதியில் பெருமாள் இல்லை. மன்னன் நடுங்கிப் போனான். ஏற்கெனவே நகரம் இருளில் ஆழ்ந்திருந்தது. இப்போ இங்கே பெருமாளையே காணோம். எங்கே போனார்? அது தனியாக வேறே ஊர். என்றாலும் இங்கே திரும்பி வந்தாரானு மட்டும் நாம இப்போ தெரிஞ்சுக்கலாமா? 

Saturday, July 27, 2019

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்!

பதினைந்து நாட்களாகவே இணையத்தில் அதிகம் உட்கார முடியலை. கடந்த ஒரு வாரமாகச் சுத்தமாய் நேரம் கிடைக்கவில்லை. அதிலும் கடந்த மூன்று தினங்களாகக் கணினியைத் திறக்கவே முடியலை! நேற்று மாமனார் ஸ்ராத்தம். அதுக்காக முந்தாநாளில் இருந்து ஏற்பாடுகள். நேற்று ஸ்ராத்தம் முடிந்து சாப்பிட்டு உட்கார 2 மணி ஆகிவிட்டது. அதன் பின் கணினியில் உட்கார முடியலை! இன்றும் வேலை. நாளைக்குக் குலதெய்வம் கோயிலுக்குப் போவதால் அதற்கான ஏற்பாடுகள்! இன்னிக்குச் சாப்பிடவே 2 மணி ஆகி விட்டது. அதன் பின்னர் சற்று நேரம் கணினியில் உட்காரலாம் என்று வந்தேன்.

என்னோட இரண்டு நூல்கள் மின்னூலாக வெளி வந்திருக்கின்றன. வழக்கம்போல் க்ரியேட்டிவ் காமன்ஸ் வெளியீடு தான். அனுப்பி 3 மாதங்கள் ஆகிவிட்டன. அவங்களுக்கு ஏதேதோ வேலைகள். நேற்றைக்கு அனுப்பி இருக்காங்க சுட்டிகளை.  முகநூலிலும் சுட்டிகள் கொடுத்திருக்கேன். முகநூலில் இல்லாதவங்க கீழே கொடுக்கும் சுட்டிகளில் சென்று படிக்கலாம். அதில் ஒரு மின்னூல் என்னோட கல்யாணம் நடந்த விதம் பற்றியும், மதுரை, தஞ்சாவூர் நகரங்களின் பழக்க, வழக்கங்களின் மாறுபாடுகள், பேசுவதில் உள்ள வேறுபாடுகள், அதைச் சமாளித்தவிதம் எல்லாம் பற்றிச் சுருக்கமாக வரும். க்ரியேடிவ் காமன்ஸ் ஸ்ரீநிவாசன் அதை "சுய சரிதை" எனச் சொல்லி இருக்கார். சுய சரிதை அல்ல. வாழ்க்கையின் முக்கியமான பகுதியில் ஓரிரு மாதங்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்திருக்கேன்.  அவ்வளவு தான். அதன் பின்னர் சென்னைக்குக் குடித்தனம் வந்ததும், சென்னையில் வேலைக்குச் சேர்ந்ததும் அங்கே 3 வருட வாழ்க்கைக்குப் பின்னர் ராஜஸ்தான் சென்றதெல்லாம் தனிக்கதை! அதை எல்லாம் எழுதினால் ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் வரும். ஆரம்ப காலப் பதிவுகளில் அவ்வப்போது பகிர்ந்திருக்கேன்.

அடுத்தது இதே "எண்ணங்கள்" வலைப்பக்கங்களில் மார்கழி மாதங்களில் ஒரு வருடம் எழுதிய பதிவுகள். ஒவ்வொரு திருப்பாவைக்கும் ஏற்ற கோலங்களை ஒரு மாதிரியாகத் தேர்ந்தெடுத்துப் போட்டுத் திருப்பாவையின் பொருளை எளிய முறையில் சொல்லி இருந்ததைத் தொகுத்துப் போட்டிருக்கிறேன். விரும்பியவர்கள் படிக்கலாம். சுட்டிகளைக் கீழே தருகிறேன்

.மார்கழித் திங்கள்

கீதா கல்யாணமே, வைபோகமே!

Tuesday, July 23, 2019

கஞ்சி வரதப்பா! அத்தி வரதர் வந்துட்டாரே!

20 ஆம் தேதி சனியன்று உறவினர் வருகை. சென்னையில் மேற்கு மாம்பலத்தில் இருக்கும் தம்பி வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அங்கே கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் என்பதால் அங்கே வைத்துச் செய்வது கஷ்டம் என்பதால் நாங்களே அவங்களை இங்கே ஸ்ரீரங்கம் வந்து செய்யுங்க என்று சொல்லி இருந்தோம்.  அதற்கு மற்றவர்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கணும், எல்லோரும் வரணும் என்பதால் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்தார்கள். வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு அன்று தான் வர முடியும். குடும்ப விழா என்பதால் குடும்பத்து நபர்கள் தவிர்த்து 3 பேர் மட்டும்  இங்கே உள்ளவர்கள். அதற்கான ஏற்பாடுகள் மற்றும் உறவினர் வந்து சென்ற போது என இணையத்துக்கு வர முடியலை! எந்தப் பதிவுகளையும் படிக்கலை! சனிக்கிழமை ஓரிரு பதிவுகள் பார்த்தேன் என நினைக்கிறேன். பின்னர் வர முடியலை. இனி ஒவ்வொன்றாக வரணும். ஹிஹி இந்த வாரம் வெள்ளியன்று மாமனார் ஸ்ராத்தம். ஆகவே நாளைக்குக் காலம்பர வந்து "நட்பேயார்" வந்திருக்காரானு பார்த்துட்டுப் போயிடுவேன். நாளைக்குக்   கடைசி நாத்தனார் வேறே தில்லியிலிருந்து வராங்க! வெள்ளிக்கிழமை சாயந்திரம் நேரம் கிடைச்சால் வருவேன். இல்லைனா சனிக்கிழமை தான்! இஃகி,இஃகி, இஃகி.  எல்லோரையும் போல நானும் பிசி! பிசியோ பிசி!
*********************************************************************************


என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா!

மலையாக மாறிய கஜேந்திரனின் மேல் பெருமாள் எழுந்தருளி இருப்பதால் மேலே பல படிகள் ஏறிச் சென்றே பெருமாளைத் தரிசிக்கவேண்டும். ஒரு வகையில் இதுவும் ஒரு மாடக்கோயில் என்றே சொல்லலாம். இந்தக் கோயிலுக்கு தேவகுரு பிரஹஸ்பதியும் வந்து வழிபட்டிருக்கிறார். இந்திரன் கொடுத்த சாபத்தால் ஏழ்மை நிலையடைந்த பிரஹஸ்பதிக்கு இங்கேதான் சாப விமோசனம் கிடைத்தது என்கின்றனர். ஐந்து பிராஹாரங்களுடன் இருக்கும் இந்தக்கோயில் கட்டுமலை அமைப்புடன் கூடியது. கட்டுமலைகளை முறையே வாரணகிரி அத்திகிரி எனச் சொல்லுகின்றனர். முதலில் மேலே ஏறுவது வாரணகிரியில். அங்கே அழகிய சிங்கரைத் தரிசனம் செய்து கொண்டே பின்னர் அத்திகிரிக்கு இன்னும் மேலே ஏற வேண்டும். மேலே ஏறினால் தேவராஜப் பெருமாள் என்ற பெயரில் மூலவர் எழுந்தருளி உள்ளார். ஆனால் இங்கே உற்சவர் ஆன வரதராஜருக்கே சிறப்பு அதிகம். அதோடு இந்தக் கோயிலில் தாயாருக்குச் சிறப்பும், செல்வாக்கும் அதிகம் என்கின்றனர். ஆகையால் முதலில் பெருந்தேவித் தாயாரைத் தரிசிக்கவேண்டும். அதுக்கு முன்னால் அத்தி வரதர் பற்றிய சில செய்திகளைப் பார்க்கலாம்.

காஞ்சிபுரத்தின் அத்தி வரதர் மிகவும் பிரபலமானவர். அவரை நாம் தினமும் தரிசிக்க முடியாது. அவர் இருப்பதும் வெளியே ஏதோ சந்நிதியில் இல்லை. கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் அருகே உள்ள அநந்த சரஸ் என்னும் தீர்த்தத்தில் உள்ள நீராழிமண்டபத்தின் அடியில் நீருக்குள்ளே நிரந்தரமாய் சயனக் கோலத்தில்வெள்ளிப் பேழையில் இருப்பவர் அத்தி வரதர். பெரிய அத்திமரத்தால் செய்யப் பட்ட இவர் யாகத் தீயில் இருந்து தோன்றியதால் உடல் வெப்பத்தால் தகிப்பதாகவும், தினமும் மூன்று வேளை நூற்றுக்கணக்கான குடங்களில் திருமஞ்சனம் செய்யவேண்டும் என்று பட்டாசாரியார் ஒருவரது கனவில் வந்து சொன்னதாகவும், தினமும் திருமஞ்சனம் மூன்று வேளை செய்ய முடியாவிட்டால், தன்னை நிரந்தரமாய் அநந்த சரஸில் மூழ்க வைக்கும்படியும் பெருமாள் சொன்னதாகவும், நூற்றுக்கணக்கான குடங்களில் நீர் எடுத்துத் தினமும் மூன்று வேளை திருமஞ்சனம் செய்ய முடியாது என்பதால் வரதரை நீரில் மூழ்கும்படிச் செய்தார்கள் எனச் சொல்லப் படுகிறது. மற்றோர் தகவலின் படி கி.பி ஆறாம் நூற்றாண்டுகளில் பெளத்தர்கள் வசம் இந்தக் கோயில் போய்விட, இங்கே இருந்த மூல விக்ரஹங்கள் பாடலிபுத்திரம் அனுப்பப்பட்டன/கடத்தப் பட்டன. நரசிம்மர், ஹரித்ராதேவி தாயார், வரதர் போன்ற அனைவரும் பாடலிபுத்திரம் போய்விட, சில நாட்கள் கோயில் வழிபாட்டிலேயே இல்லை எனச் சொல்கின்றனர்.

ஸ்ரீராமாநுஜர் காலத்தில் கோயிலில் ஏற்கெனவே வழிபாடுகள் ஆரம்பித்திருந்த நிலையில், உற்சவர் இல்லையே என கோயிலின் பட்டர் ஒருவரும் ராமாநுஜரும் கூடி யோசித்து அத்திமரத்தால் வரதராஜரின் சிலா உருவை உருவாக்கியதாகவும், அந்நியர் கண்களில் இருந்து தப்பவேண்டி அநந்த சரஸில் வைத்திருக்கலாமெனவும் சொல்கின்றனர். எது எப்படி இருந்தாலும் ஒரு வெள்ளிப்பேழையில் வைக்கப் பட்ட அத்திவரதர் நீருக்குள் போய் மறைந்தார். இனி மூலவரும் இல்லை, உற்சவரும் இல்லையே என்ன செய்வது? என யோசித்த அர்ச்சகர்களுக்கு பெருமாளே மீண்டும் கனவில் வந்து பழைய சீவரம் என்ற இடத்தில் தன்னைப் போன்றே இன்னொரு வரதர் இருப்பதாகச் சொல்லி அவரைக் கண்டு பிடித்துப் பிரதிஷ்டை செய்யச் சொல்லி இருக்கின்றனர். அவரைக் கண்டுபிடித்து இந்தக் கோயிலுக்குக் கொண்டு வந்து எழுந்தருளப் பண்ணி இருக்கின்றனர். அத்தி வரதரை பெருமாளின் ஆக்ஞைப்படியே நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை நீரில் இருந்து வெளியே எடுத்து ஒரு மண்டலம் ஆராதனைகள் செய்து பின்னர் மீண்டும் நீருக்குள்ளேயே விடுவார்கள்.

அத்தி வரதர் க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார்!

கடைசியாய் 1979-ம் ஆண்டு அத்தி வரதர் வெளியே வந்திருக்கார். (அட, நாங்க செகந்தராபாத்தில் இல்லை இருந்திருக்கோம்?) (இது எழுதினப்போ) மீண்டும் 2019- வருவாராம். ஹிஹிஹி, இருக்கோமோ, இல்லையோ? யாருக்குக் கொடுத்து வைக்கிறதோ தெரியலை, போகட்டும்! (வந்துட்டார், வந்துட்டார், பார்க்கத் தான் முடியலை! )

அத்தி வரதர் க்கான பட முடிவு

ஜெயஸ்ரீ கேட்ட சக்கரத்தாழ்வார் என்ற சுதர்சனர் இங்கே தான் குளக்கரையில் சேவை சாதிக்கிறார். மிகப் பெரிய சக்கரத்தாழ்வார் என்று சொல்கின்றார்கள். அநந்த சரஸ் தீர்த்தம் தவிரவும் வேகவதி ஆற்றையும் சேர்த்து மேலும் நான்கு தீர்த்தங்கள் உள்ளன எனச் சொல்கின்றனர். ஸ்ரீரங்கநாதருக்கும் தனி சந்நிதி இருக்கிறது. வேணுகோபாலன், பூவராகன் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். முதல் பிரகாரத்தை நம்மாழ்வார் பெயரில் ஆழ்வார் வீதி என அழைக்கின்றனர். பெருமாள் கருடசேவையின் போது இந்த ஆழ்வார் வீதிக்குத் தான் முதலில் வருகின்றார். மற்ற ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். இன்னும் பல அடியார்கள், திருக்கச்சி நம்பிகள் ஆகியோரையும் தரிசித்தாலும் எல்லாவற்றையும் விட முக்கியமானது இங்கே உள்ள அம்மாள் காலட்சேபக் கூடம். வேதாந்த தேசிகரின் குருவான நடாத்தூர் வரதாசாரியார் என்பவர் தினமும் பெருமாளுக்கு சேவை செய்து வந்தார்.  அவர் செய்யும் நைவேத்தியங்களில் பாலும் இடம் பெறும். சூடாகக் காய்ச்சப்பட்ட பாலைச் சூடு போக நன்கு ஆற்றி, ஆற்றி இளஞ்சூடாகப் பெருமாளுக்கு நிவேதனம் செய்வாராம்.. ஒரு தாய் தன் மகவுக்கு எப்படி சூடு பொறுக்காது எனக் கவனமாகச் செயல் படுவாளோ அதைப்போல் கவனமாகவும், பொறுமையாகவும் தினமும் இதைச் செய்து வந்ததால் பெருமாளே இவரை, “அம்மையே” என அழைத்ததாகவும், அது முதல் இவர் பெயர் நடாத்தூர் அம்மாள் என அழைக்கப் பட்டதாகவும் சொல்கின்றனர்.

நாலாம் பிரஹாரத்தில் மடைப்பள்ளி. அங்கிருந்து பெருந்தேவி தாயார் சந்நிதிக்குப் போகும் வழியில் மீண்டும் பிரசாத விநியோகம் நடந்தது. இதுவும் பெருமாளுக்குப் படைக்கப்பட்டு மடைப்பள்ளியில் இருந்து வந்ததே. ஆனால் வெளியில் வைத்து விற்பனை செய்ய முடியாது என்பதால் கேட்பவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் தலைக்கு ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு, அவர் கேட்கலை, நாங்களாகவே தீர்மானம் பண்ணிக் கொடுத்தோம், பிரசாதங்கள் வாங்கிக் கொண்டோம். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை விநியோகிக்கப் பட்டது. எந்தப் பெருமாள் கோயிலுக்கு எப்போது சென்றாலும் பிரசாதம் கிடைக்காமலோ அல்லது சாப்பிடாமலோ வரவே முடியாது. காக்கும் கடவுள் என்பதாலோ என்னமோ பெருமாள் கோயில்களுக்குப் போனால் வயிற்றைக் கவனிச்சுட்டுத் தான் அனுப்பறார் பெருமாள். இனி பெருந்தேவித் தாயாரின் சந்நிதி. அவள் கதை தனிக்கதை./. நாளைக்குப் பார்க்கலாமா? ஏற்கெனவே திவா வந்து ஸ்ரீபுரம் கூட்டிண்டு போகலையேனு கேட்டுண்டு இருக்கார். நிஜமாவே காஞ்சியைப் பத்தி ஓரளவு சுருக்கமாத் தான் எழுதறேன். ஹிஹிஹி, விரிவா எழுத ஆரம்பிச்சால் சிதம்பர ரகசியத்தை விடப் பெரிசாய் வரும்.