சத்ய பூர்ணர் என்ற ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு இரு பெண்கள், இந்த இருவரும் தங்கள் திருமணம் ஆவதற்காகவும், ஹரியின் புதல்வனை மணக்கவேண்டும் என்பதற்காகவும் "கல்யாணம்" என்ற விரதம் இருந்தார்கள். இறைவன் அவர்களுக்கு அடுத்த பிறவியில் அவர்களின் ஆவல் பூர்த்தி அடையும் என வரம் அளிக்க ஒருத்தி நேபாள மன்னனின் மகள் ஆன புஷ்கலையாகப் பிறந்து, சாஸ்தாவை மணக்கிறாள். மற்றொருத்தியான பூரணையானவள், வஞ்சி மாநகரை ஆண்டு வந்த பிஞ்சகன் என்னும் மன்னனுக்கு மகளாய்ப் பிறந்து வளர்ந்து மணப்பருவம் எய்தி இருந்தாள். அப்போது ஒருமுறை வேட்டைக்குச் சென்ற மன்னன் தன்னிலை மறந்து, நேரம் மறந்து வேட்டையாடுதலில் மெய்ம்மறந்து தன்னுடன் வந்தவர்களைப் பிரிந்து தனித்து விடப்பட்டார். இரவாகிற்று. தான் தனித்து இருப்பதை அப்போதே உணர்ந்த மன்னர் தன்னந்தனியாகக் காட்டில் மாட்டிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தார். திடீரென அவரைச் சுற்றிலும் கூச்சல், குழப்பம், வெடிச்சிரிப்புக்கள், அழுகை ஓலம்!!!! திகைத்துப் போன மன்னர் சுற்றும், முற்றும் பார்த்தால், அங்கே அவர் கண்களுக்குத் தெரிந்தது ஒரு மயானம்,
அங்கே பேய்களும், பூதங்களும் இரவில் ஆட்டம் போட்டு, பாட்டுப் பாடிக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. கதிகலங்கிய மன்னனுக்கு உடனேயே நினைவு வந்தது பூதநாதனாகிய சாஸ்தாதான். உடனேயே அவரை நினைத்துக் கூவினான் மன்னன். "பூதநாதனே சரணம்! செண்டாயுதத்தை ஏந்தியவனே சரணம்! மோகினி மைந்தனே சரணம்!" எனப் பலவாறு வேண்டித் துதித்தான். ஐயன் அங்கே வந்து தன் அருள் கண்களால் நோக்க பூதகணங்கள் தங்கள் தலைவனைக் கண்டதும் அடிபணிந்து விலகிச் சென்றன. "பயம் வேண்டாம்" என மன்னனுக்கு அபயம் அளித்த சாஸ்தா, தன் குதிரையில் அவரைப் பத்திரமாக ஏற்றி அரண்மனையில் கொண்டு சேர்க்கிறார். மனம் மகிழ்ந்த மன்னன், பூதநாதனைப் பார்த்து, "ஐயனே! அடியேனின் மகள் பூர்ணை திருமணப்பருவம் எய்தி இன்னும் திருமணம் ஆகவில்லை. தாங்கள் அவளை ஏற்று ரட்சிக்கவேண்டும்." என்று கேட்டுக் கொள்ள சாஸ்தாவும் அவளின் பிறப்பையும், தன்னை மணக்கவே அவள் பிறந்து காத்திருப்பதையும் உணர்ந்து அவளை ஏற்றுக் கொள்கிறார். பூர்ணையை ஐயன் ஏற்றுத் திருமணம் புரிந்து கொண்டதைக் கேள்விப் படுகிறான் பலிஞன். தன் மகளுக்கு சாஸ்தா துரோகம் செய்து விட்டதாய் நினைக்கிறான். மனம் வெதும்புகிறது. ஆத்திரத்தில் உள்ளம் கொதிக்கிறது.
புஷ்கலையிடம் சென்று, நடந்ததைக் கூறுகிறார். அனைத்தும் இறை அருளே, தன் முற்பிறப்பின் தவமே என்பதை உணர்ந்த புஷ்கலையோ மெளனம் சாதிக்க பலிஞன் ஆத்திரம் அதிகம் ஆகிறது. சாஸ்தாவிடமே சென்று நீதி கேட்கிறார். "ஐயனே! என் மகள் இருக்க நீ பூர்ணாவையும் மணந்து அவளுக்கும் வாழ்வளித்தது நியாயமா? இப்படி ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்து மற்றொரு பெண்ணை மணந்த நீ அடுத்த பிறவியில் பூவுலகில் திருமணம் ஆகாத பிரம்மச்சாரியாக வாழ்வாய்! நீ 12 வயது பாலகனாய், திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்துவிட்டு, 12-ம் வயதிலேயே மறைவாய்! உனக்கென உரிமையான ராஜ்யமும் உனக்குக் கிடைக்காது!" எனச் சாபம் கொடுக்கிறான். ஐயன் இதழ்களில் புன்முறுவல். "பலிஞனே! ஏற்கெனவே நான் பூவுலகில் மானிடனாக வாழவேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது. அதற்காக நான் பூவுலகிற்குச் செல்ல வேண்டும். அங்கே நான் எடுத்த காரியத்தை முடிக்க பிரம்மசாரியாகவும் இருக்க வேண்டும். இப்போது உன் சாபம் அதை மிக எளிதாக்கி விட்டது. ஆனால் என்னுடைய பூவுலகின் வாசத்தின் போது நீயே எனக்குத் தந்தையாக வந்து என் மேல் பாசம் காட்டி வளர்ப்பாய்!! உனக்கு மகனாக நான் வந்து என்னுடைய அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவேன். நீ பூவுலகில் பந்தள நாட்டுக்கு அரசனாக ஆட்சி செய்யும் காலத்தில் நான் உன்னிடம் வந்து சேருவேன்!" எனக் கூறுகிறார்.
இப்போது பந்தளத்துக்குச் செல்லும் முன்னர், புஷ்கலையை ஐயன் திருமணம் செய்தது பற்றிய செவிவழிச் செய்தி ஒன்று. மதுரையைச் சேர்ந்த செளராஷ்டிர குலத்தவர்கள் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவர்கள். அவர்களால் நெய்யப்படும் பட்டுக்களைச் சேர மன்னன் விரும்பி வாங்குவது உண்டு,. அவ்விதம் வாங்கி வந்த போது ஒரு முறை செளராஷ்டிர நெசவு வணிகர் ஒருவர் மன்னனுக்குப் பட்டாடை தயாரித்து எடுத்துச் சென்ற சமயம் தன்னுடன் தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கின்றார். செல்லும் வழியில் "ஆரியங்காவு" என்னும் ஊர் வரும்போது இருட்டி விடுகிறது. அதனால் அந்தக் கால வழக்கப் படிக் கோயிலில் தங்குகின்றனர், தந்தையும், மகளும். அங்கே கோயிலில் ஐயப்பனின் உருவத் திருமேனியைக் கண்ட புஷ்கலை ஐயன் மேல் அளவற்ற காதலும், பக்தியும் கொள்கிறாள். மறுநாள் சேரமன்னனைக் காணத் தந்தை கிளம்பும் சமயம், தந்தையுடன் செல்ல மறுக்கிறாள். கோயிலிலேயே தான் தங்கப் போவதாய்ப் பிடிவாதமாய்ச் சொல்லுகிறாள். வணிகர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை மகள். நீங்கள் திரும்பும்போது உங்களுடன் வருகிறேன் என்றே திரும்பத் திரும்பச் சொல்லுகிறாள். என்ன செய்வதென்று புரியாத வணிகர், அந்தக் கோயிலின் மேல்சாந்தியின் வேண்டுகோளின்படி, மகளைக் கோயிலிலேயே மேல்சாந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு அரை மனதாய்ச் செல்லுகிறார்.
ஏற்கெனவே குழப்பத்தில் ஆழ்ந்த மனது. மகளைத் தனியாய் விட்டு விட்டு வந்தோமே என்ற கவலை! வழியில் அடர்ந்த காடு. அதில் இருக்கும் மிருகங்கள். குழப்பத்துடன் சென்ற வணிகர் தனியாய் வந்த ஒரு ஒற்றை யானையிடம் மாட்டிக் கொள்ளுகிறார். கலக்கமுற்ற அவர் தான் ஆரியங்காவில் பார்த்த ஐயப்பனின் திருவுருவை நினைத்துக் கொண்டு, ஐயனே காப்பாற்று என வேண்டிக் கொள்ள, அங்கே ஒரு வாலிப வயது வேடன் வருகிறான். என்னவென அவன் விசாரிக்க, யானையைக் காட்டுகிறார் வணிகர். தன் ஒரு சைகையாலேயே அந்த யானையை அடக்குகிறான், அந்த வேடன். அவனுக்குப் பரிசாகத் தன்னிடம் இருந்த பட்டாடைகளில் ஒன்றைத் தருகிறார் வணிகர். மனம் மகிழ்ந்த வேடன் உடனேயே அதை அணிந்து, " நான் எப்படி உள்ளேன், இந்த ஆடையில்?" என வணிகரைக் கேட்கிறான். இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர்,"மாப்பிள்ளை போல் இருக்கிறாய்? வேறே என்ன வேண்டும் உனக்கு?" எனக் கேட்கிறார்."நான் கேட்பதைக் கொடுப்பீர்களா?" என வேடன் கேட்க, "என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்!" என வணிகர் சொல்கின்றார். "உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்" என வேடன் கேட்க, தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எவ்வாறு தெரியும் என வணிகர் வியப்பில் ஆழ்ந்தார். அவனிடம் சரி எனச் சம்மதிக்க, வேடன் அவரை நீங்கள் திரும்பும்போது என்னை ஆரியங்காவு கோயிலில் சந்தியுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.
மன்னனைக் கண்டு திரும்பிய வணிகர் திரும்புங்கால், ஆரியங்காவுக் கோயிலை அடைகிறார். மகள அங்கே இல்லை. எங்கேயும் இல்லை. இரவு முழுதும் தேடுகிறார். மேல்சாந்தியும் தேடுகிறார். இரவாகிவிடுகிறது. மேல்சாந்திக்கு அசதி மேலிட்டுத் தூங்கிவிடுகிறார். தூக்கத்தில் கனவு. ஐயப்பன் தோன்றி, புஷ்கலை தன் மீது கொண்ட பக்தியினால் அவளைத் தன்னுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டதாய்ச் சொல்கின்றான் ஐயன். திடுக்கிட்டு எழுகிறார் மேல்சாந்தி. காலையில் கோயில் திறந்து ஐயன் சந்நிதியைக் கண்டால் காட்டில், வணிகர் கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் உள்ளது. அதே மாப்பிள்ளைக் கோலம். வணிகர் தன் மகளின் தீராத பக்தியையும், அவளின் பக்திக்குக் கிடைத்த முக்தியையும் புரிந்து கொள்ளுகின்றார்.
டிஸ்கி: இது மதுரைப் பக்கத்தில் செளராஷ்டிர குலத்தவரிடம் வழங்கும் கதை. இதற்கான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை. ஆனால் ஒவ்வொரு வருஷமும் செளராஷ்டிர குலத்தைச் சேர்ந்த, ஆரியங்காவு தேவஸ்தானத்தைச் சேர்ந்த மகாஜனங்கள், மார்கழி மாதம் 9-ம் தேதிக்கு மேல், 15-ம் தேதிக்குள்,இந்த வைபவத்தை ஐயனின் திருமண உற்சவமாய்க் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு வருஷமும் பெண்வீட்டாராக செளராஷ்டிர மகா ஜனங்கள் ஆரியங்காவு சென்று வரிசைகள் செய்து, "பாண்டியன் முடிப்பு" என்ற தாம்பூலத் தட்டுக் கொடுத்துத் திருமணம் நிச்சயித்து, சாஸ்திர, சம்பிரதாயங்களின் படி ஐயனுக்கும், அம்மைக்கும் திருமணம் செய்விக்கின்றனர். இதற்கான திருமணச் சடங்குகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் நடத்தி வைப்பதாகவும் சொல்லுகின்றனர்.
பந்தள நாடு. அழகான தாமரை போன்ற அமைப்பில் இருந்ததால், "பத்ம தளம்" என்ற பெயர் மருவி, பின்னர் பந்தளம் என ஆயிற்று என்று ஒரு கூற்று. பந்தளத்தை ஆண்டு வந்த மன்னன், "ராஜசேகர பாண்டியன்", மிகச் சிறந்த சிவபக்தன். அவன் மனைவியான கோப்பெருந்தேவி, இருவருக்கும் குழந்தை இல்லை என்பதைத் தவிர, வேறு குறை இல்லை. குடிமக்களும், மன்னன் ஆட்சியில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். மக்கட்பேறுக்காக "மகேசன்" பூஜை செய்து வந்தான் மன்னன். ஒரு நாள் மன்னன், காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். செல்லும்போதே மனதில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று. வேட்டைக்குச் சென்ற மன்னனுக்கு அங்கே கிடைத்தது ஒரு பெரிய புதையலே!!! ஆம், மிகப் பெரிய வேட்டை கிடைத்தது. மன்னனுக்குக் காட்டில் ஒரு பச்சைக் குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்றான் மன்னன். கண்டது என்ன? ஒரு அழகான ஆண்குழந்தை, கழுத்தில் கட்டிய மணியோடு அங்கே அழுது கொண்டு இருந்தது. குழந்தை அழகோ, அழகு!!! ஒரு பூவே பூத்து வந்தது போலச் சிரித்தது மன்னனைப் பார்த்து. கையில் எடுத்தான் அந்தப் பூக்குவியலை, மார்போடு அள்ளி அணைத்தான், சுற்றும், முற்றும் பார்த்தான், மன்னன் யாரையும் காணவில்லை. அப்போது அங்கே தோன்றினார் ஒரு வேதியர். குழந்தையையும், மன்னனையும் பார்த்தார்.
"மன்னா, குழந்தை இல்லாத உன் பிள்ளைக் கலி தீர்க்க வந்த இந்தப் பாலகனை நீ வளர்த்து வா! இவனால் உன் ராஜ வம்சமே பெருமை அடையும். இவனின் பெருமையை நீயும் பின்னால் உணருவாய்." எனச் சொல்லுகிறார். (வேதியராக வந்தது சிவபெருமான், எனச் சிலர் கூற்று. அகத்தியர் எனச் சிலர் கூற்று.) குழந்தையும் பந்தள மன்னனின் சகோதரி குழந்தை எனவும் சிலர் கூற்று. அந்தக் கதை செவிவழி கூறுவது:
பந்தள மன்னனுக்கு ஒரு சகோதரி உண்டு என்றும், மகாவிஷ்ணுவின் அம்சம் ஆன அந்தச் சகோதரி மணந்தது, சிவ அம்சம் ஆன தளபதி ஒருவரை எனவும், மன்னனின் மந்திரியானவனும், அரசியும், இந்தத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைக்கு நாடு உரியது என்பதால், (கேரள நாட்டில் மருமக்கள் தாயம் என்னும் முறை இருந்ததாலோ??) இருவரையும் கொல்ல முடிவு செய்தான் என்றும், அவனிடமிருந்து தப்பின மன்னனின் சகோதரியும், அவள் கணவனும் காட்டில் மறைந்து வாழ்ந்தனர் என்றும், அங்கே குழந்தை பிறந்த வேளையில் மன்னன் வரவே, குழந்தையை அவனிடம் ஒப்புவித்து விட்டு இருவரும் மறைந்தனர் எனவும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.
எது எப்படி இருந்தாலும் சிவ அம்சமும், விஷ்ணு அம்சமும் ஒருங்கே சேர்ந்து பிறந்த அந்தக் குழந்தையின் வரவால் மன்னன் மனமகிழ்ச்சியே அடைகின்றான். நீலகண்டனுக்கும், கெளஸ்துப கண்டனுக்கும் பிறந்த அந்தக் குழந்தை, கழுத்தில் மணியுடன் இருந்ததால் "மணிகண்டன்" எனப் பெயரும் சூட்டுகிறான் மன்னன். வளரும்பருவத்திலேயே குழந்தையின் சிறப்புக்கள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. குழந்தை குருகுல வாசத்துக்கு அனுப்பப் படுகிறான். அங்கே குருவின் பார்வையற்ற, பேச்சற்ற குழந்தைக்குப் பார்வையும், பேச்சும் மணிகண்டன் அருளால் கிடைக்கிறது. குருவுக்கு வந்திருப்பது சாதாரணப் பிள்ளை இல்லை எனப் புரிகின்றது.
இடைப்பட்ட காலத்தில் அரசியும் கருவுற்று ஒரு ஆண் மகவைப் பெற்றெடுக்கிறாள். தனக்கெனச் சொந்தமாய்ப் பிள்ளை வந்ததும் அரசிக்கு இந்தப் பிள்ளைக்கே அரசாட்சி உரிமையாகவேண்டும் என்ற எண்ணம் அதிகம் ஆகிறது. குழந்தையும் "ராஜராஜன்" என்ற பெயரில் சீருடனும், சிறப்புடனும் வளர்ந்து வருகின்றான். மணிகண்டன் தன்னுடைய சீரான நடவடிக்கைகளாலும், தெய்வாம்சம் இயல்பிலேயே கைவரப் பெற்றிருந்ததாலும், மக்கள் மனதைக் கவருகின்றான். மணிகண்டனின் செல்வாக்கைப் பார்த்த அரசிக்குப் பொறாமை மேலிடுகின்றது. மந்திரியின் துணையையும் நாடுகின்றாள். ஏற்கெனவே மந்திரிக்கு மணிகண்டன் அரசன் ஆனால் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கு மங்கிக் காட்சி அளிக்குமே என்ற கவலை இருந்து வந்தது. எவ்வகையிலேனும், மணிகண்டனை அழிக்க உறுதி பூண்டான். அப்போது அரசியும் அவ்வாறான எண்ணத்துடன் இருக்கவே , இருவரும் சேர்ந்து மணிகண்டன் திரும்ப வர முடியாதபடி ஏதேனும் செய்ய எண்ணுகின்றனர். அவர்கள் திட்டம் வெற்றி பெறுகிறதா? மணிகண்டன் திரும்ப வரமுடியாதபடி ஒழிக்கப் பட்டானா??? நாளை காணலாம்.
சில விடயங்கள் புதிதாக இருக்கிறது தொடர்ந்து வருகிறேன்...
ReplyDeleteபலரும் அறியாத இந்த வரலாற்றை இதற்காகவே பகிர்ந்தேன். சுமார்15 வருடங்கள் முன்னரே இவை எழுதியவை. இப்போது எடிட் கூடச் செய்யவில்லை. ஓரிரு நண்பர்கள் பெயரைக் குறிப்பிட்டிருப்பேன். அவற்றை மட்டும் நீக்கிவிட்டு அப்படியே கூட்டாமல் குறைக்காமல் போட்டு வருகிறேன். நன்றி கில்லர்ஜி.
Deleteதொடர்கிறேன். சுவாரஸ்யமான வரலாறு.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.
Deleteசெண்டாயுத்தை ஏந்தி இருக்கும் ஐயன் அனைவரையும் காக்க வேண்டும்.
ReplyDeleteவிரிவான பதிவு அருமை.
மதுரை செளராஷ்டிர குலத்தவரிடம் வழங்கும் கதை தெரியாது.
ஐயப்பன படங்கள் கார்த்திகை மாதம் தொலைக்காட்சியில் வைப்பார்கள். சுவாமி அய்யப்பன படம் எப்படியும் வைத்து விடுவார்கள். எத்தனை முறை பார்த்தாலும் அவர் வரலாறு படிக்க, பார்க்க ஆவல்தான்.
தொடர்கிறேன்.
என் அண்ணா (பெரியப்பா பிள்ளை) நாங்கல்லாம் சிறுவர்களாக இருக்கும்போதே பெருவழியில் சபரிமலை யாத்திரை செய்து கொண்டிருந்தார். பூஜையும், பஜனையும், அன்னதானமும் அந்த மேலாவணி மூல வீதியே அமர்க்களப்படும்படி நடக்கும். ஆகவே மிகச் சிறு வயதில் இருந்தே ஐயப்பன் குறித்துப் படித்தும், கேட்டும், பேசியும் வந்திருப்பதால் ஈடுபாடு அதிகம். பின்னாட்களில் எங்க பையரும்/கணவரும் கூடப் போனார்கள். நானும் போகணும்னு முயற்சி செய்துட்டுக் குடும்பச் சூழ்நிலையால் போகலை.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமையாக உள்ளது. எதையும் விளக்கமாக சொல்வதில் தங்களுக்கு நிகரே கிடையாது பூர்ணை புஷ்கலை இருவரையும் ஐயப்பன் திருமணம் செய்து கொண்ட விபரங்களளை தெளிவாக கூறியுள்ளீர்கள். செவி வழியாக வந்த சௌராஷ்டிர கதை . எங்கோ படித்துள்ளேன். தாங்களும் இங்கு விளக்கமாக எழுதியுள்ளீர்கள். பந்தள மன்னனின் சகோதரி கதை அறிந்ததில்லை.
எங்கள் பிறந்த வீட்டில் சாஸ்தாதான் குல தெய்வம். ஐயப்பன் படத்தை வைத்து தினமும் பக்தியுடன் பூஜித்து வந்ததால்தான் அவர்களுக்கு திருமணம் ஆகி வெகு வருடங்களுக்குப் பின் நாங்கள்( என் அண்ணாவும், நானும்.) பிறந்தோமென எங்கள் அப்பா, அம்மா சொல்லியிருக்கிறார்கள். எல்லாமே தெய்வச் செயலால்தான் நடக்கிறது. அனைவரையும் ஐயப்பன் மனக் கலக்கங்களின்றி, உடல் நலத்துடன் காத்தருள வேண்டும்..
தங்களின் அற்புதமான அடுத்தப் பதிவை ஆவலுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. தாமதமாக வந்தால் என்ன? பரவாயில்லை. உங்கள் சௌகரியம் போல் வந்து படித்துக் கருத்துச் சொல்லலாம். இதுக்கெல்லாம் மன்னிப்புத் தேவை இல்லை. தொடர்ந்து மற்றப் பதிவுகளையும் உடனுக்குடன் போட அந்த ஐயப்பன் தான் அருள் புரியணும்.
Deleteநிறைந்த தகவல்களுடன் சிறப்பான பகிர்வு.
ReplyDelete