தத்தன், லீலாவதி என இரு தெய்வீகத் தம்பதிகள் இருந்தனர். மிக்க பக்தியுடனும், இறைவனைப் போற்றித் துதிப்பதே தங்கள் கடமை என இருந்ததாலேயே "தெய்வீகத் தம்பதி" எனக் குறிப்பிடப் பட்டனர். அவர்கள் இருவருக்கும் தங்கள் பக்தியின் உயர்வைக்குறித்துச் சண்டை ஏற்பட இருவருமே ஒருவரை மற்றொருவர் சபித்தனர். அவர்களின் தவத்தின் பலத்தால் அந்தச் சாபம் பலித்தது. அப்படி என்ன சபித்தனர்? ஒருவர் மற்றொருவர் எருமையாகப் பிறக்க வேண்டும் என்றுதான். ஏனெனில் எருமை "மெளட்டீகம், மற்றும், பிடிவாதம்" இரண்டின் அடையாளம். ஒருவர் மற்றொருவரை மதிக்காமல் இவ்விதம் சபித்துக் கொள்ளவே தத்தன், சுந்தரமஹிஷமாகவும், லீலாவதி, கரந்தனின் மகள் மஹிஷியாகவும் பிறந்தனர். சுந்தரமஹிஷனையே இந்தப் பிறவியிலும் மணந்தாள் லீலாவதியான மஹிஷி. அவள் சாபவிமோசனம் எப்படி என்று ஏற்கெனவேயே தத்தன் கூறி இருந்தார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் குழந்தையால் உன் தெய்வீக வடிவை அடைவாய் என்பதே அது. மஹிஷியும் அவ்வாறே தன் முன் ஜென்மத்தை மறந்து மஹிஷியாக எத்தனை, எத்தனை தொந்திரவு கொடுக்க முடியுமே அத்தனையும் கொடுத்து வந்தாள். அவளின் அட்டகாசம் அதிகம் ஆகிக் கொண்டே வந்தது.. சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து குழந்தை பெறுவதா? அந்தக் குழந்தை பூவுலகில் வளருவதா? அதுவும் பிரம்மச்சாரியாக? நடக்காத காரியமே என நிம்மதியுடனேயே தன் கொடுங்கோலாட்சியை நடத்தி வந்தாள் மஹிஷி! இது இவ்வாறிருக்க மஹிஷியை சம்ஹாரம் செய்யும் தருணம் வந்துவிட்டது எனத் தேவாதி தேவர்கள், மும்மூர்த்திகளிடம் விண்ணப்பிக்க, அவர்களும் அவ்வாறே ஆகும் எனச் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் இங்கே பந்தளத்தில் மந்திரியின் துர்ப்போதனையால் மனம் மாறிய கோபெருந்தேவி, தனக்குத் தீராத தலைவலை வந்துவிட்டதாய் நடித்தாள். அரண்மனை வைத்தியரைக் கையில் போட்டுக் கொண்ட மந்திரி, ராணியின் தலைவலி தீரவேண்டுமென்றால், புலிப்பால் கொண்டுவரவேண்டும் எனச் சொல்லுமாறு வைத்தியனை நிர்ப்பந்திக்க, வைத்தியரும் அவ்வாறே கூறுகின்றார். புலிப்பாலை யார் கொண்டுவருவது? மணிகண்டன் தான் சிறந்த ஆள், அவன் தான் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லிவிடுங்கள் எனவும் சொல்லிக் கொடுக்கப் பட வைத்தியரும் மணிகண்டனே போய்த் தான் புலிப்பால் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். மன்னன் மனம் கலங்கியது. இதில் ஏதோ சூது இருப்பதாய் உள்மனம் கூறுகிறது. ஆனால் ராணியோ தலைவலியில் துடிக்கிறாள். அவள் நடிப்பு அவ்வளவு தத்ரூபமாய் இருந்தது. ஆகவே மன்னன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கின்றான். மணிகண்டனோ நிலைமையைப் புரிந்து கொண்டு, ராணியின் சூழ்ச்சியையும் மந்திரியின் துர்ப்போதனையையும், தன் அறிவால் அறிந்து கொண்டு, விதியை மதியால் வெல்லலாம் என முடிவு செய்து கொண்டு காட்டுக்குச் சென்று புலிப்பால் கொண்டு வரச் சம்மதிக்கிறான். மன்னனையும் ஒத்துக் கொள்ள வைக்கிறான். அரை மனதாய்ச் சம்மதித்த மன்னன், மனம் கேளாமல் காட்டில் உணவு கிடைக்காமல் தவிப்பானே அருமைக் குமாரன், என ஒரு நீளமான பையில் அரிசி, தேங்காய், அவல் போன்ற பொருட்களைக் கட்டிக் கொடுத்து, வில்லும், அம்பும் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறான். அரண்மனையை விட்டுக் கிளம்பிய மணிகண்டன் காட்டை வந்தடைகிறான். அங்கே ஏற்கெனவே மும்மூர்த்திகள் கட்டளைப்படி வந்து கூடிய தேவர்கள் அனைவரும் மணிகண்டனைப் போற்றித் துதித்து உயர்ந்த சிம்மாசனத்தில் அமர வைக்கின்றார்கள். (தேவர்கள் மணிகண்டனை அவ்வாறு அமர வைத்த இடம் தான் "பொன்னம்பலமேடு" எனவும், "காந்தமலை" எனவும் அழைக்கப் படுவதாய்ச் சொல்லப் படுகிறது. இதை தக்ஷிண கைலாயம் எனவும், இங்கிருந்து உற்பத்தி ஆகும் "பம்பா" நதியை தக்ஷிண கங்கை எனவும் அழைக்கப் படுவதுண்டு.) பின்னர் மணிகண்டனிடம் மஹிஷியினால் ஏற்பட்ட துயரங்களை எல்லாம் எடுத்து உரைக்கின்றார்கள். மஹிஷியின் வரலாறும் தற்சமயம் மனிதனாய் வந்த மணிகண்டனுக்குச் சொல்லப் படுகின்றது. தன்னுடைய அவதார நோக்கம் புரிந்து கொண்ட ஐயன், மஹிஷியோடு போர் புரியச் செல்கின்றார். மஹிஷியோடு போர் புரிந்த ஐயன், அவளை அப்படியே தூக்கி எறிகிறார். அவர் எறிந்த வேகத்தில், மஹிஷி பந்தள நாட்டுக் காட்டில் அலசா நதியில் (தற்சமயம் அழுதா நதி எனச் சொல்லப் படுகிறது) வந்து விழுந்தாள். அவள் எழுந்தால் ஆபத்து என அவள் எழுவதற்குள் மணிகண்டன் அவள் உடலில் ஏறி நின்று நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலமும், அகங்காரமும் போய், அவளின் உயிரானது உள்ளும், புறமுமாகப் போய்ப் போய் வருகின்றது. மகேசன் புத்திரனின் திருவடி பட்டதுமே அவளுக்கு மெய்ஞ்ஞானமும் உதிக்கின்றது. தன்னுடைய முற்பிறவி, தான் செய்த தவறுகள், எல்லாம் நினைவுக்கு வருகின்றது. அவளின் உடலில் இருந்து உயிரானது ஒளிமயமான பெண்வடிவெடுத்து ஐயன் திருப்பாதங்களில் வீழ்ந்து தன்னை ஏற்று ரட்சிக்குமாறு வேண்டிக் கொள்கின்றது. ஐயன் சொல்கின்றார்: என்னுடைய அவதார நோக்கமே உன்னுடைய சம்ஹாரம் தான். இந்தப் பிறவியில் என்னுடைய தலையாய கடமை இன்னொன்று இருக்கிறது. என் தாய்க்கு நான் கொடுத்த வாக்குறுதி, புலிப்பால் கொண்டு வருகிறேன் என. அதை நிறைவேற்ற வேண்டும், தவிர, இப்பிறவியில் எனக்குத் திருமணமும் இல்லை, என்னால் உயிர் பெற்ற நீ எனக்குச் சகோதரி முறையாவாய், நீ எப்போதும் "மஞ்சமாதா" என்னும் பெயரில் என்னருகிலேயே கோயில் கொண்டிருப்பாய். எந்த வருஷம் என்னைக் காண வரும் பக்தர்களில், புதியதாய் கன்னியாக வரும் பக்தர் இல்லையோ அப்போது நான் உன்னை மணந்து கொள்ளுவேன்!" என்று சொல்கின்றார். மஞ்சமாதா, மாளிகைப்புறத்து அம்மன், என்ற பெயரில் மஹிஷி ஐயன் அருகிலேயே கோயில் கொள்ளத் தயாராகின்றாள். ஐயன் எப்படிக் கோயில் கொண்டார்? எங்கே?
மஹிஷியை வதம் செய்ததும் அவள் உடலைக் கற்களைப் போட்டு மறைத்தார்கள் தேவாதி தேவர்கள். இல்லை எனில் அவள் உடல் சூரிய ஒளியில் வளர ஆரம்பித்து விடும் அல்லவா? பிறகு, தான் புலிப்பால் கொண்டு செல்லவேண்டிய விஷயத்தை ஐயப்பன் தேவர்களுக்குத் தெரிவிக்க, தேவேந்திரன் புலியாக உருமாறினான். மற்ற தேவர்களும் புலிக் குடும்பமாக மாற தேவேந்திரனாகிய புலியின் மேல் அமர்ந்து, மற்றப் புலிகள் புடை சூழ ஐயப்பன் பந்தளம் திரும்பினார். ஏராளமான புலிகள் புடை சூழ மணிகண்டன் வருவதைப் பார்த்த நகர மக்கள் பயந்து ஓட, சூழ்ச்சி செய்த மந்திரி திகைப்பால் தலை சுற்றி, மயங்கி விழ, மன்னனோ மனம் மகிழ்ந்தான். ஓடி வந்து மகனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்து மனம் மகிழ்ந்தார். மன்னனின் பாசத்தைக் கண்ட மணிகண்டன், மந்திரிக்கும், ராணிக்கும் ஆறுதல் கூறுகிறார்.
"தாயே! நாடாளும் ஆசை எனக்கு இல்லை. நான் வந்த காரியம் முடிந்தது. நீங்கள் பெற்ற மகன் ஆன ராஜராஜனே நாட்டைச் சிறப்பாக ஆளுவான்! நான் திரும்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது!" எனச் சொல்லிப் பின்னர் தன் தந்தையிடமும், பிரியாவிடை கேட்கின்றார். "தந்தையே, நான் திரும்பச் செல்ல வேண்டும். சபரிமலையில் நான் ஒரு மரத்தின் மீது அம்பு தொடுத்திருப்பேன். அதை அடையாளமாக வைத்து, அங்கே எனக்கொரு ஆலயம் எடுங்கள். தங்கள் அன்பை மறக்க மாட்டேன்!" எனச் சொல்லிவிட்டுக் காட்டுக்குத் திரும்புகிறார். காந்தமலைக்குச் சென்றார் என்பது ஐதீகம். மணிகண்டனின் பிரிவால் வருந்திய மன்னன் சபரிமலை சென்று அங்கு ஐயப்பனின் சரம் குத்தி இருந்த அடையாளத்தைக் கண்டார். அங்கே கோயில் கட்டத் தீர்மானித்தார். இரவு படுத்த போது ஐயப்பனின் தோழர் ஆன வாவர் என்பவர் வந்து மன்னனை அழைத்துச் செல்கின்றார். இப்போது வாவர் பற்றிய சில குறிப்புக்கள்: ஐயப்பன் கோயிலில் சபரிமலையில் பதினெட்டாம்படிக்கு அருகே வாவர் சாமியின் கோயிலும் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இந்த வாவர் ஐயப்பனுக்கு நெருங்கிய நண்பர் எனவும் சொல்கின்றனர். பிறப்பால் இவர் முஸ்லீம் எனவும் அரேபியாவில் இருந்து வந்த கடற்கொள்ளையர்களில் ஒருவர் எனவும், இன்னும் சிலர், முஸ்லீம் மதத்தைப் பரப்ப வந்ததாயும் சொல்கின்றனர். கொள்ளை அடித்துக் கொண்டிருந்த வாவரை ஐயப்பன் அடக்க வந்தபோது இருவருக்கும் சண்டை மூண்டதாயும் சொல்கின்றனர். வாவர் பெரிய வீரன் என்றும், ஐயப்பனோடு முதலில் சண்டை போட்டார் என்றும் பின்னர் ஐயனின் அருளை உணர்ந்து அவரின் சீடராகவும், தோழராகவும் மாறினார் என்று சொல்கின்றார்கள். அவரின் வீரத்தைக் குறிக்கவே சன்னிதியில் பழமையான வாள் வைக்கப் பட்டு உள்ளது. எப்படி இருந்தாலும் ஐயப்பனின் நட்பைப் பெற்ற வாவருக்கு அங்கே ஐயப்பனைப் போல் தனிக் கோயிலும் உள்ளது.
இன்னும் சிலர், மதுரையில் இருந்து திருமலை நாயக்கன் காலத்தில் சென்றவர்களில் வாவரும் ஒருவர் எனவும் சொல்கின்றனர். இந்த வாவருக்கு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த குரு தான் பூஜை செய்கின்றார். வாவருக்கு எனத் தனியான சிலை ஒன்றும் இல்லாவிட்டாலும் ஒரு கற்பலகை செதுக்கப் பட்டு வைத்திருப்பதாயும் ஒரு பழமையான வாள் இருப்பதாயும் சொல்கின்றனர். மூன்று பக்கமும் பச்சை நிறப்பட்டுத் துணியால் மூடப்பட்டு நாலாவது பக்கம் திறந்து காணப்படுகிறது எனச் சொல்கின்றனர். ஐயப்பனே பந்தள அரசனிடம் வாவருக்கு எருமேலியில் மசூதி கட்டச் சொன்னதாயும், சபரிமலையில் சன்னிதி கட்டச் சொன்னதாயும் ஐதீகம். இந்த வாவர்தான் மன்னனைக் கூட்டிச் சென்றதாய்ச் சொல்கின்றனர். மன்னன் சென்ற இடத்தில் ஐயன் காந்த மலையில் கோயில் கொண்டிருக்கக் கண்டான். தந்தையிடம் மணிகண்டன், தனக்குச் சபரிமலையில் கோயில் கட்டி விக்ரஹம் பிரதிஷ்டை செய்யுமாறும் சொல்கின்றார். கோயில் கட்டும்போது இடையூறு நேர்ந்தால் அதைத் தவிர்க்க ஒரு கத்தியும் கொடுத்து அருளுகின்றார். பின்னர் திரும்பவும் சபரிமலை வந்த மன்னர் காலையில் எழுந்ததும் தான் கண்டது கனவா, நனவா என்ற பிரமையில் ஆழ்ந்து கனவில் கண்டது போல் கோயில் கட்ட எத்தனிக்கின்றார். அப்போது மன்னனைச் சோதிக்கவும் விஸ்வகர்மாவின் துணையை அவருக்குக் கொடுக்கவும் விரும்பிய இந்திரன் மன்னனுக்குத் தொல்லைகள் கொடுக்க, மன்னன் ஐயப்பன் கொடுத்த வாளை வீசுகின்றார். அந்த வாள் இந்திரனைத் துரத்த இந்திரன் எல்லா இடமும் ஓடித் தப்பிக்க முடியாமல் கடைசியில் மன்னனிடமே வந்து காப்பாற்றும்படி கேட்க, மன்னனும் வாளைத் திரும்பப் பெற்றார். பின்னர் இந்திரனின் ஆலோசனைப் படியே விஸ்வகர்மாவின் துணையுடன் சபரிமலையில் கோயில் கட்டுகின்றார் மன்னர். பதினெட்டுப் படிகளும் அமைத்தாயிற்று. அந்தப் பதினெட்டுப் படிகள் அமைத்த காரணம் என்ன தெரியுமா?
பஞ்ச பூதங்கள் ஐந்து, பொறிகள் ஐந்து, புலன்கள் ஐந்து ஆகிய 15-ன் துணையோடு தான் சாதாரண மனிதன் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று பாலங்களையும் கடக்க வேண்டும். அதைக் குறிக்கவே பதினெட்டுப் படி அமைக்கப் பட்டதாய் ஒரு தத்துவம். இது தவிர, ஒவ்வொரு தேவதையும் தன் அம்சத்தைப் பதினெட்டுப் படிகளிலும் கொடுத்ததாயும் ஒரு தத்துவம்.
அது வருமாறு:
முதல் படி - சூரியன்
இரண்டாம் படி - சிவன்
மூன்றாம் படி - சந்திரன்
நான்காம் படி - பராசக்தி
ஐந்தாம் படி - செவ்வாய்
ஆறாம் படி - முருகன்
ஏழாம் படி - புதன்
எட்டாம் படி - மகா விஷ்ணு
ஒன்பதாம் படி - குரு பகவான்
பத்தாம் படி - பிரம்மா
பதினொன்றாம் படி - சுக்கிரன்
பனிரண்டாம் படி - ரங்க நாதன்
பதின் மூன்றாம் படி- சனீஸ்வரன்
பதினான்காம் படி - எமன்
பதினைந்தாம் படி -ராகு
பதினாறாம் படி - காளி
பதினேழாம் படி - கேது
பதினெட்டாம் படி -விநாயகர்
இனி விக்ரஹம் அமைக்க வேண்டுமே? சரியான காலம் வரும்போது வழிகாட்டல் கிடைக்கும் என்பது ஐயப்பன் மன்னனுக்குச் சொன்னது யார் வந்து விக்ரஹம் அமைக்க வழிகாட்டப் போகின்றனர்? மன்னன் காத்திருந்தான்.
ஐயப்பன் பதிவுகள் முந்தைய இரண்டும் வாசித்துவிட்டேன் கீதாக்கா....
ReplyDeleteஆரியங்காவு கணவாய் அழகான இடம் என்றால் அப்படி ஒரு அழகான இடம் அந்த வழியில் பிராயணம் என்பதே மனதிற்கு இதமளிக்கும் விஷயம். அங்குள்ள ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி....
கார்த்திகை மாதம் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து பாடலும்....கூடவே ஐயப்பன் படப் பாடல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ...இரு பாடல்களும் நினைவுக்கு வந்தன. மீள் பதிவு என்பது தெரிந்தது வாசித்த நினைவு இருக்கு கீதாக்கா, மகிஷி கதையும் தெரிந்தது என்றாலும் சுவாரசியமான விஷயங்கள். ஒவ்வொரு படிக்கான அர்த்தமும்...
மன்னன் விக்ரஹ, அமைக்கும் வழிகாட்டலுக்குக் காத்திருக்கிறான் நாங்களும் காத்திருக்கிறோம். அதுவும் தெரிந்த விஷயம் போல் உங்கள் பதிவை வாசித்த நினைவும் வருகிறது பார்ப்போம் பதிவு வரும் போது தெரிந்துவிடும்
இன்று வந்திருக்கிறேன் டைம் ஷெட்யூல் செய்வதுதான் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது....பார்ப்போம் தொடர்ந்து வ்ர முடிகிறதா என்று,
கீதா
இந்தப் பதிவுகள் அனைத்தும் 2007 ஆம் ஆண்டு நவம்பரில் எழுதப்பட்டவை. நீங்கள் அப்போது இணையத்தில் உலா வந்தீர்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் படித்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக இந்த ஐயப்பன் கதைகள் அனைத்தும் திரைப்படமாகவும், புத்தகங்களிலும், வாராந்தரிகளிலும் வந்ததால் உங்களுக்கு ஏற்கெனவே படித்த மாதிரி தோன்றுகிறது.
Deleteபடித்து விட்டேன். சிறுவயதில் படித்தபோது பாபரும் வாவரும் ஒருவர் என்று எண்ணினேன்.
ReplyDeleteவாவர் வேறே/பாபர் வேறே!
Deleteஐயப்ப ஸ்வாமியின் வரலாற்றைச் சொல்லும் அழகிய பதிவு..
ReplyDeleteமகிழ்ச்சி.. நன்றி..
நன்றி துரை!
Deleteஐயப்பன் வரலாறும், பதினெட்டு படிகளின் தத்துவம் அறிந்தேன்.
ReplyDeleteநன்றி கோமதி!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. புலி மேல் அமர்ந்து வரும் பால மணிகண்டன் படம் மனதை கவர்கிறது. முகத்தில் என்ன ஒரு தேஜஸ். சட்டென இரு கரம் கூப்பி வணங்கச் செய்யும் ஒரு பொலிவு. மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டி. பிரார்த்தித்துக் கொண்டேன்.
சுவாமி ஐயப்பனின் வரலாறு அருமை. எத்தனை முறை படித்தாலும் புதிதாகத்தான் மனதில் பதிந்து கொள்கிறது. பதினெட்டாம் படிகள் குறித்த விபரங்கள் அறிந்து கொண்டேன். அடுத்தப்பதிவையம் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விரிவான கருத்துரைக்கு நன்றி கமலா.
Deleteபடிகளின் தத்துவம் அறிந்து கொண்டேன் நன்றி.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
ReplyDeleteஐயப்பன் வரலாறு, படிகளின் தத்துவம் அறிந்து கொண்டோம்.
ReplyDelete