மதுரையின் வடக்கே உள்ள அழகர்மலையின் மூலவரான பரமஸ்வாமியையும், உற்சவர் ஆன சுந்தரராஜப் பெருமாளையும் கண்டு களிக்க வந்த சேர மன்னன், சுந்தரராஜப் பெருமாள் என்று அழைக்கப் பட்ட கள்ளழகரின் அழகைக் கண்டு வியந்தான். அந்த விருஷபாத்திரி மலைப்பகுதியில் மலைக்கள்ளர்கள் நிறையவே உண்டு. அவர்களின் இஷ்ட தெய்வம் இந்த அழகர் பிரான். கள்ளர்களால் அதிகம் வணங்கப் பட்டதாலேயே கள்ளழகர் என்ற திருநாமம் இவருக்குக் கிடைத்தது என்றும் சொல்லுவார்கள். கள்ளர்களைப் போலவே தலையில் கொண்டை, கையில் வளரி என்னும் ஆயுதம்,(தற்காலத்தில் பூமராங் என்று அழைக்கப் படுகிறது), சாட்டைக் கம்பு, தலையில் எடுத்துக் கட்டிய உருமால், காதுகளில் கடுக்கன்கள், இடுப்பிலும், மார்பிலும் ஒரே ஆடையை இடுப்பில் அரையாடையாகவும், மார்பில் மேலாடையாகவும் கிராமத்து மக்களைப் போல் உடுத்தும் பாங்கு, இவற்றால் கவரப் பட்ட மன்னன் சேரநாடு சென்றும் கள்ளழகர் நினைவாகவே இருந்தான். பின்னர் அங்கே இருந்த "மலையாளக் கருப்பு" கோயிலுக்குப் போய் அவரை வணங்கும்போது அவரிடம் எப்படியாவது அந்தக் கள்ளழகரை இங்கே கொண்டு சேர்ப்பித்து விடு என வேண்டிக் கொண்டார். கருப்பு மன்னனின் ஆசையை நிறைவேற்ற நினைத்தார். தனக்கும் தாய் தானே ஒரு வகையில், ஆகவே பெருமாளை எப்படியாவது சேரநாட்டுக்குக் கடத்திவிடலாம் என நினைத்துத் தன் பதினெட்டுப் பட்டிகளில் இருந்தும், தன் பரிவார தேவதைகளைச் சேர்த்துக் கொண்டு அழகர் மலைக்கு வந்து சேருகிறார்.
கள்ளரின் அழகைப் பார்த்த அவருக்குக் கண் இமைக்க முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்கிறார். வந்த வேலை மறந்து விடுகிறது. எம்பெருமான் கள்ளர்களை விட்டுவிட்டு, மதுரையை விட்டுப் போவானா? அவன் மாயையே, இம்மாதிரி கருப்பை வந்த வேலையை மறக்கச் செய்கின்றது. அங்கேயே இருந்து தினமும் வணங்கிக் கொண்டிருந்த மலையாளக் கருப்புக்குத் திடீரென ஒருநாள் தான் வந்த வேலையும், தற்போது இருக்கும் நிலையும் புரிய, அழகரையே என்ன செய்வது எனக் கேட்கிறார். அழகரும், "நீ திரும்பிப் போகவேண்டாம். இங்கேயே இருந்து எனக்குக் காவல் காத்துக் கொண்டு இருந்துவிடு. நான் வெளியே போகும் நாட்களில் கோவிலைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. என்னுடைய கணக்கு, வழக்குகளுக்கும் நீ பொறுப்பு எடுத்துக் கொள், உன் முன்னிலையில் என்ன தீர்ப்பு வருகின்றதோ அதற்கு மக்கள் கட்டுப் படுவார்கள். உன் முன்னிலையில் ஒருவன் பொய்யாகச் சத்தியம் செய்ய மாட்டான். உண்மையே உன் முன்னிலையில் நிற்கும். என்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் முதலில் உன்னைத் தரிசித்துவிட்டே பின்னர் என்னைத் தரிசிக்க வருவார்கள்" என்று ஆசி வழங்குகிறார்.
கருப்பும் தன்னுடைய பதினெட்டுப் பரிவார தேவதைகளையும், பதினெட்டுப் படிகளாய் மாற்றி அன்று முதல் அழகர்கோயிலில் காவல் இருக்க ஆரம்பிக்கின்றார். இவருடைய பெயரும் அப்போது முதல் "பதினெட்டாம்படிக் கருப்பு" என வழங்க ஆரம்பித்தது. மலையாளத்தில் இருந்து வந்தபடியாலும், பதினெட்டு படிகள் உள்ளதாலும், இவர் சாஸ்தாவின் ஒரு ரூபமே என மக்கள் நம்பிக்கை. மேலும் ஐயப்பனும் கரிய திருமேனி படைத்தவர் எனக் கூறுவது உண்டு. இங்கே பதினெட்டுப் படிகளும், கதவும் தான் தரிசிக்க முடியும். வாசல் கதவு தான் கருப்பண்ணசாமி சன்னதி. சந்தனத்தால் (ஐயப்பனுக்கும் சந்தனம் விசேஷம்) அலங்கரிக்கப் பட்ட இந்தக் கதவின் இருபக்கமும் இரு பெரிய அரிவாள்கள் வைக்கப் பட்டிருக்கும். இவற்றிற்கே பூஜைகள் நடக்கும் இந்தச் சன்னதிக்கு முன்னர் நின்று பேசித் தீர்த்து வைக்கப் பட்ட வழக்குகள் மதுரை மாவட்டத்தில் கணக்கில் இல்லை என்றே சொல்லலாம். யாராக இருந்தாலும் இந்தச் சன்னதிக்கு முன்னர் பொய்ச் சத்தியமோ, பொய்ச் சாட்சியோ கூறுவது இல்லை. இன்றளவும், அழகர் சித்திரைத் திருவிழாவுக்கு மதுரைக்குச் செல்வதற்கு முன்னர், கருப்பண்ணசாமி சன்னதியில் அழகரின் நகைகளின் ஜாபிதாவைச் சொல்லிவிட்டுப் பின்னர் திரும்பும்போது அதே ஜாபிதாபடியே நகைகள் கணக்குகளைக் காட்டிவிட்டுமே செல்வார்கள்.
இப்போது ஐயப்பனின் திருவாபரணங்கள் பற்றிப் பார்க்கலாம். பந்தள அரசனும், ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையுமான ராஜசேகரபாண்டியன், ஐயப்பனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற நினைப்பில் மகனுக்குப் பலவிதமான ஆபரணங்களைச் செய்து வைத்திருந்தான். ஐயப்பன் காந்தமலையில் கோயில் கொண்டுவிட்டு,பின்னர் சபரிமலையில் சரம் குத்தித் தனக்குக் கோயில் எடுப்பிக்கச் சொல்லி மறைந்த பின்னர் கவலையில் ஆழ்ந்த மன்னன், மிகவும் வருந்தினான். அப்போது ஐயப்பன் மன்னனிடம் ஒவ்வொரு வருடமும், மகரசங்கராந்தி அன்று தான் காந்த மலையில் ஒளி வடிவில் தோன்றுவதாயும், அப்போது தன் பக்தர்கள் அனைவரும் வந்து தன்னைத் துதிக்கும் வண்ணம் சபரிமலைக் கோயிலில் ஏற்பாடுகள் செய்யும்படியும், மன்னன் செய்து வைத்திருக்கும் திரு ஆபரணத்தை அந்தக் கோயிலின் மூல விக்ரஹத்துக்குச் சாத்தும்படியும் கேட்டுக் கொண்டார். அது போல் மன்னனும், அவன் சந்ததியினரும் ஒவ்வொரு வருடமும் பந்தள அரண்மனையில் இருந்து ஐயனின் திருவாபரணங்களைச் சுமந்து வந்து ஐயனுக்குச் சாத்துவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர்.
அந்தத் திருவாபரணப் பெட்டிகள் மூன்றிலும் உள்ளவை: ஒன்றில் ஐயப்பனின் திருமேனிக்குச் சார்த்தப் படும் திருவாபரணமும், இரண்டாவதில் கலசக்குடை பேடகமும், மூன்றாவதில் கொடிப்பெட்டியும் உள்ளது. இதைத் தவிர, திருவிதாங்கூரின் சித்திரைத் திருநாள் மகாராஜாவின் காணிக்கையாகத் தங்க அங்கியும் மண்டலபூஜை நிறைவின் போது சாத்துவது வழக்கம். அப்போது ஐயப்பனுக்கு அபிஷேஹம் செய்யப் படும் நெய்யானது திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்தே வருவதாயும், இந்த வழக்கத்தையும் இந்த மகாராஜாவே ஏற்படுத்தியதாயும் சொல்கின்றனர். சபரிமலை சாஸ்தா கோயில் கட்டத் தொடங்கிய நாள் கார்த்திகை மாதம் முதல்தேதி என்பதால் ஐயப்பனின் விரதத்தில் கார்த்திகை முதல் தேதி அன்று துவக்குகின்றார்கள்.
நெய்யபிஷேஹம் ஏன் என்பதற்குக் காரணம்:மூன்று கண்களை உடைய தேங்காய் சாட்சாத அந்தப் பரமசிவனின் அம்சம். நெய்யோ என்றால் அந்த நெய் உண்ட மாலவனின் அம்சம். ஹரிக்கும், ஹரனுக்கும் பிறந்த தெய்வக்குழந்தைக்கு அவன், தாயையும், தந்தையையும் ஒன்றாக இணைத்துக் கொடுத்து வழிபடுவது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் என்னவென்றால் அழியக்கூடிய நாம் தான் தேங்காய் என்றால் அழிவில்லாத ஆத்மா தான் நெய் என்று கருதி அந்த நெய்யை நிரப்பி எடுத்துச் சென்று ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி, ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கின்றோம். அழிவில்லாத ஆத்மாவான நெய்யை, இறைவனிடம் சேர்த்துவிட்டு, அழியக் கூடிய உடலான தேங்காயை, நெருப்பில் இடுகின்றோம்.
கருப்பு கள்ளழக அருகில் இருப்பது, பதினெட்டாம்படி கருப்பு மகரசங்கராந்தி விஷயங்கள், நெய்யபிஷேகத் தத்துவம் கார்த்திகை விரதம் தொடங்கும் காரணம்எல்லாமே வாசித்த நினைவு இருக்கிறது, கீதாக்கா. மீண்டும் வாசித்தேன்.
ReplyDeleteகீதா
எங்கே வாசிச்சீங்களோ? தெரியலை. நிச்சயமாய் என்னோட பதிவில் இல்லை தி/கீதா! :)))))) எனக்கு அப்போ உங்களைத் தெரியவே தெரியாது. கருத்துப் போட்டதெல்லாம் என்னோட சிஷ்யக் கூட்டம்! :))))))
Deleteஓ! வேறு எங்கு வாசிப்பேன் ஆனால் இது நினைவு இருக்கே எப்படின்னு தெரியலை கீதாக்கா...
Deleteகீதா
இவை எல்லாம் பெரும்பாலோருக்குத் தெரிந்தது தானே தி/கீதா! அதான் படிச்சாப்போல் இருக்கு. இவை அனைத்தும் நான் 2007 ஆம் ஆண்டு நவம்பர்/டிசம்பரில் எழுதியவை. அப்போ நீங்க இணையத்துக்கு வந்துட்டீங்களானு எனக்குத் தெரியாது. கருத்துச் சொன்னவங்க எல்லாம் என்னோட சிஷ்யக் கூட்டம். இப்போச் சிதறிட்டாங்க! :(
Deleteஅருமை தொடர்ந்து வருகிறேன்...
ReplyDeleteThanks Killerji!
Delete
ReplyDeleteகருப்ப சாமி ஐயாவின் மகத்துவமே தனி..
தெய்வீகமான பதிவு..
சர்க்கரைப் பொங்கல் மாதிரி
சாஸ்தா வரலாறு படிக்கப் படிக்க இனிமை..
சாமியே சரணம்..
ரசிப்புக்கு நன்றி தம்பி துரை!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அழகர் கோவிலில் பதினெட்டு படிகளும், சாத்திய கதவுந்தான் கருப்பண்ணசாமியின் சன்னிதானமா ? சுவாரஸ்யமான விபரங்கள். இந்தப் பதிவில் இருக்கும் படத்தில் உள்ள கருப்பண்ணசாமி கேரளாவில் உள்ள "மலையாள கருப்பு" கோவிலில் உள்ள தெய்வமோ?
நெய்யபிஷேக தத்துவம் அறிந்து கொண்டேன். சின்ன வயதிலிருந்தே நாம் (பெண்கள்) போகக்கூடாத கோவில் எனச் சொல்லி, சொல்லி சபரிமலைக்கு கோவிலை பற்றிய விபரங்களை பக்தியுடன் சுவாரஸ்யமாகத்தான் கேட்டு வருகிறோம். சபரி நாதன் அனைவரையும் காத்தருள வேண்டும். தொடர்ந்து தங்களின் இந்த ஐயப்பனை காணும் பதிவுக்கு வருகிறேன். தெரியாத அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வழக்கம் போல் அனைத்தையும் ரசித்து விடாமல் கருத்துச் சொன்னதுக்கு நன்றி கமலா.
Deleteகருப்பசாமி வந்து அமர்ந்த கதை அறிந்தோம்.
ReplyDelete