வெகு காலமாகப் பதிவுகளே சரிவரப் போடுவதில்லை. உட்கார்ந்து எழுதினாலும் மனம் பதிவதில்லை. இப்போ இரண்டு வருஷங்களாக இப்படி ஒரு நிலை. அதோடு இல்லாமல் சுற்றிவர நடப்பதே எதுவும் சரியில்லை. இளம்பெண்ணை ரயிலில் தள்ளி விட்டது/காதலித்த பெண்ணைத்துண்டு துண்டாக வெட்டிக் கொன்றது/பெற்றோர் தற்கொலை என எங்கு பார்த்தாலும் மோசமான விஷயங்களாகவே இருக்கின்றன. மற்ற சமூகம் சார்ந்த விஷயங்களும் எழுதும்படி இல்லை. ஆகவே இவற்றை எல்லாம் பார்த்து நொந்து போவது தான் மிச்சம். சிநேகிதி வல்லி தன் பழைய பதிவுகளைப் புதுப்பிக்கிறார். ஆகவே நானும் அப்படியே செய்துடலாம்னு எண்ணி 2007 ஆம் ஆண்டில் எழுதிய ஐயப்பன் குறித்த பதிவுகளை மீள் பதிவாகப் போடுகிறேன்.
ஹரியும், ஹரனும் இணைந்து பெற்ற திருக்குழந்தையான தர்ம சாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமே ஐயப்பன் ஆகும். எப்படினு பார்ப்போமா? ஐயப்பனாக நாம் இன்று வணங்கும் திருமூர்த்தி தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம். தர்மசாஸ்தா தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத் தோன்றியவர். சாஸ்தாவின் வரலாறு மிகப் புனிதமானது. அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாய்ச் சொல்லப் படுகிறது. அவை:
சம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.
கல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால், திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.
வேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
ஞான சாஸ்தா; தட்சிணா மூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.
பிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்.
மஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.
வீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.
தர்ம சாஸ்தா: இவரே ஐயப்பனின் திரு அவதாரம். சபரிமலையில் காட்சி தருபவர் இவரே. இவரின் அவதார நோக்கமே மஹிஷி மர்த்தனம் ஆகும். யார் இந்த மஹிஷி? எதுக்காக ஐயப்பன் அவதாரம் எடுத்து அவளை சம்ஹாரம் செய்ய வேண்டும்? கொஞ்சம் பின்னோக்கிப் போவோமா???
******************************************************************************
பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்தாயிற்று. தேவர்களுக்குள் பங்கீடும் முடிந்தது. மோகினியாய் அவதாரம் எடுத்து, விஷ்ணுவும் தன்னோட வேலையைத் திறம்படச் செய்தாகி விட்டது. என்றாலும் அசுரத் தனமான எண்ணங்கள் அசுரர்களிடம் இருந்து போகவில்லை. ரம்பன், கரம்பர் என்னும் இரு அரக்கர்களில் ரம்பனின் பிள்ளையான மஹிஷாசுரனைத் தேவி துர்க்கையாக அவதரித்து சம்ஹரித்தாள். பார்த்தான் கரம்பன். அவன் பெண்ணான மஹிஷியைத் தூண்டி விட்டு பிரம்மாவை நோக்கித் தவம் இருக்கச் செய்தான். மஹிஷியும் தவம் இருந்தாள். இந்த இடத்தில் ஒரு கேள்வி அனைவருக்கும் சாதாரணமாய் எழக் கூடியது!!
தவம் செய்யும் எல்லாருக்கும் இறைவன் காட்சி தந்து வேண்டிய வரங்களைத் தந்து விட்டு பின்னர் ஏன் மாட்டிக் கொண்டு தவிக்க வேண்டும்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி இல்லையா?எல்லாருமே பரிட்சைக்குப் படிக்கிறோம். அனைவருமே "பிட்" அடிக்காமலும் பரிட்சை எழுதுகிறோம். நாம் எழுதியதுக்குத் தகுந்தவாறு மதிப்பெண்கள் கிடைத்துத் தானே ஆகவேண்டும்? குறைத்துக் கொடுத்தால் நாம் சும்மா இருப்போமா? படித்ததை நாம் எவ்வாறு உபயோகிக்கப் போகிறோம் என்பது நம் தனிப்பட்ட விருப்பம், என்றாலும் பரிட்சை பொதுப்பரிட்சை. எல்லாரையும் போல்தானே மதிப்பெண்கள் எதிர்பார்ப்போம் இல்லையா? அதே தான் இங்கேயும் அரக்கக் குடும்பம் ஆனாலும் தவம் பொய்யல்லவே, பக்தி பொய்யல்லவே, அதை உபயோகிக்கும் விதம் தானே தவறு! அதற்குத் தான் சம்ஹாரம் என்ற தண்டனை!!
மஹிஷியின் தவத்தால் மகிழ்ந்தான்,பிரம்மா. அவள் கேட்ட வரமோ கிறுகிறுக்க வைத்தது. அவள் அப்படி என்ன கேட்டாள்? "ஹரியும், ஹரனும் இணைந்து உருவாக்கிய குழந்தையால் மட்டுமே எனக்கு அழிவு வரவேண்டும். அதுவும் அந்தக் குழந்தை பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். பூமியில் 12 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்க வேண்டும். நான் இறந்த பிறகு என் உடல் மீது சூரிய வெளிச்சம் பட்டால் என் உடல் வளர வேண்டும்." இவையே அவள் கேட்டது. அவள் நினைத்தது என்னவென்றால் எப்படி ஒரு ஆணும், ஆணும் இணைந்து குழந்தை பெற முடியும்? அப்படியே பிறந்தாலும் அந்தக் குழந்தை பூவுலகுக்கு எவ்வாறு வரும்? வந்தாலும் 12 வயதுப் பாலகனால் இத்தனை பலம் வாய்ந்த நம்மை என்ன செய்ய முடியும்?" என்பதே!ஆட்டுக்குக் கூட வாலை அளந்தே வைக்கும் அந்த சர்வேசன் மஹிஷிக்கு மட்டும் முடிவை வைக்காமலா இருப்பான்? என்றாலும் அவள் எத்தனை காலம் இருக்க வேண்டுமோ அத்தனை காலம் இருந்தே ஆகவேண்டும் அல்லவா?
"உன் எண்ணப்படியே ஆகட்டும்!" என்ற வரம் மஹிஷிக்குக் கிடைத்தது. அவள் ஆற்றல் அதிகரித்தது. அனைவருக்கும் தொல்லை கொடுப்பதே அவள் சந்தோஷம் ஆயிற்று. இங்கே ஹரியும், ஹரனும் இணைய வேண்டுமே? பாற்கடல் கடைந்த போது அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டி வந்த மோகினியாகத் திருமால் உருமாறினார். சிவனும் ஹரியும் இணைந்தனர். சாஸ்தா பிறந்தார். தர்மத்தை நிலைநாட்டுவான் இவன் எனப் பெற்றவர்களால் அருளப் பெற்றார் சாஸ்தா. பூதகணங்களுக்கெல்லாம் நாதன் என்பதால் "பூத நாதன்" எனப் பெயர் பெற்றவன். இந்திராணியைக் காத்தவன். எப்படித் தெரியுமா? "கந்த புராணம், நம் சொந்த புராணம்" எனக் கூறி வந்த வாரியார் ஸ்வாமிகள் கூறிய தகவல் இது:
"சூரபத்மனால் விரட்டப் பட்ட இந்திரன், சிவனைப் பூஜிக்கக் கைலாயம் செல்ல விரும்பியபோது இந்திராணியைத் தனியே விட்டுச் செல்ல நேர்ந்தது. அப்போது இந்திராணி தனியே இருக்கப் பயந்தாள். அரக்கர்கள் வந்து என்னைத் தூக்கிச் சென்றால்? எனப் பயப்பட்டாள். இந்திரன் சாஸ்தாவின் துணையை நாட, சாஸ்தா அங்கே பிரத்யட்சம் ஆகி இந்திராணியைத் தான் காவல் காப்பதாய்ச் சொன்னார். அதன்படி அவரின் கணநாதன் ஆன "மஹாகாளன்" காவல் இருக்கிறான் இந்திராணிக்கு. சூரனின் தங்கையான அஜமுகி இந்திராணியை வந்து துன்புறுத்த இந்திராணி, சாஸ்தாவைக் கூப்பிட்டு ஓலம் இடுகிறாள்.
"பூரணைக்கு இறைவா ஓலம்!
புஷ்கலை கணவா ஓலம்!
வாரணத்து இறை மேல் கொண்டு
வரும் பிரான் ஓலம்!"
எனக் கூவி அழைக்க, சாஸ்தாவின் கட்டளையின் பேரில் மஹாகாளன் அஜமுகியின் கைகளைத் துண்டித்துத் தண்டிக்கிறார். இந்த மஹாகாள மூர்த்திக்குக் காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில் இருப்பதாய்க் கூறுகின்றார்கள். (நான் இன்னும் பார்த்தது இல்லை! ) சாஸ்தா இந்திராணியைக் காத்த இடமானது "கைவிடாஞ்சேரி" என்ற பெயரால் அழைக்கப் பட்டு, தற்சமயம் "கைவிளாஞ்சேரி'" என்று மருவியதாகவும், சீர்காழியில் தென்பாதித் தெருவில் சாஸ்தாவிற்கு என ஒரு கோயில் இருப்பதாகவும், கூறுகின்றனர். மேற்கண்ட நிகழ்ச்சி நடந்த இடம் சீர்காழி என்று கந்தபுராணக் குறிப்பு சொல்லுகிறது.
சாஸ்தா பிறந்துவிட்டார். பூதநாதனாகிக் காவல் தெய்வம் ஆகி, தர்மத்தை நிலைநாட்டவும் தொடங்கி விட்டார். அப்போது நேபாள நாட்டு மன்னனான பலிஞன் என்பவன், தனக்கு ஏற்பட்ட முதுமையைப் போக்கிக் கொள்ள வழிதேடிக் கொண்டிருந்தான். காளி உபாசகன் ஆன மன்னன் பலிஞன், மந்திர, தந்திரங்களில் தேர்ச்சி பெற்றவனும் ஆவான். ஆகவே மந்திர, தந்திரங்களைச் செய்யும் சிலர் மன்னனிடம் வந்து , கன்னிகை ஒருத்தியைக் காளிக்கு நரபலி ஆகக் கொடுத்தால் நீ நினைத்தது நடக்கும் என அவன் ஆவலைத் தூண்டினார்கள். கன்னிகை ஒருத்தியைத் தேடிக் கண்டு பிடித்தான் மன்னன் பலிஞன். அவளோ சிவனைச் சிந்தையில் நிறுத்தி, எந்நேரமும் அவனையே ஒருமுகமாய்த் தியானிப்பவள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், சிவமந்திரத்தை மறக்காமல் கட்டுண்டு கிடந்து, நரபலியை எதிர்நோக்கிக் கொண்டிருந்த நிலையிலும், "நமசிவாய" மந்திரத்தைச் சிந்தையில் நிறுத்தி, தியானித்தவண்ணம் இருந்தாள்.
தன் அடியாளைக் கஷ்டப் படுத்தும் எண்ணம் அந்த ஆதிசிவனுக்கு ஏது? மன்னனுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும், கன்னிகையையும் காக்க வேண்டும் என எண்ணிய ஆதிசிவன், கன்னியைக் காக்குமாறு காவல்தெய்வம் ஆன சாஸ்தாவிடம் பொறுப்பை ஒப்புவிக்க சாஸ்தாவும் விரைந்து வந்து கன்னியைக் கட்டுக்களில் இருந்து விடுவித்து அவளைக் காத்தார். மன்னன் பார்த்தான், கன்னியைக் கட்டி இருந்த கட்டுக்கள் தாமாகவே திடீரென விலகியது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது, சாஸ்தா கண்ணுக்குத் தெரியவில்லை. என்ன மாயம்? எனப் பிரமித்த மன்னன், தன்னுடைய மந்திர, தந்திர அஸ்திரங்களைப் பிரயோகம் செய்தான். பூதநாதன், இந்தப் பூதங்களுக்குப் பயப்படுபவனா? ஒன்றும் பலிக்கவில்லை, மன்னன் மிரண்டான், என்ன செய்வது எனப் புரியவில்லை!!!!!!!
சாஸ்தா தன் உருவைக் காட்டி அருளினார். "மன்னா! மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள நீ, இவ்வாறு கன்னியைக் காவு கொடுக்கலாமா? அதுவும் அன்பே வடிவான, அன்பு ஒன்றுக்கு மட்டும் கட்டுப் படக்கூடிய அன்னையைத் திருப்தி செய்வதாய் நினைத்துக் கொண்டு, அன்னைக்குப் பிடித்தமில்லாத ஒரு விஷயத்தில் இறங்கலாமா?" எனக் கேட்டு பலிஞனுக்கு உண்மையை உணர்த்தவே பலிஞன் மனம் மாறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு இல்லாமல், தன் மகள் ஆன புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வாழ்வு தர வேண்டும் எனவும் சாஸ்தாவைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாறே புஷ்கலையைத் திருமணம் செய்து கொண்டார். யார் இந்தப் புஷ்கலை? ஏன் சாஸ்தாவைத் திருமணம் செய்து கொண்டாள்? சாஸ்தாவிற்குக் கல்யாணம் ஆகி விட்டதா? அப்படி என்றால் ஐயப்பன் யார்? எல்லாம் வரும் நாட்களில்!!!!!!!!!
புதுக்கதையாக இருக்கிறது. சாஸ்தாவும் ஐயப்பனும் ஒன்று என்கிறீர்கள். கேரளத்தில் உள்ளவர்களுக்கு அய்யப்பன் பந்தள மகாராஜாவின் குலதெய்வம் என்றும், மகாராணிக்கு புலிப்பால் வேண்டும் என்றபோது புலியையே கொண்டு வந்தவர் என்றும், கழுத்து மணியுடன் காட்டில் கண்டெடுக்கப்பட்ட படியால் மணிகண்டன் என்ற பெயரும் உடையவர், வாவர் (பாபர் என்பதின் திரிபு) அவருடைய நண்பர், வாவருக்கும் சந்நிதி உண்டு, என்பது போன்ற பாமர கதைகளே தெரியும்.
ReplyDeleteஹும். உங்கள் கதையையும் தொடருங்கள். எப்படிப் போகிறது என்று பார்ப்போம்.
Jayakumar
நீங்கள் சொல்லுவது ஐயப்பன் மானுட அவதாரக்கதை. ஒவ்வொன்றாக வரும். ஒன்றுக்கொன்று எப்படி சம்பந்தப்படுகிறது என்பதையும் சொல்லி இருக்கேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஅறிந்த கதை. ஆனால் சுவாரஸ்யம் குன்றுவதில்லை. அந்த ஓலம் ஓலம் எனும் பாடலை இன்றுதான் முதலில் துரை அண்ணன் பதிவிலும், இங்கும் காண்கிறேன்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், கந்தபுராணச் சொற்பொழிவிலேயும் வாரியார் ஸ்வாமிகள் சொல்லி இருக்கார்! ஓரளவு தெரிந்திருந்தாலு இணையத்துக்கு வந்த பின்னர் இதை எல்லாம் எழுதுவதற்காக மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டேன்.
Deleteஇந்தக் காலம்போல் இல்லாமல் அந்தக் காலத்தில் சினிமா மூலமாகவே இந்த மாதிரி விஷயங்களை சொல்லிப் புரிய வைத்தார்கள். இப்போதுதான் சினிமா கண்டபடி ஓடுகிறது.
ReplyDeleteஸ்ரீராம், திரைத்துறையே மாற்றோர் கைகளில் இருக்கையில் இப்படியான படங்கள் வருவது கஷ்டம். எடுப்பதுமே கஷ்டமாக இருக்கும். அப்படி எடுத்தாலும் வெளியிடுவதில் பல சிரமங்கள் உள்ளன. சிலவற்றை வெளிப்படையாகச் சொல்ல முடியலை. அதனாலேயே பதிவு எழுதுவதைக் கொஞ்சம் நிறுத்தினேன். :(
Deleteநன்று தொடர்ந்து வருகிறேன்...
ReplyDeleteநன்றி கில்லர்ஜி.
Deleteஅருமையான பதிவு..
ReplyDeleteஸ்ரீ ஹரிஹர புத்திரன்.. அவரே மக்களின் நலன் கருதி பல்வேறு அம்சங்களில் திகழ்கின்றார்.. இதை உணர்ந்து கொள்ள முடியாதவர்களே குழாயடியில்
சிவனுக்கும் ஹரிக்கும் பிள்ளை பிறக்குமா?..,
சாஸ்தா என்பது யார்?.., ஐயப்பனுக்கும் ஐயனாருக்கும் என்ன சம்பந்தம்?.. - என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்..
போலி அறிவாளிகள் செய்திருக்கின்ற ஆய்வுகள் என்று ஐயப்பன் பெயரால் பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்..
ஐயப்பனை அறிவதற்கு ஐயப்பனுக்குள் மூழ்கினால் அன்றி முடியாது..
தக்கைகள் தகையுறுவதில்லை.. காலம் முழுதும் மிதந்து கொண்டே இருக்க வேண்டியது தான்..
அன்றைக்கு எனது பதிவில் தாங்கள் இட்ட கருத்துக்கான பதில் இது..
இன்றைக்கு இந்தப் பதிவுக்கும் ஆகின்றது..
மகிழ்ச்சி.. நன்றி..
நன்றி தம்பி துரை. அங்கேயும் இந்தக்கருத்தைப் படித்தேன். மிக்க நன்றி. ஒரு ஜன்மத்தில் ஆணாக இருந்தவர் மறு ஜன்மத்திலும் ஆணாகவே இருக்கணுமா என்ன? மோகினி அவதாரம் பெண்ணாக வந்தது. ஆகவே ஹரிஹர புத்ரன் தோன்றக் காரணமாக அமைந்தது. அம்பிகையையே ஆணாக இருக்கையில் அவள் நாமம் விஷ்ணு என்று வரும்.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteகந்தபுராண கதை பகிர்வு அருமை. மகாகாளன் . கந்தன் கருணையில்
இந்திராணியை காப்பற்றும் இந்த கதையை சேர்த்து இருப்பார்கள்.
தொடர்கிறேன்.
வாங்க கோமதி! நீங்கள் அறியாததா? இணையத்தில் கந்தபுராணம் கிடைச்சாலும் நான் வாரியார் ஸ்வாமிகள் அந்தக்காலத்தில் "கல்கி" வாராந்தரியில் எழுதினத்தைத் தான் சேகரித்து வைத்து அவ்வப்போது படிப்பேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமையாக உள்ளது. படங்களும் நன்றாக உள்ளது. சாஸ்தாவின் எட்டு அவதாரங்களின் வரலாற்றை மிக நன்றாக புரியும்படி விளக்கி எழுதியுள்ளீர்கள். சாஸ்தா பற்றிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டேன். தங்களின் பழைய பதிவு நானும் இதுவரை படிக்காத இப்பதிவை தாங்கள் வெளியிடுவது மிக்க மகிழ்வாக உள்ளது. நிறைய விஷயங்களை படித்து தெரிந்து வைத்திருக்கும் உங்கள் மூலம் நாங்களும், சில அறிந்தவை, பல அறியாதவற்றையும் தெரிந்து கொள்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நேற்று முழுவதும் எங்கள் வீட்டில் நாங்கள் கொஞ்சம் வெளியில் சென்று விட்டதால், வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. இதோ நீங்கள் தந்திருக்கும் இரண்டாவது பதிவுக்கும் செல்கிறேன். அருமையான விபரங்கள் அடங்கிய இப் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவு அருமை தொடர்கிறேன்.
ReplyDelete