எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 22, 2022

ஐயப்பனைக் காண வாருங்கள்! மீள் பதிவு 4

 பதினெட்டாம்படியின் மகத்துவமும், தத்துவமும்



ஒண்ணாம் படியில் ஏறுகின்றேன்

உனையன்றி காட்சிகள் தொலைக்கின்றேன்! [காணல்]

இரண்டாம் படியில் ஏறுகின்றேன்

ஒலிகள் சத்தம் மறக்கின்றேன்! [கேட்டல்]

மூணாம் படியில் ஏறுகின்றேன்

மணங்கள் யாவும் விடுகின்றேன்! [நுகர்தல்]

நாலாம் படியில் ஏறுகின்றேன்

அறுசுவை அகற்றி செல்கின்றேன்! [உண்டல்]

ஐந்தாம் படியில் ஏறுகின்றேன்

தொடுவுணர்வற்று நகர்கின்றேன்! [தொடுதல்]

ஆறாம் படியில் ஏறுகின்றேன்

காமங்கள் யாவும் தொலைக்கின்றேன்! [காமம்]

ஏழாம் படியில் ஏறுகின்றேன்

கோபங்கள் அகலப் பார்க்கின்றேன்! கோபம்]

எட்டாம் படியில் ஏறுகின்றேன்

லோபம் விலகக் காண்கின்றேன்! [லோபம்]

ஒன்பதாம் படியில் ஏறுகின்றேன்

மோஹம் பறந்திடச் செய்கின்றேன்! [மோஹம்]

பத்தாம் படியில் ஏறுகின்றேன்

மதமென்னும் பேயை விரட்டுகின்றேன்! [மதம்]

பதினொண்ணாம் படியில் ஏறுகின்றேன்

வெறுப்புகள் விலகிடக் காண்கின்றேன்! [மாத்ஸர்யம்]]

பனிரண்டாம் படியில் ஏறுகின்றேன்

அசூயை அகற்றி வாழ்கின்றேன்! [அசூயை]

பதிமூணாம் படியில் ஏறுகின்றேன்

பெருமிதமின்றிச் செல்கின்றேன்! [தற்பெருமை]

பதினாலாம் படியில் ஏறுகின்றேன்

சத்வகுணத்தை விடுகின்றேன்! [சத்வம்]

பதினைந்தாம் படியில் ஏறுகின்றேன்

சிற்றின்ப குணத்தைத் விடுகின்றேன்! [ரஜம்]

பதினாறாம் படியில் ஏறுகின்றேன்

தாமஸ குணத்தைத் தொலைக்கின்றேன்! [தாமஸம்]

பதினேழாம் படியில் ஏறுகின்றேன்

கற்றதையெல்லாம் மறக்கின்றேன்! [வித்யை]

பதினெட்டாம் படியில் ஏறுகின்றேன்

அறியாமை இருளைப் போக்குகின்றேன்! [அவித்யை]

பகவானே உனைக் காண்கின்றேன்

பந்தபாசத்தை விடுகின்றேன்!

ஸ்வாமியே சரணமெனக் கதறுகின்றேன்

சாஸ்வத நிலையில் திளைக்கின்றேன்!

மகரஜோதியில் கரைகின்றேன்

மனத்தினில் களிப்பே உணர்கின்றேன்!

பதினெட்டாம்படிக்கதிபதியே சரணம் ஐயப்பா!

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

திரு விஎஸ்கேஎன்னும்( டாக்டர் சங்கர்குமார் அவர்கள் நீண்ட வருடங்களாக நண்பர்).  அவர்கள், பதினெட்டாம்படியின் தத்துவத்தைக் குறித்து எழுதிய பாடல். அவரோட பதிவிலேயும் போட்டிருக்கலாம்.  

டாக்டர் சார், உங்களோட பாடலை உங்களைக் கேட்காமல்   போட்டிருப்பதற்கு மன்னிக்கவும். பாடல் என்னோட போன பதிவின் அர்த்தங்களுக்குப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது.

இப்போ சிசிலர்  கேட்ட வார்த்தைகளுக்கான அர்த்தமும், சிலைப் பிரதிஷ்டையும்.

உலோபம் என்றால் பொதுவாக யாருக்கும் எதுவும் கொடுக்காத பேராசைக் காரன் என்ற பொருளில் தான் இங்கே வரும்.

அசூயை என்பதும் இங்கே பொறாமை என்ற அர்த்தத்தில் தான் எடுத்துக் கொள்ளணும்.

சத்வகுணம்: மிகவும் உயர்ந்த ஒரு குணம். இந்த சத்வ குணம் நிரம்ப உள்ளவர்களைத் தான் நாம் "ரொம்ப நல்லவங்க" என்ற அடை மொழியுடன் அழைக்கிறோம்.

ரஜோகுணம் என்பது தைரியத்தைக் குறிப்பிட்டாலும், கொஞ்சம் சுறுசுறுப்பையும் குறிக்குமோன்னு தோணுது.

தமோகுணம், வேண்டாததைப் பேசுதல், செய்யுதல், அசட்டுத் தனமான கோபம், ஆணவம் போன்றவற்றுக்குக் காரணகர்த்தா இது. இறைவனிடம் நாம் செல்லும்போது அனைத்தையும் துறந்து "பரிபூரண சரணாகதி" அடைய வேண்டும். இறைவன் ஒருவனே பெரியவன் என்ற எண்ணம் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதாலேயே பதினெட்டுப் படிகள். பதினெட்டுப் படிகளும் பதினெட்டுத் தேவதைகளையும் குறிக்கும் எனவும் பார்த்தோம். இது தவிர, சபரி மலை தவிர ஐயப்பன் இன்னும் பதினெட்டு இடங்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் சொல்கின்றனர். அவை எல்லாமே கேரளத்தில் தான் உள்ளது.

பொன்னம்பலமேடு

கெளதென் மலை

நாகமலை

சுந்தரமலை

சிற்றம்பல மலை

கல்கி மலை

மாதங்க மலை

மயிலாடும்மேடு

ஸ்ரீபாத மலை

தேவர்மலை

நீலக்கல் மலை

தாலப்பாறமலை

நீலிமலை

கரிமலை

புதுச்சேரிமலை

காளகட்டி மலை

இஞ்சிப்பாறை மலை

சபரிமலை

ஆகிய பதினெட்டு இடங்கள் ஆகும்.

சபரிமலையில் விஸ்வகர்மாவின் உதவியுடன் கோயில் கட்டிவிட்டு, விக்ரஹப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமெனத் தவித்த மன்னனுக்கு இரவு கனவில் ஐயன் தன்னுடைய யோக கோலத்தைக் காட்டி அருளினார். மெய்சிலிர்த்த மன்னன் கண்விழித்தபோது அவர் எதிரில் பரசுராமர் நின்றிருந்தார். மன்னனிடம், "மன்னா, உன் கனவில் கண்ட வடிவைப் போலவே விக்ரஹம் செய்து, இங்கே சபரிமலையில் பிரதிஷ்டை செய்து விடு. சாஸ்தா என் வேண்டுகோளின்படி இந்த மலைநாட்டில் பதினெட்டு இடங்களில் கோவில் கொள்ளுவதாய்ச் சொல்லி இருக்கிறார். இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யும் சமயம், நானும், அகத்தியரும் பங்கு கொள்வோம்!" எனத் தெரிவித்து மறைந்தார்.

அதன்படியே வடிவமைக்கப் பட்ட விக்ரஹத்தைக் கோயிலில் பிரதிஷ்டை செய்யும்போது பரசுராமர், அகத்தியர், மற்ற முனிவர்கள் அனைவரும் மன்னனுக்கு உதவினார்கள். தை மாதம் முதல் நாள் தேய்பிறை பஞ்சமிதிதியில் சனிக்கிழமை, உத்திர நட்சத்திரம் கூடிய நன்னாளில் விக்ரஹப் பிரதிஷ்டை செய்யப் பட்டது. பூஜை முறைகள் ஒழுங்கு செய்யப் பட்டது. தெய்வமே தனக்கு மகனாய் வந்ததை நினைத்து, நினைத்து, அந்தத் தெய்வக் குழந்தையின் எளிமையையும். எவரும் அணுகும் வண்ணம் இருந்த தன்மையையும் நினைத்து, நினைத்து வியந்தார் மன்னர். மீண்டும் பந்தளம் திரும்பிய மன்னன், தான் பெற்ற மகன் ஆன "ராஜராஜனு"க்குப் பட்டம் கட்ட ஏற்பாடுகள் செய்தார்.ராஜராஜனுக்குப் பட்டாபிஷேகம் நடந்தது. என்றாலும் பெறாத மகன் ஆன "மணிகண்டனின்" மகத்துவத்திலேயே மன்னன் மூழ்கி, அனைவரிடமும் சாஸ்தாவின் மகிமையை எடுத்துக் கூறினார். பட்டாபிஷேஹம் செய்து பார்க்க முடியாத மகனுக்கு, ஆண்டு தோறும் சங்கராந்தி அன்று தன்னால் அளிக்கப் பட்ட "திரு ஆபரணங்களை"ப் பூட்டி அழகு பார்க்க நினைத்து, வித விதமாய் ஆபரணங்கள் செய்து, சபரிமலை ஐயப்பனுக்குக் கொடுத்தார். பின்னர் ஐயன் நினைவிலேயே தவம் இருந்து ஐயன் திருவடியை அடைந்தார். என்றாலும் மன்னன் ஆரம்பித்து வைத்த வழக்கப் படியே இன்றும், சங்கராந்தி அன்று பந்தள அரண்மனையில் இருந்து "திரு ஆபரணங்கள்" வந்து ஐயனுக்குச் சார்த்தப் படுகிறது. தன் கோயிலில் தன் மூல விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்த சங்கராந்தி அன்று ஒவ்வொரு வருஷமும் தான், எதிரே உள்ள காந்த மலையில் ஜோதி வடிவாய்த் தோன்றுவதாயும் மன்னனுக்கு ஐயன் வாக்களித்தார். அந்தப் படி ஒவ்வொரு சங்கராந்தி அன்றும் மாலையில் சபரிமலையில் தர்மசாஸ்தாவின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் சன்னதிக்கு எதிரே உள்ள காந்தமலையில் ஐயனின் ஜோதி உருவம் காட்சி அளித்து வருகிறது.

தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்ட மகிஷியை ஐயன், தான் இந்தப் பிறவியில் ராஜகுமாரனாகப் பிறந்திருந்தாலும், ஒரு பிரம்மச்சாரியாகவே வாழப் போவதாயும், மற்றொரு பிறவியில் மகிஷியை மணந்து கொள்ளுவதாயும் கூறினார். அதுவும் எப்படி? "ஒவ்வொரு வருஷமும் ஐயனைக் காண வரும் பக்தர்களில் எந்த வருஷம் புதிய பக்தர்கள் இல்லையோ அந்த வருஷம் திருமணம் நடக்கும்" எனக் கூறி இருக்கிறார். புதிதாய் ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களைக் "கன்னி ஐயப்பன்" என அழைப்பது உண்டு. ஒவ்வொரு வருஷமும் புதிய, புதிய பக்தர்கள் சென்று வருவதால் மஹிஷியின் தவம் இன்னும் முற்றுப் பெறவில்லை. அவள் சன்னிதியில் இருந்து வெளியே வந்து, இந்த வருஷமும் கன்னி ஐயப்பன் மாரா? எனப் பார்த்துவிட்டுப் பின்னர் கோபத்துடன் கதவைச் சாத்திக் கொள்வதாய் ஐதீகம். அந்தப் படிக்கு அவள் சன்னதி சாத்தப் படுகிறது. முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போலவே ஐயப்பனுக்கும் ஆறுபடை வீடு இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். அவை ஆரியங்காவு, அச்சன் கோவில், பந்தளம், குளத்துப்புழா, எரிமேலி, சபரிமலை ஆகியவை. அடுத்து மதுரை அழகர்கோவிலில் இருக்கும் பதினெட்டாம்படிக் கருப்பணசாமி பற்றிப் பார்ப்போம்!

13 comments:

  1. அருமையான பதிவு.
    பதினெட்டு படி பாடல் நன்றாக இருக்கிறது.
    அடுத்து மதுரை பதினெட்டாம்படி கருப்பணசாமி பற்றி அறிய வருகிறேன்.

    ReplyDelete
  2. நிறைய விவரங்கள்...  சில (மட்டுமே) அறிந்தவை.

    ReplyDelete
  3. படிப்பாடலும் அதன் தத்துவ விளக்கமும் அருமை..

    பதிவு சிறப்பு..

    சாமியே சரணம் ஐயப்பா..

    ReplyDelete
  4. எந்த வருஷம் புதிய பக்தர்கள் இல்லையோ//

    இது இதுவரை அறிந்திராத கதை, கீதாக்கா.

    ஐயப்பன் அறுபடை வீடு இருப்பது தெரியும். நம் வீட்டில் ஐயப்ப பக்தர்கள் உண்டு. ஒவ்வொரு வருஷமும் போய் வருவார்கள்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அட? மஞ்சமாதா கதை தெரியாதா? நிஜம்மாவா?

      Delete
  5. பதிவு சுவாரஸ்யமான தகவல்களை தந்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  6. வணக்கம் சகோதரி

    பதிவு நன்றாக உள்ளது. பதினெட்டாம் படிகளுக்கான மகத்துவமும், தத்துவமும், படித்து தெரிந்து கொண்டேன். பதினெட்டு படிகளுக்கான தேவதைகளையும், பதினெட்டு இடங்களில் உறைந்திருக்கும் சுவாமி ஐயப்பனைப் பற்றி விளக்கமாக கூறியதும் சிறப்பு. சுவாரஸ்யமான பதிவுகள். . நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியது

    ./ முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போலவே ஐயப்பனுக்கும் ஆறுபடை வீடு இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். அவை ஆரியங்காவு, அச்சன் கோவில், பந்தளம், குளத்துப்புழா, எரிமேலி, சபரிமலை ஆகியவை. /

    நிறைய தகவல்களை சேகரித்து தந்திருக்கிறீர்கள் . மிக்க நன்றி. அடுத்தப்பதிவையம் காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துக்கு நன்றி கமலா.

      Delete
  7. மகிஹி கதை இப்பொழுதுதான் தெரியும். படிப் பாடலும் தத்துவமும் அருமை.

    ReplyDelete