
அடி பேணி:
அத்தகு இறைவனின் திருவடியை விரும்பி
திருவடியை ஏன் விரும்ப வேண்டும்? உடலில் பாதம் தன்னிச்சையாக செயல்படாத பகுதி. கை பேசும்போது தானாக சைகை புரியும்; தலை ஆடும்; ஆனால் பாதங்கள் பெரும்பாலும் தன்னிச்சையாக செயல்படாது. பேரறிவான பரம்பொருளின் திருவடி போல தன் விருப்பு ஏதுமின்றி அதன் விருப்பப்படி நடப்பதையே திருவடி சேர்தல் என்பர். அவரே அடியார். மனதை ஒடுக்கி, மூலாதாரத்தில் வீற்றிருக்கும் பரம்பொருளின் திருவிருப்பத்திற்கு தன்னை தர விரும்புபவனே சாதகன்.
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
பேரறிவோடு இயைந்து அதன் வழிக்காட்டுதலில் நடப்பவரே கற்றிடும் அடியவர். மூலாதாரத்திலுள்ள கரிமுகனின் திருவடியை விரும்பி அதை பெற்று அதில் இணைந்த அடியார்கள் அவரிடமிருந்து இடையறாத வழிக்காட்டுதலைப் பெறுகின்றனர். அவ்வாறு வழிக்காட்டுதல் கிடைக்கப்படும் இடம் ஆஜ்ஞை; புருவ மத்தி. அந்த இடமே புத்தியின் இடம். ஆஜ்ஞை என்றால் கட்டளை என்று பொருள். அங்கிருந்து பிழையில்லாத வழிக்காட்டுதல் அடியாருக்கு கிடைக்கிறது. ஆகவே புத்தியில் உறைபவனாக அவர் சொல்லப்படுகிறார். அங்கு ஐந்து கரத்தோடு கூடிய விண்மீனை போன்று ஒளியோடு இருப்பதால் அவருக்கு ஐந்து கரத்தன் என்று சிவயோகிகள் சொல்கின்றனர். அந்த ஐந்து கரத்தோடு கூடிய விண்மீனில் ஒரு கரம் சற்று நீண்டு வால் நட்சத்திரம் போல் இருப்பதால் தூமகேது என்றும் சொல்வதுண்டு.
கற்பகம் என வினை கடிதேகும்
அந்த நிலையில் வேண்டிய எல்லாம் கிடைக்கும்; இதனையே
எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே
வல்லான் தனையே ஏற்று
என்று வள்ளலார் சொல்வார்.
அந்த இடம் கற்பக மரமாக சொல்லப்படுகிறது; சிந்தாமணி என்றும் சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் அனைத்து வினைப்பலன்களும் ஒழிந்து போகின்றன. அந்த புருவமத்தி இடத்திற்கு காசி என்றும் பெயர். எனவே தான் காசியில் முங்கினால் பாவம் தீரும் என்று கூறப்படுவதாக சிவயோகிகள் கூறுவர். வாரணா எனப்படும் நாடியும், அஸி எனும் நடும் நாடியும் அங்கே கூடுவதால் அது வாரணாஸீ எனப்படுகிறது. அங்கே நிற்கும் நிலையை பெற்றவன் அங்கே நிற்கையில் உடலை விடும்போது மீண்டும் வருவதில்லை.
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன்
மத்தம் என்றால் ஊமத்தம்பூ; மதி என்றால் நிலவு. அரன் சூடும் நிலவோ பிறை நிலவு.
ஆஞ்ஞையில் புருவத்திற்கு சற்று மேலே பிறை நிலவு போல ஒளியும், அதற்கு மேலே கருநீல நிற ஒளியும் சாதகர் காண்பார். அக்கருநீலஒளி நடுவே விண்மீனை ஒத்த வடிவத்தோடு, ஒளியோடு இறைவன் காணப்படுவதால் மத்தமும் மதியமும் வைத்த அரன்மகனாய் அவர் குறியீட்டால் உணர்த்தப்படுவதாக் சிவயோகம் சொல்கிறது.
ஹ என்பதன் பொருள் ஆகாயம்; ர என்றால் அக்னி. ஹர என்றால் ஆகாயமும் வாயுவும் சேர்ந்தது. வெளியின் நடுவே தோன்றும் ஓளியால் அறியப்படுபவரால் ஹரன் மகன் என்னும் குறியீடு இங்கே!
மற்பொரு திரள் புய
மல் யுத்தம் செய்பவருக்கு இருக்கக்கூடிய திரண்ட தோள்.
புருவ மத்தியிற்கும் உள்ளே இருக்கக்கூடிய அந்த பேருணர்வு பொருள்தான், இடம்தான் மொத்த பிரபஞ்சமும் தோன்றி, பிரதிபலிக்கக்கூடிய இடம். இருக்கும் அனைத்தையும் தாங்க கூடிய பரம்பொருள் அங்கே இருக்கிறார். ஆனால் அவரிடம் இதனால் சிறிதளவு மாற்றமும் இல்லை. அதனால் அனைத்தையும் தாங்கும் தோள் என்னும் குறியீடு சொல்லப்படுகிறது.
மதயானை
யானையிற்கு மூன்று வித மதநீர் ஒழுகும் என்று சொல்லப்படுகிறது.
தும்பிக்கையிலிருந்து ஒழுகுவது; கன்னத்தின் இரு பக்கங்களிலும் ஒழுகுவது; ஆண்குறியில் ஒழுகுவது.
புருவமத்தியில் அதேபோல் இடை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்றிலிருந்தும் அங்கு பாய்கிறது. இடையில் பாய்வது சோமபானம் என்றும், பிங்கலையில் பாய்வது சுராபானம் என்றும், சுழுமுனையில் பாய்வது அம்ருதம் என்றும் சொல்லப்படும். இதனால் அளவிலா ஆனந்தத்தில் என்றும் இறைத்தன்மை அங்கு இருப்பதால் அதை மதமாக குறியீட்டில் சொல்கின்றனர். அங்கு நன்மை தீமை கட்டிலிருந்து ஒருவன் விடுபடுவதால் அதை மதம் என்று கூறுகின்றனர்.
புதிய செய்திகள் ....நினைவிலிருத்திக் கொள்ள முயலுகிறேன்.
ReplyDelete