எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 20, 2008

கடைசிக் கட்டி மாம்பழம்!


வல்லி எழுதிய பாட்டி கதைகளைப் படிச்சதில் இருந்து எனக்கும் எங்க பாட்டி நினைவு வந்துடுச்சு. எங்க பாட்டினா எங்க அம்மாவோட அம்மா தான். அப்பாவோட அம்மாவை நாங்க யாருமே பார்த்ததில்லை. அப்பா பிறந்து 12-ம் வயதிலேயே அம்மாவை இழந்துட்டார். அப்பாவின் அதீதக் கோபத்துக்கு அதுவும் ஒரு காரணமோனு நாங்க பேசிப்போம். அது இருக்கட்டும், இங்கே அது வரலை. பாட்டி பத்தி இல்லை சொல்லணும். எங்க அம்மாவோட அம்மாவுக்கு 5 வயசிலே கல்யாணம்னு சொல்லுவாங்க. தாத்தாவுக்கு அப்போ பதினேழு வயசாம். வாயிலே விரலைப் போட்டுக் கொண்டு பையன் கழுத்தில் மாலை போட மறுத்த பெண் குழந்தையை, ஏதோ பட்சணம் கொடுத்து மாலை போட வச்சிருக்காங்க. அப்புறமாய்க் கல்யாணம் நடந்து ஊர்வலம் எல்லாம் அந்தக் கால வழக்கப் படி நடந்திருக்கு. பாட்டியின் கல்யாணத்திலே தான் அந்தப் பக்கங்களில், பாட்டியின் ஊர் பரமக்குடி. தாத்தாவுக்குப் பக்கத்திலே தென்னவராயன் புதுக்கோட்டை. அந்தக் கால ராமநாதபுரத்துக்காரங்களுக்கு இந்தப் புதுக்கோட்டை எதுனு புரியும்.

பாட்டி கல்யாணத்திலே தான் அவங்க தாத்தா ராஜம் ஐயர் அவர்கள் முதன் முதல் காபி கொடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார் என்று அப்போ ஊரெல்லாம் பேச்சாய் இருக்கும்னு சொல்லுவாங்க. கல்யாணம் முடிஞ்சு பிறந்த வீட்டிலே கொஞ்ச நாட்கள் இருந்த பெண்ணைப் புக்ககம் பழகணும்கிறதுக்காக அப்போ அப்போ புக்ககம் அனுப்பும் வழக்கம் உண்டாம். தாத்தா கல்யாணம் முடிஞ்சு சட்டப்படிப்புப் படிக்க சென்னை போய்விட்டார். பாட்டியின் மாமனார் பக்கத்து ஊரில் இருந்து வந்து தன் மருமகளுக்குத் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்துவிட்டுத் தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்ல ஆயத்தம் செய்வாராம். பாட்டி வர மாட்டேன் என அழ, ஆரம்பிக்கப் பின் அழுது களைத்துப் போய் வாயில் விரல் போட்டுக் கொண்டு தூங்கிப் போக, தூங்கும் மருமகளைத் தாத்தாவின் அப்பா தூக்கிக் கொண்டு போவாராம். இப்படியே புக்ககம் பழக்கம் ஆன பாட்டி ஒருவழியாய் அங்கேயே தங்க வந்ததும், தன் மனைவி படிக்காமல் இருக்கக் கூடாது எனத் தாத்தாவே படிக்க ஆள் போட்டு படிப்பு சொல்லிக் கொடுத்திருக்கார்.

சிறு குழந்தையாக வந்த பாட்டி பின்னர் நிர்வாகத்திறமையில் இந்தக் கால நிதி மந்திரிகள் எல்லாம் யோசனை கேட்கும் அளவுக்குப் பிரமாதமான நிர்வாகம். தன் ஐந்து பெண்களையும், (என் அம்மா உள்பட) நாலு பிள்ளைகளையும் வளர்த்ததும் சரி, அவங்களுக்குத் தன்னோட திறமையில் .001% ஆவது இருக்கணும்னு வேண்டியது சொல்லிக் கொடுத்ததிலும் ஆகட்டும், பாட்டிக்கு நிகர் பாட்டியே தான். கடைசிவரையில் தன் மாமியாரைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டு போஷித்ததிலும், திருமணம் ஆகாத தேசபக்தர் ஆன தன்னுடைய ஒரே கொழுந்தனாரை வைத்து சம்ரட்சணை பண்ணியதில் ஆகட்டும், அந்தத் திறமை யாருக்கும் வராது என்றே சொல்லலாம்.

நாங்க அப்போ மொத்தம் பெண் வயிற்றுப் பேத்திகள் ஆறுபேர். எங்களை விட 4 வயதே அதிகம் ஆன கடைசிச் சித்தி. எங்க பெரிய மாமாவின் பெண். ஆக மொத்தம் எட்டுப் பேர் சிறு பெண்களே இருப்போம். இதைத் தவிர, என் அண்ணாக்கள் இருவர், சித்தி பையன்கள் இருவர், என் தம்பி, பெரியம்மாவின் பையன்கள்2 பேர். என்று ஒரு மழலைப் பட்டாளமே இருக்கும் வீட்டில். அனைவருக்கும் காலம்பர பாட்டி கையால் பிசைந்த பழைய சாதமே காலை உணவு. முதல் நாள் மீந்த குழம்பில், ரசத்தின் அடி வண்டலையும் கொட்டிச் சுடவைத்திருக்கும். போதாதுக்கு மாவடு ஜாடி நிறைய இருக்கும். அழகர்கோயில் மாவடு. கிளி மூக்கு மாவடு என்றால் ரொம்பவே பிரசித்தி. இப்போ மாவடுவே கிடைக்கறதில்லை இதிலே கிளி மூக்கிற்கு அதுவும் அழகர் கோயில் வடுவுக்கு எங்கே போறது??

தோசையே கிடைக்கிறதில்ல இப்போ அழகர் கோயிலிலே! போகட்டும். பழையதுக்கு மறுபடியும் வருவோம். ஒரு பெரிய கல்சட்டி நிறையப் பழைய சாதத்தைப் பிசைந்து வைத்துக் கொண்டு, எங்கள் அனைவரையும் வட்டமாகச் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு, கீழே சிறிய தாமரை இலை அல்லது, புரச இலை, அல்லது வாழைச் சருகு போன்றவற்றில் ஊறுகாயை வைத்து விட்டு, கையை நீட்டச் சொல்லி எல்லார் கையிலும் பாட்டி ஒவ்வொரு கவளமாய் வைப்பார். போட்டி வேறே போடுவோம். கட்டை விரலால் அந்த சாதத்தில் குழி செய்து கொள்ளணும், குழம்பு வேண்டும்கிறவங்க. அந்தக் குழிக்குள் குழம்பு ஊற்றுவாங்க. அப்பாடா! எவ்வளவு பெரிய கவளம்?? அந்தக் குழி நிறையக் குழம்பு! போததுக்கு மாவடு வேறே. இத்தனையும் சாப்பிடும்போதே முதல்நாள் எங்களுக்குள் வந்த சண்டைக்கு அங்கே தீர்ப்புச் சொல்லப் படும். அன்றன்று செய்ய வேண்டிய வேலைகள் பிரித்துக் கொடுக்கப் படும். மத்தியான சாப்பாட்டுக்குப் பின்னர் நாங்க செய்யவேண்டிய வேலைகள் பற்றிச் சொல்லப் படும். தவிர, அநேகக் கதைகளும் சொல்லப் படும். பாட்டியின் குடும்பக் கதை, தாத்தாவின் குடும்பக் கதை போன்ற உண்மைச் சம்பவங்கள் தவிர, ராமாயணம், மகாபாரதம் போன்ற நாங்க படிச்ச, கேட்ட விஷயங்களில் உள்ளவையும் பேசுவோம்.

சாப்பிடும்போது எங்களுக்குள் வரும் போட்டியைச் சமாளிக்கப் பாட்டிப் பல யுக்திகளைக் கையாளுவார். சீக்கிரம், சீக்கிரம் அவசரமாய்ச் சாப்பிட்டால் ஜீரணமும் ஆகாது இல்லையா, ஆகவே அதுக்குப் பாட்டி செய்யும் தந்திரம், கடைசிக் கட்டி மாம்பழம் தான். பிசைந்த சாதத்தில் முடியும்போது வழித்து அடியில் உள்ள எல்லாவற்றையும் சேர்த்தால் வெண்ணெய் போல் வரும் அந்தக் கடைசி உருண்டையைப் பாட்டிக் கட்டி மாம்பழம் என்று சொல்லி யார் நிதானமாய்ச் சாப்பிடுவார்களோ அவங்களுக்கே என அறிவிப்பார். ஒவ்வொருத்தரும் அதுக்கும் போட்டி போடுவோம். அந்தக் கடைசிக் கட்டி மாம்பழத்தையும் எப்படியோ பகிர்ந்தும் கொடுத்துவிடுவார். யாருக்கும் ஏமாற்றம் இருக்காது.

சந்தேக நிவர்த்திக்கும் பாட்டி, தாத்தாவை விட்டால் வேறு ஆள் எங்களுக்கு இல்லை. அந்தக் கால விவேக போதினியில் இருந்து, ராஜமையர் எழுதிய முதல் நாவலில் இருந்து, பாரதியின் இந்தியா, சுதேசமித்திரன், மணிக்கொடி, சுதந்திரச் சங்கு (அந்நாட்களில் இந்தப் பத்திரிகைக்கு ஆங்கிலேய அரசு தடை போட்டிருக்கின்றது. அதன் மதுரை விநியோகஸ்தராகத் தாத்தாவின் தம்பி சங்கு நாராயணன் என்ற பெயரில் இருந்து வந்திருக்கின்றார். சிறையும் சென்றிருக்கின்றார்.) என்று மட்டும் இல்லாமல், வை.மு. கோதை நாயகி அம்மாள், ஆர், கமலாம்பாள், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்களின் புத்தகங்கள் வரையில் ஒரு பெரிய பொக்கிஷமே இருந்தது. பாட்டி அத்தனையையும் எங்களோடு போட்டி போட்டுக் கொண்டு படிப்பார். பாரதியின் சந்திரிகையின் கதை என்றால் பாட்டிக்கு ரொம்பவே பிடிக்கும். தாத்தா வீட்டிலேயே பல நாட்கள் வளர்ந்து வந்தபோது அதைப் படிக்க முடியாத அளவுக்குச் சிறு வயதாய் இருந்தது. பின்னர் அப்பா தம்பி பிறந்த பின்னர் மதுரையிலேயே நிரந்தரமாய்க் குடிவந்ததும், கழுதை அக்ரஹாரம் வாசம் தொடங்கியதும் லீவுக்குத் தான் தாத்தா வீடு என்றானது.

என்றாலும் செல்லும் அந்த இரண்டு மாசத்தில் எவ்வளவு படிக்க முடியுமே அத்தனையும் படித்து விடுவேன். ஆனாலும் அந்தக் கட்டி மாம்பழம் என்பது கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெரியவங்க ஆனதும் மறைந்தே போனது மட்டும் நிஜம். இப்போ நினைச்சாலும் வராது. கட்டி மாம்பழம்னு சொன்னாலும் யாருக்கும் புரியாது. அதுதான் உண்மை!

இ.கொ.வுக்கு வலை உலகமே புதிர்களைப் போடுகின்றது, நீங்க என்ன செய்யறீங்கனு கேள்வி. நிலைமை அப்படி இருக்கு. உட்காரணும் ஒரு மணி நேரமாவது. மின்சாரமே இருக்கிறதில்லை. டாகுமெண்டில் சேமித்தேன். ஆனால் உட்கார்ந்து எழுத நேரம் இருந்தால் தானே?? யோசிக்கவேறே யோசிக்கணும். மொக்கையா இப்படி எழுதிட்டுப் போக?? போய்ப் பார்க்கிறேன் மறுபடியும்!

28 comments:

  1. தலைவி

    பாட்டி கதை சூப்பர் ;)

    ReplyDelete
  2. எங்க வீட்டிலே அது அடிவண்டி ஆனைக்குட்டி!

    ReplyDelete
  3. ammammas are always so sweet.how r u maami? Iam back to reading your blogs now. sep12 varai padichutten. will read yellamae. vittu ponadhu niraya irukkae. will send u a mail soon.

    ReplyDelete
  4. //எனக்கும் எங்க பாட்டி நினைவு வந்துடுச்சு.//

    ஹிஹி, இது உங்க பேத்தி எழுதிய வரிகளோ?னு எனக்கு தோணிச்சு. :p

    இப்படியா ஜவ்வ்வா ஒரே பதிவுல எழுதறது? பகுதி பகுதியா எழுதனும்.

    ராமாயணம் வேற முடிஞ்சு போச்சு. இனிமே மொக்கை தானே, அதான் யோசனை சொன்னேன். :))

    ReplyDelete
  5. கட்டி மாம்பழம்னா இனிமேல் புரிஞ்சிடும் :) சாப்பிடாமலேயே அதன் ருசி வெளிப்படை. பகிர்தலுக்கு நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  6. இன்றும் என் பெண்ணுக்கு கட்டிமாம்பழம் அப்படின்னா தெரியுமே! :-). எல்லாம் பாட்டியின் உபயம். :)

    ReplyDelete
  7. பாட்டி கதை ரொம்ப நல்லா இருக்கு! தாத்தா - பாட்டியோ, அம்மா அப்பாவோ அருகில் இல்லாமல் இருக்கும் போது தான் அவர்களது அருமை புரியும் என்பர்கள்.

    எனக்கு அப்பா வழி பாட்டியை தான் தெரியும் பல கதை சொல்லுவார், சௌராஷ்ட்ர மொழிப் பாடல்களை பாடுவார், நாங்களும் சினிமா பாடலை சௌராஷ்ட்ர மொழியாக்கம் செய்து பாடுவோம்.(அகாஸுக் ஸியேஸி பொய்ஞ்க் ஸியேஸி, மென்க்யானுக் அங்குன் ஸீரனினா ... - வானத்த பார்த்தேன் பூமிய பார்த்தேன் மனுஷன இன்னும் பார்க்கலையே ...) :-).

    நல்ல பழைய சிந்தனைகளை கிளரிய கீதாம்மாவிற்க்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  8. அட கோபி, நீங்க நல்லா இல்லைனு சொன்னாத் தான் ஆச்சரியமா இருக்கும் எனக்கு!! :)))) நன்னிங்கோ!!!

    @திவா, அதான் ஆனைக்குட்டிங்களை எல்லாருக்கும் லஞ்சமாக் கொடுக்கிறீங்கனு புரிஞ்சது!

    ReplyDelete
  9. ஆஹா, எஸ்கேஎம்??? வாங்க, வாங்க, உங்க பின்னூட்டத்தை மெயிலில் பார்த்துட்டு உங்க மெயிலை, மெயிலிலும் பார்த்தேன், என்ன ஒரு சந்தோஷம் போங்க, நிஜம்மா நீங்க தானா?? மறுபடியுமா??? ரொம்ப சந்தோஷமா இருக்கு, வாங்க, வாங்க, வழக்கம்போல் நாம ரெண்டு பேரும் அம்பியோட பதிவிலேயே பேசிப்போம். மதுரைச் சுங்கடிப் புடவை பத்தியோ, இல்லை, அம்பிக்குப் பிடிக்காத கத்திரிக்காய் பத்தியோ பேச அதுதான் வசதி!! அம்பியும் இப்போ ஈ தான் ஓட்டிட்டு இருக்கார், எதுவும் எழுதறதில்லை. pacifying his son. ஆக மொத்தம் நம்ம ராஜ்யம் தான். வருக, வருக என வரவேற்கின்றேன், அடுத்த உ.பி.ச. வேட்பாளருக்கு! :)))))))))

    ReplyDelete
  10. @அம்பி, எஸ்கேஎம்முக்குக் கொடுத்திருக்கிற பின்னூட்டத்தைப் படிச்சுக்குங்க,

    நான் யார், நான் யார், நான் யார்??

    எம்.ஜி.ஆர். ஸ்டைலில் டி.எம்.எஸ். குரலில் பாடிக்கவும். :P

    ReplyDelete
  11. கவிநயா, ருசியைப் புரிந்து கொண்டதற்கு நன்றிம்மா.

    @மதுரை, ஒருவேளை மதுரைக்காரங்க ட்ரேட்மார்க்கோ கட்டி மாம்பழம்???

    ReplyDelete
  12. வாங்க சிவமுருகன், ஆன்மீகம் அல்லாத பதிவுகளும் நீங்க படிப்பீங்கங்கறது ஆச்சரியம் தான்! :)))))
    ஆமாம், பாட்டி நினைவுகளே ஒரு பொக்கிஷம் தான். இல்லையா??

    @சந்தன முல்லை, எங்க வீட்டிலே தினம் பூக்கிறதே??? பறிக்க முடியலை, அவ்வளவு பூக்குது, உங்க பதிவுகளைப் புதுப்பிச்சு எழுத ஆரம்பிக்கலையா இன்னும்???

    ReplyDelete
  13. கீதா, கொசுவர்த்தி என்று குறி சொல் தந்துவிட்டால், ஓடி வந்துவிடுகிறேன். அருமையாய் இருக்கு.

    ReplyDelete
  14. வாங்க உஷா, அதான் அடிக்கடி இப்போ அம்பி ப்ளாகிலே பார்க்க முடியுதா?? இனிமேல் கொசுவத்திதான் பாருங்க. ஜமாய்க்கலாம்!

    ReplyDelete
  15. வாங்க உஷா, அதான் அடிக்கடி இப்போ அம்பி ப்ளாகிலே பார்க்க முடியுதா?? இனிமேல் கொசுவத்திதான் பாருங்க. ஜமாய்க்கலாம்!

    ReplyDelete
  16. வாங்க உஷா, அதான் அடிக்கடி இப்போ அம்பி ப்ளாகிலே பார்க்க முடியுதா?? இனிமேல் கொசுவத்திதான் பாருங்க. ஜமாய்க்கலாம்!

    ReplyDelete
  17. கீதாம்மா

    எங்க வீட்டில் அடிக்குழம்பு ஆனைக்கட்டின்னு குடுப்பாங்க. அதே அடிதடிதான்!! :))

    உங்களுக்காக விடைகளை வெளியிடாம வெச்சு இருக்கேன். திங்கள் காலை உங்க டயத்துக்கு ரிலீஸ் ஆகிடும்.

    ReplyDelete
  18. பாட்டி கையால் இந்த மாதிரி சாப்பிடாதவர்கள் நிச்சயம் பெரிய ஒன்றை இழந்தவர்கள். இந்தக் காலத்தில் இதை எல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. கட்டி மாம்பழம் என்பதை எங்கள் பாட்டி 'அடிக்கரும்பு..ஆனைக்குட்டி' என்பார்! எங்கள் பாட்டியின் ஸ்பெஷல் மொருமொரு தோசை!

    கதைகள் சொல்லி நற்பண்புகளை வளர்ப்பதும், புராணக் கதைகளை இளவயதிலேயே குழந்தைகள் மனதில் ஏற்றுவதற்கும் ஒவ்வொரு வீட்டிலும் தாத்தா பாட்டிகள் இருக்க வேண்டும். அதற்குக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை இருக்க வேண்டும்! இனிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், ரொம்பச் சீக்கிரமாப் பார்த்துட்டேன், உங்க கருத்தை! :) பாட்டிகள் எல்லாம் இப்போக் கதை எங்கே சொல்றாங்க? சொன்னாலும் கேட்கும் பேரனோ, பேத்தியோ கிடையாது. :(

      Delete
    2. பாட்டிகளெல்லாம் சீரியலில் மூழ்கி இருக்கிறார்கள்!

      Delete
    3. எங்களுக்கு சீரியலை விடக் குட்டிக் குஞ்சுலு தான் முக்கியம். இப்போப் பையர் வீட்டில் இருப்பதால் காலையிலே அவங்க நேரத்துக்குக் குழந்தையைக் காட்டுகிறார். குழந்தைக்கு நாங்க படுத்துக்கப் போறோம்னு சொன்னாலே முகம் வாடி விடுகிறது. விளையாடுகிறாள் நன்றாக. நேற்று எல்லாக் கலர் பென்சில்களையும் வைத்துக்கொண்டு எல்லாக் கலர்களையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தாள். சரியாய்ச் சொன்னதுக்கு ஒரு ஃப்ளையிங் கிஸ்!

      Delete
  19. உடனே வந்து படித்துவிட்டேன், கீதா! எங்கள் பாட்டி 'கட்டி குட்டி தக்கம், ஆனைக்குட்டி தக்கம்' என்பாள் இதை.
    எப்படியோ எல்லோரும் அவரவர்கள் பாட்டிமார்களை நினைவு கூர்ந்துவிட்டோம். @ ஸ்ரீராம், நான் என் பேரன்களுக்கு கையில் கலந்து போடுகிறேன். என் பிள்ளைக்கும் கையில் கலந்து போடுகிறேன் என்றால் ரொம்பவும் ஆசையாக சாப்பிடுவான். சிலநாட்களில் மாலை டிபன் ஹெவியாக இருந்துவிட்டால் இருக்கும் சாதத்தை தயிர் சாதமாகக் கலந்து எல்லோருக்கும் (கணவர் உட்பட) கையில் போட்டுவிடுவேன். தட்டுகள் அலம்பும் வேலை மிச்சம்! அப்போதும் சாதத்தில் குழி பண்ணிக்கொண்டு குழம்பு விட்டுக் கொள்வதும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம், பரவாயில்லை ரஞ்சனி. இப்படிச் செய்தாலும் சாப்பிட ஆள் வரணுமே! எங்க வீட்டில் யாரும் வரமாட்டாங்க. :)

      Delete
    2. இப்போ எல்லாம் இது பொய்யாய், கனவாய், பழங்கதையாகவே ஆகிப்போச்சு!!!

      Delete
  20. இனிய நினைவுகள். இப்படி இப்போதைய பாட்டிகள் யாருமே கொடுப்பதில்லை. குழந்தைகள் இப்படிச் சாப்பிடுவதை விரும்புவதும் இல்லை..... :(

    இனிய நினைவுகள்....

    ReplyDelete
    Replies
    1. அவங்க அவங்க தட்டில் போட்டுக்கொண்டு தொலைக்காட்சி முன் உட்கார்ந்த வண்ணம் ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். கையால் சாப்பிடுவதும், ஊட்டுவதும் கேவலம் என்றாகி விட்டது. கையில் சாப்பிட்டால் தான் உடலில் ஒட்டும் என்பார் எங்க பெரியப்பா.

      Delete