எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 15, 2008

ராமாயணப் பதிவுகளும், அதன் பின்னூட்டங்களும்!

ராமாயணப் பதிவுகளுக்குத் தனி மெயிலிலும், பதிவுகளிலும் பின்னூட்டங்கள் தொடருகின்றன. ராமாயணத்தில் தேசீய ஒருமைப் பாடு என்பது பற்றிய பதிவில் அம்பி "காவிரிநதி" பற்றிய என்னோட கருத்தை வன்மையாகக் கிண்டல் செய்திருக்கின்றார். ஆனால் நான் அந்த மாதிரியான ஒரு நிகழ்வு இருந்ததாய்ப் படிச்சுட்டே எழுதினேன். எதிலே என்று தேடியும் கிடைக்கவில்லை, என்பது வருந்தக் கூடியதாய் இருக்கு. அதே கருத்துக்கு முகவை மைந்தன் தானும் படிச்சிருப்பதாயும் குமுதம் தீராநதியிலோ என்று சந்தேகப் படுவதாயும் எழுதி உள்ளார். அது ஒரு பக்கம் இருக்கட்டும். ரமேஷ் சதாசிவம் அக்னி பரிட்சையில் தன் சந்தேகம் பற்றிக் கேட்டிருக்கின்றார். அதைத் தனியாகத் தான் எழுதவேண்டும். கூடியவரையில் விளக்கம் கொடுக்க முயல்கின்றேன். ஏனெனில் அது கொஞ்சம் கஷ்டமான விஷயம். விஞ்ஞான பூர்வமாய், அறிவியல் பூர்வமாய் சிந்தித்தால் அது நடக்காத ஒன்று. உணர்வு பூர்வமாய் சிந்திக்க வேண்டும்.

குமரன் சூர்ப்பநகையின் பையன் கொல்லப் பட்டது பற்றிக் கேட்டிருக்கின்றார். அது பற்றிய ஒரு சிறிய குறிப்பாய்த் தான் நான் படித்த மொழிபெயர்ப்பில் காணக் கிடைத்தது. மூலம் சம்ஸ்கிருதத்தில் கொஞ்ச நாட்கள் இணையத்தில் கிடைக்கவில்லை. நான் எழுதியதோ வால்மீகி அடிப்படை. ஆகையால் மற்ற ராமாயணங்களில் இது பற்றித் தேடவில்லை, என்றாலும் அருணகிரிநாதரின் திருப்புகழில் இது பற்றிய குறிப்பு வருகின்றது. தேடிப் பார்த்துப் போடுகின்றேன். அப்புறம் ரத்னேஷ் eve teasing பற்றிக் குறிப்பிடுகின்றார், பிறன் மனை நோக்காத பேராண்மை என்பது பற்றிய என்னுடைய கட்டுரைக்கு. அவர் சொல்லும் முதல் eve teasing கூனியை ராமர் கேலி செய்தார் என்பதே. அது வால்மீகியில் இல்லை என்பதை என்னால் நூற்றுக்கு நூறு உறுதியாய்ச் சொல்ல முடியும். கம்பராமாயணத்தில் மட்டுமே அந்த நிகழ்ச்சி வருகின்றது. கம்பர் குறிப்பிடுகின்றார் இது பற்றி ஏற்கெனவே ராமனுக்கும், கூனிக்கும் முன் பகை இருந்து வந்ததாயும், அதனால் கூனி பழி வாங்கினாள் என்றும். அம்மாதிரியான ஒரு நிகழ்ச்சி வால்மீகியில் இல்லை.

அடுத்து அவர் சொல்லுவது சூர்ப்பநகையை ராமரும், லட்சுமணனும் கேலி செய்வது. அது வால்மீகியே குறிப்பிடுகின்றார். ஒரு சாதாரண மனிதனாகவே கடைசி வரையில் தன்னைக் காட்டிக் கொண்ட ராமன் ஒரு வயது சென்ற பெண், அதிலும் திருமணம் ஆகி ஒரு பையனையும் பெற்று விதவை ஆனவள், தன்னைக் கல்யாணம் செய்து கொள் என்று கேட்டதும், அவளைச் சீண்டிப் பார்த்தது உண்மையே. அதை வால்மீகி மறைக்கவே இல்லை. ஆனால் இதை eve teasing என்ற கோணத்தில் எடுத்துக்க முடியுமா என்று எனக்குப் புரியவில்லை. ஏனெனில் நான் அறிந்த வரை அதன் அர்த்தம் வேறே என்று தோன்றுகின்றது. மற்றவற்றுக்கும் கூடியவரையில் பதில் எழுதுகின்றேன். இவை தற்சமயம் மனதில் தோன்றியது உடனே எழுதி விட்டேன். இணையம் சரியாக வருவதில்லை, மின்சார வெட்டினால். மின்சாரம் இருக்கும்போது எழுதி வச்சுக்கவும் முடியலை, நேரம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுகின்றேன். அதுவரையில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டு விடுங்கள். தெரிந்த வரையில், முடிந்தவற்றுக்கு பதில் கொடுக்க முயலுகின்றேன். நன்றி. படித்தவர்கள் அனைவருக்கும், இனி படிப்பவர்களுக்கும்.

1 comment:

  1. கீதா நான் அக்னி பரீக்ஷை பற்றி சந்தேகம் கேட்கவில்லை. ராமரை வால்மீகி ஒரு சராசரி மனிதராகவே பதிவு செய்கிறார். ஆனால் இரண்டு முறை அவரை அவதாரம் என்று குறிப்பிடுகிறார். நான் அதைப் பற்றித் தான் கேட்டேன். ராமரிடம் கற்றுக் கொள்ள எவ்வள்வோ நல்ல விஷயங்கள் இருந்தும் அவரை குறை கூறும் மனப்பான்மையொடு அணுக எப்போதும் நபர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுக்குத் தான் நஷ்டம். அவர்களுக்கு தெளிவாகவும் திடமாகவும் பதில் சொல்லுங்கள். நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete