எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 30, 2008

கிழக்கு வெளுத்ததம்மா, கீழ்வானம் சிவந்ததம்மா!

ஒரு வழியாய் ஒருவாரமாய்ப் பெய்து வந்த மழை இன்னிக்கு இல்லை. காலையில் சூரியன் உதயம் ஆனதைப் பார்த்ததும் ரொம்பவே சந்தோஷமா இருந்தது. விடாமல் பெய்த மழையினால் வெள்ளமான தெருக்களைத் தவிர, எங்க அம்பத்தூர் நகராட்சியில் அம்பத்தூர் ஏரியையும், இன்னொரு ஏரியையும் உடைத்து வேறே விட்டுட்டாங்க. எந்தவிதப் பாரபட்சமும் காட்டாத நீர் வெள்ளம் அனைத்து வீடுகளிலும் புகுந்தது. வியாழன் அன்று இரவு படுக்கும்போது ஒண்ணும் இல்லை. காலை மூன்று மணி வரையில் கட்டுக்குள்ளேயே இருந்த வெள்ளம், நாலு மணிக்கு எழுந்து செல்லும்போது பார்த்தால் படுக்கை அறையில் கணுக்கால் வரை வந்து கணினி வைத்திருக்கும் டேபிளையும் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது.

ஏற்கெனவே போன மழையில் சமையல் அறையில் மேலே இருந்து தாரையாகக் கொட்டியது, அப்படித் தான் இந்த அறையில் வந்திருக்குமோனு நினைச்சால் அப்படி இல்லை. கூரை சுத்தமாய் இருந்தது. மேலே இருந்து வரலைன்னா பின்னே எப்படினு யோசிச்சுட்டே சமையல் அறைக்குப் போனால் அங்கே வெள்ளம். நடைபாதையில் வெள்ளம். கொல்லைப் பக்கம் போய்க் கதவைத் திறந்தால் வராந்தாவெல்லாம் வெள்ளம் அடித்துக் கொண்டு உள்ளே வரும்போல இருந்தது. அங்கே இருந்தும் வந்திருக்கு. அதே போல் வாசலையும் திறந்து பார்த்தால் வாசல் வராந்தா, வெளியே உள்ள நடைபாதை தாண்டி தெருவெல்லாம் வெள்ளம் எதிர்வீடு வரை, தெருவில் அவர் மட்டும் போய் இறங்கிப் பார்த்தால் முழங்கால் தண்ணீர். பால் வரலை, மத்தவங்களுக்கெல்லாம், பாக்கெட் பால் வாங்கறதில்லை என்பதால் பால்காரர் எங்களுக்கு எடுத்து வந்துட்டார். மின்சாரம் இல்லாமல் தண்ணீர் எடுக்க மோட்டார் போடமுடியவில்லை. எங்கு பார்த்தாலும் தண்ணீர். ஆனால் குளிக்கவோ, குடிக்கவோ தண்ணீர் இல்லை. நல்லவேளையாகக் கிணற்றை நாங்கள் மூடவில்லை என்பதால் தண்ணீரும் கிடைச்சது. காய்களும் இருந்தன.

எந்த வண்டியும் இன்று வரையில் உள்ளே வரமுடியலை. சைகிள் கூட. அவ்வளவு தண்ணீர். கொட்டும் மழையில் எரிவாயுக் கசிவை ரிப்பேர் செய்யவந்தவர் என்ன உங்க ஏரியா இவ்வளவு மோசமா இருக்குனு, நாங்க தான் முனிசபல் அதாரிடி மாதிரி எங்களைக் கேட்டுட்டுப் போனார். நேரம்! பேப்பர்காரர் சைகிளில் வைத்துப் பேப்பரைத் தூக்க முடியாமல் தூக்கிட்டு வந்து இன்னிக்குக் கொடுத்துட்டுப் போனார். தலை எழுத்து! இந்த அவலங்களுக்கு என்ன காரணம்? யார் காரணம்?? இன்னிக்குச் செய்தித் தாளையும், இன்னும் தொலைக்காட்சியையும் பார்த்தப்போ எங்களுக்கு வந்த தண்ணீர் ஒண்ணுமே இல்லைனு தெரிஞ்சது. எங்க தெருவுக்குப் பக்கத்திலேயே ஒரு தெருவில் வீட்டுக்குள் கட்டில் போட்டு உட்கார்ந்து அந்தக் கட்டில் விளிம்பு வரையிலும் தண்ணீர் தொட்டுக் கொண்டு ஓடுது. குடிசைவாசிகள் நிலைமை சொல்லவும், எழுதவும் வேண்டாம். இன்னும் மோசம். அதிலும் பாதாளச் சாக்கடை இல்லாமல் அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் குடி இருப்போர் அவங்க கழிவறைத் தண்ணீரை வெளியே விடறதாலே அந்தத் தண்ணீரும் சேர்ந்து ஒரே நாற்றமும், கொசுத் தொல்லையுமாய்த் தாங்க முடியாத துன்பம். இந்த அடிப்படை வசதிகளைச் செய்யாமல் ஒரு குடி இருப்பே வரமுடியாது மற்ற மாநிலங்களில் எல்லாம். ஆனால் நாம?

சரவணா ஸ்டோர்ஸ் எரியற வரைக்கும் வேடிக்கை தான் பார்த்துட்டு இருந்தோம்? இப்போ அதுவே மறந்துடலையா மீண்டும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் எல்லாம் நல்லாத் தானே வந்துட்டு இருக்கு? அடுத்த தீபாவளிக்கு அங்கே போய்த் துணி எடுக்கிறவங்க என்ன செய்வாங்க? இந்த மாதிரி யாரோ செத்தால் எல்லாம் கடையை மூடமுடியுமா என்ன? அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. அப்படித் தானே இந்த மழைத் தண்ணீரும் ஒவ்வொரு வருஷமும் இது பத்திப் பேசுவோம். ஆக்கிரமிப்பு, ஏரிக்குத் தண்ணீர் போகும் கால்வாயை மூடிட்டாங்கனு யாரானும் ஏதானும் சொல்லிட்டுத் தான் இருப்பாங்க, அதுக்காக நாம் அங்கே குடி வராமல் இருக்க முடியுமா என்ன? பார்க்கிறவங்களைப் பார்த்துக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்தால் தீர்ந்தது வேலை, முடிந்தது பிரச்னை. மழை வரச்சே பார்த்துக்கலாம்.


வீட்டுவேலை செய்யும் அம்மா இரண்டு நாட்களாய் வரலை. அவங்களுக்கும் மழைதானே? தண்ணீர் அங்கேயும் தானே போகுது? இப்போப் பேச ஆரம்பிச்சிருக்காங்க பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும். ஆக்கிரமிப்புகள் தான் காரணம் இத்தனை தண்ணீர்த் தேக்கத்துக்குனு. மழை நிற்கலைனால் இன்னும் மோசமாய் ஆகுமெனவும், நின்றாலும் ஒரு வாரம் ஆகும் நீர் வடியனும் சொல்றாங்க. கூவம் நதியைச் சாக்கடை ஆக்கின பெருமை மட்டுமில்லாமல் சரியானபடித் தூர்வாராததால் தண்ணீரை வாங்கிக் கொள்ளும் சக்தி இல்லை. அடையாறும் அப்படியே. தண்ணீர் திரும்பித் தானே வரும்? முகத்துவாரத்திலும் அடைப்பு. இதெல்லாம் மழைக்கு முன்னே செய்யவேண்டிய வேலைகள். வேலை இல்லைனு தவிக்கிறவங்களைக் கூப்பிட்டு இந்த வேலையை எல்லாம் செய்யச் சொல்லிக் கூலி கொடுத்து வயிறாறச் சாப்பிடச் சொல்லலாம்.

தினசரி ஒரு ஏரியானு வச்சுட்டு இதைச் செய்ய ஆரம்பித்தாலே வருஷம் பூராவும் செய்யவேண்டி இருக்கும். காவிரி ஆற்றில் எவ்வளவு மேடிட்டிருக்கிறது? அதுவும் அரசலாற்றின் அழகே போய், ஒரே ஆகாயத் தாமரையும், மற்ற விஷக் காளான்களும் முளைத்துத் தண்ணீரை உள்வாங்கும் சக்தியை இழந்து நிற்கின்றது. கிராமத்தில் கோடை காலத்தில் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு அந்த, அந்தப் பஞ்சாயத்தின் மூலம் இதை எல்லாம் செய்ய வைத்துக் கூலி கொடுக்கலாமே? வெறும் இலவசத்தால் வயிற்றை நிரப்பினால் போதுமா? இலவசம் கொடுக்க ஆரம்பித்ததும் மக்களுக்கு உழைக்கணும், உழைத்துச் சாப்பிடணும்னே தோணாமல் போயிடுமே? இதுக்கு என்ன வழி? கோடை காலம் வரை இது பற்றிப் பேசுவோம். அடுத்த மழைக்குள்ளாக இதை மறந்துட்டு, அடுத்த மழைக்கு மறுபடி ஆரம்பிப்போம்.

Saturday, November 29, 2008

சலாம் பாம்பே! வீரர்களுக்கு அஞ்சலி!

ஒரு வழியாய் மும்பைத் தாக்குதல் முடிவுக்கு வந்தது. இதில் தாஜ் ஹோட்டலின் ஜிஎம்மின் மனைவி, குழந்தைகளும் கொல்லப் பட்டிருக்கின்றனர். என்றாலும் அவர் தம்மால் இயன்ற அளவுக்கு சீரிய பணியை விடாமல் ஆற்றி, அங்கிருந்து தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு மட்டுமின்றி, மற்ற விருந்தினர்கள் தப்பவும் பெருமளவு உதவி செய்திருக்கின்றார். முதலில் அவருக்கு நம் தாழ்மையான வணக்கங்களைத் தெரிவிப்பதோடு, இனிமேல் தான் தெரியப் போகும் மாபெரும் துயரில் இருந்தும், இழப்பில் இருந்தும் அவர் மீண்டு வரவும் பிரார்த்தனைகள் செய்வோம். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்குத் துணையாக வந்த கமாண்டோக்கள் ஆறு பேர் தாஜ் ஹோட்டலின் உணவு பரிமாறும் அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுமார் 150 அப்பாவி மக்களைப் பக்கத்தில் உள்ள மீட்டிங் நடக்கும் அறை ஜன்னல் வழியாகத் தப்பிக்க வைத்திருக்கின்றார்கள். அவர்களின் உயர்ந்த, தன்னலமற்ற பணிக்கு நம் பாராட்டுகளும், நன்றியும் உரித்தாகும். தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்கள் ஆன ஏடிஎஸ்ஸின் தலைவர், தேசீய பாதுகாப்புப் படை வீரர்கள் அனைவருக்கும் நம் வீர வணக்கங்களும், அஞ்சலிகளும். அனைவரின் குடும்பத்தினருக்கும் நம் உளமார்ந்த இரங்கல்களும். நம் இரங்கல்களும், அனுதாபங்களும் ஒருநாளும் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றப் போவதில்லை. நம் கையாலாகாத் தனமும் நமக்குத் தெரிந்ததே. எந்த ஒரு அரசியல்வாதி செய்யும் உதவியும் வேண்டாம் என்று உறுதியோடு ஏடிஎஸ்ஸின் தலைவர் கர்காரேயின் மனைவி சொல்லி இருக்கின்றார். அவரின் மன உறுதிக்கு ஒரு வணக்கம்.


மாபெரும் துயரில் இருந்து அனைவரும் மீண்டு வரக் காலம் தான் துணை செய்யவேண்டும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொலைக்காட்சியில் பார்த்த நமக்கே உடலும், உள்ளமும் பதறுகின்றது. அவங்களுக்கு எப்படி இருக்கும்???தாஜ் ஹோட்டல், டிரைடெண்ட் ஹோட்டல் மற்றும் விடி ரெயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் இழந்த அனைத்து அப்பாவிப் பொதுமக்களுக்கும் நம் வணக்கங்களும், அஞ்சலிகளும் உரித்தாகின்றன. அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த துக்கத்தில் இருந்து மீண்டு வரப் போதுமான மனோதிடத்தை இறைவன் அருளுவானாக! காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நூற்றுக் கணக்கான பொதுமக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும், காவல் படையினருக்கும் அவர்கள் விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்ப இறைவனைப் பிரார்த்திப்போம்.

முக்கியமாய் நம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர், உள்துறை மந்திரிகளுக்கும் இனியாவது சுறுசுறுப்பாய் இதை ஒடுக்கக் கூடிய அளவுக்கு மனோதிடத்தையும், துணிச்சலையும் இறைவன் தரவேண்டுமென்று பிரார்த்திப்போம். உளவுப்படையினருக்கு வேண்டிய சுதந்திரத்தைக் கொடுத்து அவர்கள் வேலையில் குறுக்கிடாத அளவுக்கு மனோவலிமை உள்ள அரசு அமையவும் பிரார்த்திப்போம். தேவை ஒரு பலம் வாய்ந்த தலைவர்! ஈசன் அவரை அடையாளம் காட்டவும் பிரார்த்திப்போம்.

எல்லாத்துக்கும் மேலே முக்கியமான ஒண்ணு, மும்பை வாழ் மக்களின் ஒத்துழைப்பு. ஒவ்வொரு முறையும் தீரத்துடன் ஒத்துழைக்கும் மக்கள். வாழ்க, வளர்க! நம்பிக்கை துளிர்க்கிறது.

Friday, November 28, 2008

பாருக்குள்ளே நல்ல நாடு, பாரத நாடு!

மனம் வேதனையில் இருக்கும்போது என்ன எழுதறதுனு புரியலை. சக மனிதர்கள் உயிருக்குப் பயந்து ஒளிந்துகொண்டு, பிடித்து வைக்கப் பட்டுக் கஷ்டப் பட்டுட்டு இருக்காங்க மூன்று நாட்களாய். அவங்களை நம்ம ராணுவம் கடும் முயற்சியில் காப்பாற்றிக் கூட்டி வரும்போது இந்தப் பத்திரிகைக்காரர்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் அவங்களைத் தொந்திரவு செய்து பேட்டி எடுக்கையில் எரிச்சலே மீதூறுகின்றது. இரண்டு நாளுக்குக் கஷ்டப் பட்டு வெளியிலே வந்தவங்க, பத்திரமான இடத்துக்குப் போகத் தான் விரும்புவாங்க. அதிலே ஒரு பெண்மணியை வீல் சேரிலே வைத்துக் கொண்டு வரும்படியான நிலை. ஒரு சின்னக் குழந்தையை 5,6 மாசம் இருக்கும், அதன் அப்பா எடுத்துட்டு ஓடி வரார். அவரை வழிமறிச்சுப் பேட்டி கேட்கிறாங்க. மைக்கை நீட்டறாங்க. அந்த மைக்காலேயே அடிக்கலாம் போல் வந்தது.

பத்தாததுக்கு பிரதமர், சோனியா எல்லாம் அங்கே போய் உட்கார்ந்திருக்காங்க. பாதுகாப்பு அவங்களுக்குக் கொடுக்கிறதிலே கவனம் போயிடுமோனு ஷோபா டே கவலையில் பொரிந்து கொட்டுகின்றார். விஐபிக்களுக்குத் தகுந்த பாதுகாப்புக் கொடுக்கலைனால் அதுக்கு வேறே பதில் சொல்லணுமே? அவங்க இருக்கிற இடத்திலே இருக்கட்டும்னு அவங்க எண்ணம். உளவுத் துறையின் கவனக்குறைவு, எத்தனை பேரின் உயிரைக் காவு வாங்கி இருக்குனு நினைச்சால் நாட்டின் எதிர்காலத்தை நினைச்சுக் கவலை வருகின்றது. இத்தனைக்கும் இந்த மாதிரி இல்லைனாலும் ஒரு பெரிய தாக்குதல் நிச்சயமாய் இருக்குனு சொல்லிட்டேத் தான் இருந்தாங்க. ஒரு விதத்தில் இந்தத் தொலைக்காட்சி ஊடகங்களின் போக்கே காரணம் இத்தனைக்கும். அவங்க தான் சின்ன விஷயத்தை ஊதி, ஊதிப் பெரிசு படுத்திக் காசு பார்க்கிறாங்க. அதுக்காக எந்த எல்லைக்கும் போகலாம்னும் முடிவு எடுத்துப் போகிறார்கள்.

ரொம்பவே பெருமை அடிச்சுக்கிட்டோம். அணுகுண்டு வெடிச்சாச்சு, இந்தியாவிலேயே அதிகத் தொழில் நுட்ப நிபுணர்கள், மென்பொருள் நிபுணத்துவம் மிகுந்த நாடு, வெளிநாட்டு முதலீடுகள் செய்ய விரும்பும் நாடு என்று. ஆனால் அதற்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தோமா?? சாதாரணமாய் வெளியே செல்லக் கூட அச்சமாய் இருக்கும்படியான நிலையில் நாடு இன்று வந்ததுக்கு யார் காரணம்?? ரத்தன் டாடா கேட்ட கேள்விகள் எல்லாம் சரியானதே? நம்ம சுயப் பெருமையில் சாதாரணப் படகில் வந்தவர்களைக் கண்டுகொள்ளவில்லை, அதுவும் இத்தனை ஆயுதங்களோடு. இந்தக் கஷ்டத்துக்கு முன்னாலே, நேத்திக்கு ராத்திரி வீட்டுக்குள்ளே தண்ணீர் நுழைஞ்சதும், அதைக் காலை 3-30 மணியில் இருந்து எடுத்துக் கொட்டியதும் கூடப் பெரியதாய்த் தெரியலை.

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்றானே ஒருத்தன், அவன் சொன்னது சரியா?

இந்தப் போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம், அவங்க குடும்பத்துக்கு நம் அநுதாபங்கள். என்னதான் நாட்டுக்காக உயிர் நீத்திருந்தாலும் குடும்பத்திற்குத் தனிப்பட்ட முறையில் எத்தனை, எத்தனை மன வருத்தம்?? யார் ஆறுதல் சொல்றது அந்தக் குடும்பங்களுக்கு எல்லாம்? இறைவன் தான் இந்த நாட்டைக் காப்பாத்தணும்.சற்றுமுன் வந்த செய்திப்படி செய்தி சேகரிப்பவர் ஒருவருக்குக் குண்டடி பட்டுள்ளது. நிலைமையின் தீவிரம் சரிவரத் தெரியவில்லை. :((((((((

Wednesday, November 26, 2008

கல்யாண சமையல் சாதம்! அந்தக் காய்கறிகளும் பிரமாதம்!

போன மாதம் மழை வந்தப்போ பிரச்னை வந்த உருவே வேறே. மே மாதம் செய்த ரிப்பேர் வேலைகளில் ஏதோ தவறு இருந்ததால் வீட்டுக்குள்ளே ஒரே தண்ணீர் மயம். குடை பிடிச்சுட்டு இருந்தோம். அங்கங்கே பாத்திரங்கள் வேறே. இந்த அழகிலே எனக்குக் கைக்கட்டு வேறே. பதினைந்து நாள் ஆகி இருந்தது. வீட்டில் உறவினர் வருகை வேறே. வேறே யாரும் இல்லை. ம.பா.வுக்கு அக்காவும், அவங்க மருமகள், குழந்தையுடன் விஜயம். குழந்தைக்குத் தண்ணீர் கொட்டுவதைப் பார்த்து ரொம்ப சந்தோஷம். நாமும் குழந்தையாய் இருந்தால் எப்படி இருக்கும்னு தோணித்து. நாத்தனார் ரொம்பவே பெருந்தன்மையோடு தான் சமைக்கிறேனு சொல்லிட்டார் தான். ஆனால் சமையல் அறைதான் இருக்கிறதிலேயே மோசமாய் இருந்தது. எல்லா சாமானும் வெளியே வந்தாச்சு. சமைக்க மேடையிலே நின்னால் மேலே தண்ணி கொட்டும். காலுக்குக் கீழே பெருகி வரும் வெள்ளத்தில் சமைப்பது என்னும் வித்தை கை வரவில்லை. கடைசியில் அஞ்சாநெஞ்சள் ஆன நாம தான் போய் இடக்கு ராணியாக(சீச்சீ, இந்த இ.கொ. வச்ச பேரில்லை இது?) இடக்கை ராணியாக அவங்கக் கூடக் கூட எல்லாம் செய்து கொடுக்க சமையல்னு பண்ணி ஒப்பேத்தினோம். அப்புறம் மழையும் விட்டது. அவங்களும் ஊருக்குப் போனாங்க. கைக்கட்டும் எடுத்துட்டு டாக்டர் கையை அசைக்கலாம்னு சொல்லிட்டார். ஒரேயடியா அசைச்சுட்டேனோ தெரியலை. மறுபடி, மறுபடி வலி இருந்துட்டேத் தான் இருந்தது. ஏற்கெனவே word document -ல் எழுதி வச்ச, (அப்படி ஒரு பழக்கமே இல்லாமல் இருந்தது, இந்த ஆற்காட்டார் புண்ணியத்தைக் கட்டிட்டார். திடீர், திடீர்னு அவரோட வரவாலே, கிடைக்கும் நேரத்திலே எழுதி வச்சு schedule பண்ணியும் வச்சுடுறேன்.) எப்போவாவது திருத்தங்கள் செய்யறது உண்டு. இல்லைனா இல்லை.

இணையம் நினைச்ச நேரத்திலே கிடைக்கிறதில்லையே?? மழை நின்னு போச்சுனு நானும், நிக்கலை திரும்ப வரும்னு அவரும் ரெண்டு பேரும் பெட் கட்டி இருந்தோம். கடைசியில் மழை வந்தே விட்டது. நல்லவேளையா, வயசான எங்க மாமியார் வந்த நேரத்திலே மழையும் இல்லை, எனக்கும் சமைக்க முடிஞ்சது. அவங்க திரும்பி ஊருக்குப் போன அன்னிக்கு மழையும் ஆரம்பிச்சது, ஆற்காட்டார் விஜயமும் அதிகம் ஆயிடுச்சு. சில சமயங்களில் யு.பி.எஸ். சார்ஜ் ஆகக் கூட மின்சாரம் இல்லைங்கறாப்போல மத்தியானங்களில் மின் தடை!. இப்போ ஒருவழியா விஷயத்துக்கு வரேன். அப்பாடா! யாரு அது மூச்சுவிட்டுப் பல்லைக் கடிக்கிறது? அம்பிதானே? தெரியுமே எனக்கு? நேத்துப் பெய்த பயங்கர மழையிலே மின்சாரம் எப்போ வரும், எப்போ போகும்னே சொல்ல முடியலை. இந்த அழகிலே நேத்தி ராத்திரி தோசை வார்க்கும்போதே எரிவாயு தீர்ந்துபோய் மாத்தினோம். அப்போவே கொஞ்சம் சந்தேகமா இருந்தது. எங்கேயோ கசிவு இருக்கோனு. இருந்தாலும் சிலிண்டர் மாத்தினதிலே இருக்கும்னு வேலையை முடிச்சுட்டு அடுப்பையும் நல்லா மூடி வச்சுட்டுக் காலம்பர எழுந்து காஃபி போட அடுப்பைத் திறந்தால் எரிவாயு வாசனை.

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு நினைச்சுட்டு இருந்தேன். ம.பா. கிட்டே முதல்லே சொல்லலை. காஃபி குடிச்சதும் பேப்பர் வரலையேனு சோகத்தில் இருந்தார். அப்போ போய் எப்படிச் சொல்றதுனு யோசிச்சேன். மின்சாரம் இல்லை. குளிக்க வெந்நீர் போடணுமே? அடுப்பை மூட்டினால் வீடு பூராவும் எரிவாயு மணத்தது. உடனேயே அவருக்கு விஷயம் தெரிஞ்சு போய் அடுப்பை அணைனு சொல்லிட்டார். காலை ஏழு மணிக்கு எந்த காஸ் கம்பனி திறப்பாங்க? பொறுமையாய் 9-30 வரை இருந்தாகணும். முகத்திலே எண்ணெய் வழிந்தது. குளிக்கும்போது தடவினது தான். வேறே நீங்க நினைக்கிறாப்போல் அசடெல்லாம் இல்லை. இவர் பாட்டுக்குப் பேப்பரைத் தேடிட்டுப் போக, வீட்டுக்கு ஒரு திடீர் விருந்தாளி. உள்ளே வந்ததுமே குளிரால் நடுங்கிட்டு சூடாக் கொஞ்சம் காஃபி கிடைக்குமானு கேட்க தி.தே.கொ. மாதிரி முழிச்சேன். அப்புறமா விஷயத்தைச் சொல்லி மின்சாரம் வந்தால் ரைஸ் குக்கரில் பால் காய்ச்சிக் காஃபி தரேன்னு உறுதிமொழி கொடுத்துப் பத்திரமும் கொடுத்தாச்சு. காலை ஆகாரம் பண்ணணுமே?? என்ன செய்யறது??

ஃப்ரிஜிலே மாவு இருக்கு. ஆனால் எதிலே செய்யறது? மின்சாரமும் இல்லை. வெளியேபோன ம.பா. திரும்பி வந்தார் சோகம் அதிகமாகி. பேப்பரே வரலையாம். தொலைக்காட்சியில் பார்க்கிறதும் செய்திகளே. அப்புறமா பேப்பரில் என்னத்தைப் படிப்பாரோ தெரியலை! விஷயத்தைச் சொன்னதும் விருந்தாளி வேறேனு தெரிஞ்சதும், எங்களுக்கு வழக்கமாய் சமைத்துக் கொடுக்கும் வீட்டுக்குத் தொலைபேசி காலை ஆகாரமும், 3 சாப்பாடும் கேட்டால், அவர் ஆகாரம் வேணால் வாங்கிக்குங்க, சாப்பாடு நோ என்று சொல்லிவிட்டார். சரி இப்போதைக்குப் பார்த்துக்குவோம்னு போய் காலை ஆகாரம் இட்டிலி வாங்கிட்டு வந்து சாப்பிடும்போதே மின்சாரம் வர, ஓடிப் போய் ரைஸ்குக்கரில் பாலைக் காய்ச்சிக் காஃபியும் கலந்து சாப்பிட்டு முடிச்சாச்சு. சமையலையும் ரைஸ் குக்கரிலேயே செய்யலாம் என்றும் ப்ளான் போட்டாச்சு. அதுக்குள்ளே நான் மேலே வைத்த மைக்ரோவேவ் அவனையும் எடுக்கச் சொன்னேன். அதிலே அப்பளம் சூடு பண்ணிக்கலாமே? சமையல் செய்யக் கூடாதுனு சொல்றாங்க. வெந்நீர் போட, பால் காய்ச்சனு வச்சுக்கலாம், காஃபியும் கலந்துக்கலாமே? ஆனால் அதை எடுத்தோமோ இல்லையோ மின்சாரமும் போயாச்சு.

மின் வாரியத்துக்குத் தொலைபேசினால் கட் ஆகி இருக்கும்மா, அதிலேயும் உங்க காலனியிலே தான் போயிருக்கு. மழை கொட்டுதே? இப்போப் பார்க்க முடியாது! னு சொல்லிட்டாங்க. உண்மைதானே. மழையில் என்னத்தைப் பார்க்கமுடியும்? ஆனால் சாப்பாட்டுக்கு வழி?? வேறே என்ன செய்யறது? பக்கத்தில் இப்போ அண்ணாவும் இல்லை. இல்லைனா அங்கே போய் சாப்பாடு சாப்பிட்டுட்டே வரலாம், இல்லைனா எடுத்துட்டு வந்துக்கலாம். ரொம்பக் குழம்பிப் போய்ப் பின்னர் நினைவுக்கு வந்தது கரி ஒரு கிலோ எப்போவோ வாங்கி வச்சது. அது பத்திரமா இருக்கானு பார்த்துட்டு மேலே பரணில் இருந்த குமட்டி அடுப்பை எடுத்து அதில் கரியைப் போட்டுட்டுப் பிடிக்கக் காத்துட்டு இருந்தேன். அதுக்குள்ளே மின்சாரம் வர, போய் அவசரம் அவசரமாக் குளிச்சுட்டு வந்து ரைஸ் குக்கரில் சாதத்தையும் குமட்டி அடுப்பில் ரசம், மோர்க்குழம்பு, வெண்டைக்காய் கறியும் பண்ணி முடிச்சேன். அதுக்குள்ளே கொல்லையிலே காக்காய்க்கும், குருவிக்கும் பசி வந்து ஒரே சத்தம், மழை கொஞ்சம் விட்டிருந்தது. அதுங்களுக்குப் போட்டுட்டுப் பின் வந்த விருந்தாளிக்கும் போட்டுட்டு நாங்களும் சாப்பிடும்போது மணி ஒண்ணாயிடுச்சு. கணினியில் வந்து உட்கார்ந்தேன், மின்சாரமும் போயிடுச்சு. ஏதோ நான் சமைக்கன்னு வந்தாப்போல் வந்துட்டு உடனேயே போயிடுச்சு. இப்போத் தான் 5-00 மணிக்கு வந்திருக்கு.

மீண்டும் குமட்டி அடுப்பில் தான் காஃபி போட்டு முடிச்சு, (இன்னிக்குக் குமட்டி ஸ்பெஷல் காஃபி, இல்லைனா சாயந்தரம் டீ தான்) இட்டிலியும் பண்ணி முடிச்சாச்சு. ஆக மொத்தம் இன்னிக்குப் பழங்காலத்துக்குப் போயாச்சு. மழை இல்லைனா இந்த அனுபவம் எல்லாம் எங்கே கிடைக்கும்???

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்

Monday, November 24, 2008

உஜாலா மீண்டும்! ராதா சமேதா கிருஷ்ணா!

கண்ணனை எப்போது நாம் நினைத்தாலும் மனதில் தோன்றும் பெயர் ராதா என்பதே ஆகும். இந்த ராதாவைப் பற்றிய பல்வேறு கதைகள் உலாவுகின்றன. கோபியர்களுள் ஒருத்தியே ராதா என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ராதா என்பவள் கண்ணனின் அத்தை என்றும் பல வருஷம் கண்ணனை விட வயதில் முத்தவள் எனவும், அவள் பேரில் காதல் என்றால் ஏற்பது எங்கனம் என்றும் பல பதிவுகள் வந்துவிட்டன. இதைக் குறித்துக் கேலியாகவும் சிலர் பேசுகின்றனர். ஆனால் ராதா என்ற பெயர் பாகவதத்தில் கிடையாது. மஹா பாரதத்திலும் கண்ணனின் அவதாரத்தைப் பற்றிய குறிப்புகளில் ராதையைப் பற்றிச் சொல்லவில்லை. நம் புராணங்களிலும் அதிகம் ராதையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லப் படவில்லை. கண்ணனைக் குறும்புக்காரக் குழந்தையாக ஏற்றுக் கொண்டிருக்கும் நாம், ராதையை ஒரு பிரச்னைகள் மிகுந்த, அல்லது பிரச்னைகளுக்கு ஆளான, அல்லது பிரச்னைகளைத் தோற்றுவிக்கும் ஒரு குழந்தையாக/பெண்ணாகவே ஏற்க வேண்டி உள்ளது. சிறந்த பக்திமான்களாக இருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. என்றாலும் கிருஷ்ண பக்தி மார்க்கத்தில் மூழ்கியவர்களுக்கு ராதை இன்றிக் கிருஷ்ணன் தனித்துக் கிடையாது.. பழங்காலத் தமிழ் இலக்கியங்களில் ராதையைப் பற்றிய குறிப்பு எதில் சொல்லி இருக்கின்றது என்று பார்த்தோமானால் நம் தமிழ்க் காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் என்று சொல்லலாம். அதில் நப்பின்னையாகக் குறிக்கப் படுபவள் இவள் தான் என்று சிலர் கூற்று. ஆண்டாளும் நப்பின்னையாகக் குறிப்பிடுவது இவளைத் தான் என்றே தோன்றுகின்றது.

ஆதாரபூர்வமாய் நோக்கினால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து இலக்கிய அன்பர்கள் ராதையப் பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம் என்ற பொதுவான கருத்து ஒன்று இருந்து வருகின்றது. ஆனாலும் பொதுவாய்க் கோபிகளைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே இருந்து வந்திருக்கின்றது. ராதாவைப் பற்றிய தனிப்பட்ட குறிப்போ, அல்லது ராதாவுக்கு முக்கியத்துவமோ கொடுக்கப் படவில்லை. இது கி.பி. 10- நூற்றாண்டு வரையில் இப்படி இருந்திருக்கின்றது. பின்னர் மால்வா அரசனின் காலத்தில் கிருஷ்ணரோடு சேர்ந்து ராதாவையும் குறித்துச் சில பாடல்கள் பாடப் பட்டிருக்கின்றன. ஆனாலும் கி.பி. 12-ம் நூற்றாண்டில் ஜய தேவர் எழுதிய கீத கோவிந்தம் என்ற கிருஷ்ணரின் ராசலீலா பற்றிய அஷ்டபதிகளில் ராதையை முக்கியத்துவம் வாய்ந்த ரசேஷ்வரி ஆக்கி, அவளை முக்கியப் பாத்திரம் ஆக்கிய பின்னரே ராதாவையும், அவளின் கண்ணன் மேல் கொண்ட காதலும் அனைவராலும் பெருமளவும் கொண்டாடப் பட்டது. இந்த ராசலீலாவின் முக்கியப் பாத்திரமே ராதா தான்.

கீத கோவிந்தம் எழுதிய இரு நூற்றாண்டுகளுக்குள் பெரும் பிரசித்தி அடைந்ததோடு அல்லாமல், அது வெளிவந்த கால கட்டத்தில் இருந்த மற்ற நூல்களோடு ஒப்பிடமுடியாத அளவுக்கு, முக்கியத்துவமும் , பெற்று விட்டது. இதை ஒரு பக்தித் தத்துவங்கள் நிறைந்த பாடல் தொகுப்பாகவும் அங்கீகாரம் செய்தனர் மன்னர்களும், அரசர்களும். இதற்குப் பின்னர் எழுதப் பட்ட புராணங்களிலேயே கிருஷ்ணனையும், ராதையையும் இணைத்து எழுத ஆரம்பித்தனர். ராதை கிருஷ்ணன் மேல் கொண்ட காதலின் புனிதமும் எடுத்து உரைக்கப் பட்டது. பல்வேறு எழுத்தாளர்களும் பல்வேறு மொழிகளில் பல்வேறு விதமாய் ராதையின் கதையை எடுத்து உரைத்தாலும், அதன் நோக்கம் மட்டும் ஒன்றே. ராதை கிருஷ்ணனிடம் கொண்ட அளப்பரிய பக்தி நிறைந்த காதல் மட்டுமே சொல்லப் படுகின்றது. மஹாபாரதமும், பாகவதமும் எழுதிய வேத வியாசரால் கூடச் சொல்லப் படாத ஒருத்தி, கிருஷ்ணரின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாதவளாய், கிருஷ்ணரை நினைத்தாலே அவளையும் சேர்த்துத் தான் சொல்ல வேண்டும் என்பதாய், ஒரு தேவதையாய், அம்பிகையாய் மாறிப் போனாள். கிருஷ்ணரின் சிறு வயதுத் தோழியாய் சில புராணங்களில் இவளைச் சொல்லப் பட்டிருக்கின்றது. ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மஹாப் பிரபுவோ, ராதையைக் கிருஷ்ணனின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே நினைத்தார். ராதையை விட்டுக் கிருஷ்ணனைப் பிரிக்க முடியாது என்பதால் ராதா கிருஷ்ணன் என்றே சொல்லலானார். அதே மாதிரி தான் ராதாபந்திஸ், விஷ்ணுஸ்வாமின்கள், நிம்பர்க்கர்கள் என்னும் கிருஷ்ண பக்தி மார்க்கத்தில் திளைப்பவர்களும் ராதையும், கிருஷ்ணனும் பிரிக்க முடியாதவர்கள் என நம்பினார்கள். நிம்பர்க்கர்கள் ராதையைத் தவிர, வேறொருத்தியைக் கிருஷ்ணனின் மனைவியாக நினைக்கக் கூட இல்லை. தெய்வீக வடிவு கொண்ட ராதை தான் கிருஷ்ணனின் மனைவி எனப் பரிபூரணமாய் நம்பினார்கள். இன்னும் வங்காளம் போன்ற கிழக்கு மாநிலங்களில் ராதையும் ஒரு கோபிகா ஸ்திரீ எனவும், கிருஷ்ணன் மேல் மாறாத அபிமானம் கொண்டவள் எனவும், ஆனால் அவள் கணவன் வேறொருவன் எனவும் அவன் பெயர் ஐயன் என்றும், அந்த ஐயன் கம்சனின் படைவீரன் எனவும் சொல்லிக் கொண்டனர். எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டிலும் ராதையின் கிருஷ்ண பக்தி பரவவே செய்தது.



ஆனால் தமிழ்நாட்டுக் கோயில்களில் ராதையுடன் கூடிய கிருஷ்ணனையோ, ராதைக்கு எனத் தனி சந்நிதியோ காண முடியாது. ஆனால் வடநாட்டில் ராதை இல்லாத கிருஷ்ணர் கோயில்களைப் பார்க்கவே முடியாது. கண்ணன் விளையாடிய பிருந்தாவனத்தில் ராதைக்கென்ற தனிக் கோயில் உள்ளது. கண்ணனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அங்கே தான் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது.
ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த ஜன்மாஷ்டமி அன்றே அவதரித்த யோகமாயாவுக்கும், ஸ்ரீ வித்யா உபாசகர்கள் துர்க்காஷ்டமி எனக் கொண்டாடுவார்கள். இதற்கு அடுத்து வரும் சுக்ல பட்ச அஷ்டமியையே ராதாஷ்டமி எனச் சொல்லுகின்றார்கள். ப்ருந்தாவனம் அருகே உள்ள பர்சானா என்னும் ஊரில் வ்ருஷபானுவுக்கும், கீர்த்திதாவுக்கும் விசாக நட்சத்திரத்தில் மகளாய்ப் பிறந்தாள் ராதா என்று சொல்வதுண்டு. விசாக நட்சத்திரத்துக்கு வேதத்தில் ராதா என்ற பெயர் உண்டு என்றும் சொல்கின்றார்கள். (யாருப்பா அங்கே, இதைச் சரியானு சொல்லுங்க!) ஓம் நமோ நாராயணாய, என்னும் அஷ்டாட்சரத்தின் உள்ள” ரா” வும், “ஆதாரம்” என்ற ப்ரபத்தி மார்க்க மந்திரத்தில் உள்ள “தா” வும் சேர்ந்தே ராதா என்ற பெயர் வந்ததாய்க் கூறுகின்றனர். கண்ணனின் இதய சக்தி, பிராண சக்தி ராதாவே ஆவாள்.

ராதைக்கும், கிருஷ்ணனுக்கும் உடல் ஒன்றே. லீலா விநோதங்கள் புரிந்து மக்களுக்குப் போதிக்கவென்றே உடல் இரண்டைக் கொண்டார்கள். நம் உடலில் இருந்து வரும் நிழல் எப்படியோ அப்படியே கண்ணனின் நிழல் போன்றவள் ராதா. ஸ்ரீ கிருஷ்ணன் ராதையை வணங்கினால் , ராதையோ கிருஷ்ணனையே ஆராதனை செய்கின்றாள். ராதையைப் பற்றிய சஹஸ்ரநாமம் கூட இருப்பதாய்ச் சொல்லுகின்றார்கள். இது ராதையால் கண்ணனுக்குச் சொல்லப் பட்டுப் பின் நாரதருக்கும், சிவனுக்கும் கூறப்பட்டது என்று சொல்கின்றார்கள். ராதையின் ஷடாக்ஷர மந்திரம், “ ஓம் ராதாயை ஸ்வாஹா” என்பதாகும். ராதா என்றால் அன்பு, நிறைவு, வெற்றி, மின்னல், விசாக நட்சத்திரம் எனப் பல அர்த்தங்கள் உண்டு. கண்ணனையே நினைத்தால் ராதை கிடைப்பாள். அதாவது மனதில் நிறைவு உண்டாகும், முக்தி கிடைக்கும். ராதாகிருஷ்ணன் என்று சொல்லும் ஒரு வார்த்தையால் மனம் கிருஷ்ணனிடம் ஈர்க்கப் படுவதோடு அல்லாமல் ராதையால் முக்தியும் கிடைக்கும். ராதை ஜீவாத்மா, கண்ணன் பரமாத்மா.

நாதமும், லயமும் சேர்ந்த விரஸமில்லாத ரஸம் மட்டுமே உள்ள ஒரு ஆட்டத்துக்கே ராஸலீலா எனப் பெயரிட்டனர். கோபிகை தான் ராதை, ராஸேஸ்வரி, ரஸிகேஸ்வரி, ராஸலீலா ப்ரதான பாத்திரம். இதில் ராதைக்குக் கண்ணன் தன்னிடம் காட்டும் அன்பினால் கர்வம் வந்துவிட அவள் கர்வத்தைப் பங்கம் செய்யும் வண்ணம் அவளைத் தவிக்க விட்டுக் கண்ணன் மறைவான். கோபிகைகள் ஏற்கெனவே கண்ணனைக் காணாது தேடியவர்கள், தனியே இருக்கும் ராதையையும் கண்டதும், கண்ணனைத் தேடி அலைவார்கள். அவர்கள் கர்வம் பங்கம் அடையும் வண்ணம் பாடப் படும் அந்த கீதம் “கோபிகா கீதம்” எனச் சொல்லப் பட்டு, இன்றளவும் ஏதேனும் பொருள் தொலைந்தால் ராதா கிருஷ்ண பக்தர்களால் கோபிகா கீதம் பாடினால் பொருள் கிடைத்துவிடும் என நம்பிக்கையில் பாடப் படுவதாய் இருந்து வருகின்றது. கோபிகா கீதம் பாடினால் தொலைந்த பொருளோ, எதுவாய் இருந்தாலும் கிடைத்துவிடும் என்பது ராதா கிருஷ்ணர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

பாகவதத்திலோ, பாரதத்திலோ ராதையைப் பற்றிய குறிப்பு வரவில்லை என்பதற்கு கீழ்க்கண்டவாறு காரணம் கூறப் படுகின்றது. பரிட்சித் மஹாராஜாவுக்கு ஏழு நாட்களுக்குள் மரணம் என்பது தெரிந்து நற்கதி கிடைக்கவேண்டும் என்பதற்காக சுக முனிவரை அழைத்து வந்து பாரதக் கதைகளைச் சொல்லச் செய்கின்றான் பரிட்சித்து. ஆனால் சுக முனிவரால் சொல்லப் பட்ட அந்தப் பாரதக் கதையில் ராதா என்ற வாக்கியமே வராது. ஏனெனில் சுக முனிவர் ஒரு முறை ராதா என்ற பெயரைச் சொல்லிவிட்டால் ஆறு மாதங்கள் போல, ஆழ்ந்த சமாதி நிலைக்குப் போய்விடுவாராம். பரிட்சித்தோ ஏழு நாட்களுக்குள் மரணம் அடைந்து விடுவான். அவர் சமாதி நிலைக்குப் போனாரென்றால் பரிட்சித்துக்கு நற்கதி கிடைப்பதெப்படி?? சுகரால் சொல்லப் பட்டு வந்த பாரதம் முடிவடைவதும் எப்படி?? ஆகவே தான் பாரதத்தில் ராதா என்ற பெயர் சொல்லப் படாமல், அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எழுதவும், சொல்லவும் பட்டது என்று ஆன்றோர் சொல்கின்றனர். இந்த ராதையின் ஒரு சொல்லுக்கு இத்தனை மகிமை என்பது பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வில் நடந்த சம்பவத்தில் இருந்தே தெரியவரும். ராதையின் பிரேம பாவத்தை உணர வேண்டி ஒரு பெண் போல் புடவை தரித்து ராமகிருஷ்ணர் ராசலீலை பாடப் பட்ட இடத்தில் நடமாடிக் கொண்டிருந்தபோது அவரை ஒரு ஆண் எனவும், ராமகிருஷ்ணர் எனவும் யாராலும் நம்பமுடியாமல் முற்றிலும் பெண் போலவே இருந்தார் என்றும், பின்னர் தன் உணர்வை அவர் சொல்லும்போது ராதை தனக்குள் புகுந்துவிட்டதாகவே தான் உணர்ந்ததாயும் அவர் சொல்லி இருக்கின்றார் என்பதையும் பார்க்கும்போது இந்த அற்புத தத்துவம் நன்கு புரிந்த ஞானிகளுக்கே எட்டும் என்றும், நம் போன்ற சாமானியர்களுக்கெல்லாம் வார்த்தைகளுக்கு எட்டாத ஒன்று என்றும் புரிய வருகின்றது அல்லவா?? கற்பனையோ, காவியமோ, ராதை என்பவள் கிருஷ்ணனை விட்டுப் பிரிக்க முடியாதவள் ஆகிவிட்டாள்.

ஜெய் ஸ்ரீராதாகிருஷ்ண!

Saturday, November 22, 2008

உங்களோடு போட்டி போடுவேனா?? :((((((((

kannabiran, RAVI SHANKAR (KRS) said

//சம்பந்தப் பெருமான் மேல் அடியேனுக்கு உங்களை விட பக்தியும் காதலும் அதிகம்!//

கேஆரெஸ், உங்களோடு நான் என்னிக்குப் போட்டி போட்டிருக்கேன்? நான் எனக்குத் தான் பக்தி அதிகம்னு ஒருநாளும் சொன்னதில்லையே??? அப்படித் தெரியும்படி எழுதி இருந்தால் மன்னிச்சுக்குங்க! :((((((((

//என்றும் ஆனதால் "தான்" காரைக்கால் அம்மையாருக்கு இல்வாழ்க்கை "மறுக்கப்பட்டது"-ன்னு!
அது தான் மாபெரும் தவறு!//

எங்கே மறுத்தாங்க?? இல்வாழ்க்கை நடத்தும்போது தானே அவங்களை இறைவன் ஆட்கொண்டு இன்னிக்கு அதைப் பத்திப் பேசறோம். அந்தம்மாவும் சும்மா ஏதோ கல்யாணம் செய்துகிட்டோம், ஏதோ மாம்பழத்தை வரவழைச்சோம், அப்புறம் கணவனோடு குழந்தை, குட்டி பெத்துட்டுச் சும்மா இருக்கலாம்னு இருக்காம அவங்களோட தனித் தன்மையைக் காட்டப் போய் அந்த மனுஷனும் இவங்களோட தெய்வீகத் தன்மையைப் புரிந்து கொண்டு விலகிப் போயிட்டான், குடும்பம் நடத்தி இருந்தாங்கன்னா, குழந்தை, குட்டி பிறந்து இருந்து சாதாரண வாழ்க்கை நடத்தி இருந்தால் இவங்களுக்கு இப்படி ஒண்ணு நடந்ததே தெரிஞ்சிருக்குமா சொல்லுங்க, அதுக்காகவாவது காரைக்கால் அம்மையாருக்கு நன்றி சொல்லுவோமே! ஆனால் இந்த மாதிரி நடந்தப்புறமும் அவங்க கணவன் அவங்களை விட்டு விலகலைனாலோ, இல்லை, இவங்களோடேயே குடித்தனம் செய்தான்னாலோ,, குழந்தை குட்டி பெத்துக்கிட்டிருந்தாலோ அப்போ என்ன சொல்லி இருப்போம்? அப்போவும் அந்தக் கணவன் தான் வாங்கிக் கட்டிக்கணும். எப்படிப் போனாலும் உதைக்குதே?? என்ன செய்யறதுனு புரியலை! அதையும் யோசிக்கணுமோ?

//அதனால் தான் கேட்டேன், அதை விட அற்புதங்கள் புரிந்த சம்பந்தருக்கு ஏன் மறுக்கப்படவில்லை-ன்னு?//

எத்தனை முறை கேட்டாலும் சம்பந்தருக்கு நடந்த திருமணம் கட்டாயத் திருமணம். பெரியோர்களின் வற்புறுத்தலால் நடைபெறும் திருமணம் அக்னியை வலம் வரும்போதே நிறைவும் பெற்று விடுகின்றது.

இதோ சம்பந்தர் திருமணம் பற்றிய தேவாரக் குறிப்புகள்:-

சம்பந்தரிடம், "வேதநெறியை நிலைநாட்டிய தாங்கள் அவ்வேதம் சொல்லும் வேள்விகள் செய்வதற்கு வேதத்தில் விதித்தபடி மணம் செய்துகொள்ளவேண்டும்" எனப் பெரியவர்கள் வேண்டுகிறார்கள்.

சில பெரிய புராணப் பாடல்கள் கீழே.

தேவாரம்

நாட்டுமறை முறையொழுக்கம் ஞானபோ னகருக்கும்
கூட்டுவது மனங்கொள்வார் கோதில்மறை நெறிச்சடங்கு
காட்டவரும் வேள்விபல புரிவதற்கோர் கன்னிதனை
வேட்டருள வேண்டுமென விண்ணப்பம் செய்தார்கள்.

உலகியல் நிலையில், மறைவழிபட்ட ஒழுக்கத்தை ஞானசம்பந்தருக்கும் இசைவித்தலை உள்ளத்தில் கொண்டு, குற்றமில் லாத மறைநெறியில் சொல்லப்படும் செயற்பாடுகளுடன் (சடங்குகளுடன்) கூடிய வேள்விகளைச் செய்வதற்கு, உரிமையைப் பெறும் பொருட்டுத் தாங்கள் ஓர் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள்.

குறிப்புரை:
`போனகருக்கும்' என்றவிடத்துவரும் உம்மை அவர் தம் சிறப்புணர நின்றது. ஞானத்தின் திருவுருவாக விளங்கும் ஞானசம்பந்தருக்கு, மறைவழிப்பட்ட செயற்பாடுகளோ, அவற்றைச் செய்தற்கு என ஓர் இல்வாழ்க்கையோ வேண்டுவதின்று என்பது போதர நின்றது.
----------------
இங்ஙனம் கூறிய அவர்களின் சொல்லைக் கேட்டு, மாதவத்தின் கொழுந்தென விளங்கும் ஞானசம்பந்தர், சுற்றங்கள் பொருந்திய பெரிய பாசத் தொடக்கினை, விட்டு நீங்குவதற்காக நிலைமை உடையவராகி, விடைக்கொடியை உயர்த்திய சிவபெருமானின் திருவடி ஞானமான உயர்ந்த சிவஞானத்தை முன்னே பெற்றவர் ஆதலால் அவர்களின் மொழிக்கு இசையாமல் `நீங்கள் கூறுவது பொருந்திய மொழியாயினும், அது என்னளவில் வேண்டாத ஒன்றாகும்' எனக் கூறியருள,
-------
அம் மறையவர்கள் மேலும் கைகூப்பித் தொழுது, ஞானசம்பந்தரிடம் அறிவிப்பாராய், பெரிய மண்ணுலகில் மறைவழிவரும் வழக்கினை நீர் உயர்த்தியருளினீர் ஆதலின், அவ் வழிவரும் முறையில் அந்தணர்க்குரிய ஆறு தொழில்களுடன் கூடிய அப்பெருநெறியில் ஒழுகும் திருமணத்தைச் செய்தருளுதற்குத் திருவுள்ளம் கொள்ளல் வேண்டும் என்று கூற,
------
மறைவாழ அந்தணர்தம் வாய்மையொழுக் கம்பெருகும்
துறைவாழச் சுற்றத்தார் தமக்கருளி உடன்படலும்
பிறைவாழுந் திருமுடியில் பெரும்புனலோ டரவணிந்த
கறைவாழுங் கண்டத்தார் தமைத்தொழுது மனங்களித்தார்.

மறைகள் வாழ்வு அடையவும், அந்தணர்களின் மறைவழிப்பட்ட வாய்மையால் வரும் ஒழுக்கம் வாழ்வடையவும், அந்தச் சுற்றத்தார்களுக்கு அருள்செய்து, அவர்களின் வேண்டுகோளுக்கு ஞானசம்பந்தர் இசைவு தெரிவிக்கவும், பிறைச் சந்திரன் வாழ்கின்ற திருமுடியில் பெரிய நீர்க் கங்கையுடன் பாம்பையும் அணிந்த நீலகண்டரான இறைவரை வணங்கி, அச்சுற்றத்தார் மகிழ்ந்தனர்.
--------------

இப்போ காரைக்கால் அம்மையாருக்கு நடந்தது பற்றிய ஒரு தொகுப்பும், மூத்த திருப்பதிகம் அவர் எப்போது பாடினார் என்பது பற்றிய ஒரு தெளிவும். திருவாலங்காட்டில் இறைவனைத் தரிசனம் செய்த பின்னரே மூத்த திருப்பதிகம் பாடினார் எனப் பல நூல்களும் சொல்கின்றன.

//மாங்கனியின் மாயம்


அவற்றைக் கேட்ட பரமதத்தன் இக்கனி சிவபெருமான் உனக்குத் தந்தது உண்மையாயின் பிறிதொரு கனியையும் இவ்வாறே வருவித்து எனக்கு அளிப்பாயாக எனக் கேட்டனன். புனிதவதியார் அவ்விடத்தை விட்டுத் தனியே சென்று இறையருள் எனத் தான் கூறிய வார்த்தை பொய்யாதிருக்கப் பிறிதொரு மாங்கனி அருள வேண்டு மெனச் சிவபெருமானை இறைஞ்சி நின்றார். இறையருளால் மற்று மொரு மாங்கனி அம்மையார் கைக்கு வந்தது. பரமதத்தன் அக்கனியைத் தன் கையில் வாங்கினான். வாங்கிய அளவில் அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்டு அஞ்சிய பரமதத்தன் தன் மனைவியாக வந்த அம்மையாரைத் தெய்வமென மதித்து அவரோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் உறவுத்தொடர்பு இன்றி ஒழுகி வந்தான்.


மறுமணம்


இவ்வாறு ஒழுகும் நாளில் ஒருநாள் கடல் கடந்து வாணிபம் செய்து மீள்வேன் என உறவினர்களிடம் கூறி அரிய பல பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு கடல் கடந்து சென்று பெரும் பொருள் ஈட்டிக் கொண்டு மீண்டவன் பாண்டி நாட்டு மதுரையை அடைந்து அங்கே இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து வாழ்ந்து வந்தான். அம்மனைவிக்குப் பிறந்த பெண் குழந்தைக்குத் தான் தெய்வமென மதிக்கும் புனிதவதியாரின் பெயரைச்சூட்டி மகிழ்ந்துறைந்தான்.


புனிதவதியார் சந்திப்பு


இதனை அறிந்த புனிதவதியாரின் சுற்றத்தினர் அம்மையாரை அவர் தம் கணவர்பால் சேர்ப்பிக்கும் கருத்துடன் அவரைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாடடைந்து அவன் வாழும் ஊர் எல்லையை அணுகினார்கள். அவர்கள் வருகையை அறிந்த பரமதத்தன், அச்சம் உடையவனாய், இரண்டாவதாகத் தான் மணந்த மனைவியோடும் மகளோடும் புறப்பட்டு ஊர் எல்லையை அடைந்தான். அவன் வருகையை அறிந்த உறவினர் பல்லக்கை நிறுத்தினர். பரமதத்தன் அம்மையாரிடம் `அடியேன் உம் அருளால் வாழ்கிறேன். இவ்விளங் குழவிக்கு உமது பெயரையே சூட்டியுள்ளேன்` என்று கூறி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அதனைக் கண்ட புனிதவதியார் அச்சத்தோடு சுற்றத்தார் பால் ஓதுங்கி நின்றார். சுற்றத்தினர் பரமதத்தனை நோக்கி `நீ உன் மனைவியை வணங்கக் காரணம் யாது` எனக் கேட்க அவன் அவர்களை நோக்கி ` இவர் நம் போன்றவர் அல்லர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் நீவிரும் இவரை வழிபடுவீராக` என்றான்.


பேய் வடிவம்


சுற்றத்தவர் `ஈதென்ன வியப்பு` எனத் திகைத்து நிற்கப் புனிதவதியார் சிவபிரான் திருவடிகளைச் சிந்தித்து `தன் கணவர் கருத்து இதுவாயின் அவர் பொருட்டு அமைந்த எனது தசைப்பொதியைக் கழித்து நீக்கி நின் திருவடிகளைப் போற்றி நிற்கும் கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவினை எனக்குத் தந்தருளுக` என இறைவனை வேண்டி நின்றார். அந்நிலையில் பெருமான் அருளால் வானுலகும் மண்ணுலகும் போற்றும் பேய் வடிவம் அவருக்கு வாய்த்தது. சுற்றத்தவர் அஞ்சி அகன்றனர். புனிதவதியார் சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் உடையவராய் அற்புதத் திருஅந்தாதியால் இறைவனைப் போற்றினார். இதனைச் சேக்கிழார்,


ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி


இவனுக்காகத்


தாங்கிய வனப்புநின்ற தசைப்பொதி கழித்து


இங்கு உன்பால்


ஆங்குநின் தாள்கள் போற்றும்


பேய்வடிவு அடியேனுக்குப்


பாங்குற வேண்டும் என்று பரமர்தாள்


பரவி நின்றார். (தி.12 காரைக்.49)


ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே


மேல்நெறி உணர்வுகூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்


ஊனுடை வனப்பை எல்லாம் உதறிஎற் புடம்பேயாகி


வானமும் மண்ணும் எல்லாம் வணங்குபேய் வடிவம் ஆனார்


(தி.12 காரைக். 50)


எனத் தெரிவித்தருள்கிறார். அம்மையாரும் தாம் அருளிய அந்தாதியில்


பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது


உறினும் உறாதொழியுமேனும் - சிறிதுணர்த்தி


மற்றொரு கண் நெற்றிமேல் வைத்தான் தன் பேயாய


நற்கணத்தில் ஒன்றாய நாம் (85)


எனக் குறித்தருள்கிறார். இதனால் பேய் வடிவம் என்பது சிவகணங் களில் ஒன்றான பேய்வடிவம் என்பதை அறியலாம்.//


முதலில் அம்மையார் பாடியது அற்புதத் திருவந்தாதியும், திரு இரட்டை மணிமாலையுமே ஆகும். அதில் இருந்து சில பாடல்கள்.



யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன். பாடல் எண் 7/ அற்புதத் திருவந்தாதி


எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று.

அற்புதத் திருவந்தாதி பாடல் எண் 10


சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.

திரு இரட்டை மணி மாலை பாடல் எண் 6

திருக்கைலை சென்று திரும்பியதும் திருவாலங்காட்டில் இறைவனின் நடனத்தைக் காணும் ஆசையால் வந்தபோது பாடியவையே மூத்த திருப்பதிகம் ஆகும்.

மூத்த திருப்பதிகம் பாடல் எண் 1

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.

மூத்த திருப்பதிகம் பாடல் எண் 7

கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித்
தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்
தான் தடி தின்றணங் காடு காட்டில்
கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக்
காலுயர் வட்டணை யிட்டு நட்டம்
அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே



கேஆரெஸ்ஸுக்கு: மத்தவங்களும் வந்து கருத்துச் சொல்லட்டும்னு சொல்லி இருந்தீங்க, ஆனால் நம்ம பக்கம் யாரும் வர மாட்டாங்கனு தெரியாது போல! :))))) அதான் நானே சொல்லிட்டேன். மத்தபடி இனி உங்கள் கருத்து எதுவோ அப்படியே!

Friday, November 21, 2008

திருஞானசம்மந்தர் செய்து கொண்ட திருமணம்! எத்தனை நாட்கள் வாழ்ந்தார்?

//இறைவனுக்கே சூட வேண்டியவராச்சே சம்பந்தர்! புனிதவதியாச்சும் ஏதோ ஒரு மாம்பழ அற்புதம் தான்! ஆனா சம்பந்தர் பலப்பல அற்புதங்கள் செய்து காட்டியவர் ஆச்சே! அப்புறம் எப்படி இறைவனுக்கே சூட வேண்டியவரை, கல்யாணம் கட்டி வைக்கறாங்க?

அவர் "புனிதர்"-ன்னு நினைப்பு வந்தா, "ஏங்க, அத்தான்"-ன்னு எப்படி ஒரு பொண்ணு அழைக்க முடியும்? உங்க லாஜிக் தான்! ஆனால் ஆணுக்கும் அதே லாஜிக் தானே? :) //

கேஆரெஸ் கேட்டிருக்கும் இந்தக் கேள்விக்கு உடனேயே பதில் தெரிந்திருந்தாலும் கொஞ்சம் சரிபார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. அதனாலேயே தாமதம். ஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடனேயே இறை ஜோதியுடன் ஐக்கியம் ஆனார் என்ற விஷயம் இது வரையிலும் கேஆரெஸ்ஸுக்குத் தெரியாதென்றால் நம்பவும் முடியவில்லை. தான் உயிர்ப்பித்த, தனக்கென நிச்சயிக்கப் பட்ட பூம்பாவையையும் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். பின்னர் திருமணத்திற்குச் சம்மதம் சொல்லியும், திருமணத்தின்போது அவருக்குத் தான் வந்த நோக்கம் நினைவில் வர, திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவருமே ஜோதியில் ஐக்கியம் ஆனார்கள் என்று தெரிய வருகின்றது. இதை திருநல்லூர்ப் பெருமணம் என்ற மூன்றாம் திருமுறையில் 11 பாடல் தொகுப்பாய்க் காண முடியும். முதல் பாட்டையும், கடைசிப் பாட்டையும் மட்டும் இங்கே கொடுத்துள்ளேன்.


//கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே //

இந்த முதல் பாடலில் சடங்குகள் செய்து செய்யப்படும் இந்தத் திருமணம் தனக்கு வேண்டாம் எனவும் வேண்டி இருக்கின்றார். திருமணம் முடிந்து மங்கலநாண் பூட்டி அக்னியை வலம் வரும்போது அந்த ஜோதியில் இறைவன் திருமுகம் நினைவில் வர இல்லாளுடன் தானும் அந்த ஜோதியில் ஐக்கியம் ஆகவேண்டி அவர் பாடிய பாடல்களே இந்தத் திருநல்லூர்ப் பெருமணம் என்னும் பதினொரு பாடல்களின் தொகுப்பாகும்.


//நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவ மவல மிலரே. //

இந்தக் கடைசிப் பாட்டில் ஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை இந்தப் பதிகம் படிக்கும் அனைவரும் பெறவேண்டும் என வேண்டிப் பாடியுள்ளார்.
நேற்றே பதிலைக் கொடுத்திருக்கலாம். என்றாலும் பெரியபுராணத்தில் இருந்து மற்ற சில புத்தகங்களையும் கொஞ்சம் சரிபார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. பன்னிரு திருமுறைகள் தளத்தையும் சென்று பார்க்க வேண்டி இருந்தது. அனைத்திலும் இதே மாதிரியாகவே இருக்கின்றது. மாற்றம் ஏதும் இல்லை. ஆகவே ஞானசம்மந்தர் திருமணம் என்று பேருக்குச் செய்து கொண்டாரே தவிர, வாழ்ந்து பிள்ளை, குட்டி ஒன்றும் பெற்றுக் கொள்ளவில்லை. திருமணமும் கட்டாயமாய்ச் செய்து வைக்கின்றார்கள். கீழே பன்னிரு திருமுறைகள் தளத்தில் இருந்து எடுத்தது ஜி3 பண்ணி இருக்கேன். அதையும் பார்க்கவும்.


திருமணம்:


ஞானசம்பந்தரைக்காணும் பெருவேட்கையில் முருக நாயனாரும் நீலநக்க நாயனாரும் சீகாழி வந்தனர். சிவபாத இருதயரும் சுற்றத்தாரும் ஞானசம்பந்தர் புண்ணியப் பதினாறு ஆண்டு எய்திய நிலையினராய் இருத்தலை எண்ணி அவரை அணுகி மறை நெறிப்படி வேள்வி செய்ய ஒருகன்னியைத் திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என வேண்டினர். ஞானசம்பந்தர் முதலில் மறுத்தார். ஆயினும் திருவருளை நினைந்து மறைவாழவும் அந்நெறியின் துறைவாழவும் திருமணத்திற்கு இசைவு தெரிவித்தார்.

சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் என்பாரின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். நல்லூர் மணவிழா வினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய நாளில் தோணிபுரத் தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து போற்றினார். உறவினர் கள் வேண்டக் கோயிலின் பக்கத்தே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தித் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நன்னீரை உட்கொண்டு அனைவர் மேலும் தெளித்து, ஞான சம்பந்தரை நோக்கி `யான் பெற்ற அருநிதிப் பாவையை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன்` என உரைத்தார். மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்பால் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். ஞானசம்பந்தர் காதலியாரைக் கைப்பற்றித் தீவலம் வரும்போது `விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே` என்னும் நினைவினராய்` `இருவினைக்கு வித்தாகிய இந்த இல்லறம் நம்மைச் சூழ்ந்து கொண்டதே இனி இவளோடும் அந்தமில் சிவன்தாளை அடைவோம்` என உறுதி கொண்டு திருப்பெருமணக் கோயிலை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று `கல்லூர்ப் பெருமணம் வேண்டா` எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அப்போது சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று `ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காணவந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளி நின்றார். திருநீல நக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்பாண்டார் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் தம் காதலியாரைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமா னோடு ஒன்றி உடனானார்.


``காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் செய்தருளித்


தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்


நாதனெழில் வளர்சோதி நண்ணியதன் உட்புகுவார்


போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்.``


அச்சோதி மறைய பெருமணக்கோயில் முன்போலவே அமைந்தது. அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்.

Thursday, November 20, 2008

உஜாலாவை இன்னும் விடலையே! ஆரம்பம் தான்!

திருமங்கை மன்னன் கொள்ளை அடிக்க ஆரம்பிக்கின்றான். அந்த வழியிலேயே யாராலேயும் போக முடியவில்லை. போவோர் வருவோர் அனைவரையும் மன்னனின் மேற்பார்வையிலேயே கொள்ளை அடிக்கின்றனர் அவன் வீரர்கள். மன்னனோ பெரும் வீரன். அவன் வீரத்தைப் பாராட்டியே சோழன் அவனைத் திருமங்கைக்கு மன்னன் ஆக்கி இருக்கின்றான்.அவனை மீறி அவ்வழியே யாராலும் செல்ல முடியவில்லை. வயதானவர்கள், குழந்தைகள், பெரியோர், சிறியோர் யாராயிருந்தாலும் தப்ப முடியவில்லை. அனைவருமே நீலனிடம் மாட்டிக் கொள்கின்றனர். பொருளை இழந்தே செல்ல வேண்டி இருக்கின்றது. ஒரு நாள் பூரண ரிஷியின் மகளுக்குத் திருமணமாமே, செய்தி காதில் விழுகின்றது நீலனுக்கு. மணமகனைப் பார்த்தால் தேவபுருஷன் சாட்சாத் அந்த அரங்கனைப் போல் அழகாமே! அதுவும் சொன்னார்கள். இருக்கட்டுமே! எந்தப் புருஷனாய் இருந்தால் என்ன? இந்த நீலனிடம் மாட்டினால் அதோகதிதான். இன்னிக்கு இரண்டில் ஒன்று பார்த்துட வேண்டியது தான்.

கிளம்பினான் நீலன் வேட்டைக்கு. மறைவாக ஒளிந்து கொள்கின்றான். திருமணம் முடிந்து பெண்ணும், மாப்பிள்ளையும் கிளம்பிச் செல்லுகின்றனர். அதோ பெண்ணின் பல்லக்கு வருதே! ம்ம்ம்ம்??? அது யாரு குதிரையிலே? அது தான் மாப்பிள்ளையா?? ஆள், நல்ல அழகா, அம்சமாய்த் தான் இருக்கான்! அது சரி! இது என்ன நிறம்?? நீலமா? கருநீலமா? கறுமையா? கரும்பச்சையா?? பையன் அப்படியே ஜொலிக்கின்றானே?? ம்ம்ம்ம்ம்.,,., இப்படிப் பட்ட பையனுக்கு நிறையவே சீர், வரிசைகள் கொடுத்திருப்பாங்களே. இதோ, கிட்டே வந்தாச்சு அவங்க எல்லாம். பிடிக்க வேண்டியது தான். நீலனின் சைகையைப் பார்த்துவிட்டு மற்ற வீரர்கள் முன்னே சென்று வழியை மறிக்க, திருமணத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருக்கும் கூட்டம் சற்றே தயங்கியும், திகைத்தும் நிற்கின்றது. காவலுக்கு வந்த வீரன் கேட்கின்றான், "என்னப்பா? என்ன வேண்டும்?" என்று. பதிலே சொல்லாமல் வீரர்கள் அவர்களின் நகைகளையும், சீர்வரிசைகளையும், மற்ற விலை உயர்ந்த பொருட்களையும் மெதுவாய்ச் சேகரம் செய்கின்றனர். அவர்கள் அனைவரும் செய்வதறியாது குய்யோ, முறையோ எனக் கத்த, நீலன் அங்கே வந்து அனைவரையும் மிரட்டுகின்றான். அனைவரும் வாய் பேசாமல் காதில், கழுத்தில், கையில், காலில் என இருந்த அனைத்தையும் கழற்றிக் கொடுக்க. நீலனின் பக்கத்தில் அவற்றைக் குவிக்கின்றனர் வீரர்கள்.

ஆச்சா? எல்லார்கிட்டே இருந்தும் வாங்கியாச்சா? நீலனின் விசாரணை. மெல்லப் பார்க்கின்றான் ஒவ்வொருத்தராய். அதோ, நடுங்கிக் கொண்டு மாப்பிள்ளையின் பின்னால் நிற்கும் மணப்பெண். அவளிடம் ஏன் பிடுங்கவில்லை? கூச்சல் போடுகின்றான் நீலன்.

"ஐயா, இப்போத் தான் திருமணம் முடிந்து திரும்புகின்றனர். பெண்ணை அதற்குள் நகை எல்லாம் கழட்டும்படி சொல்லணுமா?"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. கழட்டச் சொல்லுங்க." மணப்பெண்ணும் பயந்தவாறே அனைத்து நகைகளையும் கழட்டிக் கொடுத்துவிடுகின்றாள். மாப்பிள்ளையைப் பார்க்கின்றான் நீலன். அவனும் அனைத்தையும் கழட்டிக் கொடுக்கின்றான். இருவரிடமும் ஒன்றும் இல்லை. ஒன்றுமே இல்லையல்லவா?? இல்லையே?

"அதோ பாருங்க ஐயா! மாப்பிளையின் காலில்!" என ஒருவன் சுட்டிக் காட்ட, நீலன் பார்க்கின்றான். மாப்பிள்ளையின் காலில் சற்று நேரத்துக்கு முன்னரே, திருமணத்தின்போது அணிவிக்கப் பட்ட மெட்டி. காலில் கிடந்தது. "அதை ஏன் கழட்டவில்லை?" நீலன் கேட்கின்றான்.

"ம்ம்ம்ம்.., " மாப்பிள்ளையின் முகத்தில் கள்ளச் சிரிப்பு. எத்தனை பேர் வீட்டில் நாம் நெய்யும், பாலும், வெண்ணெயும், தயிரும் திருடினோம். இப்போ இவன் நம்ம கிட்டே திருடறானே, இதான் அவன் நினைப்போ? யாருக்குத் தெரியும்? "இதோ கழட்டறேனே!" என்றான் அந்த மாயக் கள்ளன். இன்னும் சற்று நேரத்தின் தன் உள்ளத்தையே கழட்டிக் கொடுக்கப் போறான் இந்த நீலன். அதுக்குள்ளே அவனுக்கு அவசரமா? சிரிப்பு மாறாமல் மாப்பிள்ளை தன் காலில் இருந்த மெட்டியைக் கழட்டினான். வரவே இல்லை. அசைந்தே கொடுக்கலை அது. என்ன இது? நீலனுக்கு இவன் ஏதோ தந்திரம் செய்யறானோ என்ற எண்ணம். எங்கே நான் கழட்டறேன். என்று கிட்டே போனான். மாப்பிள்ளை ஏனோ தெரியலை, பயந்து ஓடினான். நீலன் துரத்த, மாப்பிள்ளை பயந்து ஓட, கடைசியில் நீலன் ஒருவழியாப் பிடித்துவிட்டான் மாப்பிள்ளையை. அவன் காலில் இருந்த மெட்டியைக் கழட்ட ஆரம்பித்தான். அவனாலும் முடியவில்லையே! ஏனென்று தெரியவில்லை. களைத்துப் போனான் நீலன். பின் ஒரு யோசனை தோன்றிற்று அவனுக்கு. பல்லால் கடித்து இழுத்தால் என்ன? மாப்பிள்ளையின் பாதங்களை ஒரு கல்லின் மேல் வைத்தான் நீலன். சிரித்துக் கொண்டே நின்றான் மாப்பிள்ளை. பெண்ணோ அவனுக்குப் பின்னால் பயந்த தோற்றத்துடனேயே. நீலன் கீழே மண்டியிட்டு அமர்ந்து மாப்பிள்ளையின் பாதங்களில் இருந்த மெட்டியை எடுக்க முயன்றான். அப்பா! பாதங்களா இவை! இல்லை தாமரை மலர்களோ! கண்ணையே ஏதோ செய்யறதே! இவன் ஏதோ மாய, மந்திரம் தெரிஞ்சவனோ? நம்ம கிட்டே இருந்து தப்பிக்க இதெல்லாம் பண்ணறானோ? நீலனின் கோபம் அதிகரிக்க பல்லால் ஒரு கடி கடித்து இழுக்க எண்ணி அந்த மெட்டியின் மேல் வாயை வைத்தான். மெதுவாக சுகந்தம் பொங்கும் ஒரு அமுத வாய் அவன் காதருகில் வந்தது. ஏதோ மெல்லச் சொன்னது. என்ன அது? "ஓம் நமோ நாராயணாயா!" ஆஹா, நீலனுக்குள் ஏதோ ஆகி விட்டதே? என்ன ஆச்சு? என்ன மந்திரம் இது? இவன் யார்? ஏன் என்னிடம் வந்து இதைச் சொல்கின்றான்? ஒரு கண நேரம் எதுவும் புரியாமல் திகைத்தான் நீலன்.

"நீ என்ன கலியனோ?" என்ற குரல் மட்டுமே கேட்டது. பின்னர் நீலன் கண்டதெல்லாம் அந்த சாட்சாத் எம்பெருமானையே தான். பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தான் அவன். தான் கொள்ளை அடிக்க வந்ததும் அவனிடமே, தன்னைத் தடுத்தாட்கொள்ள வந்ததும் அவனே என்ற உண்மையும் புரிந்தது நீலனுக்கு. பிறகென்ன?

"கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன்
கண்டவாதிரிதந்தேனேலும்,
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத்திருவருள்பெற்றேன்,
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம்கண்ணநீர்சோர,
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
நாராயணாவென்னும்நாமம்."


அந்த எட்டெழுத்து மந்திரம் அவனை ஆட்கொள்ள திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வாராகிப் பாடல்கள் பல புனைந்து, அரங்கனை மட்டுமின்றி அநேக திவ்ய தேசங்களுக்கும் சென்றார்.

"எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்
எனக்கரசு என்னுடைவாணாள்,
அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி
அவருயிர்செகுத்தவெம்மண்ணல்,
வம்புலாஞ்சோலைமாமதிள் தஞ்சை
மாமணிக்கோயிலேவணங்கி,
நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்."

பெருமாள் கோயில்களில் தன் மனைவியோடு காட்சி அளிக்கும் ஒரே ஆழ்வார் இவரே என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

Wednesday, November 19, 2008

உஜாலாவுக்கு மாறிட்டோம்ல நாங்களும்????


நம்ம பேரிலே ஒரு பெரிய குற்றச்சாட்டு இருக்கே. பிள்ளையார், அவரோட அப்பா சிவனைப் பற்றியும், சிவனடியார்கள் பத்தியும், முருகன், ஐயப்பன், போன்ற இறைவர்களைப் பற்றி மட்டுமே எழுதுவாங்க. விஷ்ணு பக்தர்களைக் கண்டுக்கவே மாட்டாங்கனு. அதை மாத்திடறதுனு முடிவு பண்ணிட்டோம். அதான் இப்போ ஆரம்பம். இது பத்தி இன்னும் எழுதலாம், விஷ்ணு புராணம், சுய புராணம் ஆயிடும். அதனாலே இத்தோட நிறுத்திக்கிறேன். தெரிஞ்சவரைக்கும் சில ஆழ்வார்கள் பத்தியும் கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணன் எடுத்த சில முடிவுகளும், பாண்டவர்கள் ஐந்து பேரும் திரெளபதியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும் (உடனேயே இதை எழுதுனு யாரும் சொல்லக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாய் வரும்) ஒவ்வொன்றாய் எழுதப் போகின்றேன். நடு, நடுவிலே ட்ராக் மாறிக்கும். சிக்னல் கிடைக்கிறதைப் பொறுத்து. மொக்கை ஆதரவாளர்களுக்கும் ஏத்தாப்போலேயே எழுத எண்ணம். ஆதரவு அளிக்கலைனாலும் கவலைப் படலை! (நறநறநறநறநற, வேறே வழி??)

"ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய
உலகெல்லாம் உய்யவேண்டும் ஓம் நமோ நாராயணாய"

மனைவியோடு காட்சி தரும் ஒரே ஆழ்வார் இவர் தான்னு நினைக்கிறேன்.

"வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்."

மேற்கண்ட பாசுரம் திருமங்கை ஆழ்வாரால் பாடப் பட்டது. ஒரு சிற்றரசனாக இருந்து பின் வழிப்பறிக் கொள்ளையனாக மாறி விட்ட ஒருவனின் கதை இது. அந்த ஸ்ரீமந்நாராயணனையே வழிப்பறிக்காக விரட்டி விரட்டித் துரத்தி அவனைப் பாடாய்ப் படுத்தி அத்தனையும் தன் பக்தனுக்காகப் பொறுத்துக் கொண்டான் அந்த மாயக் கண்ணன். ஒவ்வொரு வருஷமும் இந்தச் சம்பவம், "வேடுபறி" என்ற பெயரில் திருநாங்கூர் திவ்ய தேசங்களில் முக்கியமான இரு நகரங்களில் நடந்து வருகின்றது. தொலைக்காட்சியில் அதைப் பார்த்தப்போவே இருந்து இந்தக் கோயில்களுக்குப் போகணும்னு ஒரு ஆசை. அது செப்டெம்பரில் தான் முடிந்தது. ஆஹா, இறைவன் குதிரையில் ஏறித் திருமணக் கோலத்துடனே தன் துணைவியுடனும், பரிவாரங்களுடனும் வரும் கோலத்தின் அழகைச் சொல்வதா? நல்லதொரு வேட்டை கிடைச்சுருக்கு. இன்னிக்கு ரெண்டிலே ஒண்ணு பார்த்துடணும்னு திருமங்கை மன்னன் தயார் ஆகும் அழகைச் சொல்லுவதா?

திருமங்கை மன்னன் குதிரையிலே துரத்தத் துரத்த, இறைவனின் பயந்து ஓடும் அழகு! குதிரை அப்படியே தொலைக்காட்சிப்பெட்டியை உடைத்துக் கொண்டு வந்துவிடும்போல இருந்தது. அத்தனை வேகம்! நம்மாலே நேரிலே சென்று பார்க்க முடியாத குறையே இல்லாமல் தொலைக்காட்சியில் இதை எல்லாம் பார்க்க முடிகின்றது, கூட்டத்தில் சென்று நசுங்காமலும் பார்க்கலாம் இல்லையா?? என்றாலும் நேரில் செல்வது தனி ஆனந்தம் தான். ஆனால் பார்க்க முடியுமா சந்தேகமே!

சோழவளநாடு. அங்கே ஒரு சிற்றூர் திருக்குறையலூர் என்ற பெயரில். ஊரில் தான் குறை என வருதே தவிர, முற்றிலும் குறையற்ற அந்த ஊரில் ஆலிநாடர் என்ற ஆண் மகன் ஒருவர் சோழநாட்டின் படையில் இருந்தார். அவரின் மனைவி பெயர் வல்லித் திரு ஆகும். இருவருக்கும் பிள்ளைக்கலி தீர்க்கத் தோன்றினான் ஒரு பிள்ளை. இந்தப் பிள்ளை வளர்ந்து பெரிய மனிதன் ஆகி அந்த ஈசனையே ஆட்டி வைக்கப் போகின்றான் என அறியாத பெற்றோர் அவனுக்கு நீலன் எனப் பெயரிட்டனர். மகன் வளர்ந்தா. ஒரு குறையுமின்றி அனைத்துக் கலைகளும் கற்றுத் தேர்ந்தான், முக்கியமாய்ப் போர்க்கலை. மொழியறிவும், நூலறிவும் மிகுந்திருந்த அந்தப் பிள்ளைக்கு இயல்பாகவே கவி பாடும் திறனும் சேர்ந்து கொண்டது. சோழநாட்டு மன்னன் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒருவனைச் சும்மா விடலாமா என எண்ணிக் கொண்டு அவனைத் தன் படைத்தலைவனாகவும் ஆக்கிக் கொண்டான்.

மன்னன் சேவையிலும் குறையேதும் வைக்கவில்லை, குறையலூர்ப் பிள்ளை. மிகத் திறத்துடனேயும், வீரத்துடனேயும் இருந்து வந்தான். பகைவரை எளிதில் வென்ற அவனுக்கு மன்னன் "பரகாலன்" என்ற பட்டப் பெயரையும் அளித்துச் சிறப்பித்ததோடு அல்லாமல், அவன் பிறந்த அந்த நிலப் பகுதிக்குத்திருவாலிநாடு என்ற பெயரோடு அந்த நீலனையே சிற்றரசனாக்கி மகிழ்ந்தான். சிற்றரசன் ஆன நீலனும் மன்னன் சேவையில் மனமகிழ்ந்திருந்த நேரம். எல்லாமும் நன்றாக எத்தனை நாட்கள் இருக்கும்?? மாறுதல் ஒன்றைத் தவிர மாறுதலுக்கு உட்பட்டவையே அனைத்தும் அல்லவா??

மேலும் நீலன் "நாற்கவிப்பெருமாள்" என்பவரை வாதத்திலும் வென்று அவனுடைய நாற்கவி என்ற பட்டத்தையும் தனக்குரியதாக்கிக் கொண்டு விட்டானே?? இனி என்ன பாக்கி?? திருமணம் தான் பாக்கி. நீலனுக்கும் திருமண ஆசை வந்துவிட்டது. ஆனால் அவனுக்கு நிகரான பெண்ணரசி எங்கே பிறந்துள்ளாளோ?? சாதாரணப் பெண்ணை அவன் மணக்க முடியுமா?? தெய்வீக மங்கை ஆன சுமங்கலை என்பவள் ரிஷி ஒருவரைக் கேலி பேசியதால் கிடைத்த சாபத்தால் பூலோகப் பெண்ணாக வாழ வந்தாள். அவள் தாயின் கருவிலே தோன்றாமல் திருநாங்கூர் என்னும் ஊரில் உள்ள ஒரு அல்லித் தடாகத்தில் குழந்தையாய்த் தோன்றி இருந்தாள்.
அவளை மருத்துவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்தார். அல்லி மலரில் தோன்றிய அல்லியை விட மென்மையான மங்கைக்குக் குமுத வல்லி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார் மருத்துவர். குமுதவல்லியை ஒருநாள் பார்த்தான் திருவெள்ளக் குளம் வந்த நீலன். குமுதவல்லி தேவலோகப் பெண்ணாய் இருந்த போது வைகுந்தவாசனின் வைகுந்தத்தில் அவனருகில் சாமரம் வீசும் பணியைச் செய்து கொண்டிருந்தமையால் இப்போதும் அவளுக்குத் திருமாலின் மேல் அளவு கடந்த பற்று இயல்பாகவே இருந்து வந்தது.

குமுதவல்லியைக் கண்டதும் அவள் மீது கரைகாணாக் காதல் கொண்ட திருமங்கை மன்னனோ மணந்தால் குமுதவல்லி, இல்லையே திருமணம் வேண்டாம் எனச் சொல்ல, குமுதவல்லியின் வளர்ப்புத் தந்தையிடம் பெண் கேட்டுச் சென்றனர். குமுதவல்லியோ, தான் தீவிர வைணவர் ஒருவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாயும், பன்னிரு திருமண் தரித்து, வைணவ இலச்சினையும் பெற்று, வந்தால் திருமணம் செய்து கொள்வதாய் நிபந்தனை விதிக்க, நீலனும் அதற்குக் கட்டுப்பட்டு திருநரையூர் நம்பியிடம் வைணவ இலச்சினைகள் பெற்று, பன்னிரு திருமண்ணும் தரித்து வைணவக் கோலத்தில் வர, குமுதவல்லியோ, தான் மேற்கொண்டிருக்கும் நோன்பு முடிய ஓராண்டு ஆகும் எனவும், அதுவரை தினமும் ஆயிரம் பேருக்கு உணவு அளிக்கும்படியும் நீலனிடம் சொல்ல நீலன் குமுதவல்லியின் மீதுள்ள மிதமிஞ்சிய ஆசையில் அதற்கும் கட்டுப் படுகின்றான். விருந்துகள் ஆரம்பித்தன. ஒவ்வொரு நாளும் நீலனின் அரண்மனையில் ஆயிரம் வைணவர்களுக்கு விருந்து.

குமுதவல்லியின் ஆசை திருமங்கை மன்னனின் கண்களை மறைக்கின்றது. கொஞ்சம் கொஞ்சமாய்ப் பணம் தீர்ந்து கஜானா காலியாகின்றது. மன்னன் ஆனாலும் விருந்தை நிறுத்தவில்லை. ஓராண்டு முடிவதற்குள்ளேயே அனைத்தும் காலி! ஆஹா, குமுதவல்லி என்ன சொல்லுவாளோ, தெரியலையே?? கப்பமும் கட்டவில்லை, மன்னனோ அழைக்கின்றான், என்ன காரணம்னு? இப்போ கப்பத்தைக் கட்டறதா? இல்லை, ஆயிரம் பேருக்கு விருந்துக்கு ஏற்பாடு பண்ணறதா?? பணத்துக்கு எங்கே போகிறது? மன்னன் யோசித்தான். ஒரு முடிவுக்கு வந்தான். அந்த முடிவு! கொள்ளை அடிப்பது! இன்னும் சொல்லப் போனால் வழிப்பறிக் கொள்ளை அடிப்பது. வேறே வழியே இல்லை!

Monday, November 17, 2008

கோடி செம்பொன் போனால் என்ன கிளியே, குறுநகை போதுமடி!

"முருகா" இந்த மூன்று சொற்களுமே உன்மத்தம் பிடிக்க வைத்து ஆடிப் பாடி, அழுது, அரற்றி, சிரித்து மகிழ வைக்கும் சொல்லாகும். வாயினால் பாடியும், மனதினால் சிந்தித்தும் முருகா என அழைத்தும், முத்துக்குமரா எனக் கொஞ்சியும் அந்தக் கந்தனை வணங்குகின்றோம். அதுவும் கந்தனுக்கு என உள்ள சஷ்டி விரதத்தை அனுசரிப்பவர்களுக்கு அவன் பெயர் ஒன்றே பித்துப் பிடித்து ஆட வைக்கும். கந்தனுக்கு அரோஹரா, வேலனுக்கு அரோஹரா, என்று கூவிக் கொண்டு காவடிகளைத் தோளில் சுமந்து செல்லும் பக்தர் கூட்டத்தில் அறிஞர்களும் உண்டு, படிக்காத பாமரர்களும் உண்டு. ஆத்மார்த்தமாக இறை இன்பத்தை அனுபவித்தால் அந்த சுகத்தை விட மற்றொரு சுகமும் உண்டோ என்றே தோன்றும் அல்லவா?? இந்த முருகா என்ற மூன்றெழுத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? பார்ப்போமா???

"மு" என்ற சொல் முகுந்தனாகிய மஹாவிஷ்ணுவைக் குறிக்கின்றது. "ரு" என்ற சொல்லானது ருத்ரனைக் குறிக்கின்றது. "கா" என்ற சொல்லோ கமலத்தில் வாசம் செய்யும் பிரம்மனைக் குறிக்கின்றது. இம்ம்மூவரையும் ஒருங்கிணைக்கும் சொல்லே "முருகா" என்று ஆகின்றது. இந்த முருகனுக்கு ஆறு முகங்கள். ஏற்கெனவே ஆறு திசைகளைக் குறிக்கும் எனப் பார்த்துவிட்டோம். இது தவிர முருகு என்றால் தமிழ், தமிழ் என்றால் முருகு என்றும் சொல்வதுண்டே? அந்த ஆறுமுகனின் ஆறுமுகங்களே தமிழ் எழுத்தில் உள்ள வல்லினம், மெல்லினம், இடையினம் என்னும் ஒவ்வொரு இனத்திலும் உள்ள ஆறு எழுத்துக்கள் ஆகின்றன. "அ" முதல் "ஒள" வரை உள்ள பனிரண்டு எழுத்துக்கள் ஆறுமுகனின் பன்னிரு திருக்கரங்களும், தோள்களும் ஆகின்றன. "க" முதல் "ன" வரையில் உள்ள பதினெட்டு எழுத்துக்கள் அவனின் பதினெட்டுக் கண்கள் ஆகின. ஆயுத எழுத்தான ஃ என்னும் எழுத்தோ கந்தனின் முக்கிய ஆயுதமான வேலாயுதத்தைக் குறிக்கின்றது.

கந்தனின் புகழ் பாடும் திருப்புகழைப் பாடினாலோ வாய் மணக்கும் என்கின்றனர் முருகனடியார்கள். திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும், அறிவு தெளியும்,மனம் அமைதி அடையும். சந்தேகமே இல்லை. பழமுதிர்சோலையில் ஒளவைக்கிழவிக்குப் பழத்தைக் கொடுத்துச் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டு அவளுக்கு ஞானத்தைப் போதித்தான் கந்தவேள். அகத்தியருக்கே கந்தனே தமிழ் ஆசான். கந்தனிடம் இருந்தே செந்தமிழைக் கற்ற பெரும் பாக்கியவான் அகத்தியர். கந்தனுக்கு முகங்கள் ஆறு இருப்பதைப் போல அவனுக்கு உரிய திதியும் ஆறாவது நாளான சஷ்டி திதி ஆகும். இந்த சஷ்டி திதியில் கந்தனை நினைத்து விரதம் இருப்பவர்க்குக் கேட்டவர்க்குக் கேட்டவற்றைக் கொடுப்பான் கந்தவேள்.

கந்தன் என்றால் திரட்டப் பட்டவன் என்றும் பொருள் அல்லவா?? கடவுளர் அனைவரின் சக்தியும் ஒன்று சேர்ந்து திரட்டப் பட்டவனே கந்தன், உயிர்களுக்குப் பற்றுக் கோடாகக் கையில் தண்டத்தை ஏந்திப் பழநி மலையில் தண்டாயுதபாணியாக நிற்கின்றான். அவன் வேலோ நம்மைச் சுற்றி வந்து அரண்போல் காக்கின்றது. "குத்து, குத்து கூர் வடிவேலால்," என்று சொல்லிக் கொண்டே சென்றோமானால் வழித்துணையாக அந்த வேலாயுதமே நம்மைக் காக்கின்றது. இந்த வீரவேல் சூர பதுமனின் அகந்தையை அழித்ததே ஒழிய அவனை அழிக்கவில்லை. கந்தன் என்னும் கருணைப் பெருங்கடலுள் அவன் இணைய உறுதுணையாக நின்ற சக்திவேல் அது. அகந்தை நிறைந்த சூரனின் அசுர உடல் நீங்கி ஞானம் பெற்று சேவலாகவும், மயிலாகவும் மாற உறுதுணையாக இருந்த ஞானவேல் அது.
சேவல் காலையில் முதலில் கூவும். அதுவும் எப்படிக் கூவுகின்றது? கொக்கரக்கோ எனக் கூவுகின்றது. இந்த சப்தமே பிரணவ வடிவாக ஓங்கார நாதமாக ஆகின்றது. மயிலோ ஆடும் மயில், அது பிந்து வடிவாக இருக்கின்றது. இந்த சேவலாகிய நாதமும், மயிலாகிய பிந்துவும் சேர்ந்து தான் கலையாகி நின்ற சக்திவேலைக் கையில் வைத்திருக்கும் முருகவேள். அதனாலேயே அருணகிரி நாதர் "நாத பிந்து கலாதி நமோ நம" என்று படினார். மயில் தோகை விரித்தால் தெரிவது ஓங்கார ஸ்வரூபமே! இது நம் கண்ணுக்குத் தெரியும் உருவம் ஆகின்றது. ஆனால் சேவலோ கண்ணுக்குத் தெரியாமல் உணரும் வண்ணம் "கொக்கரக்கோ" எனக் கூவிப் பிரணவத்தை அருவ ரூபமாய் உணர்த்துகின்றது. அது மட்டுமா??

சேவல் ஒளியை நாடும். சூரியன் வரும் நேரத்தைக் கண்டு மகிழும். ஆனந்தம் பொங்கும். கூவுகின்றது. மயிலோ எனில் கார்மேகத்தைக் கண்டாலேயே மகிழ்கின்றது. இருளே அதற்குப் பிடிக்கின்றது. இந்த இரண்டுக்கும் நடுவில் உருவாயும் இல்லாமல், அருவாயும் இல்லாமல், அதே போல் ஒளியாயும் இல்லாமல், இருளாயும் இல்லாமல், உள்ளதென்றும் இல்லாமல், இல்லை என்றும் இல்லாமல் இருப்பவனே கந்தவேள். இந்தக் கந்தனால் இந்திராணியின் மாங்கல்யம் காக்கப் படுகின்றது, இந்திரனுக்கு இந்திர பதவி திரும்பக் கிடைக்கின்றது. கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் மாங்கல்ய பலமும் கிடைக்கும். ஆறுமுகனை வேண்டினால் கிடைக்காதது எது? சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழியே உண்டல்லவா?? சஷ்டியில் விரதம் இருந்து கந்தனை நினைந்து வழிபட்டால் பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைப் பேறு உண்டாகும் என்று சொல்வதுண்டு. அகப்பை என்பது இங்கே கருப்பையைக் குறிக்கின்றது. இது தான் இன்று மருவி சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்னு ஏதோ சாப்பாட்டைக் குறிக்கும் புதுமொழியாக மாறிவிட்டது. காலம் செய்த கோலம் இது.
,

Friday, November 14, 2008

ஊனும் உருகுதடி கிளியே, உன்மத்தமாகுதடி!!

“என்ன, யானையா? தாத்தா, இருங்க, இருங்க, போயிடாதீங்க! எனக்கு யானையைக் கண்டால் பயம்!” என்று வள்ளி நடுக்கத்துடன் ஓடி வந்து கிழவரைக் கட்டிக் கொள்கின்றாள். மனதில் சந்தேகம் பூக்கின்றது வள்ளிக்கு. கிழவர் மாதிரி இல்லையே கையும், காலும், என்று நினைத்துக் கொள்கின்றாள். ஆனாலும் யானை பயம் மனதில் முந்துகின்றது. கிழவருக்கு சந்தோஷம், “ வள்ளி, ஏமாந்தாயா? ஏச்சுப்புட்டேனே, வள்ளி, ஏச்சுப் புட்டேனே!” என்று பாடி, ஆட, இவர் கிழவர் இல்லை என வள்ளியின் மனதில் உறுதிப் படுகின்றது. “சரி, தண்ணீர் தானே, தாத்தா, வாங்க , தண்ணீர் தருகின்றேன்”என்று அருகே இருந்த சுனைக்கு அழைத்துப் போய்க் கிழவரைச் சுனையில் தள்ளி விடுகின்றாள். பின் கை கொட்டிச் சிரிக்கின்றாள் வள்ளி. “ஏச்சுப்புட்டேனே, தாத்தா, ஏச்சுப்புட்டேனே!” என்று பாடி ஆடுகின்றாள் வள்ளி. “அப்படியா, வள்ளி, அதோ பார்!’ என்கின்றார் கிழவர். அங்கே வந்தது ஒரு யானை பிளிறிக் கொண்டு. வள்ளிக்கு நடுக்கம் அதிகம் ஆகி அவளும் சுனைக்குள் இறங்கிக் கிழவரைக் கட்டிக் கொண்டாள். யானை போகவே இல்லை. அங்கேயே பிடிவாதமாய் நிற்கின்றது.

“ஆனையும் குதிக்குதல்லோ
அசட்டாளம் பண்ணுதல்லோ
சண்டாளப் பண்டாரா- என்னை
சதி மோசம் செய்தீரே
ஆனையை விலக்கி விடும் – நீர்
ஆளையேக் கலக்குதல்லோ!”

என்று கிழவரிடம் யானையைக் கூப்பிடும்படியும், விரட்டும்படியும் வள்ளி கெஞ்சுகின்றாள். கிழவர் கெஞ்சினால் மிஞ்சுகின்றார், மிஞ்சினால் கெஞ்சுகின்றார். இப்போது கிழவரின் முறையாச்சே. வள்ளி சரியாக மாட்டிக் கொண்டாள். “வள்ளி, என் அருமை வள்ளி, ஆசை வள்ளி, நான் உனக்கு என்ன வேண்டும், அதைச் சொல்லு, என்னைக் கல்யாணம் செய்துக்குவியா? சரினு சொல்லு! ஆனை போகும்!” என்று சொல்கின்றார் கிழவர். வள்ளி மறுக்கின்றாள். “நீர் எனக்கு மாமன், நான் உமது மருமகள்” என்று வள்ளி சொல்ல, கிழவர் மறுக்கின்றார். யானை போக மறுக்கின்றது. யானையை எப்படியாவது துரத்தினால் போதும் என நினைத்த வள்ளியோ,

“ஆகட்டும், ஆகட்டும் தம்புரானே
ஆனய விலக்கிவிடு
நீரெனக்குப் பாட்டாவாம்
நானுனக்குப் பேத்தியாம்”

என்று சொல்கின்றாள் இம்முறை. ஆனால் கிழவர் இதற்கும் மசியவில்லையே. ம்ஹூம், அழுத்தமாய் “வள்ளி, நீ என்னைக் கல்யாணம் செய்துக்கறேன் என்று சொல்லு, ஆனை போயிடும்” என்று சொல்கின்றார் கிழவர். அரை மனதோடு வள்ளி சம்மதிக்கின்றாள். அப்போது நம்பிராஜனுக்குத் தினைப்புலத்தில் ஒரு கிழவர் வந்து வள்ளியைத் துன்புறுத்துகின்றான் எனத் தகவல் கிட்ட, அவன் வள்ளியைப் பார்க்க விரைந்து வந்தான் தன் மகன்கள் அனைவருடனும்.

அவனும், அவன் கூட்டத்தாரும் வருவதைக் கண்டதும் “ஆஹா, பிழைத்தோம் “ என நினைத்த வள்ளி, கிழவர் இருந்த பக்கம் திரும்ப அங்கே கிழவரைக் காணவில்லை. புதியதாய் ஒரு வேங்கை மரம் நிற்கின்றது. வள்ளிக்கு அப்போது தான் இதிலே ஏதோ விஷயம் இருக்கிறது எனப் புரிய, என்ன செய்யலாம் என யோசிக்கின்றாள். நம்பிராஜன் வந்து பார்த்துவிட்டு, “என்ன இது? புதுசாய் ஒரு வேங்கை மரம்? வெட்டுங்கள் இதை! “ என்று சொல்ல, அதை வெட்ட ஆரம்பிக்க, வள்ளியோ, வேண்டாம், வேண்டாம் என அலறிக் கொண்டே அந்த வேங்கை மரத்தைக் கட்டிக் கொள்கின்றாள். ஆறுமுகன் தன் ஆறுமுகங்களோடும் தோன்றி வள்ளியை ஆட்கொள்கின்றான். நம்பிராஜன் திகைத்துப் போய் நிற்கின்றான்.

எத்தனையோ தெய்வத் திருமணங்கள் இருந்தாலும் இந்த வள்ளி திருமணக் கதை அனைவரையும் கவர்ந்தாப் போல் வேறு ஒன்று கவராது. அனைவருக்கும் பிடித்த கதையாகும் இது. நான் பள்ளியில் படிக்கும்போது மார்கழி மாதப் பஜனை வகுப்பில் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜனின் மேற்பார்வையில் நடக்கும் பக்தி கலா நிகழ்ச்சியில் வள்ளி கல்யாணம் கட்டாயம் இடம் பெறும் ஒன்றாகும். பல முறைகள், பல வருடங்கள் தொடர்ந்து பார்த்திருக்கின்றேன். என்றாலும் அலுக்காத ஒன்று. பஜனை வகுப்பில் படிக்கும் மாணவிகளே பாத்திரங்களை ஏற்று ஆடிப் பாடி நடிப்பார்கள். ஒரு மாதத்துக்கும் மேலே ஒத்திகை நடக்கும். சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தான் நிகழ்ச்சிகள் நடக்கும். அரையாண்டுத் தேர்வுக்கும் படித்துக் கொண்டு, இம்மாதிரியான நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டு, காலையில் சீக்கிரமாய் எழுந்து பஜனைக்கும் போய்க் கொண்டு, அம்மாதிரியான ஒரு வாழ்க்கை இப்போ நினைச்சாலும் கிடைக்குமா சந்தேகம் தான். காலையிலே 4 மணிக்கெல்லாம் மதனகோபால ஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும் பஜனை, 4 மாசி வீதிகளையும் சுற்றி ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேரும். அதுக்கப்புறமாய்ப் பள்ளிக்குப் போவோம். அதிலும் ஆண்டாளின் வாரணமாயிரம் பாடலுக்கும், இந்த வள்ளி திருமணம் நடக்கும் தினத்திலும் கூட்டம் அதிகமாய் வரும். முன்னாலேயே போய் இடம் பிடிப்போம். இப்போ பொதிகையின் தயவில் சில நிகழ்ச்சிகள் பார்க்க முடியுது உட்கார்ந்த இடத்திலேயே! (((

Thursday, November 13, 2008

வள்ளி கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்!

வள்ளி தினைப்புலம் காக்க வந்துவிட்டாள். ஏற்கெனவே வள்ளியின் திருமணம் குறித்து அவளின் வளர்ப்புத் தந்தையான நம்பிராஜனும், தாயான மோகினியும் கவலையுற்றிருந்தார்கள். ஆனால் நாரத முனியோ அவள் குறிஞ்சிக் கடவுளான முருகனுக்கே உரியவள் எனச் சொல்லி இருந்தார். முருகனாவது, வள்ளியை வந்து மணப்பதாவது! என்ன செய்வது என்றறியாமல் இருந்தனர் நம்பிராஜனும், மோகினியும். இந்நிலையில் வள்ளி தினப்புலம் காக்கச் சென்றாள். அங்கே தோழிகள் புடை சூழ “ஆலோலம்” பாடினாள். ஆடினாள். அப்போது தோழிகள் ஓடி வந்து வள்ளியிடம் வளைச் செட்டி வந்திருப்பதாய்க் கூற , அவனை அழைத்து வருகின்றனர். தோழியர் அழைத்து வந்த வளைச் செட்டியைப் பார்த்து வள்ளி, இவன் என்ன சிறு பிள்ளையாக இருக்கின்றானே என மனதிற்குள் எண்ணினாள். வள்ளியின் கை பிடித்து வளை போட செட்டி நெருங்கியதும், வள்ளி விதிர் விதிர்த்துப் போகின்றாள். அந்த ஆறுமுகன் பிடிக்க வேண்டிய கை இது, ஒரு வளைச்செட்டி பிடிக்கலாமோ என மயங்குகின்றாள்.

வளைச் செட்டியைத் துரத்துகின்றாள் வள்ளி. ஏளனமாய்ப் பேசுகின்றாள் அவனைப் பார்த்து. அவமானப் படுத்தித் திருப்பி அனுப்புகின்றாள். “ஏ! வளைச்செட்டி,
“ஆருமற்ற வள்ளி நாம்
அருந்தினையைக் காக்கப் போறேன்
வாசலிட்டுப் போறவளுக்கு
வளசலு எனக்கெதுக்கு?”

என்று சொல்லி அவனை விரட்டுகின்றாள். வள்ளியின் அன்பின் ஆழம் புரிகின்றது கந்தனுக்கு. ஆம் வளைச் செட்டி வேடத்தில் வந்து வள்ளியைச் சோதனை செய்தது அந்தக் கந்தனே ஆகும். தினைப்புலம் காக்கும் போது வள்ளி தினைக் கொத்த வரும் கிளி, மைனா, குருவி, அன்னங்கள், காக்கைகள் போன்றவற்றை விரட்டுகின்றாள்.

ஆலோலம், ஆலோலம், ஆலோலங்கடி, சோஓஓஓஓஓஓ”
ஆலோலங்கடி சோஓஓஓஓஓ
ஆயலோ கிளி ஆயலோ
அன்னங்களே, வாத்துகளே
போவென்று விரட்டினாலும்
குந்துகெட்ட வெள்ளக்கிளி
ஆனாலும் போவதில்லை அடி
ஆலோலம், ஆலோலம், ஆலோலங்கடி சோஓஓஓஓ”

எனப் பாடிப் பறவைகளை விரட்டுகின்றாள் வள்ளி. அப்போது அங்கே ஒரு தள்ளாத வயது சென்ற கிழவர் வருகின்றார். கிழவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கின்றது. உடல் மட்டுமில்லாமல் அனைத்து அவயங்களும் ஆடுகின்றன. கையில் பிடித்திருந்த தடியும் கையில் பிடிக்க முடியாமல் தடுமாற்றத்தோடு வந்து கொண்டிருந்தார் கிழவர். தோழிகள் பார்த்தனர். கிழவரை மெதுவாய்க் கை பிடித்து அழைத்துச் சென்று வள்ளியிடம் கொண்டு சேர்த்தனர்.

கந்தன் நினைப்பில் இருந்த வள்ளி கிழவரைக் கொஞ்சம் எரிச்சலுடனேயே பார்த்தாள். என்னவென்று கேட்க, பாவம் தள்ளாத கிழவர், பசி போலிருக்கிறது, கை, கால் நடுக்கமாய் இருக்கிறது, அதான் இங்கே கொண்டு வந்து சேர்த்தோம் என்றனர் தோழிகள். சரி அந்தத் தினைமாவைக் கொஞ்சம் சாப்பிடக் கொடுங்கள் என்று தோழியரிடம் ஆணை இடுகின்றாள் வள்ளி. “வள்ளி, வள்ளி, நீ உன் கையால் கொடேன்!” என்று ஆசையுடன் கிழவர் கேட்க, கிழவருக்கு ஆசையைப் பாரேன், என்ற வள்ளிக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்து விடுகின்றது.
“கல்லை உரலாக்கி
கருங்கம்பை ஒலக்கையாக்கி
தேக்கிலையை அளவாக்கி
தெள்ளி விடு வள்ளி
தினைமாவை அள்ளி”

சரி, கிழவர் தானே ஆசையை நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டே, தேனும், தினைமாவும் கலந்து கிழவருக்குக் கொடுக்கின்றாள் வள்ளி. ஒரு வாய் போடவில்லை, கிழவருக்கு, விக்கல் எடுத்து விடுகின்றது. பயத்தில் வள்ளியைக் கட்டிக் கொள்கின்றார் கிழவர். வள்ளிக்குக் கோபம் வந்துவிடுகின்றது.

“தண்ணீர் தவிக்குதடி வள்ளி” என்று தண்ணீர் கேட்கின்றார் கிழவர். வள்ளி மறுக்க, கிழவர் யோசிக்கின்றார். இவள் எதற்கும் பயப்படவே மாட்டேன் என்று பிடிவாதமாய் இருக்கின்றாளே என நினைத்த வண்ணம், “வள்ளி, வள்ளி, இந்தக் காட்டு யானை இருக்கே!” என்று ஆரம்பித்தார்.

Wednesday, November 12, 2008

தேவகுஞ்சரி பாகா நமோ நம!

கோபி வள்ளி திருமணத்தைத் தான் எழுதச் சொல்லிக் கேட்டிருக்கார். ஆனால் நான் முதலில் தெய்வானை திருமணத்தை எழுதிட்டே அப்புறமா வள்ளி திருமணத்துக்கு வரலாம் என்று இருக்கிறேன். என்ன இது?? இறைவனுக்குத் திருமணம்ங்கறாங்க? அதுவும் இரண்டு திருமணமாமே? அப்படினு பேசிக்கிறவங்களுக்கு எல்லாம் இது இறை தத்துவத்தைப் பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிமைப் படுத்திச் சொல்வதற்கென்றே ஏற்பட்ட ஒன்று. திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று இறைவன் கேட்கவில்லை. ஆனாலும் நாம் தானே செய்து வைக்கின்றோம். அவன் திருமணம் செய்து கொண்டதாய்ப் பாடி, ஆடியும் மகிழ்கின்றோம் இல்லையா? ஆன்மாக்கள் இறைவனைச் சென்றடைவது ஒன்றே வாழ்க்கைத் தத்துவம். என்றாலும் எப்போதும் இப்படித் தத்துவார்த்தமாய் அனைவராலும் சிந்திக்க முடியாது. அப்படிப் பட்டவர்களுக்கென இம்மாதிரி எளிய சம்பிரதாயங்கள், வழக்கங்கள் மூலம் இறைவனைச் சென்றடையும் வழியைக் காட்டுவதே இந்த அவசர யுகத்திற்கென ஏற்பட்டது ஆகும்.

இங்கே தெய்வானை முருகனுக்கு இடப்புறமாய் இருக்கும் இடகலைச் சக்தியாவாள். வள்ளியோ வலப்பக்கம் இருக்கும் பிங்கலை சக்தி. இந்த இரு சக்திகளும் நம் உடலில் எவ்வாறு இயங்குகின்றதோ அவ்வாறே தெய்வானையும், வள்ளியும் முருகனோடு இணைந்த ஐக்கியமாக நமக்கு யோகத்தையும், அருளையும் போதிக்கின்றனர். நம் உடலின் இரு சுவாசங்களே, ஆறுமுகனின் இரு மனைவியராக உணரப் படுகின்றனர். இந்த சுவாசம் இல்லையேல் நாம் எங்கே? ஓகே, ஓகே, கோபி, இதோ கதை! தத்துவத்தை நிறுத்திக்கிறேன். இப்போது இவர்கள் எவ்வாறு தோன்றினார்கள் என்ற வழிவழியாக வரும் புராணக் கதையைப் பார்ப்போமா?
************************************************************************************

தில்லைக் கூத்தனின் நடனத்தைக் கண்ட மஹாவிஷ்ணுவின் ஆனந்தப் பரவச நிலையில் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரிலிருந்து தோன்றிய இரு மங்கையரே அமிர்தவல்லி, சுந்தரவல்லி. இருவரும் கந்தனை மணக்க விரும்ப, கந்தனோ, தன் அவதார நோக்கம் நிறைவேறும் வரையில் திருமணம் இல்லை எனவும் அது வரையில் இருவரையும், ஒருத்தியை விண்ணிலும், மற்றொருத்தியை மண்ணிலும் பிறந்து தவத்தில் ஈடுபடும்படியும் சொல்லுகின்றான். விண்ணில் பிறந்த குழந்தையான தெய்வானையை தேவேந்திரனின் யானையான ஐராவதம் வளர்த்து வருகின்றது. யானைக் கூட்டத்துக்கே இயல்பாக உள்ள பாச உணர்ச்சியால், தாயில்லாக் குழந்தையான தெய்வானை யானையால் பாசத்துடன் வளர்க்கப் பட்டு தெய்வானை ஆகின்றாள். முருகனை இப்பிறவியிலும் மறவாது மணம் புரியவேண்டி தவம் இருக்கின்றாள்.

அவள் தவம் நிறைவேற வேண்டியும், தன் அன்பு மகளின் மனோரதம் நிறைவேறவும், தேவர்களுக்குச் சேனாபதியாக வந்த தேவசேனாபதிக்குத் தன் மகளைத் தர நிச்சயிக்கின்றான், தேவேந்திரன். திருமணம் நிச்சயிக்கப் பட்டு வேத முறைப்படி, வேள்விச் சடங்குகளைப் பிரம்மா நிறைவேற்ற, தேவேந்திரன் தாரை வார்த்துத் தர முறைப்ப்படி நடக்கின்றது. தவமிருந்த தெய்வானையாகிய ஆன்மா இறையைத் தேடி மண்ணுக்குவந்து மண்ணுலகில் திருப்பரங்குன்றத்தில் இறையோடு ஒன்றாய்க் கலப்பதே தேவ குஞ்சரியின் திருமணம் ஆகும். விண்ணுலக அருள் சக்தியான தெய்வானை முக்தியை முருகன் அருளுகின்றான் என்பதை விளக்க ஏற்பட்டதே தெய்வானை திருமணமாம் திருப்பரங்குன்றம் என ஏற்பட்டது.

அடுத்து முருகன் தமிழ்க் குறத்தி ஆன வள்ளியைத் திருமணம் செய்து கொண்டது. வள்ளியம்மையை இச்சா சக்தி என்பார்கள். இவளை முருகன் இச்சை கொண்டானா அல்லது இவள் முருகனிடம் இச்சை கொண்டாளா என்பதை அறிதல் கடினம். ஆனால் தானே தமிழ், தமிழே தானாகிய கந்தன் ஒரு பெண்ணை மணந்தது போதாது என நினைத்து, மற்றொரு பெண்ணையும் மணக்க நினைத்தான். அதுவும் ஒரு வேடுவப் பெண்ணை. எப்படித் திருமணம் புரிந்தான்? தெய்வானைக்குத் தெரியாமல் களவு மணம் புரிகின்றான் இவளை. ஆஹா, தெய்வானை சும்மாவா இருந்தாள்??? முதலில் வள்ளி பிறந்ததைப் பார்ப்போமா??
*************************************************************************************

வள்ளி திருமணம் பற்றி எழுதும்போது இயல்பாகவே காவடிச் சிந்து நினைப்பிலே வருது.அதுவும் விஜய் சிவா குரலிலே கேட்பதென்றால் தனி சுகமே. ஊனும் உருகும், உள்ளம் குழையும் வண்ணம் அற்புதமான குரலிலே பாடுவார். இந்தப் பாடல்களுக்கென்றே அவர் குரல் அத்தனை இனிமையா, அல்லது பாடல் இனிமையானு தெரியாத அளவுக்கு உணர்வுகள் ஒத்துப் போகும்.
வள்ளிதிருமணம் பற்றிய நாட்டுப் பாடல்கள் பலவற்றையும் அதிகம் பாடி வந்திருப்பது குமரி மாவட்டத்திலே உள்ள மக்களே ஆகும்.ஆனால் அவர்களில் பலரும் இன்று கூண்டோடு மாறி விட்டதால் அவர்களால் அரங்கேற்றப் பட்ட களியலாட்டக்கலையின் முக்கிய அம்சம் ஆன வள்ளி திருமணம், வள்ளியடவு போன்ற பாடல்களை ஆய்வாளர்கள் மிகவும் சிரமப் பட்டே கண்டெடுத்திருக்கின்றனர். கேரள எல்லைக் கிராமங்களில் ஒரு சில இடங்களில் குறத்திக்களி என்ற பெயரில் வழங்கும் சில பாடல்களில் மலையாளமும் கலந்து இருப்பதாகவும் சொல்கின்றனர். நமக்கெல்லாம் தெரிந்த கதையான வள்ளி கதையில் நம்பிராஜனின் மகளாய்ப் பிறக்கின்றாள் என்று ஒரு கதையும், நம்பிராஜன் கண்டெடுக்கின்றான் என இன்னொரு வகையும் உண்டு. ஆனால் இந்தக் குமரி மாவட்டக் கதைப் பாடல்களில் சொல்லுவதே வேறே. அவங்க சொல்லுவது என்னவென்றால்.ரிஷ்ய சிருங்கருக்கும், மற்றொரு பெண் மான் உருவில் இருந்த பெண்ணிற்கும் பிறந்த குழந்தையே வள்ளி. நம்பிராஜன் வேளி மலை அரசன். இவன் மனைவி மோகினி. இவன் வேட்டைக்குச் செல்லும்போது வள்ளிக் கிழங்குகள் சூழ்ந்த தோட்டத்தில் இந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த்து வருகின்றான். இந்தக் குழந்தையைச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகின்றனர் நம்பிராஜன் குடும்பத்தில். குழந்தை அழுதால் பாடும் பாட்டெனச் சொல்லுவது,

"மானே நீ போட்ட சத்தம்
மலக்குறவன் ஓடி வந்து
ஓடி வந்து வள்ளி தனை
வளைத்துமே எடுத்தானே
வளைத்துமே எடுத்தானே
பெண்பிள்ளை பிள்ளையல்லோ
பிள்ளையே ஆயிப்போச்சு
ஆமணக்கு தண்டு வெட்டி
அது நிறையத் தேனடச்சு
தேனடச்சு
அமுது பெறும் நேரமெல்லாம்
அமுது பசி அடக்கிவிட்டு
குச்சு போய்ச் சேர்ந்தார்கள்."

என்ற இவ்வாறு ஓடி வந்து வள்ளியாகிய குழந்தையின் அழுகையை அடக்குகின்றார்களாம், குறவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து. நம்பிராஜனுக்கு மகன்கள் நிறையப் பேர். அனைவரும் வள்ளியைத் தங்கள் சொந்த சகோதரி போலவே எண்ணிப் பாசமுடனும், நேசமுடனும் வளர்த்து வந்தார்கள். தினைப்புலத்தில் தினை அறுவடைக்குக் காத்து நின்றது. அங்கே பட்சிகள் வந்து செய்யும் இம்சை தாங்க முடியவில்லை. தன் மருமகள்கள் ஒவ்வொருவரையும் வேண்டுகின்றாள் நம்பிராஜன் மனைவியான மோகினி. ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு காரணம். மறுக்கின்றார்கள். ஒருத்திக்குக் குழந்தைக்குப் பால் கொடுக்கணும், ஒருத்திக்குக் குழந்தை பிறக்கப் போகின்றது. இன்னொருத்திக்குத் தலை நோவு. இப்படிச் சொல்ல, அங்கே மெல்ல, மெல்ல மாமியார், மருமகள் சண்டை உதயம் ஆகும்போல் சூழ்நிலை உருவெடுக்கின்றது.

பார்த்தாள் வள்ளி, தானே தினைப்புலம் காவல்காப்பதாய்ச் சொல்லிக் கிளம்புகின்றாள். பதறுகின்றாள் மோகினி. ஆஹா, பொன்னைப் போல் போற்றி வளர்த்த பெண்ணாயிற்றே. எப்படி அனுப்புவது?? தயங்கினாள் மோகினி. அன்னையைத் தேற்றி விட்டுப் புறப்படுகின்றாள் வள்ளி. கூடவே துணைக்குத் தோழிப் பெண்களை அனுப்பினாள் மோகினி. தோழிகள் புடை சூழ தினைப்புலம் வந்து, அங்கே மரத்தின் உச்சியில் தங்குவதற்குக் கட்டி இருக்கும் இடத்தில் தங்கிக் கொண்டு, கையில் ஒரு குச்சியையும் வைத்துக் கொண்டு வரும் பட்சிகளை விரட்டுகின்றாள் வள்ளி..
ஆலோலம், ஆலோலம், ஆலோலம் என்று பாடுகின்றாள் வள்ளி. அவள் ஆலோல சப்தம் கேட்டுப் பட்சிகள் பறந்தனவா? அவளைத் தூக்கிச் செல்ல கந்த பட்சி பறந்து வந்ததா??

நாட்டுப் பாடல்கள் உதவி= கலைமகள் தீபாவளி மலர், கல்கி தீபாவளி மலர்கள்.

Sunday, November 09, 2008

காண்பதெல்லாம் அவன் கண் விழியாலே!

சமீவனத்து மக்கள் அனைவரும் அந்தச் சிலையை வந்து கண்டனர். பிரமித்துப் போனார்கள். அதன் அழகைப் பாராட்டுவதா? உயிரோட்டத்தைப் பார்த்து வியந்து நிற்பதா? எதுவும் புரியாத மக்கள் சிற்பியைப் பார்த்து இன்னும் திகைத்தனர். என்ன?? கண்கள் தெரியாத ஒருவராலா இது வடிக்கப் பட்டது? கண்கள் இல்லாதவராலேயே இத்தனை அழகும், ஜீவனும் நிரம்பிய சிற்பத்தைச் செதுக்க முடிந்ததா?? ஆயிரம் கண்கள் கொண்டவராலே கூட இத்தனை அழகுச் சிலையை, உயிருள்ள முருகனைச் செதுக்க முடியுமா?? இதைப் பார்க்க, பார்த்து அனுபவிக்கக் கண் கோடி வேண்டும் அல்லவா?? அடடா, இத்தனை அழகு வாய்ந்த, பெரும் சக்தி வாய்ந்த முருகனை நம்ம ஊர்க் கோயிலில் அல்லவா வைக்கவேண்டும்? மக்கள் ஒரு முடிவுக்கு வந்து, சிற்பியைப் பார்த்து, "ஐயா, எங்கள் ஊர்க் கோயிலில் உள்ள பிரம்மபுரீஸ்வரருக்குப் புத்திரன் இல்லை. இந்த முருகனை அவருக்குப் புத்திரனாக்குங்கள் ஐயா, உங்களுக்குக் கோடி புண்ணியம். தயை செய்யுங்கள்." என்று இறைஞ்சுகின்றனர்.

சில்பா சிற்பிக்கு ஆனந்தம் எல்லை மீறியது. ஆஹா, இங்கேயும் ஒரு கோயில், அங்கேயும் இந்தச் சிலையைப் பிரதிஷ்டை செய்யத் தயாராய் மக்கள். நல்லவேளை தான். என்று நினைத்துக் கொண்டு, "சீக்கிரமாய் ஒரு நல்ல நாள் பாருங்கள், சிலை பிரதிஷ்டை செய்ய, பிரதிஷ்டை செய்யும்போது கண் திறக்கின்றேன்", என்று சொல்ல மக்களும் சரி என்றனர். ஆனால் சில்பா சிற்பி சொல்லிவிட்டாரே தவிர அவருக்கு அன்று இரவு பூராத் தூக்கமே வரவில்லை. மற்ற இரண்டு சிற்பங்களையும் செய்யும்போதும் சரி, செய்து முடித்ததும் சரி கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன். இந்தச் சிலையை அவ்வாறு பார்க்க முடியாது. எல்லாரும் இத்தனை புகழும் இந்தச் சிலையைப் பார்க்கவாவது ஒரு நிமிஷமாவது கண்பார்வை வந்துவிட்டுப் போகாதா? என மனதிற்குள் புழுங்கினார் சிற்பி.சிலை பிரதிஷ்டை செய்ய மக்கள் பார்த்த நாளும் நெருங்கியது. சிலையைக் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். உடன் சிற்பியும் பேத்தியின் கையைப் பிடித்துக்கொண்டு சென்ரார். ஆறுமுகனின் விழிகள் திறக்கவேண்டிய வேளையும் நெருங்கிவிட்டது. மக்கள் கூட்டம் கூடி இருக்க, சிற்பி உளியைக் கையில் எடுத்துக் கண் இமையைத் திறப்பதற்குப் பதில் வேகமாய் உளியால் அடிக்கப் போக, சிறுமியோ, கையை நடுவில் கொடுத்து, "தாத்தா, தாத்தா, கந்தன் கண்கள் உடைந்துவிடுமே?" எனக் கூவிய வண்ணம் தடுக்க, சிறுமியின் கையில் பட்ட உளியால் அவள் கையில் அடிபட்டு ரத்தம் தெறிக்கின்றது. வேகமாய்ப் பீறிட்ட ரத்தம் சிற்பியின் குருட்டுக் கண்களில் பட்டுத் தெறிக்கின்றது. சிறுமியின் அலறலில் நடுங்கி விதிர்விதிர்த்துப் போன சிற்பியின் கண்களில் தெறித்த ரத்தத்தை அவர் துடைக்க, என்ன ஆச்சரியம், பார்வை திரும்பிவிட்டது சிற்பிக்கு. என்றாலும் அருமைப் பேத்தியின் கைகளை எண்ணிக் கலங்க, அவரை அந்த சமீவனத்திலுள்ள வன்னிமரக் காட்டிற்கு அழைத்து வந்த பெரியவர், தம் கையால் சில பச்சிலைகளை வைத்துச் சிறுமியின் கையில் கட்ட, ரத்தப் போக்கு நின்றது.

"ஐயா, பெரியவரே! தாங்கள் யார்? என் கண்களையும் திறந்து, இப்போது இச்சிறுமியின் காயத்தையும் ஆற்றிய தாங்கள் நிச்சயம் ஒரு மகானாகவே இருக்கவேண்டும்." என்று சில்பா சிற்பி அந்தப் பெரியவரைப் பார்த்துக் கேட்க, அவரோ சிரித்த வண்ணம், " என் பெயர் வேலவன், கந்தன் என்றும் சொல்கின்றனர். இரு மனைவியர் எனக்கு. ஒரு மனைவியின் பெயர் தெய்வானை. " என்று சொல்லிச் சிரித்தார். ஒரு கணம் திகைத்த சில்பா சிற்பி, "ஆறுமுகா, வேலவா, கார்த்திகேயா!" எனக் கூவிய வண்ணம் பெரியவர் கால்களில் விழுந்து அவர் பாதம் பற்ற, அடுத்த கணம் அங்கே தோன்றியதோர் ஒளிப்பிழம்பால் சிற்பியின் கைக்கட்டைவிரலும் சரியாக, பெரியவர் மறைந்து போனார். ஊரே ஸ்தம்பித்து நின்றது. அனைவரும் சில்பா சிற்பியின் சக்தியும், மகிமையும் பெரியது என அறிந்து அவரைக் கொண்டாட, பெருமானை நேரிலே கண்ட திருப்தியுடன் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. ஏற்கெனவே ஊருக்கு இருந்த புராணப் பெயரான அஷ்ட நேத்திரபுரம் என்னும் பெயரே, சிற்பிக்குக் கண்கள் திறந்த காரணத்தால் எண்கண் எனப் பெயரிடப் பட்டு இன்றளவும் அந்தப் பெயரிலேயே அழைக்கப் படுகின்றது. சில்பா சிற்பியோ தம் வாழ்நாள் பூராவும் எண்கண் கிராமத்தில் ஆறுமுகன் சந்நிதியிலேயே தவமாய் இருந்து, உயிர் விட்டதாய்க் கூறுகின்றார்கள்.

கோயிலில் சில்பா சிற்பியின் சமாதி வன்னிமரத்தடிப் பிள்ளையாருக்கு அருகே காணப்படுவதாயும் கூறுகின்றார்கள். "கந்தன் திருநீறணிந்தால் கண்ட வினைகள் ஓடி, அனைவருக்கும் சுகமே" என்பதை இந்தக் கதை/ கதையல்ல நிஜம் என்றும் ஒரு சாரார் கூற்று. உணர்த்துகின்றதல்லவா??

முன் பதிவில் நான் பதினெட்டுக் கண்கள் கந்தனுக்கு என்று எழுதி உள்ளேன். வெகு சிலரே அதைக் கவனித்திருக்கின்றனர். ஆறுமுகங்களில் பனிரண்டு கண்களும், நெற்றிக் கண்கள் பதினெட்டும் சேர்த்துப் பதினெட்டுக் கண்கள் என்று கூறினேன். இந்தத் தகவலைச் சமீபத்தில் ஒரு சொற்பொழிவில்/புத்தகத்தில்??? சரியாத் தெரியலை, எதிலோ படித்தேன்/கேட்டேன். ஆறுமுகனும், சிவமும் ஒன்று எனவும், சிவனுக்கு உரிய நெற்றிக்கண்கள் ஆறும் ஆறுமுகனுக்கும் உண்டெனவும் படித்தேன். ஆகையால் பதினெட்டுக் கண்கள் என எழுதினேன். குமாராய நம: என்ற மந்திரம் பற்றி மெளலி கேட்டிருக்கின்றார். இந்த ஆறெழுத்து மந்திரத்தைக் கந்த பஞ்சாட்சரம்/ குஹ பஞ்சாட்சரம் என்று சொல்கின்றனர். இந்த மந்திரத்தோடு சிற்சில பீஜாட்சரங்களையும் சேர்த்து, அல்லது சேர்க்காமல் குரு மூலம் உபதேசம் பெற்றே அவர் அருளிய வண்ணமே ஜபிக்கவேண்டும் என்றும் சொல்கின்றனர். ஆகவே இதைப் பற்றி அதிகம் எழுத முடியாது. இதைப் பற்றிய நூல் "ஆறெழுத்து அந்தாதி" கந்தனுக்கு மிகவும் நெருங்கியவர் ஆன அகத்தியரால் அருளப் பட்டதாயும் தெரிய வருகின்றது. இப்படி ஒரு புத்தகம் இருப்பதே இப்போத் தான் தெரியும். ஆகவே தெரிஞ்சவங்க சொல்லலாம்.


முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வருடத்தில் மூன்று முறைகள் சூர சம்ஹாரம் நடைபெறுகின்றது. திருத்தணிகையிலேயோ சூர சம்ஹாரமே நடைபெறுவதில்லை. சூரனை சம்ஹாரம் செய்த பின்னார் பகை தணிந்த கந்தன் அமர்ந்த இடம் என்பதால் இம்மாதிரி எனக் கூறுகின்றனர். திருச்செந்தூரில் ஆறுமுகன் சிவனைப் பூஜிக்கும் கோலத்திலேயே கையில் மலரோடு காணப்படுவான். சூரனைச் சம்ஹாரம் செய்து முடித்துத் தம் தந்தையாகிய ஈசனைப் பூஜிக்க எண்ணி மலர்களைக் கொண்டுவரச் செய்து, சிவலிங்கம் அமைத்து ஒவ்வொரு நாமத்துக்கும் ஒவ்வொரு மலரை இட்டு வழிபட, மெய்ம்மறந்த தேவாதிதேவர்கள், "முருகா, ஆறுமுகா, கார்த்திகேயா" எனத் தம்மை மறந்து கூவ, கையில் மலரோடு கந்தன் திரும்ப அந்தக் கோலத்திலேயே இன்றளவும் காட்சி தருகின்றார் செந்தூராண்டவர். பழநியிலோ தண்டாயுதபாணியாகச் சடைமுடியுடன் காட்சி தருவது தான் உண்மையான கோலம். போகர் வடித்த சிலை கையில் ஞான தண்டத்துடன் கூடிய சடைமுடியுடன் கூடிய ஞான தண்டாயுதபாணியே. ஆண்டிக் கோலம் எல்லாம் பின்னால் ஏற்பட்டதே. இப்போதும் பழநி மலை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும் முன்னால் பார்த்தால் மூல விக்ரஹத்தில் சடைமுடி இருப்பது தெரியவரும் என்று ஆன்றோர் பலரும் சொல்கின்றனர். நாங்கள் பார்க்கும்போது ராஜாங்கக் கோலத்தில் காட்சி அளித்துக் கொண்டிருந்தான்.

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா!

முத்தரசன் எட்டிப் பிடி, எட்டிப் பிடி என அந்தச் சிலையைப் பிடிக்கச் சொன்னதே ஊரின் பெயராக அமைந்து இன்று எட்டுக் குடி என விளங்குகின்றது எனச் சொல்கின்றனர். பறக்க ஆரம்பித்த மயிலையும், வேலவனையும் பார்த்து பக்திப் பரவசத்துடன் மக்கள் அனைவரும் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டே வேலா, எங்களை விட்டுப் போய்விடாதா, கந்தா, கடம்பா எனக் கூவிக் கொண்டே போக, சிற்பியோ தன் உளியை எடுத்து அவசரத்துடனும் பதற்றத்துடனும், பறக்கும் மயிலை நோக்கி வீச, உளிபட்டு பின்னமடைந்த சிலை கீழே இறங்கி நின்றது. சிற்பி கண்களில் கண்ணீருடன் அழகிய சிலையைப் பின்னப் படுத்திவிட்டேனே எனக் கதற, திடீரென சிலையின் பின்னமடைந்த இடம் நேராகி நிற்க, மன்னனும், மக்களும் ஆச்சரியத்துடனும், பயத்துடனும் விக்கித்துப் போய் சிற்பியைப் பார்த்துக் கொண்டு நின்றனர். பின்னர் சிலையைச் சந்நிதானத்துக்கு எடுத்துப் போய் முறைப்படி அனைத்து வழிபாடுகளும் செய்து கும்பாபிஷேகமும் செய்வித்தான் முத்தரசன். மக்கள் மனம் மகிழ்ச்சி அடைந்து சில்பா சிற்பியையும் ஒரு தெய்வமே எனக் கொண்டாட ஆரம்பித்தனர். மன்னனை விடச் சிற்பியின் புகழும், அவருக்கு மரியாதையும் கூடியது. உலகிலேயே இம்மாதிரியான சிற்பி கிடையாது என ஏகோபித்த உணர்வோடு மக்களின் புகழ் சிற்பிக்குக் கிடைக்க மன்னன் மனம் புழுங்கியது. பொறாமையால் வெந்தான்.

"மன்னன் நான், ஆனால் புகழ் அவனுக்கு! போயும் போயும் ஓர் அற்ப சிற்பிக்கு என் முன்னேயே இத்தனை போற்றுதல்களும், புகழும் போய்ச் சேருகின்றனவே! இது என்ன அநியாயம்?" கொதித்துப் போனான் முத்தரசன். சேவகர்களை அருகே அழைத்துக் காதில் ஏதோ மெல்லச் சொல்ல சேவகர்களே பயத்தில் நடுங்கிப் போனார்கள். அவர்களுக்குத் தைரியம் சொன்னதோடு அல்லாமல் இது தன் கட்டளை எனவும் அரசன் என்ற முறையில் ஆணையிட்டான் முத்தரசன். அரசன் ஆணையை மீறும் தைரியம் இல்லாத சேவகர்கள் சில்பா சிற்பியையும் அழைத்துக் கொண்டு அவரின் சிற்ப மண்டபத்துக்குச் சென்றனர். அங்கே அவர் செய்து முடித்திருந்த, செய்து கொண்டிருந்த பல சிற்பங்கள் இருந்தன. அவற்றை எல்லாம் பின்னப்படுத்தி அலங்கோலம் செய்தனர். சிற்பி பதற்றத்தோடு அவர்களைத் தடுக்க வர, சேவகர்களில் சிலர் அவர் கை, கால்களை இறுகக் கட்டிக் கீழே தள்ள, இருவர் அவர் கண்களில் காய்ச்சி வைத்திருந்த கள்ளிப்பாலை ஊற்றினார்கள். துடிதுடித்தார் சிற்பி. கண்களைத் திறக்கவே முடியவில்லை. "முருகா, ஆறுமுகா, உனக்குப் பதினெட்டு கண்கள் இருந்தும் எனக்கு இந்தக் கொடுமையா?" என்று கதறுகின்றார் சிற்பி.

"உன்னைச் சிலையாய் வடித்தது தவிர, நான் செய்த தவறு என்ன? எனக்கு ஏன் இந்தத் தண்டனை?" எனப் புலம்பிய சிற்பி, அப்படியே மயங்கிப் போக அவருக்கு மீண்டும் குமாரன் தோன்றி, "சிற்பியே, மும்முறைகள் என்னை நீர் வடிக்கவேண்டும் எனச் சொன்னது மறந்து விட்டீரா?? எடும் உளியைக் கையில், மீண்டும் நீர் என்னைச் சிலையாக வடிக்கவேண்டும் என்பதை மறந்து, மயங்கிப் போனீரோ?" எனக் கேட்க, " கந்தனே, இது என்ன சோதனை? நொந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கண்ணிழந்து கிடக்கும் என்னையா உன் சிலையைச் செய்யச் சொல்கின்றாய்? இது என்னப்பா சோதனை?" என்று கதறுகின்றார். "உளியைக் கையில் எடும் சிற்பியே! நீர் கையில் எடுத்தால் தாமாய் வேலைகள் நடக்கும். உம் பேத்தி உமக்குத் துணை இருப்பாள்."என்று கந்தவேள் ஆணை இடுகின்றான்.

மறுநாள் முதல் சிற்பவேலை தொடங்குகின்றது. பேத்தியாக வந்த பெண்ணின் உதவியோடு சிற்பி சிலை வடிக்கத் தொடங்குகின்றார். அவயங்களை அந்தப் பெண் சிற்பியின் கைகளை எடுத்து வைத்து, இங்கே, இங்கே எனக் காட்டிக் கொடுக்க அவ்வாறே சிற்பியும் செதுக்க மெல்ல, மெல்ல கந்தன் உருவாகத் தொடங்கினான். ஆனால் இப்போது சிலை செய்வது முத்தரசன் காதுகளில் எட்டவே கூடாது என மிக மிக கவனமாய்ச் சிலையைச் செதுக்கி வந்தார் சில்பா சிற்பி. பார்த்தாலே தெரியும் வண்ணம் முருகனின் சிறப்பான,

"பன்னிரு கண்ணும்,பவளச் செவ்வாயும்,
நன்னெறி நெற்றியில் நவமணிச்சுட்டியும்"

"ஈராறு செவியில் இலகு குண்டலமும்"

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கையும்,
கீதம் பாடக் கிண்கிணி ஆட"

"மைய நடம் செய்யும் மயில்வாகனனை' மிக அழகாகவும், அருமையாகவும், ஜீவ சக்தி ததும்பும் வண்ணமும் செதுக்க ஆரம்பித்தார் சில்பா சிற்பி. மெல்ல, மெல்ல சிலை வடிவெடுத்துக் கொண்டு வந்தது. அப்போது ஒரு வயதானவர் அங்கே சிற்ப மண்டபத்துக்குச் சிற்பியைத் தேடிக்கொண்டு வந்தார். சில்பா சிற்பியைப் பார்த்து சிக்கலிலும், எட்டுக்குடியிலும் அவர் செதுக்கி வடிவமைத்த சிற்பங்களைப் பார்த்து அதன் அழகிலும், உயிரோட்டத்திலும் மனதைப் பறி கொடுத்துவிட்டதாயும், தாம் சமீவனம்(தற்போது எண்கண், புராண காலத்தில் அஷ்டநேத்திரபுரம்) என்னும் ஊரில் இருந்து வருவதாயும், சில்பியைத் தம்மோடு சமீவனத்துக்கு அழைத்துச் செல்லும் ஆர்வத்தோடு வந்திருப்பதாயும் தெரிவிக்கின்றார்."முத்தரசனுக்குப் பயந்து பயந்து வாழும் நீர் அங்கே வந்து என்னுடன் இருந்தால் எங்கள் ஊரினுள் இருக்கும் வன்னிமரக் காட்டில் இருந்த வண்ணம் உம் சிற்பப்பணியை நீர் தொடரலாம். உம்மை எவரும் தடுக்க மாட்டார்கள்." என்று அழைக்க, சிற்பி தயங்குகின்றார். ஆனால் பேத்தியாக வந்த பெண்ணோ, அவரைச் சமாதானம் செய்து இது தான் சிறந்தது எனச் சொல்லி அவரை அழைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்த முருகன் சிலையையும் எடுத்துக் கொண்டு, அந்தப் பெரியவரோடு சமீவனம் அழைத்துச் செல்கின்றாள். சமீவனத்தில் சிலை எந்தத் தொந்திரவும் இல்லாமல் செதுக்க ஆரம்பித்த சிற்பி சில மாதங்களிலேயே பேரழகன் ஆன கந்தன் சிலையை, உயிரோட்டத்துடன் மீண்டும் செதுக்கி முடித்தார். மெல்ல, மெல்ல, சமீவனத்து மக்களுக்கும் இந்தச் செய்தி பரவ, ஊரார் அனைவரும் காட்டுக்குள் வந்து கந்தனைத் தரிசிக்கின்றனர். அப்போது......