எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 14, 2008

ஊனும் உருகுதடி கிளியே, உன்மத்தமாகுதடி!!

“என்ன, யானையா? தாத்தா, இருங்க, இருங்க, போயிடாதீங்க! எனக்கு யானையைக் கண்டால் பயம்!” என்று வள்ளி நடுக்கத்துடன் ஓடி வந்து கிழவரைக் கட்டிக் கொள்கின்றாள். மனதில் சந்தேகம் பூக்கின்றது வள்ளிக்கு. கிழவர் மாதிரி இல்லையே கையும், காலும், என்று நினைத்துக் கொள்கின்றாள். ஆனாலும் யானை பயம் மனதில் முந்துகின்றது. கிழவருக்கு சந்தோஷம், “ வள்ளி, ஏமாந்தாயா? ஏச்சுப்புட்டேனே, வள்ளி, ஏச்சுப் புட்டேனே!” என்று பாடி, ஆட, இவர் கிழவர் இல்லை என வள்ளியின் மனதில் உறுதிப் படுகின்றது. “சரி, தண்ணீர் தானே, தாத்தா, வாங்க , தண்ணீர் தருகின்றேன்”என்று அருகே இருந்த சுனைக்கு அழைத்துப் போய்க் கிழவரைச் சுனையில் தள்ளி விடுகின்றாள். பின் கை கொட்டிச் சிரிக்கின்றாள் வள்ளி. “ஏச்சுப்புட்டேனே, தாத்தா, ஏச்சுப்புட்டேனே!” என்று பாடி ஆடுகின்றாள் வள்ளி. “அப்படியா, வள்ளி, அதோ பார்!’ என்கின்றார் கிழவர். அங்கே வந்தது ஒரு யானை பிளிறிக் கொண்டு. வள்ளிக்கு நடுக்கம் அதிகம் ஆகி அவளும் சுனைக்குள் இறங்கிக் கிழவரைக் கட்டிக் கொண்டாள். யானை போகவே இல்லை. அங்கேயே பிடிவாதமாய் நிற்கின்றது.

“ஆனையும் குதிக்குதல்லோ
அசட்டாளம் பண்ணுதல்லோ
சண்டாளப் பண்டாரா- என்னை
சதி மோசம் செய்தீரே
ஆனையை விலக்கி விடும் – நீர்
ஆளையேக் கலக்குதல்லோ!”

என்று கிழவரிடம் யானையைக் கூப்பிடும்படியும், விரட்டும்படியும் வள்ளி கெஞ்சுகின்றாள். கிழவர் கெஞ்சினால் மிஞ்சுகின்றார், மிஞ்சினால் கெஞ்சுகின்றார். இப்போது கிழவரின் முறையாச்சே. வள்ளி சரியாக மாட்டிக் கொண்டாள். “வள்ளி, என் அருமை வள்ளி, ஆசை வள்ளி, நான் உனக்கு என்ன வேண்டும், அதைச் சொல்லு, என்னைக் கல்யாணம் செய்துக்குவியா? சரினு சொல்லு! ஆனை போகும்!” என்று சொல்கின்றார் கிழவர். வள்ளி மறுக்கின்றாள். “நீர் எனக்கு மாமன், நான் உமது மருமகள்” என்று வள்ளி சொல்ல, கிழவர் மறுக்கின்றார். யானை போக மறுக்கின்றது. யானையை எப்படியாவது துரத்தினால் போதும் என நினைத்த வள்ளியோ,

“ஆகட்டும், ஆகட்டும் தம்புரானே
ஆனய விலக்கிவிடு
நீரெனக்குப் பாட்டாவாம்
நானுனக்குப் பேத்தியாம்”

என்று சொல்கின்றாள் இம்முறை. ஆனால் கிழவர் இதற்கும் மசியவில்லையே. ம்ஹூம், அழுத்தமாய் “வள்ளி, நீ என்னைக் கல்யாணம் செய்துக்கறேன் என்று சொல்லு, ஆனை போயிடும்” என்று சொல்கின்றார் கிழவர். அரை மனதோடு வள்ளி சம்மதிக்கின்றாள். அப்போது நம்பிராஜனுக்குத் தினைப்புலத்தில் ஒரு கிழவர் வந்து வள்ளியைத் துன்புறுத்துகின்றான் எனத் தகவல் கிட்ட, அவன் வள்ளியைப் பார்க்க விரைந்து வந்தான் தன் மகன்கள் அனைவருடனும்.

அவனும், அவன் கூட்டத்தாரும் வருவதைக் கண்டதும் “ஆஹா, பிழைத்தோம் “ என நினைத்த வள்ளி, கிழவர் இருந்த பக்கம் திரும்ப அங்கே கிழவரைக் காணவில்லை. புதியதாய் ஒரு வேங்கை மரம் நிற்கின்றது. வள்ளிக்கு அப்போது தான் இதிலே ஏதோ விஷயம் இருக்கிறது எனப் புரிய, என்ன செய்யலாம் என யோசிக்கின்றாள். நம்பிராஜன் வந்து பார்த்துவிட்டு, “என்ன இது? புதுசாய் ஒரு வேங்கை மரம்? வெட்டுங்கள் இதை! “ என்று சொல்ல, அதை வெட்ட ஆரம்பிக்க, வள்ளியோ, வேண்டாம், வேண்டாம் என அலறிக் கொண்டே அந்த வேங்கை மரத்தைக் கட்டிக் கொள்கின்றாள். ஆறுமுகன் தன் ஆறுமுகங்களோடும் தோன்றி வள்ளியை ஆட்கொள்கின்றான். நம்பிராஜன் திகைத்துப் போய் நிற்கின்றான்.

எத்தனையோ தெய்வத் திருமணங்கள் இருந்தாலும் இந்த வள்ளி திருமணக் கதை அனைவரையும் கவர்ந்தாப் போல் வேறு ஒன்று கவராது. அனைவருக்கும் பிடித்த கதையாகும் இது. நான் பள்ளியில் படிக்கும்போது மார்கழி மாதப் பஜனை வகுப்பில் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜனின் மேற்பார்வையில் நடக்கும் பக்தி கலா நிகழ்ச்சியில் வள்ளி கல்யாணம் கட்டாயம் இடம் பெறும் ஒன்றாகும். பல முறைகள், பல வருடங்கள் தொடர்ந்து பார்த்திருக்கின்றேன். என்றாலும் அலுக்காத ஒன்று. பஜனை வகுப்பில் படிக்கும் மாணவிகளே பாத்திரங்களை ஏற்று ஆடிப் பாடி நடிப்பார்கள். ஒரு மாதத்துக்கும் மேலே ஒத்திகை நடக்கும். சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தான் நிகழ்ச்சிகள் நடக்கும். அரையாண்டுத் தேர்வுக்கும் படித்துக் கொண்டு, இம்மாதிரியான நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டு, காலையில் சீக்கிரமாய் எழுந்து பஜனைக்கும் போய்க் கொண்டு, அம்மாதிரியான ஒரு வாழ்க்கை இப்போ நினைச்சாலும் கிடைக்குமா சந்தேகம் தான். காலையிலே 4 மணிக்கெல்லாம் மதனகோபால ஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும் பஜனை, 4 மாசி வீதிகளையும் சுற்றி ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேரும். அதுக்கப்புறமாய்ப் பள்ளிக்குப் போவோம். அதிலும் ஆண்டாளின் வாரணமாயிரம் பாடலுக்கும், இந்த வள்ளி திருமணம் நடக்கும் தினத்திலும் கூட்டம் அதிகமாய் வரும். முன்னாலேயே போய் இடம் பிடிப்போம். இப்போ பொதிகையின் தயவில் சில நிகழ்ச்சிகள் பார்க்க முடியுது உட்கார்ந்த இடத்திலேயே! (((

9 comments:

  1. //அனைவருக்கும் பிடித்த கதையாகும் இது.//

    ஆமாம் அம்மா. இன்னும் கொஞ்சம் விரித்து ரசித்து ருசித்து பாட்டெல்லாம் பாடி மெதுவாய்ச் சொல்லியிருக்கலாமோ :) பரவாயில்லை. அடுத்த சஷ்டிக்கு சொல்லுங்க :)

    ReplyDelete
  2. //ஆனையும் குதிக்குதல்லோ//
    அது என்னோட ஆனை!

    ReplyDelete
  3. ஒவ்வொரு பகுதிக்கும், பாடல் வரிகளைத் தலைப்பாய் இடுதல் சுவையாய் உள்ளது!

    ReplyDelete
  4. வள்ளி கதை ஓடுதா?

    பல நாள் கழித்து எட்டி பாக்கிறேன்... இனி தொடர்ந்து வருவேன்

    ReplyDelete
  5. கதைக்கு மிக்க நன்றி தலைவி.. ;))


    ஆமா என்ன பதிவு மட்டும் வருது...ஆனா பின்னூட்டங்கள் எதுவும் காணவில்லையே!!??

    ReplyDelete
  6. நல்லாயிருக்கு....பாடல்களை முழுதா குடுத்திருக்கலாமோ?.

    ReplyDelete
  7. @கவிநயா, ஆமாம், இன்னும் கொஞ்சம் விரிச்சுச் சொல்லணும்னுதான் ஆசை, ஷெட்யூல் பண்ணி வச்சேன், அப்புறம் வேணாத் திருத்தலாம்னு, ஆனால் இணையம் பக்கமே வர முடியலை 5 நாளா! அதனால் இரண்டாய்ப் போட நினைச்சது, அப்படியே போட்டாச்சு, இனி ஒண்ணும் பண்ண முடியாது. :(((((

    ReplyDelete
  8. @திவா, ஆனை உங்களோடது ஒண்ணும் இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட ஆனை! :P:P:P

    @வாங்க ஜீவா, ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. அட, புலி, காதிலே விழுந்துச்சா கூப்பிட்டது? அம்பியை ஒரு மிரட்டு மிரட்டி வைக்கிறது தானே? வாங்க, வாங்க மறுவரவுக்கு நல்வரவு.

    @கோபி, பதிவுகளை ஷெட்யூல் பண்ணி வச்சிருந்தேன் வருது, ஆனால் பின்னூட்டங்களைப் போட முடியலை, எனக்கு இணையமே இல்லை 5 நாளாய். இப்போத் தான் வந்திருக்கு அரை மணி நேரம் ஆகுது. :(((((((

    ReplyDelete