எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 20, 2008

உஜாலாவை இன்னும் விடலையே! ஆரம்பம் தான்!

திருமங்கை மன்னன் கொள்ளை அடிக்க ஆரம்பிக்கின்றான். அந்த வழியிலேயே யாராலேயும் போக முடியவில்லை. போவோர் வருவோர் அனைவரையும் மன்னனின் மேற்பார்வையிலேயே கொள்ளை அடிக்கின்றனர் அவன் வீரர்கள். மன்னனோ பெரும் வீரன். அவன் வீரத்தைப் பாராட்டியே சோழன் அவனைத் திருமங்கைக்கு மன்னன் ஆக்கி இருக்கின்றான்.அவனை மீறி அவ்வழியே யாராலும் செல்ல முடியவில்லை. வயதானவர்கள், குழந்தைகள், பெரியோர், சிறியோர் யாராயிருந்தாலும் தப்ப முடியவில்லை. அனைவருமே நீலனிடம் மாட்டிக் கொள்கின்றனர். பொருளை இழந்தே செல்ல வேண்டி இருக்கின்றது. ஒரு நாள் பூரண ரிஷியின் மகளுக்குத் திருமணமாமே, செய்தி காதில் விழுகின்றது நீலனுக்கு. மணமகனைப் பார்த்தால் தேவபுருஷன் சாட்சாத் அந்த அரங்கனைப் போல் அழகாமே! அதுவும் சொன்னார்கள். இருக்கட்டுமே! எந்தப் புருஷனாய் இருந்தால் என்ன? இந்த நீலனிடம் மாட்டினால் அதோகதிதான். இன்னிக்கு இரண்டில் ஒன்று பார்த்துட வேண்டியது தான்.

கிளம்பினான் நீலன் வேட்டைக்கு. மறைவாக ஒளிந்து கொள்கின்றான். திருமணம் முடிந்து பெண்ணும், மாப்பிள்ளையும் கிளம்பிச் செல்லுகின்றனர். அதோ பெண்ணின் பல்லக்கு வருதே! ம்ம்ம்ம்??? அது யாரு குதிரையிலே? அது தான் மாப்பிள்ளையா?? ஆள், நல்ல அழகா, அம்சமாய்த் தான் இருக்கான்! அது சரி! இது என்ன நிறம்?? நீலமா? கருநீலமா? கறுமையா? கரும்பச்சையா?? பையன் அப்படியே ஜொலிக்கின்றானே?? ம்ம்ம்ம்ம்.,,., இப்படிப் பட்ட பையனுக்கு நிறையவே சீர், வரிசைகள் கொடுத்திருப்பாங்களே. இதோ, கிட்டே வந்தாச்சு அவங்க எல்லாம். பிடிக்க வேண்டியது தான். நீலனின் சைகையைப் பார்த்துவிட்டு மற்ற வீரர்கள் முன்னே சென்று வழியை மறிக்க, திருமணத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருக்கும் கூட்டம் சற்றே தயங்கியும், திகைத்தும் நிற்கின்றது. காவலுக்கு வந்த வீரன் கேட்கின்றான், "என்னப்பா? என்ன வேண்டும்?" என்று. பதிலே சொல்லாமல் வீரர்கள் அவர்களின் நகைகளையும், சீர்வரிசைகளையும், மற்ற விலை உயர்ந்த பொருட்களையும் மெதுவாய்ச் சேகரம் செய்கின்றனர். அவர்கள் அனைவரும் செய்வதறியாது குய்யோ, முறையோ எனக் கத்த, நீலன் அங்கே வந்து அனைவரையும் மிரட்டுகின்றான். அனைவரும் வாய் பேசாமல் காதில், கழுத்தில், கையில், காலில் என இருந்த அனைத்தையும் கழற்றிக் கொடுக்க. நீலனின் பக்கத்தில் அவற்றைக் குவிக்கின்றனர் வீரர்கள்.

ஆச்சா? எல்லார்கிட்டே இருந்தும் வாங்கியாச்சா? நீலனின் விசாரணை. மெல்லப் பார்க்கின்றான் ஒவ்வொருத்தராய். அதோ, நடுங்கிக் கொண்டு மாப்பிள்ளையின் பின்னால் நிற்கும் மணப்பெண். அவளிடம் ஏன் பிடுங்கவில்லை? கூச்சல் போடுகின்றான் நீலன்.

"ஐயா, இப்போத் தான் திருமணம் முடிந்து திரும்புகின்றனர். பெண்ணை அதற்குள் நகை எல்லாம் கழட்டும்படி சொல்லணுமா?"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. கழட்டச் சொல்லுங்க." மணப்பெண்ணும் பயந்தவாறே அனைத்து நகைகளையும் கழட்டிக் கொடுத்துவிடுகின்றாள். மாப்பிள்ளையைப் பார்க்கின்றான் நீலன். அவனும் அனைத்தையும் கழட்டிக் கொடுக்கின்றான். இருவரிடமும் ஒன்றும் இல்லை. ஒன்றுமே இல்லையல்லவா?? இல்லையே?

"அதோ பாருங்க ஐயா! மாப்பிளையின் காலில்!" என ஒருவன் சுட்டிக் காட்ட, நீலன் பார்க்கின்றான். மாப்பிள்ளையின் காலில் சற்று நேரத்துக்கு முன்னரே, திருமணத்தின்போது அணிவிக்கப் பட்ட மெட்டி. காலில் கிடந்தது. "அதை ஏன் கழட்டவில்லை?" நீலன் கேட்கின்றான்.

"ம்ம்ம்ம்.., " மாப்பிள்ளையின் முகத்தில் கள்ளச் சிரிப்பு. எத்தனை பேர் வீட்டில் நாம் நெய்யும், பாலும், வெண்ணெயும், தயிரும் திருடினோம். இப்போ இவன் நம்ம கிட்டே திருடறானே, இதான் அவன் நினைப்போ? யாருக்குத் தெரியும்? "இதோ கழட்டறேனே!" என்றான் அந்த மாயக் கள்ளன். இன்னும் சற்று நேரத்தின் தன் உள்ளத்தையே கழட்டிக் கொடுக்கப் போறான் இந்த நீலன். அதுக்குள்ளே அவனுக்கு அவசரமா? சிரிப்பு மாறாமல் மாப்பிள்ளை தன் காலில் இருந்த மெட்டியைக் கழட்டினான். வரவே இல்லை. அசைந்தே கொடுக்கலை அது. என்ன இது? நீலனுக்கு இவன் ஏதோ தந்திரம் செய்யறானோ என்ற எண்ணம். எங்கே நான் கழட்டறேன். என்று கிட்டே போனான். மாப்பிள்ளை ஏனோ தெரியலை, பயந்து ஓடினான். நீலன் துரத்த, மாப்பிள்ளை பயந்து ஓட, கடைசியில் நீலன் ஒருவழியாப் பிடித்துவிட்டான் மாப்பிள்ளையை. அவன் காலில் இருந்த மெட்டியைக் கழட்ட ஆரம்பித்தான். அவனாலும் முடியவில்லையே! ஏனென்று தெரியவில்லை. களைத்துப் போனான் நீலன். பின் ஒரு யோசனை தோன்றிற்று அவனுக்கு. பல்லால் கடித்து இழுத்தால் என்ன? மாப்பிள்ளையின் பாதங்களை ஒரு கல்லின் மேல் வைத்தான் நீலன். சிரித்துக் கொண்டே நின்றான் மாப்பிள்ளை. பெண்ணோ அவனுக்குப் பின்னால் பயந்த தோற்றத்துடனேயே. நீலன் கீழே மண்டியிட்டு அமர்ந்து மாப்பிள்ளையின் பாதங்களில் இருந்த மெட்டியை எடுக்க முயன்றான். அப்பா! பாதங்களா இவை! இல்லை தாமரை மலர்களோ! கண்ணையே ஏதோ செய்யறதே! இவன் ஏதோ மாய, மந்திரம் தெரிஞ்சவனோ? நம்ம கிட்டே இருந்து தப்பிக்க இதெல்லாம் பண்ணறானோ? நீலனின் கோபம் அதிகரிக்க பல்லால் ஒரு கடி கடித்து இழுக்க எண்ணி அந்த மெட்டியின் மேல் வாயை வைத்தான். மெதுவாக சுகந்தம் பொங்கும் ஒரு அமுத வாய் அவன் காதருகில் வந்தது. ஏதோ மெல்லச் சொன்னது. என்ன அது? "ஓம் நமோ நாராயணாயா!" ஆஹா, நீலனுக்குள் ஏதோ ஆகி விட்டதே? என்ன ஆச்சு? என்ன மந்திரம் இது? இவன் யார்? ஏன் என்னிடம் வந்து இதைச் சொல்கின்றான்? ஒரு கண நேரம் எதுவும் புரியாமல் திகைத்தான் நீலன்.

"நீ என்ன கலியனோ?" என்ற குரல் மட்டுமே கேட்டது. பின்னர் நீலன் கண்டதெல்லாம் அந்த சாட்சாத் எம்பெருமானையே தான். பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தான் அவன். தான் கொள்ளை அடிக்க வந்ததும் அவனிடமே, தன்னைத் தடுத்தாட்கொள்ள வந்ததும் அவனே என்ற உண்மையும் புரிந்தது நீலனுக்கு. பிறகென்ன?

"கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன்
கண்டவாதிரிதந்தேனேலும்,
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத்திருவருள்பெற்றேன்,
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம்கண்ணநீர்சோர,
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
நாராயணாவென்னும்நாமம்."


அந்த எட்டெழுத்து மந்திரம் அவனை ஆட்கொள்ள திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வாராகிப் பாடல்கள் பல புனைந்து, அரங்கனை மட்டுமின்றி அநேக திவ்ய தேசங்களுக்கும் சென்றார்.

"எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்
எனக்கரசு என்னுடைவாணாள்,
அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி
அவருயிர்செகுத்தவெம்மண்ணல்,
வம்புலாஞ்சோலைமாமதிள் தஞ்சை
மாமணிக்கோயிலேவணங்கி,
நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்."

பெருமாள் கோயில்களில் தன் மனைவியோடு காட்சி அளிக்கும் ஒரே ஆழ்வார் இவரே என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

9 comments:

  1. //பின்னர் நீலன் கண்டதெல்லாம் அந்த சாட்சாத் எம்பெருமானையே தான். பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தான் அவன். தான் கொள்ளை அடிக்க வந்ததும் அவனிடமே, தன்னைத் தடுத்தாட்கொள்ள வந்ததும் அவனே என்ற உண்மையும் புரிந்தது நீலனுக்கு. பிறகென்ன?//

    சீரியஸா - மூவிங்!நமக்கு அப்படி ஒரு நிலை கிட்டுமா?

    ReplyDelete
  2. //மாப்பிள்ளையின் காலில் சற்று நேரத்துக்கு முன்னரே, திருமணத்தின்போது அணிவிக்கப் பட்ட மெட்டி.//

    அந்த காலத்துல மாப்ளை காலில் மெட்டி எல்லாம் போட்டு இருக்காங்க போல.

    இவர் கல்யாணமானவர்னு சுட்டி காட்டவா? :D

    அடுத்த ஆழ்வார் யாரு?

    ReplyDelete
  3. //சீரியஸா - மூவிங்!நமக்கு அப்படி ஒரு நிலை கிட்டுமா?//

    எங்கே? நமக்குப்பார்க்கும் இடமெல்லாம் ட்ராஃபிக் தான் தெரியுது! :(((((

    ReplyDelete
  4. //இவர் கல்யாணமானவர்னு சுட்டி காட்டவா? :D//
    அம்பி, அதே, கச்சியப்பரின் கந்த புராணத்தில் கூட இது பற்றிய குறிப்பு இருக்குனு நினைக்கிறேன். வால்மீகியின் ஸ்காந்த புராணத்தில் இருக்கிறதாத் தெரியலை. ஆனால் தலை நிமிர்ந்து செல்லும் ஆண்கள் முன்னே செல்லும் பெண்களுக்குக் கழுத்தில் மங்கலநாண் மூலமும், தலைகுனிந்து செல்லும் பெண்ணானால் இந்த ஆண் திருமணம் ஆனவன் என்று தெரிந்து கொள்ளவும் ஆணுக்குக் காலில் மெட்டியும் அணிவிப்பார்கள் எனப் பள்ளி நாட்களில் படிச்சது.

    ReplyDelete
  5. இம்புட்டு ஸ்வாரஸ்யமா கதை சொல்றீங்களே....சூப்பர்.

    தெரிஞ்சிருந்தா டி.ஆர்.சார் வீட்டு கல்யாணத்துல ஒரு சின்ன கதா-காலக்ஷேபம் பண்ணச் சொல்லியிருப்பேனே? :)

    ReplyDelete
  6. @மெளலி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  7. //உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
    உடம்பெலாம்கண்ணநீர்சோர,
    நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
    நாராயணாவென்னும்நாமம்."//

    அடடா, என்னமாய்க் கொடுத்து வைத்திருக்கிறார், தாமரைக்கண்ணனே வந்து தடுத்தாட்கொள்ள. அருமை கீதாம்மா.

    [எங்க பக்கம் கூட கல்யாணத்துல மாப்பிள்ளைக்கு மெட்டி போடறதுதான் :) ஆனா அப்புறமா கழட்டிருவாங்க.]

    ReplyDelete
  8. /[எங்க பக்கம் கூட கல்யாணத்துல மாப்பிள்ளைக்கு மெட்டி போடறதுதான் :) ஆனா அப்புறமா கழட்டிருவாங்க.] //

    இது எனக்கு புதுசு! முன்னே தெரியாது.

    ReplyDelete
  9. கீதாம்மா. திருமங்கையாழ்வாரின் திருக்கதையைச் சொல்லும் இரண்டு இடுகைகளையும் இன்று தான் படித்தேன். அருமையாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete