திரிவக்கரை செல்லும்போதே மக்கள் கூட்டம் கூட்டமாக முக்கியக் கடைத்தெரு இருக்கும் தெருவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை கண்டாள். இளைஞர்கள் அனைவரும் ஏதோ பரபரப்பிலும், அவசரத்திலும் வேகமாய்ச் சென்றனர். சாதாரணமாய் இப்படிக் கூட்டம் இருக்குமிடம் செல்ல நேர்ந்தால் திரிவக்கரையைப் பார்த்து அனைவரும் கேலி பேசிச் சிரிப்பார்கள். இன்று அவளைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை. திரிவக்கரைக்கே ஆச்சரியமாய் இருந்தது. என்ன ஆச்சு எல்லாருக்கும்? அவளுக்கும் அந்தக் கடைத்தெருவுக்கே போய்ப் பார்க்கும் ஆவல் மேலிட்டது. கூட்டத்தைத் தொடர்ந்து சென்றாள் திரிவக்கரை. ஒரு பெரிய மக்கள் கூட்டம் அரண்மனையின் துணிகளுக்கு அவ்வப்போது புத்தம்புதியதாய்ச் சாயம் தோய்த்துக் கொடுப்பவனின் கடை ஒன்றுக்கு முன்னால் நின்றிருந்தது. கம்சனுக்கு மட்டுமில்லாமல், அரண்மனைவாசிகள் அனைவரின் துணிகளும் என்றும் புத்தம்புதியதாய் விளங்கச் செய்வதே அவனுக்குத் தொழில். எல்லாரும் இங்கே கூடி நின்று எதை அல்லது யாரைப் பார்க்கின்றனர்? திரிவக்கரையில் ஆவல் கூடியது. கூனிப் போன முதுகை மெல்ல நிமிர்த்தினாள். தினம் தினம் செய்யும் பயிற்சியினால் ஓரளவுக்கே அவளால் முடிந்தது. கூட்டத்தின் முன்னால் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியவில்லை. முண்டி அடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். கூட்டத்தினர் அவளைக் கண்டு விட்டு, “ஆஹா, இந்தக் கூனி இங்கே எங்கே வந்தாள்? எல்லாம் கிடக்க இவளுக்கு அவசரத்தைப் பாரேன்!” எனக் கேலி செய்தனர். சிலர் திட்டவும் செய்தனர். எதையும் கண்டு கொள்ளாமல் கூட்டத்தில் முன்னேறினாள் திரிவக்கரை.
கடையை நெருங்கும்போது அவள் காதில் விழுந்த சம்பாஷணைகள்! ஆஹா, இது என்ன? யார் இவங்க? சிறு பையன்களாய் இருக்கின்றனரே? அவங்க பேச்சிலிருந்து புதிய துணிகளை வாங்க வந்திருப்பது புரிகிறது. அது பற்றியே கடைக்காரனிடம் பேசுகின்றனர். அந்த சம்பாஷணைதான் காதில் விழுந்தது. ஆனால் இது என்ன??? இந்தக் கடைக்காரன் ஏன் கொடுக்க மறுக்கின்றான்? மாறாக இந்தப் பையன்களைத் திட்டுகிறானா என்ன? ஆம், அப்படித் தான் தெரியுது. “ பட்டிக்காட்டான்களா, துணி வாங்கவா வந்தீங்க? அதுவும் என் கடையிலே? என் கடை அரண்மனை வாசிகளுக்கு மட்டுமே துணிகள் விற்குமிடம். உங்களை மாதிரி ஒன்றுமில்லாதவங்களுக்குத் துணி எல்லாம் கொடுக்கிறதுக்கில்லை.” வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல் கையையும் ஓங்கினான் கடைக்காரன். அதுவும், அந்த நீல நிறப் பையன், என்ன நீல நிறப் பையனா? எங்கேயோ சொல்லி இருக்காங்களே இவன் நிறத்தைப் பத்தி? ம்ம்ம்? ஆஹா, அடிக்கப் போகிறானே அந்தப் பையனை. இதோ, பையன் மேல் அடி விழ……… இது என்ன? அந்தப் பையன் சமயத்துக்குச் சட்டுனு நகர்ந்துட்டான். அதோடு இந்தக் கடைக்காரனைத் திரும்ப அடிக்கிறானே? ஆஹா, பையன் கொடுத்த ஒரே அடியில் கடைக்காரன் கீழே விழுந்துட்டான். எழுந்துக்க முடியாமல் முனகிட்டு இருக்கான். கூட்டம் ஆர்ப்பரித்தது. கைதட்டிக் கும்மாளமிட்டனர் மக்கள்.
ஒரு சில இளைஞர்கள் கீழே விழுந்திருந்த கடைக்காரனை மீண்டும் சீண்ட ஆரம்பித்தனர். அவன் எழுந்திருக்க முடியாது என்ற தைரியத்தில் அவர்கள் அவனை உதைத்தனர். திரிவக்கரைக்கும் கோபம் தான். இந்த சின்னப்பையன்களிடம் போய் இவன் சண்டை ஏன் போட்டான்? ஆனால் அந்தப் பையன்கள் சும்மா இருக்கலை. மெதுவாய்க் கடைக்குள் போய்ச் சில துணிகளை அவர்களுக்குப் பொருந்துமாறு தேர்ந்தெடுத்து, அவற்றை அங்கேயே மாற்றிக் கொள்ளவும் செய்தார்கள். கூட்டம் மீண்டும் கைதட்டி ஆர்ப்பரித்தது. “யாரு இவங்க இரண்டு பேரும்?” திரிவக்கரை தன் அருகில் இருந்தவரைப் பார்த்துக் கேட்டாள்.
“அட, உனக்குத் தெரியாது எதுவுமே? இவங்க தான் நந்தனின் பையன்கள், நந்தன், விருந்தாவனத்தின் தலைவன், இடையர்களின் தலைவன், அவனோட பையன்கள் இவங்க. “ திரிவக்கரை சந்தோஷத்தில் மிதந்தாள். “கடைக்காரன் ஏன் சண்டை போட்டான் இவங்க கிட்டே?”
“இவங்களைக் கம்சன் அழைத்திருக்கிறானாமே? ராஜ சபைக்குப் போகக்கூடிய அளவுக்குத் தகுந்த உடைகள் வேண்டும்னு கேட்டாங்க. கொடுக்க மாட்டேன்னு சொல்லிச் சண்டை போட்டான்.”
“ஆஹா, எவ்வளவு அழகும், வனப்பும், இளமையும் மிகுந்த பையன்கள்?”
“ம்ம்ம், இந்தக் கடைக்காரனுக்கு வேண்டும் நல்லா, அவன் என்னமோ தன்னையே கம்சன்னு நினைச்சுட்டு இருந்தான் இத்தனை நாட்களாய்” இது இன்னொருவரின் கூற்று.
“ஆனால் இளவரசர் கம்சனுக்குக் கோபம் வரப் போகிறது.” திரிவக்கரை சொன்னாள். “ஹாஹாஹா, இந்தப்பையன்கள் அதைப் பத்திக் கவலைப் படறதாத் தெரியலை.” இன்னொருவனுக்குச் சிரிப்பை அடக்க முடியலை. அதற்குள்ளாக இரு இளைஞர்களும் உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தார்கள். மூத்தவனாகவும், பலசாலியாகவும் தெரிந்தவன் நீல நிற உடையிலும், இளைஞனாகவும், காண்பவர் கண்ணைக் கவரும் வகையில் நீல நிறம் படைத்தவனாகவும், இதழ்களில் எப்போதுமே சிரிப்பைத் தாங்கியவண்ணம் இருந்தவனும் ஆன இன்னொருவன் மஞ்சள் நிற ஆடை. உடைக்குப் பொருந்தும் வண்ணம் தலையில் தலைப்பாகைகளும் அம்சமாகப் பொருந்தி இருந்தது. இளைஞர்களில் இளையவன் தன்னுடைய உடை அணிவதில் எப்போதும் அதிகக் கவனம் செலுத்துவான் போல. பழைய ஆடையின் தலைப்பாகையில் இருந்த மயில் இறகுக் கொத்தை எடுத்து இந்த ஆடையின் பொன்னிறத் தலைப்பாகையில் சூடிக் கொண்டிருந்தான். ஆஹா, அது தான் எவ்வளவு பொருந்திக் காட்சி அளிக்கிறது? இந்த உடையும் , இந்தப் பொன்னிறத் தலைப்பாகையும் சேர்ந்து ஓர் அரசன் போலவே காண்கின்றானே இவன்?
அதற்குள்ளாக அருகிலிருந்த பூக்கடைகளில் இருந்து பூமாலைகள், அதுவும் சித்திர விசித்திரமான கட்டுமானத்தோடு கூடிய அபூர்வப் பூக்களால் ஆன மாலைகளைக் கொண்டு வந்து அந்தக் கடைக்காரர்கள் மனமுவந்து கொடுத்தார்கள். அந்தப் பூமாலைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனில் அழுதுவிடுவார்களோ என்னும்படியாக அவர்கள் முகத் தோற்றம். இருவரும் பூமாலைகளை ஏற்றுக் கொண்டனர். இளைஞர்களில் இளையவனோ பூக்கடைக்காரனைக் கட்டி அணைத்துக் கொண்டு தட்டியும் கொடுத்துவிட்டான். அதிர்ஷ்டக்காரனப்பா அவன்! ஏற்கெனவே கண்ணனின் வரவுக்குக் காத்திருந்த திரிவக்கரைக்கு இத்தனையையும் நேரில் பார்த்ததும் அதுவும் கண்ணனை நேரில் பார்த்ததும் அவளால் ஆவலை அடக்க முடியவில்லை. அந்தப் பையன் தன் ஒளி வீசும் கண்களினால் கூட்டத்தினர் அனைவரையும் பார்த்தான். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தங்களை மட்டுமே அவன் பார்த்தமாதிரி இருந்தது. அவன் சிரித்தது தங்கள் ஒருவருக்காக மட்டுமே என நினைத்தார்கள். அதிலும் திரிவக்கரைக்கு அவன் தன்னை மட்டுமே பார்த்துச் சிரித்தான் என்றே தோன்றியது. அனைவரையும் தள்ளிக் கொண்டு முன்னால் சென்றாள் அவள். நெஞ்சு படபடவென அடித்துக் கொள்ள, வியர்வை வெள்ளமாய்ப் பெருக, கண்ணனுக்கு முன்னால் எப்படியோ போய்விட்டாள். உடலே துடித்தது ஆவல் மீதூர. கண்ணனைப் பார்த்தாள்.
“நந்தகுமாரா, கிருஷ்ணா, நான் உன்னிடம் வந்துள்ளேன் என் கடவுளே. நான் உனக்காகவே காத்திருந்தேன், இத்தனை நாட்களாக. நீ வரவேண்டும் என்றே காத்திருந்தேன்.”” திரிவக்கரையின் குரல் உணர்ச்சிவசத்தில் தழுதழுத்துத் தடுமாறியது. மக்கள் அவளைத் தள்ளி அந்தப் பக்கமாய்ப் போ என்று சொன்னார்கள். அருவருப்போடு அவளைப் பார்த்தனர். ஆனால் திரிவக்கரையோ கிருஷ்ணனை நமஸ்கரிக்க முயன்றாள். “ஆஹா, நீ எனக்காகக் காத்திருந்தாயா? என்ன ஒரு நல்ல விஷயம்? எப்படி அறிவாய் நீ நாங்கள் வருவதை?”
“எனக்குத் தெரியும் என் ஆண்டவா, நீ வருவாய் என எனக்குத் தெரியும். ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு வருஷமும் உனக்காக நான் காத்திருந்தேன். இதோ, உனக்காக நான் கொண்டு வந்திருக்கும் அபூர்வ மலர்களால் தயார் செய்யப் பட்ட வாசனைத் திரவியம். இது உனக்கு மட்டுமே கண்ணா!”
சகோதரி, யாரம்மா நீ?” கண்ணன் கேட்டான்.
“நான் திரிவக்கரை. என் பெயரே மறந்துவிட்டது கண்ணா, திரிவக்கரை என்றே அழைக்கப் படுகிறேன். அரண்மனை வாசிகளுக்கு வாசனைத் திரவியங்கள் தயார் செய்து கொடுக்கும் வேலை எனக்கு. ஆனால் இது அந்த மாதிரிச் சாதாரணமான ஒன்றல்ல. இது உனக்காவே நான் தனியாக என் கரங்களாலேயே தயாரித்தேன்”
கண்ணனின் இதழ்களில் புன்னகை! அதைப் பார்த்த திரிவக்கரையோ ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றாள். கண்ணனின் புன்னகையில் அவளுக்கான அன்பு தனியானது என்ற உறுதியும், நிச்சயமும் அவளால் உணரமுடிந்தது. இந்தப்புன்னகை தனக்காகவே என்ற எண்ணமும் அவளுக்கு மகிழ்வைத்தந்தது. கண்ணனின் கன்னங்களிலும், கைகளிலும் வாசனைத் திரவியங்களையும், சந்தனத்தையும் தடவினாள். அவன் நெற்றியில் தடவினாள். பலராமனுக்கும் பூசிவிட்டாள். பலராமன் ஒரு குழந்தையின் சந்தோஷத்தோடு அதை அனுபவித்தான். திரிவக்கரை மிகுந்த பிரயத்தனத்தோடு கண்ணன் காலடிகளில் வீழ்ந்தாள். அவனை நமஸ்கரித்தாள். கண்ணீர் பொங்க, “ ஆண்டவா, என் ரக்ஷகா, என் கடவுளே, நான் ஒரு குரூபியாய் இருக்கிறேனே.” திரும்பத் திரும்ப இதையே சொல்லிக் கொண்டு இருந்தாள். அவளால் வேறு எதுவும் சொல்லமுடியவில்லை. நெஞ்சே வெடித்துவிடும்போல் அழுகையும், விம்மலும் வந்தன.
“யார் சொன்னார்கள் நீ குரூபி என?? “ கண்ணனின் மிருதுவான குரல் ஒரு தாயின் அன்போடும், கருணையோடும் சர்வ நிச்சயத்துடன் கூறியது. கண்ணன் குனிந்து தன்னிரு கரங்களால் அவளைத் தூக்கி எடுத்தான். “சகோதரி, நீ அழகி இல்லை எனச் சொன்னவர் எவர்? நீ தான் மாபெரும் அழகி!” இதையும் கண்ணன் சர்வ நிச்சயத்தோடு சொன்னான். திரிவக்கரை கீழே இருந்து எழுந்தவளால் நிறாகக் கூட முடியவில்லை. கூன் போட்டு நிற்கும் அவளுக்குத் தன்னுள் ஏதோ மாற்றங்கள் நிகழ்கின்றதோ என்றும் தோன்றியது. மிகவும் பிரயத்தனப் பட்டு நிமிர்ந்து நிற்க முயன்றாள். என்ன ஆச்சரியம்? அவளால் நிமிர்ந்து நிற்க முடிந்ததே? கால்கள்? அவையும் நேராகிவிட்டனவே? இதோ, மெல்ல மெல்ல அவள் நிமிர்ந்து நிற்கின்றாளே? ஆஹா, இதோ நிமிர்ந்துவிட்டாள். தன்னுடைய முழு உயரத்தோடும், நேராகவும், வளையாமல் கூனாமல் நிற்க முடிகிறதே அவளால்? தூக்கிவாரிப் போட்டது திரிவக்கரைக்கு? இது என்ன? அதிசயமா? மீண்டும் அவள் கூனியாகிவிடுவாளோ? கனவா? இல்லை நனவா? நனவே தான். இதோ மக்கள் கூட்டம் ஆச்சரியத்தில் அதிர்ச்சியோடு அவளைப் பார்க்கிறதே? தன் வயதையும் மறந்து சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் திரிவக்கரை”. என் கடவுளே, என் கடவுளே, நீ எனக்குப் பெரிய உதவி செய்துவிட்டாயே? என் கூனை நிமிர்த்திவிட்டாயே? ஆறாய்ப் பெருக்கெடுத்த நன்றியுணர்வோடு கண்ணன் காலடிகளில் மீண்டும் வீழ்ந்தாள் திரிவக்கரை.
ம்.. வந்துட்டான் க்ருஷ்ணன் அண்ணாவோட.good..good
ReplyDeleteஅவனோ திரிவிக்கிரமன். அவனுக்கு அவளை நிமிர்த்துவதா பெரிய காரியம். வெகு அழகா இருக்கு கீதா. கண்முன்னால நடக்கிற மாதிரி.
ReplyDeleteஆகா..!
ReplyDeleteஅந்த கடவுளின் கரங்கள் நம்மையும் காக்க வேண்டும். அற்புதமான கரையமைப்பு, கூனியின் விமேசனம் நல்ல முறையில் கூறியிருக்கின்றீர்கள். நன்றி.
ReplyDelete