எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 18, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - வில் ஒடிந்தது!

யமுனை நதியின் கரையில் மதுரா நகரின் கோட்டையின் உள்பக்கமாய் கம்சனின் மாளிகைக்கு அருகே இருந்த ஒரு பெரிய மைதானத்தில் வெகு நேர்த்தியாகப் பந்தல் போடப்பட்டு அங்கே நட்ட நடுவாக ஒரு மண்டபமும் எழுப்பப் பட்டிருந்தது. அந்த மண்டபத்தின் நடுவே மற்றொரு சிறிய அலங்கார மண்டபம் எழுப்பி அதன் மேல் சர்வ அலங்காரங்களுடன் கூடிய வில் ஒன்றும் அதன் அம்புகளும் வைக்கப் பட்டிருந்தன. தநுர்யாகத்திற்கு அழைக்கப் பட்டிருந்த அங்க, வங்க, கலிங்க, திராவிட தேசத்து அரசர்களும், அவர்களுக்கான பிரதிநிதிகளும் அந்த வில்லைப் பார்க்கவென வந்த வண்ணமிருந்தனர். மூன்று பக்கங்களிலும் அந்தணர்கள் அமர்ந்து வேதங்கள் ஓதி மந்திரபூர்வமான வழிபாடுகளையும், யாகங்களையும் செய்த வண்ணமிருந்தனர். தநுர்யாகம் முடிந்ததும் அந்த வில்லை எடுத்து அதில் நாணேற்றி அம்புகளை எய்ய முடியுமா என்றுசிலரும், நம்மால் முடியாது என்று சிலரும் அந்த வில் வைக்கப் பட்டிருந்த மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்து வில்லையும், அம்புகளையும், வில்லின் வலுவையும் கவனித்துக் கொண்டு போய்க்கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர்.

அந்த வில்லில் எப்படியானும் நாணேற்றவேண்டுமென நினைத்த சிலர் அதன் வலிமையை எங்கனம் சோதிப்பது என நினைத்துக் கவலைப்பட்டனர். தநுர்யாகம் முடிந்ததும் கடைசிநாளன்று வில்லில் நாணேற்றி அம்பைக் குறிப்பிட்ட தூரம் எய்து பார்க்கவெனத் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டனர் சிலர். அவ்விதம் பதிவு செய்து கொண்டு வில்லில் நாணேற்றி அம்பை எய்யும் வீரனே இந்த விழாவின் மாபெரும் வீரனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு ஆன்றோரும், சான்றோரும் நிறைந்த அவையில் மிகப் பிரமாதமாகக் கெளரவப் படுத்தப் படுவான். ஒவ்வொருவரும் அந்த கெளரவம் தங்களையே சேரவேண்டும் என நினைத்தார்கள். அந்த இடத்துக்குத் தான் இப்போது ப்ரத்யோதா கிருஷ்ணனையும், பலராமனையும் அழைத்து வந்தான். அங்கே வரும்போதே திரிவக்கரையைத் தன் அருகே அழைத்து அவள் காதுகளில் மிக ரகசியமாக ஏதோ சொன்னான் ப்ரத்யோதா. உடனேயே திரிவக்கரை கிருஷ்ணனை அர்த்தம் பொதிந்த ஒரு பார்வையால் பார்த்தாள். அந்தப் பார்வையின் காரணமும், அதன் உள்ளர்த்தமும் கண்ணனுக்கோ உடனே விளங்கிவிட்டது. அனைவரையும் தன் படைபலத்தாலும், அதீதமான கொடுமையாலும் ஆட்டிப் படைத்துவந்தான் கம்சன். ஆனால் தன் வீரத்தாலேயே அனைவரும் தனக்குக் கட்டுப் படுவதாகவும் நினைத்திருந்தான். அவன் மக்களை எந்தப் படைபலத்தாலும் எதை வீரம் எனக் கம்சன் நினைத்து வந்தானோ அதையும் வேரோடு அறுக்கவேண்டும். தான் யார் என்பதை கம்சனுக்குக் காட்டவேண்டும். அதுவே ப்ரத்யோதா திரிவக்கரை மூலம் தனக்கு விடுத்த செய்தி எனக் கண்ணன் புரிந்து கொண்டான். இந்த தநுர்யாகம் நடத்துவதன் மூலம், தான் மாபெரும் சக்கரவர்த்தி என்னும் மாயையையும் தோற்றுவிக்கப் பார்க்கும் கம்சனின் அந்த மாயவலையும் அறுபடவேண்டும். அதற்குத் தான் என்ன செய்யவேண்டும் என்பதும் கண்ணனுக்குப் புரிந்துவிட்டது.

அடுத்தநாளுக்கும் அடுத்தநாள் யாகம் முடியும் கடைசிநாளாக அமைந்திருந்தது. எவனோ ஒரு வீரன் இந்த வில்லில் இருந்து அம்பை எய்கிறானோ இல்லையோ, அவனால் முடியுமோ முடியாதோ அது வேறு விஷயம். ஆனால் இந்த வில்லானது இப்போது கம்சனின் அதிகாரத்தைச் சொல்லப் போனால் சர்வாதிகாரத்தை எடுத்துக் கூறும் ஒரு அடையாளமாகவன்றோ உள்ளது? ஆகவே இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். அந்த வில்லையே கூர்ந்து பார்த்தான் கண்ணன். இனம் புரியாததொரு உணர்ச்சி அவன் நாடி, நரம்புகளில் ஓடியது. அவன் உடல் சிலிர்த்தது. அப்போது திரிவக்கரை கண்ணனைப் பார்த்து, “என் பிரபுவே, நீங்கள் ஏன் அந்த வில்லை இப்போதே எடுத்து நாணேற்ற முயலக் கூடாது? இதோ அருகிலிருக்கும் நம் மாமாவான ப்ரத்யோதா அவர்கள் செய்த அற்புதம் இது.” என்றாள். திரிவக்கரை சொன்னதற்கு ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா எனக் கண்ணன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அது இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்த வில்லை இப்போது அழிப்பது ஒன்றே நாளை நாம் கம்சனை அழிக்கவேண்டும் என்ற நோக்கம் ஈடேற உதவும். கண்ணனுக்கு அது தான் சரி எனத் தோன்றியது. தன் மனதை இந்த வில்லை அழிக்கவென ஒருமுகப் படுத்திக் கொண்டான். தன்னைத் தானே தயார் செய்து கொண்டான். ப்ரத்யோதாவைப் பார்த்துக் கைகளைக் கூப்பியவண்ணம் கண்ணன் கூறுவான்:” ஐயா, நான் அப்படி ஒன்றும் சிறந்த வில்லாளி அல்ல. நான் ஒரு இடையனாகவே இருந்தேன், இருக்கிறேன். ஆனால் நான் தநுர்யாகத்தின் கடைசிநாளில் இந்த வில்லை நாணேற்றி இதிலிருந்து ஒரு அம்பாவது செலுத்த எண்ணுகிறேன். இப்போது இதைத் தூக்கிப் பார்க்க அநுமதித்தீர்களானால் இதன் எடை எவ்வளவு என்றும் தூக்கி எவ்வாறு நாணேற்றமுடியும் என்றும் புரிந்துகொள்வேன்.” என்று வேண்டினான். “அப்படியே ஆகட்டும், நந்தகுமாரனே!” ப்ரத்யோதா திரிவக்கரையைப் பார்த்து சங்கேதமாய்ச் சிரித்தவண்ணம் மேலும் கூறினான். “ஆனால், இளைஞனே, உன்னால் முடியாதென நினைக்கிறேன். பல வில்லாளிகளும் முயன்று பார்த்துத் தோல்வி அடைந்திருக்கின்றனர்.” என்றான். ப்ரத்யோதாவின் மனதில் கூடவே ஒரு கேள்வியும் உள்ளூர ஓடிக் கொண்டிருந்தது. இவன் நிஜமாகவே கம்சனை அழித்து நம்மைக் காக்கப் போகும் ரக்ஷகனா? அல்லது நம்மை எல்லாம் ஏமாற்றி விடுவானா? எப்படி இருந்தாலும் இதோ இப்போது தெரிந்துவிடும். ப்ரத்யோதா கண்ணனைப் பார்த்து, “ம்ம்ம்ம், உன் முயற்சியைச் செய், இளைஞனே!” என்றான்.

கண்ணன் சற்று நேரம் அந்த வில்லையும் அதன் அமைப்பையும் கூர்ந்து கவனித்தான். தன் மனதிற்குள்ளாக அதன் எடையையும் யோசித்துக் கொண்டிருந்தான். அதை எப்படித் தூக்கினால் சுலபமாக இருக்கும் என்றும் கவனித்துக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நின்றவர்கள் பலரும் கண்ணன் மேலும் சந்தேகம் கொண்டவர்களாகவே அவனைப் பார்த்தார்கள். அனைவர் கண்களிலும் அவநம்பிக்கை தெரிந்தது. இன்னும் சிலர் பதினாறு வயதுச் சிறுவனுக்கு இவ்வளவு தன்னம்பிக்கையா என்ற ஏளனத்துடன் பார்த்தனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணன் சட்டெனக் குனிந்தான். ஒரு சிறிய சப்தத்துடன் அந்த வில்லை லாவகமாய்த் தூக்கிவிட்டான். சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பேச்சு, மூச்சின்றிப் பிரமித்து நின்றனர்.
கடைசிநாளன்று இதோ இந்த அம்பைத் தானே இந்த நாணில் ஏற்றி எய்யவேண்டும்??” கண்ணன் ப்ரத்யோதாவைப் பார்த்துக் கேட்டான். “ஆம்” என்றான் ப்ரத்யோதா. கண்ணன் பால் தன் கண்களில் தெரியும் புதிய மரியாதையும் சந்தோஷத்தையும் சற்றும் மறைக்கவில்லை அவன். “ இந்த வில் என்ன கையாளச் சிரமம் கொடுக்குமா?” சற்றே வெகுளித்தனமாய்க்க் கண்ணன் கேட்டபோதிலும் அவன் கண்கள் அந்த வில்லை அளவெடுத்துக் கொண்டிருந்தன. அது எப்படித் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்றும், அதன் தனிச்சிறப்பு என்ன என்றும் கூர்ந்து கவனித்து அலசிக் கொண்டிருந்த கண்ணனின் கண்களுக்கு அதன் ஒரு பக்க இணைப்புகள் கண்களில் தெரிந்தன. ஆஹா, இதானா விஷயம்? நாம் எதற்கு வந்தோமோ அது பூர்த்தியாகப் போகிறது.

அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே கண்ணன் அனைவரும் திகைத்துப் போகும் வண்ணம் ஒரு காரியத்தைச் செய்தான். வில்லின் அடிப்பாகத்தைக் கீழே வைத்து அதனிடத்தில் திரும்ப வைப்பதற்குப் பதிலாய்க் கண்ணன் அந்த வில்லின் ஒரு பக்கம் தன் பாதத்தை வைத்து மற்றொரு பக்கத்தைத் தன் கைகளால் வளைத்தான். தன்னால் முடிந்த மட்டும் தன் பலம் உள்ளமட்டும் அந்த வில்லை இரு கைகளாலும் வளைத்தான் கண்ணன். வில் இரண்டாக ஒடிந்தது. இரு துண்டுகளான வில்லைத் தூக்கி எறிந்த கண்ணன் சுற்றி இருந்தோரைப் பார்த்துச் சிரித்தான். அனைவருக்கும் பயமும், ஆச்சரியமும் கலந்து செய்வது அறியாமல் சிலையாக நின்றனர். கம்சனுக்குப் பெரும் இழிவன்றோ இது. அவனுக்குச் செய்யப் பட்ட மிகப் பெரிய அவமரியாதை இது. இப்போது அடுத்து என்ன நடக்கப் போகிறதோ? சொல்வதற்கும், செய்வதற்கும் எதுவும் இல்லாமல் சுற்றி இருந்தவர்கள் திகைத்துத் தடுமாறி நிற்கையிலேயே சகோதரர்கள் இருவரும் திரும்பி நடந்தனர். ப்ரத்யோதாவின் உள் மனதோ இனம் புரியாத உவகையில் கும்மாளமிட்டுக் குதித்தது. இந்தச் செய்தியைக் கம்சனிடன் உடனே சொல்லப் பரபரத்தான். கம்சனின் மாளிகைக்கு விரைந்தான் ப்ரத்யோதா.

5 comments:

  1. ராம் மரியாதா புருஷோத்தம் என்றால் கிஷன் லீலாபுருஷோத்தம்.மதுராவில் இளவரசன் வேஷத்தில் இருக்கும் இடையன். ப்ருந்தாவனத்தில் இடையன் வேஷத்தில் இருக்கும் இளவரசன்!!

    ReplyDelete
  2. அழகாகவும் சுவையாகவும் சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி.
    மிகப் பொறுமையாக சிறிதும் தெய்வு இன்றி எழுதுகின்றீர்கள்.
    நான் இந்த வருடம் எனது பதினேன்றாம் மலை யாத்திரக்காக மாலை போட்டுள்ளேன். எனது சபரி மலை அனுபவங்களை தொடராக எழுத ஆரம்பித்துள்ளேன். சமயம் கிடைக்கும் போது படித்து தங்களின் கருத்துக்களைக் கூறவும். நன்றி.

    ReplyDelete
  3. அட்டகாசம் இந்த பகுதி..;))

    ReplyDelete
  4. //தன்னால் முடிந்த மட்டும் தன் பலம் உள்ளமட்டும் அந்த வில்லை இரு கைகளாலும் வளைத்தான் கண்ணன். வில் இரண்டாக ஒடிந்தது. இரு துண்டுகளான வில்லைத் தூக்கி எறிந்த கண்ணன் சுற்றி இருந்தோரைப் பார்த்துச் சிரித்தான்.//
    சுத்த வில்லங்கமான ஆ சாமி போல இருக்கு!
    :-))

    ReplyDelete
  5. //சுத்த வில்லங்கமான ஆ சாமி போல இருக்கு!//

    அதேதான் :)

    கண்ணன் சரியான கள்வனாச்சே :)

    ReplyDelete