எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 19, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு! 4

ரமேஷ் துடிதுடித்தான். அவன் கையிலிருந்து தொலைபேசியைப் பிடுங்கித் தன் பெண்ணோடு பேச முயற்சித்தான். ஆனால் அவனை நகரக் கூட விடாமல் அவன் துப்பாக்கி இப்போது அவன் கழுத்தருகே பதிந்திருந்தது. "கொஞ்சம் அசைந்தாலும் சுட்டு விடுவேன்!" என்றான் இரக்கமற்ற வறண்ட குரலில். அவன் பேசினான். "ம், சரி!" என்பதற்கு மேல் வேறு எதுவுமே பேசவில்லை. பின்னர் அவன் வித்யாவிடமிருந்து பெட்டியை வாங்கிக் கொண்டு தன் பக்கத்தில் வைத்துக்கொண்டான். "இப்போ எங்கே போகணும் தெரியுமா?" என்று கேட்டான். வித்யா ரொம்பப் பணிவோடு, "சொல்லுங்க!" என்று விநயம் காட்ட ரமேஷ் கடுகடுத்தான். "சக்தி லாக்கர்ஸ்" ஒரே வரியில் பதில் வர, இரண்டு பேருக்குமே தூக்கிவாரிப் போட்டது. அந்த லாக்கர்கள் தனியார்கள் நடத்தும் லாக்கர் கம்பனி. அதில் தான் வித்யாவின் நகைகளையும், சேமிப்புப் பத்திரங்களும் வைக்கப் பட்டிருந்தன. அது எப்படி இவனுக்கு???? ரமேஷ் ஒருவேளை இவன் வருமான வரித்துறையைச் சேர்ந்தவனாய் இருப்பானோ என நினைத்தான்.

"நீ யார்? என்ன விஷயமாய் இது எல்லாம் கேட்கிறாய்? சட்டத்திற்குட்பட்ட சொத்துக்களே எங்களிடம் உள்ளது. நீ நினைக்கிறாப்போல் நாங்கள் கள்ளப் பணமெல்லாம் வைத்திருக்கவில்லை!" என்றான் ரமேஷ்.

"ஹா, ஹா, ஹா!" என்று சிரித்த அவன்," என்னை என்ன வருமான வரியோ, விஜிலன்ஸ் துறையிலோ வேலை செய்பவன் என்று நினைத்துவிட்டாயா? அதெல்லாம் இல்லை. உன்னோடு எனக்குத் தீர்க்கவேண்டிய கணக்கு ஒன்று இருக்கிறது. அதற்குத் தான் இப்படி எல்லாம் செய்கிறேன்."

"பகையா? நான் உன்னைப் பார்த்தது கூடக் கிடையாதே?" பரிதாபமாய் ரமேஷ் சொல்ல, "அதனால் என்ன? நான் உன்னைப் பார்த்திருக்கேன். உன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும், உன் ஒவ்வொரு நாளின் டைம்டேபிளும் எனக்குத் தெரியும்!" என்றான். வண்டி அதற்குள் லாக்கர் இருக்கும் தெருவுக்கு வந்துவிட்டது. வித்யா மட்டும் போனால் போதும் என்று சொன்ன அவன், கீழே இறங்கிக் கொண்டு, ரமேஷையும் இறங்கச் சொன்னான். வித்யா தயங்கிக் கொண்டே ரமேஷ் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். "போ!" என்று அதட்டினான் வித்யாவை. "லாக்கரில் என்ன எல்லாம் இருக்கிறதோ எல்லாம் இங்கே வரவேண்டும். இதோ, இந்தப் பையில் போட்டு எடுத்து வா!" பையை வித்யாவின் கையில் கொடுத்தான். எல்லாத்துக்கும் தயாராக வந்திருக்கிறானே? ரமேஷ் ஆத்திரம் அடங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். வித்யா உள்ளே போனாள். அவள் வர எப்படியும் இருபது நிமிடம் ஆகும்.

ரமேஷ் சுற்றுமுற்றும் பார்த்தான். சத்தம் போட்டோ, அல்லது எங்காவது போலீஸ் இருந்தாலோ கூப்பிடலாமா என யோசித்த வண்ணம் தேடிக் கொண்டிருந்தான். எதிர் ப்ளாட்பார்மில் ஒரு பையன் கையில் புத்தகங்கள், தேகப் பயிற்சிச் சாதனங்களோடு போய்க் கொண்டிருந்தவன் திடீரென இந்தப் பக்கம் திரும்ப, ஆச்சரியத்துடன், "ஹை! அப்பா! இங்கே என்ன செய்யறீங்க?" என்று கத்தினான். ரமேஷ் திரும்பிப் பார்க்க அவன் அந்த வில்லனின் மகன் எனப் புரிந்தது. பதினைந்து வயதிருக்கலாமோ என்னமோ! அந்தப் பையனைப் பார்த்த அவனும் தன் கைகளை ஆட்டினான்.ஆஹா, இவனுக்கும் குடும்பம், மனைவி, மகன் என உள்ளனரா? அப்போ இவன் பையனிடமே உண்மை விஷயத்தைச் சொல்லிவிடவேண்டும் என்று தோன்றியது. உன் அப்பா செய்வது நியாயமானு கேட்டுடலாம். ரமேஷின் கண்கள் மின்னின. இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு சாதாரணமாக இருக்க முயன்றான்.

அந்தப் பையன் சாலையைக் கடந்து இந்தப் பக்கம் வர ஆரம்பித்தான். அவன் முதுகில் பிஸ்டல் அழுந்தியது. மெல்ல அவனைச் சாலையோர மரத்தருகே அந்தப் பிஸ்டலால் தள்ளிக் கொண்டு போனவன், அவனிடம் அடிக்குரலில், "என் பையன் வந்து பார்த்துப் பேசிட்டுத் திரும்பிப் போகிறவரைக்கும் எந்த விதமான உணர்ச்சியையும் காட்டக் கூடாது. குரலைக் காட்டினால் பிஸ்டலின் குண்டுகள் உன் பின்பக்கம் பாய்ந்து முன்பக்கமாய் வெளிவரும். " என்றான். இருந்த ஒரே நம்பிக்கையும் தூளாக ரமேஷ் மனம் வெறுத்துப் போனான். தப்பிக்க வழியே இல்லையா என அவன் மனம் ஏங்கியது. அந்தப் பையன் வந்து தன் அபபாவிடம் பேசிக் கொண்டிருந்தான். வித்யா லாக்கரின் பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

ஓரக் கண்ணால் அதைக் கவனித்த வில்லன், தன் பையனிடம், "சரி, ரவி, நீ வீட்டுக்குப் போ. நான் காலைக்குள் வருவேன்." என்றான். பையனோ, "இல்லை அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டேன். இன்றைக்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து படிக்கப் போகிறோம். காலையிலே பத்து மணிக்கு ஸ்பெஷல் கிளாஸ். அதிலே ஒரு சின்னத் தேர்வு. அதுக்காகத் தயாராகிறோம். அம்மாவும் சரினு சொல்லிட்டாங்க." என்றான். தந்தையும் சிரித்துக்கொண்டே ரவிக்கு அநுமதி வழங்க, அப்பாவுக்குக் கை அசைத்துக் கொண்டே அவன் விடை பெற்றான். வித்யாவும் அதற்குள் அருகே வந்துவிட்டாள். "என்ன, போன காரியம் வெற்றியா?" என்று கேட்டுவிட்டு அவள் கையில் இருந்த பையைக் கிட்டத் தட்டப் பிடுங்கிக் கொண்டான்.

மூவரும் காரில் ஏறி அமர வழக்கம் போல் ரமேஷே ஓட்டினான். எங்கே போகச் சொல்லப் போகிறானோ என நினைக்க, அப்போது அடையார் பாலம் வந்துவிட்டது. காரை மெல்லச் செலுத்திக் கொண்டிருந்தான். பின்னால் ஏதோ பொசுங்கும் நாற்றம். என்ன இது? திரும்பிப் பார்த்தால்??? அடக் கடவுளே, கஷ்டப் பட்டு வங்கியில் வைக்கணும்னு கட்டாயமாய் இருக்க வேண்டிய சிறு தொகையை மட்டும் வைத்துவிட்டு, மற்றதை எல்லாம் வாங்கிக் கொண்டு இந்தக் கடன்காரனிடம் கொடுத்திருக்க, அவன் அதற்கு நெருப்பு வைக்கிறானே? ரமேஷ் ஆத்திரத்துடன் அவன் கையிலிருந்து பெட்டியைப் பிடுங்க முயல, வித்யாவும் நிலைமையைப் புரிந்து கொண்டு கத்த ஆரம்பிக்க, வந்தவனோ எதற்கும் அசையாமல் ரமேஷ் பிடுங்க முயன்ற பெட்டியைப் பூட்டிக் காரின் ஜன்னல் வழியாகத் தூக்கி வெளியே எறிய, வெளியே அடையார் ஆற்றின் சமீபத்திய மழையினால் வந்த வெள்ளத்தில் அந்தப் பெட்டி மூழ்கியது. கூடவே நகைகள், சேமிப்புப் பத்திரங்கள் அடங்கிய பையும் துணைக்குச் சென்றது.

அதிர்ச்சியில் மூழ்கின ரமேஷ் வண்டியை நிறுத்திவிட்டுத் தன் தலையில் ஓங்கி அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான். பின்னாலிருந்து குரல், "வித்யா மேடம், வண்டியை இனி நீங்கள் ஓட்டுங்கள். உங்கள் கணவர் வண்டி ஓட்டும் நிலையில் இல்லை." சாவதானமாக நிதானமாகப் பேசினான். கையில் ரமேஷுக்காகக் கொண்டு வந்திருந்த குளிர்பானம். அதை ஒவ்வொரு சொட்டாக ரசித்துப் பருகிக் கொண்டிருந்தான். வித்யா அவனை அடித்துவிடுவது போல் பாய்ந்தாள். "பளார்" தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு வித்யா சீட்டில் அமர்ந்தாள். அவள் கன்னம் சிவந்திருந்தது. அவனை அடிக்கப் பாய்ந்த வித்யா அவளே அடி வாங்கிக் கொண்டிருக்கிறாள்.

தொடரும்.

11 comments:

  1. அக்கா, இந்த கதை ஆங்கிலத்தில் சவன்சீகல்ஸ் நடித்த ஒரு படத்தின் தமிழாக்கமாய் உள்ளது.பாதியில வந்து படிச்சிட்டு சொல்லானோன்னு புரியலை.கடைசியில் கதாநாயகனின் மனைவியும்,அவனின் அலுவலக காதலியின் கணவனும்(மிரட்டுபவன்)சேர்ந்து, கதாநாயகனுக்கு புத்தி புகட்ட தீட்டிய திட்டம் என்றால் இது அதே கதைதான்.விளக்கவும்:))

    ReplyDelete
  2. ரசிகன் ஸ்ரீதர், அதுக்குள்ளே அவசரமா?? கொஞ்சம் பேசாமல் இருங்க. முடிக்கும்போது கடைசியிலே நானே சொல்லிடுவேன். பொறுங்க ப்ளீஸ். உங்க பின்னூட்டம் மாடரேஷனில் இருக்கு. இப்போப்போட மாட்டேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  3. பழைய ஜெய்சங்கர் படம் (மாடர்ன் பிக்சர்ஸ் கொடுத்த நல்ல) பார்க்கிற மாதிரி இருக்குங்க..

    ReplyDelete
  4. தலைவி...கதை சூப்பராக போகுது...ஆனா கடைசியில ஏதோ காமெடி பண்ண போறிங்க மாதிரியும் தெரியுது..;)))

    ReplyDelete
  5. சொல்லட்டும்... வில்லன் சொல்லட்டும், ஏன் இப்படி செய்யறான்னு.. சொல்லாமலா போடுவான்? இல்லை நீங்க தான் விட்டுடுவீங்களா... காத்திருப்போம்.

    ReplyDelete
  6. பணம் நகை பத்திரங்கள் எல்லாம் போச்சு
    வித்யாக்கு வேறு அடி கிடைத்தது
    என்ன நடக்கிறது இங்கே ?

    ReplyDelete
  7. வாங்க அப்பாதுரை, கருத்துக்கு நன்றி. முடிச்சதும் சொல்லுங்க. அப்போ ஏண்டா பாராட்டினோம்னு இருக்கும்! :D

    ReplyDelete
  8. ம்ஹும், கோபி, காமெடியெல்லாம் பண்ணலை!

    ReplyDelete
  9. வாங்க ஸ்ரீராம், வெறுத்துப் போயிட்டீங்க போல! :)))))))))))))))

    ReplyDelete
  10. ப்ரியா, வாங்க, அதனால் என்ன?? போனால் போகட்டும் போடா! :)))))))))))

    ReplyDelete
  11. ஓ... இவன் வித்யாசமான திருடன் போல இருக்கே...

    ReplyDelete