எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 20, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 22

அமிர்தக் கடலின் மத்தியில் கற்பகவிருஷங்கள் நிறைந்த தோப்பில் உள்ள ரத்னத் தீவில் கடம்பமரங்கள் நிறைந்த உத்தியானவனம் (நந்தவனம்) உள்ள சிந்தாமணி க்ருஹத்தில் பரம மங்கள வடிவில் அமைந்த சிம்மாஸனத்தில் அம்பிகை காமேசருடன் கூடி வீற்றிருக்கிறாள். இது தேவியின் வாசஸ்தலம் என்பார்கள். சிந்தாமணி கிருஹம் என்பார்கள் இதை. இந்தச் சிந்தாமணி கிருஹத்தைத் தான் விஸ்வகர்மா அமைத்துக் கொடுத்தார். அண்டங்களுக்கும், பிரம்மாண்டங்களுக்கும் அப்பால் அமிருத ஸாகரத்தின் மத்தியில் உள்ள ரத்தினத் தீவில் உள்ளது. இருபத்தைந்து வெளிப் பிராகாரங்கள். முதலில் இரும்பு எஃகு, செம்பு, வெள்ளீயம், பித்தளை, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம், புஷ்பராகம், பத்மராகம்,கோமேதகம், வஜ்ரம், வைடூரியம், இந்திரநீலம், முத்து, மரகதம், பவளம், நவரத்தினம், நானா ரத்தினம் இவற்றால் அமைந்தவை. இது தவிர மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய மூன்று தத்துவங்களாலும், சூரிய, சந்திர, மன்மதன் ஆகியோரின் தேஜஸ்ஸாலும் அமைந்தவை. இந்த 25 பிராகாரங்களில் எட்டாவது பிராகாரத்தில் கதம்பவனம். அந்தக் கதம்பவனம் மந்திரிணியான சியாமளையின் வாசஸ்தலம்.

பதினைந்தாவது பிராகாரங்களில் அஷ்ட்திக்பாலகர்களும், பதினாறாம் பிராஹாரத்தில் சேநாநாயகியான தண்டினியான வாராஹியும்,வசிப்பார்கள். இவளோடு சேர்ந்து சியாமளைக்கும் இங்கே ஒரு கிருஹம் உண்டு. “மஹா சதுஷ்ஷ்ஷ்டி கோடி-யோகினீ-கண ஸேவிதா”பதினேழாவதில் யோகினிகளும், பதினெட்டில் மஹாவிஷ்ணுவும், பத்தொன்பதில் ஈசானனும், இருபதில் சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும் தாரா தேவியும், இருபத்தொன்றில் வாருணியும், இருபத்திரண்டில் அஹங்காரக் கோட்டையில் குருகுல்லாதேவியும், “குருகுல்லா குலேஸ்வரீ” இருபத்துமூன்றில் சூரியப் பிராகாரத்தில் மார்த்தாண்ட பைரவரும், “மார்த்தாண்ட- பைரவாத்யா மந்த்ரிணீ-ந்யஸ்த-ராஜ்யதா”இருபத்து நான்கில் சந்திரனும், இருபத்தைந்தாவது சிருங்கார வனத்ஹ்டில் மன்மதனும் இருக்கின்றனர். இதற்குள்ளேயே மகாபத்ம வனமும் கற்பக விருக்ஷங்களால் ஆன தோப்பும் உள்ளன. அதன் நடுவில் சிந்தாமணிக் கிருஹம். அக்கினி மூலையில் அம்பாள் தோன்றிய சிதக்கினிக் குண்டமும், கிழக்குத் துவாரத்தின் இருபக்கமும் மந்த்ரிணியும், தண்டினியும் இருக்கும் கிருஹங்களும் உள்ளன. நான்கு துவாரங்களிலும் சதுராம்னாய தேவதைகள் காவல் இருக்க, நவாவரணங்களுடன் கூடிய ஸ்ரீ சக்கரம் காக்ஷி கொடுக்கிறது. ஸ்ரீசக்கரத்தின் நடுவில் சர்வாநந்தமயமான பிந்து பீடத்தில் பஞ்சப் பிரம்மாஸனத்தில் ஸதாசிவனுடைய மடியில் மஹாதிரிபுரஸுந்தரியான லலிதா காமேஸ்வரி வீற்றிருக்கிறாள். "பஞ்ச பேரேதாஸனாஸீனா பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணீ "

இந்தப் பஞ்சப் பிரம்மாஸனம் என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியவர்களைக் கால்களாகவும், ஸதாசிவனுடைய மடியைப் பலகையாயும் கொண்ட கட்டில் ஆகும். இதுவே அ+உ+ம= ஓம் என்பதைக் குறிக்கும் அர்த்த, மாத்திரை, பிந்து வடிவான ஓங்கார மஞ்சம். “மஹா காமேச-மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரி” என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். அபிராமி பட்டர் அம்பிகையின் இந்தக் கோலத்தை வர்ணிக்கையில்

“பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்தூர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்திருந்தவளே! “

என்கிறார். இத்தகைய அம்பிகையை,

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”

இது நாம் ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா? அதே போல் இன்னொரு அந்தாதியிலும் கூறுவார்:

பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!
என்றும் கூறுகிறார்.

சிலம்பணிந்த சிறிய திருவடிகளை உடைய அம்பிகை தன் கைகளில் பாசமும், அங்குசமும் கொண்டு ஐந்து மலர்ப்பாணங்களையும் கையில் ஏந்தி, சிந்தூரம் போன்ற சிவந்த மேனியோடு திரிபுரசுந்தரியாக வீற்றிருக்கிறாள். அவளே பராசக்தியின் ஐந்தாவது சக்தியான அநுகிரஹ சக்தியான பஞ்சமியாகவும், “பஞ்சமீ பஞ்சபூதேசீ” கருநிறக் காளியாகவும், கோபம் கொண்ட சண்டிகாவாகவும்,” மஹேஸ்வரீ, மஹாகாலி மஹாக்ராஸா மஹாசனா!அபர்ணா சண்டிகா சண்டமுண்டாசுர நிஷூதநீ” சூரிய, சந்திர மண்டலங்களில் வீற்றிருக்கும் மண்டலியாகவும் காட்சி அளிக்கிறாள். “பாநு மண்டல மத்யஸ்தா” என லலிதா சஹஸ்ரநாமாவளி கூறும். இனி லலிதாம்பாளின் ஸ்ரீசக்ர வர்ணனையின் சோபனப்பாடலைக் காண்போம். இந்த வர்ணனை மட்டும் நடுவிலிருந்து போடாமல் பாடல் எண் 166ல் இருந்து பாடல் எண் 188 வரையும் முழுவதும் கொடுக்கப் படும்.

தரணியில் ஒன்பதும் சமுத்திரத்தில் ஏழும்
தேவிக்குப் பதிநாறு ஸ்ரீபுரங்கள்
மேருகிரியிலொரு ஸ்ரீபுரமுண்டதை
முன்னாலே உமக்கு நான் சொல்லுகிறேன்
மூவராலும் ஆதிசேஷராலும் சொல்லி
முடியாது அம்மன்புர மஹியை
சாவதானமாகக் கேட்கவேண்டுமிதை
தன்யனே சொல்லுவேன் – சோபனம் சோபனம்

ஒன்றாவது கோட்டை இரும்பாக்குமதற்கு
உயரம் நாநூறு யோஜனைகள் உண்டு
நன்றாக நூறு யோஜனை அகலங்காண்
நான்குபுறத்திலும் வாசலுண்டு
வாசல்கள் தோறும் கோபுரமுண்டு அதற்கு
வரியாக தட்டுக்கள் இருபத்தஞ்சு
யோஜனைக்கு ஒரு தட்டு வீதங்கணக்கு
உச்சி மகுடம் மூன்று – சோபனம் சோபனம்

இந்த வாசல் போலே நாலு வாசலுக்கும்
இது போலே கோபுரத் தட்டுமுண்டு
இந்தக் கோட்டை வாசல் கதவு கோபுரமுதல்
எல்லாம் இரும்புப் பணி இதைப்போல
எந்தக் கோட்டைகளினி சொல்லப் போகின்றோமோ
அந்தக் கோட்டை இதுபோலகஸ்தியா
இந்தக் கோட்டை கழிந்தபுறமுள்ளது
ஏழுயோஜனையுண்டு சோபனம் சோபனம்

ஏழு யோஜனையுள்ள நடு இடைவெளிதன்னில்
எல்லா மரங்கலும் நிறைந்திருக்கும்
தோழர்களே ஏழு யோஜனையின் விஸ்தாரம்
சொல்லப்போகிறோம் கோட்டை இடைநடுவில்
காளியுங்காளரும் சக்தியுடனே
கால சக்ராசனத்தில் இருந்து
லலிதையுடைய நாமஞ்ஜபித்து ஒன்றாங் கோட்டை
ரக்ஷிக்கிறாள் என்றும் சோபனம் சோபனம்

வெண்கலக் கோட்டையில் வஸந்தருது காவல்
வேலியும்கற்பக விருக்ஷமாகும்
தங்கச் செம்புக் கோட்டையில் வேலி ஹரிசந்தனம்
சுசியான கிரீஷ்மருது காவல்
ஈயக் கோட்டையின் வேலி சந்தன விருக்ஷங்கள்
எங்குஞ் சுற்றிக் காவல் வர்ஷருது
முன்னாலிரும்புக்கோட்டையின் வேலி மந்தாரை
வெளுத்த சரத்ருது காவல் –சோபனம் சோபனம்

பஞ்சலோகக் கோட்டைக்குப் பாரிஜாதம் வேலி
ஹேமந்தருது காவல் காத தூரம்
பஞ்சப்பொன்கோட்டைக்கும் மந்திரிணி முதலான
சக்திகள் கிருஹம் சிசரருது காவல்
பிக்ஷூரகத்து சித்தர்களும் முத்திப்
பெண்குகளுங்கூடி இருக்கின்றார்கள்
பிக்ஷூரம் கழிந்தப்புரஞ்சாரணர்
பத்மராகக் கிருஹம் சோபனம் சோபனம்

அழகிய கந்தர்வாள் வைரக் கிரஹந்தன்னில்
அதற்குப்பின் யோகிகள் வஜ்ஜிரக்கிருஹம்
புதுநாகரத்னமும் வைடூர்யத்தாலும்
பின்னிந்திரக் கல்லாலுமுள்ள கிருஹம்
முத்துக்கள் சூழும்மரகதத்தால் கிருஹம்
மின்போல் வராகிக்கும் நாலு கிருஹம்
சுத்தமான கிருஹம் பிரம்மாவுடையது
செம்பவழத்தாலே – சோபனம் சோபனம்

3 comments:

 1. கிரி டிரேடிங்காரர்கள் 'லலிதாம்பாள்
  சோபனம்' என்று புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். கூட 'தேவி பாட'மும். விலை: ரூ.20/- தான்.
  ஆனால் பாடல்கள் மட்டும் தான்.
  ஆரம்பத்திலிருந்து ஆர்.எஸ்.சுப்புலஷ்மி அம்மாள் அவர்களின் பாடல்களையும் உங்கள் விளக்க வர்ணனைகளையும்
  படிக்கவிருப்பதாக இருக்கிறேன்.
  வழக்கம் போல உங்கள் வர்ணனைகள் அற்புதம்.

  ReplyDelete
 2. வாங்க ஜீவி சார், பாராட்டுக்கு நன்றி. லலிதாம்பாள் சோபனப் பாடல்கள் அனைத்தையும் கொடுக்கவில்லை. தேர்ந்தெடுத்தே கொடுத்திருக்கேன். :)))))

  ReplyDelete
 3. happy thirukarthikai Mrs Shivam. என்ன விளக்கு புதுசா இந்த வருஷம்?:))
  அருமையா இருக்கு. மௌலி அம்பாளை பத்தி எழுதறது எனக்கு ரொம்ப பிடிக்கும். கொஞ்சநாளா வேலை போல இருக்கு எழுதறதில்லை .அந்த குறையை நிறைவாக்கறது இந்த விளக்கங்கள். சோபனம் அதி சோபனமே:))

  ReplyDelete